சற்று முழுமையாகக் குடித்துவிட்டு போதையில் மிதக்கலாம் என்பதற்காகத் தான் கடைக்குள் சென்றேன்.
ஆனால் அந்த விருப்பம் நிறைவேறவில்லை. காசு இல்லாமலில்லை. நீண்டநாட்களுக்குப் பிறகு இன்று எனக்கு பகவதி சிறிது அருள்பாலித்தாள். காலையில் ஒரு பீடித் துண்டைப் புகைத்தவாறு நான் அஸ்ஸனாரின் பெட்டிக்கடைக்கு முன்னால் அமர்ந்திருந்தேன். அந்த நிமிடத்தில் குடித்து போதையில் மூழ்குவதென்ற விஷயத்தைக் கனவு காணக்கூட முடியாது. காரணம்- கடும் தேநீருக்கான பணம்கூட கையில் இல்லா மலிருந்தது.
""என்னடா... இன்னிக்கு வேலை எதுவுமில்லியா?''
கடையைத் திறப்பதற்காக வந்த அஸ்ஸனார் கேட்டார். இல்லை என்ற அர்த்தத்தில் நான் கண்ணைக் காட்டினேன். உடனே ஒரு முன்னெச்சரிக்கை என்பதைப்போல அவர் கூறினார்:
""அதிகாலை வேளையில கடன் கேட்காதேடா.''
சில நேரங்களில் நான் அஸ்ஸனாரிடம் கடன் வாங்குவதுண்டு. இருபத்தைந்து பைசாவோ ஐம்பது பைசாவோ... அதிகபட்சம் ஒரு ரூபாய்.
உண்மையிலேயே கூறுவதாக இருந்தால்- பத்து மணிக்கு முன்பு வேலை எதுவும் கிடைக்கவில்லையென்றால், அஸ்ஸனாரிடம் ஒரு எட்டணா கடன் வாங்கலாமென்று நினைத் திருந்தேன். அஸ்ஸனார் கூறியதைக் கேட்டதும், அந்த எண்ணத்தை விட்டெறிந்துவிட்டேன். இனி வேறு ஏதாவது வழியைத் தேடுவதுதான் சரியாக இருக்கும்.
அஸ்ஸனாரின் கடைக்கு நேர் எதிரில் குஞ்ஞாப்புவின் தேநீர்க்கடை இருக்கிறது. நான் பார்த்துக்கொண்டு நின்றிருக்கும் போது, குஞ்ஞாப்புவின் மனைவி நாணி ஆவி பறந்து கொண்டிருக்கும் புட்டைக் கொண்டுவந்து கண்ணாடி அலமாரியில் வைத்துக்கொண்டிருந்தாள். குஞ்ஞாப்பு தேநீர் அடித்துக் கொண்டிருப்பதும் தெரிந்தது. முதலில் அவர் கொதித்துக்கொண்டிருக்கும் பாத்திரத்திலிருந்து நீரை ஒரு குவளையின்மீது வைக்கப்பட்டிருக்கும் சல்லடையில் ஊற்றுவார்.
பிறகு குவளையில் பாலையும் சர்க்கரையையும் கலப்பார். அதற்குப் பிறகு ஒவ்வொரு கையிலும் ஒரு குவளையை வைத்தவாறு தேநீரை ஆற்றுவார். அது ஒரு கலையாக எனக்குத் தோன்றியது.
(அதாவது- கலை என்றால் என்ன? படிப்பும் விவரமும் இல்லாத எனக்கு கலையென்றால் என்னவென்று தெளிவான வடிவமில்லை).
அந்த வகையில் குஞ்ஞாப்புவின் கடையில் கண்களைப் பதித்தவாறு, பீடியைப் புகைத்துக் கொண்டே அஸ்ஸனாரின் கடைக்கு முன்னால் அமர்ந்திருக்கும்போதுôன், பகவதியின் அருட்பார்வை ஒரு வெள்ளி மின்னலைப்போல என்மீது விழுந்தது. ஒரு நிமிடம் கண்களே தெரியவில்லை. என் கண்களையே நம்பமுடியவில்லை.
""டேய் பாக்கரா.''
நான் விழித்துப் பார்த்தேன். ஆமாம்...
என்னைத்தான் அழைத்தார். வேறு யாருமல்ல...
அவ்வக்கர் முதலாளி.
தெற்கிலிருந்து ஸி.எம்.எஸ். வந்து நின்றதையும், அதிலிருந்து முதலாளி இறங்கியதையும் நான் பார்க்கவில்லையென்றால்... அதில் ஆச்சரியப்பட என்ன இருக்கிறது? என் கண்கள் குஞ்ஞாப்புவின் கடையில் பதிந்திருந்தனவே!
""கொஞ்சம் வர்றியா?''
முதலாளி கேட்டார். பீடித்துண்டைக் கீழே துப்பிவிட்டு, வேட்டியை மடித்துக்கட்டியவாறு நான் பேருந்தை நோக்கி வேகமாக ஓடினேன்.
க்ளீனர் பேருந்தின் மேற்பகுதியில் இருந்தான். அவன் ஒரு பெரிய தோல் பெட்டியை நகர்த்தி, பேருந்தின் மேற்பகுதியின் ஓரத்தில் வைத்தவாறு என்னை எதிர்பார்த்து நின்றிருந்தான். பின்னாலிருந்த இரும்பு ஏணியின் வழியாக நான் மேலே வேகமாகச் சென்றேன். அடுத்த நிமிடம் அந்த பெரிய தோல்பெட்டி என் தலையில் அமர்ந்தது. நான் ஒரு கையால் ஏணியின் கம்பியைப் பிடித்துக்கொண்டு, இன்னொரு கையால் பெட்டியின் காது பகுதியைப் பிடித்தவாறு கீழே இறங்கியதுதான் தாமதம், பேருந்து தூசியைப் பறக்க விட்டவாறு ஓடி மறைந்தது.
""உன்னால் முடியுமா பாக்கரா?''
பெட்டி மிகவும் கனமாக இருந்தது. அதனால்தான் முதலாளி சந்தேகப்பட்டார்.
""நட...''
முதலாளி கட்டளையிட்டார். நான் நடந்தேன்.
""அதிர்ஷ்டம் அடிச்சிருக்கேடா இன்னைக்கு...'' பின்னாலிருந்தவாறு அஸ்ஸனார் கூறினார்: ""நமக்கு எழுபது பைசாவைத் தந்திடணும்.''
அவருக்கு நான் கடனாக வாங்கிய எழுபது பைசாவைத் தரவேண்டியதிருந்தது.
பெட்டியுடன் முன்னோக்கி நடந்தேன். கழுத்து வலித்தது. கண்களில் புகையும், நெருப்பும்... இந்த அளவுக்கு கனமான ஒரு பெட்டியை என் ஆயுட் காலத்தில் நான் பார்த்ததேயில்லை...
மாளிகையை அடைந்ததும் முதலாளி இடுப்பு வாரில் இணைத்து வைத்திருந்த பர்ஸைத் திறந்தார்.
கனவு காண்கிறேனா? என் கண்களையே நம்பமுடியவில்லை.
குஞ்ஞாப்புவின் கடையைக் கடந்து நடந்தேன். இனி அவருடைய தேநீர் எதற்கு? அதையும் தாண்டிய பொருளை மனதிற்குள் நினைத்தவாறு செடிகளின் வரிசையைக் குறுக்காக தாண்டிக் கடந்து, நீர்த்தொட்டியைச் சுற்றி, கேளு நாயரின் கடைக்குள் நுழைந்தேன்.
முழுமையாகக் குடித்து போதையில் மூழ்கவேண்டும். பகவதி அருள்பாலித்தது அல்லவா? இல்லாவிட்டால்... துபாயில் எங்கோ வசிக்கும் அவ்வக்கர் முதலாளி இன்று எதற்காக ஸி.எம்.எஸ்ஸில் வந்து இறங்க வேண்டும்?
கடலில் மீன்கள் கிடைக்கக்கூடிய காலமாக இருந்ததால், கடையில் ஆட்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. நின்று திரும்புவதற்கு இடமில்லை. நிற்பதாக இருந்தால், நின்றுகொண்டே... இரண்டு புட்டியைப் பருகாமல் இருக்கமுடியாது.
நான்கு பக்கங்களிலும் பார்த்தேன். எல்லாரும் மீனவர்கள்... கூட்டத்தில் நன்கு தெரிந்த ஒரு முகம் மட்டும்... கணாரன். தென்னை மரத்தில் ஏறும் கணாரன்.
கணாரன் மனைவியின் வீடு என் வீட்டிற்கு மேற்குப் பகுதியில் இருந்தது. கோடைக்காலத்தில் எங்களுடைய கிணறு வற்றிப்போகும்போது, நான் சென்று குளிப்பது கணாரனின் கிணற்றில்தான். அதில் நிறைய வாழைக் கற்றைகள் வளர்ந்து கிடக்கும். வாழைக் கற்றைகளைத் தேய்த்துக் குளித்ததால்தான் என்று கூறிக்கொள்வார்கள்- கணாரனின் மனைவிக்கு தொப்புள்வரை கூந்தல் இருக்கும்.
அவள் பிரசவமாகிப் படுத்திருக்கிறாள் என்பதை நான் நினைத்துப் பார்த்தேன். இன்று காலையிலும் வேலியைக் கடந்து ஒற்றையடிப் பாதையில் நடந்துசென்றபோது, குழந்தையின் அழுகைச் சத்தம் காதில் விழுந்தது. கணாரனின் மகள் அழும்போதும், அவள் சிரிக்கிறாளா அழுகிறாளா என்பதைப் புரிந்துகொள்வது சிரமம்...
""டேய்... நீ அந்த கணாரனின் குழந்தையைப் போய் பார்த்தியா?'' தெச்சு பிரசவமானபோது என் அம்மா என்னிடம் கூறினாள்: ""உண்மையிலேயே பகவதிதான்...''
பகவதியைப் போலிருக்கும் அந்த குழந்தையைச் சென்று பார்க்கவேண்டும். நான் தீர்மானித்தேன். அது... முழுமையாக போதையில் மூழ்கியபிறகு நடக்கட்டும்...
கள்ளு புட்டியுடன் பையன் வந்ததும், கணாரன் அமர்ந்திருந்த இடத்திலிருந்து நகர்ந்தான். சற்று இடம்தந்தான். பின்பகுதியின் ஒரு பாதியை மட்டும் வைத்தவாறு நான் அங்கு அமர்ந்தேன்.
""எட்டணா இருக்குதா... தர்றதுக்கு?''
கணாரன் கேட்டான். அவன் இதற்குள் போதையில் ஆழ்ந்து விட்டதைப்போல தோன்றியது. மீசையின் ஓரம் சற்று நடுங்கிக்கொண்டிருந்தது. கண்கள் அடுப்பைப்போல சிவந்திருந்தன.
நான் தருவதாகக் கூறினேன். பகவதி அருள் தந்த நாளாயிற்றே!
குடிக்கவும் தின்னவும் செய்துகொண்டிருப்பதற்கு மத்தியில் நாங்கள் பேசிக்கொண்டிருந்தோம்.
""தெச்சு அக்கா பிரசவமாகி எத்தனை நாளாச்சு?'' நான் கேட்டேன்: "இருபத்தெட்டவாது நாள் குளியல் ஆயிருச்சா?''
""அவள் பிரசவமாகி...'' கணாரன் மீன்கறி படிந்த விரல்களை நக்கி சுத்தப்படுத்திவிட்டு, அந்த விரல் களால் கணக்குக் கூட்டியவாறு சொன்னான்: ""அவள் பிரசவமாகி, நாளை மறுநாளோடு இருபத்தாறு நாள் ஆகப்போகுது.''
அப்படியென்றால்... இன்று இருபத்து நான்கு நாட்கள் ஆகிவிட்டன என்று அர்த்தம்.
""என்ன பேர் வைக்கிறதா இருக்கு?''
நான் கேட்டேன்.
""கேளு நாயரே...'' கணாரன் கேளு நாயரைப் பார்த்தவாறு, மூடப்போகும் கண்களை வலியத் திறந்தான்: ""என் மகளுக்கு என்ன பேர் வைக்கலாம்... கேளு நாயரே?''
""ஒலக்குன்னு வை.''
கேளு நாயர் கூறினார். மேஜையின்மீது சாக்பீஸால் எழுதிவைத்திருந்த கள்ளு, மரவள்ளிக் கிழங்கு, மீன்கறி ஆகியவற்றுக்கான கணக்கைக் கூட்டிப் பார்ப்பதில் மூழ்கியிருந்த கேளு நாயருக்கு கணாரனின் மகள்மீது என்ன ஆர்வம் இருக்கப்போகிறது? அதுமட்டுமல்ல; அவர் இதையும் சேர்த்துக்கூறினார்:
""சீக்கிரம் குடிச்சுட்டு இடத்தை காலிபண்ணு. மீனுங்க கிடைக்கக்கூடிய நாள்...''
இடம் காலியாவதை எதிர்பார்த்தவாறு வெளியே மீனவர்கள் நின்றிருந்தார்கள். இடையில் அவ்வப்போது கடலின் வெயில் பட்டுக் கருத்துப்போன அவர்களின் முகங்கள் உள்ளே எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தன.
நிறைந்த இடுப்புத்துணியுடன், குடித்து போதையில் மூழ்குவதற்காக வந்திருப்பார்கள்... காத்து நிற்பதற்கு அவர்களுக்குப் பொறுமை இல்லாமலிருந்தது.
அப்போது எங்களுக்கு முன்னால் அமர்ந்து மிகவும் அமைதியாகக் குடித்துக்கொண்டிருந்த ஒரு வயதான மீனவர் குவளையை காலிசெய்துவிட்டு எழுந்தார்.
""ரெண்டு புட்டி கள்ளு, ரெண்டு அவித்த மரவள்ளிக்கிழங்கு, ஒரு மீன் தலை... இல்லியா?''
மேஜையின்மீது எழுதி வைக்கப்பட்டிருந்த வெள்ளை எண்களையும் எழுத்துகளையும் பார்த்தவாறு கேளு நாயர் கேட்டார்:
""ஏ... இல்ல...'' வயதானவர் கூறினார்: ""ரெண்டு அவிச்ச மரவள்ளிக்கிழங்கு, ஒரு மீன் தலை, ரெண்டு புட்டி கள்ளு...''
வயதான மனிதர் பின் பகுதியை வைத்திருந்த இடத்திற்காக மூன்று மீனவர்கள் தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார்கள்.
அவர்கள் மூவரையும் தள்ளி விலக்கியவாறு நான்காவதாக ஒருவன் வந்து எங்களுக்கு முன்னால் உட்கார்ந்தான். காளை வண்டிக்காரன் செக்கு...
பலசாலிகளான மூன்று மீனவர்களையும் புற்களைப் போல தள்ளிவிலக்கி, இடத்தைக் கைப்பற்றிய செக்குவிடம் எனக்கு மதிப்பு உண்டானது.
""நாங்கதான் முதல்ல வந்தோம்.'' மீனவர்கள் கேளு நாயரை நோக்கித் திரும்பி, முஷ்டியைச் சுருட்டினார்கள்: ""நாங்க முதல்ல குடிக்கணும்.''
""நான் என்ன செய்றது நண்பர்களே?'' கேளு நாயர் தன்னுடைய செயலற்ற நிலையை வெளிப்படுத் தினார்: ""செக்குவோட குணம் உங்களுக்குத் தெரியாதா... நண்பர்களே?''
மீனவர்கள் கோபமாக வெளியேறி, மீண்டும் வெளியே காத்து நின்றார்கள்.
செக்குவின் குணம் யாருக்குத் தெரியாது? புகைவண்டி நிலையத்திற்கு அடுத்திருக்கும் தோட்டிகளின் குடியிருப்பு உள்ள பகுதியில்தான் அவன் வசிக்கிறான். செக்குவுக்கு சொந்தமோ வேண்டியவர்களோ யாருமில்லை. (அப்படிப் பட்டவர்களைத்தானே "சுயம்பு' என்று அழைக் கிறார்கள்? என்னவோ... எனக்குத் தெரியாது.) காளை வண்டிகளில் தானிய மூட்டைகளை ஏற்றி தூர ஊர்களுக்குக் கொண்டு போவதுதான் செக்குவின் பணி. அதில் அவனுக்கு நல்ல வருமானம் வருகிறதென்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.
சிறிது நேரம் செல்லட்டும்... நன்கு குடித்து போதையில் மூழ்கட்டும்.... அப்போது அவனிடம் ஒரு விஷயத்தைக் கேட்கவேண்டுமென்று நான் தீர்மானித்தேன்.
""ஊமத்தங்காய் சேர்த்திருக்கா?'' சிறுவன் கள்ளு நிறைக்கப்பட்ட புட்டியுடன் வந்தபோது, செக்கு பயமுறுத்தினான்: ""உன் கழுத்தை நான் அறுத்திடுவேன்.''
அதைக் கேட்டு பயந்த சிறுவன், அச்சத்துடன் கேளு நாயரின் முகத்தைப் பார்த்தான்.
""கண்டவங்க கழுத்தையெல்லாம் அறுக்குறதுக்கு நீ யார்டா?''
எல்லாரின் அதிர்ச்சியில் உறைந்த பார்வையும் கணாரனின்மீது விழுந்தது. கணாரனுக்கு எங்கிருந்து இந்த தைரியம் கிடைத்தது? இதுவரை பூனையைப் போல பதுங்கியிருந்த ஆளாயிற்றே!
செக்கு, தாங்கமுடியாமல் கணாரனை சிறிது பார்த்தான். நான் பலவற்றையும் எதிர்பார்த்தேன்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. பிறகு கணாரனை செக்கு பார்க்கவேயில்லை. அது எங்கள் அனைவரையும் ஆச்சரியப்படச் செய்தது.
குவளைக்கு அடியிலிருந்த நீரையும் அதிலிருந்த ஈக்களையும் கீழே கவிழ்த்துவிட்டு, குவளையில் புட்டியைச் சாய்த்தான். விளிம்புவரை நிறைந்தபிறகு, ஒரே மூச்சில் குடித்தான். குவளையில் ஒரு துளி எஞ்சியிருக்கவில்லை. அந்த வித்தையைப் பார்த்து எனக்கு சிரிப்பு வந்துவிட்டது. ஆனால், செக்குவுக்கு பயந்து நான் சிரிக்கவில்லை. மூன்று மீனவர்களை ஒரே கையால் தடுத்து நிறுத்திய அந்த கை என்மீது விழுந்தால்...
""டேய் செக்கு... வாய்க்குள்ள பூசணிக்காய் போய்விட்டதைப்போல என்னடா உட்கார்ந்திருக்கே?''
கணாரன் மீண்டும் கேட்டான். செக்குவின் மவுனம் கணாரனுக்கு தைரியத்தைத் தந்தது.
புட்டியில் மீதமிருந்ததை செக்கு குவளையில் ஊற்றவில்லை. நேராக நாக்கின்மீது சாய்ந்தான்.
""உன்கிட்டதான்டா கேட்டேன்...'' கணாரன் மெலிந்த கையை மேஜையின்மீது தட்டி ஓசை உண்டாக்கினான். செக்குவின் கவனத்தை தன்னை நோக்கித் திருப்பினான்: ""உன் வாயில என்ன? பூசணிக்காயா?''
கள்ளுக்கடை முழுவதும் பேரமைதியானது. ஊரையும், ஊரில் உள்ளவர்களையும் பயமுறுத்தி நடுங்கச்செய்யும் வம்புக்காரனான செக்குவிடமா கணாரன் இந்த விளையாட்டை விளையாடுகிறான்?
""டேய் கணாரா...'' விவேகமுள்ள கேளு நாயர் ஞாபகப்படுத்தினார்: ""உன் விளையாட்டு நல்லதில்ல.''
மற்றவர்கள் தன்னைப் பற்றிக் கூறுவது எதையும் பொருட்படுத்தாமல், மீனின் தலையைக் கடித்துக் கொண்டிருந்தான் செக்கு. ""டேய் செக்கு... செக்கு...'' கணாரன் மேஜைக்குக்கீழ் வழியாக செக்குவின் காலில் தன் காலைக்கொண்டு உரசினான்: ""நீ ஏன்டா கல்யாணம் பண்ணிக்கல?''
அதைக் கேட்டதாக செக்கு காட்டிக் கொள்ளவில்லை. அவன் பரிமாறும் சிறுவனை நோக்கி முகத்தைத் திருப்பினான். அழைக்கவேண்டிய சூழலே வரவில்லை. காரணம்- சிறுவன் அவனுடைய முகத்தைத்தான் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தான். சிறுவன் மட்டுமல்ல; கள்ளுக்கடை முழுவதுமே செக்குவைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருந்தது.
அவர்களுக்கு இது ஒரு அபூர்வமான காட்சியாக இருந்தது. பச்சை மிளகாயைப்போல இருக்கும் கணாரன், சண்டைக்காரனான- ஊரின் நடுங்கச்செய்யும் மனிதனான செக்குவைக் கிண்டல் பண்ணுவதா?
நிறைக்கப்பட்ட மேலும் இரண்டு புட்டிகளை சிறுவன் கொண்டு வந்தான். ஒரு இரும்புப் பாத்திரத்தில் புளியும் மிளகுமிட்ட வாத்து முட்டையும்... வாத்து முட்டை செக்குவைப் போன்றவர்கள் மட்டுமே சாப்பிடுவது... அதற்கு விலை கூடுதல். நான் ஓணத்திற்கும் விஷுவிற்கும் மட்டுமே வாத்து முட்டையுடன் சேர்த்துக் கள்ளு குடிப்பேன்.
""டேய்... செக்கு... செக்கு...'' கணாரன் அழைத்தான்: ""உனக்கொரு பெண் வேணாமாடா? மழைக்காலத்தில கட்டிப்பிடிச்சுப் படுக்குறதுக்கு ஒரு பெண் வேணாமாடா?''
கடையின் இன்னொரு எல்லையிலிருந்த, காதில் கடுக்கன் அணிந்திருந்த ஒரு மீனவன் தன்னையறியாமல் சிரித்துவிட்டான்.
கணாரன் மேலும் ஒரு புட்டியைக் கொண்டு வரும்படி கூறினான். ஒரு தட்டு அவித்த மரவள்ளிக்கிழங்கும்... கள்ளும் கிழங்கும் வந்து சேர்ந்ததும், கணாரன் என் கையைப் பிடித்துக்கொண்டு கூறினான்:
""மேலும் ஒரு ரூபா கடனாத் தரணும். உனக்கு நாளைக்கு நாலு தேங்காய் கொண்டுவந்து தர்றேன்.''
தேங்காய் பறித்தால், சில நேரங்களில் தேங்காய்தான் கூலியாகக் கிடைக்கும்.
நான், பகவதி புண்ணியத்தில் இன்று காசு உள்ளவன். அதனால் எதிர்த்து எதுவும் கூறவில்லை. கணாரன் விருப்பம்போல குடிக்கட்டும்... மடியில் காசு இருக்கிறது.
மரவள்ளிக்கிழங்கை அள்ளித்தின்று, புட்டியை காலி செய்து, உதட்டைத் துடைத்துவிட்டு, கணாரன் செக்குவை நோக்கித் திரும்பினான்:
""உனக்கு நான் ஒரு பொண்ணை ஏற்பாடு செஞ்சு தரட்டுமாடா? நீ அவளோட கழுத்தில் தாலி கட்டுவியாடா?''
அப்போதும் செக்கு கணாரனைப் பொருட் படுத்தவில்லை.
""எந்தப் பொண்ணு?''
கேளு நாயர் பயத்தின் காரணமாக நடுங்கிக் கொண்டிருக்கும் குரலில் கேட்டார்.
""பர்வத கல்யாணி.''
ஒரு பெரிய விசேஷத்தைக் கூறுவதைப்போல கணாரன் கூறினான். அதற்குப் பிறகும் திருப்தி வராமல், அவன் உரத்த குரலில் மீண்டுமொரு முறை திரும்பக் கூறினான்:
""கிழவன் ஆண்டியின் மனைவி பர்வத கல்யாணி...''
யார் யாரோ அடக்கிக்கொண்டு சிரித்தார்கள்.
பர்வத கல்யாணியை யாருக்குத் தெரியாது?
ரத்த ஓட்டம் இல்லாத வீங்கிப்போன முகமும், கை-கால்களும்... இரு கால்களும் யானைக் கால்கள்... ஆண்டி அவள் கழுத்தில் தாலிகட்டித் திருமணம் செய்தான். ஆனால், இப்போது இரண்டு பேரும் இரு வழிகளில்... கல்யாணி தோட்டிகளின் குடியிருப்பில் வசிக்கிறாள். செக்குவின் வீட்டிற்கு அருகில்... நடப்பதற்கு வசதியாக அணிந்திருக்கும் துணியை ஆண்களைப்போல முழங்கால்களுக்கு மேலே மடித்துச் சொருகி, யானைக் கால்களை வலிய இழுத்தவாறு அவள் புகைவண்டி நிலையம் இருக்கும் பகுதியில் நடந்துசெல்வதைப் பார்க்கலாம். எனக்கு அவளைப் பார்க்கும்போது வாந்தி வரும். அவளுக்கு இப்படிப்பட்ட தலைவிதியை உண்டாக்கியதற்காக எனக்கு பகவதிமீது கோபம் வருவதுண்டு.
""என்னடா?'' கணாரன் கேட்டான்: ""உனக்கு அவள் போதுமா? கட்டிப் பிடிச்சு படுக்கறதுக்கு சுகமா இருக்கும்டா...''
அப்போதும் செக்குவின் முகத்தில் எந்தவொரு உணர்ச்சி வேறுபாடும் தெரியவில்லை. அவனுடைய தட்டு காலியாக இருந்தது. புட்டியும்... சட்டையின் ஓரத்தைக் கொண்டு உதட்டைத் துடைத்துவிட்டு, ஒரு ஏப்பத்தை விட்டவாறு அவன் எழுந்தான்.
""நல்ல கதை...'' கணாரன் பின்னால் சென்று, செக்குவின் சட்டையைப் பற்றினான்: ""நீ போறியா? உட்காருடா. இன்னும் ஒரு புட்டி குடி. பாக்கரன் காசு தருவான்.''
அதற்கு நான் தயாராக இருந்தேன். ஆனால், அதை வெளிப்படையாகக் கூறுவதற்கான தைரியம் எனக்கு இல்லாமலிருந்தது.
""டேய்... போகாதேடா... செக்கு.''
பின்னால் சென்ற கணாரன் அவன் அணிந்திருந்த கைலியைப் பிடித்திழுத்தான். செக்கு மெதுவாக கணாரனின் கையைத் தட்டி விலக்கி, கேளு நாயரின் மேஜைக்கு அருகில் சென்று கணக்கைத் தீர்த்தான். ஒரு பீடியைப் பற்றவைத்தான். வாசலில் தலை தட்டாமல் இருக்க குனிந்தவாறு அவன் வெளியேறினான்.
""அவன் எங்கே போறான்னு தெரியுமா?'' கடையின் மத்தியில் நின்றவாறு, கைகளை உயர்த்தி தலையில் வைத்துக்கொண்டு கணாரன் உரத்த குரலில் சிரித்தான்: ""அவன் பர்வத கல்யாணிகிட்டதான் போறான்.''
கடை முழுவதும் கணாரனின் சிரிப்பில் பங்குகொண்டது.
செக்குவிடம் நான் ஒரு விஷயத்தைக் கூறவேண்டுமென்று நினைத்தேன் அல்லவா? சுமைகளைத் தூக்கியும், சிறிய சிறிய வேலைகளைச் செய்தும் எனக்கு வெறுப்பாகிவிட்டது. சிறிய வருமானம் வருகிறது என்றாலும், நிரந்தரமான ஒரு வேலை எனக்கு வேண்டும். செக்குவுக்கு நகரத்திலிருக்கும் சேட்டுகளை நன்கு தெரிந்திருக்கும். அரிசி எடுப்பது அவர்களுடைய சேமிப்புக் கிடங்கு களிலிருந்துதானே? செக்கு நினைத்தால் நான் வெற்றி பெறுவேன்.
நான் உடனடியாக எழுந்து கணக்கைத் தீர்த்துவிட்டு வெளியேறினேன்.
செக்கு தெருவின் திருப்பத்தை அடைந்திருந்தான். அவன் மெதுவாகத்தான் நடந்துகொண்டிருந்தான். தோளில் அணிந்திருந்த மேல்துண்டு இப்போது தலையில் சுற்றப்பட்டிருந்தது. புள்ளிகள் போட்ட கைலியை மடித்துக் கட்டியிருந்தான்.
நான் பின்னால் நடந்தேன்.
செக்கு நேராக பிரதான சாலையின் வழியாக போவான் என்றுதான் நான் நினைத்தேன்.
ஆனால், அவன் மெதுவாக இடப்பக்கத்திலிருந்த ஒற்றையடிப்பாதையில் செல்வதைப் பார்த்தேன்.
அது என்னுடைய வீட்டுக்கும் கணாரனின் வீட்டுக்கும் செல்லக்கூடிய வழி. அங்கு அவன் எங்கே போகிறான் என்று நான் ஆச்சரியப்பட்டேன். காரணம்- அந்த வழி என்னுடைய வீட்டையும், கணாரனின் வீட்டையும் சுற்றிக்கொண்டு, ஒரு காய்ந்து கிடக்கும் குளத்தில் போய் முடியும்.
அங்கு நடந்துசெல்ல முடியாத அளவுக்கு செடிகளும் புற்களும் வளர்ந்து கிடக்கும்.
செக்கு என்னுடைய வீட்டைக் கடந்து, மெதுவாக நடந்தான். அவன் பீடி புகைக்கிறான் என்பது பின்னால் நடந்துகொண்டிருந்த எனக்குப் புரிந்தது. காரணம்- அவனுடைய தலையில் கட்டப்பட்டிருந்த மேல் துண்டிற்கு மேலே புகை உயர்ந்துகொண்டிருந்தது.
கணாரனின் வீட்டிற்கு முன்னால் செக்கு நின்றான்.
உடைந்த கற்கள் பரப்பப்பட்ட நெடுங்குத்தான படிகளில் ஏறினால், கணாரனின் வீட்டு வாசல்... அவன் அங்கு எதற்காகப் போகிறான் என்று எனக்குப் புரியவில்லை. கணாரன் கடையில் இருக்கிறானே? ஆண் இல்லாத வீட்டில் இந்த உச்சிப் பொழுதில் அவனுக்கு என்ன வேலை?
நான் என் நடையின் வேகத்தை அதிகரித்தேன்.
செக்கு படிகளில் ஏறி, தலையைக் குனிந்தவாறு உள்ளே பார்த்தான். தொடர்ந்து உள்ளே சென்றான்.
வாசலிலிருந்து திண்ணைப் பக்கம் ஓடிச்சென்று, உள்ளே வேகமாகச் சென்றேன்.
அதற்குள் தாமதமாகிவிட்டது.
கை- கால்களை இளம்தென்றலைப் போல அசைத்து, கைவிரலை சிரித்துக்கொண்டிருக்கும் வாய்க்குள் வைத்து விளையாடியவாறு படுத்திருந்த அழகான குழந்தையை நோக்கி இறங்கிக் கொண்டிருக்கும் கத்தி...
செக்கு வெளியேறிச் சென்றபோது, நான் மேலும் ஒருமுறை பார்த்தேன். இளம்நெஞ்சில் பாய்ந்து கிடக்கும்...
நான் கண்களை மூடிக்கொண்டேன்.