தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை கடந்த 9-ஆம் தேதி கவிஞர் பிருந்தாசாரதியின் படைப்புலகம் என்ற தலைப்பில் கருத்தரங்கம் ஒன்றை தேனி நகரில் நடத்தியது.
ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் முழுவதும் உள்ள படைப்பாளிகளை ஓரிடத்தில் இணைய வைத்து தரமான படைப்புகளுக்கு விருதுகள் அளித்து படைப்பாளிகளை ஊக்குவிக்கும் அரிய சாதனையை இந்த இலக்கிய மேடை செய்துவருகிறது.
இந்த இலக்கிய மேடையை முன்னின்று நடத்தி வரும் விசாகன், வினைத்திட்பம் என்ற நாவலையும் தேனி நகர அரசியல் என்ற கட்டுரைத் தொகுப்பையும் நவீன அரசியலின் நாயகன் என்ற கட்டுரைத் தொகுப்பையும் ஆளுமையின் நாயகன் என்ற சிறுகதைத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். இவருடன் இவரது இணையர் லட்சுமியும் இணைந்து இலக்கிய சேவை நிகழ்த்துவது பாராட்டுதலுக்குரியது. கவிஞர் அம்பிகா குமரன், நிகழ்ச்சிகள் சிறப்புற நிகழ உறுதுணை புரிந்து வருகிறார்.
கவிஞரும் இயக்குநரும் வசனகர்த்தாவுமான பிருந்தாசாரதி எழுதிய நூல்களை முன்வைத்து, "பிருந்தாசாரதி படைப்புலகம்' என்ற தலைப்பில் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தது.
பிருந்தாசாரதியின் முதல் கவிதை நூல் "நடைவண்டி' 92-ல் வெளியானது. அது திரையுலகக் கதவை இவருக்குத் திறந்துவிடும் சாவியாக இருந்தது எனலாம்.
உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் 2007ஆம் ஆண்டு வெளியிட்ட பஹம்ண்ப் ல்ர்ங்ற்ழ்ஹ் ற்ர்க்ஹஹ் என்ற புதுக்கவிதைத் தொகை நூலில் இவரது ஊமை என்ற கவிதை ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு சேர்க்கப்பட்டிருக்கிறது.
"ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்' கவிதைத் தொகுதி 2016 ஆம் ஆண்டுக்கான ஜெயந்தன் படைப்பிலக்கிய விருதைப் பெற்றது. ஞாயிற்றுக் கிழமைப் பள்ளிக்கூடம் என்ற கவிதை மதுரை திருமலை நாயக்கர் கல்லூரி மற்றும் உத்தமபாளையம் கல்லூரி ஆகியவற்றின் பாடத் திட்டத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இவரது பிற நூல்கள் பறவையின் நிழல், எண்ணும் எழுத்தும், மீன்கள் உறங்கும் குளம், இருளும் ஒளியும் ஆகியவை ஆகும்.
மாலை 6 மணிக்கு விழா இனிதே தொடங்கியது.
நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கிய கவிஞர் அம்பிகா குமரன், "கவிதை என்பதுதான் மொழியின் முதல் இலக்கிய வடிவம். அது சந்தங்களில் தொடங்கி நவீனத்தை ஏந்திப் பயணிக்கிறது. அது மொழியின் அணிகலனாக இருக்கிறது. வாசகனை மொழியோடு உரையாட வைக்கிறது. புதிய வழியை வாசகனுக்குத் திறந்து காட்டுகிறது. கவிதை என்பது மொழியை உயிர்ப்போடு வைத்திருக்கக் காலங்கடந்து தொன்மங்களைச் சேமித்து வைத்திருக்கும் பேழையாக இருக்கிறது. அத்தகைய கவிதையையும் கவிஞனையும் இணைக்கும் சொற்கள் எளிய மக்களையும் சென்றடைவதே கவிஞனின் ஆகச்சிறந்த வெற்றியாக இருக்க முடியும். ஒரு கவிதை உழவனின் கையில் கலப்பையாக, சிற்பியின் கையில் உளியாக, நெசவாளியின் கையில் சட்டையாக, ஒரு ஏழைக்குடிசையில் விளக்காக இருக்கவேண்டும் என்பார் செங்கோர். அந்த வகையில் கவிஞர் பிருந்தாசாரதியின் கவிதைகள் அனைத்தும் அழகியலோ மிகைப்படுத்துதலோ இல்லாமல் எளிய மக்களும் ரசிக்கும்படியாக அமைந்திருக்கிறது' என்று குறிப்பிட்டார்.
கவிஞர் மகி தமிழ், அழகிய தமிழில் வரவேற்புரை யாற்றினார். பின்னர் பிருந்தாசாரதியின் நூல்கள் குறித்த கருத்துரைகள் தொடங்கின.
"இருளும் ஒளியும்' நூல் பற்றி, சித்தார்த் பாண்டி யனும், கணித ஆசிரியையான ஆர்.எஸ். லட்சுமி, பிருந்தாசாரதியின் "எண்ணும் எழுத்தும்' நூல் பற்றியும், கவிஞர் லஷ்மி விசாகன், "மீன்கள் உறங்கும் குளம்' என்ற ஹைக்கூ தொகுப்பு பற்றியும், கவிஞர் கே. எஸ். அம்பிகா வர்ஷினி, "ஞாயிற்றுக்கிழமைப் பள்ளிக்கூடம்' நூல் பற்றியும் கவிஞர் கோ.லீலா, பிருந்தாசாரதியின் கவிதை உலகம் என்பது பற்றியும் பேசினர். கவிஞர் மேகா அருணாச்சலம், கவிஞர் பிருந்தாசாரதியின் ஆறு நூல்களையும் தொகுத்து ஒரு குறுக்குவெட்டுப் பார்வையை வழங்கினார்.
நிறைவாக பேராசிரியர் முனைவர் அப்துல் சமது தலைமையுரை ஆற்றினார்.ஒரு கவிஞன் எப்போதும் மனப்பிறழ்வு நிலையில் இருப்பது போலத் தோன்றுவது உண்மைபோலவே இருந் தாலும் அதற்குள் ஒளிந்திருக்கும் மாயைதான் படைப்பின் முனைப்பை உருவாக்குகிறது என்பதை தனது உரையின் வாயிலாக அவர் தெளிவுபடுத் தினார். தான் பயன் படுத்திய ஒவ்வொரு சொல்லிலும் பிருந்தா சாரதியின் கவிதை தரும் மகத்துவத்தை எடுத்துரைத்தார். மேலும், பிப்ரவரி 14-ன் கொண்டாட் டத்துக்குக் காரணமானவேலன்டைன்ஸ் துறவி பற்றியும் அவருக்கு உணவு தர வந்த அகஸ்டி பற்றியும் விரிவாக சுவைபடக் கூறிய தோடு, அந்த வேலன்டைன்ஸ் மற்றும் நார்சிஸ் கிரேக்கத் தொன்மம் குறித்தும் கவிஞர் பிருந்தா சாரதி கவிதை எழுத வேண்டும் என்றார்.
மேலும், "ஞாயிற்றுக் கிழமை பள்ளிகூடம்' கவிதையில் இடம் பெறும் சுஜாதா டீச்சரின் ரோஸ் நிற உடை பற்றிப் பேசியவர், தன் டீச்சர் மணிமேகலை பற்றியும் சொல்லி நெகிழ்ந்தார். இப்படி ஒவ்வொரு கவிதையையும் போற்றி சிலாகித்து பேசி தன் நினைவுகளை பல்வேறு வரலாற்றுக் கதைகளோடு ஒப்பிட்டார். நிறைவாக ஏற்புரையாற்ற வந்த பிருந்தாசாரதி, "முப்பதாண்டுகள் கவிதைகளோடு தொடர்ந்து பயணம் செய்ததில் இப்படி ஒரு நாள் பரிசாகக் கிடைத்திருக்கிறது' என்று நெகிழ்ந்தார்.
வாழ்க்கை என்பது நாம் வாழும் உலகை நேசிப்பது. மனிதர்களை மதிப்பது. ஒருவருக் கொருவர் அன்புகாட்டுவது. தேவைப்படும் நேரங்களில் முடிந்தால் தோள்கொடுப்பது. இது தவிர வேறென்ன?