ஸ்டாலினிடம் கலைஞரின் துணிச்சல்! - 90 ல் அடியெடுத்து வைக்கும் ஈரோடு தமிழன்பன் பெருமிதம்!

/idhalgal/eniya-utayam/bravery-artist-stalin-erode-tamilanban-proud-step-90

ரு கவிஞன் சில கவிதைகளை எழுதுகிறான்; ஒரு நல்ல கவிஞன் சில கவிஞர்களையே எழுதுகிறான். ஒரு மகாகவி மட்டுமே காலத்தையே எழுதுகிறான்’ என்று சொல்வதுண்டு. அந்த வகையில் நம் காலத்தில் வாழும் மகாகவியாகத் தமிழர் உள்ளங்களில் உயர்ந்து நிற்கின்றார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

தமிழ் மரபில் கவிதையென்றாலே காப்பியங்களாகவும் செய்யுள்களாகவுமே எழுதிக் கொண்டிருந்த காலமது. 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த எட்டையப்புரத்து கவிதைச் சூரியன் மகாகவி பாரதியார், 20-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ்க் கவிதைக்குப் புத்துயிர் ஊட்டினார். ஆங்கிலக் கவிஞர்களான வால்ட் விட்மன், பைரன், கீட்ஸ், ஷெல்லி ஆகியோரின் கவிதைகளை வாசித்த பாரதியார், அதுவரை எழுதி வந்த ஆசிரியப்பா, வெண்பா, விருத்தம், சிந்து ஆகிய தமிழின் மரபார்ந்த யாப்பு வடிவங்களிலிருந்து விலகி, வசன கவிதைகளை எழுதினார். அதுவே தமிழில் புதுக்கவிதைக்கான முன்னோடியானது.

ss

பாரதி எழுதிய ‘காட்சி’ எனும் வசன கவிதை, தமிழ்க் கவிதைக்குப் புதியதோர் தொடக்கத்தைத் தந்தது. அதுவரை பண்டிதர்களின் எடுப்பார் கைப்பிள்ளையாக மட்டுமே இருந்த தமிழ்க் கவிதை, மக்கள் நடமாடும் தெருவிற்கு இறங்கிவந்து எல்லோருக்குமான செல்லப்பிள்ளையானது. தமிழ்க் கவிதைக்குப் புதுத்தடம் போட்டுத்தந்த பாரதியாரை மகாகவியெனக் காலம் கொண்டாடியது.

பாரதியைத் தனது தாசனாகக் கொண்டு, புதுவையிலிருந்து புறப்பட்டு வந்தார் கனகசுப்பு ரத்தினம் எனும் பாரதிதாசன். தமிழ் மொழிக்கும் தமிழிலக்கியத்திற்கும் செறிவான பல படைப்புகளைப் படைத்தளித்து புரட்சிக் கவிஞரெனப் போற்றப்பட்டார்.

புரட்சிக் கவிஞரின் கவிதைகளின் மேல் காதலுற்ற அந்த இளைஞனுக்கு அப்போது வயது 21. ஆர்வத்தோடு கவிதை நூல்களை வாசித்துக்கொண்டும், எழுதிக்கொண்டுமிருந்த அந்த இளைஞனின் கைகளுக்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் 1942-இல் எழுதிய ‘இசை அமுதம்’ எனும் நூலும், 1944-இல் எழுதிய ‘அழகின் சிரிப்பு’ நூலும் வாசிக்கக் கிடைத்தன. அந்த இரு நூல்களிலும் இருந்த கவிதைகளும் இளைஞனின் மனதை அப்படியே கவ்விப் பிடித்தன. புரட்சிக் கவிஞரைச் சந்திக்கவேண்டுமென்கிற ஆவல் அந்த இளைஞனுக்குள் உண்டானது.

கரந்தைப் புலவர் கல்லூரியின் மாணவராக இருந்த அந்த இளைஞன், தனது கல்லூரியின் இளங்கோ மன்ற ஆண்டு விழாவிற்குப் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனைத் தலைமையேற்க 1954-ஆம் ஆண்டு பிப்ரவரி 21 அன்று கல்லூரிக்கு அழைத்துவந்தான். அன்று புரட்சிக் கவிஞரோடு உண்டான அறிமுகமும் நட்பும், பிறகு பத்தாண்டுக் காலம் புரட்சிக் கவிஞருடனே அந்த இளைஞனைத் தொடர்ந்து பயணிக்க வைத்தது. பின்னாளில் புரட்சிக் கவிஞருடன் பழகிய அனுபவங்களைத் தொகுத்து ‘பாரதிதாசனோடு பத்து ஆண்டுகள்’ (2000) எனும் நூலாக எழுதிய அந்த இளைஞன்தான், இன்று தமிழ்க் கவிதையின் இரு நூற்றாண்டுக்கால கவிதை முகமாக ஒளிர்ந்துகொண்டிருக்கும் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

பகுத்தறிவுச் சுடரினை நாடெங்கும் தூக்கிச் சுமந்த தந்தை பெரியார் பிறந்த ஈரோடு மாவட்டத்திலுள்ள சென்னிமலை எனும் ஊரில் செ.இரா.நடராசன் - வள்ளியம்மாள் தம்பதியினரின் மகனாக 1933-ஆம் ஆண்டு செப்டம்பர் 28 அன்று பிறந்தவர் ந.செகதீசன். இளைய வயதிலேயே தமிழ் மீது தீராப் பற்று கொண்டார். பள்ளிக்கூட நாட்களிலேயே விடிவெள்ளி, மலையமான் எனும் புனைபெயர்களில் கவிதைகளை எழுதத் தொடங்கினார். அதுமட்டுமா, அப்போதே ‘சுய சிந்தனை’ எனும் கையெழுத்து இதழினையும் நடத்தினார்.

பள்ளிப் படிப்பை சென்னிமலையில் முடித்து, கரந்தைத் தமிழ்க் கல்லூரியிலும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திலும் உயர்கல்வியை முடித்த இளைஞரான செகதீசன், தமிழுணர்வின் காரணமாக கல்லூரி நாட்களிலேயே தமிழன்பன் ஆனார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் தமிழ் முதுகலைப் பட்டம் பெற்றதோடு, ‘தனிப்பாடல் திரட்டை’ ஆய்வுசெய்து, முனைவர் பட்டமும் பெற்றார்.

கவிஞர் ஈரோடு தமிழன்பனின் கவிதை ஒன்றைப் படித்துவிட்டு, அவரது பல்லாயிரக்கணக்கான கவிதை ரசிகர்களுள் நானும் ஒருவனானேன். கவிஞரது கவிதை நூல்களை நண்பர்களிடத்தும், கிளை நூலகத்திலும் தேடியெடுத்துப் படிக்கத் தொடங்கினேன்.

1985-ஆம் ஆண்டு பிப்ரவரில் வெளியான கவிஞரது ‘சூரியப் பிறைகள்’ எனும் ஹைக்கூ கவிதை நூல் என் கைகளுக்கு கிடைத்தது. இதுவரை ஜப்பானிய ஹைக்கூ என்றால் மூன்று வரிக்கவிதை எனும் மேலோட்டமான புரிதலில் எழுதிக்கொண்டிருந்த எனக்கு, ஹைக்கூ பற்றிய புரிதலையும் தெளிவையும் தந்தது அந்த நூலில் ‘வாசல் ஓர் வாசகம்’ எனும் தலைப்பில் கவிஞர் எழுதியிருந்த 14 பக்க அளவிலான நீண்ட முன்னுரை. கவிதைக்கான ஓவியங்களை கவிஞரே வரைந்திருப்பார் என்பது அந்த நூலின் இன்னொரு சிறப்பு. அதில் படித்த ஒரு ஹைக்கூ இன்னமும் என் மனதில் ஊர்ந்துகொண்டே இருக்கிறது.

பயம்

ஊர்ந்துகொண்டிருக்கும் - இது

பாம்பு போன தடம்.’

வெறும் ஆறே வார்த்தைகளில் இந்த ஹைக்கூ நமக்குள் கிளர்த்தும் காட்சியின் அடர்த்தியை இப்போதும் என்னால் உணர முடிகிறது,

வரைந்து முடித்த

சிலந்தி வலையில்

மாட்டிக்கொண்டது தூரிகை.’

அப்பப்பா என்னவொரு நுட்பமான அழகியல் பார்வை. கவிஞரது நூல்களைப் படிக்கப் படிக்க, அவரைப் பார்க்கவேண்டுமென்ற ஆவல் எனக்கு எழுந்தது. கவிஞரிருப்பதோ சென்னையில்; நானோ புதுக் கோட்டையில். எப்படிச் சந்திப்பது? காத்திருந்த எனக்கு காலமே கனிந்து வந்தது.

1990-ஆம் ஆண்டில் கம்பன் கழகம் நடத்திய கவியரங்கில் பங்கேற்க, புதுக்கோட்டைக்கு வந்திருந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனை முதன்முதலாக அப்போதுதான் நேரில் பார்த்தேன். மெலிந்த தேகம், நேர்வகிடெடுத்த தலைமுடி, முகம் முழுக்க அடர்ந்து பரவும் புன்சிரிப்பு, பேண

1990-ஆம் ஆண்டில் கம்பன் கழகம் நடத்திய கவியரங்கில் பங்கேற்க, புதுக்கோட்டைக்கு வந்திருந்த கவிஞர் ஈரோடு தமிழன்பனை முதன்முதலாக அப்போதுதான் நேரில் பார்த்தேன். மெலிந்த தேகம், நேர்வகிடெடுத்த தலைமுடி, முகம் முழுக்க அடர்ந்து பரவும் புன்சிரிப்பு, பேண்டுக்குள் சட்டையை ‘இன்’ செய்திருந்த நேர்த்தி... என முதல் சந்திப்பிலேயே என் ஆதர்ச கவிஞரானார். வேக நடைபோட்டு ஒரு துள்ளலோடு மேடையேறினார். தனக்கென தனி பாணியில், கேட்போரை ஈர்க்கும் குரலில் கவியரங்கினை அன்றைக்கு கட்டியாண்டார் கவிஞர். கம்பன் கழகக் கவியரங்கம் என்றாலும் நிகழ்காலத்தின் போக்கையும் தனது கவிதைகளில் மிகச் சரியான இடங்களில் பொருத்தமாகச் சொல்லி, கைத்தட்டலை அள்ளிக்கொண்டார். விழா முடிந்து வெளியே வந்த கவிஞரைச் சூழ்ந்துகொண்டனர் அன்பர்கள். நானும் கூட்டத்திற்குள் சென்று, எனது டைரியொன்றை நீட்டினேன். புன்னகைத்தபடி வாங்கி, கையெழுத்துப் போட்டார். ‘த’ எனும் முதலெழுத்தைச் சின்னதாகவும். ‘ழ’ எனும் மூன்றாவது எழுத்தை டைரியின் இரு பக்கத்திலும் வருமாறு பெரிதாகவும் போட்டுக் கையெழுதிட்டார். எனக்கான பொக்கிஷமாக அதைப் பாதுகாத்து வைத்திருக்கிறேன்.

தொடக்கக் காலத்திலேயே கவிதைகளோடு நாவலும் எழுதியவர் ஈரோடு தமிழன்பன் என்பது பலரும் அறிந்திராத புதுச்செய்தி. ‘நெஞ்சின் நிழல்’ எனும் கவிஞரது கையெழுத்தில் இருந்த நாவலை புரட்சிக்கவிஞர் வாசித்துவிட்டுப் பெரிதும் பாராட்டினார். அத்தோடு நில்லாமல் சென்னையிலிருந்த பாரி நிலையத்தில் கொடுத்து, அதனை நூலாக வெளிக்கொண்டு வந்தார். 1965-இல் ‘நெஞ்சின் நிழல்’ நாவல் வெளியானது. 1968-இல் ’கொடி காத்த குமரன்’ எனும் வில்லுப்பாட்டு நூலே, கவிஞரது முதல் கவிதை நூலாக வரவானது.

கவிஞரது கவிதைகளுள் எனக்குப் பிடித்த கவிதையெனப் பல நூறு கவிதைகளைச் சொல்லிக் கொண்டே போகலாம். என்றாலும், ‘செய்தியே, உனக்கு ஒரு செய்தி’ எனும் இந்தவொரு கவிதையிலேயே கவிஞர் ஜனநாயகத்தின் காவலரெனக் கண்டுகொள்ளலாம்.

கடந்த இருபத்து நான்கு

மணி நேரம்...'

முடிவதற்குள்

வாக்கியத்து முற்றத்திற்குள்

stalin

நெடுமூச்சை, கண்ணீரை

நிரப்பும் செய்தியே!

கொலைகளிலும்

கொள்ளைகளிலும்

முகம் கறுத்து வருகிற நீ,

புன்னகை நதிகளில்

நீராடி ஒரு நாள்

புறப்பட்டு வாராயோ?

போராட்டம்,

ஆர்ப்பாட்டம், கிளர்ச்சி என்று

காயம்பட்டுக் கதறியபடி முள்காட்டில்

ஓடி வருகிற

உனக்குப்

பூங்காக்களின் முகவரிகள்

தெரியாதா?

கற்பழிப்பில்

கள்ளக் காதலில்

சங்கிலிப் பறிப்பில்

மானம் இழந்து

வருகிற நீ,

ஒழுக்கச் சாளரத்தின் ஓரம்

ஒரு நாளேனும் ஒதுங்கி

நிற்கக் கூடாதா?

உன் மார்பில்

பால் அருந்தும் வார்த்தைகள்

உதடு திறக்கும் முன்

உண்மைகளின்

சுவாசப் பைகளைக்

கடித்துக் குதறுவது ஏன்?

கட்சித் தாவல்களால்

ஆட்சிக் கவிழ்ப்புகளால்

கருக்குலைந்து உருக்குலைந்து

ஓடி வரும் நீ...

போலி ஜனநாயகத்தைப்

புதைத்துவிட்டதாய் என்று

எப்போது வந்து

எம்மிடம் சொல்வாய்?’

சிலிர்ப்புகள் (1970), தோணி வருகிறது (1973), தீவுகள் கரையேறுகின்றன (1978), காலத்திற்கு ஒருநாள் முந்தி (1982), நந்தனை எரித்த நெருப்பின் மிச்சம் (1982), ஊமை வெயில் (1984), நிலா வரும் நேரம் (1984), , திரும்பி வந்த தேர்வலம் (1985), கருவறையிலிருந்து ஒரு குரல் (1987), பனி பெய்யும் பகல் (1998), திசை கடக்கும் சிறகுகள் (2015), மாற்று மனிதம் (2017) உள்ளிட்ட 75-க்கும் மேற்பட்ட கவிதை நூல்கள், கலையா கைவினையா (2001), பாப்லோ நெருதா பார்வையில் இந்தியா (2011) உள்ளிட்ட கட்டுரை நூல்கள் 25, மொழிபெயர்ப்பு நூல்கள் 2, ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலும் மொழிபெயர்ப்பான நூல்கள் 21 என தமிழிலக்கிய வெளியில் அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்து எழுதிக்கொண்டும், வாசித்துக்கொண்டும், இயங்கிக் கொண்டுமிருக்கும் பேராளுமையாகத் திகழ்ந்து வருபவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

பலரும் அறிந்த ஈரோடு தமிழன்பனின் முகம் கவிஞரென்பதே. இன்னும் சிலர் பேராசிரியராகவும் அறிவர். வெகுசன மக்கள் மத்தியில் செய்தி வாசிப்பாளர் எனும் அறிமுகமும் உண்டு. ஆனால், கவிஞர், புதுக்கல்லூரி தமிழ்ப் பேராசிரியர், சிறுகதையாளர், நாவலாசிரியர், நாடக ஆசிரியர், சிறுவர் இலக்கியப் படைப்பாளி, வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், கட்டுரையாளர், ஓவியர், சொற்பொழிவாளர், மொழிபெயர்ப்பாளர், திரைப்படப் பாடலாசிரியர் என பன்முகங்கள் ஈரோடு தமிழன்பனுக்கு உண்டு. கவிஞரது கவிதைகள் இந்தி, வங்கம், மலையாளம், ஆங்கிலம், உருது உள்ளிட்ட பல மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன. தனது படைப்புகளுக்காக 2000-த்தில் வெளியான ‘வணக்கம் வள்ளுவ’ எனும் நூலுக்காக ஒன்றிய அரசின் சாகித்திய அகாதெமி விருதையும், 2018-ஆம் ஆண்டிற்கான ‘கலைஞர் செம்மொழி விருது’ உள்ளிட்ட ஏராளமான விருதுகளையும் பெற்றுள்ளார்.

தமிழின் பல மூத்த கவிஞர்களுக்கு இல்லாத தனித்த சிறப்பொன்று ஈரோடு தமிழன்பனுக்கு உண்டு. மரபுக்கவிதையில் வேரிறக்கியவர், புதுக்கவிதையாகக் கிளை பரப்பி, ஹைக்கூவாக உலகின் திசைகளெங்கும் தன் சிறகுகளை விரித்து நிற்பதோடு, தமிழுக்குப் புதுப்புது கவிதை வடிவங்களை இன்னமும் அறிமுகம் செய்யும் புதுமை விரும்பியாக விளங்குகிறார்.

ஹைக்கூ கவிதைகளை மட்டுமின்றி, சென்ரியு (ஒரு வண்டி சென்ரியு - 2001 ஏப்ரல்), -மரைக்கூ (சென்னிமலைக் கிளியோப்பாத்ராக் கள் - 2002 அக்டோபர்), பழமொன்ரியு (ஒரு கூடைப் பழமொன்ரியு - 2004) என ஹைக்கூவின் கிளை வடிவங்களிலும் நூல்களைப் படைத்து, இளைய கவிஞர்களின் கைகளில் புதிய வடிவங்களைக் கொண்டுசேர்த்தார்.

பக்தர்களிடம்

கடவுள் கேட்ட வரம்

அரசியலுக்கு இழுக்காதீர்கள்.’

(ஒரு வண்டி சென்ரியு)

குருக்களே தெய்வங்கள் ஆனார்கள்

கோயி லில்லா ஊர்களிலே தெய்வங்கள்

குடியி ருக்கப் போனார்கள்.

(சென்னிமலை கிளியோப்பாத்ராக்கள்)

கோயில் இல்லா ஊரில் குடியிருக்க

வேண்டாம்! குருக்கள் உள்ள

கோயிலில் வழிபட வேண்டாம்.

(ஒரு கூடை பழமொன்ரியு)

பகுத்தறிவுச் சிந்தனைகளையும், மூடநம்பிக்கைகளுக்கு எதிரான கருத்துப் பரவலையும் கோபத்தோடும் சமூக எள்ளலோடும் கவிதையாகப் பதிவு செய்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர் ஈரோடு தமிழன்பன்.

தமிழில் புதுக்கவிதையிலேயே எழுதப்பட்ட முதல் பயண நூலாக 1998-இல் ‘உன் வீட்டிற்கு வந்திருந்தேன்… வால்ட் விட்மன்!’ (1998), வினாக்களாலேயே ஆன முதல் கவிதை நூலாக ‘கனாக்காணும் வினாக்கள்’ (2004), வினா விடை வடிவிலமைந்த முதல் கவிதை நூலாக ‘பூக்களின் விடைகள் புலரி கைகளில்’ (2018) என பல புதிய முயற்சிகளிலும் மிகுந்த ஆர்வத்தோடும் ஈடுபட்டோடும் இயங்கி வருகிறவர் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

புத்தகங்கள் குறித்து மட்டுமே ஒரு புத்தகத்தைத் தமிழிலும் ஆங்கிலத்திலுமாக எழுதியிருக்கிறார் கவிஞர். ‘புத்தகம் என்பது’ (2016) அந்த நூலின் பெயராகும். அதிலிருந்து ஒரு கவிதை;

தினம்

ஒரு வரிதான் படிக்க முடியும்

என்றால்

ஆத்திச்சூடி படி;

தினம்

இரு வரிகள்தான் படிக்க முடியும்

என்றால்

திருக்குறள் படி;

தினம்

மூன்று வரிகள்தான் படிக்க முடியும்

என்றால்

ஹைக்கூ படி;

தினமும்

நான்கு வரிகள்தான் படிக்க முடியும்

என்றால்

நாலடியார் படி;

படிக்கவே முடியாதென்றால்

எப்படி?’

வாசிக்கிற எவரின் மனதிலும் ஊமுள்ளென குத்திக் கொண்டேயிருக்கும் கேள்வியை எழுப்பியுள்ளார் கவிஞர்.

மகாகவி பாரதிக்குப் பிறகு தமிழ்க் கவிதை அவ்வளவாக வளர்ந்து விடவில்லை என்றுதான் நான் கருதிக்கொண்டிருந்தேன். தமிழன்பனைப் படித்த பிறகு, என் கருத்தை மாற்றிக்கொண்டேன்” என்றார் தமிழ்ச் சிறுகதைகளின் முன்னோடியான எழுத்தாளர் ஜெயகாந்தன்.

பாரதிதாசனிலிருந்து பல படிகள் முன்னேறி வந்துவிட்ட தமிழன்பனது வளர்ச்சிக்குச் சிறந்த சான்று, அவர் இன்று முற்போக்கு அணியைச் சார்ந்து நிற்றலாகும்” என்பது ஆய்வறிஞர் க.கைலாசபதியின் கணிப்பாகும்.

கவிஞர் ஈரோடு தமிழன்பனை இருமுறை அவரது இல்லத்தில் சந்தித்து எடுத்த நேர்காணலின்போது, அவரது அறிவின் விசாலத்தையும் வாசிப்பின் விரிந்த எல்லையையும் கண்டு பிரமித்துப் போனேன்.

முதலாவது நேர்காணல், 2016-இல் ‘திசை எட்டும்’ இதழ் வெளியிட்ட தமிழ் ஹைக்கூ நூற்றாண்டுச் சிறப்பிதழுக்காக செனாய் நகரிலுள்ள கவிஞரது இல்லத்தில் நிகழ்ந்தது. கேள்விகளுக்கு மிகத் தெளிவாகவும் உறுதியாகவும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் அளித்த பதில்கள், தமிழ்க் கவிதை வரலாற்றின் கல்வெட்டுப் பக்கங்களாகப் பதிவாயின. அந்த நேர்காணலில் நான் கேட்ட கேள்வியொன்றுக்கு கவிஞரின் பதிலிது;

கேள்வி: தமிழில் ஹைக்கூ கவிஞர்களின் முன்னோடி நீங்கள். தமிழில் ஹைக்கூ கவிதைகள் அறிமுகமாகி, ஒரு நூற்றாண்டைத் தொட்டிருக்கும் இவ்வேளையில், தமிழில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய உங்களின் பார்வை என்னவாக இருக்கிறது?

தமிழ் மொழியின் வளமும் வனப்பும் மிகமிக எளிதாக, ஹைக்கூவை உள்வாங்கிக் கொண்டது வியப்பில்லை. ஜப்பானிய மொழிக்கும் தமிழுக்கும் உரிய மொழி அடிப்படையிலான தொடர்புகளும், ஜப்பானியர்களுக்கும் தமிழர்களுக்கும் வாழ்க்கைப் பார்வைகள், பரிமாணங்கள் வழி அமைந்த தொடர்புகளும், ஹைக்கூ வழியாகவும் தமக்குத் தளம் அமைத்துக் கொண்டுள்ளதாகவே நான் கருதுகிறேன்.

சுருங்கச் சொல்லல்’ என்கிற இலக்கண உத்தியும், தமிழுக்கும் ஜப்பானியத்திற்கும் பொதுவானவையே. இந்திய மொழிகளிலேயே பவுத்தத்திற்கு அரியதொரு காப்பியம் கண்டது நம் தமிழ் மொழி. எனவே பவுத்த ஜென் வழிச் சிந்தனைகளை உள்வாங்கிக்கொண்டு கவிதை புனைவது தமிழ்க் கவிஞனுக்கு அயல்புலம் என்றில்லை. கவிதைச் செயல்பாட்டில் ஈடுபடுவதான மனநிலையை ஏற்படுத்த வாய்ப்பில்லை. ஆங்கிலம் வழி வந்த பதினான்கடி ‘சானட்’ வகைக் கவிதை வகைமை தமிழில் வெற்றி பெறாமற்போனதற்கும் ஜப்பானிய ஹைக்கூ கவிதை வகைமை வெற்றிபெற்றதையும் ஒருசேர எண்ணிப் பார்க்கின்ற வேளையில் இவ்வுண்மை புலப்படும். ஹைக்கூ தமிழில் வெற்றிபெற்றுவிட்டது என்று சொன்னால் - இனி, புதிதாகச் செய்வதற்கு ஹைக்கூவைப் பொறுத்தவரையில் ஏதுமில்லை என்கிற எண்ணம் தோன்றும். எப்போதுமே ‘நிறைவு அல்லது திருப்தி அடைந்துவிட்டதாகக் கருதினால் முயற்சிகளும் முன்னேற்றங்களும் தடைப்படும். ஆகவே என்னைப் பொறுத்தவரை ‘ஹைக்கூ தமிழ் மண்ணில் வேரூன்றிவிட்டது’ என்று துணிந்து சொல்வேன்.”

தமிழில் ‘ஹைக்கூவே எழுத முடியாது; தமிழில் எழுது வதெல்லாம் பொய்க்கூ’ என்று பொய்யாகப் புலம்புபவர்களைக் கவிஞர் கொடுத்த பதில், சற்றே தெளிய வைத்தது.

அதேபோல், 2023-இல் அந்தமானில் நடைபெற்ற ‘தமிழ் ஹைக்கூ: இரண்டாவது உலக மாநாடு - தூண்டில்’ சிறப்பு மலருக்காக நீண்ட நேர்காணல் ஒன்றினை எடுத்தேன். போரூர் இரண்டாம் தோட்டத்திலுள்ள தனது வீட்டில் உடல் நலனையும் பொருட்படுத்தாமல் 3 மணி நேரம் என்னோடு உரையாடினார். கவிஞரைச் சுற்றிலும் ஏராளமான நூல்கள் சூழ்ந்திருக்க, இப்படியொரு கேள்வியை முன்வைத்தேன்.

கேள்வி: ஹைக்கூவோடு நின்றுவிடாமல் சென்ரியூ, -மரைக்கூ, -மர்புன், பழமொன்ரியூ என பல கிளை வடிவங்களிலும் எழுதிப் பார்க்கும் ஆர்வம் எப்படி வந்தது?

எப்போதுமே செய்த ஒன்றையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்கக் கூடாது என்கிற எண்ணமுடையவன் நான். புதிது புதிதாகச் செய்யவேண்டுமென்பதில் ஆர்வமுண்டு. ‘சூரியப் பிறைகள்’ நூலுக்குப் பிறகு நான் ஹைக்கூ நூல்கள் வெளியிடவில்லை. அதற்குப்பிறகு வேறு வேறு வடிவங்களில் முயன்று பார்த்தேன். புதிது புதிதாக செய்கிறபோது, நமது மொழிக்கொரு வளம் கிடைக்கும். பின்னாளில் எழுதுகிறவர்களுக்கு ஒரு வழி கிடைக்கும். இப்படி நாமும் எழுதலாமே என்று தோன்றும். இதற்கெல்லாம் உழைப்பு அவசியம் வேண்டும். இலக்கணமும் தெரிந்திருக்க வேண்டும்.

தற்போது ‘ஈரோ சென்வியம்’ அப்படீங்கிற புது வடிவமொன்றில் கவிதைகளை எழுதிவருகிறேன். ஈரோட்டையும் சென்னிமலையையும் இணைத்து எழுதப்படும் புதிய கவிதையிது. இது 6 அடிக் கவிதையது. முதலடியும் ஈற்றடியும் இரு சீரடிகளாக அமையும் இரண்டாமடி மூச்சீரடியாக நடக்கும், ஏனைய மூன்றடி களும் (3, 4, 5-ஆம் அடிகள்) நாற்சீரடிகளாக (அளவடிகளாக) அமையும்.

இவ்வகை கவிதைகளைத் தொகுத்து ‘மீயடுப்பு மீதிலே’ எனும் நூலாகவும்வெளியிட்டுள்ளேன். ‘2200 ஆண்டுகால தமிழ் யாப்பு வரலாற்றில் ஒருவர் புதிதாக யாப்பு எழுதுவது இதுவே முதல்முறை’ என்று பேராசிரியர் மருதூர் அரங்கராசன் முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார்.

சில மாற்ற முடியாத பழமைகள் இருக்கும். ஆனால் அந்தப் பழமையில் புதிய காட்சிகள் கிடைக்கவேண்டும். பாரதிதாசன் தனது ‘அழகின் சிரிப்பு’ நூலில், பழமையினால் சாகாத இளையவள் காண்’. ‘பழமையிலே புதுநினைவு பாய்ந்தெழுந்தார்போலே அழகு நிலா முழுநிலா பார்’ என்பார். பாப்லோ நெருதாவும் ஓரிடத்தில், ‘நான் கண்ணை மூடிக்கொண்டு இருப்பதனால் தூங்குவதாக அர்த்தமில்லை. பார்த்த ஆகாயத்தையே எத்தனை முறை பார்ப்பது?’ என்றெழுதியிருப்பார். நெருதா பெரிய கவிஞர்தான். ஆனாலும் அதைவிடச் சிறப்பாகப் பாரதிதாசன் எழுதியிருக்கிறார். இயற்கை புதிது புதிதாகத் தருகிறது என்பதை பாரதிதாசன் மிக அழகாக எழுதியிருக்கிறார். பாரதிதாசனை நாம் சரியாக அறிமுகப்படுத்தியிருந்தால் நிச்சயம் நோபல் பரிசினை வாங்கியிருப்பார். நெருதாவிற்கு இணையாக, சில இடங்களில் நெருதாவிற்கும் மேலாகவும் பாரதிதாசன் எழுதியுள்ளார். ‘பழங்கால இயற்கை செய்யும் புதுக்காட்சி’ என்கிறார்.

ஆகாயமோ, நிலவோ, சூரியனோ. நட்சத்திரமோ, காற்றோ எல்லாமே ரொம்ப பழையதுதான். ஆனாலும் இன்றைக்குப் புதிய அனுபவமாக இருக்கிறதல்லவா!

புதிதாக எழுதும் முயற்சியில் ‘நதி சொன்ன கதைகள்’ எனும் நூலையும், ‘களமாடும் தோள்களும் கனவாகும் முத்தங்களும்’ எனும் நூலையும் புதுக்கவிதையிலேயே வித்தியாசமான முறையில் எழுதிப் பார்த்திருக்கிறேன். கட்டமைப்பும், வித்தியாசமான கோணமும், முயற்சியும், பயிற்சியும் இருந்தால் புதியன படைக்கலாம். சிலர் வாழ்நாள் முழுக்க எண்சீர் விருத்தம் மட்டுமே எழுதலாம். அது நன்றாக இருக்கிறது என்றாலும் நமக்கு ஒன்றையே திரும்பவும் செய்கையில், சலிப்பு வருகிறதல்லவா. ‘தின்றதையே தின்றால் நல்ல சீனியும் கசக்குமடீ’ என்றார் பாரதிதாசன். ‘சொந்த இன்பத்திற்கே அடிக்கடி முத்தம் கொடுத்துக் கொண்டிருந்தால் புளித் துப்போய் விடும்’ என்றார் பாப்லோ நெருதா. புதிதாக செய்ய வேண்டுமென்கிற எண்ணமும் தாகமும் முயற்சியும் இருந்தால் செய்ய முடியும்.

முன்பே வினாக்களாலான நூலொன்றினை வெளியிட்டுள்ளேன். முகநூலில் எழுதிய வினாக்களை விரிவுபடுத்தி, ‘வினா விரி வானம்’ என்கிற நூலாகத் தொகுத்து வருகிறேன். முகநூலில் தினந்தினம் நான் எழுதிய புதிய கவிதைகளிவை. முகநூலில் கவிதைகளைப் படிக்கிறார்கள். முகநூல் என்பது தற்காலிகமானது. அதுவந்து ஒரு தொட்டிச்செடிபோல. அதைப் படிக்கிறவர்கள் தொட்டி மீன் போல. அவர்களுக்கு கடலின் அனுபவம் கிடைக்காது. இவர்களுக்கு மண்ணின் அனுபவம் கிடைக்காது. இன்றைய வேகமான உலகின் போக்கில் அதுவும் ஒரு தேவையாக இருக்கிறது.

-இதுதான் கவிஞர் ஈரோடு தமிழன்பனின் இன்னொரு பரிமாணம். பேசத் தொடங்கினால் தமிழிலக்கியத்தில் பாரதி, பாரதிதாசன் தொடங்கி, உலக இலக்கிய மேதைகளான பாப்லோ நெருதா, கேப்ரியல் கார்சியா மார்க்வெஸ் என தனது சிறகுகளை விரித்து உயர, உயர பறந்துகொண்டேயிருப்பார்.

கடந்த (செப்.19 - இரவு 8 மணி) மாதத்தில் ஒரு நாள் கவிஞர் அவர்களோடு செல்பேசியில் பேசிக்கொண்டிருந்த போது, தனக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் மு.கருணாநிதிக்குமான நட்பைப் பற்றி பகிர்ந்துகொண்டார்.

முத்தமிழறிஞர் கலைஞரோடு எனக்கான நட்பென்பது 1960-களின் இறுதியில் தொடங்கி, அவர் மறையும் வரை இருந்துவந்தது. ஏறத்தாழ 55 ஆண்டுகால நட்பது. முதன்முதலாக கலைஞரை நான் சந்தித்தது ஒரு கவியரங்கத்தில். ஆனால் அதற்கு முன்பே அவர் தஞ்சை திலகர் திடலில் பேசும்போது, மாணவனாக இருந்து அவரது உரையைக் கேட்டிருக்கிறேன். மேடையில் ஈட்டி பாய்வதுபோல வேகமாகப் பேசினார். அதற்குப் பிறகு அவர் தலைமையில் நான் கவிதை பாடியபோதுதான், தமிழன்பனாக இருந்த என்னை, ஈரோடு தமிழன்பனாக ஆக்கியது கலைஞர் தான். ஈரோடு என்பது பொருளடர்த்தியுள்ள ஒரு அடைமொழியாகும். அது வெறும் ஊர்ப்பெயரல்ல. நான் கூட சொல்வேன், ‘ஈரோடு என்பது அஃறிணை பெயரல்ல; அது உயர்திணை, தந்தை பெரியார் பிறந்ததால்’ என்று. கவியரங்கத்தில் நான் கலந்துகொள்வதற்கு முன்பாகவே அவர் என்னை அறிந்திருந்தார். சேலம் தமிழ்ச் சங்கத்தின் செயலாளராக இருந்த ரா.வை.கணபதி. அவர் மாடர்ன் தயாரிப்பு நிறுவனத்தின் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரத்தினுடைய சகோதரி மகனாவார். அந்தக் காலத்தில் கதை - வசனம் எழுதும்போதே அவர்களோடு கலைஞருக்கு நல்ல பழக்கம். அவர் தான் அந்தச் சம்பவத்தை என்னிடம் சொன்னார்ஒருமுறை கலைஞர் சேலத்தில் பயணத்தை முடித்து, சென்னைக்குத் திரும்ப, தொடர்வண்டி நிலையத்திற்கு செல்கிறார். அப்போது நான் சேலத்திலுள்ள தியாசபிகல் அரங்கில் பேசிக்கொண்டிருக்கிறேன். சங்க இலக்கியம் அல்லது பாரதி பற்றிய உரையாக அது இருக்குமென்று நினைக்கிறேன். அதை ஒலிபெருக்கி வாயிலாக கேட்ட கலைஞர், வண்டியை நிறுத்தச் சொல்லி, எனது உரையைக் கேட்டு, “என்ன தமிழ், என்ன குரல் வளம், என்ன மொழி நடை, யார்னு போய் பார்த்திட்டு வாங்க…” என சொல்ல, வண்டியை ஓட்டி வந்த ரா.வை.கணபதியிடம், “அபாரமான தமிழ், பிரமாதம்” என்று சொல்-ப் பாராட்டினாராம்.

கலைஞர் தலைமையிலான கவியரங்கில் நான், அப்துல்ரகுமான், வைரமுத்து ஆகியோர் தவறாமல் பங்கேற்று வந்தோம். எனது இரு மகன்களின் திருமணத்திற்கும் வருகை தந்து சிறப்பித்தார் கலைஞர். என் மகன் பாப்லோ நெருதாவின் திருமணத்தில் நான் பேசும்போது, “வெளிநாட்டு தலைவர்கள், கவிஞர்களின் பெயரினை நம் பிள்ளைகளுக்கு வைப்பது ஒன்றும் புதிதல்ல. கலைஞர் தன் மகனுக்கு ஸ்டாலின் என்று பெயர் வைத்திருக்கிறார்” என்று நான் பேசினேன். அப்போது கலைஞர், “எங்கே நான் கேட்டுவிடப் போகிறேன் என்று எண்ணி, கவிஞரே முந்திக் கொண்டு கேள்வியும் கேட்டு, பதிலளித்தும் விட்டாரே..!” என்று பேசும்போது சொல்லிச் சிரித்தார்.

1975-இல் இந்தியாவில் நெருக்கடி பிரகடனம் செய்யப் பட்டது. 1976 ஜனவரியில் ஹைதராபாத்திலிருந்து ஒரு செய்தி கசிந்தது. அப்போது தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த தி.மு.க. அரசைக் கலைப்பது அல்லது தி.மு.க. கட்சியைத் தடை செய்வது என்பதே அச்செய்தி. அதைக் கேட்டு, நான் மதிய வேளையில் கோபாலபுரம் வீட்டிற்குப் போனேன். அப்போதே ஃபைல்கள் அனைத்தையும் எடுத்து வெளியே வைத்து, அரசு வாகனத்தையும் அனுப்பிவிட்டார் கலைஞர். கட்சிக்காரர்கள் நூற்றுக்கணக் கானோர் உணர்ச்சிமயமாகத் திரண்டிருந்தனர். கலைஞரின் பக்கத்தில் திருப்பத்தூர் ராமமூர்த்தி நின்றிருந்தார். அப்போது நான் போனேன். பக்கத்தில் தனது பேத்தியான செல்வியின் மகளை உட்கார வைத்திருந்தார். அரசு உயரதிகாரிகள் பலர் வந்து கலைஞருக்கு நன்றி சொல்லிக் கொண்டிருந்தனர்.

பதவி போன பிறகும் உயரதிகாரிகள் வருகிறார்களே?” என்று ராமமூர்த்தி சொன்னதற்கு, “அரசு அதிகாரிகளை எப்போதுமே மரியாதை குறைவாக நான் நடத்தியதில்லை. அவர்களுக்கான மரியாதையை என்றும் கொடுப்பேன். முரசொலி அலுவலகத்தில் சிலரை நான் திட்டுவதுண்டு. ஆனால் அதிகாரிகளின் கருத்துக்களைக் கேட்காமல் எதுவும் செய்ய மாட்டேன். அதற்காக என் மேல் மரியாதையோடு வருகிறார்கள்” என்று சொன்னவர், கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் என்னை அருகிலேயே உட்கார வைத்து, பேசிக்கொண்டிருந்தார்.

கூடியிருந்த தொண்டர்களிடம், “அவசரப்பட்டு எந்த செயலிலும் இறங்கவேண்டாம். நமக்கு ஆட்சி முக்கியமல்ல; கட்சிதான் முக்கியம். கட்சி இருந்தால்தான் நாம் அடுத்து ஆட்சிக்கே வர முடியும்” என்று சொன்னார் கலைஞர். அப்போது டி.ஆர்.பாலு, ஒரு புது காமிராவுடன் வந்து, “கலைஞரை யும் கவிஞரையும் ஒரு போட்டோ எடுக்கட்டுமா?” என்று கேட்டார். தமிழன்பனை விட்டுவிடுங்கள், அவர் வேண்டாம். கோபாலபுரம் வரவே பலர் தயங்குகிறார்கள்” என்றார். உடனே நான், “நான் கட்சிக்காரனுமில்லை; அரசாங்க ஊழியனுமில்லை. உங்கள் நண்பராக வந்துள்ளேன்” என்றதும், சேர்ந்து நின்று படமெடுத்துக்கொண்டதும் என்றென்றும் மறக்கவே முடியாத நினைவுகள்” என்று சொல்லி, அந்த நாள் நினைவுகளில் மீண்டுமொருமுறை மூழ்கியெழுந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சி பற்றிய தங்கள் கருத்து..?” என்று கேட்டேன்.

இரண்டாண்டுகாலம் மட்டுமே ஆட்சி செய்திருக்கிறார். இப்போதே ஆட்சியைப் பற்றி முழுமையாக கருத்துச் சொல்ல முடியாது. ஆனாலும், எடுத்த எடுப்பும் முதல்வர் ஸ்டாலின் நடந்துகொள்ளும் முறையும், ஆட்சி முறையும் சிறப்பாகவே இருக்கிறது. ஏனென்று கேட்டால், ஆரம்பமே தகுதியான இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளை தனக்கு அருகில் வைத்துக்கொண்டார். தகுதியானவர்களை உரிய இடத்தில் அமர வைத்தல், பொருளாதார அறிஞர்களை அழைத்து, ஒரு குழு அமைத்து, அவர்களது கருத்துக்களை அவ்வப்போது கேட்பது போன்றவை அவரது அரிய செயல்கள்.

கட்சிக் கூட்டத்தில் பேசும்போதுகூட, காலையில் எழுந்திருக்கும்போதே யார் என்ன செய்திருப்பார்கள் என்று கவலையோடு எழுந்திருக்கிறேன் என்று சொன்னதுகூட, ஒரு மனச்சான்றின் குரலாகத்தான் சொல்கிறார். இன்னொரு விஷயம், ஸ்டாலின்போல் சாதாரண மக்களிடத்தில் இவ்வளவு நெருக்க மாகப் போன முதல்வர் வேறு யாருமில்லை. நரிக்குறவர் வீட்டிற்கும் போகிறார், ஒரு அறுவை சிகிச்சை செய்துகொண்ட குழந்தையின் வீட்டுக்கும் போகிறார், எல்லா வீடுகளிலும் உட்கார்ந்து சாப்பிடுகிறார். தெருவில் போகும்போதே காரை நிறுத்தி, பள்ளிக்கூட மாணவர்களிடம் பேசுகிறார், மாற்றுக்கட்சி பெண்மணியிடமும் வண்டியைவிட்டு இறங்கி, நின்று பேசிவிட்டு, கோரிக்கை என்னவென்று கேட்டுவிட்டுச் செல்வது பாராட்டத்தக்க பண்பு நலன் ஆகும். தமிழறிஞர்களைப் பாராட்டுவதும், தமிழறிஞர்களது நூல்களை நாட்டுடைமை ஆக்குவதும் சிறப்பான பணிகளாகும். ஸ்டாலின், தானொரு திறமையான முதல்வர் என்பதை நிரூபித்துக் காட்டியுள்ளார். அதேபோல் சில கருத்துகளைத் தயக்கமின்றி துணிச்சலாக முன்வைக்கிறார். சனாதனத்தை, இந்துத்வாவை எதிர்ப்பதும், திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கைகளை விட்டுக்கொடுக்காமல் இழுத்துப்பிடித்துக் காப்பாற்றிக்கொண்டே, அரசையும் திறம்பட நடத்தி வருகிறார்.

ஒருமுறை பேராசிரியர் க.அன்பழகன் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவரிடம் நான், “கலைஞருக்குப் பிறகான தலைவர் யார்?” எனக் கேட்டபோது, “கலைஞருக்குப் பிறகு ஸ்டாலின்தான் வருவார். அரசியலுக்கு தகுதிபெற்றவராக அவர் தான் இருக்கிறார்” என்று மனம் மகிழ்வோடு என்னிடம் பகிர்ந்தார்” என்று சொல்லி மகிழ்ந்தார் கவிஞர் ஈரோடு தமிழன்பன்.

2023 செப்டம்பர் 28-இல் தொண்ணூறாவது அகவையை நிறைவுசெய்யும் தமிழின் பெருமைமிகு கவிஞர் ஈரோடு தமிழன்பன், வருங்காலத்தில் ஞானபீட பரிசைப் பெற்று, தமிழுக் கும் தமிழர்க்கும் பெருமைசேர்க்கும் ‘தகைசால் தமிழராக’ வலம் வரப்போகிறார் என்பதில் ஒரு தமிழனாக எல்லோருமே பெருமை கொள்ளலாம்

uday011023
இதையும் படியுங்கள்
Subscribe