தெளிவான சாயங்கால வேளை. நான் ஆடைகள் அணிந்து தங்கியிருந்த இடத்திலிருந்து வெளியேறினேன். ரோமின் தெருக்கள் அசாதாரணமான மக்கள் கூட்டத்துடன் இருப்பதைப்போல தோன்றியது. அருமையாக ஆடைகள் அணிந்திருந்த பெண்களும் ஆண்களும், உற்சாகத்துடன் காணப்பட்ட சிறுவர்களும் சிறுமிகளும் நடைபாதைகளின் வழியாக நெருக்கியடித்து நடந்து போய்க்கொண்டிருந்தார்கள்.

நடைபாதையின் ஓரத்திலிருந்த மரங்களின் பளபளத்துக் கொண்டிருந்த நெற்றியின் வழியாக நுழைந்து வந்துகொண்டிருந்த மாலைநேர வெயில் கீழே இருந்த வாழ்வின் ஓட்டத்தை கட்டித்தழுவி ஆசீர்வதிப்பதைப்போல தோன்றியது.

நான் ஒரு பேருந்து நிறுத்தத்தை நெருங்கினேன். ரோம் நகரத்தைச் சுற்றியவாறு ஓடிக்கொண்டிருக்கும் ஒரு எம்.டி. "சர்க்குலாரெ' பேருந்து கிட்டத்தட்ட நெருங்கி வந்து விட்டிருந்தது. ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் கல்லறை எம்.டி. எண் பேருந்து வழித்தடத்திற்கு அருகில் இருப்பதாகக் கேள்விப் பட்டது எனக்கு ஞாபகத்தில் வந்தது. நான் பேருந்தில் தாவி ஏறினேன்.

பேருந்து நடத்துநர் பயணச்சீட்டு புத்தகத்தை விரித்து எனக் கருகில் வந்து, "எங்கு?' என்று சைகைசெய்து கேட்டார்.

Advertisment

"சிமெட்டரி...'' நான் காசை நீட்டியவாறு கூறினேன்.

ரோம் நகரத்தின் மூலையில் நிறம் மங்கிப்போய் வரிசையாக நின்றுகொண்டிருக்கும் கலை வேலைப்பாடுகளுடன் உள்ள கற்களால் கட்டப்பட்ட வீடுகளையும், தளிர்த்து நின்று கொண்டிருக்கும் செடிகளின் வரிசைக்குப் பின்னால் மறைந்திருக்கும் நடைபாதைகளையும், "நில்... நில்...' என்று வாழ்க்கையிடம் சைகை செய்தவாறு நின்றுகொண்டிருக்கும் பளிங்குக்கல் சிலைகளைப் பார்த்து புன்னகையைத் தவழ விடும் பூஞ்செடிகளையும் பார்த்து ஆனந்தம் அடைந்தவாறு பேருந்தில் அமர்ந்திருந்த காரணத்தால் நேரம் போனதே தெரியவில்லை.

நடத்துநர் என் தோளைத் தொட்டவாறு கூறினார்: "சிமெட்டரி...''

Advertisment

நான் கீழே இறங்கினேன்.

எல்லையைக் காணமுடியாத ஒரு மிகப்பெரிய வெளிச்சுவருக்கு முன்னால் போய்ச் சேர்ந்தேன். அந்த கம்பீரமான இடுகாட்டிற்கான நுழைவு வாயிலை நோக்கி நடந்தேன். முன்பகுதியில் விசாலமான ஒரு திறந்தவெளி இருந்தது. திறந்தவெளிக்கு அருகில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் பூக்குவியல்களுடன் பூக்காரிகள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள்.

"உங்களுடைய அன்பிற்குரியவர்களின் நினைவுக்கு வைப்பதற்காக புதிய மலர்கள்!'' தன் பூக்கூடையைத் தொட்டுக் காட்டியவாறு ஒரு அழகான இளம்பெண் என்னை நோக்கிப் புன்னகைத்தாள்.

அந்தப் பூக்களின் புதுமையும், அவளுடைய ஈர்க்கக்கூடிய புன்சிரிப்பும், ஷெல்லியின்மீது வைத்திருக்கும் அன்பும் ஒரு பூச்செண்டு வாங்கும்படி என்னைத் தூண்டின.

"ஒரு சிறிய பூச்செண்டு..'' நான் கையை நீட்டியவாறு கூறினேன்.

நீர் தெளித்து நனைந்திருந்த பூக்கூடையிலிருந்து அவள் ஒரு பூச்செண்டை வெளியே எடுத்து, சற்று சீர்செய்து என் கையில் தந்தாள்.

"விலை..?''

"நூற்றைம்பது லிரா.''

பணத்தைக் கொடுத்துவிட்டு பூச்செண்டைக் கையில் வைத்தவாறு நான் வாயிற்படியை நோக்கி நடந்தேன். வாயிற்காப்பாளனாக ராணுவ உடையில் ஒரு மனிதன் அங்கு நின்றுகொண்டிருந் தான்.

"ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் கல்லறை எந்த மூலையில் இருக்கிறது என்பதைச் சற்று கூறமுடியுமா?'' அந்த பட்டாளக்காரனிடம் கேட்டேன். நான் கேட்டது புரியாததைப்போல அவன் என்னிடம் இந்த பக்கமாக ஒரு கேள்வி...

"நீங்கள் இந்தியரா?''

"ஆமாம்...'' என்று நான் தலையை ஆட்டினேன்.

"நானும் இந்தியாவில் இருந்திருக்கிறேன். போர் நடைபெற்ற காலத்தில்...'' அவன் ஒரு மிகப்பெரிய காரியத்தில் ஈடுபட்ட பெருமிதப் புன்னகையுடன் கூறினான்.

flowrr

இந்தியாவிலிருந்த இத்தாலிய போர்க் கைதிகளைப் பார்த்துப் பார்த்து எனக்கு அவர்களின்மீதிருந்த ஈடுபாடெல்லாம் இல்லாமல் போயிருந்தது. இறந்து மண்ணை விட்டு நீங்கியவர்களின் சிறைக்கூடத்திற்குக் காவலாளியாக நின்றுகொண்டிருக்கும் அந்த காக்கி உடையணிந்த மனிதனின்மீது எனக்கு ஒரு இரக்கவுணர்வு உண்டானது. எனினும் நான் புன்னகைத்துக்கொண்டே கூறினேன்: "ஓ... மிகவும் சந்தோஷம்!''

"ஆங்கிலக் கவிஞர் ஷெல்லியின் கல்லறை எந்தப் பகுதியில் இருக்கிறது என்பதைக் கொஞ்சம் கூறமுடியுமா?'' நான் கேள்வியைத் திரும்பவும் கேட்டேன்.

அவன் சிறிதுநேரம் சிந்தித்தவாறு நின்றான். பிறகு தலையை ஆட்டியவாறு கூறினான்:

"அது இங்கு இல்லை. ப்ராட்டஸ்டன்ட் சிமெட்டரியில்... இங்கிருந்து சற்று தூரத்தில் அந்த இடம் இருக்கிறது.''

என் மனம் நொறுங்கியது. நனைந்திருந்த பூச்செண்டைக் கையில் வைத்துக்கொண்டு நான் சிந்தனையில் மூழ்கி நின்றிருந்தேன். அடுத்த பேருந்தில் அங்கு புறப்படலாம் என்று கருதி திரும்பலாமென நினைக்கும்போது, சாயங்காலத்துடன் கல்லறையை அடைத்து விடுவார்கள் என்ற விஷயம் திடீரென எனக்கு ஞாபகத் தில் வந்தது. என்ன செய்யலாம் என்பதைப்பற்றி தீர்மானிக்காமல் நான் சிறிதுநேரம் அங்கேயே நின்றிருந்தேன்.

அன்பிற்குப் பாத்திரமானவர்களின் நினனவிடத் தில் வைப்பதற்காக மலர் மாலைகளையும் பூச்செண்டு களையும் கையில் வைத்தவாறு, கவலை குடி கொண்டிருக்கும் முகங்களுடன் பெண்களும் ஆண்களும் இடுகாட்டை நோக்கிப் போய்க் கொண்டிருந்தார்கள். திறந்து கிடக்கும் வாயிற் கதவின் வழியாக நான் உள்ளே சற்று கண்களைச் செலுத்தினேன்.

அழகான, விசாலமான அந்த இடுகாடு என்னை ஈர்த்தது. மரணம் திறந்து வைத்திருக்கும் அழகான ஒரு மணியறை! நான் பூச்செண்டைக் கையில் வைத்தவாறு மெதுவாக உள்ளுக்குள் நுழைந்தேன்.

ரோம் நகரத்து மக்களின் இறுதி ஓய்விடமான அந்த கோட்டைக்குள் கால்களை எடுத்து வைத்த போது, வாழ்விலிருந்து மெதுவாக விலகிச்செல்லும் ஒரு உணர்வு எனக்கு உண்டானது. நிறம் ஒட்டிக் கொண்டிருக்கும் நிழல்களைப்போல ஆட்கள் அங்குமிங்குமாக நடந்துகொண்டிருந்தார்கள்.

கல்லறைகளுக்கு நிழலைப் பரப்பியவாறு நின்றுகொண்டிருந்த பூ மரங்களில் அவ்வப்போது மெல்லிய... அமைதியான அசைவுகள். அழுகையல்ல; பெருமூச்சுகள்!

எல்லையற்று வரிசை வரிசையாக நீண்டுகிடக்கும் ஆயிரமாயிரம் பிண மண்டபங்கள்! அவற்றின்மீது வாழ்வைத் தடுத்த சின்னங்களைப்போல சிலுவைகள் பிரகாசமாக நின்றுகொண்டிருந்தன. பளிங்குக் கல்லறைகளுக்கு அருகிலேயே வெறும் செங்கல் அடுக்குகளும் காட்சியளித்தன. பணக்காரர்களுடன் ஏழைகள்! இடங்களும் பெயர்களும் பொறித்து வைக்கப்பட்டிருக்கும் பளிங்குக் கல்லறைக்கு அருகில், யாரென்று தெரியாதவனின் பிணக் குழிக்குக் காவலாக நின்றுகொண்டிருந்த மரச் சிலுவையின் நிழல் விழுந்திருந்தது. அந்த இளம்பெண்ணுக்கு அருகில் கிடப்பது ஒரு கசாப்புக்காரன்!

மொத்தத்தில்... வாழ்வின் மர்மங்கள் நிறைந்த ஒரு நிழற்பாவைக் கூத்து அங்கு நடைபெற்றுக் கொண்டிருந்தது.

ஒவ்வொரு வருடத்திலும் மரண நாள் வரும் போது, அவர்களைப் பற்றிய நினைவுகளைப் புதுப்பித்துக் கொள்வதற்காக மலர் கொத்துகளுடன் வந்துசேரும் ஆண்களின் கூட்டம்! தந்தையைப் பார்ப்பதற்கு மகன்... மகனைப் பார்ப்பதற்கு தந்தை... காதலியைப் பார்த்து பெருமூச்சு விடுவதற்காக காதலன்... காதலனுக்கு கண்ணீரைக் காணிக்கையாக்குவதற்காக காதலி... கணவனுக்கு அன்புடன் பூச்செண்டை சமர்ப்பிப்பதற்காக மனைவி... மனைவியின் காதல் உணர்வுகளுக்கு இதயத்தை அர்ப்பணம் செய்வதற்காக வயதான கணவன்.

பலவித உணர்வுகளின் நிசப்த மோதல்கள்! நான் எல்லாவற்றையும் பார்த்தவாறு ஒரு பாப்லார் மரத்திற்குக் கீழே நின்றுகொண்டிருந்தேன். கையில் பூச்செண்டும் இருந்தது. அதை எங்கு வைப்பது என்பதைப்பற்றி என்னால் முடிவெடுக்க முடியவில்லை.

ஒரு பெரிய பூச்செண்டை மார்புடன் சேர்த்துப் பிடித்தவாறு வயதான ஒரு பெண்ணும், குச்சியை ஊன்றியவாறு ஒரு வயதான பெரியவரும் அந்த மரத்தைநோக்கி மெதுவாக... மெதுவாக நடந்து வந்துகொண்டிருந்தார்கள். கிழவரின் கையில் ஒரு பொம்மை இருந்தது. வெள்ளை நிறத்திலிருந்த ஒரு விமானம்...

அவர்கள் ஒரு சிறிய கல்லறைக்கு அருகில் வந்து நின்றார்கள். அந்தப் பிண மண்டபத்திற்கருகில் பூங்கொடிகள் வளர்ந்திருந்தன. கிழவி பூச்செண்டைக் கீழே வைத்துவிட்டு, அந்த கல்லறையிலிருந்த தூசியனைத்தையும் துடைத்து சுத்தப்படுத்தினாள். கிழவர் கல்லறையின் முன்னால் விழுந்துகிடந்த காய்ந்த இலைகளையும் வாடிய பூக்களையும் பொறுக்கி தூரத்தில் எறிந்தார்.

அந்த மூதாட்டி பூச்செண்டை கல்லறையின்மீது வைத்து, உறங்கிக்கொண்டிருக்கும் குழந்தையை வருடுவதைப்போல அந்த கல்லறையைச் சற்று கையால் வருடினாள். பெரியவர் அந்த விமானத்தை எடுத்து அதன் ஸ்க்ரூவை முறுக்கிவிட்டு கீழே வைத்தார். "ஃபர்ர்ர்...' என்றொரு சத்தத்துடன் அந்த விமானம் கல்லறையைச் சுற்றி ஓடிக்கொண்டிருந்தது.

கிழவர் திருப்தியுடன் மெல்லிய புன்னகையைத் தவழவிட்டார். அந்த விளையாட்டு பொம்மை பூங்கொடிகளுக்கு மத்தியில் எழுந்தது.

"சீக்கோ... போனோ நோத்தெ...'' (சீக்கோ... உனக்கு சுகமான இரவு...) என்று கூறிவிட்டு பெரியவர் திரும்பி நடந்தார்.

"சீக்கோ... போனோ நோத்தெ...'' அந்த மூதாட்டியும் "குட் நைட்' கூறினாள்.

அழுகையோ, கண்ணீரோ, பெருமூச்சோ இல்லாமல் அந்த வயதான தம்பதிகள் அங்கிருந்து சென்றார்கள். அவர்கள் மறைந்தவுடன் நான் மெதுவாக அந்த கல்லறைக்கு அருகில்சென்று, அந்த கல்லறையில் பொறித்து வைக்கப்பட்டிருந்த பெயரை வாசித்துப் பார்த்தேன்.

சீக்கோ பிஸானி.

பிறப்பு: 1906

மரணம்: 1915.

இவ்வளவுதான் அதில் எழுதப்பட்டிருந்தது.

முப்பத்தைந்து வருடங்களுக்குமுன்பே மரண மடைந்துவிட்ட மகனின் உறக்க அறையைப் பார்ப்பதற்காக அந்த வயதான தம்பதிகள் வருகிறார் கள். ஒன்பது வயதான தங்களின் சிறிய மகன் இப்போதும் தூங்கிக்கொண்டிருக்கிறான் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கலாம். அவன் உயிருடன் இருந்திருந்தால், இப்போது நாற்பத்து நான்கு வயதான ஒரு புதிய கிழவனாக இருப்பான் என்ற சிந்தனை அவர்களுக்கில்லை. புதிய விளையாட்டு பொம்மைகளை விரும்பக்கூடிய சிறிய மகன்தான் சீக்கோ... அவர்களுக்கு... அன்றும் இன்றும்.

சீக்கோவின் இளமையை நிரந்தரமாக்கிய மரணத்திற்கு நான் என் கையால் பூச்செண்டை சமர்ப்பித்தேன்.