க்கள் எந்த இடத்தில் வேண்டுமானாலும் இருக்கும். தேனீக்கள் தனது தேவையையும் அதற்கான தேடலையும் ஒட்டிய இடங்களிலேயே இருக்கும். அறிவுத் தேனீக்களாக இருக்கும் மனிதர்கள் புத்தகத் திருவிழாக்களை நோக்கி ஆர்வத்துடன் வருகிறார்கள். புத்தனுக்கு போதிமரம். நமக்கு, புத்தகங்கள்.

போதி மரத்தடியில் அமர்ந்து புத்தர் ஞானம் பெற்றார் என்பதை எல்லோரும் அறிவோம். அதனால், போதி மரம் என்று சொன்னதுமே நமக்கு ஓர் ஈர்ப்பு ஏற்படும். உண்மையில், போதி மரம் என்பது நம் எல்லோருக்கும் தெரிந்த அரச மரம்தான். கயாவிலே அப்படி ஓர் அரச மரத்தின் கீழ் புத்தர் நாட்கணக்கில் உட்கார்ந்தார். தியானம் செய்தார். அதன் மூலமாக ஞானம் பெற்றார். அதனால், அந்த அரச மரம், போதி மரம் எனப்படுகிறது.

பொதுவாக, நமக்குப் பிரச்சினைகள் அதிகமாக இருக்கும்போது, தனிமையில் உட்கார்ந்து சிந்தித்தால், பிரச்சினைகள் எப்படி வந்தன, என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தின, அவற்றைத் தீர்ப்பது எப்படி என்ற தெளிவு கிடைக்கும். புத்தர் அரச மரத்தடியில் அமர்ந்தார். உணவு உண்ணாமல் தனிமையில் தியானம் செய்தார். மனிதகுலத்தின் பிரச்சினைகளுக்கு காரணம் என்ன என சிந்தித்தார். அதற்குத் தீர்வு என்ன என்பதை உணர்ந்தார். அதைத்தான், போதி மரத்தடியில் புத்தர் ஞானம் பெற்றார் என்கிறோம்.

அரச மரம் என்பது ஒரு கிளையிலிருந்து கூட துளிர்க்கக் கூடியது. புத்தகயாவில் அரச மரம் இன்னமும் இருக்கிறது. ஆனால், புத்தர் தியானம் செய்த அரச மரமல்ல. அந்த மரம் விழுந்திருக்கிறது, வீழ்த்தப்பட்டிருக் கிறது. ஆனால், முதன்மையான மரத்திலிருந்து கிளை களை நட்டு, அதன் தொடர்ச்சியாக இன்னமும் அந்த இடத்தில் அரச மரத்தை வளர்த்து வருகிறார்கள். கயாவில் புத்தர் தியானம் செய்த அரச மரத்தின் கிளை, இலங்கை அனுராத புரத்தில் நடப்பட்டு, வளர்க்கப்பட்டது. இந்தியாவில் உள்ள சில மாநிலங்களிலும் அதுபோல வளர்க்கப் பட்டுள்ளது.

Advertisment

மரங்களில் பெரியது அரச மரம். பொதுவாக, மரங்கள் பகலில் பச்சையம் தயாரிப்பதற்காக கார்பன்-டை-ஆக்ஸைடை எடுத்துக்கொண்டு, ஆக்ஸிஜனை வெளியிடும். ஆக்ஸிஜன் என்கிற உயிர்க்காற்று மனிதனுக்கு அவசியமானது. அதனால்தான் ஊருக்கு ஊர் அரசமரங்கள் இருக்கும். அரச மரங்கள் எல்லாம் போதி மரங்கள் என்றால், அதன் பயனை உணர்ந்து அந்தந்த ஊர்களில் வாழ்பவர்கள் எல்லோரும் புத்தர்கள்தான். புத்தி உள்ளவர்களை எல்லாம் புத்தர்கள் என்கிறோம். புத்தகங்களை ஏன் போதி மரம் என்கிறோம்?

அது மனித குலத்தின் பிரச்சினைகளைக் குறித்துப் பேசுகிறது. அதற்கான தீர்வுகளுக்கு வழிகாட்டுகிறது. நாம் தனித்திருந்து, புதியவற்றை சிந்திப்பதற்குத் தூண்டுகோலாக அமைகிறது. அறிவைப் பெருக்கி, புத்தொளி தருகிறது. அதனால்தான் புத்தகங்களை போதி மரம் என்கிறோம்.

bb

Advertisment

புத்தகத்தைப் படிக்கின்ற ஆர்வத்தை வளர்ப்ப தற்குத்தான் புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படுகின்றன. பெற்றோர் பலர், புத்தகங்கள் என்றால் அது குழந்தைகளுக்குத்தான் என்று நினைத்துவிடு கிறார்கள். பெற்றோரும் புத்தகங்களைப் படித் தால்தான், பிள்ளைகளுக்கும் படிக்கின்ற பழக்கம் ஏற்பட்டு, அதன்மீதான ஆர்வம் அதிகரிக்கும். குடும்பம் குடும்பமாக புத்தகத் திருவிழாவுக்கு மக்கள் வருவது, தலைமுறைகளுக்கான வாசிப்புப் பழக்கத்தை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு வீட்டிலும் சமைப்பதற்கு இடம் இருக்கிறது, படுப்பதற்கு இடம் இருக்கிறது, புழங்கு வதற்கு இடம் இருக்கிறது, சாமி கும்பிட அறை இருக்கிறது. படிப்பதற் கென்று இடம் இருக்கிறதா' என்று கேட்டார் அறிஞர் அண்ணா. வீட்டுக்கு ஒரு நூலகம் இருக்க வேண்டும் என்பது அவரது கனவு. புத்தகத் திருவிழாக்கள் மூலமாக வீட்டுக்கு வீடு புத்தகங்களும் அதைப் படிப்பதற்கான சூழலும் உருவாகிறது.

ஒரு புத்தகத்தைப் படிப்பது என்பது சாதாரணமானது.

அந்தப் புத்தகத்தைப் படிக்கும் போது வாசகனுக்கும் புத்தகத் திற்கும் ஓர் உரையாடல் நடைபெறு வதுதான் தொடர்ச்சியாகப் படிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு ஏற்படும் அனுபவமாகும். அந்தப் புத்தகம், தன்னைப் படிக்கின்ற வாசகருடன் பேசிக் கொண்டிருக்கும். வாசகரும் அந்தப் புத்தகத்தில் உள்ள கருத்துகளுக்கேற்ப தன் சிந்தனைகளை விரித்து, தன் எண்ணங்களும் புத்தகத்தில் உள்ள கருத்துகளும் பொருத்தமாக இருக்கின்றனவா என்கிற வகையில் உரையாடுவார்.

புரட்சியாளன் பகத்சிங்கும் அவரது நண்பர்கள் ராஜகுரு, சுகதேவ் ஆகியோரும் லாகூர் சிறையில் தூக்கிலிடப் படுகிறார்கள். பொதுவாக, மரணதண்டனை என்பது அதிகாலையில் நிறைவேற்றப்படும். பகத்சிங்கும் அவரது நண்பர்களும் தங்களைத்தூக்கிலிட வேண்டாம் என்றும் சுட்டுக் கொன்று மரண தண்டனைய நிறைவேற்ற வேண்டும் என்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கோரிக்கை வைத்தனர்.அப்படி நிறைவேற்றினால்தான், மரணத்தின் தருணத்திலும் தங்கள் கால்கள், தாய் மண்ணைத் தொட்டபடி இருக்கும் என்பதற்காகத்தான் அந்த வேண்டுகோள். ஆனால், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது.

பொதுமக்கள் அந்தத் தியாகிகளின் வீரமரணத்தை அறிந்து, இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் லாகூர் சிறை நோக்கி, கூட்டம் கூட்டமாக வந்தபடி இருந்தனர்.

கூட்டத்தைக் கட்டுப்படுத்த நினைத்த பிரிட்டிஷ் அரசு, அதிகாலைக்குப் பதில் முதல் நாள் மாலையே பகத்சிங்கிற்கும் நண்பர்களுக்கும் மரண தண்டனையை நிறைவேற்ற முடிவு செய்தது. தூக்கு மேடைக்கு கொண்டு செல்வதற்காக, பகத்சிங்கை சிறைக் காவலர்கள் அழைக்க வருகிறார்கள். அப்போது அவர், ரஷ்யப் புரட்சியின் நாயகன் லெனின் குறித்த புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கிறார்.

காவலர்கள் அழைத்ததும், "சற்று பொறுங்கள்.. ஒரு புரட்சியாளன் இன்னொரு புரட்சியாளனை சந்தித்து உரையாடிக் கொண்டிருக்கிறான். முடித்துவிட்டு வருகிறேன்' என்று சாவின் விளிம்பிலும் புத்தகத்தின் மீது ஆர்வத்தைக் காட்டினார் பகத்சிங்.

பேரறிஞர் அண்ணா புற்றுநோயால் பாதிக்கப்பட்டு, அமெரிக்கா வரை சென்று சிகிச்சை மேற்கொண்டும் பலனளிக்கவில்லை. மரணம் நெருங்கிக் கொண்டிருக்கிறது. சாப்பிடுகிற கஞ்சியில் ஒரு பருக்கைச் சோறு இருந்தாலும் அது அவரது தொண்டையில் முள் போல இறங்குகிறது. அத்தனை சிரமத்துடன், சென்னை அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். அவருக்கு அவசர அறுவை சிகிச்சை ஒன்று செய்யவேண்டும் என மருத்துவர்கள் சொல்கிறார்கள். அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்துக் கொள்ள லாமா? எனக் கேட்கிறார் அண்ணா. ஏன் என்று மருத்துவர்கள் அவரிடம் கேட்கிறார்கள்.

மேரி கரோலி என்பவரின் மாஸ்டர் கிறிஸ்டியன் என்ற புத்தகத்தை அண்ணா படித்துக் கொண்டிருக்கிறார். இன்று ஒரு நாள் அவகாசம் கொடுத்தால் புத்தகத்தைப் படித்து முடித்து விடுவேன். அப்புறம் ஆபரேஷன் செய்யலாம்’என்கிறார்அண்ணா.

மரணம் நிச்சயம் எனத் தெரிந்த நிலையிலும், புத்தகத்தைப் படிப்பதற்காக அறுவை சிகிச்சை யைத் தள்ளி வைக்க கோரிய அண்ணாவுக்குப் புத்தகங் களின் மீது அத்தனை காதல். அவரது சிந்தனைகள், இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் இன்றளவும் பயன் தருகின்றன.

புத்தர் போதி மரத்தடியில் பெற்ற ஞானம் என்பது, மனிதகுலத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கானது.

அவர் இரண்டு செய்திகளை வலியுறுத்தினார். ஆசையை ஒழித்திடு. அன்பை வளர்த்திடு.

ஆசையை ஒழி என்று இப்போது சொல்ல முடியாது. ஒவ்வொருவருக்கும் அவரவர் அளவில் ஆசை இருக்கிறது. சாமியார்களேகூட அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள். அதனால், ஆசையை ஒழிக்காவிட்டாலும், அன்பை வளர்த்தெடுக்க வேண்டும். ஏனென்றால், எந்த பவுத்தம் அன்பை போதித்ததோ, அந்த பவுத்தத்தின் பெயரால் இலங்கையிலே தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். மியான்மர் நாட்டிலே அதே பவுத்தம், ரோஹிங்யா முஸ்லிம்களை வேட்டையாடுகிறது. எந்த மதம் பெரும்பான்மையாக இருக்கிறதோ, அது மற்ற மதங்கள் மீது தாக்குதல் நடத்துவது எல்லா நாடுகளிலும் நடைபெறுகிற கொடூரமாகும். இந்தியாவில், நீ இன்ன உணவுதான் சாப்பிட வேண்டும்.. வேறு உணவு சாப்பிடுகிறாயா என்று தாக்குதல் நடத்துகிறார்கள். இங்கே எந்த மதத்தினர் தாக்குதல் நடத்துகிறார்களோ, அதே மதத் தினர் பாகிஸ்தானில் சிறுபான்மையினராக இருப்பதால், அங்கே அவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகிறது.

இந்த ரத்தவெறியைத் தணிப்பதற்கும், உலகெங்கும் என்னென்ன நிகழ்கிறது என்பதை அறிவதற்கும், வல்லரசுகளின் வல்லாதிக்கம் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பதைப் புரிந்துகொள்வதற்கும், மனித குலத்தின் மீது அன்பை வளர்ப்பதற்கும் புத்தகங்கள் துணை நிற்கின்றன. அந்த போதி மரங்களை வளர்ப்போம். வாசிப்போம்.

(ஓசூர் நகரில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் ஓசூர் குடியிருப்பு நலச் சங்க கூட்டமைப்பும் இணைந்து நடத்திய புத்தகத் திருவிழாவில் 16-7-2019 அன்று பேசியதிலிருந்து...)