தமிழகத்தில் புத்தகத் திருவிழாக்கள் பிரபலம் அடைந்து வருகின்றன. சென்னையில் தொடங்கிய திருவிழா இப்பொழுது மாவட்டம்தோறும் நடைபெறத் தொடங்கிவிட்டது. புத்தகத் திருவிழாக்களில் நூல் விற்பனையும் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக் கொண்டே போகிறது. இருபது ஆண்டுகளுக்கு முன்பு சில லட்சங்களுக்கு நூல்கள் விற்ற சென்னை புத்தகத் திருவிழாவில், சென்ற ஆண்டு 9 கோடி ரூபாய்க்கு நூல்கள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன. புத்தகத் திருவிழாவின்போது இரண்டு கைகளிலும் புத்தகங்கள் நிரம்பிய பைகளை எடுத்துக்கொண்டு மக்கள் செல்வது கண்கொள்ளாக் காட்சி. பகல் நேரங்களில், பள்ளிக்கூடங்களில் இருந்து அழைத்து வரப்பட்ட உயர்நிலைப்பள்ளி மாணவர்களும் தொடக்கப்பள்ளி மாணவர்களும்கூட நூல்களை வாங்கிச் சென்றது எங்கள் மனங்களை மகிழ்வித்தது.
வீட்டு வராந்தாவில் உட்கார்ந்து சாய்வு நாற்காலி களில் சாய்ந்து கொண்டு படிக்கிற காட்சிகள் மறைந்து விட்டன. பேருந்துகளிலும், தொடர் வண்டிகளிலும் பயணிப்பதற்கு முன்பு மறக்காமல் ஓரிரண்டு புத்தகங்களை பையில் எடுத்து வைத்துக் கொள்ளும் பழக்கம் இந்தத் தலைமுறைப் பயணிகளுக்கு இல்லை. செல்போன் சார்ஜரும், பவர் பேங்க்கும் இருக்கிறதா என்பதை ஒரு முறைக்கு இரு முறை உறுதி செய்து கொள்கிற காலம் இது. இந்த மின்னணு யுகத்திலும் காகிதங்களில் அச்சடிக்கப்பட்ட புத்தகங்களுக்கான இடம் முக்கியமானது. நூற்றுக்கணக்கான புத்தகங் களை உங்கள் கைபேசியில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்கிற அளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்திருந்தாலும், ஒரு காகிதப் புத்தகத்தை தொட்டு, பக்கங்களைப் புரட்டி, அதன் மணத்தை முகர்ந்து, வாசிக்கும் அனுபவத்தின் சுகமே தனி.
ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் நூல்கள் வாங்குகிற அளவுக்கு வணிகர்களும், சுயதொழில் புரிபவர்களும் வாங்குவதில்லை. தொடர்ந்து புத்தகத் திருவிழாக்கள் நடத்தப்படும்போது, வாசிக்கும் பழக்கம் இல்லாதவர்களையும் வாசிக்கத் தூண்டுவதாக அது அமையும். உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் வாங்கிய அளவுக்கு கல்லூரி மாணவர்கள் நூல்கள் வாங்கவில்லை என்பது வியப்பாக இருந்தது. இதனைக் கூர்மையாகப் பார்க்கும்போது, புத்தகத் திருவிழா தற்கால பள்ளி மாணவர்களை நூல் வாங்க வைத்திருக்கிறது என்பதை உணர முடிந்தது. அவர்கள் கல்லூரி மாணவர்களாக ஆகும்போது நூல் வாசிக்கும் பழக்கம் உடையவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையும் பிறந்தது. இப்போதைய கல்லூரி மாணவர்கள் நூல் வாங்காததற்குக் காரணம் இளம் வயதில் அவர்களுக்கு நூல் வாங்குவதற்கும், வாசிப்பதற்கான தூண்டுதல் இல்லாமல் போனதுதான். புத்தகத் திருவிழாக்களின் அவசியத்தினை விளக்கிட இதை விடப் பெரிய சான்று தேவையில்லை.
தருமபுரி மாவட்டம் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாவட்டமாக அறியப்பட்ட மாவட்டம். தருமபுரி புத்தகத் திருவிழாவில் யாரும் நினைத்திராத அளவு புத்தக விற்பனை நடந்தது. இந்த ஆண்டு நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் ஏறக்குறைய 75 லட்ச ரூபாய்க்கு நூல்கள் விற்றன. தருமபுரி புத்தகத் திருவிழாவினை நடத்திய தகடூர் புத்தகப் பேரவை, நூல்கள் விற்பனையைவிட நூல்கள் வாசிக்கும் பழக்கத்தை பரவலாக்க வேண்டும் என்பதை, அதிலும் குறிப்பாக இளம் சிறார்களிடமும், பள்ளி, கல்லூரி மாணவர்களிடமும் நூல் வாசிக்கும் பழக்கத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என்ற நோக்கமுடையது.
தகடூர் புத்தகப் பேரவையின் உறுப்பி னர்களில் ஒருவரான ஆசிரியர் தங்கமணி, ஒரே நாளில் 25 நூல்களை அறிமுகப்படுத் தலாம் என்ற கருத்தினை முன்மொழிந்தார். ஒரு நூலைப்பற்றி 5 நிமிடங்களுக்கு மிகாமல் ஒருவர் அறிமுகம் செய்ய வேண்டும். தொடர்ந்து இரண்டு நிமிடங்களுக்கு அந்த நூலைப் பற்றிய கருத்துப் பரிமாற்றம் குழுவில் நடைபெறும். இந்த புத்தக அறிமுக விழா நிகழ்ச்சியின்போது ஒரு சிறப்பு விருந் தினரை அழைத்தால் இன்னமும் சிறப்பாக இருக்கும் என்று தோன்றியது. கவிஞர் ஜெயபாஸ்கரன் சிறப்பு விருந்தினராக நிகழ்வுக்கு அழைக்கப்பட்டார்.
இதுகுறித்த செய்தி புத்தகப் பேரவையின் வாட்ஸ்அப் குழுவில் பகிரப்பட்டது. நாங்களே எதிர்பாராத வண்ணம், அறிவிப்பு வெளியான சில மணித்துளிகளில் இருந்தே நூல்களை அறிமுகம் செய்ய குழு உறுப்பினர்கள் விருப்பம் தெரிவிக்கத் தொடங்கினார்கள். 24 மணி நேரத்திற் குள்ளாகவே 25 நூல்களை அறிமுகம் செய்ய ஆட்கள் கிடைத்தார்கள்.v அக்டோபர் 20ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை மாபெரும் புத்தக அறிமுக விழா ஏற்பாடானது. கவிஞர் ஜெயபாஸ்கரன் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள ஆசிரியர் தங்கமணி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.
அலங்காரமான வரவேற்புரை, பரிசு வழங்கி கவுரவித்தல் போன்ற சடங்குகள் இல்லாமல் சுருக்கமான முன்னுரை யுடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பின்வரும் 25 நூல்களை தோழர்கள் அறிமுகப்படுத்திப் பேசினார்கள்:
கிழவனும் கடலும் - எர்னஸ்ட் ஹமிங்வே, சுளுந்தீ - முத்துநாகு, கடுகு வாங்கி வந்தவள் - பி.வி.பாரதி /தமிழில் கா. நல்லதம்பி, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள் - வைரமுத்து, வட்டியும் முதலும் - ராஜு முருகன், தகடூர் நாடு செந்தமிழ் நாடு - சுகா, வெண்ணிற இரவுகள் - பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, மண்பாரம் - இமையம், இசையின் அதிகார முகங்கள் - இ. முத்தையா, எரியும் பனிக்காடு - பி. எச். டேனியல் - தமிழில். இரா முருகவேள், மாநில சுயாட்சி - முரசொலி மாறன், வள்ளலாரின் வாழ்வும், வாக்கும் - பா.சு.ரமணன், ஏன் கண்மணி - எஸ். இரவிச்சந்திரன், வேண்டும்.. வேண்டும்.. - பொறியாளர். ப.நரசிம்மன், பெரியோர்களே தாய்மார்களே, - திருமாவேலன், மறைநீர் - நக்கீரன், குட்டி இளவரசன் - அந்த்வான் து செந்த் / சிறுகதைகள்- மலர்வண்ணன், பகல் கனவு - ஜிஜீபாய் பதேக்கா / தமிழில் - டாக்டர். சங்கரராஜுலு, யானை டாக்டர் - ஜெயமோகன், சத்தியசோதனை - மகாத்மா காந்தி, கசார்களின் அகராதி (பெண் பிரதி) - மிலோராத் பாவிச் / தமிழில் -ஸ்ரீதர் ரங்கராஜ், 1947 - தமிழ்ச்செல்வன், உண்மை மனிதனின் கதை - பரீஸ் பொலோவேய், தாவரத்தரகன் - கவிஞர். ஜெயபாஸ்கரன்.
எதிர்பாராத காரணங்களால் நூல் அறிமுகம் செய்ய வேண்டிய இரண்டு பேர் கலந்து கொள்ள முடியாத நிலை ஏற்பட்டிருந் தது. அந்த இரண்டு பேருக்குப் பதிலாக வேறு இருவரை ஏற்பாடு செய்து, அவர்கள் விரும்பிய நூல்களை அறிமுகப்படுத்தச் செய்திருந்தோம். எனவே 25 நூல்களின் அறிமுகம் நடந்து முடிந்தது. நீண்ட கலந்துரையாடலுக்குப் அதற்குப் பின்னர் நிறைவாகப் பேசிய கவிஞர் ஜெயபாஸ்கரன், வந்திருந்தவர்கள் ரசிக்கும்படி இனிய கருத்துக்களை 20 நிமிடங்களில் பேசி முடித்தார்.
நிகழ்ச்சி முழுவதும் காணொளி எடுக்கப் பட்டு புத்தகப் பேரவையின் யூடியுப் சேனலில் வெளியிடப் பட்டது. இதன் சுட்டி தகடூர் புத்தகப் பேரவை முகநூல் பக்கத்திலும் பதிவிடப்பட்டது.
புத்தகத் திருவிழா நிகழ்வினை விட "மாபெரும் நூல் அறிமுக விழா' தகடூர் புத்தகப் பேரவைக்கு மன நிறைவைத் தருவதாக இருந்தது. பேரவையின் நோக்கத்தை நோக்கிய முக்கிய நகர்வாக அமைந்தது. இந்த நிகழ்வினை இனி மாதம்தோறும் நடத்திட வேண்டும் எனவும், மாவட்டத்தின் தலைநகரான தருமபுரியில் மட்டுமல் லாமல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஊர்களிலும் நடத்திட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டது.
முதல் நிகழ்வில் நூல்களை அவரவர் விருப்பத்திற்கு தேர்வு செய்யக் கேட்டுக் கொண்டோம். இனிவரும் கூட்டங்களில் மொழிபெயர்ப்பு நூல்கள், புதினங்கள், கவிதைகள், வரலாற்று நூல்கள், அரசியல் நூல்கள் என இனம் பிரித்து அந்தந்த தலைப்பின் கீழ் உள்ள நூல்களை அறிமுகம் செய்ய கேட்டுக் கொள்வது எனவும் சில நூல்களை பரிந்துரை செய்து அறிமுகப்படுத்த அழைக்கலாம் எனவும் முடிவெடுத்தோம்.
இந்திய நாட்டின் கலாச்சார பெருமை வாய்ந்த நகரங்களில் ஒன்றான கல்கத்தா நகரில் மக்கள் இணையும் மாலை கூட்டங்கள் விவாதங்கள் அதிகம் நடைபெறு கின்றன. அறிவு சார்ந்த விவாதங்களுக்கான தாகம் எல்லோரிடமும் இருக்கிறது. ஆனால் இத்தாகத்தைத் தீர்ப் பதற்கான களங்கள் இல்லை. தகடூர் புத்தகப் பேரவை நடத்திய மாபெரும் புத்தக அறிமுக விழாவின் வெற்றி, தொடர்ந்து இது போன்ற அறிவு உரையாடலுக்கான கூட்டங்களை நடத்த ஊக்கப்படுத்தி இருக்கிறது. இப்படிப்பட்ட உரையாடல்கள் தமிழ்நாட்டின் ஊர்கள் தோறும், பெரிய நகரங்களின் தெருக்கள் தோறும் நடைபெற வேண்டும்.