இன்றைக்கு எதிர்ப்படும் ஒவ்வொருவரிடமும் பகிர்ந்துகொள்ள ஒரு கவிதையிருக்கிறது. வசப்பட்டால் சிற்றிதழ், இல்லையா வெகுஜனப் பத்திரிகை, .காம்கள், மின்னிதழ்கள் என கவிதைகளைப் பிரசுரிக்கவும் ஏகப்பட்ட வாய்ப்புகள். எவருமே கண்டுகொள்ளவில்லையா… இருக்கவே இருக்கிறது முகநூல் பக்கம், வாட்ஸ் அப் பகிர்வுகள்.
அப்புறமென்ன கவிதை வேளாண்மை முன்னெப் போதுமில்லாத அளவுக்கு மகசூல் கண்டிருக்கிறது.
ஆனால் அறுவடையில் நான்கில் மூன்று பங்கு பதராக இருந்தால் என்ன பிரயோசனம்? ஒரு உழக்குச் சொற்களைக் கொண்டுவந்து கொட்டி, தொடுத்து ஒன்பது கவிதைகளை புனைந்துவிடலாமென முயன்றால்… பிறப்பது கவிதையாக இருக்காது.
இராயகிரி சங்கரின் முதல் கவிதைத் தொகுப்பு சுடர்களின் மது. இவற்றில் பெரும்பாலான கவிதைகள் அவரது முகநூல் பக்கத்தில், கவிதை உருவானவுடனேயே சுடச்சுட பரிமாறப் பட்டவை.
மூத்தாளின் குழந்தைகளை வஞ்சகமாக காட்டில்கொண்டு விடும் சித்திகள் நடமாடும் குழந்தைக் கதைகளைக் கேட்காத நபர்கள் அபூவர்மாகவே இருப்பார்கள். அத்தகைய குழந்தைகள் கதையொன்றிலிருந்து காதல் கவிதையொன்றை பின்னிமுடைந்திருக்கும் சாமர்த்தியத்தைப் பாராட் டியே தீரவேண்டும் உன்னைப் பிய்த்துப் பிய்த்து வழிநெடுக இட்டுக்கொண்டே வந்தேன் எப்படியும் திரும்பிவிடலாம் என்ற நம்பிக்கையில் திரும்பும்போது கண்டேன் என் வழிகளை மறைக்கும் என் திசைகளைக் குழப்பும் அடர்வனமொன்றை என காதலின் திகைப்பாக அதனை மாற்றிக் காட்டுகிறார்.
பொன்னிற மாலையிலிருந்து இனிமைசொட்டும் கவிதையைப் பிழியவும் அவருக்குத் தெரிந்திருக்கிறது.
பொன்னிற மாலையை நாளையில் இருந்து களவாடி வந்தேன் அதன் மஞ்சள் வெயில் பட்டு என் பிள்ளைகள் மலர்ந்தனர் பள்ளிக்குக் கிளப்பிய விரக்தி படிந்த முன்காலையை அவசரமாக புத்தகப் பைக்குள் திணித்தனர்...
ஆனால் நம்மில் பலரும், சின்னஸ்ரீ, பெரிய ஸ்ரீ-க்களுக்காக நாளையிலிருந்து மாலைப்பொழுதை கடன்பெற்றுத் தராவிட்டாலும் பரவாயில்லை. வீட்டுப் பாடம், டியூஷனெனச் சொல்லி குழந்தையின் கைகளிலிருக்கும் இன்றைய மாலைகளையும் வலுக்கட்டாயமாகப் பிடுங்கிக்கொள்கிறோம்.
குடும்பத்தாலும் சமூகத்தாலும் கைவிடப் படுபவர்கள் என்னாகிறார்கள் என்பதைக் காட்டுகிறது சங்கரின் கவிதையொன்று. குப்பைகளை வயலாக்கித் தானியங்களைத் தேடும் அவர்கள், தவறவிடும் மணிபர்ஸ்களை விரைந்தெடுத்து பதுக்குவதில் குற்ற உணர்வு கொள்வதில்லை. கடைசியில் குப்பை யில் படரும் தீயைப்போல நகரத்தை அவர்கள் பற்றிப்படர்வதாகச் சொல்கிறார். கண்ணகியின் தீயாவது மதுரையுடன் நின்றுவிட்டது. சமூகத்தால் கைவிடப்படுபவர்கள் இல்லாத நகரங்களே இல்லை என்பதை நாமறிவோம்.
சகோதரர்களால் ஏமாற்றப்பட்ட உன் சோகக்கதையை தயவுசெய்து இப்போதாவது நிறுத்திக்கொள்.
எனத் தொடங்கும் கவிதை ஒருவிதத்தில் உன் சகோதரர்கள் என்னைவிட மேலானவர்கள் அவர்களைப் பற்றி குறைகூறித்திரிய இன்னமும் உன்னை உயிரோடாவது விட்டு வைத்திருக்கிறார்கள் என முடிக்கிறார்.
வாழ்ந்த கிராமம், அண்டை மனிதர்கள், சக பயணி, ஆன்மிக ஈர்ப்பு என சகல திக்கிலுமிருந்து கவிதை களை வார்க்கமுயன்றிருக்கிறார். நன்கு கனிந்து பழுக்காத கவிதைகள் நாக்கில் நிரடினாலும், கனிந்து இனிக்கும் கவிதைகளையும் தாராளமாகக் கொண்டிருக்கும் தொகுப்பு இது!
சுடர்களின் மது
கவிஞர்: இராயகிரி சங்கர்
வெளியீடு: ஜீவா படைப்பகம்
214, மூன்றாவது பிரதான சாலை,
புவனேஸ்வரி நகர், வேளச்சேரி,
சென்னை 42
செல்: 99942 20250
மணி