"புத்துலகம் படைக்க புத்தகம் படிப்போம்"
என்றார் சுவாமி விவேகானந்தர். "ஒரு நாட்டின் வருங்காலச் சந்ததியி னர் தேடித் தேடி அடைய வேண்டிய அற்புதப் புதையல்கள் புத்தகங்களே" என்கிறார் ஹென்றி தோறோ.
"பத்துப் பறவைகளோடு பழகி
நீங்கள் ஒரு பறவையாக முடியாது
பத்து நதிகளோடு பழகி
நீங்கள் ஒரு நதியாக முடியாது
பத்துப் புத்தகங்களோடு
பழகிப் பாருங்கள்
நீங்கள் பதினோராவது
புத்தகமாகிப் படிக்கப்படுவீர்கள்"
-என்று தம் "புத்தகம் என்பது " என்ற புத்தக வாசிப்பு பற்றிய பிரத்தியேகமான கவிதை நூலில் குறிப்பிடுகிறார், நமது வாழும் மகாகவி ஐயா ஈரோடு தமிழன்பன்.
புத்தகங்கள் இல்லாத வீடு சாளரம் இல்லாத வீடு போன்றது என்பர் அறிஞர். நூலகங்களில் சென்று புத்தகங்களை படித்துவிட்டுப் பின் திருப்பித் தந்துவிட்டு வரும்போது நம் அன்பிற்குரிய பல நாள் பழகிய நட்பு ஒன்றைப் பிரிந்து வருவது போன்ற ஓர் உணர்வே நமக்கு எப்போதும் ஏற்படும் என்பது உண்மைதானே?
என் வீட்டின் மிகவும் அழகான ஓர் இடம் எது என்று என்னைக் கேட்டால் என் அன்புப் புத்தகக் குழந்தைகளைப் பராமரித்துப் பாதுகாத்து வரும் என் புத்தக அலமாரியே என்று நான் கூறுவேன்.
தற்காலத்தில் நாம் விரும்பும் படிக்க எண்ணும் நூல்களை எப்போது வேண்டுமானாலும் வாங்கிப் படித்து மகிழ நிறைய புத்தக விற்பனை நிலையங்கள் வந்துவிட்டபோதிலும், வருடமொரு முறை நடைபெறும் பிரம்மாண்டமான புத்தகக் கண்காட்சிக்குச் சென்று அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு வகையான புத்தகங்களைக் கண்குளிரக் கண்டும் நமக்குப் பிடித்த, நீண்ட நாள் வாங்க எண்ணிய நூல்களை வாங்கியும் மகிழும் ஆனந்தம் வேறு எங்கு எப்போது கிடைக்கும் நமக்கு?
ஆனால், வருடமொருமுறை நடக்கும் இந்த புத்தகக் கண்காட்சிகளுக்குக் கூட வரமுடியாமல் நாடுவிட்டு நாடு வாழும் நம் நட்புகள் உறவுகள் பலர். அவர்களை எண்ணுகையில் கொஞ்சம் மன வருத்தம் இருக்கத்தானே செய்கிறது? அவ்வாறு பொருளீட்டலின் பொருட்டு நாடு விட்டு நாடு வாழும் நம் நட்புகளுக்காகவே ஓர் இணையில்லா இன்ப நிகழ்வாய் பெண்களாலேயே அமெரிக்காவின் அட்லாண்டாவில் ஓர் அற்புதமான "புத்தகக் கண்காட்சி" நடத்தப்பட்டது என்பதை நம்ப முடிகிறதா? ஆம் உண்மைதான். "உலகப் பெண் கவிஞர் பேரவை" "வல்லினச் சிறகுகள்" "ஒருதுளிக் கவிதை" மற்றும் "அட்லாண்டா தமிழ் நூலகம்" இணைந்து புதுவையின் ஒரு துளிக்கவிதை நிறுவனர் முனைவர் அமிர்த கணேசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி சென்ற ஆண்டு அயலகத்தில் நம் தமிழக எழுத்தாளர்களின் தமிழ் நூல்களைக் காட்சிப்படுத்தி முதல் புத்தகக் கண்காட்சியை நடத்தி பெருவெற்றியும் கண்டோம்.
இம்முறையும், அக்டோபர் மாதம் 9-ஆம் தேதி மீண்டும் இரண்டாவது புத்தகக் கண்காட்சி பெண்களாலேயே நடத்தப்பட்டு மிகச்சிறந்த வெற்றியும் கண்டுள்ளது என்பது மகிழ்வானதொரு செய்தியே.
இதற்காக நூல்களைச் சேகரிக்கும் பணி ஒரு மாதம் முன்பாகவே தொடங்கப்பட்டது. புத்தகக் கண்காட்சி பற்றிய விளம்பரம் அறிவிக்கப்பட்ட அடுத்த நொடியிலிருந்தே நம் தமிழக எழுத்தாளர்களின் அயலக நூல் கண்காட்சிக்கான ஆர்வம் புலப் பட்டது.
தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பல்வேறு சிறந்த எழுத்தாளர் களின் நூல்களை சென்னைக்கு வர வழைத்து, இங்கிருந்து அட்லாண்டாவிற்கு அனுப்பிவைக்கும் பணியை உலகப் பெண் கவிஞர் பேரவையைச் சேர்ந்த கவிஞர் பிரேமா மற்றும் கவிஞர் மஞ்சு ஆகியோர் முன்னெடுத்துச் செய்ய, அமெரிக்க அட்லாண்டாவில் வாழும் நம் "உலகப் பெண் கவிஞர் பேரவையின் தோழமைகள் குறிப்பாக எழுத்தாளர் ராஜி ராமச்சந்திரன் , கவிஞர் கிரேஸ் பிரதீபா, கவிஞர் ஜெயா மாறன், கவிஞர் நளினி சுந்தர ராஜன் மற்றும் தோழிகள், அட்லாண்டா தமிழ் நூலகத் தின் பொறுப்பாளர் திருமதி பொன்னி சுவாமிநாதன் ஆகியோர் இணைந்து வெகு சிறப்பாகப் புத்தகக் கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தினர்.
அக்டோபர் 9ஆம் தேதி அட்லாண்டாவில் உள்ள பிளவர் பார்க்கில் நடைபெற்ற இந்த புத்தக கண்காட்சி கிருத்திகா (தலைவர் அட்லாண்டா பெருநகர தமிழ் சங்கம்) மற்றும் குமரேஷ் (மேனாள் தலைவர் அட்லாண்டா பெருநகர தமிழ்ச் சங்கம்) முதலிய ஆகச்சிறந்த சான்றோர்களின் முன்னிலையில் ஆதிமுத்து அவர்களால் திறந்து வைக்கப்பட்டது.
நம் இரண்டாவது புத்தகக் கண்காட்சியில் தமிழகத்தைச் சேர்ந்த பல்வேறு சிறந்த எழுத்தாளர்களின் கவிதைகள், கதைகள், கட்டுரைகள், சிறுவர் நூல்கள் ஆகிய பல்வேறு படைப்புகள் இடம் பெற்றன.
கண்காட்சியில், தமிழக வெளியீட்டாளர் களின் சிறந்த நூல்களும், நமது மகாகவி ஈரோடு தமிழன்பன் கவிதை நூல்கள், எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் நூல்கள், கதைசொல்லி கி.ரா நூல்கள், ஜெயகாந்தன் கதைகள், அமரர் கல்கியின் பொன்னியின் செல்வன், எஸ். வெங்கடேசனின் காவல் கோட்டம், வேல்பாரி, வேல ராமமூர்த்தி கதைகள் போன்ற நூல்களும் காட்சிக்கு வைக்கப் பட்டிருந்தன.
இம்முறை சிறார்களுக்கான நூல்கள் அதிகமாக இடம்பெற்றது கூடுதல் சிறப்பு. அயலகம் வாழும் நம் தமிழ் நட்புகள் ஆர்வத்துடன் கண்காட்சியில் கலந்துகொண்டு, மகிழ்ந்திருந்ததோடு மட்டுமன்றி குழந்தைக்குத் தரும் இனிப்பு மிட்டாய் போல நூல்களைக் கண்டும் வாங்கியும் இன்புற்றிருந்தது காணக் கண்கொள்ளாக்காட்சியாகவும் மனதிற்கு நிறைவையும் பெருமிதத்தையும் அளித்தது.
கண்காட்சிக்கு மகுடம் சூட்டும் விதமாக எட்டு சிறப்பான நூல்களின் வெளியீடும் நடைபெற்று விழாவினைச் சிறப்பித்தது.
எழுத்தாளர் ராஜி ராமச்சந்திரனின் "வட அமெரிக்காவின் ஆற்றல் மிகுப் பெண்கள்", கவிஞர் கிரீஸ் பிரதிபாவின் "பெருமைக்குரிய பெண்கள்", கவிஞர் ஜெயா மாறனின் "தமிழா விழி தமிழே விழி", ஜெர்மனியில் வாழும் கவிஞர் கௌசியின் "பனிக்குடம்", மகாகவி ஈரோடு தமிழன்பனின் முகத்தில் முகம் என்ற நூலின் ஆங்கிலஆக்கம் (எஹஸ்ரீங் ற்ர் எஹஸ்ரீங்) (அமெரிக்காவின் விஸ்கான்சினில் வாழும் கவிஞர் நளினி சுந்தரராஜனால் மொழிபெயர்க்கப்பட்டது)
இலங்கைக் கவிஞர் மெய்யன் நடராஜின் "மூச்சுவிடும் காதுகள்", புதுவைப் பொறிஞர் தேவதாஸின் "கொஞ்சம் விருந்து கொஞ்சம் மருந்து", எழுத்தாளர் சோ. நே அறிவுமதியின் "ஆழினி" ஆகிய ஆகச்சிறந்த எட்டு படைப்புகளை, அட்லாண்டாவைச் சேர்ந்த முனைவர் உதயகுமார் அவர்கள் வெளியிட கண்ணப்பன், மேனாள் அட்லாண்டா பெருநகரத் தமிழ்ச் சங்கத் தலைவர் சுவாமிநாதன் அண்ணாமலை ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.
"ஒரு குழந்தைக்கு நீங்கள் வாங்கித் தரும் ஆகச்சிறந்த பரிசு புத்தகம் தான்" என்கிறார் வின்ஸ்டன் சர்ச்சில்.
ஆம், நம் வளரும் சந்ததியினர் தற்காலத்தில் பெருகிவரும் சமூக வலைத்தள சீர்கேடுகளில் சிக்கித் தவிக்காமல் உலகத்தில் உண்மையான கருப்பொருளாம் புத்தகங்களைத் துணையாகத் தேர்ந்தெடுத்து நல்வாழ்வு பெற இதுபோன்ற சிறந்த செயல்பாடுகளை முன்னெடுத்து அவர்களின் வழிகாட்டியாகச் செயல்பட்டு நாமும் சிறப் படைவோமாக.