Kavithai

நூல்: ஹோ... என்றொரு கவிதை

நூலாசிரியர்: இரா.பூபாலன்

Advertisment

கவிஞர் பூபாலனின் 'ஹோ... என்றொரு கவிதை' நூலில் இடம்பெற்றுள்ள கவிதைகள், முழுக்க மனிதர்களின் மென்மையான உணர்வுகளை எளிய வார்த்தைகளில் பேசுகின்றன. மனிதநேயத்தையும், உறவுகளின் பாசத்தையும் இயல்பான வரிகளில் அழுத்தமாக வலியுறுத்தியிருக்கிறார் கவிஞர்.

முதல் தலைமுறை பட்டதாரி என்பது, படித்து முடித்து பட்டம் பெற்ற மாணவனுக்கு மட்டுமே பெருமையல்ல, தன் மகனைப் படிக்கவைத்து பட்டதாரியாக்கிய தகப்பனுக்கும் பெருமை என்பதை முதல் கவிதையிலேயே நெகிழ்ச்சியாக வடித்திருக்கிறார்.எழுதப் படிக்கத் தெரியாத அப்பா, ரா...ம...சா...மி... எனக் கைகள் நடுங்க வங்கியிலோ, மதிப்பெண் அட்டையிலோ கையெழுத்து போடும்போது, சில நேரங்களில் எழுத்துப்பிழையாக ராமாமி என்றுகூட எழுதிவிடுவார். எழுதியதோடு மீசையைத் தடவிவிட்டு பெருமிதமாகச் சிரிப்பார். அந்த பெருமிதம், அவர் கையெழுத்தைப் போட்டதுக்காக மட்டுமல்ல, தன் பிள்ளையை கஷ்டப்பட்டு படிக்க வைத்து பட்டதாரியாக்கியதாலும் வரக்கூடும்.

Poobalan

Advertisment

அந்த பெருமிதச் சிரிப்பு தான் அப்பாவின் சாதனை என, எழுதப்படிக்கத் தெரியாத அப்பாக்களுக்கு கிரீடம் சூட்டுகிறார் தனது கவிதையால். நகரங்களில் சிக்னல்கள்தோறும் எளிய மனிதர்கள், குழந்தைகளுக்கான நூல்கள், விளையாட்டு பொம்மைகளென விதவிதமாக விற்பனைசெய்வதைக் காண முடியும். சிக்னல் விழுந்து முடியும் வரை தான் அவர்களின் விற்பனை நேரமே. அதற்குள் ஒவ்வொரு வாகனமாகத் தேடித் தேடிச் சென்று, கெஞ்சும் பார்வையால் வாங்கச் சொல்வார்கள். இப்படி விற்பனை செய்பவர்களில் மாற்றுத்திறனாளிகளும் இருக்கக்கூடும். மனிதநேயமுள்ள கவிஞரின் பார்வையில், சக்கரப்பலகையில் அமர்ந்து கைகளால் உந்தித்தள்ளி உருட்டியபடி விற்பனை செய்யும் வியாபாரி பட்டிருக்கக்கூடும்.

இவரது இளகிய மனதுஎன்ன சொல்லும்? இந்த மாற்றுத்திறனாளி வியாபாரிக்காகவே சிக்னல்களில் சிவப்பு விளக்கு சற்று கூடுதல் நேரம்எரியட்டும் என்கிறார் தன் கவிதையின் வாயிலாக.இதேபோன்று இன்னொரு கவிஞன், சக்கரப்பலகையில் அமர்ந்தபடி சாலையில் செல்லும் மாற்றுத்திறனாளி,ஏதேனும் ஒதுங்குமிடத்துக்கு செல்லும் வரையிலாவது தூறிக்கொண்டிருக்கும் மழை, வலுக்காமல் இருக்கட்டுமென எழுதியதை வாசித்திருக்கிறேன். அந்த கவிஞரின்மனதை ஒத்திருக்கிறது இவரது பார்வை. கூரை வீடுகளில் வசிக்கும்போது மழை பெய்தால்,கூரை ஓட்டை வழியாக வீட்டுக்குள்ளும் ஆங்காங்கே சொட்டும். இதேபோல தான் ஓட்டு வீடுகளும்கூட. மழை பெய்யும்போதெல்லாம் இவ்வீடுகளில் வசிப்பவர்களுக்கும் மழைக்குமிடையே ஓர் உறவு இருந்து கொண்டேயிருக்கும். அதுவே மழைத்துளிகள் நுழைய வழியில்லாத அடுக்குமாடிக் கட்டடத்தில் குடியேறிவிட்டால்?

'அடுக்குமாடிக் கட்டடங்களுக்குள்

வாழ்க்கை அடைக்கலமான பின்பு

தீண்டத்தகாதவனென

ஒதுக்கி

வாசலோடு சென்றுவிடுகிறது

மழை'

என, அடுக்குமாடி வீடுகளுக்குள் நுழைய முடியாமல், தீண்டத்தகாததாய் ஒதுக்கப்பட்டதால் வருத்தப் பட்டு, வாசலோடு வீட்டினுள் நுழையாமல் சென்று விடுகிறதாம் மழை! மழையோடு உறவாடாத கவிஞர்கள் இருக்கிறார்களா என்ன? மழையை ரசிக்கும் கவி மனதை எல்லோராலும் புரிந்துகொள்ள முடியாது. மழைத்துளிகளைக் கையிலேந்தி மகிழ்வதை, மழையில்முழுதும் நனைந்து குதூகலிப்பதை, மழைத்துளிகள் விழுகின்ற அழகை விழி விரிய ரசிப்பதை எவரேனும் கண்டால், என்ன இது பைத்தியக்காரத்தனம் என்றும்சொல்லக்கூடும். அதற்கு கவிஞரே ஒப்புதல் வாக்கு மூலம் தருவதாக ஓர் கவிதையில்,

'ஒரு பைத்தியக்காரியின்

சொற்களென

சதா பெய்கிறது மழை

நகர வழியற்று

அருகமர்ந்து

கேட்டுக் கொண்டிருக்கிறேன்

சக

பைத்தியக்காரனாக...'

என எழுதியிருக்கிறார். இப்படியாகப் பலவற்றையும் ரசித்து ரசித்து கவிதையாக்குபவர், கவிதையைக் குறித்தும் எழுதாமலிருப்பாரா என்ன? கவிஞர்கள் கவிதை படைப்பது பெரிதல்ல, அதைப் பொதுவில்வைக்கும்போது அக்கவிதை குறித்துஎழக்கூடிய விமர்சனங்களை, கல்லெறிகளைக் குறித்தெல்லாம் எழுதியதோடு, கவிதைகளை ரசித்து,அதில் வரும் காதலிக்கும், காதலனுக்கும் தங்களுக்கு விருப்பமானவர்களின் பெயர்களை நினைத்து ரசிப்பதைச் சுட்டுவதோடு, அக்கவிதையையே தங்கள் கவிதையாகச் சொல்லிக்கொண்டு தங்கள் காதல் இணைக்கு அனுப்பிவைக்கும் திருட்டுத்தனத்தையும் சேர்த்தே சுட்டிக்காட்டுகிறார்!

'கவிதைகளுக்குள்

அத்துமீறி நுழைபவர்கள்

அதன் சொற்களுக்குள்

தங்கள் விருப்பப் பெயர்களை

எழுதிக்கொள்கிறார்கள்

சமயங்களில்

தனதெனப் பகிர்ந்தும் விடுகிறார்கள்

எல்லோருக்கும்

கதவைத் திறந்தபடியே இருக்கிறது

கவிதை'

காதலியோடு உரையாடும் நேரங்களில் மகிழ்வாக இருப்பதும், காதலி விடைபெற்றுச் சென்றுவிட்டால் வெறுமை சூழ்வதுமான நிலையை, வீட்டில் ஏதேனும் விசேஷ நாளில், கடவுளுக்கு செய்யப்பட்ட அலங்காரங்களை, பூஜையெல்லாம் முடிந்தபின்னர் கலைத்துவிட்டு, படையல்களையும் அகற்றிவிட்டு, கடவுளைத் தனித்துவிடுவதுபோல ஓர் வெறுமையை உணர்வதாக ஒப்பிடுவது புதிதாக இருக்கிறது.

'பிரார்த்தனைகளின் முடிவில்

ஒப்பனைகள் கலைக்கப்பட்டு

ஒளி கவிக்கப்பட்டு

படையல்கள் துடைக்கப்பட்டு

தனித்து விடப்பட்ட

கடவுளைப் போல

வெறுமை சூழ்ந்துவிடுகிறது

உன் விடைபெறல்களில்!'

பல்வேறு பயிர்கள் விளையக்கூடிய விளை நிலங்களெல்லாம், ரியல் எஸ்டேட்டின் வளர்ச்சியால் விலை நிலங் களாக மாற்றப்படும் வருத்தமான சூழலை வித்தியாசமானதொரு கோணத்தில் படம் பிடிக்கிறார்கவிஞர். விளைநிலத்தோடு இணைந்து சுயமிப் படத்தை சிறுமிஎடுக்கும்போது, அதன் பின்புலத்தில் வீட்டு மனை விற்பனைக்குஎன்ற சுவர் விளம்பரமும் சேர்ந்துஅந்த ஒளிப்படத்தில் பதிவாவ தாகக் குறிப்பிடுகிறார். இக்கவிதை நூலில் முத்தாய்ப்பான கவிதையாகக் கருதுவது, சக மனிதரின்சிறு புன்னகையைக்கூட சந்தேகத்

துடன் பார்க்கக்கூடிய இன்றைய வாழ்வியல் நெருக்கடியான சூழலைச் சொல்லக்கூடிய இந்த கவிதையைத்தான்.

'வங்கியில்

பணம் எடுத்துவிட்டுத்

திரும்புகையில்

யாரோ ஒருவர்

புன்னகைத்துச் செல்கிறார்

பையைத் தொட்டுத் தொட்டுப்

பார்த்துக்கொண்டே

வீடு திரும்புகிறது மனது'

இக்கவிதையை வாசித்ததுமே பகீரென்றது. எவ்வளவு பெரிய உண்மை இது. ஒரு ரயில் பயணத்திலோ, பேருந்துப் பயணத்திலோ சக பயணிமீது முழு நம்பிக்கையோடு நம்மால் அமர்ந்திருக்க முடியுமா? அவர் தரும் தின்பண்டத்தை சாப்பிடத் தோணுமா? ஒவ்வொரு நொடியும் அவர்கள் மீது சந்தேகக் கண்ணோடு தானே இருக்கிறோம். ஒரு புன்னகையைக்கூட நம்மால் முழுமையாக அனுபவிக்க முடியாததை என்னவென்பது? மனிதநேயத்தின் தேவையைத் தூக்கிப்பிடிக்கும் இக்கவிதைத் தொகுப்பு பாராட்டுக்குரியது.