டாக்டர் சாரதா படிகளில் ஏறி தான் வசித்துக்கொண்டிருந்த வாடகை அறைக்கு முன்னால் வந்து நின்றபோது, வாசலின் இருட்டில் சுவரில் சாய்ந்து அமர்ந்த வாறு தூங்கிக்கொண்டிருக்கும் அந்த வயதான மனிதரைப் பார்த்தாள்.
டார்ச்சை அடித்ததும், அவர் கண்களை விழித்து, புளியங்கொட்டையைப் போலிருந்த கறுத்த பற்களைக் காட்டி சிரித்தார்.
"நான் கொஞ்ச நேரமாவே இங்க இருக்கிறேன்.'' அவர் கூறினார்: "டாக்டர்... நீங்க ஆறு மணிக்கு வந்திடுவீங்கன்னு நான் நினைச்சேன்.''
"இன்னைக்கு கொஞ்சம் அதிகமான வேலை இருந்துச்சு'' சாரதா கூறினாள். அவரின்மீது தோன்றிய எரிச்சலை வெளிக்காட்டிக் கொள்ளாமல்.
புன்னகை தவழும் முகத்துடன் அவள் அவரைப் பார்த்தாள். பிறகு.. சாவியை எடுத்து கதவைத் திறந்துவிட்டு உள்ளே நுழைந்தாள். அந்த கிழவர் மேலும் கீழும் மூச்சைவிட்டவாறு அவளைப் பின்பற்றினார்.
உள்ளே வந்தவுடன் அவள் ஒரு ஸோஃபாவின்மீது சென்று விழுந்தாள்.
இன்னைக்கு எனக்கு கடுமையான தலைவலி. எதுவுமே சாப்பிடாமல் சீக்கிரம் உறங்கலாம்னு நினைக்கிறேன்.''
அவள் கூறினாள்.
அதற்குப் பிறகும் அவர் அமர்ந்திருந்த இடத்தைவிட்டு எழவில்லை. சாம்பல் நிற துணியாலான குடையை தன் தொடைகளுக்கு நடுவில் வைத்தவாறு, அவளையே வெறித்து பார்த்துக்கொண்டு அவர் அங்கு அமர்ந்திருந்தார். அவள் கண்களை மூடினாள்...
திறந்தாள்... மீண்டும் மூடினாள்.
"எனக்கு இன்னைக்கு தாங்கமுடியாத அளவிற்கு களைப்பு.'' அவள் கூறினாள்.
"டாக்டர்... உங்களோட உடம்பை நன்றாக வைப்பதில் நீங்கள் கொஞ்சம் கவனம் செலுத்தணும்.'' அவர் கூறினார்:
"இந்த இளம் வயதில் இப்படி சோர்வு உண்டானால், கொஞ்சம் வயது ஆகும்போது என்ன செய்வீங்க? எழுந்து நடக்கக்கூட முடியாத நிலை உண்டாயிடும்.''
சாரதா எழுந்து நின்றாள். மீண்டும் அவள் அவரைப் பார்த்து சிரித்தாள்.
"குறுப்பு.. .உங்களுக்கு இன்னைக்கு என்ன வேணும்? உடல்நலக் குறைவு எதுவுமில்லையே?'' அவள் கேட்டாள்.
"இல்லை... ஆனால், காலையில தொடங்குச்சு... ஒருவிதமான இளைப்பு.கையும் காலும் தளர்ந்துபோயின. இதோ... கொஞ்சம் தொட்டுப் பாருங்க. என் கையில் என்ன குளிர்ச்சி! டாக்டர்... என் ரத்த அழுத்தத்தை கொஞ்சம் எடுத்துப் பார்ப்பீங்களா? "தினமும் ரத்த அழுத்தத்தை எடுத்துப் பார்த்து, என்ன கிடைக்கப் போவது?'' அவள் கேட்டாள்.
"எனக்கு யாரும் இல்ல... டாக்டர்... என்னைப் பார்த்துக்கொள்வதற்கு யாருமே இல்ல. நான் படுக்கையில படுத்துட்டா, என்வீட்டு உரிமையாளர் என்னை இழுத்துக்கொண்டு போய் சாலையில போட்டுடுவார். டாக்டர்... உங்களுக்கு அது தெரியுமா? அங்கு கிடந்து சாகவேண்டிய நிலை உண்டாகும். என்னை யார் பார்த்துக்குவாங்க, டாக்டர்? நீங்க என்னை இங்க படுக்கவைக்க மாட்டீங்க... என்னை யாரும் பார்க்கமாட்டாங்க.''
அவர் முகத்தைச்சாய்த்து வைத்தவாறு தன் சட்டையின் கழுத்துப் பகுதியின்மீது மூக்கைத் துடைத்தார். தொடர்ந்து இடறிய குரலில் மீண்டும் தொடர்ந்தார்.
"டாக்டர்... எனக்கு நீங்க உதவணும். எனக்கு வேறு யாருமே இல்ல.என்னை இங்க படுக்கவைத்து உடல்நலக் கேடைச் சரிபண்ணணும். என்னை இங்கேயிருந்து விரட்டி விட்டால், நான் ஏதாவது சாலையில் கிடந்து செத்துப் போவேன்.''
"நீங்க எதற்கு இப்படி குடிக்குறீங்க?'' டாக்டர் கேட்டாள்:
"நீங்க குடிச்சு நாற்றமெடுத்து இங்குவர்றது எனக்கு கொஞ்சம்கூட பிடிக்கல.''
"இன்னைக்கு நான் குடிக்கல'' அவர் கூறினார்:
"டாக்டர்... உங்க காலைப் பிடிச்சு சத்தியம் பண்ணுறேன். நான் இன்னைக்கு குடிக்கல.''
"நீங்க இப்போ இங்கேயிருந்து கிளம்புங்க. எல்லா நாட்களிலும் இங்கு வந்து என்னைத் தொல்லைப்படுத்தக் கூடாது. வயசான ஆளுன்னு நினைச்சு நான் இதுவரை பொறுத்துக்கிட்டேன். ஆனால் ஆட்கள் என்ன நினைப்பார்கள்? தினமும் நீங்க இங்கு வருவீங்க. தினமும் குடிச்சு நாற்றமெடுத்து, ஒரு ஆள் என் அறைக்குள் வந்தால்... அதை நிறுத்த முயற்சிப்பது தவறில்லையே? குறுப்பு... தயவுசெய்து இப்போ புறப்படுங்க. நான் ஆடையை மாற்றிவிட்டு கொஞ்சம் படுத்து உறங்கணும்.''
"என் டாக்டர்... நான் என்ன தவறு செய்துவிட்டேன்? எனக்கு உங்களைத் தவிர, வேறு யாருமில்ல. உங்களுக்கு அது தெரியும்ல... டாக்டர்?''
அவர் வெட்கத்தை விட்டு தேம்பி அழ ஆரம்பித்தார்.
அவள் உடனடியாக முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.
"குறுப்பு... இங்கிருந்து போங்க. எனக்கு கொஞ்சம் நிம்மதி வேணும். பகல் முழுவதும் மருத்துவமனையில் வேலை பார்த்துவிட்டு, சாயங்காலம் இங்கு வர்றப்போ, ஒரு குடிகாரனின் அழுகையையும் புலம்பலையும் கேட்கணும்.இனி இது எதையும் என்னால சகிச்சிக்கிட்டு இருக்க முடியாது. தயவுசெய்து புறப்படுங்க'' அவள் கூறினாள்.
"என் ரத்த அழுத்தத்தை எடுக்கமாட்டீங்களா...
டாக்டர்?'' அவர் கேட்டார்.
அவரின் வீங்கிய.. சாம்பல் நிறத்திலிருந்த முகத்தில் அவளுடைய பார்வை பதிந்தது.
"நாளைக்கு எடுக்கலாம்... குறுப்பு. இன்னைக்கு வீட்டுக்குப் போங்க.நாளைக்கு ப்ளட் ப்ரஸ்ஸர் எடுத்து பார்ப்போம்'' அவள் கூறினாள்.