காஷ்மீரில் மாநில போலீஸும், எல்லைப் பாதுகாப்புப் படையினரும் பா.ஜ.க. அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்கும் நிலையில், புல்வாமாவில் இந்திய ராணுவ வீரர்களின் அணிவகுப்புக்கு ஊடாக 350 கிலோ வெடிமருந்துடன் புகுந்த வாகனம் வெடித்து, 43 வீரர்கள் பலியாகி இருக்கின்றனர். மோடி ஆட்சி முடியப்போகிறது என்று கருத்துக் கணிப்புகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், நாடுமுழுவதும் எதிர்க்கட்சிகள் பா.ஜ.க. எதிர்ப்பு வாக்குகளை சிதறவிடாமல் பாதுகாக்க அணி சேர்ந்து வரும் நிலையில் இந்த தாக்குதல் நடைபெற்றிருப்பது சந்தேகம் அளிப்பதாக பல எதிர்க்கட்சிகள் தெரிவித்தன.
""யுத்தம் நடக்காத காலத்தில்கூட பா.ஜ.க. ஆட்சியில்தான் அதிக எண்ணிக்கையில் ராணுவத் தினர் கொல்லப்படுகிறார்கள். பா.ஜ.க. ஆளும்போது தான் தீவிரவாத தாக்குதல்கள் அதிகமாக நடக்கிறது. ராணுவ ரகசியங்கள் கசிகின்றன. படைமுகாம்கள் மீது தாக்குதல் நடத்தப்படுகின்றன. பாதுகாப்புத் துறையில் அதிகமான ஊழல்கள் நடக்கின்றன. இருந்தாலும், தங்களைத் தாங்களே தேசபக்தர்கள் என்று கூறிக்கொண்டு மக்களை ஏமாற்றுகிறார்கள்'' என்றார் இந்தி நடிகர் நானா படேகர்.
""புல்வாமாவில் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து பல மாநிலங்களில் படிப்பதற்காகவும், வேலைக்காகவும் சென்ற காஷ்மீரிகள்மீது தாக்குதல் நடப்பதாக கேள்விப்படுகிறேன்.
அப்படி ஏதேனும் நடந்தால் எனது எண்களை அழையுங்கள். எல்லா வகையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்படும்'' என மார்க்சிஸ்ட் கட்சியின் காஷ்மீர் மாநில எம்.எல்.ஏ. தாரிகாமி ட்வீட் செய்தார்.
மோடியிடம் ஆட்சியைக் கொடுத்துப் பாருங்கள். பாகிஸ்தானும், சீனாவும் பதுங்கு குழிகளுக்குள் பதுங்கிவிடும் என்று 2014 தேர்தலுக்கு முன்பிருந்தே மோடியை மாவீரனாக சித்தரித்தார்கள். ஆனால், நடந்தது என்ன?
2014 மக்களவைத் தேர்தலுக்கு முன் பாகிஸ்தான் எல்லைப்பகுதியில் பயங்கரவாதிகள் அல்லது பாகிஸ்தான் ராணுவத்தினரால் இந்திய வீரர்களோ, காஷ்மீர் மக்களோ பாதிக்கப்பட்டால் பா.ஜ.க. பயங்கரமாக கூச்சல்போடும். அருணாச்சல பிரதேச எல்லைக்குள் சீனா ராணுவம் நுழைந்தால் மன்மோகன்சிங்கிற்கு சேலையும் வளையலையும் வாங்கி அனுப்புவார்கள்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளை மோடி வந்தால்தான் அடக்கமுடியும் என்று பா.ஜ.க.வினர் பில்டப் செய்தார்கள். வெற்றுப் பில்டப்புகளாலும், 69 சதவீதவாக்காளர்களை எதிர்க்கட்சிகள் பிரித்த தாலும், வெறும் 31 சதவீத ஆதரவுடன் 2014 மே மாதம் பிரதமரானார் மோடி.
2014 இறுதியில் ஜம்முகாஷ்மீர் மாநில சட்டப்பேரவைக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அந்தத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு 25 இடங்கள் கிடைத்தன. முந்தைய தேர்தலில் மொத்தமுள்ள 87 இடங்களில் 11 இடங்களே பெற்றிருந்த பா.ஜ.க., இதை மாபெரும் வெற்றி என்று பில்டப் செய்தது.
தனிப்பெருங்கட்சியாக மக்கள் ஜனநாயகக் கட்சி 28 இடங்களைப் பெற்றிருந்தது. அந்தக் கட்சி துணையின்றி யாரும் ஆட்சி அமைக்கமுடியாது என்ற நிலை. தேசிய மாநாட்டு கட்சி 15 இடங்களையும், காங்கிரஸ் கட்சி 12 இடங்களையும், சிபிஎம் 1 இடத்தையும், ஜம்முகாஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி 2 இடங்களையும்பெற்றிருந்தன.
காஷ்மீர் மாநில முதல்வராக பா.ஜ.க.வைச் சேர்ந்தவரை கொண்டுவர மோடி முயற்சித்தார். பா.ஜ.க. இல்லாமல் மக்கள் ஜனநாயகக்கட்சி, தேசிய மாநாட்டு கட்சி, காங்கிரஸ் ஆகியவை இணைந்து ஆட்சி அமைத்திருக்க முடியும். தேவையற்ற கவுரவப் பிரச்சனைகளை முன்னிறுத்தி, அதை தவிர்த்துவிட்டன. இதையடுத்து, மெஹபூபா தலைமையில் மக்கள் ஜனநாயகக் கட்சியும் பா.ஜ.க.வும் சேர்ந்து கூட்டணி அமைச்சரவை அமைத்தன.
மெஹபூபாவின் இந்த முடிவு காஷ்மீரில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பிரச்சனைகளை உருவாக்கியது. மோடி வந்தால் காஷ்மீரில் அமைதிதிரும்பும். சுற்றுலா பயணிகள் அச்சமின்றி வரலாம். பயங்கரவாதிகளின் கொட்டம் அடக்கப் படும் என்றெல்லாம் சொன்னார்கள். ஆனால், கூட்டணி அமைச்சரவையில் இடம்பெற்ற தைரியத்தில் முஸ்லிம்களுடன் பா.ஜ.க.வினர் மோதல் போக்கை அதிகரித்தனர்.
தீவிரவாத அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் என்று முஸ்லிம் இளைஞர்கள் போலீஸ் நிலையத் திற்கு அழைத்துச் செல்லப்பட்டு துன்புறுத்தப் பட்டனர். இஸ்லாமிய பெண்களை அவமானப் படுத்தினர். போலீஸார் மற்றும் பாதுகாப்புப்படை யினரின் அத்துமீறல் அதிகரித்தது. இதுவே அங்கு மக்கள் மத்தியில் ஆவேசத்தை உருவாக்கியது.
பொதுத்தேர்தலின்போது, காஷ்மீரில் நடத்த முடியாத இரண்டு மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலை நடத்தமுடியாத அளவுக்கு நிலைமை முற்றியது. பலத்த பாதுகாப்புடன் நடத்தப்பட்ட தேர்தலிலும் 8 சதவீதம் 12 சதவீதம் வாக்குகள் மட்டுமே பதிவாகின. காஷ்மீர் வரலாற்றில் இத்தகைய நிலை முன்னெப்போதும் ஏற்பட்டதே இல்லை. இதுகூட மோடியின் சாதனைதான் என்று கிண்டல் செய்தார்கள்.
எங்களுக்கு பாதுகாப்புப் படையே தேவையில்லை என்று பொதுமக்கள் போராடும் நிலை ஏற்பட்டது. பாதுகாப்புப் படையினர் வந்தால் கல்லூரி செல்லும் பெண்களே கற்களை வீசித் தாக்கினார்கள். அப்பாவி இளைஞர்களை தீவிரவாதிகள் என்று முத்திரை குத்தி என்கவுண்டரில் சுட்டுக்கொன்றதுதான் இதற்கு காரணம். காஷ்மீரில் பயங்கரவாதத்தையும், பிரிவினைவாதத்தையும் ஒழிப்போம் என்று முழங்கிய பா.ஜ.க., அமைச்சரவையில் இடம்பெற்ற பிறகுதான் பிரிவினைவாத அமைப்புகள் காஷ்மீரில் அதிகரித்துள்ளன.
அவற்றின் உறுப்பினர்களும் அதிகரித்துள்ளனர்.
இன்னும் நிலைமையை துல்லியமாக சொல்ல வேண்டுமானால், காஷ்மீர் பயங்கரவாத அமைப்பு களின் நிதிநிலையை முடக்கவே பணமதிப்பிழப்பு நடவடிக்கையை அறிவித்ததாக மோடி கூறினார்.
அவருடைய அந்தக் கணிப்பும் பொய் என நிரூபிக்கப் பட்டுள்ளது. அந்த நடவடிக்கைக்குப் பிறகுதான் பயங்கரவாத தாக்குதல்கள்அதிகரித்தன.
2018 ஆம் ஆண்டு ஏப்ரல் 1 ஆம் தேதி காஷ்மீரில் டோபியன், குல்காம், ஆனந்த்நாக் மாவட்டங்களில் பயங்கரவாதிகள்மீது என்கவுண்டர் என்று போலீஸும் பாதுகாப்புப்படையும் ராணுவமும் சேர்ந்து நடத்திய தாக்குதல் மாநிலம் முழுவதும் பதட்டத்தை ஏற்படுத்தியது. 13 தீவிரவாதிகள், 4 பொதுமக்கள், 3 ராணுவத்தினர் உயிரிழந்தனர். அந்தப் பகுதி முழுவதும் அடைக்கப்பட்டாலும், திடீர் தீடீர் மோதல்களும் குண்டுவீச்சுகளும் தொடர்ந்தன.
சுற்றுலா சென்றவர்களை பாதுகாக்க வேண்டிய ராணுவம் தீவிரவாதிகளுடன் சண்டை என்று பொதுமக்களுடனே மோதிக்கொண்டிருந்தது. ஆம், தீவிரவாதிகள் யார் என்று உறுதிசெய்ய முடியாமல், எல்லோரையும் எதிரிகளாக்கிக்கொண்டிருந்தது.
இப்படிப்பட்ட கலவர பூமியாக்கத்தான் பாஜகவும் மோடியும் ஆசைப்பட்டார்களா? என்று நடுநிலையாளர்கள் கேள்வி எழுப்பினார்கள். இஸ்லாமியர்களை ஜம்முவில் உள்ள இந்துக்களுக்குக் கீழே கொண்டுவர பா.ஜ.க. விரும்புகிறதா? அல்லது இஸ்லாமியர்களை தனிமைப்படுத்தி, இந்துக்களுக்கு தனிப்பகுதியை பிரிக்க பா.ஜ.க. முயற்சிக்கிறதா? என்ற கேள்விகளும் எழத்தான் செய்கின்றன.
ஏற்கெனவே பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் பகுதியில் வசிக்கும் மக்கள் நிம்மதியான வாழ்க்கையை வாழ்வதாக இந்திய காஷ்மீர் பகுதி மக்கள் நினைக்க தொடங்கியிருக்கிறார்கள். இந்த லட்சணத்தில் காஷ்மீரை மீண்டும் இந்துமுஸ்லிம் கலவர பூமியாக்கி வருவதாக பா.ஜ.க. மீது மக்கள் குற்றம்சாட்டினார்கள்.
மோடி பிரதமரான பிறகு, 2016 ஆம் ஆண்டில் உலகில் அதிகமான பயங்கரவாத தாக்குதல் நடைபெற்ற நாடுகளில் இராக், ஆப்கானிஸ்தான் ஆகியவற்றுக்கு அடுத்து மூன்றாவது இடத்தை இந்தியா பெற்றது. 927 தாக்குல்கள் நடந்ததாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் எடுத்த புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
காஷ்மீர், சட்டீஸ்கர், மணிப்பூர், ஜார்கண்ட் ஆகிய நான்கு மாநிலங்கள்தான் அதிகமான தாக்குதலைச் சந்தித்தன. காஷ்மீரில் 2015 ஆண்டைக் காட்டிலும் 2016-ல் 93 சதவீதம் அதிகமாக தாக்குதல் நடைபெற்றது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மோடி பிரதமராகி 2017 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியுடன் முடிந்த மூன்றாண்டுகளில் காஷ்மீரில் பலியான பாதுகாப்புப்படை வீரர்கள் எண்ணிக்கை 191 என்று சவுத் ஆசியா டெரரிஸம் போர்ட்டல் தொகுத்த புள்ளிவிவரம் கூறுகிறது.
பாகிஸ்தான் பயங்கரவாதிகள் என்னவோ திடீரென்று மோடி ஆட்சி முடியப்போகும் சமயத்தில்தான் வாலாட்டுவதாக ஒரு பிரமையை உருவாக்க முயற்சிக்கிறார்கள். அது தவறு என்பதற்கு இந்த புள்ளிவிவரங்களே சாட்சி. அதுபோக, பாகிஸ்தான் பயங்கரவாதத்தை தடுக்க முடியாததுடன், இந்தியாவுக்குள்ளேயே மாவோயிஸ்ட்டுகள் மற்றும் வடகிழக்கு மாநில தீவிரவாதத்தையும் மோடியால் கட்டுப்படுத்த முடியவில்லை என்பதையும் இந்த புள்ளிவிவரம் தெளிவுபடுத்துகிறது.
பயங்கரவாதத் தாக்குதலை ஒடுக்குவ தாகக் கூறி, 2016 ஜூலை 8 ஆம் தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் புர்ஹான்வானியை பாதுகாப்புப்படை சுட்டுக்கொன்றது. அந்தக் கொலைக்குப் பிறகுதான் காஷ்மீரில் மக்கள் போராட்டம் அதிகரித்தது. விசாரணை என்ற பேரில் இஸ்லாமிய இளைஞர்களை பாதுகாப்புப்படை கொடூரமாக சித்திரவதை செய்தது. இஸ்லாமிய வீடுகளில் திடீரென்று சோதனை நடத்தப்பட்டது. இதையடுத்து பெண்களே நேரடி யாக பாதுகாப்புப்படையினருடன் மோதத்தொடங்கினர். மாணவிகளே கற்களை வீசி தாக்குதல் நடத்தினார் கள். அத்தகைய தாக்குதலை சமாளிக்க முடியாத ராணுவ அதிகாரி ஒருவர், அப்பாவி இளைஞர் ஒருவரை ஜீப்பின் முன்பகுதியில் கட்டிவைத்து நீண்டதூரம் பயணம் செய்தார். அது இந்திய ராணுவத்துக்கே அவப்பெயரை ஏற்படுத்தியது.
பெல்லட் எனப்பட்ட ரப்பர் குண்டுத் தாக்குதல் சகஜமாகியது. சிறுவர்கள் பலர் பார்வையிழந்தனர்.
எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் படுமோசமான தாக்குதலை நடத்தியது. இதை திசைதிருப்புவதற்காக இந்திய ராணுவம் பாகிஸ்தான் பகுதியில் துல்லிய தாக்குதல் நடத்தியதாக மத்திய அரசு அறிவித்தது. ஆனால், அப்படி ஒரு தாக்குதல் நடத்தப்படவில்லை என்று பாகிஸ்தான் அரசு மறுத்தது. எதிர்க்கட்சிகளின் தொடர் அழுத்தத்தை தொடர்ந்து துல்லிய தாக்குதல் எப்படி நடத்தப்பட்டது என்று ஒரு விடியோவை பா.ஜ.க. அரசு வெளியிட்டது.
பாகிஸ்தான் பயங்கரவாதத்தை மட்டுமே சந்தித்து வந்த காஷ்மீர், முதன்முறையாக பா.ஜ.க.வினரின் பாலியல் பயங்கரவாதத்தையும் சந்தித்தது. 2018-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 17 ஆம் தேதி கதுவா என்ற இடத்தில் 8 வயது இஸ்லாமிய சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி, கொன்றுவீசிய சம்பவம் இந்தியாவை மட்டுமல்லாமல் உலகையே தலைகுனிய வைத்தது. இந்தச் சம்பவத்தில் பா.ஜ.க. ஆட்களை போலீஸ் கைது செய்தது. ஆனால், குற்றவாளிகளுக்கு ஆதரவாக பா.ஜ.க. நடத்திய பேரணியில் காஷ்மீர் கூட்டணி அரசில் இடம்பெற்றிருந்த இரண்டு பா.ஜ.க. அமைச்சர்களே கலந்துகொண்டனர்.
2018 ஜூன் 14 ஆம் தேதி காஷ்மீர் தலைநகர் ஸ்ரீநகரில் மூத்த பத்திரிகையாளர் சுஜாத் புகாரியை தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். அந்தப் பதற்றம் ஓய்வதற்குள், ஜூன் 16 ஆம் தேதி இந்திய ராணுவ வீரர் அவுரங்கசீப்பை தீவிரவாதிகள் கடத்திப் படுகொலை செய்தனர்.
ரம்ஜான் பண்டிகை கொண்டாடும் வேளையில் நடைபெற்ற அடுத்தடுத்த இந்த இரண்டு நிகழ்வுகளும் காஷ்மீர் மக்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து கூட்டணி யிலிருந்து விலக மெஹபூபா முடிவெடுத்தார். எங்கே, காங்கிரஸ் மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சி ஆதரவில் புதிய அரசு அமைந்துவிடுமோ என்ற அச்சத்தில், அவசரமாக கூட்டணியிலிருந்து விலகிய பா.ஜ.க., உடனடியாக காஷ்மீரில் ஆளுநர் ஆட்சியை அமல்படுத்தியது. அந்த மாநிலத்தில் காவி பயங்கரவாதத்தை தொடர்ந்து நடத்தவே இந்த ஏற்பாடு என்று அரசியல் பார்வையாளர்கள் கருத்துத் தெரிவித்தனர்.
புல்வாமா தாக்குதலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பே இதுபோன்றதொரு தாக்குதல் நடக்க வாய்ப்பு இருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந் ததை மாநில அரசும் ராணுவமும் பொருட்படுத்த வில்லை என்று குற்றம்சாட்டப்பட்டது. வழக்க மாக இவ்வளவு பெரிய அணிவகுப்பு தரைவழியே நடைபெறும்போது, பயங்கரவாத ஆபத்து நிறைந்த பகுதியில் மேற்கொள்ளவேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகளை ராணுவம் ஏன் தவறவிட்டது என்பது முக்கியமான கேள்வியாக எழுந்தது.
ஆனால், அரசுக்கு எதிரான எந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லாமல் மேடைகளில் ஆவேசமாக குரல் உயர்த்திப் பேசி பிரச்சனையை திசைதிருப்பும் மோடி இந்தக் கேள்விகளுக்கும் பதில் சொல்லவில்லை.
ஆனால், பாகிஸ்தான் எதிர்ப்பு, இந்திய தேசிய வெறி ஆகியவற்றால் மட்டுமே உயிர்பிடித்திருக்கும் மோடி அரசு, புல்வாமா தாக்குதலை தேர்தல் அரசியலுக்கு பயன்படுத்தும் வேலையில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
ஆம், காயத்திற்கு மருந்துபோடவேண்டிய அரசு, காஷ்மீருக்கு மேலும் 10 ஆயிரம் பேர்கொண்ட படைப்பிரிவுகளை அனுப்பியிருக்கிறது. தேர்தல் நடத்துவதற்கான சூழலை உருவாக்கவே இந்த ஏற்பாடென சொல்லப்பட்டாலும், காஷ்மீரி களுக்கு எதிராக பா.ஜ.க. பரிவாரங்கள் நடத்திவரும் கொடூரமான தாக்குதல்கள் அச்சத்தை அதிகரிக்கவே செய்திருக்கின்றன. அழகுக்கு பேர்போன காஷ்மீர் ரோஜாக்கள் இரத்தத்தால் சிவந்து கொண்டிருக்கின்றன.