அமைதியான ஒரு சாயங்கால வேளையில் நான் அங்கு போய்ச் சேர்ந்தேன்- விக்டோரியா நீர்வீழ்ச்சிக்கு முன்னால். என் குஜராத்தி நண்பரான திரு. ப்ராண்லால்தான் என்னை அங்கு அழைத்துச் சென்றிருந்தார்.
நீர்வீழ்ச்சிக்கு முன்னாலிருந்த பாறைப் பிளவின் கரையிலுள்ள மைதானத் தோப்பில் அமர்ந்துகொண்டு நாங்கள் அந்த அற்புதக் காட்சியை ரசித்துக்கொண்டிருந்தோம். சந்திரோதயம் அந்தக் காட்சிக்கு மெருகு சேர்த்தது.
"நாம இனி திரும்பிப் போவோம்...'' ப்ராண்லால் கூறினார்: "நான் "டூக்'குக்கு (கடை) எட்டு மணிக்கு முன்பே போய்ச் சேரணும்.''
ப்ராண்லால், லிவிங்ஸ்டன் நகரத்தில் ஒரு பலசரக்குக் கடையின் உரிமையாளர்.
"நான் இன்னும் கொஞ்சநேரம் இங்க இருக்கட்டுமா?" நிலவு வருடிக்கொண்டிருந்த நீர்வீழ்ச்சியை அமைதியாகப் பார்த்துக்கொண்டே கூறினேன்: "வேணும்னா நீங்க போங்க...''
"தனியா ரொம்பநேரம் இங்க இருக்கவேணாம். ஆபத்து நிறைஞ்சது." ப்ராண்லால் எனக்கு அறிவுறுத்தினார்.
"என்ன? காட்டு மிருகங்களோட, திருடர்களோட தொல்லை இங்க இருக்கா?'' நான் அலட்சியமாக விசாரித்தேன்.
"அதுவும் நடக்காதுன்னு சொல்றதுக்கில்லை. ஆனா அதைவிட பயப்படவேண்டியது- நிலாவுல மூழ்கியிருக்கற நீர்வீழ்ச்சியோட காட்சிக்குத்தான். தனிமையில் ரொம்பநேரம் இந்த காட்சியைப் பார்த்துக்கிட்டு நின்னிருந்தா, படிப்படியா ஒரு இனம்புரியாத சக்திக்கு அடிமைப்பட்டதைப்போல ஒரு மயக்கம் சிலருக்கு உண்டாகுமாம். அப்போ நாம என்ன செய்றோம்ங்கறதே அவங்களுக்குத் தெரியாது. இயற்கை அழகு ஆபத்து நிறைஞ்ச ஒரு வசிய சக்தியா மாறி, உங்களை மெதுவா முன்னோக்கி பிடிச்சு இழுத்துக்கிட்டுச் செல்லும். இந்த நீர்வீழ்ச்சியின் ஓசை ஒரு வசிய மந்திரம். அந்த மாய உறக்கத்தில, முன்னாலிருக்கற பாறைப் பிளவை நோக்கி மெதுவா இழுக்கப்பட்டு நீங்க பாயக்கூட செய்யலாம். அப்படிப்பட்ட சில சம்பவங்கள் இங்க நடந்திருக்கு.''
தொடர்ந்து ப்ராண்லால், சில வருடங்களுக்குமுன்பு அங்கு நடை பெற்ற ஒரு சம்பவத்தை எனக்கு விளக்கிக் கூறினார். கரகரப்பான குரலில் அவர் அந்த கதையைக் கூறினார்.
ஆஃப்ரிக்காவில் விக்டோரியா நீர்வீழ்ச்சி என்று கேட்கும்போது, அந்த அற்புதக் காட்சியல்ல... ப்ராண்லால் அங்கு என்னை கேட்கச்செய்த அந்த கதைதான் மனதில் வலம் வந்துகொண்டிருக்கிறது. அந்தக் கதையைத்தான் நான் இங்கு கூறப் போகிறேன்.
இளம்பெண்ணான ஒரு ஆங்கிலேயப் பெண், தென் ஆஃப்ரிக்காவிலிருந்து தன்னுடைய வயதான தாயுடன் விக்டோரியா நீர்வீழ்ச்சியைப் பார்ப்பதற் காக இங்குவந்து சேர்ந்திருக்கிறாள். அவர்கள் இதற்கு அருகிலிருக்கும் "விக்டோரியா ஃபால்ஸ் ஹோட்ட'லில் தங்கியிருக்கிறார்கள்.
இதேபோல நிலவு தவழ்ந்து வந்துகொண்டிருந்த ஒரு சாயங்கால வேளையில் நீர்வீழ்ச்சியின் காட்சியை சந்தோஷமாக ரசித்தவாறு தாயும் மகளும் இந்த காட்டுப்பகுதியில் மைதான மண்டபத்தில் அமர்ந்திருக்கிறார்கள். மகள் ஒரு மரத்திற்குக்கீழே அமர்ந்திருக்கிறாள். கிழவி சற்று தூரத்திலிருந்த ஒரு பாறையின் படியில்...
மாலை நேரம் மயங்கியதையும், ஸாம்பஸி நதியும் நீர்வீழ்ச்சியும் சுற்றிலுமிருந்த இடங்களும் இலையுதிர்கால நிலவின் வெளிச்சத்தில் மூழ்கியதையும் அந்த இளம்பெண் அறிந்திருக்கவில்லை. அவள் அந்த பரந்து கம்பீரமாகக் காட்சியளிக்கும் நீர்வீழ்ச்சியைக் கண்களை மூடாமல் பார்த்துக்கொண்டிருந்தாள். ஆயிரக்கணக்கான வெள்ளி நாகங்கள், இனம்புரியாத பாறையின் இடுக்குகளை நோக்கி ஊர்ந்து இறங்குவதைப்போல அவளுக்குத் தோன்றியது. பிரபஞ்ச அழகு ஒன்றாகச் சேர்ந்து அந்த இடுக்குகளுக் குள் வேகமாகப் போய்க்கொண்டிருக்கிறது. பூமியின் அனைத்து செல்வங்களும் வானத்தின் நட்சத்திரங்களும் முன்னாலிருந்த சுழலில் சுற்றி வந்துகொண்டிருந்தன. புரிந்துகொள்ள முடியாத ஒரு சக்தி அவளையும் அந்த நீர்ச்சுழலை நோக்கி இழுத்துக்கொண்டு போக முயற்சிக்கிறது என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
அவளுடைய கண்கள் விரிந்தன. சூழலின் பாடல் அலைகளில் அவளுடைய இதயம் கரைந்து வழிந்தது.
அந்த அழகான இளம்பெண்ணின் கண்களுக்குத் தெரியாத நரம்புகள் அவளுடைய ஆன்மாவுக்குள் சுற்றி ஓடிக்கொண்டிருக்குன்றன என்பதை அவள் அறிந்திருக்கவில்லை.
அவள் மெதுவாக எழுந்து, மென்மையான கால் வைப்புகளுடன் முன்னோக்கி நடக்க ஆரம்பித்தாள்.
நீராவியின் மூடுபடலத்தை அணிந்திருந்த ஆழமான குழியை நோக்கி, விரிந்த விழிகளுடன் கனவில் நடக்கும் ஒரு பெண்ணைப்போல அவள் நடந்தாள்.
ஹோட்டலில் பணியாற்றும் ஒரு கருப்பின வேலைக்காரன் மரத்தின் மறைவில் நின்று கொண்டிருந்தான். வெள்ளைக்காரி நீர்வீழ்ச்சியின் மரணக்குழியை நோக்கிப் போய்க்கொண்டிருக்கி றாள் என்பதைப் புரிந்துகொண்ட கருப்பின மனிதன், அவளைத் தடுத்தவாறு முன்னால் வந்து நின்றான்.
நீரில் மூழ்கி இறக்கும்போது இருக்கக்கூடிய அரை உணர்வுடன் இருந்த இளம்பெண், விழிகளை உயர்த்தி அந்த இளைஞனையே சிறிது நேரம் பார்த்தாள்.
அவளுடைய நாடி, நரம்புகள் அனைத்தும் தளர்ந்துபோய் விட்டன. ஆபத்து நிறைந்த ஒரு குழியைநோக்கி தான் செயலற்ற நிலையில் நகர்ந்து போய்க்கொண்டிருக்கிறோம் என்ற ஒரு புரிதல் அவளுடைய அடிமனதில் உண்டானது. இதற்குமுன்பு உணர்ந்திராத புதிய ஒரு ஆனந்த போதையின் வெள்ளத்தில் தான் மூழ்கி சாகப்போவதைப்போல அவள் உணர்ந்தாள்.
அப்போதுதான் புன்னகைத்தவாறு அந்த கருப்பின மனிதனின் உருவம் அவளுக்கு முன்னால் வந்து நின்றது. அவள் கெஞ்சுவதைப்போல அவனையே சற்று பார்த்தாள். ஆபத்து நிறைந்த ஆனந்தத்தின் அலைகள் வேகமாக பாய்ந்தோடிக் கொண்டிருக்கும் தன் மனம் படர்ந்து பிடிப்பதற்கு உயிர்ப்புள்ள ஒரு உருவத்தை அவள் கண்டுபிடித்திருக்கிறாள்.
மலர்ந்திருக்கும் நிலவின் வெளிச்சத்தில் புன்னகைத்தவாறு நின்றிருக்கும் கருத்த காமதேவன்! "என்ன ஒரு அழகு! என்ன ஒரு ஆனந்தம்!'' என்று இனிமையாகக் கூறியவாறு அவள் அவனை நோக்கி உணர்ச்சிவசப்பட்டு கரங்களை நீட்டினாள். மயக்கம் கலந்த தூக்கத்தில் புன்சிரிப்பு அவளுடைய உதடுகளில் அப்போதும் தவழ்ந்துகொண்டிருந்தது.
வெள்ளைக்காரியின் கட்டியணைப்பு தன்னைத் தேடிவருவதைப் பார்த்து, அந்த கருப்பின மனிதனின் மிருக உணர்ச்சிகள் எழுந்து நின்றன.
அவன் அவளைத் தன் சதைப்பிடிப்பான தோள்களில் சாய்த்து, மார்புடன் சேர்த்தணைத்து, பிசாசுத்தனமான ஒரு சிரிப்பு சிரித்தான்.
பதைபதைப்பு நிறைந்த ஆச்சாரியத்துடன் இந்தக் காட்சியை கிழவி பார்த்து உரத்த குரலில் கூப்பாடு போட்டாள்.
தங்களுடைய லீலையைத் தடைசெய்யும் வகையில் கிழவி சத்தம் போட்டதைக் கேட்டதும், கருப்பின மனிதனுக்கு வெறி உண்டாகி, அவன் தற்போதைக்குத் தன் இரையை விட்டு, உரத்து கத்தியவாறு அந்த மூதாட்டியை நோக்கித் திரும்பினான். உறுதியான தீர்மானத் துடன் நடந்தான். அவன் கிழவியை நெருங்கி, ஒரு கிழிந்த தலையணையைப்போல தூக்கியெடுத்து நீர்வீழ்ச்சியின் கீழேயிருந்த பள்ளத்திற்குள் வீசியெறிந்தான். நீராவிப் படலம் எழுந்துகொண்டிருந்த, கர்ஜித்துக்கொண்டிருந்த ஆழத்தை நோக்கி... ஒரு கூப்பாடுகூட போடாமல் அந்த கிழவி இறுதி மூச்சை விட்டாள்.
தன் தாய் மரணத்தின் பிடிக்குள் போய் மறைந்துவிட்டதைப் பார்த்ததும், அந்த இளம்பெண்ணுக்கு மூளையில் ஒரு இடி விழுந்ததைப்போல இருந்தது. நிரந்தர பொக்கிஷமென தோன்றிய அழகின் அற்புத வளையம் மங்க ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக அனைத்தும் ஒரு இருளாக மாறியது. அந்த இருட்டில் அவளுடைய சுய சிந்தனைகள் மெதுவாக மலர ஆரம்பித்தன. அதுவரை கேட்காமலிருந்த அந்த இனம்புரியாத ஆழத்தின் கர்ஜனை அவளுடைய காதுகளில் வந்து மோதின. சுட்டுப் பொசுக்கக்கூடிய யதார்த்தத்திற்குள் அவள் தலை குப்புற விழுந்தாள்.
பீமனைப் போன்ற தோற்றத்திலிருந்த கருப்பின மனிதன் வெற்றி பெற்றுவிட்ட ஒரு புன்சிரிப்புடன் கைகளை நீட்டியவாறு அவளை நெருங்கி வந்தான்- காம நெருப்பில் எரியும் ஒரு பெரிய கரிக்கட்டை!
அவள் சத்தம் எழுப்பியவாறு ஹோட்டலை நோக்கி ஓடினாள். அந்த கருப்பின மனிதனுக்கு சிறிது நேரத்திற்கு எதுவுமே புரியவில்லை. பிறகு... யதார்த்தத்திற்குள் அவனும் சற்று எட்டிப்பார்த்தான். வேறொரு பாதையில் அவனும் வேகமாக நடந்தான். நடந்த விஷயத்தை அறிந்துகொண்ட ஹோட்டலின் அதிகாரிகள் நதியின் எதிர்க்கரையிலிருந்த லிவிங்ஸ்டன் நகரத்தின் காவல்துறைக்கு ஃபோன் செய்தார்கள்.
கொலைகார கருப்பின மனிதனை காவல்துறை பலமாகத் தேட ஆரம்பித்தது. நீர்வீழ்ச்சியின் சூழலிருந்து எதிர்க்கரைக்கு தப்பிச் செல்வதற்கு ஒரேயொரு வழிதான் இருக்கிறது- ஸாம்பஸி பாலம். நீர்வீழ்ச்சியைத் தாண்டி, நுரையும் குமிழ்களும் நிறைந்திருக்க, இப்படியும் அப்படியுமாகப் புரண்டோடிக் கொண்டிருக்கும் நதியின் நீர் வேறொரு ஒடுகலான பாதாளக் குழியை நோக்கி வேகமாக ஓடுகிறது. மிகவும் ஆழமான இந்த பாறைப் பிளவுகளை ஸாம்பஸி பாலம் இணைக்கிறது.
கருப்பின மனிதன் ஸாம்பஸி பாலத்தின் மேற்பகுதியை அடைந்தபோது, எதிர்க்கரையில் ஒரு கூட்டம் போலீஸ்காரர்களைப் பார்த்தான்.
அவன் பாலத்திலிருந்து கீழே அலறிக் கொண்டிருக் கும் ஆழத்திற்குள் ஒரு குதி... குதித்தான்.