"கூழுங் குடியும் ஒருங்கிழக்கும் கோல்கோடிச்
சூழாது செய்யும் அரசு.'
-என்பார் வள்ளுவப் பேராசான்.
நடுநிலையோடு ஆட்சி செய்யாமல், தன் விருப்பம்போல் கொடுமையான காரியங்களைச் செய்பவர்களின் ஆட்சி, திவாலாவதோடு, மக்களின் ஆதரவையும் இழந்துவிடும் என்பதே இதன் பொருளாகும்.
நடுநிலை மறந்து எதிர்க்கட்சிகளை அச்சுறுத்தி அடாவடி செய்துவரும் மோடியின் பா.ஜ.க. ஆட்சிக்கு மிகப் பொருத்தமான குறள் இது. எதிர்க்கட்சிகள் மீது அதிகார அஸ்திரங்களை ஏவிக் கொடுமை செய்துவரும் மோடி அரசு, வரும் தேர்த-ல் மக்களின் ஆதரவை இழக்கும் என்பதையே இந்தக் குறள் சந்தேகம் இல்லாமல் நமக்கு உணர்த்துகிறது.
மோடியின் கனவு
நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது. நாடு முழுக்க ஏழு கட்டங்களாக தேர்தலை நடத்த, தேர்தல் ஆணையமும் களமிறங்கிவிட்டது. இந்தத் தேர்தலிலும் பா.ஜ.க. வெற்றிபெறும் என்றும், தானே மீண்டும் பிரதமர் நாற்காலியில் அமர்ந்துவிடலாம் என்றும் மோடி கனவு காண்கிறார். அதற்காக அவர் எந்த எல்லைக்கும் செல்லத் தயாராக இருக்கிறார்.
எதிர்க்கட்சிகளை எல்லாம் தங்கள் அதிகார பலத்தைக் கொண்டு நசுக்கிவிட்டால்,எந்த இடையூறும் இல்லாமல் இங்கே மீண்டும் ஆட்சி அமைக்கலாம் என்பது அவரது நப்பாசை. எனவே தான் நீதியையும் நேர்மையையும் யமுனை நதியில் தூக்கி எறிந்துவிட்டு, அதிகார துஷ்பிரயோகத்தைத் தொடர்ந்து நடத்திவருகிறார்.
எடுபிடித் துறைகள்!
அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சி.பி.ஐ. உள்ளிட்ட அரசின் புலனாய்வு அமைப்புகள் எல்லாம் மோடி படைகளாக மாறிவிட்டன.
ஒரு பக்கம், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், அடக்குமுறைகளுக்கு அஞ்சாமல் போராடிவருகின்றனர். இன்னொரு பக்கம் இனக் கலவரத்தால் மணிப்பூர் மாநிலமே பற்றி எரிகிறது. மற்றொடு பக்கம் வேலை யின்மையும் விலைவாசி உயர்வும் தேசத்தின் மானத்தை வாங்கி வருகின்றன. இதைப்பற்றி எல்லாம் மோடிக்கு எந்தக் கவலையும் இல்லை.
எனவே, அடாவடியான மோடியின் மதவாத ஆட்சியை வீழ்த்த வேண்டும் என்று, தேசிய அளவி லான எதிர்க் கட்சிகள் இணைந்து, "இந்தியா கூட்டணி' என்ற பெயரில் ஒரே திசையில் ஒரே நோக்கத்தோடு அணிவகுக்கின்றன. இந்தக் கூட்டணியில் மல்லிகார்ஜுன கார்கே தலைமையிலான காங்கிரஸ், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க., அகிலேஷ் யாதவின் சமாஜ்வாடி, லாலு பிரசாத் யாதவின் ராஷ்டிரிய ஜனதா தளம், அரவிந்த் கெஜ்ரிவாலின் ஆம் ஆத்மி, சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இந்தியா என்றாலே பயம்
தங்களுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் வலிமையோடு ஒன்றுசேர்ந்ததைக் கண்டு மோடி கும்பல் மிரண்டுபோனது. அதனால் அது "இந்தியா' என்ற பெயரைக் கண்டாலே பயந்துபோய், இந்த தேசத்தை அது பாரத் என்று அழைக்கிறது..
இந்தியா கூட்டணி வீறுகொண்டு எழுந்தால் தங்களின் சொகுசான வாழ்க்கை பறிபோய்விடும் என்று நினைத்த மோடி தரப்பு, இந்தக் கூட்டணியை உடைக்க பல வகையிலும் சதி வலை பின்னியது. ரகசிய பேரங்களில் இறங்கியது. இதன் விளைவாக, இந்தியா கூட்டணியில் இருந்த பீகார் முதல்வரும் ஜனதா தளத் தலைவருமான நிதிஷ்குமார், ஜனவரி இறுதியில்,. அதிலிருந்து வெளியேறி பா.ஜ.க. ஆதரவாளராக தன்னை அறிவித்துக்கொண்டார்.
அதேபோல் மகாராஷ்டிர மாநில முன்னாள் முதல்வரான அசோக் சவானையும் தங்கள் பக்கம் தூண்டில் போட்டு இழுத்துக்கொண்டனர்.
இவை எல்லாம் மோடியின் பயத்தையே காட்டுகின்றன.
தேர்தல் ஆணையத்திலும் தலையீடு!
தேர்தல் நியாயமாக நடத்தப்பட்டால், தங்களால் மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாது என்பதால், அதை எப்படி எல்லாம் டேமேஜ் செய்யலாம் என்று திட்டமிட்டது காவி அரசு.
அதனால், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையத்தில் காலியாக இருந்த இரண்டு ஆணையர்களின் பதவியை, தங்கள் வசதிக்கு ஏற்ப நிரப்புவதற்கு ஏற்ப புதிய சட்ட திருத்தத்தைக் கொண்டுவந்தார் மோடி. அதை வைத்துக்கொண்டு புதிய தேர்தல் ஆணையர்களாக தேர்தல் தேதி அறிவிப்பதற்கு இரண்டொரு நாட்களுக்கு முன்பாக கடந்த 14-ஆம் தேதி சுக்வீர் சிங் சந்து, ஞானேஷ்குமார் ஆகியோரை நியமித்திருக்கிறது மோடி அரசு.
இப்படி தேர்தல் நேரத்தில் அவசர அவசரமாகப் பதவியில் அமர்த்தப்பட்ட இவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கு உதாரணம், இவர்களில் ஞானேஷ்குமார் என்ற அதிகாரி, சிறுபான்மை மக்களின் மனநிலைக்கு எதிராக அரங்கேறிய, காஷ்மீருக்கு சிறப்புச் சலுகைகளை வழங்கும் 370-வது சட்டப்பிரிவை நீக்கியதிலும், காஷ்மீர் இரு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டதிலும் முக்கிய பங்கு வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதாவது மோடியின் மனநிலைக்கு ஏற்ப செயல்படும் திறமையாளர். இப்படிப்பட்டவர்கள் "மோடி மஸ்தான்' வேலையால் தேர்தல் ஆணையத்திற்குள் வந்திருக்கிறார்கள்.
வளைக்கப்படும் நீதித்துறை
நீதித்துறையையும் தங்கள் பக்கம் வளைக்க, இந்த பஞ்சமா பாதகர்கள் அஞ்சுவதில்லை. சில நீதிபதிகள் வளைந்துகொடுப்பதால், அவர்கள் ஓய்வுபெற்றதும் அவர்களுக்கான பரிசையும் வழங்க இந்தக் கும்பல் எப்போதும் தயாராகவே இருக்கிறது.
உதாரணமாக, ரஃபேல் விமான ஊழல் தொடர்பான வழக்கு உட்பட, சில வழக்குகளில் சாதகமாகத் தீர்ப்பளித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் ஓய்வுபெற்றதும், அவருக்கு ராஜ்யசபா பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதுபோல் அயோத்தி மற்றும் முத்தலாக் தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி நசீருக்கும், ஆளுநர் பதவி வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோல் ஏற்கனவே உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவத்துக்கு, அவர் ஓய்வு பெற்றதும் கவர்னர் பதவி வழங்கப்பட்டது.
இந்த வரிசையில் கல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதி யாக இருந்த அபிஜித் கங்கோ பாத்யாய, இந்த மார்ச் முதல் வாரம் பா.ஜ.க.வில் வந்து சேர்ந்தார்.
அவர் இப்போதைய தேர்தலில் மேற்கு வங்கத்தில் உள்ள தம்லுக் தொகுதியில் நிறுத்தப் பட்டிருக்கிறார்.
இதேபோல், நாட்டின் ராணுவத் தளபதியாக இருந்த வி.கே.சிங், கொஞ்சம் மோடி அரசோடு முரண்டு பிடித்துக்கொண்டிருந்தார். அவரையும் தனது வித்தைகளைக் காட்டி, சில வருடங்களுக்கு முன்பே டெல்லி சரிக்கட்டியது. இதைத்தொடர்ந்து ஓய்வு பெற்ற வேகத்திலேயே அந்த வி.கே.சிங், பா.ஜ.க. ஜோதியில் ஐக்கியமாகிவிட்டார்.
அடாவடி பாலிஸி
தேர்தலில் எளிதாக ஜெயிக்கவேண்டுமென்றால், அதற்கு வழி... எதிர்க்கட்சி வரிசையில் செல்வாக்காக இருக்கும் தலைவர்களை எல்லாம் ஒடுக்குவதுதான் என்று நினைக்கிறது டெல்லி கும்பல்.
அந்த வகையில் மோடி கும்பலுக்கு ரொம்ப நாளாக உறுத்தலாக இருந்தவர் "ஆம் ஆத்மி' அரவிந்த் கெஜ்ரிவால்.
காரணம், மோடியின் பா.ஜ.க. அரசுக்கு அவர் அடிபணிய மறுத்ததோடு, தொடர்ந்து மோடியோடு மோதி வந்தார். இப்படி பல வகையிலும் மோடிக்கு எதிராகத் தொடர்ந்து கொடி பிடித்துவந்த அரவிந்த் கெஜ்ரிவாலை நசுக்கவேண்டும் என்று திட்டமிட்டது டெல்லி.
அதற்காக முதல்கட்டமாக டெல்லியில் உள்ள ஆம் ஆத்மி அரசைக் கவிழ்க்க, அக்கட்சி எம்.எல்.ஏ.க்களை, கோடிகளைக் காட்டி விலைக்கு வாங்க முயன்றனர். அது முடியாததால், ஊழல் செய்ததாகக் கூறி, கடந்த ஆண்டே டெல்லியின் துணை முதல்வரான மணீஷ் சிசோடியாவை, சி.பி.ஐ.யை ஏவிக் கைது செய்தனர்.
இதன் பின்னும் கெஜ்ரிவாலின் குரல் அடங்கவில்லை.
இந்த நிலையில், கடந்த 16-ஆம் தேதி, நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் கெஜ்ரி வாலின் அரசியல் செயல்பாட்டை முடக்குவதற்காக, கடந்த 21 ஆம் தேதி இரவு, அதே மதுவிலக்குக் கொள்கை ஊழல் என்ற முத்திரையைக் குத்தி அவரை யும் அதிரடியாகக் கைதுசெய்திருக்கிறது அமலாக்கத் துறை. தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த ஒரு மாநிலத்தின் முதல்வ ரைக் கைது செய்வது எப்படி சரியானதாக இருக்கும்?
இதேபோல், பா.ஜ.க.வுக்கு எதிராக அரசியல் செய்து வந்த ஜார்கண்ட் மாநில முதல்வரான ஹேமந்த் சோரனை கடந்த பிப்ரவரி ஒன்றாம் தேதி, சட்ட விரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத் துறை கைது செய்திருக்கிறது.
இது மாதிரியே, பா.ஜ.க.வுக்கு எதிர்க்கடை போட்ட ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த பீகார் துணை முதல்வரான தேஜஸ்வி யாதவையும் சட்ட விரோதப் பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யும் வெறியோடு, அமலாக்கத்துறை துரத்தி வருகிறது.
இப்படி மாநில முதல்வர்களையும் துணை முதல்வர் களையும் அமைச்சர்களையும் எளிதாகக் கைது செய்து அடைக்கிறார்கள், டெல்லியால் உசுப்பிவிடப்பட்ட ஏவல்துறை அதிகாரிகள்.
தமிழகத்திலும் அடாவடி
நம் தமிழகத்தை எடுத்துக்கொண்டால், ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு வலிமையோடு காலூன்றி இருக்கிறது. இங்கு குதிரை பேரம், கவிழ்ப்பு வேலைகள் எல்லாம் வேலைக்காகாது என்பதை டெல்லி சண்டியர்கள் தெரிந்து வைத்திருக்கிறார்கள்.
அதேபோல், தி.மு.க. அரசுக்கு தங்கள் எடுபிடியான ராஜ்பவன் ரவி மூலம் சகலவிதங்களிலும் இடைஞ்சல் செய்து பார்த்து, அதிலும் தொடர்ந்து தோற்றுவருகிறது டெல்லி, இங்கே எப்படியும் தாமரையை மலர வைத்தே ஆகவேண்டும் என்று வெறியோடு வரிந்து கட்டிய மோடி தரப்பு, இங்கே பா.ஜ.க. கும்பலின் தேர்தல் வெற்றிக்கு அச்சுறுத்த லாக இருப்பவர்களில் ஒருவரான செந்தில் பாலாஜியைக் கடந்த ஆண்டே குறி வைத்தனர். எனவே, அவர் மீது அப்போதே அமலாக்கத்துறையை ஏவினர். இதைத் தொடர்ந்து அவர் தொடர்புடைய இடங்களில் ரெய்டை நடத்திவிட்டு, கடந்த ஜூன் 14-ல் செந்தில் பாலாஜியைக் கைது செய்து, சிறையில் அடைத்தனர். எங்கும் இல்லாத கொடுமையாய், கடந்த 9 மாதங்களாக ஜாமீன்கூட வாங்க முடியாமல் செந்தில் பாலாஜி சிறையில் தவித்து வருகிறார். உடல் நலிவோடு இருக்கும் அவரை, கோர்ட்டிற்கும் சிறைக்குமாக அலைக் கழித்து வருகிறது அமலாக்கத்துறை. இவர்கள் திட்டப்படி செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிபோனது. அவர் ஆற்றவேண்டிய தேர்தல் பணிகளும் முடக்கப்பட்டுவிட்டன. இதற்கெல்லாம் காரணம், அவர்களுக்கு இருக்கும் தேர்தல் பயம்.
இதோடு நிறுத்தாமல், தி.மு.க.வின் முக்கியமான அமைச்சர்கள் பலரையும் குறிவைத்தனர். அவர்கள் மீதிருந்த, தள்ளுபடியான வழக்குகளை எல்லாம் தேடிப்பிடித்தனர். அவற்றின் அடிப்படையில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியைக் குறிவைத்து, ரெய்டுகளை நடத்தி, அவர் மீது வழக்கையும் போட்டு, அவசர கதியில் அவருக்கு 3 ஆண்டுகால சிறைத் தண்டனையைக் கிடைக்கச் செய்து, அவரது பதவியைப் பறிக்கவும் வழி செய்தனர். நல்லவேளையாக உச்சநீதிமன்றம் தலையிட்டு அவரது அமைச்சர் பதவியை அவருக்கு மீட்டுக் கொடுத்திருக்கிறது.
இதேபோல் தி.மு.க.வின் சீனியர் அமைச்சர்களான துரைமுருகன், எ.வ.வேலு, ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர். உள்ளிட்ட பலருக்கும் நெருக்கடி கொடுத்தனர். இது எல்லாமே டெல்லியின் திரு விளையாடல் தான். பா.ஜ.க.வைச் சேர்ந்த ஒரு மாநில நிர்வாகியோ, தி.மு.க. அமைச்சர்கள் 17 பேருக்கு வழக்கு நெருக்கடி இருக்கிறது என்று மிரட்டும் குரலில் சொல்லிவருகிறார். ஆக, இவர்களின் நோக்கம் தேர்தல் நேரத்தில் இவர்களை எல்லாம் மூலையில் உட்காரவைத்துவிடலாம் என்ற நப்பாசைதான்.
பா.ஜ.க.வில் சேர்ந்தால் புனிதர்களாம்
இப்படி, எதிர்க்கட்சித் தலைவர்கள் மீது பாய்ந்து பாய்ந்து வழக்குகளைப் போட்டு மிரட்டிவரும் மோடி அரசு, பா.ஜ.க.வில் சேர்ந்த எதிர்க்கட்சியினரை புனிதர்களாகப் பாவிக்கிறது. உதாரணமாக- அசாம் காங்கிரஸ் அரசில் முன்பு சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹிமந்த பிஸ்வா, சாரதா சிட் பண்ட் மோசடி விவகாரத்தில் சிக்கியவர். இந்த விவகாரத்தை சி.பி.ஐ.தான் விசாரிக்கி றது. இடையில் இவர் பா.ஜ.க.வுக்குத் தாவி, அசாம் முதல்வராக பதவியில் அமர்ந்துவிட்டார். இவரை சி.பி.ஐ. விசாரணைக்குக் கூட அழைக்க வில்லை.
இதேபோல் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்த தேசியவாத காங்கிரஸ் பிரமுக ரான அஜித் பவார், சர்க்கரை ஆலை ஊழல் விவகாரத்தில் வசமாக சிக்கினார்.
இவர் பா.ஜ.க.வில் சேர்ந்து இப்போது அந்த மாநிலத் தின் துணை முதல்வராக இருக்கிறார். அவர் தொடர்புடைய ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தது. ஆனால் அந்தக் குற்றப்பத்திரிகையில் பவார் பெயர் இல்லவே இல்லை. இதெல்லாம் மோடி அரசின் மாயாஜாலங்கள்.
தமிழ்நாட்டை வட்டமிடும் கழுகு
தமிழ்நாட்டின் பக்கம் சாதாரண நேரத்தில் அதிகம் தலைகாட்டாத மோடி, தேர்தல் வருகிறது என்றதும் கழுகாய் வட்டமிடுகிறார். கடந்த ஒரு மாதத்தில் மட்டும், அடுத்தடுத்து ஐந்தாறு தடவைக்கு மேல் வந்துபோயிருக்கிறார். இன்னும் பலமுறை வந்து மக்களிடம் பொய் வாக்குறுதிகளை அள்ளித் தெளிக்கவும் இருக்கிறார். இவரது வருகைக்கு, மக்களின் வரிப்பணத்தைத் தாராளமாக வாரி இறைத்து வருகிறார்கள். இதற்காக அவர் பயணத்தில் இரண்டொரு அரசுப் பயணத்தையும் தந்திரமாகச் சேர்த்துக்கொள்கிறார்கள். தேர்தல் விதிகள் நடை முறைக்கு வந்துவிட்டதால், இனி அந்த தந்திரம் எடுபடாது.
தேர்தல் சின்னத்தை ஒதுக்குவதிலும் அடாவடி யாக மூக்கை நுழைக்கும் அவர்கள், எதிர்க்கட்சிகளில் உள்ளவர்கள் என்றால் அவர்கள் விரும்பும் சின்னத்தை நிராகரிக்கவும், அவர்கள் அணியில் இருக்கும் கட்சியினர் என்றால் அவர்கள் விரும்பும் சின்னத்தைக் கொடுக்கவுமான சித்து வேலைகளைச் செய்கின்றனர். இதனால் "நாம் தமிழர் கட்சி' சீமான் கேட்ட கரும்பு விவசாயி சின்னத்தை தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. அதே சமயம் அதே தேர்தல் ஆணையம், பா.ஜ.க. கூட்டணியில் இருக்கும் சீமான் கட்சியை விடவும் துக்கணூண்டு கட்சி யான த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னத்தை ஒதுக்கி யிருக்கிறது. தினகரனுக்கு குக்கர் சின்னத்தை ஒதுக்கியிருக்கிறது. ம.தி.மு.க.வுக்கு அவர்கள் கேட்ட பம்பரம் சின்னம் ஒதுக்காததற்கு அவர்கள் ஒரு தொகுதியில் போட்டியிடுவதை தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் காரணமாகக் காட்டியது.
வி.சி.க. 2 தொகுதிகளில் போட்டியிடுகிறது. நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் போட்டியிடுகிறதே அவர் களுக்கு ஏன் அவர்கள் கேட்ட சின்னத்தை வழங்கவில்லை என்ற கேள்வி எழுகிறது..
இப்படியாக தேர்தலுக்காக அளவு கடந்து அதிகார ஆட்டம் போடும் மோடி தரப்பிற்கு, அந்தத் தேர்தல் மூலமே முடிவு கட்டப் படவேண்டும் என்பதே நம் அனைவரின் எதிர்பார்ப்பு.
நம்பிக்கை இழக்காமல்,
நக்கீரன்கோபால்