பொதுவாக இலக்கியவாதிகள், கதை, கவிதை, கட்டுரை, நாடகம் போன்றவற்றிற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை திரைபடங்களுக்கும் அது பேசும் வசனங்களுக்கும் கொடுப்பது இல்லை. ஆனால் மேற்சொன்ன இலக்கிய வடிவங்கள் மூலம் சொல்லப்படும் கருத்தை விட, திரைப்பட வசனங்கள் மூலம் சொல்லப்படும் கருத்து, மிக மிக எளிதாக மக்கள் மனதில் போய் எளிதாகத் தைத்துவிடுகிறது.

dd

காரணம், திரைப்பட வசனம் என்பது மிக மிக வலிமையான கலை வடிவமாகும். அதனால்தான் அறிஞர் அண்ணா, முதத்மிழறிஞர் கலைஞர் உள்ளிட்ட திராவிட இயக்கத்தின் தளபதிகளான படைப்பாளர்கள் பலரும், திரைப்பட வசங்களை கருத்தாயுதமாகக் கையில் எடுத்தார்கள்.

இப்போதும் கூட சிறந்த வசனங் கள் மக்கள் மனதை எளிதாக வசப்படுத்துகின்றன.

Advertisment

தமிழ் திரைப்பட வசனங்கள் வாழ்வியல் உண்மைகளைப் பேசுவதாகவும், வாழ்க்கையைச் சொல்லித்தரும் பாடப் புத்தகமாகவும் அமைந்திருப்பதைப் புகழ்பெற்ற சில திரைப்படக் காட்சிகளின் வசனங்கள் மூலமாக இங்கு காண இருக்கிறோம்.

வாழ்க்கை நீதிகளையும் கதாபாத்திரங்களின் நியாயங்களையும் சொல்வதற்குப் பாடல் காட்சிகள் வசதியான வாகனங்கள். பாடலில் இடம் பெறுவதைப் போல அவ்வளவு வெளிப்படையாக வசனங்களில் நீதிக் கருத்துக்களைச் சொல்ல இயலாது. காட்சிகளில் இடம்பெறுகின்ற சம்பவங்களுக்கும் உணர்வுகளுக்கும் இடையே கதாபாத்திரம் போகிறபோக்கில் சொல்வதைப்போல இந்த உண்மைகளைச் சொன்னால் தான் படம் பார்ப்பவர்களுக்கு உறுத்தலாக இருக்காது. இல்லாவிட்டால் ""ஆரம்பிச்சிட்டான்கய்யா.. மேடை போட்டு பேச ஆரம்பிச்சுட்டாங்க "" என்று கமெண்ட் அடிக்க ஆரம்பித்து விடுவார்கள். சொல்ல வேண்டியதை நாசுக்கோடு லாவகமாக சொல்லத் தெரிந்தால் அந்தக் கருத்தையும் ரசிகர்கள் மகிழ்வாக ஏற்றுக்கொள்வார்கள்.

'முள்ளும் மலரும்' திரைப்படத்தில் ரஜினி, வெண்ணிற ஆடை மூர்த்தி மற்றும் சில குணச்சித்திர நடிகர்கள் ஒரு தேனீர்க் கடை பெஞ்சில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருப்பார்கள்.

Advertisment

அப்போது ஒருவர் ""அவர் இப்படி பண்ணுவார்னு நெனைக் கவே இல்லங்க..."" என்று புலம்புவார். அதற்கு இன்னொருவர் ""மனிதனுக்கு வருகிற துன்பத்துக்கெல்லாம் காரணம் என்னன்னு தெரியுமா? அவர் இப்படி பண்ணமாட்டாரு ...

bb

இவர் அப்படி பண்ணுவாருனு ஒருவரைப் பற்றி முன்கூட்டியே நாமா ஒரு முடிவு செய்து கொள்வதுதான்"" என்று பதில் சொல்வார், கதை வேகமாகப் போகும்போது கதையோட்டத்திற்கு இடையூறு இல்லாமல் இப்படிச் சில வாழ்வியல் உண்மைகளைத் தன்னுடைய படங்களில் இயக்குனர் மகேந்திரன் அங்கங்கே எழுதிச் செல்வார். அது அவரது சிறப்பு களில் ஒன்று.

ஒரு சிறுகதை அல்லது நாவலைப் படிக்கிறபோது ஒரு எழுத்தாளர் வாசகனுக்குக் கொடுக்கும் வாழ்வியல் பாடங்களை, ஒரு திரைப்படமும் தன் ரசிகனுக்கும் வழங்கமுடியும். குறிப்பாக அந்தத் திரைப்படக் கதாசிரியரும் இயக்குநரும் இப்படி வழங்க முடியும். பல முன்னோடி கள் இதை அழகாகச் செய்திருக்கிறார்கள்.

அப்படிச் செய்கிற போது, அங்கே படம் பார்க்கும் அனுபவம் என்பது ஒரு கலை அனுபவம் ஆகிறது. இலக்கிய அனுபவம் என்பதும் இதுதான். தன்னுடைய வாழ்வைத் தானே காணுகிற ஒரு அனுபவமாகவும் சில நேரங்களில் அது அமைந்து விடுகிறது. இப்படி வாழ்க்கையைச் சொல்லித்தரும், வாழ்க்கையைப் பேசும் வாழ்வியல் பாடங்களாக அமைந்திருக்கும் சில வசனங்களை நாம் காணலாம்.

'பராசக்தி' படத்தின் நீதிமன்ற காட்சியில் வழக்கறிஞர் எழுந்து சிவாஜியை பார்த்து இப்படி கேட்பார் ""உனக்கேன் அக்கறை?"" என்று.

அதற்கு சிவாஜி, ""என்னுடைய சுய நலத்திலும் ஒரு பொதுநலம் கலந்திருக்கிறது. அழுக்கைத் தின்று தடாகத்தைச் சுத்தப்படுத்துகிறதே மீன் ...

vv

அதைப்போன்று...' என்று பதில் சொல்வார். இப்படி ஒரு நீதிமன்ற காட்சியில் வழக்கு விசாரணையின் இடையே மனிதர்கள் சுயநலமாக இருப்பதில் கூட ஒரு பொதுநலம் கலந்திருக்க வேண்டும் என்பதை அழகாகச் சொல்லி இருப்பார் அந்த படத்தின் வசனகர்த்தாவான முத்தமிழ் அறிஞர் கலைஞர். முற்றிலுமாக பொது நலத்திற்காக வாழாதவர்கள் கூட தன்னுடைய சுயநலம் ஓரளவாவது பொது நலத்திற்கு பயன்படக்கூடிய வழியில் வாழ்வது சிறப்பு என்பதை அழுக்கைத் தின்று தன்னுடைய பசியை தீர்த்துக் கொண்டு தான் வாழ்கிற குளத்தைச் சுத்தப்படுத்துகிற மீனைச் சுட்டிக் காட்டிச் உதாரணமாகச் சொல்லியிருப்பார் கலைஞர். இத்தகைய வசன வித்தகத்தை அவர் திரைப்படங்களில் நிறைய பார்க்க முடியும்.

'திருவிளையாடல்' படத்தில் இறையனாருக்கும் ஏழைக் கவிஞன் தருமிக்கும் நடைபெறுகிற ஒரு உரையாடல் சுவையின் உச்சம்.

""பாண்டிய மன்னனுடைய சந்தேகத்தைத் தீர்க்கும் பாடலை நான் தருகிறேன். நீ போய் சபையில் அதைக் கொடுத்துவிட்டு பரிசிலை வாங்கிக்கொள் "" என்று இறையனாராக வரும் நடிகர் திலகம் சிவாஜி பெருந்தன்மையுடன் சொல்ல ""என்னது பரிசு உனக்கு வேண்டாமா? பணம் வேணான்னு சொன்ன எத்தனையோ பேர எனக்கு தெரியும்யா..."" என்று தருமியாக வரும் நாகேஷ் கூறுவார்.

இறைவனுக்கும் ஒரு கவிஞனுக்கும் உரையாடல் நிகழ்ந்தாலும் இரண்டு சாதாரண மனிதர்களுக்கிடையில் தினசரி நடைபெறுகின்ற பேச்சு வழக்குப் போல் அதை எழுதி இருப்பார் திருவிளையாடல் படத்தின் இயக்குனரும் வசனகர்த்தாவுமான ஏ.பி. நாகராஜன். பரிசுக்கும் பணத்துக்கும் ஆசைப்படாத மனிதர்கள் யாராவது இருப்பார்களா என்ன? பணம் என்றால் பிணமும் வாயைத் திறக்கும் என்பது பழமொழி. பணம் வேண்டாம் என்று சொல்லுகிற பலபேர் ரகசியமாக எவ்வளவு பண வேட்கை கொண்டவர்களாக இருப்பார்கள் என்பதை உலகம் பலமுறை பல விதங்களில் பார்த்திருக்கிறது. ஆகவே இறைவனைப் பார்த்து ஒரு ஏழைக் கவிஞன் இப்படிக் கூறியதும் மக்கள் அந்த நகைச்சுவையைக் கேட்டு வாய்விட்டு சிரிக்கிறார்கள். அந்த நகைச்சுவையில் இருக்கிற உண்மையும் அவர்களைத் தொடுகிறது.

எளிய மனிதர்களை வாழ்வியலைத் தொடுவது என்பது இப்படித்தான்.

'தேவர் மகன்' படத்தில் இறுதிக்காட்சியில் கதாநாயகன் கமல் பேசும் ""போங்கடா புள்ள குட்டிகள படிக்க வைங்கடா..."" என்ற வசனம் இந்த சமூகத்தின் முன்பு வைக்கப்பட்ட மாபெரும் செய்தியாக இப்போதும் இருக்கிறது. கோபதாபங்களின் காரணமாகக் கொலை செய்துவிட்டு வாழ்நாள் முழுவதும் சிறையில் வாடும் மனிதர்களுக்காகவும் காலம் முழுவதும் கண்ணீரில் வாடும் அவர்களின் குடும்பங்களுக்காவும் வருந்தி ஒரு எழுத்தாளன் வடித்த கண்ணீர்தான் அந்த வசனம். இந்த வசனத்தை எழுதியவர் கமல்ஹாசன்.

vv

'அசுரன்' படத்தின் இறுதிக்காட்சியில் கதாநாயகன் பேசும் வசனங்களும் அப்படித்தான். ""உன்கிட்ட சொத்து இருந்தா புடுங்கிக்குவாங்க... நிலம் இருந்தா புடுங்கிக்குவாங்க .... ஆனா உன்னுடைய படிப்ப யாராலயும் ஒண்ணும் பண்ண முடியாது.... போய் நல்லாப் படி... அதிகாரத்தைக் கைப்பற்று... அப்படி அதிகாரத்தை கைப்பற்றிய பிறகு, உனக்கு அவங்க செஞ்சத நீ யாருக்கும் செஞ்சுடாத...""- என்று தன் மகனிடம் கதாநாயகன் பேசும் இந்த செய்தியும், காலகட்டத்தில் குரல்.

விசுவாசம்' கதாநாயகன் அஜித் பேசும் கீழ்கண்ட வசனம் இக்கால இளம் பெற்றோர்கள் அவசியம் படிக்க வேண்டிய ஒரு பாடம்.

""உங்க குழந்தை தோத்துட்டோமே அப்படிங்கற வேதனைல சாகல சார்... இது நம்ம அப்பாவுக்கு தெரிஞ்சா என்ன ஆகுமோ அப்படிங்கற பயத்தில் தான் அவ தப்பான முடிவு எடுத்திருக்கா.... நம்ம குழந்தைங்க நம்ம நமக்காக வரல... நம்ம ஆசை... நம்ம லட்சியம் ... நம்ம கனவு... எல்லாத்தையும் அவங்க மேல திணிக்காதீங்க சார்...

அவங்களே வளரட்டும்...""

-விளையாட்டுப் போட்டியில் நம்பர் ஒன்னாக தன் குழந்தைதான் வரவேண்டும் என்று நினைக்கிற வில்லனின் குழந்தை தற்கொலை செய்துகொள்ளும்போது, இப்படிப் பேசுகிறான் நாயகன்.

திரைப்படம் ஒரு கலை வடிவம் என்பதை உணர்ந்து கொண்டால் அதை ஒரு மக்கள் சாதனமாகப் பயன்படுத்த முடியும் என்பதற்கு இந்த இரண்டு படங்களின் வசனங்களும் சாட்சியாகும்.

பாண்டிராஜ் இயக்கத்தில் வெளிவந்த பசங்க படத்தில் இடம்பெறும் ஒரு முக்கியமான வசனம் ""குழந்தைங்க கெட்ட வார்த்தையில் பேச மாட்டாங்க. கெட்ட வார்த்தை தான் பேசுவாங்க"" என்பது.

மோசமான வார்த்தைகளைக் குழந்தைகளை வைத்துக்கொண்டு பேசும்போது அதைக் கேட்டுக் கொண்டிருக்கும் குழந்தைகள் விளையாடும் போதும் பொது இடங்களிலும் அந்த கெட்ட கெட்ட வார்த்தைகளைப் பேசிப் பார்க்க விரும்புவார்கள் அல்லது பேசுகிற சூழ்நிலை உருவாகிவிடும். ஆகவே குழந்தை களை வைத்துக்கொண்டு இது போன்ற சொற்களைப் பெரியவர்கள் பேசக்கூடாது. குழந்தை களுக்கு நல்லது கெட்டது எதுவும் தெரியாது. அவர்களுக்குள் நல்லதை புகுத்தும் போது நல்லவர்களாகவும் கெட்டதைப் புகுத்தும்போது கெட்டவர்களாகவும் அவர்கள் வளர்வார்கள் . இதைத்தான் இந்த வசனம் போதிக்கிறது.

""எந்த குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே... அது நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே "" -என்ற புலவர் புலமைப்பித்தனின் பாடல் வரிகள், இங்கே நினைவுக்கு வருகிறது. மக்கள் திலகம் எம்ஜிஆருக்கான படப் பாடலின் வரிகள்தான் இவை என்றா லும் இன்றைய பெற்றோருக்குக் குழந்தை வளர்ப்பு பற்றி நடத்தப்பட்ட பாடம் போல் இது அமைந்திருக்கிறது.

'குருதிப்புனல்' படத்தில் கே. விஸ்வநாத் ஒரு காவல்துறை உயர் அதிகாரியாக நடித்திருப்பார்.

அவர் ஒரு தீவிரவாத கும்பலுக்கு காவல்துறையின் ஒரு ரகசிய தகவலைச் சொல்லும் சூழலுக்கு ஆளாகியிருப்பார் . அவருக்குக் கீழ் பணியாற்றும் இரண்டு காவல்துறை அதிகாரிகளான கமலஹாசனும் அர்ஜுனும் பேசிக்கொள்ளும் போது கமல் சொல்லுவார், ""அவருக்கு என்ன பிரச்சனையோ?""

என்று. வாழ்க்கையில் தவறு செய்கிற, துரோகம் இழைக்கின்ற ஒவ்வொருவரும் ஏதோ ஒரு நிர்பந்தத்தின் காரணமாகத்தான் அதைச் செய்ய வேண்டி இருக்கிறது என்பதைச் சொல்லும் வசனம் இது. படத்தில் வேறு இடங்களிலும் ஒன்றிரண்டு முறை இந்த உரையாடல் இடம்பெறும். சூழ்நிலை தான் மனிதனை நல்லவனாக வும் கெட்டவனாகவும் வைக்கி றது. யாரும் புத்தனும் அல்ல...

யாரும் குற்றவாளிகளும் அல்ல...

அவரவர் சூழல்தான் புத்தனையோ குற்றவாளியையோ உருவாக்குகிறது. குற்றம் புரிகிற ஒவ்வொருவரின் சூழ்நிலை யையும் விசாரணை செய்ய வைக்கிற இந்த வசனம் அழுத்தமான ஒரு வாழ்வியல் உண்மையைக் கூறுவதாக அமைந்திருக்கிறது.

அண்ணாமலை திரைப்படத்தில் அண்ணாமலையாக நடித்திருக்கும் ரஜினியின் அம்மா மனோரமா, அண்ணாமலையின் மகளிடத்தில் சொல்லுகிற ஒரு வசனம் "" அவன் சிரிச்சு வருஷமாச்சு...""

நண்பனால் துரோகம் இழைக்கப்பட்ட அண்ணாமலை இனி வாழ்வில் முன்னேற்றத்தைக் காணாமல் வேறு நல்லது கெட்டது இன்பம் துன்பம் எதையும் அனுபவிக்கக் கூடாது என்று முடிவெடுத்து ஓயாமல் உழைத்து ஓர் உயரத்தை அடைகிறான். அவனுடைய மகளோ அண்ணாமலைக்கு யார் துரோகம் இழைத்தானோ அவனுடைய மகனையே காதலிக்கிறாள்.

அண்ணாமலை மகளை அழைத்துக் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதுபோல் அறிவுரை சொல்கிறார். ஆனால் மகள் கேட்பதாய் இல்லை . ""நான் அவனை தான் கட்டுவேன் "" என்று உறுதியாகக் கூற அண்ணாமலை மகளை ஓங்கி அறைந்து விட்டுப் போகிறார். அப்போது வரும் அண்ணாமலையின் அம்மா பேத்தியிடம் பேசும்போது ""அவன் சிரித்து 30 வருஷம் ஆச்சு... "" என்கிறார். சுயமரியாதைக்காக குடும்பத்திற்காக ஒரு வைராக்கியத்திற்காக தனக்குத் தானே உணர்வுகளைக் கட்டிப் போட்டுக்கொள்ளும் மனிதர்கள் இப்படியும் இருப்பார்களா? என்று வியக்க வைக்கிற வசனம் இது. சண்முகசுந்தரம் எழுதிய இந்த வசனம், தானாய் நம் நெஞ்சில் நாற்காலி போட்டு உட்கார்ந்துகொள்கிறது.

நான் வசனம் எழுதிய ""ஆனந்தம்' திரைப்படத்தில் தொழிலைப் பற்றி நாயகன் மம்முட்டி பேசுவதைப் போல் அமைந்த காட்சிக்கான சூழல் வந்தபோது, அவ்வசனங் களை நான் இப்படி வாழ்வியல் உண்மையைப் பேசும் வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்டேன். ’தொழில்னா என்னான்னு தெரியுமா? நாணயம்... ஜனங்க நம்ம கையில கொடுக்கற நாணயத்துக்கு நாம நாணயமா நடந்துக்கணும். ரெண்டு பேர் கையிலதான் அவுங்க தராசக் கொடுத்திருக்காங்க... ஒன்னு நீதிதேவதை கையில். இன்னொன்னு வியாபாரி கையில... அந்த கௌரவத்தை நாம காப்பாத்தனும்... கல்லாப்பெட்டியில் காசு பணம் சேர்கிறது மட்டுமில்ல. கொஞ்சம் புண்ணியத்தையும் சேர்க்கலாம். சேர்க்கணும்.""

இப்படித் தொழில் செய்கிறவர்கள் தங்கள் துறைக்கு மட்டுமல்ல இந்த உலகத்திற்கு ஒரு எடுத்துக்காட்டாக விளங்குவார்கள்.

பல வருடங்களுக்கு முன், குன்றக்குடி அடிகளாரின் பட்டிமன்றம் ஒன்றைக் கேட்டபோது என்னுடைய நீண்ட நாள் சந்தேகம் ஒன்றுக்கு விடை கிடைத்தது. என்னுடைய பள்ளி நாட்களில் இருந்து ஒரு கேள்வி என் மனதில் எழுந்தபடி இருந்தது. வாழ்க்கை என்றால் என்ன? என்பதுதான் அது. இதற்கான விடையை எங்கிருந்து எல்லாமோ தேடிக்கொண்டிருந்தேன். நூலகங்களில் படிக்கும்போதும் சொற்பொழிவுகளைக் கேட்கும்போதும் தனியே சிந்திக்கும் போதும் தேடிக்கொண்டே இருந்தேன். எங்கும் சரியான பதில் கிடைக்கவில்லை.

அப்போதுதான் பட்டிமன்றம் ஒன்றைத் தலைமையேற்று நடத்த, அப்போதிருந்த தவத்திரு குன்றக்குடி (தெய்வசிகாமணி) அடிகளார் கும்பகோணத்திற்கு வந்தார். அவருடைய உரையின் இடையே வாழ்க்கை என்றால் என்ன என்று ஒரு கேள்வியை எழுப்பி னார். 'ஆஹா நம்முடைய வினா விற்கு விடை கிடைக்கப் போகிறது ' என்ற ஆர்வத்துடன் அடுத்த வரிக்குக் காத்திருந்தேன். 'வாழ்க்கை என்றால் என்ன? ' மீண்டும் அக்கேள்வியைக் கேட்டுவிட்டு விடையைச் சொன்னார். ""நாம் இருக்கும் இடத்திலிருந்து நாம் விரும்பும் இடத்திற்கு போய்ச்சேரும் ஒரு பயணம்தான் வாழ்க்கை "" என்று அவர் கூறியபோது உற்சாகமாகக் கை தட்டினேன். எனக்கான விடை கிடைத்துவிட்டது. எளிமையாகத் தோன்றினாலும் அதுதான் நான் தேடிக்கொண்டிருந்த விடை.. ஆனால் அது நான் சிந்திக்கும் போது எனக்குத் தோன்றவில்லை.

எனக்குப் பொருத்தமான விடையாக அது தோன்றியது. கல்லூரிப் படிப்பை முடித்துவிட்டு திரைப்படத்துறையில் பணியாற்ற வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த எனக்கு இந்த விடை ஒரு தெளிவைக் கொடுத்தது. நான் சென்னைக்கு போவதற்கான முயற்சிகளைத் தொடங்கினேன். எனவே நம்முடைய கேள்விக்கான பதில் தடிமனான ஒரு புத்தகத்தை படித்ததுத்தான் தெரிந்து கொள்ளவேண்டும் என்று இல்லை. காடுகளையும் மலைகளையும் சுற்றி அங்கு யாரோ ஞானிகளை சந்தித்து அவர்களிடம் இருந்துதான் பெற வேண்டும் என்பதும் இல்லை. உலக இலக்கியத்தில் இருந்து உன்னதமான பகுதிகளைக் கற்பது மூலமாகத்தான் பெற வேண்டும் என்பதும் இல்லை.

ஒரு பட்டிமன்றத்தில் இருந்து கூட அது கிடைக்கலாம். ஒரு திரைப்படம் பார்க்கும்போது கூட அது கிடைக்கலாம். பெரும் மேதைகள் என்று சொல்லப்படுபவர்களிடம் இருந்து கூட கிடைக்காத விடைகள் மிகச் சாதாரணமான மனிதர்களிடமிருந்தும் கிடைக்கும். குன்றக்குடி அடிகளார் ஒரு ஞானிதான். ஆனால் அவரிடம் தத்துவப் பாடம் படிக்கப் போய் நான் இதைக் கற்கவில்லை. அவருடைய பட்டிமன்றம் ஒன்றிலிருந்துதான் எனக்கான விடையை நான் தேடிக்கொண்டேன். இப்படி ஒரு திரைப்படத்தில் இருந்தும் உங்கள் வாழ்க்கைக்கான செய்தியை நீங்கள் பெற முடியும்.

திரைப்பட ஊடகம் மூலமாக ஒரு கருத்தை, குறிப்பாக அவற்றின் வசனம் மூலமாக ஒரு கருத்தைச் சொன்னால் அது வேறு எந்த ஊடகம் மூலமாக சொல்வதை விடவும், வேகமாகப் பரவும். ஏனென் றால் அதுதான் இன்றைய மக்கள் ஊடகம்.