மக்களுக்காகப் பாடிய கவிஞர்களில் முதன்மையிடம் பெறுபவர் மகாகவி பாரதியார். எமக்குத் தொழில் கவிதை என்பதையே தாரக மந்திரமாகக் கொண்டு வாழ்ந்த பிறவிக் கவிஞன் பாரதியார். அடிமை நாட்டில் பிறந்து, அடிமை நாட்டில் வாழ்ந்தாலும் ஆன்ம விடுதலையடைந்தவர் பாரதி. பழமையைப் பாராட்டி புதுமையைப் போற்றி வாழ்ந்தவன் பாரதி. அறிவில் தெளிவும், ஆற்றலி−ல் உறுதியும், ஆள்வினைத் திறனும் உடையவன் பாரதி. தனது படைப்புகள் வாயிலாகவும் தனது வாழ்வியல் மூலமாகவும் தனித்தன்மையை நிறுவியவர் பாரதியார். அவர்தம் வாழ்க்கை யானது சொல்லுக்கும், செயலுக்கும் இடை வெளியின்றி அமைவது. தன் தனிப்பட்ட வாழ்வில் அவர் கொண்டிருந்த கொள்கை உறுதியும், இலட்சியப்பற்றுமே அவர்தம் பொது வாழ்விலும் வெளிப்பட்டன. அவருடைய வாழ்க்கைப் பயணமும், படைப்புப் பயணமும் நேர் கோட்டிலேயே பயணித்தது. தனக்கென அமைந்த வளமற்ற வாழ்விலும், மன வளத்தோடு மிளிர்ந்தவன் பாரதி. தனது வாழ்வை இலட்சியப் பிடிப்போடும், இலக்கு வரையறையோடும் அமைத்துக் கொண்டவன் பாரதி. பண்டைத்தமிழ் மக்களின் வரலாற்றையும், தான் வாழ்ந்த காலத்தில் நிலவிய சமூக இழிநிலையையும் கண்டு மனம் வெதும்பியவர். மகாகவியின் சமூக சிந்தனைகளில் சீரிய இடம்பெறுவன பெண் விடுதலையாகும்.
பெண் களறிவை வளர்த்தால் வையம்
பேதைமை யற்றிடுங் காணீர்
என உலகம் உய்ய வேண்டுமென்றால், பெண் அறிவு பெற்றவளாக அமையவேண்டும் என விழைந்தார். இத்தகு பரந்துபட்ட சிந்தனை கொண்ட பாரதியின் பார்வையில் மகளிர்பெற்ற இடம் குறித்து பாரதியினூடாக காண்போம்.
உலகெலாம் பெருங்கனவு அஃதுளே
உண்டு உறங்கி இடர்செய்து செத்திடும்
கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கையோர்
கனவிலும் கனவாம்v என பாரதி மானிடப் பிறப்புக் குறித்து தெளிந்த அறிவு பெற்றவன். வாழ்வைக்
கனவெனக் கருதினும், இம்மாய வாழ்க்கையை மனம் போனபடி வாழ்ந்துவிட முடிவு செய் தானில்லை.
என்னைப் புதிய வுயிராக்கி- எனக்
கேதுங் கவலையறச் செய்து- மதி
தன்னை மிகத் தெளிவு செய்து- என்றும்
சந்தோஷம் கொண்டி ருக்கச் செய்வாய்
என தனக்கான யோகங்கள் சித்திக்க வரம் கேட்டவன் பாரதி. இப்படிப்பட்ட தனது வாழ்க்கையில் மானிடப் பிரிவின் ஒரு அங்கமான மகளிருக்கு அக்காலத்தில் இழைக்கப்பட்ட அடிமைத்தனத்தைக் கண்டு மனம் வெதும்பியவன். ஆண் வாழ்வதற்கு ஒரு சமூகம் வழங்கியுள்ள அனைத்து செயல்பாட்டுச் சுதந்திரங்களையும் பெண் பெறவேண்டும் என எதிர்பார்த்தவன். தனது இளம் வயது திருமணத்தை
தீங்கு மற்றிதி லுண்டென் றறிந்தவன்
செய லெதிர்க்குந் திறனில னாயினேன்
என பத்து வயது குழந்தை செல்லம்மாவை மணம் புரிந்ததை மனம் ஏற்றுக் கொள்ளவில்லையாயினும் எதிர்க்கும் திறனின்மையால் ஏற்றுக்கொண்டதாகக் கூறுகிறார். தன் திருமணத்திற்குப் பின், தந்தையின் மறைவையொட்டிக் காசியில் தனது அத்தை குப்பம்மாள் இல்லத்திற்கு பாரதி செல்கிறார்.
காசி சென்ற பாரதி புதிய உலகத்தைத் தரிசனம் செய்கிறார். சிறந்த கல்வியறிவையும், பலமொழிப் புலமையும் பெறும் வாய்ப்பினை அடைகிறார்.
அங்கு அன்னிபெசண்ட் அம்மையாரைக் கண்டு அவர்தம் பேச்சுக்களைக் கேட்கும் வாய்ப்புப் பெற்ற பாரதி, நாட்டு விடுதலைப் போராட்ட உணர்வினைப் பெறுகிறார். தேசப்பற்றினால் பாரதியின் போக்கில் ஏற்பட்ட மாற்றங்களைக் கண்டு அச்சமுற்ற உறவினர்கள், செல்லம்மாவை பாரதிக்கு அறிவுரை சொல்லத் தூண்டுகிறார்கள். பன்னிரண்டு வயது செல்லம்மாள் தனது கணவரிடம், "என் மேல் அன்பிருந்தால் உடனே புறப்பட்டு வந்துவிடுங்கள்', என வேண்டுகோள் விடுக்கிறாள். அதற்கு மறுமொழியாக பாரதி.
நான் எப்போதும் தவறான வழியில் நடப்பவன்
அல்லன் நீ இந்த மாதிரி கவலைப்படும்
நேரங்களில் தமிழை நன்றாகப் படித்து
வந்தாயானால் மிகவும் சந்தோஷமுறுவேன்
உனதன்பன் சி. சுப்பிரமணிய பாரதி
என பெண் கல்விக்கான வாயிலைத் தனது வீட்டிலேயே தொடங்கியவன் பாரதி.
சுதேசமித்திரன் இதழில் பாரதியார் பணியாற்றிக் கொண்டிருந்த 1095-ஆம் ஆண்டில் "சக்கரவர்த்தினி எனும் பெண்கள் மேம்பாட்டிற்காகத் தொடங்கப்பட்ட மாத பத்திரிகையில் ஆசிரியராகப் பணிபுரிந்தார் பாரதி.
பெண் விடுதலை பெறவேண்டும் என்றால் அவள் விழிப்புணர்வு பெறவேண்டும். விழிப்புணர்வு என்பது கவனத்துடன் செயல்படுவதற்குரிய அறிவைக் குறிக்கும். அவ்வறிவைப் பெண்கள் பெறுவதற்கு "சக்கரவர்த்தினி' இதழில் பயனுடைய தனது பங்களிப்பை வழங்கியவர் பாரதி.
அக்காலக்கட்டத்தில் வங்கத்தில் சுதேசிய உணர்வு கொளுந்துவிட்டு எரிந்தது. இத்தகு சுதேசிய உணர்வு பெருக பெண்கள் பெரும் பங்காற்றியுள்ளனர். இவ்வாறு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பாரதியார் விளக்கமாக சக்கரவர்த்தினி இதழில் எழுதுகிறார். தமிழ்நாட்டு பெண்கள் சுதேசிய உணர்வு கொள்ளுமாறு தூண்டுகிறார்.
"சக்கரவர்த்தினி இதழின் முகப்பில் "மாதர் அபிவிருத்திக்கெனத் தொடங்கப்பட்டது' பிரசுரிப்பது வழக்கம். இப்பத்திரிகையைக் குறித்து வாசகி ஒருவர் "புத்தர் ராஜாங்கத்தை விட்டு துறவு பூண்டதும், விவேகானந்தர் சந்நியாசம் வாங்கியதும், இல்லறத்தை விட்டு பிச்சைக்குப் புறப்பட்ட விஷயம், இதை யெல்லாம் எழுதிக் கொண்டிருந்தால் பெண்களுக்கு என்ன அபிவிருத்தி ஏற்படும்' என நேரில் வினவினார்.
"மேற்படி மாது சொன்னது சரி, நான் செய்தது பிழை' என்று ஒப்புக்கொள்கிறார் பாரதி. "இந்த நிமிஷமே மாதர்களுக்கு அர்த்தமாகக்கூடிய விஷயங்களை, அவர்களுக்கு அர்த்தமாகும் நடையிலேயே எழுதவேண்டும் என்று நிச்சயித்து விட்டேன்' என்கிறார். சாதாரண வாசகி ஒருவரின் கருத்தை மனதில் கொண்டு தனது தவறை வெளிப்படையாக ஒப்புக்கொண்டு, அவர்கள் விரும்பும் வண்ணம் செய்தி வெளியிடத் துணிந்த பாரதியின் மாதர் போற்றும் பண்பு மதித்தற்குரியது.
1905-ஆம் ஆண்டு வேல்ஸ் இளவரசரும், அவர் மனைவியும் நமது நாட்டிற்கு விரிவான சுற்றுப்பயணம் மேற்கொண்டனர். சென்னை மாகாணப் பெண்கள் அவர்களை வரவேற்கும் பணியில் ஈடுபட்டனர். அது போழ்து சக்கரவர்த்தினி இதழில் பாரதியார்.
"மாதர்கள் ஒழுங்குகூடித் தாமாகவே ஓர் பொது நன்மை
பற்றிய காரியத்தை ஏற்று நடத்துவது பெருமைப்
படுத்துவதற்குரிய விஷயமே என்றாலும், இவ்விஷயத்தில்
மிகுதியான பணத்தை வீண்செலவு செய்வது
தகுதியாக மாட்டாது.
............................
ஆதலால் இளவரசியார் வரவின் அறிகுறியாக
ஹிந்து மாதர் ஸ்கூல் ஒன்று ஸ்தாபனம்
செய்யுமாறு பிரயத்தனிக்கும்படி பிரார்த்தனை
புரிகிறோம்.
என்று உபகாரங்களுக்கு ஆகும் செலவுகளைக் குறைத்து, மாதர்கள் செயல்திறன் மிக்கவர்கள் என்பதை நிலைநாட்ட வேண்டும் என்றும், பெண்களின் அறிவு வளர்ச்சி மேம்பாட்டிற்காகக் கல்விச்சாலை நிறுவவேண்டும் என்றும் நடைமுறை எதார்த்த சிந்தனையை வலி−யுறுத்தினார்.
மேலும், வேல்ஸ் இளவரசர் வருகையின்போது, அவரை வரவேற்கும் முகமாக வெளியிடப்படும் பாடலாக, பெண்மணி அசலாம்பிகை அம்மையார் இயற்றிய பாடலையே தேர்ந்தெடுத்தார்.
!................................. பூவை ஸ்ரீகலி−யாண சுந்தர முதலி−யார், பண்டித வெங்கட்ட ராமைய்யர், இப்பத்திரிகை ஆசிரியர் முதலி−ய அநேகர் செய்யுள் எழுதி இருக்கிறார்கள்.
இவையனைத்தினும் பண்டிதை அசலாம்பிகை எழுதி இருக்கும் பாடல் எளிதாயும் சுவையுடையதாயும் இருப்பது பற்றியும், பெண்மணி எழுதி இருக்கும் சிறப்புப் பற்றியும் அதனைப் பதிப்பிக்கின்றோம்.' எனப் பெண் சமத்துவத்தைச் சரியான இடத்தில் நிலைநாட்டியவர் பாரதியார்.
வேல்ஸ் இளவரசியாரின் எளிமையான தோற்றம் பாரதியைக் கவர்ந்தது. நம் நாட்டு மாதரும் எளிமை, ஆடம்பரமின்மை போன்ற பண்புகளைக் கைக்கொள்ள வேண்டுமென்றும், நகைப்பைத்தியம் உள்ளிட்ட பைத்தியங்களினின்றும் மகளிர் வெளிவர வேண்டும் என்றும் விழைந்தவர் பாரதியார்.
மேலும் சக்ரவர்த்தினி இதழில்
"மாதர்கள் அடிமைகளாக நிற்ப,
ஆடவர் சுயாதீனம் அடைதல் இயலாது' என்றும்
சுயாதீனம் என்றால் ராஜாங்க
சுயாதீனம் என்பது மட்டும் பொருள் இல்லை.
அபிவிருத்திக்கு முக்கியக் காரணமாகிய அறிவுச் சுயாதீனம்
என்பதே முக்கியப் பொருள் ஆகும்'
என்று பெண்கள் முன்னேற்றமே நாட்டு
முன்னேற்றத்திற்கு அடிப்படை என்றும் அறிவுறுத்தியவர்.
இளம் விதவையான ஆர்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் பிரசிடென்சி கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றதையும், அவ்வாறு அவர் கல்லூரியில் பயிலும் காலங்களில், அவர் கருத்துக்களை வெளியிடும் களமாகவும், "சக்ரவர்த்தினி' இதழைப் பயன்படுத்தினார். மேலும், தேவதாசி ஒழிப்பு முறையை ஒழிப்பதில் தலைநின்றவரான டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி, முதல்பெண் மருத்துவரானபோது தம் இதழில் பாராட்டுத் தெரிவித்தார். இவ்வாறு சமூகத்திற்குச் சரியான மாதர்களை இனங் கண்டு
அடையாளப்படுத்துவதில் பாரதியின் தீர்க்க தரிசனத்தை தரிசிக்கலாம்.
1906-ஆம் ஆண்டு கல்கத்தாவில் நடைபெற்ற காங்கிரஸ் மகாசபையின் கூட்டத்தில் பாரதியார் ஆர்வத்துடன் பங்கேற்று எழுச்சி பெற்றார். அது போழ்து, சுவாமி விவேகானந்தரின் சீடரான சகோதரி நிவேதிதா தேவியை அந்நகரில் தரிசனம் செய்து ஆசியும், அருளுபதேசமும் பெற்றார். சகோதரி நிவேதிதா வங்கப் பெண்களிடத்து சுயராஜ்ஜிய தாகத்தைப் பெரிதும் வளர்த்தவர். பெண்களின் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறை கொண்டு பாடுபட்டவர். இத்தன்மையைக் கொண்டிருந்த சகோதரி நிவேதிதையை பாரதி தனது குருமணியாக ஏற்றுக்கொண்டார்.v அச்சந்திப்பின்போது பாரதி தனது மனைவியை உடன் அழைத்து வராமையைச் சுட்டிக்காட்டிப் பெண்களுக்குச் சம உரிமையும், தகுந்த கல்வியும் கொடுக்காவிட்டால் சமூகம் எப்படி சீர்திருத்தம் பெறும்' என நிவேதிதா தேவி கேட்ட கேள்வியே பாரதியின் உத்வேகமான பெண்ணுரிமைப் போராட்டத்திற்கு முதல் காரணமாகும்.
இளவயதிலேயே பாரதி கொண்டிருந்த பெண்கல்வி, சுதந்திர எண்ணம், அரசியல் மறுமலர்ச்சி, சமூக சீர்திருத்தம் உள்ளிட்ட கோட்பாடுகள் யாவும் நிவேதிதா தேவியை தரிசனம் செய்ததன் மூலம் புதிய உயிர்ப்புப் பெற்றது.
பாரதியின் புதுவை வாசத்தின்போது அங்குள்ள பெண்களை ஒருங்கிணைத்துப் பெண்ணுரிமை இயக்கப் பாடலைத் தமிழினில் மொழிபெயர்த்துத் தன் மகள் சகுந்தலா பாரதியைக் கொண்டு அப்பாடலை மேடையில் பாடச்செய்தார்.
பாரதியார் தனது மகள் சகுந்தலா பாரதிக்கு எழுதியதே "பாப்பா பாட்டு' ஆகும். இப்பாடல் முழுமையையும் குழந்தைப்பருவத்திலி−ருந்தே எப்படி ஒரு பெண் குழந்தை வீரமாகவும், விவேகமாகவும் வளர வேண்டும் என்பதற்கான வழியை காட்டிச்செல்கிறது. பெண் குழந்தைகளை உரிமைகளற்றவர்களாய் வளர்த்து வந்த அக்காலகட்டத்தில்
பாதகஞ் செய்பவரைக் கண்டால்- நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா
மோதி மிதித்துவிடு பாப்பா- அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா
என வீராவேசமான குழந்தை உருவாக்கத்திற்கான வழிவகை காட்டுகிறார்.
பாரதியார் "அம்மாக்கண்ணு பாடல்' எனும் தலைப்பில் எழுதப்பட்ட பாடலி−ன் பின்னணி பாரதியாரின் உள்ளப் பாங்கினை வெளிப்படுத்து வதாகும். பாரதியாரின் புதுவை நகர் வாழ்க்கையில் அவரது இல்லத்தில் பணிப்பெண்ணாகப் பணிபுரிந்தவர் அம்மாக்கண்ணு. பாரதியாரின் குடும்பத்தில் ஒருவராகவே விளங்கி, அவரது துன்ப நிலைகள் அனைத்திலும் தோள்கொடுத்து நின்றவர்.
ஒருமுறை பாரதியார் தனது இல்லத்துப் பூட்டின் சாவியைத் தொலைத்துவிட்ட நிலையில் அம்மாக்கண்ணு தனது கைகளாலேயே அதனைத் திறந்துவிடுகிறார். அப்போது பாரதி பாடியதே.
"பூட்டைத் திறப்பது கையாலே -நல்ல
மனந்திறப்பது மதியாலே'
எனத் தொடங்கும் பாடல். பணிப்பெண்ணாக இருந்தாலும் தனது வரலாற்றில் அவருக்கும் ஒரு இடம் கொடுத்த பான்மை பாராட்டத்தக்கதன்றோ!
பாரதி இந்நாட்டுப் பெண்களைப் புதுமைப் பெண்களாய்க் காணவேண்டும் எனக் கனவு கண்டவர். பெண்ணடிமைத்தனம் இடையில் வந்ததென்றும், ஆதிகாலத்தில் பெண்கள் அனைத்து உரிமையும் பெற்று விளங்கினர் என்பதையும்,
"புதுமைப் பெண்ணிவள் சொற்களும் செய்கையும்
பொய்மை கண்ட க−க்குப் புதிதன்றிச்
சதுமறைப்படி மாந்த ரிருந்த நாள்
தன்னி லேபொது வான வழக்கமாம்
........
முதுமைக்காலத்தில் வேதங்கள் பேசிய
முறைமை மாறிடக் கேடு விளைந்ததாம்'
எனத் திறம்பட மொழிகிறார்.
சமுதாயத்தில் "எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி வாழிய நிலனே' எனும் ஔவையின் புறநானூற்று வரிகளை அப்படியே வழிமொழிந்து.
"ஆணெல்லாம் கற்பைவிட்டுத் தவறு செய்தால்
அப்போது பெண்மையுங்கற் பழிந்திடாதோ
நாணற்ற வார்த்தை யன்றோ? வீட்டைச் சுட்டால்
நலமான கூரைதான் எரிந்திடாதோ'
என ஆடவர் ஒழுக்கமே சமூக ஒழுக்கத்திற்கு அடிப்படை என்கிறார்.
"நீரின்றி அமையா உலகென'
வள்ளுவப் பேராசான் கூற்றுக்கேற்ப,
"பெண்ணுக்கு விடுதலை நீரில்லை யென்றால்,
பின்னிந்த உலகினிலே வாழ்க்கையில்லை'
என்கிறார்.
மகாத்மா காந்தியடிகளை அரிச்சந்திரன் நாடகம் பக்குவப்படுத்தியது போல, பாரதியின் இளம் பருவத்தில் அவர் கண்ணுற்ற "திரௌபதை துகிலுரிதல் சரிதை' அவர் மனதை மிகுந்த பாதிப்பிற்கு உள்ளாக்கியது இதுவே பின்னாளில் "பாஞ்சா− சபதம்' குறுங்காப்பியத்திற்கு வழிவகுத்தது.
ஆயிரங்களான நீதி அவை உணர்ந்த தருமன் தேயம் வைத்திழந்ததை, சிறியர் செய்கை எனச் சாடு கிறார். பாஞ்சாலி−யை பகடையாட்டத்தில் பணயமாக வைத்திழந்த பின் பாஞ்சா−யை அழைக்கச் சென்ற சாரதியிடம்.
.............
வல்ல சகுனிக்கு மாண்பிழந்த நாயகர்தாம்
என்னை முன்னே கூறி இழந்தாரா? தம்மையே
முன்ன மிழந்து முடித்தென்னைத் தோற்றாரா'
எனத் தன் உரிமையை நிலைநாட்டக் கேட்கிறாள். பின்,
நாயகர் தாந்தம்மைத் தோற்றபின் -என்னை
நல்கும் உரிமை அவர்க்கில்லை- புலைத்
தாயத்தி லேவிலைப் பட்டபின் -என்ன
சாத்திரத் தாலெனைத் தோற்றிட்டார்- அவர்
தாயத்தி லேவிலைப் பட்டவர்- புலிவி
தாங்குந் துருபதன் கன்னி நான் -நிலை
சாயப் புலைத்தொண்டு சார்ந்திட்டால் -பின்பு
தார முடைமை அவர்க்குண்டோ?
என தாயத்திலே தன்னை இழந்த தருமனுக்கு என் மீது எவ்வுரிமையும் இல்லை. நான் துருபதன் மகள் என ஆவேசமாக அறிவிக்கிறாள் பாரதியின் பாஞ்சா−.
பாரதி கண்ட கனவுகளூடாகச் சிந்தித்தோம் என்றால் இன்று மகளிர் குறித்த பாரதியின் கனவுகள் நிறைவேறியுள்ளதா? என்பது கேள்வியே. பாரதியின் கனவுகள் பெண்ணின் அறிவாற்றலுக்கே முதன்மையிடம் வழங்கியது. பெண் தன் அகமன ஆசைகளின்றும் விடுபடும்போதுதான் பெண்ணிற்கான பூரண விடுதலை கிடைக்கும் என பாரதி நம்பினார். அந்நம்பிக்கையை நாம் இன்று சீர்தூக்கிப் பார்த்தோமேயானால் பாரதியின் நம்பிக்கை நட்சத்திர நாயகிகளாகிய நாம் ஆற்ற வேண்டிய கடமைகள் இன்னதென்று தெளிவாக விளங்கும்!