பாரதியின் எண்ணங்களுக்கு அடித்தளமாகப் பண்டைய இந்திய இலக்கியப் பின்னணி மட்டுமின்றி மேலைநாட்டு இலக்கியத் தாக்கமும் இருந்துள்ளது. மேலைநாட்டு நூல்களின் பயிற்சி அவருக்குப் புதுப் புது கோணங்களில் இலக்கிய உணர்வுகளை வளர்க்கச் செய்திருக்கிறது என்பதன் அடையாளங்களில் ஒன்று அவர் எழுதிய ஞானரதம். அது ஒருவகையான புதுமை இலக்கியமாகவே கொள்ளத்தக்கது. தமிழில் அதுவரை இல்லாத ஒரு புதிய வகை இலக்கியம் அது. கனவும் கற்பனையும் கலந்து வெற்றுக் கற்பனையாக (Fantacy)எழுந்த சில நூல்கள் பாரதி காலத்திலேயே முகிழ்த்தன.

வெற்றுக்கற்பனையில் அ.மாதவய்யாவின் திரௌபதி கனவு, வ.ரா.வின் கோதைத் தீவு போன்றவை பாரதி காலகட்டத்தவை. இருப்பினும், அவற்றிற்கு இல்லாத ஒரு தனித்திறனை ஞானரதத்தில் காணமுடிகிறது. புனைவியல் பாங்கினதாக அது திகழ்ந்தாலும் பாரதியின் பன்முக எண்ணங்களின் வெளிப்பாடாக அது விளங்குகிறது. அது போலப் பாவேந்தரின் சஞ்சீவி பருவதத்தின் சாரல் என்ற பாவியமும் பாவேந்தரின் எண்ணங்களுக்கு ஒரு வடிகாலாக விளங்குகிறது.

ss

இவ்விரண்டிலும் காணப்படும் பொதுக்கருத்தினைப் பல வகைகளிலும் அணுகமுடிகிறது. குயில்பாட்டோடு சஞ்சீவி பருவதத்தின் சாரலை ஒப்பிட்டுக் கட்டுரைகள் பல வெளிவந்துள்ளன. ‘ரதத்’தோடு ‘சாரலை’ ஒப்பிடும் சூழல் உள்ளதா என்பதனை ஆராயும் சிறு முயற்சியே இக்கட்டுரை. அண்மையில் அமரரான ஆங்கிலப் பேராசிரியர் கா.செல்லப்பன் ஞானரதத்தைக் கீட்சு எழுதிய ஒரு பாவியத்தோடு ஒப்பிட்டுக் கட்டுரை வரைந்துள்ளார்.

பாரதியின் ஞானரத்திலும், பாவேந்தரின் சஞ்சீவி பருவதத்தின் சாரலிலும் உள்ள ஒற்றுமையை இக்கட்டுரை விளக்குகிறது. இவ்விரண்டு படைப்புகளும் நாடு விடுதலை அடையும் முன்பு எழுதப்பட்டவை. பாரதியின் முதல் உரைநடைக் கதை ஞானரதம். பாவேந்தரின் முதற்காப்பியம் சஞ்சீவி பருவதத்தின் சாரல். இவ்விரண்டிலுமே மேலை நாட்டுத் தாக்கம் உண்டு.

இவற்றின் அடிப்படையான கருப்பொருள் வெவ்வேறானவை. சூழ்நிலைகளும் அப்படியே. ஞானரதத்தைப் பாரதி ‘விநோதம்’ என்றே குறிப்பிடுவதிலிருந்து அது ஒருவகையில் வெற்றுக் கற்பனை என்ற அளவில் அவர் அவ்வாறு சிந்தித்திருக்கலாம். புனைகதை என்ற அளவிலும் இதனைக் கருத இயலாவாறு அதன் போக்கு உள்ளது.

பாரதி இதனை எழுதுவதற்கு உரிய நோக்கம் யாது எனத் தெரியவில்லை. ஆனால் பாவேந்தருக்கோ சில அடிப்படையான நோக்கம் இருந்திருப்பதாகவே தெரிகிறது. இவ்விரண்டுமே கற்பனை வடிவம் கொண்ட பயண உலகைக் காட்டுவன. கற்பனை வழி புது உலகைக் காணவிழைகின்றன. விண்ணை நோக்கிச் செல்வதற்கு உரிய தெய்விக இரதமாக விளங்குவது ஞானமாகிய இரதம். அண்டை நாட்டை விண்ணில் இருந்து பார்த்தபடி சில கருத்துகளை எடுத்துரைக்கக் காரணமாகிறது ‘இரதம்’ ‘சாரல்’. இரண்டுமே புதிய உலகுக்குச் சென்று வருவதான புனைவுச்சித்திரம். நூல் தலைப்புகள் இரண்டுமே கற்பனைக்கே உரிய அழகிய சொல்லாடலைக் கொண்டவை. மண்ணுலக ஆசை விண்ணில் பறக்குமாறு அமைந்த பாரதியின் படைப்பு கற்பனை வானில் சிறகடிக்கிறது. பாவேந்தரிலோ பொய்யுரைத்த கற்பனையிலிருந்து மீண்டு மண்ணில் ஓர் உண்மையை வேரூன்ற முயல்கிறது.

இரதத்தில், அறிவுப் படிமம் காட்சிகளை விரிக்கிறது. சாரலில், கனவும் நனவும் கை கோத்தபடி கற்பனையும் உண்மையும் ஒரு சேர இயங்குவன. கற்பனையாக விண்ணில் பறந்தாலும் மறுபடி மண்ணுலகிற்கே வந்தடைவதை இருநூல்களும் தொடக்கமும் முடிவுமாகக் கொண்டுள்ளன. உண்மை வாழ்வு எதார்த்தனமானது என்பதை மெய்ப்பிக்குமாறு இரண்டிலும் காட்சிகள் வந்துபோகின்றன. மாயை, உண்மை ஆகிய இரண்டும் ஒன்றையொன்று தொடர்புபடுத்த வருவன போலமைந்து இறுதியில், அவை இருவேறு துருவங்கள் என்பதைத் தெளிவுபட விளக்குவதற்கு இருநூல்களிலும் சான்றுகள் உள்ளன.

ஞானரதத்தில் அவை இரண்டும் சம்பங்கு வகிக்கின்றன. அந்த நூலில் மாயத்தோற்றம் சற்றே தூக்கலாகத் தெரிந்தாலும், மண்ணுலகில் உண்மை கால்கொண்டு நிலையான காட்சியை உணர்த்தி நிற்கிறது. சாரலில் பொய்ம்மையான மாயக் கற்பனைகள் தூக்கி எறியப்பட்டுப் பகுத்தறிவு நிலைநாட்டப்படுகிறது.

11

இன்பமும் காட்சியும், மண்ணுலகின் இருப்பும் உண்மை என்பதுபோல இரண்டிலும் கட்டமைக்கப்பட்டுள்ளன. பொய்ம்மையிலிருந்து உண்மைக்குத் திரும்பு வதற்கு உரிய தூண்டுகோலாக அறிவு வேண்டப்படுகிறது. இதனுடைய வார்ப்பில் பொய்ம்மை, உண்மை ஆகியவற்றிற்கு இடையே உண்மையைத் தூண்ட அறிவின் தேடல் தேவை யாகிறது. அறிவைத் தூண்டி உண்மைக்கு இட்டுச் செல்லும் உந்து சக்தியாக இவ்விரு நூல்களிலும் பெண்களே விளங்குகிறார்கள். கதைத் தலைவர்கள் பெண்மையாலேதான் ஒளி பெறுகிறார்கள்.

அந்த உந்து சக்திக்குக் காதலின்பம் துணை செய்கிறது.

ஞானரதத்தில் கந்தர்வ லோகப் பெண்ணான பருவதகுமாரி, கவிஞரை அழைத்துக் கொண்டு பறக்கிறாள். அவள் வழியே காட்சிகள் கவிஞனுக்கு உணர்த்தப்படுகின்றன. கருத்து வெளிப்பாட்டிற்குக் கவிஞனோடு துணை செய்கிறாள் பருவத குமாரி. கவிஞனுக்கு அவளது பேச்சு அறிவு நிலையை அறிதற்கு வழிவகுக்கிறது. பேச்சின் தத்துவம் கவிஞனது அறிவின் சாளரங்களைத் திறந்து வைத்து, அவன் தெளிவதற்கு வாய்ப்புத் தருகிறது. அவள் வழியே உலகியலை அறிந்து கொள்கிறான்.

உலகத்தில் வாழ்வோர் சோற்றுக்கும் ஆடைக்குமாகப் பொய் பேசுகிறார்கள். வஞ்சனை செய்கிறார்கள்.நடிக்கி றார்கள். ஏமாற்றுகிறார்கள். திருடுகிறார்கள்... என்பன போன்ற கருத்துகள் அவளால் உணர்த்தப்படுகின்றன. பருவத குமாரி வாயிலாக மனித வாழ்க்கையில் என்ன நிகழ்கிறது என்பது கந்தர்வலோகம் வழியே பாரதியாரால் புலப்படுத்தப்பெறுகிறது.

கந்தர்வ உலகில் பருவத குமாரியிடத்துக் காதல் கொள்கிறான் கவிஞன். கடைக்கண்ணால் பார்த்து அவளிடத்து மயக்கமும் மோகமும் கொள்கிறான். முத்தங்களால் மோகித்து உணர்வில், உயிர்ப்பில் இன்பம் காண்கிறான்.

உயிர் இதழிலே தண்டனை நிறைவேற்றினேன்....

இதழோடு இதழ் பொருந்திப் பல நிமிஷங்கள் கலந்திருந்தோம் -கவிஞன் பருவத குமாரியிடத்துக் கொண்ட காதல் மயக்கத்தை வெளிப்படுத்தும். வரிகள் இவை. உயிர்ப்பின் திளைப்பில் கலந்த உணர்வின் எல்லை அது..

சஞ்சீவி பருவத்தின் சாரலில் குப்பன் வஞ்சியின் நெஞ்சில் இடம் பிடித்ததோடு, அவளது கடைக்கண் பார்வையின் மயக்கத்தில் மாமலையும் கடுகாகும் சூழ்நிலையை ஏற்படுத்திக் கொள்கிறான். அவளின் அன்புக் கட்டளையை நிறைவேற்றி முத்தங்கள் பல பெற்றுக் கண்ணாடிக் கன்னத்தைப் புண்ணாக்கிவிடும் அளவிற்கு உன்மத்தம் அடைகிறான். உண்மையான இன்பத்தில் திளைத்து மகிழ்கிறான்.

பருவத குமாரியின் வார்ப்பில் உருவானவளாக வஞ்சியைக் கருதலாம். கந்தர்வப் பெண்ணான பருவத குமாரி, கவிஞனின் அறிவாற்றலைத் தூண்டிவிடுபவளாகப் படைக்கப்பட்டுள்ளாள். அறியாமை யிலும் மூடநம்பிக்கையிலுமாக உழன்ற குப்பனுக்கு அறிவும் துணிவும் ஆற்றலும் தருபவளாகவும், அவனது பகுத்தறிவைத் தூண்டி உண்மை உலகம் எது என்பதனை உணர்த்துபவளாகவும் உள்ளாள் வஞ்சி.

பெண்ணடிமை தீரு மட்டும் பேசும் திருநாட்டில் மண்ணடிமை தீருவது முயற்கொம்பே -எனப் பேசும் வஞ்சி, அறிவு சார்ந்தவளாய் வாழ்க்கையில் தளராத நம்பிக்கை உள்ளவளாய், துணிவும் தன்னம்பிக்கையும் தருபவளாய்ப் படைக்கப்பட்டுள்ளாள். குப்பனின் அறிவுக்கும் ஆற்றலுக்குமான தூண்டு சக்தி அவள். பொய்ம்மையை எடுத்துக்காட்டி உண்மையை நிலைநாட்டும் புதுமைப் பெண்ணாகவே வஞ்சி உள்ளாள். அதே சமயத்தில் தனது உரிமையை நிலைநாட்டிக்கொள்ளவும் தவறவில்லை. சாரல் மீதேறி மூலிகைகளைப் பறிப்பதற்குக்கூட அவள் தயங்கினாளில்லை.

உலகியலில் ஆற்றவேண்டிய கடமையையும் பொறுப்புணர்ச்சியையும் அவள் பால் இருத்தலைக் காணமுடியும்.

இவற்றில் ராமனெங்கே! ராமன் அருளெங்கே சஞ்சீவி மாமலையைத் தூக்குமொரு வல்லமை எங்கே? கொஞ்சமும் உண்மை இருந்தால்நாம் பிஞ்சுகள்போல் வாடிப் பிழைப்பு அரிதாகி அடிமையாய் வாழோமே -என்றுரைக்கும் திறம் பெற்றிருப்பவள் அவள்.

அறிவின் ஆற்றலைப் பெண்ணிடமிருந்து பெற்றுக் கொள்வதாகக் கருதிய பாரதியும், பாரதிதாசனும் பெண்ணைச் சக்தியின் வடிவமாகக் கண்டுணர்ந்துள்ளனர். அவர்தம் ஏனைய பாடல்களில் சான்றுகள் உள்ளனவெனினும், இவ்விரு நூல்களில் அழுத்தமான அச்சிந்தனையைக் காணமுடிகிறது.

அவ்விரு கவிஞர்களுமே பெண்மையைப் போற்றிக் கூறியுள்ளனர். அவளைப் புரட்சிப் பெண்ணாகவே காட்டவேண்டும் என்ற வேட்கை கொண்டவர்களாகவே இவ்விரு கவிஞர்களும் இருந்திருக் கின்றனர்.

கவிஞனிடம் மனத்தைப் பறிகொடுத்த பருவத குமாரி சிறிது நேரமே ஞானரதத்தில் உலா வந்தாலும், கவிஞனுக்கு உலகியல் உணர்த்துகிறாள். வஞ்சியும் அவ்வாறே! அவர்கள் இருவருமே அறிவுக்குரிய அடையாளங்களாகத் திகழ்கின்றனர் என்றே எண்ணத் தோன்றுகிறது. பருவத குமாரி, கவிஞனுக்கு அறிவுரை நல்கியது போல, வஞ்சி குப்பனிடம் பொய்ம்மைக்கு எதிரான போக்கை எடுத்துச் சொல்லி அறிவுத்தாகத்தை -பகுத்தறிவை ஊட்டுகி றாள்.

“சாதாரணக் காதலைப் புராணிய சூழலிலிருந்து பிரித்து இயற்கைச் சூழலோடு இணைத்து இயற்கையாகப் பாடுகின்ற இயற்கையியக் கவிதை” எனச் சஞ்சீவி பருவத்தின் சாரலை மதிப்பிடும் கா.செல்லப்பன், பாரதிதாசன் காதலை இலட்சிய ரீதியாகப் பார்க்காமல் சீவனுள்ள உணர்வாகக் காண்கிறார். இக்கருத்தின் எதிரொலிக்கு ‘முத்தம் கொடுத்து முழுநேரமும் தொலைத்தாய்’ என்பதும், ‘அன்பு மிகுந்தே அழகிருக்கும் நாயகரே இன்பமும் நாமும் இனி’ என்பதும் காரணங்களாக இருக்கின்றன. “வஞ்சி, குப்பன் காதலில் புராணியப் போர்வை களையப்பட்டு, அது இயற்கையாக உணரப்படுவதாகக் காட்டுவதோடு, மனிதம் மூட நம்பிக்கைப் போர்வையைக் களைந்து, அறிவையும் அன்பையும் தன் இயற்கையாக உணர்கிறது” என்றும் கா.செல்லப்பன் கருத்துத் தெரிவிப்பார்.

பாரதியிலே கவிஞன் பருவத குமாரியிடம் கொண்டிருந்த காதல் மயக்கம் நிழலாடும் நிறைவுக் காட்சியாகிக் கணநேர இன்பமாகக் கதையில் முடிகிறது. பாரதிதாசனிலோ அது என் நெஞ்சம் உன் நெஞ்சம் என்ற முழுமை நிலையடைந்து முழுநிறைவு அடைகிறது. எனவேதான் பொய்ம்மையும், மாயக்கனவும் அறிவாகிய விழிப்புணர்ச்சியால் விடுபடவேண்டும். அதற்கு ஆக்கமும் ஊக்கமுமாக இருந்து அறிவைத் தூண்டிவிடும் உந்துசக்தியாகப் பெண்மை திகழவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் பாரதி வழியே பாரதிதாசன் இயங்கியுள்ளார் எனலாம்.

ரதமானது கவிஞரை ஏற்றிக் கொண்டு உபசாந்தி லோகம், சத்தியலோகம், கந்தர்வலோகம், தருமலோகம் ஆகியவற்றைக் காட்டி வருகிறது. சாரலில் மூலிகை, அடுத்த நாட்டவர் பேசுவதைக் காணச் செய்கிறது. இத்தாலி, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மக்கள் எண்ணங்களைச் சாரலில் இருந்தே கேட்கச் செய்கிறது.

பிற நாட்டினர் பேசுவதைக் கேட்கப்போகும் தருணத்தில், மனிதம் பாழ்படக் காரணமாகும் புராணியக் கதைகளில் தலைவன் சிந்தை செலுத்தப் போய் அவன் கொண்ட அச்சவுணர்வால் காதலிக்கத் தயங்கினாள் வஞ்சி. அவனுக்கு உண்மை எது என்று அறிவுறுத்தும் வஞ்சி, ‘மக்கள் உழைப்பில் மாறாத நம்பிக்கை கொள்ள வேண்டும்’ என்று தத்துவம் பேசி முத்தம் தருகிறாள். பருவத குமாரி கவிஞனை இயக்கினாற்போல, வஞ்சி குப்பனை இயக்கினாள். இரண்டிலுமே அறிவுத் தேடல் பொதுமையமாக இருப்பதனை உணரலாம். மைய அச்சாகச் சுழல்கிறது அது.

சொல்லும் முறையிலும், எடுத்துக் கொண்ட களனிலும் இவ்விரு நூல்களும் வேறுபட்டிருப்பினும். ஒரு பொதுமை அறம் இரண்டிலும் முந்தி நின்று மனிதருக்கு அறிவுணர்ச்சியையும், பகுத்துக் காணும் பக்குவத்தையும் அறிவுறுத்தியபடி இருக்கிறது.

குப்பன் கேட்ட புராணக்கதை, பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலையில் உள்ளது.

அவனும் புராணியத்தோடு தன்னை ஒன்றாக்கு கிறான். அதில் நம்பிக்கை வைக்கிறான். ஆனால், இது கதைதான் என்பதனை ஏற்றுக்கொள்ளாத அவனை, அது கதையே என்பதை வஞ்சி அவனுக்கு உணரவைக்கிறாள். உண்மைக்கு மாறாக இருக்கும் நிலையில் அவனுக்குப் பகுத்தறிவு புகட்டுகிறாள். தன் காதலுக்கு அவனது புராணிக எண்ணங்கள் தடையாக இருக்கும் நிலையை எடுத்துரைக்கிறாள்.

“காதல் நிசம் இக்கனிமுத்தம் மிக்க உண்மை மாதுகேள் உம்தோள் மருவுவது மெய்யாகும்; முத்தத்தைக் கொள்க; முழுப்பயத்தில் ஒப்படைத்த சித்தத்தை வாங்கிச் செலுத்துங்கள்; இன்பத்தில் சித்தம் சலியாதிருக்கவேண்டும் மக்கள் உழைப்பில் மலையாத நம்பிக்கை எக்களிக்க வேண்டும் இதயத்தில் ஜ மக்கள் உழைக்காமுன் மேலிருந்து வந்திடுமோ? எக்காரணத்தாலும் இன்மையிலே உண்மையுண்டோ? நம்பத் தகாதவெலாம் நம்ப வைத்துத் தாங்கள் நலம் சம்பாதிக்கின்ற சரித்திரக் காரர்களால் நாடு நலிவதை நான் இன்று கண்டுணர்ந்தேன்.” நாடு நலிவடைவதற்குப் பல காரணங்கள் உள்ளன. எனினும், இவ்விரு கவிஞர்களும் அறிவை முன்வைத்துப் பொய்ம்மை களையப்படவேண்டும் என்று கருத்தில் இணைகிறார்கள்.

“இயற்கையின் தத்துவமும் சத்தியும் சாரலில் முழுமையாகத் தெரிகின்றன” என்பர்.

“பொய் கூறுதலை எவ்வளவுக்கெவ்வளவு கடிந்தாரோ அவ்வளவுக்கவ்வளவு உண்மை பூணுதலை வலியுறுத்துகிறார் பாரதி”. இன்ப உலகத்தில் செயல்கள் பாரத மக்களின் ஆசார தருமங்களுக்கு மாறுபட்டனவாக இருக்கலாம். அடிமை மக்களால் உண்மை அறிவையும் அதனால் பெறும் இன்பத்தையும் காணமுடிகிறது.

நாடு அடிமைத் தனத்தால் கெட்டழிகிறது என ஞானரதம் உணர்த்தவும், சாரலோ நாடு மூட நம்பிக்கையால் கெட்டழிவதை உணரவைக்கிறது.

நடித்தல், போலி, ஏமாற்றுதல், அறிவை விற்றல், இழத்தல், அடிமைகளாகி ஆத்மாவை விற்றல் முதலியவற்றைப் பாரதி எடுத்துக்காட்டுகிறார்.

பாரதிதாசன், மக்களின் அறியாமையையும் மூடநம்பிக்கையையும் எடுத்துரைக்கிறார்.

ஒன்றில் ஆன்மத்தேடல் பயணமாக உருவெடுக்கி றது. அது மானுடத்தில் பயணமாக விரிகிறது. பகுத்தறிவை நோக்கிச் சாரல் உருவெடுக்கிறது. இரண்டுமே ஒருவித மாயக்கற்பனையில் மிதந்து செல்கிறது. கனவும் நனவும் இரண்டறக் கலந்த கலவை ஞானரதம். பாவேந்தர் இந்த நூல்பற்றி, ‘ஞானரதம் போலொரு நூல் எழுதுதற்கு நானிலத்தில் ஆளில்லை’ என்று பாராட்டுவார்.

‘ஞானரதம் என்ற தலைப்பெயருடன் தமிழ்நாடு’ என்றும் கண்டிராத துள்ளிக் குதிக்கும் ஒரு புதிய கந்தர்வ நடையில் இயற்கையின் அழகுகளைப் பற்றியும் தேசச் செய்திகளைப் பற்றியும் நெருங்கிய நண்பர்களின் மனமாறுபாடுகளைப் பற்றியும் அற்புதமான கற்பனையுடன் வாரந்தோறும் இந்தியாவில் எழுதிவந்தார். அவற்றை ஒருங்கு சேர்த்து ஞானரதம் என்று புத்தகமாக வெளியிட்டார்.

அதற்கு இணையான நூல் தமிழ் மொழியில் இல்லை’ என்பார் இராமானுஜலு நாயுடு.

காற்று, ஆகாயவெளி. விண், மண் ஆகிய ஈரெல்லைகளிலிருந்து மேலும் இவ்விரு படைப்புகளையும் பார்த்தறிய வாய்ப்பிருக்கிறது. இரதம் உண்மையின் வெளிப்பாடு. சாரலோ பகுத்தறிவின் புலப்பாடு.