(பாரதியாரை சிறு வயது முதல் பக்கத்தில் இருந்து பார்த்து வளர்ந்தவர் யதுகிரி அம்மாள். பாரதியார் புதுவையில் இருந்தபோது அவர் வீட்டுக்கு அருகாமையில வசித்து வந்தவர். ஒரு இளவயதுப் பெண்ணாக இருந்து, தான் கண்ட பாரதியாரை ஒரு மனிதராக, குடும்பத் தலைவராக தான் எழுதிய "பாரதி நினைவுகள்' என்ற நூலில் விவரித்திருக்கிறார்.)
ஒருநாள் பாரதியார் வீட்டுக்குப் போனபோது செல்லம்மாள் பாரதியாரோடு என்னவோ விவாதம் செய்துகொண்டிருந்தார். என்னைக் கண்டதும், "பார் யதுகிரி! இவர் பிராம்மணராம்: கல்யாணம் பண்ணாமல் பெண்ணை உட்கார வைத்திருக்கிறார். இந்த ஓர் அவமானம் போதாதா? தன்பாட்டுக்கு தான் இராமல் ஊரெல்லாம் போய் வீட்டு விஷயங்களையெல்லாம் பறைசாற்றியிருக்கிறார். நமக்காக இல்லாவிட்டாலும் ஊராருக்குப் பயப்பட வேண்டாமா? நான் எப்படி ஊர் ஜனங்கள் முகத்திலே விழிப்பது? நாளைக்கு அப்பா அம்மா என்னை என்ன சொல்லுவார்கள்?' என்று வருத்தத்தோடு கூறினார்.
பாரதி : யதுகிரி, நல்ல சுவாரஸ்யமான சமயத்தில் வந்தாய். வா அம்மா, உட்கார். செல்லம்மா இப்படி இரைகிறாளே... இந்த உலகம் முழுகிவிட்டது? நான் பிராம்மணனே இல்லை. பூணூல் இல்லை, சந்தியா வந்தனம் இல்லை, சிராத்தம் செய்வதில்லை. நான் சூத்திரன். வீட்டு எஜமானன் சூத்திரன், எஜமானி பிராம்மணத்தி! எங்காவது உண்டா? என்னைப் போல் நீ. இதற்கு என்ன வந்தது?
செல் : நீங்கள் ஆசாரமாக இல்லாவிட்டால் நாங்கள் ஆசாரமாக இருக்கக் கூடாதா?
பாரதி : என்ன செல்லம்மா, நீ தினம் ஔபாஸனம் செய்கிறாயா? அக்கினி ஹோத்திரம் செய்கிறாயா? எவ்வளவு அநாதைகளுக்குச் சோறு போடுகிறாய்? ஜபம், தவம் எல்லாம் கிரமமாக நடத்துகிறாயா? தேவதைகள் நேராக வந்து ஹவிர்ப்பாகங்களைப் பெற்றுக் கொள்கிறார் களா? ஆசாரம் பெயருக்கு! ஆசாரம்போய் நூறு வருஷம் ஆகிவிட்டது. வழக்கம் இருக்கிறது. இன்னும் இருபது வருஷத்தில் அதுவும் மாண்டுவிடும்!
செல் : நீங்கள் செய்ய வேண்டியதை எனக்குச் சொல்லி வேடிக்கை செய்கிறீர்கள். நான் உங்களைச் செய்ய வொட்டாமல் தடுத்தேனா?
வந்தாயா வழிக்கு! குறுக்கே பேசாமல் அமைதியாகக் கேள். விஷயந் தெரிந்தால் கோபம் கொஞ்சம் குறையும் என்று பாரதியார் சொல்லலானார்.
முன்பு வேதகாலத்தில் கனியும் கிழங்கும் புசித்து வந்தார்கள். பெண்களுக்கு வேலை அதிகம் இல்லை. கூட்டுவது, மெழுகுவது, தண்ணீர் கொண்டுவருவது இந்த வேலைதான். தேவதைகள் நேராக ஹவிர்ப்பாகம் எடுப்பதால் தீட்டுப்படும் என்று வீட்டிற்கு வெளியானவர்களைத் தனிப் பர்ணசாலையில் ஒதுங்கி இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். தீட்டான சமயங்களில் அவர்கள் உங்களைப் போல் குளிக்காமல் புழங்க
(பாரதியாரை சிறு வயது முதல் பக்கத்தில் இருந்து பார்த்து வளர்ந்தவர் யதுகிரி அம்மாள். பாரதியார் புதுவையில் இருந்தபோது அவர் வீட்டுக்கு அருகாமையில வசித்து வந்தவர். ஒரு இளவயதுப் பெண்ணாக இருந்து, தான் கண்ட பாரதியாரை ஒரு மனிதராக, குடும்பத் தலைவராக தான் எழுதிய "பாரதி நினைவுகள்' என்ற நூலில் விவரித்திருக்கிறார்.)
ஒருநாள் பாரதியார் வீட்டுக்குப் போனபோது செல்லம்மாள் பாரதியாரோடு என்னவோ விவாதம் செய்துகொண்டிருந்தார். என்னைக் கண்டதும், "பார் யதுகிரி! இவர் பிராம்மணராம்: கல்யாணம் பண்ணாமல் பெண்ணை உட்கார வைத்திருக்கிறார். இந்த ஓர் அவமானம் போதாதா? தன்பாட்டுக்கு தான் இராமல் ஊரெல்லாம் போய் வீட்டு விஷயங்களையெல்லாம் பறைசாற்றியிருக்கிறார். நமக்காக இல்லாவிட்டாலும் ஊராருக்குப் பயப்பட வேண்டாமா? நான் எப்படி ஊர் ஜனங்கள் முகத்திலே விழிப்பது? நாளைக்கு அப்பா அம்மா என்னை என்ன சொல்லுவார்கள்?' என்று வருத்தத்தோடு கூறினார்.
பாரதி : யதுகிரி, நல்ல சுவாரஸ்யமான சமயத்தில் வந்தாய். வா அம்மா, உட்கார். செல்லம்மா இப்படி இரைகிறாளே... இந்த உலகம் முழுகிவிட்டது? நான் பிராம்மணனே இல்லை. பூணூல் இல்லை, சந்தியா வந்தனம் இல்லை, சிராத்தம் செய்வதில்லை. நான் சூத்திரன். வீட்டு எஜமானன் சூத்திரன், எஜமானி பிராம்மணத்தி! எங்காவது உண்டா? என்னைப் போல் நீ. இதற்கு என்ன வந்தது?
செல் : நீங்கள் ஆசாரமாக இல்லாவிட்டால் நாங்கள் ஆசாரமாக இருக்கக் கூடாதா?
பாரதி : என்ன செல்லம்மா, நீ தினம் ஔபாஸனம் செய்கிறாயா? அக்கினி ஹோத்திரம் செய்கிறாயா? எவ்வளவு அநாதைகளுக்குச் சோறு போடுகிறாய்? ஜபம், தவம் எல்லாம் கிரமமாக நடத்துகிறாயா? தேவதைகள் நேராக வந்து ஹவிர்ப்பாகங்களைப் பெற்றுக் கொள்கிறார் களா? ஆசாரம் பெயருக்கு! ஆசாரம்போய் நூறு வருஷம் ஆகிவிட்டது. வழக்கம் இருக்கிறது. இன்னும் இருபது வருஷத்தில் அதுவும் மாண்டுவிடும்!
செல் : நீங்கள் செய்ய வேண்டியதை எனக்குச் சொல்லி வேடிக்கை செய்கிறீர்கள். நான் உங்களைச் செய்ய வொட்டாமல் தடுத்தேனா?
வந்தாயா வழிக்கு! குறுக்கே பேசாமல் அமைதியாகக் கேள். விஷயந் தெரிந்தால் கோபம் கொஞ்சம் குறையும் என்று பாரதியார் சொல்லலானார்.
முன்பு வேதகாலத்தில் கனியும் கிழங்கும் புசித்து வந்தார்கள். பெண்களுக்கு வேலை அதிகம் இல்லை. கூட்டுவது, மெழுகுவது, தண்ணீர் கொண்டுவருவது இந்த வேலைதான். தேவதைகள் நேராக ஹவிர்ப்பாகம் எடுப்பதால் தீட்டுப்படும் என்று வீட்டிற்கு வெளியானவர்களைத் தனிப் பர்ணசாலையில் ஒதுங்கி இருக்கும்படி ஏற்பாடு செய்திருந்தார்கள். தீட்டான சமயங்களில் அவர்கள் உங்களைப் போல் குளிக்காமல் புழங்க மாட்டார்கள். புருஷர்கள் இல்லாதபோது குளத்தில் இறங்கிக் குளித்துத் தங்கள் துணிகளைத் துவைத்து உலர்த்தி உடுத்துக்கொண்டு தங்கள் பர்ணசாலையை அடைவார்கள். அறியாத குழந்தைகள் அவர்களிடம் இருக்கும். முக்கியமாக ஓய்வு எடுக்க வேணும், மற்ற நாட்களைப்போல் எல்லா விஷயங்களுக்கும் அருகதை அற்றவர்கள். கணவனுடைய அருகில் இருந்தால் நல்லதல்ல என்று அவர்கள் கண் மறைவாக இருக்க வேணும் என்று செய்தார்கள். அந்த நாட்களில்கூட முக்கியமான தர்க்கங்கள் நடக்க வேண்டி வந்தால் நடுவில் திரையிட்டுத் தர்க்கிப்பார்களாம்.
பிற்காலத்தில் நாகரிகம் வந்த பிறகு பார்ப்பாரப் பெண்கள் தங்கள் வீடுகளில் நெல் குத்துவது முதல் அன்னம் வடித்துப் பரிமாறும் வரை தாங்களே செய்துகொள்ள வேண்டி வந்தது. மற்றைய வகுப்பார் செய்தால் தீட்டு என்றும் வைத்திருந்தார்கள். குத்துவது இயந்திரத்தில் அரைப்பது பண்படுத்துவது முதலிய கஷ்ட வேலைகளை வீட்டுக்கு விலக்கான நாட்களில் செய்தால் அபாயம். அதற்காகப் பார்ப்பனப் பெண்களாலும் அவர்களை விலக்கி வீட்டுக்கு வெளியில் வைத்தார்கள்.
ஆனால் இன்னும் பிற்காலத்திலோ பட்டணங்களில் குளிக்க வசதியில்லாததால் மூன்று நாளும் ஒரு சிற்றறையில் இருக்கச் செய்து புழுங்க வைத்தார்கள். புருஷர்களே எல்லாம் செய்து சமைத்துப் போடுவார்கள். இப்பொழுது போல் ஓட்டலில் போய் சாப்பிட மாட்டார்கள். இப்பொழுதோ எல்லாம் போய்விட்டது. எல்லா வேலைகளையும் சூத்திரன் செய்து வைக்கிறான்.
பார்ப்பான் வாங்கித் தின்கிறான். பெண்கள் கஷ்ட வேலை ஒன்றும் செய்வதில்லை. கடையிலிருந்து கொணர்ந்ததை அப்படியே உலையிலே வைக்கிறார்கள்.
வீட்டில் எஜமானி வெளியானால், ஓட்டலில் செய்யும் வேலைக்காரியின் சோறு ஆசாரம். ஆனால் அதே வேலைக்காரி வீட்டில் சமையற்கட்டுக்கு வரக்கூடாது ஓட்டல் பண்டங்களில் இன்னும் பற்பல தீட்டுக்கள் சேர்கின்றன. ஓட்டலில் கண் விழாமல் விபூதி போட்டபின் கொணர்ந்து வைப்பது இவர்கள் மனசுக்குச் சமாதானம்!
பார்ப்பாரப் பெண்கள் மற்ற வகுப்புப் பெண்களை விடச் சீக்கிரம் முதிர்ச்சி அடைந்து விடுகிறார்கள். முன்பு ஏழு வயதில் கல்யாணம் செய்தாலும் பதினாறு பதினெட்டு வயது வரையில் பெரியவர்கள் ஆகமாட்டார்கள். பிள்ளைக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்காது. இப்பொழுது அப்படி இல்லை. ஆண்களுக்கு எவ்வளவு வயதானாலும் கேட்பார் இல்லை. பெண்களுக்கு மட்டும் கட்டு! கட்டு என்றால் இரண்டு பேருக்கும் இருக்க வேண்டும். பிள்ளைகள் படித்து ஒரு நிலைக்கு வரச் சுமார் இருபது இருபத்தைந்து வயது வேண்டும். அவர்களுக்குச் சரியான ஜோடி பதினெட்டு, இருபது வயதுப் பெண்கள்தான்.
நாம் இருப்பதோ இங்கிலீஷ் ராஜ்யம். அங்கு செய்வதோ அடிமை வேலை. அங்கே உழைத்துவிட்டு வீட்டுக்கு வந்தால் சோற்றின் மேல் கவனம் போகுமே தவிர ஜப, தப, ஹோமங்களில் செல்வதில்லை. எல்லாம் வெறும் வேஷமே. எனக்கு இந்தப் பகட்டு வேஷம் பிடிக்காது. என் தங்கம் பெரியவள் ஆனாள் என்று பறைசாற்றினேன். அவளுக்குத் தகுந்த கணவனைப் பார்த்துக் கல்யாணம் செய்விக்கிறேன். தங்கத்தை உங்களைப் போல் சிறை போடவில்லை. ராஜாத்திபோல் ஓய்வு எடுத்துக்கொள்ளட்டும். உனக்கு இஷ்டம் இல்லாவிட்டால் சமையற் கட்டிற்கும் வரவேண்டாம்; பூஜை மடத்திற்கும் வரவேண்டாம்.
எப்பொழுதும் ஓடும் ஜலத்தில் குளிப்பது நல்லது. இங்கேயே குழாய்த் தண்ணீரே ஓடும் அருவி. வழக்கமாக ஸ்நானம் செய்வது போல் அம்மூன்று நாட்களிலும் செய்யட்டும். ஒரு சிறிய அறையில் அடைந்து மூன்று நாள் புழுங்குவது முட்டாள்தனம். வெந்நீரை வேறு தொட்டியில் கொட்டிக்கொடு. சுத்தமாகக் குளித்துப் புதிய உடை தரித்துச் சுகமாக இருப்பதே சரி. முக்கியமாகக் கவனிக்க வேண்டியது. இச்சமயம் ரொம்ப தூரம் நடக்கக் கூடாது. பாரமான சாமான் எடுக்கக் கூடாது. அதனால் அபாயமாகலாம். இதுவே முக்கியம். ஆனால் உங்கள் செயல்கள் எல்லாம் முக்கியமான விஷயத்தைவிட்டுப் பாம்பு உரித்த தோலைக்கண்டு, பாம்பு, பாம்பு என்று பயப்படுவதைப் போல் இருக்கின்றன.
காளயுக்தி வருஷம் சித்திரை மாதம் ஒரு வெள்ளிக் கிழமை தினம் பாரதியார் தம் வீட்டில் ஒரு சின்னக் கூட்டம் ஏற்படுத்தினார். தெரிந்த சில பெண்களை வரும்படி ஆளிடம் சொல்லியனுப்பினார்.
முதலில் பாரதியார், வந்தே மாதரம் பாடினார். பிறகு, பெண்கள் விடுதலைக் கும்மி, பின்னர் எங்களிடம் உங்களுக்குத் தெரிந்ததைச் சொல்லுங்கள் என்றார். நான் முயற்சியின் பயன் என்னும் சிறு உபந்நியாசம் செய்தேன். பாரதியார் இதைத் தமது வியாசத்துடன் சுதேசமித்தி ரனில் வெளியாக்கினார்.
அந்த நாட்களில் எங்கள் குடும்பங்களில் இங்கிலீஷ் பத்திரிகைகள் வருமே தவிரவும் தமிழ்ப் பத்திரிகைகள் வரவழைப்பதில்லை. ஜட்ஜ் வேலையில் இருந்த எங்கள் உறவினரான எம். ஓ. பார்த்தசாரதி ஐயங்கார் வீட்டில்தான் "சுதேசமித்திரன்'’ வரும். அவர்கள் வீட்டுப் பெண்கள் கட்டுரையைப் படித்துவிட்டு என் பாட்டியாரிடம் வந்து, உலகம் முழுகிப் போய்விட்டது!’ என்று கூக்குரலிட்டார் களாம். திருவல்லிக்கேணியில் எங்கள் ஜனங்கள் எங்கே சேர்ந்தாலும் இதே பேச்சுத் தானாம்! மறுவாரம் ஐயர் வீட்டில் திருவள்ளுவர் தினம் கொண்டாடப்பட்டது.
ஏழைகளுக்கு அன்னம் போட்டார்கள். செல்லம்மா, பாக்கியலட்சுமி அம்மாள் இருவருமாகச் சமைத்து வேலையை நடத்தினார்கள். ஐயர் திருவள்ளுவர் வாழ்க்கைக் கதையில் சிலசில பாகங்கள் சொன்னார். பாரதியார் வழக்கம்போல் சில பாடல்கள் பாடினார்.
நான், பெண்களின் முன்னேற்றம் என்பது பற்றி உபந்நியாசம் செய்தேன். அதில் காந்தியடிகளின் சில வாக்கியங்களையும் சத்தியாக்கிரக விஷயங்களையும் எடுத்துச் சொல்லி பெண்களின் முன்னேற்றத்திற்குப் பெண்களே தடை என்று சொல்லியிருந்தேன். இதனால் பெரிய பாட்டிமார்களுக்கு அளவில்லாத கோபம் வந்துவிட்டது.
மறுவாரம் பாரதியார் அழைத்தபோது என் பாட்டியார், அத்தை எல்லோரும் வந்திருந்தார்கள்.
எனக்குப் பதில் அத்தையே உபந்நியாசம் செய்தார். அதில் பெண்களுக்கு இங்கிலீஷ் கூடாது என்றும், வீட்டில் அடங்கி வேலை செய்துகொண்டிருப்பதே பெண்களுக்கு ஏற்றது என்றும் சொன்னார். அதற்குப் பதிலாக பாரதியார் சில நீதி வாக்கியங்களைச் சொல்லி இதில் ஒரு தப்பிதமும் இல்லை என்று சமாதானம் சொன்னார்.
ஆனால் அவர்கள் ஒப்பவில்லை. அத்துடன், அத்தை செய்த உபந்நியாசத்தைப் பத்திரிகையில் பிரசுரிக்கக் கூடாது என்றும் சொன்னார்கள்.
இருந்தபோதிலும், தமது கட்டுரையில் வேடிக்கை யாகச் சிற்சில இடங்களில் அத்தையின் உபந்நியாசத்தை அவரது பெயர் குறிப்பிடாமல் கையாண்டு காட்டியிருக்கிறார் பாரதியார்.
யதுகிரியாகிய நான் புதுவையிலிருந்த சமயம் செல்லம்மா (பாரதியாரின் மனைவி) தம் தம்பிக்குக் கல்யாணம் என்று முன்னேற்பாடுகளுக்காகத் தமது சொந்த ஊரான கடையத்துக்குப் போய்வந்தார். அவர் போயிருந்த ஒரு மாதமும் பாரதி மௌன விரதம் அனுஷ்டித்தார். எங்கள் வீட்டுக்கும் வருவதில்லை. நானும் முன்போல் போகமுடியவில்லை.
புரட்டாசி மாதம் என் குழந்தையைப் பார்க்கச் செல்லம்மா எங்கள் வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, "இனி இங்கிருப்பது சாத்தியமில்லை. நாங்கள் கடையம் போய் விடுகிறோம்' என்றார். எப்படிப் போகிறோம் என்பதைச் சொல்லவில்லை. பாரதியார் போவாரென்று நாங்கள் நம்பவில்லை. அவர் புதுவையைவிட்டு வெளியே வந்தால் சிறைவாசம் நிச்சயம் என்பது எங்களுக்குத் தெரியும்.
தாம் மாடியின்மேல் இருக்கும்போது செல்லம்மா குழந்தைகளை அழைத்துக்கொண்டு முக்கியமான சாமான்களை எடுத்துக் கொண்டு கடையத்துக்குக் கிளம்பிப் போனார் என்றும், தாம் வேண்டாம் என்று சொன்னபோதும் கேட்காமல் போய்விட்டதாகவும், தாம் இனி வேறு விவாகம் செய்துகொள்ளப் போவதாகவும் மறுநாள் காலையில் பாரதியார் சொன்னார்.
ஆனால் ஒரு வாரத்தில் செல்லம்மா தன் தமையனார் அப்பாதுரையுடன் திரும்பி வந்துவிட்டார்.
ஐப்பசி மாதம் சுமார் பதினைந்து திகதியிருக்கும். பாரதி, செல்லம்மா, அப்பாதுரை மூவருமாக வில்லியனூர்ப் பக்கம் போனார்களாம். வில்லியனூர் தாண்டியதும் பொலிஸார் பாரதியாரைப் பிடித்துக் கடலூர் ஜெயிலில் சேர்த்தார்களாம்.
செல்லம்மாவும் அப்பாதுரையும் திரும்பிவந்து புதுவை வீட்டைக் காலி செய்து பாக்கிகளைத் தீர்த்து குழந்தைகளுடன் கடையம் போய்ச் சேர்ந்தார்கள்.
கடலூர் ஜெயிலிலிருந்த பாரதியார் சில நாட்களில் விடுதலையானார். உடனே நேராகப் பட்டணத்துக்கு வந்து எங்கள் வீட்டில் சில தினங்கள் தங்கினார். அப்போது சென்னைக் கடற்கரையில் சில பிரசங்கங்களும் செய்தார்.v நான் மைசூரில் இருந்தேன் என் தாயிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் பாரதியார் இறந்துவிட்டார் என்ற செய்தி இருந்தது. முதலில் நான் நம்பவில்லை. மறுபடியும் என் தகப்பனாரே விவரமாக எழுதியிருந்தார்.
விதி முடிந்துவிட்டது. தமிழ்நாட்டின் அதிருஷ்டம் அவ்வளவுதான். 1923-ஆம் வருஷம் நான் மறுபடி சென்னை வந்திருந்தேன். செல்லம்மா, தங்கம்மா, சகுந்தலா மூவரும் என்னைப் பார்க்க வந்திருந்தார்கள். அவர்களைக் காண எனக்கு வருத்தமாயிருந்தது.
செல்லம்மா, "யதுகிரி, அவர் பிராணன் போகும் முன்கூட, செல்லம்மா, யதுகிரி எங்கே இருக்கிறாள்? என்று விசாரித்தார். நீ மைசூரில் இருப்பதாக சொன்னேன்.
எவ்வளவு குழந்தைகள்? என்று கேட்டார். ‘நம்மைப்போல் இரண்டு பெண்கள் என்றேன். உன்னைப் பார்க்க வேண்டும் போல் இருப்பதாகச் சொல்லிவிட்டு. ‘அவள் இப்போது எங்கே வருவாள்? எங்காவது நன்றாக இருக்கட்டும்..... காலை சீக்கிரம் சமைத்துவிடு. எட்டு மணிக்கெல்லாம் ஆபீசுக்குப் போகவேணும் என்றார். இதெல்லாம் சொன்ன ஒரு மணி நேரத்துக்கெல்லாம் உயிர் போய்விட்டது. என்ன செய்வேன் அதுவும் ஒரு கூத்தாகிவிட்டது' என்றார்.
பாரதிôயரை எப்போதும் அவர் அறியாததோர் சக்தி தூண்டும். அவர் பாடும்போது கவிதை தங்கு தடை யில்லாமல் கோவையாக வந்துகொட்டும். தாம் செய்த கவிதைகளைக் கண்டு சில சமயம் அவரே அதிசயப் படுவார். பதம், நடை, இலக்கணம், எதுகை, மோனை என்பவைகளைத் தேடித் தேடி அமைக்கும் கஷ்டம் அவருக்கு இருக்கவில்லை. அவர் ஒரு வரகவி பாரதியார் சில சமயம் தம்மைத் தாமே பல கேள்விகள் கேட்டுக் கொள்வார். சிலவேளை நான்கூட அதைக்கண்டு பிரமிப்பதுண்டு. சமுத்திரக் கரையில் யாரோடு பேசினீர்? என்றால் பராசக்தியோடு, கடலோடு என்று சிரிப்பார். அப்போதெல்லாம் எனக்கு அவர் வார்த்தையின் பொருள் தெரியாது. ஒரு சிறந்த கவிதை வெளிவர வேண்டுமானால் மனிதன் எவ்வளவு தவம் செய்ய வேண்டும். மனத்தை எப்படி பக்குவம் செய்துகொள்ள வேண்டும் என்பதற்கு பாரதி சிறந்த உதாரண புருஷர். அத்தகைய கவிகள் பல நூற்றாண்டுகளுக்கொரு முறையே தோன்றுவர்.
அப்படிப்பட்ட மகான்களைப் பெற்றெடுக்கும் சமூகம் பாக்கியம் செய்த சமூகமே!