குடியரசு தினத்தைக் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், கொடூரமாகத் தடியடி நடத்தியும், மரணக் கூச்சலை உண்டாக்கியும் தலைநகர் டெல்லியில் ரணகளமாகக் கொண்டாடியிருக்கிறது அதிகாரவர்க்கம். துரத்தித் துரத்தி விவசாயிகளைத் தாக்கி, நம் பாரத மாதாவுக்கு கண்ணீர் அபிசேகம் நடத்தப்பட்டிருக்கிறது.

புகழ்பெற்ற நம் சுதந்திர தினப் பேரணியைத் தொலைக்காட்சியில் ரசிக்க நினைத்த வெளிநாட்டுக்காரர்கள்கூட, அன்று டெல்லி முழுக்க வெடித்துப் புகைந்த கண்ணீர்ப் புகைக்குண்டுகளையும் அலறிக்கொண்டே ஓடும் விவசாயிகளையும், எதிர்த் தாக்குதலுக்கு ஆளான காவலர்களையும் பார்த்துப் பதைபதைக்க நேர்ந்தது. மொத்தத்தில் விவசாயிகளின் உரிமைப்போராட்டத்தை அடக்கு வதாக நினைத்து குடியரசுத் திருநாளையே ரணகளமாக்கி, இந்திய வரலாற்றின் மீது நிரந்தரக் கறையைப் பூசிவிட்டார்கள்.

’பலகுடை நீழலும் தங்குடைக்கீழ்க் காண்பர்

அலகுடை நீழ லவர்

Advertisment

என்று விவசாயிகளின் மதிப்பை எடுத்துச் சொல்கிறார் வள்ளுவர். இதன் பொருள், மக்களுக்கு நிழல் தருவது அரசாங்கம் என்றால், அந்த அரசாங்கத்தையும் தனது கருணைக் குடைக்குள் வைத்து காப்பவர்கள் உழவர்களான விவசாயிகள்தான் என்பது பொருள்.

farmers

அப்படிப்பட்ட விவசாயிகளைக் கொண்டாடவேண்டிய மோடி அரசு, அவர்களின் வாழ்க்கையோடு விளையாடிக்கொண்டிருக்கிறது. விவசாயிகளுக்கு எதிரான வேளாண்மை சட்டத் திருத்த மசோதாவை மோடி அரசு கொண்டுவந்தபோதே, ஒட்டுமொத்த விவசாயிகளும் இந்த மசோதாக்கள் எங்கள் வாழ்வையே நாசப்படுத்திவிடும். அதை அமல்படுத்தாதீர்கள் என்று கெஞ்சலோடு குரல் எழுப்பினர்கள். அவர்களுக்காக அகில இந்திய அளவிலான அத்தனை எதிர்க்கட்சியினரும் குரல்கொடுத்தார்கள். இருந்தும் யாரோ ஒரு சில அதானி, அம்பானிகளை மகிழ்விப்பதற்காக, அவர் களுக்கு சாதகமான வேளாண்மை சட்டத்திருத்த மசோதாவை வலுக்கட்டாயமாகக் கொண்டுவந்துவிட்டது மோடி அரசு.

Advertisment

இந்த வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற வேண்டும் என்று, பஞ்சாப், அரியானா, பீகார் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள் கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக டெல்லியில் போராடிக்கொண்டு இருக்கிறார்கள். வயதானவர்கள், குழந்தைகள், பெண்கள் என அவர்கள் குடும்பம் குடும்பமாக சொந்த ஊரை விட்டுவந்து டெல்லி வீதிகளில், வெய்யிலிலும் கடும் குளிரிலும் பழியாய்க் கிடக்கிறார் கள். இதுவரை அதிகாரப்பூர்வமாக 41 உயிரிழப்புகள் நடந்துள்ளன. அதில் இரண்டு தற்கொலைகள், 4 பேர் சாலை விபத்து மரணம், 10 மாரடைப்பு மரணம், ஒருவர் குளிரில் விறைத்து இறந்தது என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டே இருக்கிறது. விவசாயிகள் தரப்போ 60-க்கும் மேற்பட்டோர் இறந்து விட்டதாகச் சொல்கிறது. அதோடு பலநூறு பேர் பலவிதங்களிலும் காயமடைந்துள்ளனர்.

இவ்வளவு நடந்தும் விவசாயி கள் விவகாரத்தில் மோடி அரசு கருணையோடு நடந்துகொள்ளவில்லை. கடந்த 22-ஆம் தேதி வரை மத்திய விவசாயத்துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர் உள்ளிட்டவர்கள் 11 முறை அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும், தீர்வு எட்டப்படவில்லை. உச்ச நீதிமன்றமே விவசாயிகளுக்கு அனுசரணையாக நடந்துகொள்ளுங்கள் என்று அறிவுறுத்தியும், மோடி அரசின் கல்நெஞ்சம் இளகவில்லை. இதனால் மனம் வெறுத்துப்போன விவசாயிகள், குடியரசு நாளில், சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் அதே ராஜபாட்டையில், பிரம்மாண்டமான டிராக்டர் பேரணியை நடத்துவோம் என்று அறிவித்தனர். இதன் பிறகாவது மோடியும் அமித்ஷாவும் நேரடியாகப் பேசி சமாதான முயற்சியை மேற்கொண்டிருக்க வேண்டும்.

farmers

அன்று அனுமதியோடு டெல்லிக்குள் நுழைந்த விவசாயிகளின் ஆயிரக்கணக்கான டிராக்டர்களை இரும்புத் தடுப்புகளால் தடுத்து பிரச்சினையை ஆரம்பித்தனர். அதனால் தடுப்புகளை மீறி டிராக்டர் பேரணிகள் டெல்லிக்குள் ஊடுருவ, அவர்களை வஜ்ரா வாகனங்கள் மூலம் தண்ணீரைப் பீய்ச்சியடித்தும் கண்ணீர்ப் புகைக்குண்டுகளை வீசியும், தடியடிகளை நடத்தியும் துரத்தியடிக்கத் தொடங்கியது போலீஸ். இதனால் டெல்லியே ரணகளமானது. ஒரு கட்டத்தில் விவசாயிகள், டெல்லி சொங்கோட்டைப் பகுதிக்குள் அணிவகுத்துச் சென்றனர். அப்போது கோட்டை மீது ஏறிய ஒரு கும்பல் சீக்கிய கொடியைப் பறக்கவிட்டது. இந்தக் கொடியை ஏற்றியவர் பா.ஜ.க. அனுதாபியான தொலைக்காட்சி நடிகர் தீப் சிந் என்று கண்டுபிடிக்கப்பட, அவரும் அதை ஒத்துக்கொண்டார். அவர் மோடியுடன் இருக்கும் புகைப்படங்களும் சமூக ஊடகங்களில் பகிரங்கமானது.

விவசாயிகளின் பெயரில், பா.ஜ.க.வினரும், சமூக விரோதிகளும் நுழைந்து வன்முறைக்கு வித்திட்டதும் இதன்மூலம் அம்பலமானது. இந்தக் கலவரத்தில் நவ்தீப்சிங் என்ற விவசாயி சுருண்டு விழுந்து உயிரிழந்தார். டிராக்டர் கவிழ்ந்து அவர் உயிரிழந்ததாக போலீஸும், துப்பாக்கிச் சூட்டில் அவர் கொல்லப்பட்டதாக விவசாயிகளும் மாறி மாறிக் குற்றம் சாட்டுகிறார்கள். இதில் ஏராளமான விவசாயிகளும் போலீஸ்காரர்களும் படுகாயம் அடைந்திருப்பது பெரும் துயரம். இரு தரப்பையும் அங்கே மோதவைத்து வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கிறது அதிகாரவர்க்கம்.

பண்படாத நிதானமற்ற மத்திய அரசின் போக்கால், குடியரசுத் தினத்தின் பெருமையே குலைக்கப்பட்டுவிட்டது. குடியரசுத் தினத்தன்றே 144 என்னும் தடை உத்தரவு போட்டு டெல்லி சிறை வைக்கப்பட்டது. இது நம் சுதந்திர இந்தியாவில் நமக்கு ஏற்பட்ட மிகப்பெரிய அவமானம். இதற்குக் காரணமானவர்கள் மோடியும் அமித்ஷாவும்.

*

தொடர்ந்து விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியப்படுத்தும் மோடி அரசைக் கண்டித்து பஞ்சாப் மாநில முன்னாள் முதலவர் பிரகாஷ் சிங் பாதல், தனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூசண் விருதைக் குடியரசுத் தலைவரிடம் திரும்பக் கொடுத்துவிட்டார். அதேபோல் பஞ்சாப், ஹரியா னாவைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பலரும், தங்கள் விருதுகளை திருப்பிக்கொடுக்கப் போவதாக அறிவித்திருக்கிறார்கள். இப்படி விவசாயிகளுக்கு பிரபலங்கள் மத்தியிலும் பொதுமக்கள் மத்தியிலும் ஆதரவு பெருகிவரும் நிலையிலும், விவசாயிகளிடம் தனது அராஜக முகத்தை மட்டுமே காட்டிவருகிறது மோடி அரசு.

கடும் குளிருக்கு நடுவிலும், பெரும் உயிரிழப்பு களுக்கு மத்தியிலும் விவசாயிகள் நடத்திவரும் தொடர் போராட்டம் ஒட்டுமொத்த இந்திய மக்களின் இதயத்தையும் கலங்கவைத்து வருகிறது. நீதி என்ன செய்யப்போகிறது என்று பார்ப்போம்.

இன்னொரு விவகாரத்தையும் நாம் பார்க்கவேண்டும்.

farmers

அரசியல் சூதாட்டம்!

வேண்டற்க வென்றிடினும் சூதினை வென்றதூஉம் தூண்டிற்பொன் மீன்விழுங்கி அற்று என்கிறார் வள்ளுவர். .சூதாட்டம் எவ்வளவு ஆபத்தானது என்பதைச் சொல்லும் குறள் இது. தூண்டிலில் இருக்கும் இரையை தனக்கான லாபமென்று கருதும் மீன்கள், தீராத் துயரத்தைத் தான் சந்திக்கும் என்று, இதன்மூலம் அரசியல் சூதாட்டத்தையும் அவர் எச்சரிக்கிறார். ஆனால் எடப்பாடி தரப்போ, டெல்லியின் உதவியோடு சசிகலாவுக்கு எதிராக அரசியல் சூதாட்டத்தை கையிலெடுத்திருக்கிறது.

இதையும் நாம் கண்டிக்கிறோம். இப்படிக் கண்டிப்பதால், அவருக்கு நாம் வக்காலத்து வாங்குவதாகப் பொருளில்லை. வாழ்நாள் முழுக்க நக்கீரனுக்குத் தன்னை எதிரியாகவே ஆக்கிகொண்ட ஜெயலலிதா, மர்ம மரணத்துக்கு ஆளானபோது, அவருக்காகவும் நக்கீரன்தான் தொடர்ந்து குரல் கொடுத்தது. அதுதான் நக்கீரன் கடைப்பிடிக்கும் ஊடக தர்மம்.

சசிகலா சிறையில் இருந்து முழுதாக வரமாட்டார் என்று எடப்பாடி நினைத்திருந்த நிலையில், அவர் கடந்த 27-ஆம் தேதி விடுலையாகிவிட்டார். அவர் மீதான பயத்தால்தான், அடுத்த மாதம் ஜெ.வின் பிறந்த நாளில் திறந்துவைக்க இருந்த அவர் நினைவிடத்தை, 27-ஆம் தேதியே எடப்பாடி அவசரமாகத் திறந்து வைத்தார்.

கொரோனா தொற்று மீண்டும் அடுத்த சுற்றினை ஆரம்பித்துவிட்டதாக மருத்துவ உலகம் பதறிவரும் நிலையில், அந்த ஒரு நாளில் மட்டும் நாடு முழுதும் 12 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்ட சூழலில், தமிழகத்தில் அன்று மட்டும் 8 பேர் கொரோனாவுக்கு பலியான கொடுமைக்கிடையில், கொஞ்சமும் கவலைப்படாமல், ஆயிரக்கணக்கில் கட்சியினரை சென்னையில் திரட்டினார் எடப்பாடி.

இதற்காக ஒவ்வொரு ஒன்றியத்திலிருந்தும் 3 வாகனங்களுக்கும் குறையாமல் ஆட்களைக் திரட்டி வரவேண்டும் என்று அவர் கட்சி மா.செ.க்களுக்கு உத்தரவு பிறப்பித்ததால், கட்சிப் பிரமுகர்கள் ஆட்களைப் பிடித்துவந்து விட்டார்கள். குறிப்பாக அமைச்சர் செல்லூர் ராஜு, ஏறத்தாழ 16 லட்ச ரூபாய் கொடுத்து 18 பெட்டிகள் கொண்ட ஒரு ரயிலையே புக் செய்து, மதுரையில் இருந்து ஆட்களை அள்ளிக்கொண்டு வந்த கூத்தும் நடந்தது. இப்படி திரட்டப்பட்ட கூட்டத்தில், முகக்கவசமோ, கிருமி நாசினியோ பெரும்பாலானோரிடம் இல்லை. இந்தக் கூட்டத்தின் மூலம் மீண்டும் ஒரு பெருந்தொற்று அலை தோன்றக்கூடிய ஆபத்தான சூழலையும் எடப்பாடி உருவாக்கிவிட்டார்.

farmers

அதைவிடவும் கொடுமை, இந்த கூட்ட நெரிசலில் சிக்கி நத்தம் பகுதியில் இருந்து வந்திருந்த மூக்கன் என்பவர் உயிரிழக்க, திண்டுக்கல்லைச் சேர்ந்த இன்னொருவர் மாரடைப்பால் மரணம் அடைந்திருப்பதுதான். இப்படி உயிர்ப் பலிகளோடு, அரசு செலவில் நடந்த அந்த நிகழ்ச்சியிலும் கூட எடப்பாடி எதிர்க்கட்சித் தலைவரை வசைபாடத்தான் அதிக நேரத்தைச் செலவிட்டார். அடுத்த நாளான 27-ஆம் தேதி, ஜெ.வின் போயஸ் கார்டன் நினைவு இல்லத்தையும், மெரினா சாலையில் உள்ள உயர்கல்வி மன்ற வளாகத்தில் ஒரு ஜெயலலிதா சிலையையும் எடப்பாடி திறந்துவைத்தார். சிலைத் திறப்பில், அந்தப் பகுதியில் இருக்கும் மாநிலக் கல்லூரி, லேடி வெலிங்டன் கல்லூரி, ராணி மேரி கல்லூரிகளைச் சேர்ந்த மாணவிகளை எல்லாம் தன் அதிகாரத்தால் அழைத்துவரச் செய்து உட்காரவைத்தார். அங்கும் மாணவிகளின் பாதுகாப்பிலும் அக்கறை காட்டாமல் கூட்டத்தைக் கூட்டி வைத்துக்கொண்டு எடப்பாடி கும்மியடித்தார். இதற்கெல்லாம் காரணம், ஜனவரி 27-ல் விடுதலையான சசிகலா ஊடகச் செய்திகளில் முதலிடத்தைப் பிடித்துவிடக்கூடாது என்பதற்காகத்தான்.

*

இதே சசிகலாவால்தான் எடப்பாடி டீம் பதவியில் உட்கார்ந்தது. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேல் தமிழகத்தையும், அரசு கஜானாவையும் அது சுரண்டிவருகிறது. பதவியை வைத்துக் கொண்டு, எல்லா வகையிலும் அது கரன்ஸித் திருவிழாவை நடத்திக்கொண்டிருக்கிறது. வருமானவரித்துறையே குறிவைக்கும் அளவிற்கு கரன்ஸிப் புழக்கம் அவர்களிடம் மிதமிஞ்சி இருக்கிறது. இவர்களுக்கு நெருக்கமான உறவினர்களும் தொழிலதிபர்களும் தொடர்ந்து ரெய்டுக்கு ஆளாகி வருகிறார்கள். அடுத்து இங்கிருக்கும் அனைத்து அமைச்சர்களும் ரெய்டு நடவடிக்கைக்கு ஆளாகப் போகிறார்கள் என்று டெல்லியில் இருந்து செய்திகள் வந்தபடியே இருக்கின்றன. அதற்கு ஏற்ப, அமைச்சர்களும் அவர்களது பி.ஏ.க்களும்கூட கண்காணிப்பு வளையத்துக்குள் வந்துவிட்டார்கள்.

இவர்களில் அமைச்சர் விஜயபாஸ்கரின் பி.ஏ.க்களில் ஒருவரான சரவணன் என்பவர், கண்காணிப்புக்குப் பயந்து மாறுவேடமெல்லாம் போட்டுப் பார்த்துவிட்டு, இப்போது ஆளே எஸ்கேப் ஆகிவிட்டார். இப்படிப்பட்ட கொள்ளைக் கும்பல்தான், சசி மீண்டும் பழையபடி களமிறங்னால், தங்கள் பதவிக்கு உலைவைத்துவிடுவார் என்று பயந்துபோய், அவருக்கு எதிரான நாடகங்களை அரங்கேற்றி வருகிறது.

*

சசிகலா விடுதலை ஆக இருந்த நிலையில், கடந்த 18-ஆம் தேதி எடப்பாடி அவசரமாக டெல்லிக்குப் பறந்தார். அங்கே பிரதமர் மோடியையும் அமித்ஷாவையும் சந்தித்தார். சந்தித்த சூட்டோடு அங்கே இருக்கும் தமிழ்நாடு இல்லத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த எடப்பாடி, எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்பதுபோல், சசிகலாவை அ.தி.மு.க.வில் சேர்க்கமாட்டோம். அதற்கு 100 சதவீதம் வாய்ப்பு இல்லை. நாங்கள் தெளிவாக முடிவெடுத்து செயல்பட்டு வருகிறோம். அவருடன் சிலர்தான் இருக்கிறார்கள். அவருடன் இருந்தவர்களெல்லாம் அ.தி.மு.க.வுக்கு வந்துவிட்டார்கள். அவரை ஜெயலலிதா கட்சியில் இருந்து நீக்கிவைத்தார். ஜெயலலிதா இருக்கும் போது, அவர் கட்சியிலேயே கிடையாது என்று திரும்பத் திரும்ப சசிகலாவுக்கு எதிரான கருத்துக்களையே முன்வைத்தார்.

அதுவரை சசிகலாவுக்கு எதிராக பகிரங்கமாக எந்தக் கருத்தையும் பேசத் துணியாத எடப்பாடி, அங்கே இப்படிப் பேசினார் என்றால், அவர் துணிச்சலடையும் வகையில் டெல்லியில் என்ன நடந்தது? என்ற கேள்வி எழுகிறது.

அவர் டெல்லியில் இருந்து தமிழகத்துக்குக் கிளம்பிய அன்றே, சசிகலா, மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டார். அவருக்கு கொரோனா என்று அதிரடியாக அறிவித்தார்கள்.

sasi

சிறையில் எவரும் சந்திக்கமுடியாத நிலையில், கைதியாக இருந்த சசிகலாவுக்கு எப்படி கொரோனா வந்தது? ஏதோ ஒரு நோய்த் தாக்கத்தைக் காரணம் காட்டி, ஜெ.வுக்கு நிகழ்ந்தது போன்ற கொடுமைகளை சசிகலாவுக்கும் அரங்கேற்ற முயல்கிறார்களோ? என்ற கேள்வி இப்போது எல்லோர் மனதிலும் எழுந்திருக்கிறது. எது எப்படியோ, இன்று கொரோனா, எதிரிகளைத் தாக்கும் ஆயுதமாக மாறிவிட்டது. அமித்ஷாவின் ஒத்துழைப்போடு இந்த கொரோனா நாடகம் நடத்தப்படுவதாகவும், சசிகலாவைக் கொல்ல சதி நடக்கிறது என்றும் அ.ம.மு.க.வினரே குமுறுகிறார்கள்.

சசிகலா உருப்படியாக விடுதலை ஆகமாட்டார் என்று எடப்பாடித் தரப்பு கனவு கண்டது. ஆனால், தான் சிகிச்சை எடுத்துவரும் விக்டோரியா மருத்துவமனையில் இருந்தபடியே அவர் விடுதலை ஆகிவிட்டார். தொடர் சிகிச்சையில் இருக்கும் அவரை விரைவில் தமிழகத்துக்கு அழைத்து வரப்போகிறார்கள். ஊழல் வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு, தண்டனை அனுபவித்துவிட்டு வந்திருக்கும் அவரை, அவர் தரப்பு, ஏதோ மக்களுக்காக சிறைக் குச் சென்ற மகாராணி என்பதைப்போல், ஏக தடபுடலாக வரவேற்று கும்மாளமடிக்கவும் காத்திருக்கிறார்கள்.

அப்போது எடப்பாடித் தரப்பின் அரசியல் சூதாட்டம் என்ன நிலைக்கு ஆளாகப்போகிறது என்பது தெரிந்துவிடும். இனி நாம் எல்லாக் கண்றாவிக் காட்சிகளையும் பார்த்தாகவேண்டிய நிலைக்கு ஆளாகிவிட்டோம்.

-கவலையோடு,

நக்கீரன்கோபால்