"அறிவினான் ஆகுவ துண்டோ பிறிதின்நோய்
தந்நோய்போல் போற்றாக் கடை'
-என்பார் வள்ளுவர்.
இதன் பொருள், பிற உயிர்களுக்கு வரும் துன்பத்தைத் தம் துன்பம் போலக் கருதி அதிலிலிருந்து அவர்களைக் காப்பாற்றவேண்டும். அப்படி செய்யாதவர்களுக்கு அறிவு இருந்தும் அதனால் எந்தப் பயனுமில்லை என்பது பொருள்.
ஆனால் இங்கே சுபஸ்ரீ என்ற இளம் பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவை, ஒட்டுமொத்த தமிழகமும் தனக்கு நேர்ந்த துயரமாக எண்ணி நெஞ்சம் பதறுகிறது. ஆனால், சுபஸ்ரீயின் துயர முடிவுக்குக் காரணமான ஆளும்கட்சியினரோ, கொஞ்சம்கூட மன உறுத்தல் இல்லாமல் விருந்து, கேளிக்கை, ஆடம்பர விழாக்கள் என்று இரக்கமற்ற அரக்கர்களாய் உலவிக் கொண்டிருக்கிறார்கள்.
சுபஸ்ரீ கொலையாகி மூன்று வாரம் கடந்த நிலையிலும், தமிழக மக்களின் கவலையும் கலக்கமும் மாறவில்லை.
இப்படியும் ஒரு மரணமா? யாருக்கு வேண்டுமானாலும் இப்படி நடக்குமா? யார் உயிரை வேண்டுமானாலும் இப்படி சட்டெனப் பறித்துவிடமுடியுமா? இனி தைரியமாக தமிழகத்துச் சாலைகளில் நம்மால் நடமாடமுடியுமா? வீட்டை விட்டு வெளியே சென்றால், நாம் உருப்படியாக வீடு திரும்புவோமா? -என்றெல்லாம் அவர்கள் திகிலிலில் உறைந்து போயிருக்கிறார் கள். அந்த அளவிற்கு சுபஸ்ரீயின் படுகொலை அவர்களைப் பாதித்திருக்கிறது.
அதைப் படுகொலை என்றுதான் சொல்லவேண்டும். கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களுக்கு பதில், விளம்பர வெறிகொண்டவர்களின் ஆடம்பர பேனரே, இந்தப் படுகொலைக்கான ஆயுதமாக மாறியிருக்கிறது.
*
ஏராளமான கனவுகளோடு உற்சாகமாய் வளையவந்த ஒரு இளம்பெண், எந்தவித காரணமும் இல்லாமல் நடுச்சாலையில் ஒரு நொடியில் உயிரை இழந்து சடலமாக ரத்த வெள்ளத்தில் கிடப்பது என்பது எவ்வளவுபெரிய கொடூரம்.
கொல்லப்பட்ட சுபஸ்ரீ, நெமிலிலிச்சேரியைச் சேர்ந்த ரவி, கீதா தம்பதியினரின் ஒரே செல்லமகள். சென்னை கந்தன்சாவடியில் உள்ள ஐ.டி. நிறுவனம் ஒன்றில் மென்பொருள் பொறியாளராகப் பணியாற்றிவந்தார். வாழ்வில் சாதிக்கும் எண்ணத்தோடு ஓடிக்கொண்டே இருந்தவர். அவருக்குதான் ஆளும்கட்சியைச் சேர்ந்த ஜெயகோபால் என்பவர் மூலம் மரணம் ஏற்பட்டிருக்கிறது.
சென்னை கோவிலம்பாக்கத்தை சேர்ந்த ஜெயகோபால் அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் ஆவார். அவருடைய மகன் திருமணம் அங்குள்ள ஜே.டி. திருமண மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் துணை முதல்வர் ஓ.பி.எஸ். உள்ளிட்ட ஆளும்கட்சிப் பிரமுகர்கள் கலந்துகொண்டனர். இவர்களை வரவேற்க பேனர்களை வைக்க நினைத்தவர், "நம்முடைய ஆட்சிதானே நடக்கிறது... நம்மை யார் தட்டிக் கேட்கமுடியும்?' என்ற மமதையோடு எந்தவித அனுமதியும் இன்றி, கட்டிய பேனர்களில் ஒன்று காற்றிலே ஆடி அசைந்து சாலையில் செல்வோரை மிரட்டிக் கொண்டிருந்தது.
இந்த நிலையில் 11-ஆம் தேதியே அதைப் பார்த்த சர்வேயரான விஜய்ரஞ்சன் என்பவர், இது யார் மீதாவது விழுந்து விபத்தை ஏற்படுத்தினால் என்ன ஆவது என்று பதறிப்போய், அந்தப் பகுதிக்குரிய மாநகராட்சி செயற்பொறியா ளர் பாலாஜியின் கவனத்துக்கு இதைக் கொண்டுபோயிருக்கிறார்.
பாலாஜியோ அது பற்றிக் கொஞ்சமும் கவலைப்படவில்லை. காரணம் இது போன்ற சட்டவிரோத பேனர்கள் எங்கெங்கு வைக்கப்படுகிறது என்பதைக் கவனித்து, சம்பந்தப்பட்டவர்களிடம் போய் வாங்க வேண்டியதை வாங்குவதுதான் அவர் வேலையாம். 12-ஆம் தேதி காலையிலும் அவரிடம் போய் ஜெய்ரஞ்சன் ’இன்னும் பேனர் இருக்கிறது’ என்று மீண்டும் புகார் சொல்லிலிவிட்டுப் போயிருக்கிறார். பணவெறி கொண்ட அந்த நபர், யாருக்கு என்ன நடந்தால் நமக்கென்ன என்று விட்டுவிட்டார்.
ஆனால் அந்த டேஞ்சரஸ் பேனர்... யார் உயிரை வாங்கலாம் என்று காத்துக்கொண்டே இருந்திருக்கிறது. தனக்கு மரணம் பேனர் வடிவில் காத்திருப்பதை அறியாத சுபஸ்ரீ, அன்று அலுவலகப் பணிகளை முடித்துக்கொண்டு மதியம் 2.30 மணியயளவில் தனது ஸ்கூட்டியில் வீட்டிற்குக் கிளம்பினார். தலையில் கருப்பு நிற ஹெல்மெட்டையும் பாதுகாப்புக்காக அணிந்துகொண்டார். அவர் அடுத்த 15 ஆவது நிமிடம் பள்ளிக்கரணை ரேடியல் சாலையில் சென்றுகொண்டிருந்தபோதுதான் அந்தக் கொடூரம் அரங்கேறியது.
சாலையோரம் ஜெயகோபால் வைத்திருந்த அந்த டேஞ்சரான மெகா சைஸ் பேனர், திடீரென சாலையில் சென்றுகொண்டிருந்த சுபஸ்ரீயின் மீது அப்படியே விழுந்தது. அது வண்டியை நகரவிடாமல் அழுத்தியிருக்கிறது. அவர் நிலைகுலைந்து அப்படியே தரையில் சாய்ந்தார். அந்த நிலையிலும் சுதாரித்துக்கொண்டு எழுவதற்காக அவர் வலது கையைத் தரையில் ஊன்றியிருக்கிறார். பேனர் விழுந்த வேகத்தில் அவர் தலையில் அணிந்திருந்த ஹெல்மெட் கழன்று ஓடியது. அந்த நேரத்தில் பின்னால் வந்துகொண்டிருந்த தண்ணீர் லாரி, அவர் மீது சடசடவென இரக்கமில்லாமல் ஏறி இறங்கிவிட்டது. கண் இமைக்கும் நேரத்தில் எல்லாம் நடந்துவிட்டது. அருகில் இருந்தவர்கள் அதிர்ந்து, ஓடிப்போய்ப் பார்த்திருக்கிறார்கள். சுபஸ்ரீ உயிருக்குப் போராடியபடி முனகிக்கொண்டிருந்தார். உடனே அருகில் இருக்கும் காமாட்சி மருத்துவமனைக்கு அவரைத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். வழியிலேயே அந்த அப்பாவிப் பெண்ணின் உயிர் பிரிந்துவிட்டது. விளம்பர மோகம்கொண்ட அரசியல் அரக்கர் களால் அவர் மரணமடைந்துவிட்டார். ஏன் தனக்கு மரணம் நிகழ்கிறது என்பதைக் கூட உணரமுடியாத நிலையில் அந்த இளம்பெண் இறந்துபோனார்.
*
சம்பவம் நடந்த இடத்துக்கு வந்த காவல்துறையினர், பேனர் விழுந்ததால்தான் இந்தக் கொடூரம் என்பதைப் புரிந்துகொண்டார்கள். ஆளும்கட்சிப் பிரமுகர் ஜெயகோபாலைக் காப்பாற்ற என்ன வழி என்று, தங்கள் மாமூல் மூளையால் யோசித்தனர். பேனர் கொலையை மறைத்து, ஹெல்மெட் அணியாததால் அஜாக்கிரதை மரணம் என கதை கட்டத் துணிந்திருக்கிறார்கள்.
ஆனால் விபத்து நடந்த இடத்திற்கு அருகில் இருந்த எப்.சி.ஏ. கார் டெக்கார்ஸ் என்ற நிறுவனம் வைத்திருந்த சி.சி.டி.வி. கேமரா, அங்கு நடந்த எல்லாவற்றிற்கும் சாட்சியாய் அனைத்தையும் பதிவுசெய்துவிட்டது. இந்த வீடியோ காட்சிகள் வெளியே வந்ததும், சுபஸ்ரீ அணிந்திருந்த கருப்பு நிற ஹெல்மெட்டை காவல்துறையால் மறைக்க முடியவில்லை.
அந்தக் கல்யாண மண்டப உரிமையாளரே, முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலும் அவர் மைத்துனர் மேகநாதனும் தங்கள் ஆட்கள் மூலம்தான் பேனர்களை வைத்தார்கள். அதை சரியாகக் கட்டாததால்தான் இப்படியொரு விபத்து நடந்திருக்கிறது என்று சொல்லிலி, இது பேனரால் ஏற்பட்ட கொலைதான் என்பதை உறுதிப்படுத்தியிருக்கிறார்.
இப்படி சட்ட விரோத பேனர்களை வைக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு, தலா 1000 ரூபாய் வீதம் ஜெயகோபால் தரப்பு லஞ்சம் கொடுத்தது தொடர்பான ஆடியோ ஒன்றும் வெளியாகி, அதிகாரிகளின் யோக்கியதையை அம்பலப் படுத்தியிருக்கிறது.
இவ்வளவு இருந்தும் காவல்துறையோ, பேனர் கட்டிய ஜெயகோபால் தரப்பைத் தேடாமல், அவர்களுக்கு பேனர் தயாரித்துக் கொடுத்த சண்முகா டிஜிட்டல் நிறுவனத்துக்கு சீல் வைத்தது. அடுத்து லாரி ஓட்டுநர் மனோஜைக் கைது செய்தது. சம்பவம் நடந்து நான்கைந்து நாள்வரை ஜெயகோபால் தரப்பு மீது வழக்கையே பதிவுசெய்யவில்லை. தந்திரசாலிலியான ஜெயகோபால் நெஞ்சுவலிலி என்று முதலிலிலில் மருத்துவமனையில் அட்மிட் ஆனார். பின்னர் காவல்துறை மற்றும் அரசியல்வாதிகள் உதவியோடு அவர் பாதுகாப்பான இடத்தில் தலைமறைவானார்.
*
இது தொடர்பாக டிராபிக் ராமசாமி தொடர்ந்த அவசர வழக்கை, சம்பவத்துக்கு மறுநாளே விசாரணைக்கு எடுத்துக்கொண்ட, நீதியரசர்கள் சத்தியநாராயணா, சேஷசாயி ஆகியோர் அடங்கிய உயர்நீதிமன்ற அமர்வு... "அரசு அதிகாரிகள், மனித ரத்தத்தை உறிஞ்சும் நபர்களாக மாறிவிட்டனர்.
இன்னும் எவ்வளவு ரத்தம் தான் உங்களுக்குத் தேவைப்படும்?' என்று கேட்டதோடு, சட்டவிரோதமாக வைக்கப்படும் பேனர்களை அகற்றவும், அதனைத் தடுக்கவும் கடுமையான உத்தரவுகளை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. எந்தவொரு உத்தரவையும் அரசு அதிகாரிகள் மதிப்பதில்லை. சுபஸ்ரீ குடும்பத்தினருக்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவேண்டும். உடனடியாகக் குற்றவாளி களைக் கைது செய்யவேண்டும் என்று கூறி, வழக்கை 25 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர் நீதிபதிகள்.
இதன் பிறகாவது ஜெய கோபால் தரப்பை போலீஸ் கைது செய்யும் என்று எல்லோரும் எதிர்பார்க்க, அரசுத் தரப்பின் பிடிவாதமான ஆதரவுப் போக்கால் போலீஸ் 25 ஆம் தேதியும் நீதிமன்றத்தில் வெறுமனே போய் நின்றது.
"ஏரியா காவல்துறை ஆய்வாளர்கள் மீதும் மாநகராட்சி அதிகாரிகள் மீதும் துறைரீதியாக நடவடிக்கை எடுத்து வருகிறோம்' என்று அது வெறுமனே அறிக்கை வாசித்தது.
நீதியரசர்களோ, ""குற்றவாளியான ஜெயகோபாலை ஏன் கைது செய்யவில்லை? எப்போதும் கீழ்நிலையில் இருக்கும் அதிகாரிகள் மீது மட்டும்தான் நடவடிக்கை பாயுமா? உடனடியாக லாரி ஓட்டுநரை மட்டும் கைது செய்திருக்கிறீர்களே... மற்றவர்களை ஏன் கைதுசெய்யவில்லை? அவர்களை எப்போது கைது செய்வீர்கள்? தேடிவருகிறோம் என்கிறீர்களே, துண்டு விரித்து, வலை வீசித் தேடி வருகிறீர்களா?'' என்று காட்டத்தைக் காட்டியிருக்கிறார்கள். மேலும் குற்றவாளிகளைக் கைது செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்யும்படி காவல்துறை உயர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார்கள்.
*
பேனர் தயாரித்த நிறுவனத்துக்கு சீல் வைப்பது, லாரி டிரைவரைக் கைது செய்வது, பள்ளிக்கரணை இன்ஸ்பெக்டர் அழகுக்கு மெமோ கொடுப்பது என இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுப்பதுபோல் போக்குக்காட்டிய காவல்துறை, கடைசியாக நீதிமன்றத்தின் கடுமையான நெருக்கடியில் இருந்து தப்ப முடியாது என்பதைப் புரிந்துகொண்டு 27-ஆம் தேதி ஒருவழியாய் குற்றவாளியான முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபாலைக் கைது செய்திருக்கிறது.
இருந்தும் இதுவரை முதல்வர் எடப்பாடி உள்ளிட்ட ஆளும் கட்சியினர் இறந்துபோன அப்பாவிப்பெண் சுபஸ்ரீக்கு இதயப்பூர்வமாக இரங்கல் தெரிவிக்கவில்லை. நமக்காக வைக்கப்பட்ட பேனரால்தானே சுபஸ்ரீ இறந்தார். அதனால் நாமாவது போய் ஆறுதல் சொல்வோம் என்று ஓ.பி.எஸ்.சும் நினைக்கவில்லை. எல்லோருமாகச் சேர்ந்து இதயத்தை அடகு வைத்துவிட்டார்கள்.
பேனர் இந்த முறை யாரோ ஒரு சுபஸ்ரீ மீது தானே விழுந்தது என்று அவர்கள் மமதையோடு இருக்கிறார்கள். நாளை இது போன்ற பேனர்கள், அவர்கள் பிள்ளை குட்டிகள் மீதோ, குடும்பத் தினர் மீதோ விழாது என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.
அப்படி விழும்போது அவர்கள் உதிரம் துடிக்கலாம்.
இந்த விவகாரத்தில் கோபத்தோடு சாட்டையை எடுத்திருக்கும் நீதிமன்றத்தை நம்புவோம். இனியாவது பேனர் கொலைகளுக்கு முற்றுப்புள்ளி விழும் என்று ஆறுதலடைவோம்.
இப்போது தமிழகமே சுபஸ்ரீயின் மரணத்துக்கு, உரிய நீதியை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கிறது.
ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்