நான் பல்லாண்டுகள் முன்னால் தினமணி கதிரில் ஒரு கட்டுரை எழுதினேன். தினமணி கதிரில் துணை ஆசிரியனாக நான் பணிபுரிந்து கொண்டிருந்த காலம் அது. ஆண் எழுத்தாளர்கள் ஏன் அழகான இளம்பெண்களை ரசிகர்களாகப் பெற ஏங்குகிறார்கள் என்று அதில் கேள்வி எழுப்பியிருந்தேன்.
அழகான இளம்பெண் தங்களிடம் கையெழுத்து வாங்குவதைப் பற்றிப் பல ஆண் எழுத்தாளர்கள், முக்கியமாகக் கவிஞர்கள் நிறைய எழுதியிருக்கிறார்கள். ஆனால் எந்தப் பெண் எழுத்தாளரும் ஓர் அழகான இளைஞன் தங்களிடம் கையெழுத்து வாங்கியதாகவோ அதில் தாங்கள் புல்லரிப்பு அடைந்ததாகவோ எழுதியதே இல்லை.
எழுத்தைத் தங்கள் எண்ணங்களுக்கு வடிகாலாக மட்டுமே பெண் எழுத்தாளர்கள் கருதுகிறார்கள். ஆனால் ஆண் எழுத்தாளர்கள் சிலர் தங்களின் வேறு ஏதேதோ உணர்ச்சிகளுக்கு வடிகாலாக எழுத்தைப் பயன்படுத்துகிறார்கள். இல்லாவிட்டால் ஓர் இளம்பெண் தங்களிடம் கையெழுத்து வாங்குவதில் இந்த ஆண் எழுத்தாளருக்கு ஏன் இத்தனை உல்லாசம், பெருமிதம்?
ஓர் ஆண் எழுத்தாளரிடம் கையெழுத்து வாங்கும் பெண்மணி ஏன் இளமையாக இருக்கவேண்டும்? அவள் ஏன் ஒரு மூதாட்டியாக இருக்கக் கூடாது? ஓர் இலக்கிய ரசிகை அழகாக இருக்கவேண்டிய அவசியம்தான் என்ன? இப்படியெல்லாம் கட்டுரையில் கேள்விகள் எழுப்பியிருந்தேன். ஆனால் எந்த ஆண் எழுத்தாளரையும் பெயர்சொல்லி நான் குறிப்பிடவில்லை. ஏனென்றால் இப்படி இயங்கும் ஆண் எழுத்தாளர்கள் ஒருவர் அல்ல, பலர்.
இந்தக் கட்டுரை பாலகுமாரனுக்கு எரிச்சல் ஏற்படுத்தியது. தாம் கதைகளும் கேள்வி பதில்களும் எழுதிவந்த ஒரு மாத நாவல் பத்திரிகையில் என் கட்டுரை பற்றி ஒரு கேள்வியை வாசகர் கேட்க, ஒரே பத்திரிகை நிறுவனத்தில் பல்லாண்டுகள் பணிபுரிபவர்களுக்கு இதெல்லாம் புரியாது என்பதாகவும் இன்னும் சற்றுக் காட்டமாகவும் அவர் பதில் எழுதியிருந்தார்.
அதைப் படித்த எனக்கு இரண்டு வகைகளில் ஆச்சரியம் எழுந்தது. ஒன்று, பாலகுமாரன் பெயரை நேரடியாக நான் குறிப்பிடாதபோது அவர் ஏன் அதைத் தன்னைப் பற்றியதாகக் கருதி பதில் சொல்கிறார் என்பது. இன்னொன்று நான் எழுப்பிய வினாவுக்கு எந்த விடையும் சொல்லாமல் நான் ஒரே நிறுவனத்தில் பல்லாண்டுகள் பணிபுரிவதைப் பற்றி அவர் ஏன் குறைசொல்ல வேண்டும் என்பது.
தினமணியில் இருபத்தைந்து ஆண்டுகள் நான் பணிபுரிந்தேன் என்றால், என் கருத்தோட்டங்கள் தினமணி கருத்தோட்டங்களுடன் ஒன்றுபட்டிருந்ததும் ஏ.என். சிவராமன், கே.ஆர்.வாசுதேவன், நா.பா., கி.கஸ்தூரிரங்கன், ஐராவதம் மகாதேவன் ஆகிய நான் பணிபுரிந்த காலத்து தினமணி குழும ஆசிரியர்கள் என்மேல் பிரியம் செலுத்தி எனக்கு ஆதரவாக இருந்ததுமே காரணங்கள்.
ஒரே நிறுவனத்தில் பல்லாண்டுகள் பணிபுரிவதும் அல்லது பணி புரியாததும் என் சொந்த விஷயங்கள். இலக்கியக் கோட்பாடு தொடர்பான சர்ச்சையில் என் சொந்த விஷயத்தை இழுப்பது தேவையற்றது.
பாலகுமாரனின் பதிலுக்கு நான் எந்த பதிலும் சொல்லவில்லை. க.நா.சு. தாம் எழுதிய விமர்சனத்திற்கு ஒரு விமர்சனம் வந்தால், அதற்கு பதில் சொல்லிக் கொண்டிருக்க மாட்டார். "என்னுடையது என் கருத்து, அதற்கு பதில் சொன்னவருடைய கருத்து அவருடையது, அவ்வளவுதான்!' என்பார் சிரித்துக் கொண்டே. நா.பா. நம்மைப் பற்றிய விமர்சனத்திற்கு பதில்சொல்லி அந்த விமர்சனத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பது தேவையற்றது என்பார்.
பாலகுமாரன் குழந்தை மனம் படைத்தவர் என்பதையும் அவரது கோபதாபங்கள் நீடித்தவை அல்ல என்பதையும் நான் அறிவேன். கொஞ்ச காலத்தில் என் இனிய நண்பர் கவிஞர் பொன்னடியானுக்கு மணிவிழா நடைபெற்றது. அதில் பேச்சாளர்களாக நானும் பாலகுமாரனும் அழைக்கப்பட்டிருந்தோம். அரங்கு கொள்ளாத கூட்டம். என் நாலு வயது மகன் அரவிந்தனோடு நான் சென்றிருந்தேன். கூட்டத்தில் என் மகனை எங்கே யாரிடம் விடுவது என்று தெரியாததால் மேடையில் அவனை என் மடியில் வைத்துக் கொண்டு உட்கார்ந்தேன்.
என் அருகே பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்த பாலகுமாரன் என் மகனை வாரி எடுத்து, அவன் கன்னங்களில் மாறி மாறி முத்தமிட்டார். அவன் காதில் மந்திரம்போல் ஏதோ முணுமுணுத்தார். என் கையை இறுகப் பற்றியவாறு நெடுநேரம் அமர்ந்திருந்தார்.
கூட்டம் முடிந்து வீட்டுக்கு வந்த பின்னர் என் மகனிடம் பாலகுமாரன் அவன் காதில் என்ன சொன்னார் எனக் கேட்டேன். "ஒண்ணும் புரியலப்பா. ஆனா அவர் தாடி உறுத்திச்சு. நீள தாடி இல்லே?' என்றான் என் மகன். (அவன் உறுத்தாத குறுந்தாடிக்குத் தான் பழகியிருந்தான்!)
பாலகுமாரனுடனான என் முதல் சந்திப்பு ஒரு மேடையில்தான் நிகழ்ந்தது. அது சென்னை ஏவி.எம். ராஜேஸ்வரி கல்யாண மண்டபத்தில் நடைபெற்ற இலக்கியச் சிந்தனை அமைப்பின் ஆண்டு விழா. பாலகுமாரன் "மெர்க்குரிப் பூக்கள்' நாவலுக்காகவும் கோமல் சுவாமிநாதன் "தண்ணீர் தண்ணீர்' நாடகத்திற்காகவும் நான் எனது "சின்னம்மிணி' என்ற கவுண்டர் சமுதாயத்தைக் களனாகக் கொண்ட சிறுகதைக்காகவும் ஒருசேரப் பரிசுபெற்றோம். பிறகு அடிக்கடி என்றில்லாவிட்டாலும் அவ்வப்போது பாலகுமாரனைச் சந்திக்கிற சந்தர்ப்பங்கள் வாய்த்துக் கொண்டிருந்தன.
சென்னை மேற்கு மாம்பலத்தில் மிதிலாபுரி மண்டபத்தில் என் திருமண வரவேற்பு நடைபெற்றது. வரவேற்பு நிகழ்ச்சிக்கு லா.ச.ரா., நா.பா., லட்சுமி என இன்னும் முக்கியமான எழுத்தாளர்கள் பலர் வந்திருந்தார்கள். பாலகுமாரனும் வந்தார். தான் எழுதிய "பச்சை வயல் மனது' என்ற புத்தகத்தைக் கையெழுத்திட்டு அன்போடு வழங்கினார். தி. ஜானகிராமன், நா.பா., வல்லிக்கண்ணன், சி.சு. செல்லப்பா, தி.க.சி. போன்றோர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த புத்தகங்கள் என்னிடம் உண்டு. அந்த வரிசையில் பாலகுமாரனின் புத்தகமும் சேர்ந்து கொண்டது. அன்றே அவர் புகழ்வாய்ந்த எழுத்தாளராகத் தொடங்கியிருந்தார். ரசிகர்கள் கூட்டம், முக்கியமாக ரசிகைகள் கூட்டம் என் திருமண வரவேற்பு நிகழ்ச்சியிலும் அவரை மொய்த்துக் கொண்டது.
கல்கிக்குப் பிறகு சுஜாதாவும் பிறகு பாலகுமாரனும் அதிக எண்ணிக்கையில் வாசகர்களைப் பெற்றவர்கள். (சுஜாதாவைப் போலவே பாலகுமாரனும் திரைத்துறையில் ஈடுபட்டார்.) எல்லோரையும் வசீகரிக்கிற நடை பாலகுமாரனுடையது. எடுத்தால் கீழே வைக்க விடாத விறுவிறுப்பு அந்த நடைக்கு உண்டு. பெண்களின் நுண்ணிய உணர்வுகளைப் பிரதிபலித்து அவர் எழுதியதால் நிறையப் பெண்கள் அவரது ரசிகர்களானார்கள். அவர் பிரதிபலித்த விதம் சரிதானா என்பதில் சிலருக்குக் கருத்து மாறுபாடிருக்கலாம். தி. ஜானகிராமன், லா.ச.ரா, சுஜாதா போன்றோரின் சாயல்கள் கலந்த கலவை பாலகுமாரனின் எழுத்து என்று சிலர் மதிப்பிடுவது சரியாக இருக்கக்கூடும்.
பல அதிரடியான கருத்துக்களையும் அவர் அவ்வப்போது சொன்னதுண்டு. "க.நா.சு. நேர்மையான விமர்சகர் அல்ல, க.நா.சு.வின் தராசு எனக்கு முக்கியமில்லை' என்றும் "பல தார மணமே இந்து சமூக மரபு' என்றும் அவர் சொன்ன கருத்துக்கள் சலசலப்பை ஏற்படுத்தின.
அவரது சில ரசிகர்கள் தோற்றத்தில் கூட அவரைப் பின்பற்றத் தொடங்கினார்கள். தற்போது தமிழ் இந்து டாட்காமில் பணிபுரியும் அவரது தீவிர ரசிகரான ராம்ஜி, தோற்றத்திலும் பாலகுமாரன் பாணியைப் பின்பற்றுபவர். சில ஆண்டுகள் அவரிடம் உதவியாளராகவும் பணியாற்றியவர். இல. கணேசன் போன்ற உயர்நிலை அரசியல் பிரமுகர்களும் பல முக்கியமான திரை நட்சத்திரங்களும் பாலகுமாரனது எழுத்தின் ரசிகர்கள்.
ஞானக்கூத்தனிடம் பாலகுமாரனுக்கு மிகுந்த மரியாதை இருந்தது. ஞானக்கூத்தன் காலமானபோது, திருவல்லிக்கேணியில் "ழ' சிற்றிதழ் ஆசிரியர் ராஜகோபாலும் "விருட்சம்' சிற்றிதழ் ஆசிரியர் அழகியசிங்கரும் சேர்ந்து நடத்திய ஞானக்கூத்தனுக்கான இரங்கல் கூட்டத்தில் தம் உடல்நிலையைப் பொருட்படுத்தாமல் பாலகுமாரன் நேரில் வந்து கலந்துகொண்டார். ஞானக்கூத்தனைத் தன் ஞானாசிரியர் எனச் சொல்லி அஞ்சலி செலுத்தினார்.
வணிக ரீதியான எழுத்து என்று முழுமையாக பாலகுமாரன் எழுத்தைப் புறக்கணிக்க இயலாது. அவர் எழுத்தில் வணிகத் தன்மையும் உண்டுதான். சுஜாதா எழுத்தில் இல்லாத வணிக நோக்கா?
ஆனால் அதையும் மீறி ஆழ்ந்த இலக்கியமாகவும் அவர் பல படைப்புக்களைத் தந்திருக்கிறாரே? பாலகுமாரன் எழுத்தும் அவருடையதைப் போன்ற வகையில் அமைந்ததுதான்.
"உடையார்' போன்ற அவரின் சமீபத்திய படைப்புக்களைப் பலர் கொண்டாடுகிறார்கள். ஆனால் என் கண்ணோட்டத்தில் அவரது தொடக்க கால நாவல்களான "மெர்க்குரிப் பூக்கள்', "இரும்புக் குதிரைகள்' போன்றவையும் தொடக்க காலச் சிறுகதைகளும் தான் அதிக இலக்கிய நேர்த்தி உடையவை. உடையாரில் வளவளப்பு அதிகம்.
அவர் எழுத்துத் துறையில் வெற்றி பெற்றதற்கு, அவர் எழுத்தாற்றல் மட்டுமல்ல, அவருடைய கடுமையான உழைப்பும் முக்கிய காரணம். நிறைய எழுதித் தள்ளினார். நூற்றுக்கணக்கான நாவல்களும் பலநூறு சிறுகதைகளும் கட்டுரைத் தொடர்களும் என வியக்கக்கூடிய பங்களிப்பு அவருடையது.
சில தொலைக்காட்சிகள் பாலகுமாரன் சாகித்ய அகாதமி பரிசு பெற்றவர் எனக் குறிப்பிட்டுச் செய்தி ஒளிபரப்பின. ஒருவேளை பாலகுமாரன் ஆன்மாவுக்கு அந்தச் செய்தி ஆறுதல் தந்திருக்கலாம். உண்மையில் அவருக்கு அகாதமி பரிசு கிட்டவில்லை என்பது மட்டுமல்ல, தமக்கு அது கிட்டாதது பற்றி அவருக்கு வருத்தமும் இருந்தது.
இல. கணேசன் நடத்திய பொற்றாமரைக் கூட்டமொன்றில் என்னைச் சந்தித்த அவர், என் கையைப் பற்றிக் கொண்டு தமக்கு சாகித்ய அகாதமி பரிசு கிட்டாதது பற்றிய தம் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டார். "அது கிட்டாமலே நான் காலமாகி விடுவேன் என்று நினைக்கிறேன், நான் இன்னும் அதிக நாட்கள் வாழ வாய்ப்பில்லை!' என்றும் சொன்னார். அவர் வாக்கு உண்மையாகிவிட்டது.
அவரது ஆன்மிகம் பிடிக்காததால் அவர் எழுத்தைப் பற்றிச் சலித்துக் கொள்பவர்கள் இருக்கிறார்கள். பாலகுமாரன் ஆன்மிகத்தின் மூலம் தம்மை ஒரு குருநிலையில் வைத்துக் கொள்ளத் தலைப்பட்டாரோ என்று தோன்றுகிறது. அவர் பிற்காலத்தில் வைத்துக் கொண்ட அவரின் மிக நீண்ட நரைத்த தாடி, அவருக்கு ஒரு முனிவர் தோற்றத்தைக் கொடுத்தது. அவர் விரும்பாமலேகூட அவரை குருவாகக் காண்பவர்கள் இருக்கலாம். விரும்பியோ விரும்பாமலோ அவரை ராம்சுரத்குமாரின் சாயலில் காணும் ஒரு கூட்டமும் பெருகியிருக்கிறது.
அவரது உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தச் சென்றிருந்தேன். நான் சென்ற காலை வேளையில் அங்கே இயக்குநர் வசந்த் போன்ற திரைத்துறை சார்ந்த ஓரிரு இலக்கிய அன்பர்கள் நின்றிருந்தார்கள். மற்றபடி அங்கு கூடியிருந்தவர்கள் பெரும்பாலும் ஆன்மிக அடியவர்கள்தான். பலர் நாற்காலியில் அமர்ந்தவாறு ஜெய குருராயா என்று ராம்சுரத்குமார் நாமத்தை உச்சரித்துக் கொண்டிருந்தார்கள். அவரது உடலின் பின்னால் பெரிய ராம்சுரத்குமார் படம் ஒன்று வைக்கப்பட்டிருந்தது.
ஆன்மிகத்தில் நாட்டமுடைய தீவிர எழுத்தாளர்கள் தமிழில் கொஞ்சம்பேர் இருந்திருக்கிறார்கள். தருமூ சிவராமு, எம்.வி. வெங்கட்ராம், லா.ச.ராமாமிர்தம் போன்றோர் தங்கள் ஆன்மிக நாட்டத்தை வெளிப்படுத்திக் கொண்டவர்கள். தி.ஜானகிராமன், நா. பார்த்தசாரதி போன்றோர் ஆன்மிக நாட்டம் இருந்தாலும் அதைப் பலரறிய வெளிப்படுத்திக் கொள்ளாதவர்கள். ஆனால் கடந்தகால எழுத்தாளர்களில் தன்னைக் குருநிலையில் போற்றும் வகையில் தன் ஆன்மிக நாட்டத்தை அமைத்துக் கொண்டவர் என்று பாலகுமாரனை மட்டுமே சொல்ல முடியும் எனத் தோன்றுகிறது.
சில ஆண்டுகள் முன்னால் எழுத்தாளர் தேவகோட்டை வா. மூர்த்தியின் மகன் திருமணத்திற்குச் சென்றிருந்தேன். பாலகுமாரனும் அங்கு வந்தார். அப்போது நடுத்தர வயதுடைய பெண்மணி ஒருவர், ஓடிவந்து பாலகுமாரனின் பாதங்களில் விழுந்து வணங்கிக் கண்ணீர் மல்க நின்றுகொண்டிருந்தார். பாலகுமாரன் அவர் தலைமேல் தன் கையை நீண்ட நேரம் வைத்து அவருக்கு ஆசி வழங்கினார்.
பின்னொருநாள் ஆழ்வார்ப்பேட்டை உணவகம் ஒன்றில் பாலகுமாரனைப் பார்த்தேன். நாங்கள் இலக்கியம் தான் பேசினோம். அப்போதும் அவரைச் சுற்றி நடுத்தர வயதுப் பெண்கள் பலர் பக்தியுடன் நின்றிருந்தார்கள். அவர்களெல்லாம் ராம்சுரத்குமாரின் பக்தைகள் எனச் சொல்லி பாலகுமாரன் அவர்களை எனக்கு அறிமுகப் படுத்தினார்.
அறிஞர் அண்ணாவை ஒருவருக்குப் பிடிக்கிறதா இல்லையா என்பது வேறு விஷயம். ஆனால் அண்ணா காலமானபோது வந்த கூட்டம் கின்னசில் இடம்பெறும் எண்ணிக்கையைக் கொண்டிருந்தது என்பது ஒரு வரலாற்று உண்மை. அண்ணாதுரையைப் பிடிக்காதவர்களும்கூட இந்தச் செய்தியை ஏற்றுக் கொண்டுதான் ஆகவேண்டும். ஏனென்றால் அது உண்மை.
அதுபோல் வணிக எழுத்து என்று சொல்லி பாலகுமாரனை மட்டம் தட்டுபவர்கள் இருக்கலாம்.
அவரது ஆன்மிகம் பிடிக்காதவர்களும் இருக்கலாம். ஆனால் அவரது இலக்கியத்தாலும் ஆன்மிகத்தாலும் அவர் மிக அதிக எண்ணிக்கையில் வாசகர்களைப் பெற்றிருந்தார் என்பதை யாரும் மறுக்க இயலாது. ஏனென்றால் அது உண்மை.
ஓர் எழுத்தாளரை முழுமையாகப் புறக்கணிக்கவோ முழுமையாகக் கொண்டாடவோ தேவையில்லை. அப்படிச் செய்தால் அது நியாயமும் இல்லை. குறைகளும் குணங்களும் கலந்ததே வாழ்வு. இலக்கிய வாழ்வும் அப்படித்தான். குணம் நாடிக் குற்றமும் நாடி மிகை நாடினால், இலக்கிய உலகம் பாலகுமாரனைப் புறக்கணிக்க இயலாது என்றே தோன்றுகிறது.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
யாரும் எதிர்பார்க்காத வேளையில் தம் வாசகர்களையும் எழுத்துக்களையும் விட்டுப் பிரிந்திருக்கிறார் எழுத்துச்சித்தர் பாலகுமாரன். குளியலறையில் ஏற்பட்ட ஒரு கால் வழுக்கல், இலக்கிய உலகத்துக்கு இத்தனை பெரிய சேதத்தை ஏற்படுத்துமென யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது.
ஒரு கவிஞனாகத் தொடங்கி, நாவலாசிரியராக பரிமளித்து, திரைப்பட வசனகர்த்தாவாக ஜொலித்து, இயக்குநராகவும் அறியப்பட்டவர் பாலகுமாரன்.
"மெர்க்குரி பூக்கள்' முதல் "உடையார்' வரையிலான எழுத்துப் பயணத்தில் ஆயிரக்கணக்கான வாசக- வாசகியரோடு, ஆன்மிக உள்ளங்களையும் தன்பால் ஈர்த்தவர். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது முதல் தமிழக அரசின் விருதுகள் வரை வாங்கிக் குவித்தவர்.
அவரது மறைவுக்கு "இனிய உதயம்' ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.
ஆயிரமாயிரம் வாசக உள்ளங்கள் கண்ணீர் வடிக்க, படைத்து முடித்த நிறைவோடு உலகைப் பிரியவேண்டும் என்பதுதான் எந்தவொரு படைப்பாளியின் எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். அந்த வகையில் பாலகுமாரனின் எதிர்பார்ப்பு பூர்த்தியானதாகவே சொல்ல முடியும்.
இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா!
யாரும் எதிர்பார்க்காத வேளையில் தம் வாசகர்களையும் எழுத்துக்களையும் விட்டுப் பிரிந்திருக்கிறார் எழுத்துச்சித்தர் பாலகுமாரன். குளியலறையில் ஏற்பட்ட ஒரு கால் வழுக்கல், இலக்கிய உலகத்துக்கு இத்தனை பெரிய சேதத்தை ஏற்படுத்துமென யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது. ஒரு கவிஞனாகத் தொடங்கி, நாவலாசிரியராக பரிமளித்து, திரைப்பட வசனகர்த்தாவாக ஜொலித்து, இயக்குநராகவும் அறியப்பட்டவர் பாலகுமாரன். "மெர்க்குரி பூக்கள்' முதல் "உடையார்' வரையிலான எழுத்துப் பயணத்தில் ஆயிரக்கணக்கான வாசக- வாசகியரோடு, ஆன்மிக உள்ளங்களையும் தன்பால் ஈர்த்தவர். ராஜா சர் அண்ணாமலை செட்டியார் விருது முதல் தமிழக அரசின் விருதுகள் வரை வாங்கிக் குவித்தவர். அவரது மறைவுக்கு "இனிய உதயம்' ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது. ஆயிரமாயிரம் வாசக உள்ளங்கள் கண்ணீர் வடிக்க, படைத்து முடித்த நிறைவோடு உலகைப் பிரியவேண்டும் என்பதுதான் எந்தவொரு படைப்பாளியின் எதிர்பார்ப்பாக இருக்கமுடியும். அந்த வகையில் பாலகுமாரனின் எதிர்பார்ப்பு பூர்த்தியானதாகவே சொல்ல முடியும்.