ணவர்கள் மனைவிகளுடன் சண்டை போடுவது நல்லதல்ல என்று எனக்குத் தெரியும். எனினும், அன்று காலையில் எங்களுக்கிடையே சிறிய ஒரு சண்டை நடந்தது. சாதாரண விஷயத்திற்காக... எங்களுடைய குழந்தைக்கு ஒரு சட்டை வேண்டுமென்று ஒரு வாரத்திற்கு முன்பே என்னிடம் கோரிக்கை வந்திருந்தது. பிறகு... ஒவ்வொரு நாளும் வெளியேறும்போது ஞாபகப்படுத்தவும் செய்தாள். அது தேவையற்றது. ஞாபக மறதியால் உண்டான பிரச்சினையல்ல.

அதுமட்டுமல்ல; அந்த ஞாபகம் அடிக்கடி மனதில் குண்டூசிபோல குத்திக்கொண்டும் இருந்தது. அவனுடைய சட்டையின் கிழிசல்கள் என் இதயத்தில் காயங்களை உண்டாக்கியது. தோளிலும் நெஞ்சிலும் உள்ள கிழிசல் களின் வழியாக அவனு டைய வெளுத்த சரீரம் சிறிது சிறிதாக வெளியே தெரிந்தது. அது என்னுடைய மனைவியை வேதனைப் படுத்துகிறது என்பது சரி...

ஆனால் பணம்? நான் ஒரு கிராமத்துக் கணக்குப் பிள்ளையும், பத்திரம் எழுதுபவனும் மட்டுமே...

ஆட்களுக்கு சண்டை போடத் தோன்றும்போது மட்டுமே எனக்கு காசு கிடைக்கும். குத்தகைக்கு எடுத்திருப்பவன் வயலை சீர்செய்யாமல் இருப்பது, பக்கத்திலுள்ள விவசாயியின் நீரை ஒவ்வொருவனும் தன்னுடைய விவசாய நிலத்திற்குள் திறந்து விட்டதைத் தொடர்ந்து ஒரு அடிபிடி சண்டை உண்டாவது, மிரட்டலைத் தொடர்ந்து ஒரு புகார் மனு... இப்படி ஏதாவது வரவேண்டும். பழைய குடும்பத்துச் சொத்துகளை பாகம் பிரிப்பதற்குத் தயாரானாலும் சரி... எங்களுடைய கிராமத்தில் பெரிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பாகம் பிரிக்கவேண்டியது- மரத்தை பணயம் வைத்து வாங்கிய கடனை வைத்துதான். நீதிமன்றத்தில் ஏறுவதற்கு ஆட்கள் குறைந்துவிட்டார்கள். ரேஷன் அரிசி வாங்குவதற்காக சிரமப்படக்கூடிய ஆட்கள் பிடிவாதத்திற்காக வழக்கை நடத்தவில்லை. தேவைப்படுபவற்றைக் கொடுப் பதென்பது இறுதிநாளிலேயே நடக்கும். காலம் மிகவும் மோசம்... என்னைப் போன்றவர்களைக் கொல்வதற்குத்தான் ஆட்கள் கிளம்பியிருக்கிறார்கள். எங்களுக்கும் குழந்தைகளும் குடும்பமும் இருக்கின்றன என்பதை ஒருவரும் நினைப்பதில்லை. சாயங்காலம் வருவதற்கு மத்தியில் ஐந்நூறு பொய்களையும் அறுநூறு பித்தலாட்டங்களையும் கூறி ஒப்பிப்பது ஒரு பொழுதுபோக்கிற்காக அல்ல. குழந்தையின் சட்டைக் கிழிசலும் மனைவியின் வயிற்றுவலியும் நினைவில் வரும். மேலும் ஒருமுறை கோபமான குரலில் கூறவும் செய்வாள். ஆரம்ப காலத்தில் கவலை உண்டானது.

Advertisment

இப்போது பழகிப்போய்விட்டது. எனினும், அவ்வப் போது எனக்கு ஏதோ ஒரு இது...

ஒருமுறை நினைவுபடுத்தி அடங்கியிருந்திருந்தால், எனக்கும் மனைவிக்கு மிடையே சண்டைபோட வேண்டிய நிலைமை உண்டாகியிருக்காது. பெண்ணின் போராட்ட மாயிற்றே. சாம்பலைப்போல கனன்று... கனன்று நின்றுகொண்டிருக்கும். சட்டையை அணியும்போது ஞாபகப்படுத்தினாள். பொத்தான் இடும்போது... தலைவாரும்போது... ஆதாரங்கள் கொண்ட கட்டினை எடுத்துக் கையிடுக் கில் வைக்கும்போதும் அவள் கூறாமல் இருந்த தில்லை: ""ஓ... நான் யாருகிட்ட சொல்றேன்? இந்த தூண்கிட்ட சொன்னா ஒரு பதில் கிடைக்கும். இருக்குற ஒரு குழந்தைக்கு...'' அவள் ராமாயணத்தை விரித்து வைக்கிறாள். இனி ஆறு காண்டங்களையும், தேம்பித்தேம்பி அழக்கூடிய ஒரு ஏழாவது காண்டத் தையும் வாசித்துவிட்டுத்தான் அடங்குவாள். அதை அனுமதிக்கக்கூடாது.

""நல்லது... மனசில்ல...'' என்று நானும் கூறினேன்.

Advertisment

அதிகமான கோபம் உண்டானது. நான் அந்த அளவுக்கு பொறுப்புணர்வு இல்லாதவனா? எனக்கு கற்றுத் தருவதற்கு வந்திருக்கும் ஒரு அறிவாளி! இதற்கெல்லாம் மருந்திருக்கிறது. ஆனால் மானமுள்ள ஆண் அதைச் செய்யக்கூடாதே! குழந்தை எனக்குமானவன் அல்ல என்று கூறமுடியுமா? அந்த வகையில் சண்டை முற்றியது. அது அவளை அழச்செய்யவும், என்னை அதிகமாக கோபமடையச் செய்து வெளியேறத் தூண்டவும் செய்தது. எங்களுடைய இந்த சண்டைக்கு மத்தியில் இருவரின் முகத்தையும் பார்த்து பதைபதைத்து நின்றுகொண்டிருந்தது குழந்தை. நான் காற்றைப் போல வெளியேறி நடந்தேன். சிறிதுதூரம் சென்றபிறகு தான் நினைவு வந்தது. குழந்தைக்கு எப்போதும் கொடுக்கக்கூடிய முத்தத்தைத் தரவில்லை என்ற விஷயம்... கண்ணிலிருந்து மறைவதுவரை வாசலிலிருந்த தூணைப் பிடித்தவாறு அவன் என்னை எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க வேண்டும். அந்தச் சிறிய கண்கள் நிறைந்து ததும்பியிருக்கும். "என்னைத் தூக்கல.. முத்தமிடல...' என்று மேலும் மேலும் அந்த இளம்மனம் தேம்பியிருக்கும். கஷ்டம்தான்! அன்று சீக்கிரமே சட்டையுடன் திரும்பி வரவேண்டுமென்று உறுதிப்படுத்திக்கொண்டேன். அந்தச் செயல் தாயிடமும் மகனிடமும் மன்னிப்பு கேட்பதாகவும் இருக்கும்.

அவ்வாறு... தலையைத் தாழ்த்தி வைத்துக்கொண்டு நடந்துசெல்லும்போது, பின்னாலிருந்து ஒரு குரல் கேட்டது. ""இதோ... ஒரு விஷயம் சொல்லணும்...'' நான் திரும்பிப் பார்த்தேன். குஞ்ஞலவி மேற்துண்டைக் கையில் வைத்து வீசியவாறு ஓடிவந்துகொண்டிருந்தார். அவரைப் பார்த்ததும் விஷயம் எனக்கு ஞாபகத்தில் வந்தது. இந்த கிழவன் எனக்கு துரோகம் செய்ய ஆரம்பித்து இரண்டு நாட்களாகிவிட்டன. கேட்காமல் இருக்கமுடியுமா? பெரும்பாலான ஆட்களும் காசு தருவது வழக்கை நடத்துவதற்காக அல்ல. அவர்களுடைய வழக்கைக் கூறி கேட்க வைப்பதற்கு ஒரு ஆள் வேண்டும் என்பதற்குத்தான். குஞ்ஞலவியைப் பொருத்தவரையில் விஷயம் சற்று பெரியதுதான். அவருக்கு ஒரு மகள் இருக்கிறாள். எனக்குத் தெரியும். வயதிற்கு வந்தவள்.

அவளைப் பார்க்கும்போது நமக்கு பூவன்பழம் ஞாபகத் தில் வரும். ஒரு அப்பாவிப் பெண். வாயில் முழுமையான சிரிப்புடனும், கையில் குலுங்கும் வளையல்களுடனும் ஓடித்திரிவாள். சொல்லும்போது மூக்கும் இருக்காது. ஒருநாள் என் சரீரத்துடன் தொட்டது மாதிரியும், தொடவில்லை என்பது மாதிரியும் ஒரு ஓட்டம். நான் அதிர்ச்சியடைந்துவிட்டேன். கால் பாதத்திற்கு அருகில் திடீரென்று ஒரு கார் வேகமாகச் சென்றால், காயமெதுவும் உண்டாகவில்லையென்றாலும் ஒரு அதிர்ச்சி உண்டாகுமல்லவா? இது என்ன ஒரு பெண்ணப்பா என்று கூறிவிட்டு, பிறகும் என்னென்னவோ மனதில் நினைத்தவாறு நான் நடந்தேன். பத்தடி நடக்கவில்லை. அதே வேகத்தில் பெண் திரும்பி வருகிறாள்.

இவள் பன்றியைப்போல வேகமாக ஓடிப்பழகுகிறாளா என்ன? பெருமூச்சு விட்டுக்கொண்டும், அடக்க முடியாமல் சிரித்துக்கொண்டும் அவள் என்னிடம் கூறினாள்:

""அதை இங்க தாங்க.''

""எதை?''

""என் தலைத் துணியை... அதைக்கொண்டு போனா சரியா இருக்காது.''

அவள் சுட்டிக்காட்டிய இடத்தைப் பார்த்த பிறகுதான் கண்டேன்- அவளுடைய தலைத்துணி என் குடையின் நுனியில் தொங்கிக்கொண்டிருந்தது. ஆயிரம் பிரச்சினைகளுடன் போய்க்கொண்டிருந்த நான் இப்படி ஒரு தலைத்துணி பின்னால் தொங்கிக்கொண்டு ஆடும் விஷயத்தை அறிந்திருக்கவில்லை. அந்த கிழிந்த துணியையும் திட்டுகிற வடிவத்தில் ஒரு பார்வையையும் அளித்து, அவளை போகச் செய்தேன். அன்றே நான் நினைத்தேன்- இந்த இளம்பெண்ணுக்கு பிரச்சினை உண்டாகுமென்று. அது நடந்துவிட்டது. பெண்ணுக்கு கர்ப்பம் உண்டாகிவிட்டது. பிரசவமாகி விட்டாள்.

ஆனால் வெளிப்படையாகத் தெரியும் வண்ணம் கணவன் இல்லை. கூட்டமும் சத்தமும் உண்டானதும், குஞ்ஞலவியும் கவலையில் மூழ்கிவிட்டார். ஆள் யாரென்று தந்தைக்கும் தெரியும். பலசரக்கு வியாபாரியான பாப்புட்டி அங்கு வருவதும் போவதும் உண்டு என்ற விஷயம் தெரிந்ததைப்போல அவர் காட்டிக்கொள்ளவில்லை. பாப்புட்டியின் கடையிலிருந்துதான் பொருட்கள் வாங்குவது... பணம் கொடுப்பதும் இல்லை. பெண்ணின் கர்ப்பம் முற்றியபிறகு, அவனுடைய செருப்பின் ஓசை அந்த வீட்டின் வாசற்படியைக் கடந்து வருவதில்லை.

""நேற்று சொன்ன விஷயத்துக்கு வழி கண்டு பிடிக்கணுமே?'' குஞ்ஞலவி எனக்குப் பின்னால் பதுங்கி நடந்தவாறு கூறினார்.

""பாப்புட்டியைப் போய்ப் பாருங்க. அதுதான் நல்லது.''

"பலதடவை பார்த்தாச்சு. அவன் ஒத்துக்க வேணாமா? அவமானத்தை உண்டாக்கிட்டு, அவன் ஓடி ஒளியி றானே?''

""இப்போ என்ன சொல்றீங்க?''

""இங்க நிக்கற தென்னை மரம் ஏதாவது பேசினா அவன் பேசுவான். எல்லாத்தையும் கேட்டுட்டு, அசையாம இருக்குறான்.'' சற்று கோபத்துடன் குஞ்ஞலவி கூறிமுடித்தார். பாப்புட்டியின் கவலையும் எனக்குத் தெரியும். அவனுக்கு மனைவி இருக்கிறாள். அவள் அரேபிய மொழி பேசக்கூடிய ஒருத்தி. சற்று கூர்ந்து பார்த்தால் பாப்புட்டி உட்கார்ந்துவிடுவான்.

""ஒரு மனைவி இருக்கறது காரணமா இருக்கும்.'' நான் சமாதானப்படுத்தினேன்.

""அதனால என்ன? நம்ம கூட்டத்தில அப்படி இருக்குதா? அறக்கால பீவியைக் கட்டினாலும் பிறகு கட்டலாம். நம்ம மகளைக் கட்டினாலும் பிறகு கட்டலாம். ஒரு பெண்ணையும் குழந்தையையும் கஷ்டப்பட வைக்கிறது நியாயமா?''

sdaf

நியாயமல்ல என்று எனக்குத் தோன்றியது. ஆனால், பாப்புட்டியுடன் வழக்கு நடத்துவதற்கு இந்த ஏழைகளால் முடியுமா? திடீரென்று என்னுடைய குழந்தையையும் அவனுடைய கிழிந்த சட்டையையும் பற்றிய நினைவு வந்தது. அந்த கிழிசலின்வழியாக அவனுடைய வெளுத்த சரீரம் வெளியே தெரிந்தது. ஒரு புகார் எழுதிக்கொடுக்கலாம். என் தொழில் அதுதான். பணம் தருபவனுக்கு பணி செய்து தருவது... அறிவுரை கூறுவதற்கு என்னை யாரும் நியமிக்கவில்லை. எனினும், அந்த குழந்தையை என்றென்றைக்குமாக தந்தை இல்லாதவனாக்க வேண்டும் என்பதை நினைத்தபோது, நான் இப்படிக் கூறினேன்: ""சரி... நான் பாப்புட்டிகிட்ட ஒருமுறை பேசிப் பார்க்குறேன்.''

""அந்த கில்லாடி கேட்க மாட்டான். இருந்தாலும் ஒருமுறை சொல்லிப் பாருங்க.''

குஞ்ஞலவி பிரிந்து சென்றான். சிறிதுநேரம் சென்றபிறகு நான் செய்தவை அனைத்தும் அபத்த மானவை என்று தோன்றியது. அவனுக்கு புகார் எழுதிக்கொடுத்திருந்தால் நான்கு காசு கிடைத்திருக்கும். அந்த குழந்தைக்கு தந்தை இல்லாமல் போனால் எனக்கென்ன? ஊரிலுள்ள பிள்ளைகள் அனைவருக்கும் தந்தையை உண்டாக்குவதற்கு நான் ஒப்பந்தம் போட்டிருக்கவில்லை. தந்தைக்கு மகன் வேண்டாம் என்றால், மகனுக்குத் தந்தை வேண்டாம். அந்தப் பெண் எதற்கு முருங்கைக் கொம்பைத் தேடிப் பிடித்தாள்? கனம் அதிகமானதும், அடிபட்டு விழுந்துவிட்டாள். இப்போது அழுது என்ன பயன்? இவற்றையெல்லாம் கவனித்துக்கொண்டிருக்கவேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறதா? இப்படிப்பட்ட தவறு நடக்காமலிருப்பதற்கு இனிமேல் கவனமாக இருக்கவேண்டும்.

வக்கீலின் அறைக்குள் நுழைந்தபோது, மூன்று நான்குபேர் என்னை எதிர்பார்த்து அங்கு அமர்ந் திருந்தார்கள். பெரும்பாலானவர்கள் கிழிந்த சட்டைக் காரர்கள். குடியிருக்கும் வீட்டைக் காலிபண்ணும்படி வீட்டின் சொந்தக்காரர் கொடுத்த உத்தரவைச் சற்று நிறுத்தி வைக்கவேண்டுமென்று ஒவ்வொரு மனுவும் நீதிமன்றத்தில் கொடுத்து, அந்த நியாயத்திற்காக எனக் குப் பின்னால் நடந்து வெறுப்படைய வைக்கும் ஈக்கள்... அவர்களின் கைவசம் இருக்கும் பொருட்கள் உண்டான காலத்திலிருந்து இங்கு இன்றுவரை அதன்மீது மாறிமாறி வந்துகொண்டிருக்கும் சொத்துரிமையையும், அந்த மண்ணின் சிறப்புகளையும் பற்றி மூச்சுவிட முடியாத அளவுக்குக் கதைகளை நான் கேட்டிருக்கிறேன்.

நாற்காலியில் உட்கார்ந்ததுதான் தாமதம்- ஒவ்வொருவராக ஆரம்பித்தார்கள்: "அப்போ தந்த... நம்மோட அந்த மனு' என்றும் "விற்கக்கூடிய அந்த வழக்கில்' என்றும் அது ஆரம்பமானது. எல்லாரையும் ஒருமுறை பார்த்தேன். சற்று சத்தும் ரத்தமும் உள்ள ஒரு மனிதர் அந்தக் கூட்டத்தில் இருந்தார். ஏதாவது கூறி ஈக்களை விரட்டியடித்து விட்டுத்தான் அந்த மனிதரிடம் பேசவேண்டும். நான் ஒவ்வொருவரையும் கவனிக்கிறேன் என்பதைப் போல காட்டிக்கொண்டு, ஒவ்வொரு பதிலையும் கூறி அனுப்பி வைத்தபோது, நீதிமன்றத்தின் மேலேயிருந்து மணி பதினொன்று அடிப்பதைக் கேட்டேன்.

""ம்... என்ன விஷயமாக வர்றீங்க?'' -அந்த சதைப் பிடிப்பும் ரத்தமும் உள்ள மனிதரைப் பார்த்து நான் சிறிது புன்சிரிப்பைத் தவழவிட்டேன்.

அவருக்கு ஒரு புகார் தரவேண்டும். அதை அன்றே செய்துதரவேண்டும். நான் சந்தோஷப்பட்டேன். என் குழந்தையின் சட்டைக்கும் வழிபிறந்து விட்டதே என்பதற்காக... அந்த மனிதர் எனக்கு நன்கு தெரிந்தவர். வேலை செய்து தருவதற்கு காசு தருவார். தந்தும் இருக்கிறார். எழுதுவதற்கான கூலி விஷயத்தில் கஞ்சத்தனம் காட்டக்கூடிய கூட்டத்தைச் சேர்ந்தவரல்ல.

என் கைக்கு முழுமையான வேகம் உண்டானது. தாளில் பேனா கூக்குரலிட்டு உற்சாகமாக ஓடியது. இரண்டு மணி நேரங்களில் பிரதியும் முடிக்கப்பட்டது. அவர் ஒன்றிரண்டு திருத்தங்கள் கூறினார். அதையும் ஏற்றுக்கொண்டு முழுமையாக எழுதி முடிக்கப்பட்ட போது, மணி இரண்டே கால் ஆனது.

""எவ்வளவு காசு வேணும்?'' இந்தப் பக்கம் பார்த்துக்கேட்டார். நான் கூறினேன். அந்த மனிதர் பர்ஸைத் திறந்தபோது நான் என்னையும் மீறி சற்று பெருமூச்சுவிட்டேன். குழந்தையின் சட்டை மனதில் நிழலாடிக் கொண்டிருந்தது. எப்படிப்பட்ட துணியை வாங்கவேண்டும்? கோடு போட்டதா... போடாததா? கோபத்திற்கு மத்தியில் காலையில் நான் அதைக் கேட்கவில்லை.

நோட்டுகளை எடுத்து மேஜையின்மீது வைத்தார். பிறகு, பர்ஸிற்குள் விரலை நுழைத்து அசைத்தவாறு அவர் கூறினார்: "முத்திரைக்கான பணம் இது... வரும் திங்கட்கிழமை நான் இங்க வர்றப்போ எழுதியதற்கான கூலியைத் தாறேன். இவ்வளவு ஆகும்ன்னு நினைக்கல. இந்த புகாரை இன்னிக்கே கொடுங்க. பிறகும் என்னவெல்லாமோ கூறினார். நான் எதையும் கேட்கவில்லை. சரியாகப் பணம் தரக்கூடிய அந்த நல்ல மனிதரிடம் நான் என்ன கூறுவது? மெதுவாக எழுந்து முத்திரையை வாங்கி ஒட்டி புகாரைக் கொடுத்துவிட்டு திரும்பி வந்தபோது மணி மூன்றரை ஆகிவிட்டது.

""ஒரு தேநீர் குடிக்கலாமா?'' அந்த நல்ல மனிதர் குடையை எடுத்தவாறு கேட்டார்.

""வேணாம்...'' நான் பதில் கூறினேன். அவர் விடைபெற்றுப்போகவும் செய்தார். ஏன் தேநீர் வேண்டாமென்று கூறினோம் என்று அப்போதுதான் நினைத்துப் பார்த்தேன். எனக்குப் பசித்தது. செய்தவை அனைத்தும் தவறு. எழுதியதற்கான கூலியை சரியாகக் கேட்டிருக்க வேண்டும். முன்பு சரியாக தந்திருக்கிறார் என்றால், சரியாக வேலையைச் செய்துமிருக்கிறேன். ச்சே... ஒரு நாள் முழுவதையும் வீணாக்கிவிட்டேன். கையில் மூன்றரை காசு இல்லை.

நான் எப்படி வீட்டிற்குத் திரும்பிச் செல்வது? அப்போது முழு உலகத்தின்மீதும் எனக்கு வெறுப்பும் கோபமும் உண்டாகின. முகத்தை "உம்'மென்று வைத்தவாறு அதே இடத்தில் உட்கார்ந்திருக்க, ஒரு குடை என்னுடைய அறைக்குள் தலையை நீட்டுகிறது. பின்னால் வந்த மனிதன் நம் பாப்புட்டி... அவனைப் பார்த்தபோது எனக்கு வெறுப்பு உண்டானது. இந்த கழுதை இனி என்ன பிரச்சினையைக் கொண்டுவந்திருக்கிறான்? ஒரு குழந்தையை தந்தையில்லாமல் ஆக்கிய கெட்டவன்! ஒரு பெண்ணை சாலையில்விட்ட துரோகி! ""ம்...?'' நான் சற்று முணுமுணுத்துக்கேட்டேன்.

அவன் பதில் கூறவில்லை. ஒரு மெல்லிய புன்னகையைத் தவழவிட்டவாறு முன்னால் கிடந்த பெஞ்சின்மீது அமர்ந்தான். ""ம்...?

என்ன முதலாளி?'' நான் மீண்டும் விசாரித்தேன்.

""இடையில உங்களைக் கொஞ்சம் பார்க்க வேணாமா?'' என்று மெதுவாக ஆரம்பித்தான். என்னைவிட பார்ப்பதற்கு அழகான மனிதர்கள் உலகத்தில் இருக்கிறார் கள் என்ற விஷயம் எனக்குத் தெரியும். ஒரு சுற்றுலா மாளிகைக்குச் செல்வதற்கு பதிலாக என்னைத் தேடிவரும் அளவிற்கு நான் அழகற்றவனும் அல்ல. அப்படியென்றால்... அது ஒரு ஆரம்ப உரை!

""விசேஷமா எதுவுமில்லயே?'' நான் அவனை விஷயத்திற்குள் கொண்டு வருவதற்கு முயற்சித்தேன்.

""நமக்கு எதிர்பாராம ஒரு பிரச்சினை வந்து சேர்ந்திருக்கு.'' பாப்புட்டி ஆரம்பித்தான். குஞ்ஞலவியின் மகள் பிரசவமானதற்கான பொறுப்பைத் தன் தலையில் போட்டிருக்கி றார்கள் என்றும், தன்னைப் பற்றி மோசமான வார்த்தைகளைக் கூறிப் பரப்புகிறார்கள் என்றும், பிறப்பு- இறப்பு பதிவேட்டில் தன் பெயரைச் சேர்ப்பதற்கு முயற்சிக்கிறார்கள் என்றும், அதற்கெல்லாம் தான் சம்மதிக்கவில்லை என்றும்... பல எதிர்ப்புகளும் அவன் கூறுவதற்கு இருந்தன.

""இதை நீ மரியாதையோட முடிக்கக் கூடாதா பாப்புட்டி?'' நான் இடையில் புகுந்து கேட்டேன்.

""நீங்க என்ன சொல்றீங்க? அவ பிரசவமானதுக்கு நாம செலவுசெய்ய முடியுமா?''

அதைக் கூறும்போது அவனுடைய முகத்தில் உண்டான சுருக்கங்களை நான் கூர்ந்து கவனித்தேன். அவை அந்த வார்த்தைகளை மறுத்துக்கொண்டு வெளிப்பட்டன. "கழுதை... இந்த அறிவு கொஞ்ச முன்னால் தோணியிருக்கணும்' என்று நான் கூறவில்லை. அருகில் அமர்ந்து தாழ்ந்த குரலில் கேட்டேன்: ""தனிப்பட்ட முறையில கேட்கிறேன்... உங்களுக்கு அதுல பங்கிருக்கா?''

என் கேள்வியின் பாணி அவனை வெட்டி வீழ்த்தியது. பாப்புட்டி சுற்றிலும் பார்த்துவிட்டு, மெதுவான குரலில் முணுமுணுத்தான்: ""நாமும் இருக்கோம். அவ்வளவுதான் விஷயம்.''

""ஏதாவது கொடுத்து முடிக்கக்கூடாதா?''

""அது எதுக்கும் குஞ்ஞலவிக்கா சம்மதிக்கல. அது இருக்கட்டும்... நமக்கு ஒரு எதிர்மனு எழுதிக்கொடுக்கணும்.''

சரி... எனக்கும் ஏதாவது கிடைக்கும். என் குழந்தை யின் சட்டையின் கிழிசலின் வழியாக வெளியே தெரிந்த சரீரம் மனதில் ஒருமுறை தோன்றியது. நேரம் கடந்துகொண்டிருந்தது. இந்த மனிதனையும் விட்டால் இனி யார் வரப்போகிறார்கள்? என் தொழில் இதுதான். தர்ம- அதர்மங்களைப் பற்றி நினைப்பதல்ல.

அரை மணி நேரத்தில் மனு எழுதினேன். அதில் குஞ்ஞலவியும் மகளும் கெட்ட நடத்தை கொண்டவர்கள், போக்கிரிகள், எதையும் செய்வதற்கு தயங்காதவர்கள் என்றெல்லாம் எழுதி முடித்தபோது, எனக்கு ஒரு உள்சிரிப்பு உண்டாகாமல் இல்லை.

எழுதியதற்கான கூலிக்கும் முத்திரைக்கும் சேர்த்து ஐந்து ரூபாயை என்னிடம் கொடுத்துவிட்டு, குடையை எடுத்தவாறு புறப்பட்டுச் சென்றான்.

ஹாவ்! இன்று குழந்தைக்கு சட்டை தைக்கலாம். நான் ஆதாரங்கள் கொண்ட கட்டினை எடுத்துக் கையிடுக்கில் வைத்துக்கொண்டு மேஜையைப் பூட்டிவிட்டு, கடையை நோக்கி நடந்தேன். சூரியன் மெதுவாகத் தாழ்ந்து போய்க்கொண்டிருந்தது. மஞ்சள் வெயில் நகரத்திற்கு அழகு சேர்த்திருந்தது. அங்கு எங்கோ உள்ள ஒரு பள்ளிவாசலியிருந்து வாங்கோசை ஒலிக்கும் சத்தம்... ஒரு வேதனையின் வெளிப்பாட்டைப்போல காற்றின்வழியாக நகர்ந்து... நகர்ந்து வந்தது. என் மனதில் தெளிவற்ற ஒரு சோக உணர்வு ததும்பி நின்றுகொண்டிருந்தது.

ஒரு துணிக்கடையில் நுழைந்து நல்ல துணியை வாங்கி வாசலில் அமர்ந்திருந்த தையல்காரனின் கையில் கொடுத்தபோது, "என்ன அழகான துணி!' என்று அவன் கூறினான். "அழகான துணி' என்று நானும் கூறினேன்.

அந்த வாங்கோசை மீண்டும் நகர்ந்து நகர்ந்து வந்தது. உறங்கிக்கிடந்த பல சிந்தனைகளையும் அது தட்டி எழுப்பியது. ஒரு குழந்தையைத் தந்தை இல்லாதவனாக்கியதற்குக் கிடைத்ததுதான் இந்த காசு! அதை வைத்துதான் என் குழந்தைக்குச் சட்டை தைத்திருக்கிறேன்! என் மனதில் ஏதோ ஒரு அமைதியற்ற நிலை சிறிது நேரத்திற்குள் உண்டானது. சூடான பலகாரத்தை வாய்க்குள் போட்டதைப் போன்ற ஒரு அனுபவம்... துப்பவோ விழுங்கவோ முடியாது.

ஆனால்... ஆமாம்... அது என்னுடைய தொழில். நான் இல்லாவிட்டால் வேறொருத்தன்.

சட்டைப் பொட்டலத்தைக் கையிடுக்கில் இறுகவைத்தவாறு தலையை உயர்த்திக்கொண்டு வேகமாக நடந்துபோது, அந்த பொட்டலத்தை நான் அவ்வப்போது தடவிப் பார்த்துக்கொண்டேன். என் குழந்தையின் சட்டை... இதைப் பார்த்ததும் அவன் குலுங்கிக் குலுங்கி சிரிப்பான். மனைவி ஆச்சரியப்பட்டு விடுவாள். அழுத்தப்பட்ட புன்சிரிப்புடன் "சண்டை போட்டா... பயம் இருக்கு. இல்லியா' என்ற அர்த்தத்தில் அவள் என்னைப் பார்க்கவும் செய்வாள்.

நான் பாதையின் திருப்பத்தை அடைந்தேன். குஞ்ஞலவி என்னை எதிர்பார்த்து அங்கு நின்றுகொண்டிருந்தார். அந்த கிழவனுக்கு முன்னால் தோற்றுவிட்டேன். ""பாப்புட்டி சொல்லிக் கேட்கல.'' நான் அவரை விலக்கி விடுவதற்கு முயற்சித்தேன்.

""அந்த யகூதின் மகன் கேட்கமாட்டான். அந்தப் பெண்ணும் எலும்பும் தோலுமா இருக்குற குழந்தையும் படுத்திருக்குற காட்சியைப் பார்த்தா படைச்சவன் தரைக்கு வந்திடுவான். அதன்மீது போடுறதுக்கு ஒரு துணி இல்ல. இப்போதிருக்குற பனி வேற! பச்சைக் குழந்தை இல்லியா? மேலல்லாம் சிப்பி ஓடுபோல குரு காணப்படுது. இந்த கவலையை யார்கிட்ட சொல்றது?'' கிழவனின் தொண்டை இடறியது. நிறைந்த கண்களுடன் அவர் பேரமைதியுடன் நின்றிருந்தார்.

அப்போதும் எனக்கு என் குழந்தை ஞாபகத்தில் வந்தது. கிழிசலின் வழியாக வெளியே தெரிகிற அந்த சரீரமும்... குழந்தைகளின் சரீரத்தில் சிப்பி ஓடுகள் போன்ற குருக்கள் தோன்றுவது!

""காற்று மோதுறப்போ அது கிடந்து நெளியுது. அதைப் பார்த்தா இந்த உலகத்தில இருக்கணும்னு தோணாது.''

நெளிந்து கொண்டிருக்கும் குழந்தை! சிப்பி ஓடுகளைப் போன்ற குருக்கள்! நான் என் கையிலிருந்த சட்டைப் பொட்டலத்தை மேலும் ஒருமுறை தடவிப்பார்த்தேன்.

""இந்த குளிர்காலம் கடந்துட்டா அது இருக்காது.'' கிழவனின் குரல் மீண்டும் இடறியது.

""இந்தாங்க... குஞ்ஞலவி... இதை அந்த குழந்தைக்குப் போடுங்க.'' நான் பொட்டலத்தை எடுத்து நீட்டினேன். அவர் சற்று தயங்கினார்.

""இந்தாங்க...'' அதை அந்த வயதான மனிதரின் கையில் கொடுத்துவிட்டு, நான் வேகமாக நடந்தேன். வழிமுழுவதும் என் மனம் கோபப்பட்டு என்னென் னவோ புலம்பியது. தந்தையின் காசை வைத்து மகன் சட்டை போட்டுக்கொள்ளட்டும்! அப்படியென்றால் என் குழந்தை?

வீட்டிற்குள் நுழைந்தேன். குழந்தையைத் தூக்கி முத்தங்களால் மூடினேன். அவன் குலுங்கக் குலுங்க சிரித்தான்.

அப்போதும் மனைவியின் முகத்தின் "நீர் வீழ்ச்சி'க்கு சிறிதும் குறைவு உண்டாகவில்லை. தொட்டால் வெடிக்கக்கூடிய அந்தப் பக்கம் நான் பார்க்கவேயில்லை.

உறக்கம் கண்ணில் வேகமாக நுழைந்தபோது, எனக்கு

அருகில் ஒரு முணுமுணுப்பு கேட்டது: ""இருக்குற ஒரு குழந்தைக்கு ஒரு சட்டை வேணும்னு கேட்டா...'' ராமாயணத்தை விரிக்கிறாள். அது இவ்வாறு முடிந்தது: ""யார்கிட்ட சொல்றது? இந்த தூண்கிட்ட சொன்னா ஒரு பதில் கிடைக்கும்.''

உறக்கத்தின் பக்கவாத்தியமான குறட்டைச் சத்தம் இல்லாததற்காக அன்று உண்மையிலேயே நான் கவலைப்பட்டேன்.