(தஞ்சை மாவட்டம் செந்தலை என்ற சிற்றூரில் பெரியாரிக்கக் குடும்பத்தில் ச.நடராசன்- பாப்பா இணையருக்கு 23.1.1953இல் மகனாகப் பிறந்த புலவர் செந்தலை கவுதமன், திராவிடர் இயக்கத்தையும் தனித்தமிழ் இயக்கத்தையும் இரு கண்களாகப் பேணிவருகிறவர். பாவேந்தர், பாவாணர், பெருஞ்சித்திரனார் கருத்து நெறியை வளப்படுத்த நாளும் தொண்டாற்றும் நற்றமிழறிஞர். தடம் மாறாத கொள்கையாளர்.
கோவை பூ.சா.கோ. சர்வசன மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணிபுரிந்து 2011இல் பணிநிறைவு பெற்றவர். 1995ஆம் ஆண்டு இவர் எழுதி வெளியிட்ட 680 பக்கங்கள் கொண்ட “சூலூர் வரலாறு’’, தமிழ்நாட்டின் முதல் வாழ்வியல் வரலாற்று நூல் என்று போற்றப்படுகிறது. சென்னை தமிழ்மண் பதிப்பகம் கோ.இளவழகனார் 110 தொகுதிகளாக வெளியிட்டுள்ள அறிஞர் அண்ணாவின் அனைத்துப் படைப்புகள்,பேச்சுகளை கொண்ட பெருந்தொகுப்பின் தொகுப்பாசிரியரும் இவர்தான். “அண்ணா அறிவுக் கொடை’’ இதுவரை இந்திய அரசியல் தலைவர் எவருக்கும் வெளிவராத எண்ணிக்கையைக் கொண்டது. பெரியார், அண்ணா, திராவிடர் இயக்க வரலாற்றில் தோய்ந்த புலவர் பெருந்தகை பதினைந்து நூல்களின் ஆசிரியர். கோவை சூலூரில் வசித்துவரும் நம் புலவர் சூலூர் பாவேந்தர் பேரவையை நிறுவி 33 ஆண்டுகளாகத் தொடர்ந்து செயல்பட்டு வருபவர். இவர் மனைவி பெயர் உலகநாயகி, மகள்.க. தாய்மொழி, மருமகன். மருத்துவர் கு.இளந்தமிழன். பெயர்த்தி தா.இ.அவனி இளமொழி. புலவரின் தங்கையர் இருவர் ந. தவமணி தேவி, ந.முத்துச்செல்வி.. பெரியாரியச் சிந்தனைகளில் உரமேறிய திராவிடபேரறிஞரான அவரிடம் இனிய உதயம்’’ வாசகர்களுக்காக சில கேள்விகளை வைத்தோம்..)
*உங்கள் புலவர் படிப்பு பற்றி?
நான் தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி சிவகாமி உயர்நிலைப் பள்ளியில் பயிலும் போது பொறியியல் படிப்பதே என் கனவாக இருந்தது. சிறிய ஊரான செந்தலையில் நாங்கள் நடத்தி வந்தது மிதிவண்டி நிலையம் என்பதால் மிதிவண்டி பழுது பார்ப்பது இளமையிலேயே பழகிவிட்டது. தமிழ் நோக்கி என் மனம் திரும்பக் காரணம், திருக்காட்டுப்பள்ளி நூலகத்தில் படித்த “தென்மொழி’’ இதழ்தான். தென்மொழி இதழ்த் தொடர்பு, உலகத் தமிழ்க்கழக இயக்கத் தொடர்பாக வளர்ந்து. பள்ளி மாணவனாக இருந்த போதே, செந்தலை உலகத் தமிழ்க் கழகக் கிளையை நிறுவி, அதன் கிளைத்தலைவராகவும் செயற்படத் தொடங்கி விட்டேன். எங்கள் குடும்பம் பெரியாரியக்கக் குடும்பம். ஆரிய, வடமொழி எதிர்ப்புணர்வு தனித்தமிழை இயல்பாய்ப் பற்றிக் கொள்ள வைத்தது. பாவாணர் நூல்களைப் பள்ளிப் பருவத்திலேயே படிக்கத் தொடங்கி விட்டதால் “தமிழ்தான் படிப்பேன்’’ என்று உறுதிகாட்டத் தொடங்கிவிட்டேன்.
செந்தலை திராவிடர் கழகத் தலைவராக இருந்த என் தந்தையார் ச. நடராசன் “புலவர் படிப்பா?’’ என்று முகம் சுழித்தார். புலவர் படித்தால் பத்தி வழிக்கு மாறி விடுவேன் என்று அஞ்சினார். “விடுதலை’’ ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் என் தந்தையாருக்கு மிகவும் நெருக்கம். அந்த நேரம் பார்த்து அவர் எங்கள் செந்தலை இல்லம் வர நேர்ந்தது. அவரிடம் என் புலவர் படிப்பார்வத்தைப் புகாராகச் சொன்னார் என் தந்தையார். ஆசிரியர் வீரமணி அவர்களும் நான் புலவர் படிக்கச் செல்வதை ஆதரிக்கவில்லை. “தமிழ்தானே படிக்க வேண்டும். தமிழ் பி.ஏ. படிங்க’’ என்று திசைமாற்ற விரும்பினார். ஆனால் என் மனம் ஏற்கவில்லை. புலவர் படிப்புப் படிக்கும் என் ஆர்வம் இறுதியாக அரைமனத்தோடு அனைவராலும் ஏற்கப்பட்டது. புலவர் படிப்பு நான்காண்டு படிப்பு, போராடிப் பெற்ற வாய்ப்பு என்பதால் ஆர்வத்தோடு படித்தேன். படித்ததெல்லாம் மண்ணெண்ணெய் விளக்கொளியில்! மின் விளக்கைப் பார்க்காத கூரை வீட்டில் கோரைப்பாயில் படுத்தபடிதான் இரவு முழுதும் கண்விழித்துப் படிப்பேன். புலவர் வகுப்புத் தேர்வு முடிவு வந்த போது, தமிழ்நாட்டின் முதல் மாணவராகத் தேர்ச்சி பெற்றிருந்தேன். “நம் குடும்பக் கவலையெல்லாம் இனித் தீர்ந்திடும்பா’’ என என் தாயார் பாப்பா மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தார். “உடம்பைக் கெடுத்துக் கொண்டு மகன் விடிய விடிய மண்ணெண்ணெய் விளக்கில் படிக்கிறானே’’ என்பது என் அம்மாவின் கவலை. உழைப்பின் பலன் கண்டு அவருக்குப் பெருமகிழ்ச்சி.
* புலவர் படிப்பைப் படித்த பிறகு?’’
திருச்சிராப்பள்ளியில் என் தமிழாசிரியப் பணியை 1976இல் தொடங்கினேன். ஊதியம் வாங்கியதும் என் அம்மாவின் கையில் கொடுத்து மகிழ்வேன். ஆசிரியராக என்னை எட்டாண்டுகள் பார்த்து மகிழ்ந்த பின்பே என் அன்னையார் 1984இல் இயற்கை எய்தினார். புலவர் தவிர வேறு எந்தப் படிப்பைப் படித்திருந்தாலும் இந்த உயர்வையும் மகிழ்வையும் நான் பெற்றிருப்பது கடினம்.
* பள்ளிப் பருவத்திலேயே உங்களுக்குத் தீவிரத் தமிழ்ப் பற்று எப்படி ஏற்பட்டது?
என் கொள்ளுப் பாட்ட னார் (அப்பாவின் தாத்தா) இராமசாமி, இராமாயணச் சொற்பொழிவாளர் எனச் செந்தலைப் பெரியவர்கள் சொல்லக் கேட்டிருக்கிறேன். அந்த மரபின் தொடர்ச்சியாகவும் இருக்கலாம். என் தந்தையார் ச.நடராசன் தம் அன்னையார் நினைவாக “சொர்ணத்தம்மாள் வாசக சாலை’’ எனச் சிறுநூலகம் ஒன்றை எங்கள் கடையிலேயே நடத்திவந்தார். அதனால் புத்தகங்களுக்கு நடுவிலே எப்போதும் இருக்கும் வாய்ப்பு இயற்கையாக இளமையில் அமைந்தது. வாசிப்புப் பழக்கம் அப்படித் தொடங்கியதுதான்.
நான் எழுத்துக் கூட்டிப் படிக்கத் தொடங்கியது “விடுதலை’’ இதழ் வழியாக என்றே சொல்ல வேண்டும். விடுதலை ஏடு படிக்கும் பழக்கம் இளமையிலேயே வந்து விட்டதால் 1960இல் தொடங்கி இயக்க வரலாற்றோடு நேரடித் தொடர்பு இருப்பது போன்ற நினைவு இன்று வரை தொடர்கிறது. பெரியாரியல் அறிஞர் வே. ஆணைமுத்து அவர்கள் கழகத்தின் மூத்த தோழர்கள் பெயரைக் கூறும்போது, அவருக்கு இணையாக அதே தோழர்கள் குறித்து நான் நினைவு கூர்வதை நண்பர்கள் வியப்போடு பார்ப்பார்கள். அதற்கெல்லாம் காரணம், இந்த இளமைத் தொடர்புதான். இதழ்களும் நூல்களும் படிக்கும் பழக்கத்தை வற்புறுத்தாமலே எனக்குள் வளர்த்தவர் என் தந்தையார்! தாகம் வந்து விட்டால், நீர் உள்ள இடத்தைக் கால்கள் தானாத் தேடிச் செல்லும்! வாசிப்புப் பயிற்சியே தமிழின் பக்கம் என்னைத் தள்ளிச் சென்றுள்ளது.
* பிற மொழி கலவாமல் தூய தமிழில் பேசுவதில் நீங்கள் முனைப்போடு இருப்பதற்கு என்ன காரணம்?
தூய தமிழ்த் தொடர்பு, சிற்றூரில் பிறந்த எவருக்கும் இயல்பாக இருக்கக் கூடியது. ராசா, ரோசாப்பூ, சோசப்பு என கிரந்த எழுத்து இல்லாத சொற்களே நாட்டுப்புற மக்கள் நாவில் தவழும்! பூசு(கி)ற மாவு, வாழைத்தண்டு விளக்கு என்று (பேஸ் பவுடர், ட்யூப் லைட் என்பவற்றிற்கு இணையாக) எளிய கலைச்சொற்களை இயல்பாக உருவாக்கிப் பேசுவது சிற்றூர் வழக்கம். மக்கள் இலக்கியம் என அயற்சொற்களையும் கிரந்த எழுத்துகளையும் திணித்தெழுதும் ’’இலக்கிய’’ வாதிகளைப் பார்த்தால் சிரிப்பும் சினமும் சேர்ந்தே வரும். பெங்களூர் என்பதைக் கூட “வெங்களூர்’’ என்பதே மூத்தோர் பேச்சு. அதைத் தொட்டுச் செல்லும் எவரும் மொழித் தூய்மை என்னும் இயல்பு நடையை எட்டுவதே நடக்கும். மக்களை நேசிப்பவர் மக்கள் மொழியை நேசிப்பதே இயற்கை.
அயற்சொல்லும் எழுத்தும் கலந்த கலப்புநடை செயற்கையானது. மக்களை அச்சுறுத்துவது. அந்நியப் படுத்துவது. தூயதமிழ் இயக்கம் வலிமை பெறுவது எளிய மக்களின் வாழ்வையும் மொழியையும் வலிமைப்படுத்தும்.
* மணிப்பிரவாள நடையிலிருந்து தமிழர்கள் மீள திராவிடர் இயக்கங்களின் பங்களிப்பு எந்த அளவிற்கு உதவியது?
அண்ணாவின் அழகுநடை, எவரையும் தமிழைக் காதலிக்க வைத்துவிடும். கோகில கானங்கள் கீதங்கள் பாட, கோபால சாமிகள் தாளங்கள் போட, சுசீலா நய்யார்கள் சுற்றி இருக்க..’’
என அண்ணா எழுதுவதைப் படிக்கும் போதே, காந்தியடிகள் நடந்துவருவது எழுத்தில் தெரியும். “இரண்டு பக்கத்தில் சொல்வதை ஏழெட்டுப் பக்கமாக்கிவிடுகிறார் அண்ணாதுரை’’ எனச் சிலர் குறைபட்டுக் கொள்வார்கள். எழுத்தறிவு குறைவான அந்த நாளில் இந்த அலங்கார நடை தேவைப்பட்டது. மொழியின் அழகைக் காட்டிச் செய்தியை நெடுங்கனவாக்கும் உத்தி அது. படிப்பறிவு மிகுந்துவிட்ட இந்த நாளில் செய்தியைச் சுருக்கமாகச் சொல்லும் வளர்ச்சி வந்துவிட்டது. இப்போது அந்த அலங்கார நடை தேவைப்படாது. இந்த நடைதான் பலரையும் தமிழை நேசிக்கும் மனநிலைக்கு ஆளாக்கியது.
* தங்களின் பாட்டரங்க அனுபவங்கள் சிலவற்றைச் சொல்ல முடியுமா?
கவிதையில் எப்போதும் முதலிடம் பெறுவதே என் வழக்கம். தந்தை பெரியார் நூற்றாண்டையொட்டி, தமிழக அரசு நடத்திய போட்டியிலும் முதலிடம். ஆனால் இதுவரை என் பாடல்கள் நூலாகவில்லை. அரசர் கல்லூரியில் இலக்கிய மன்றவிழா கவியரங்கம் என் தலைமையில் நடந்தது. கவிதைப் பட்டிமன்றம் எனும் புது வடிவத்தை, இலக்கணப் புலவர் த.ச. தமிழனார் 1974 இல் திருவாரூர் திரு.வி.க. சிலை திறப்பு விழாவில் அறிமுகப்படுத்தினார். பாவலரேறு பெருஞ்சித்திரனார் நடுவர். பாவலர் ச. பாலசுந்தரம், கோவை இளஞ்சேரன்,இறைக்குருவன், புலவர் தொல்காப்பியன் முதலியோர் பங்கேற்றனர். உடனுக்குடன் பாட்டெழுதும் திறனுடையோரே பாப்பட்டிமன்றத்தில் ஒளிவிட முடியும்.
பார்த்துக் கொண்டிருந்த தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் முன்பே தெரிந்திருந்தால் நானும் ஓர் அணியில் இடம்பெற்று என் வாதங்களையும் மறுப்பையும் இப்படி இப்படி எடுத்து வைத்திருப்பேன் என விழா நிறைவுரையில் கூறி வியக்க வைத்ததோடு, பாவாணர் செஞ்சொற் பிறப்பியல் அகர முதலி இயக்குநராகத் தமிழக அரசால் அமர்த்தப்படுவார் எனும் அறிவிப்பையும் கூறி அரங்கை அதிர வைத்தது அப்போதுதான்!
அந்த நிகழ்ச்சிக்குப் பின் தஞ்சை மாவட்டக் கவிஞர் மன்றச் சார்பில் கவிதைப் பட்டிமன்றம் தமிழ் வளர்ச்சி அலுவலர் கு.சிவஞானம் தொடர்ச்சியாக நடத்த வைத்தார். “இந்தியப் பெண் இலட்சியப்பெண்ணா?’’ எனும் பாப்பட்டிமன்றம் தஞ்சை கல்லூரி ஒன்றில் நடந்த போது, அரங்கிலிருந்து எதிர்பாராத வகையில் ஒற்றை மனிதரின் எதிர்ப்புக் குரல் “புராணத்தைக் கேலி பண்றாளே! நன்னா இருப்பாளா!’’ என அலறிய ஒருவரை வெளியே இழுத்துச் சென்றனர்.
தஞ்சை சரசுவதி மகால் நூலக வடமொழிப் பண்டிதர் என்பது பின்னர் தெரிந்தது. சீதையும் திரவுபதியும் விவாதப் பொருளாவதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. சாதி வெறியரும் மதவெறியரும் சகிப்புத் தன்மையின்றிக் கூச்சலிடுவதைத் தஞ்சை அப்போது அதிர்ச்சியோடு பார்த்தது. இப்போது பழகியிருக்கும்.
கோவை இரத்தினசபாபதி புரம் நகராட்சிக் கலையரங்கில் காலை நிகழ்ச்சியாகப் பாட்டரங்கம். கவிஞர் பொன்னிவளவன் தலைமை. பேராசிரியர் க. அன்பழகன் எதிரே அரங்கில் அமர்ந்து கேட்டுக் கொண்டிருந்தார். இலக்கிய அணி சார்பில் புலவர் சா. மருதவாணனார் ஏற்பாடு. பாவலர் ச. பாலசுந்தரம், கவிஞர் குடியரசு, புலவர் ஆ. பழனி எனப் பலரும் பாடினர். எவர் கவிதைக்கும் கையொலியோ,வரவேற்போ இல்லை. பெரிய அரங்கம்!
அரங்கம் நிரம்பிய கூட்டம்! ஆனால் வரவேற்பில்லை. பொன்னிவளவன் என்னிடம் வருத்தத்தோடு கூறினார். “செய்யாறு அண்ணா கவியரங்கம் ஒன்று இப்படித்தான். என்ன முயற்சி செய்தும் அரங்கத்தினரைக் கவரவே முடியவில்லை. அதற்குப்பின் இன்று கோவையில் அதே நிலை! அடுத்து நீங்கள் தான். உங்கள் கவிதையும் வெற்றி பெறாவிட்டால் இந்தக் கவியரங்கம் முழுமையாகத் தோல்வி.’’
ஒலிவாங்கி முன் வந்து நின்ற நான் பொன்னி வளவனைப் பார்த்தேன். கருத்த உடலில் சிவப்புச் சால்வையோடு அமர்ந்திருந்தார். அதனையே முதல் வரியாக்கித் தொடங்கினேன்.
“தோற்றமோ கருப்பு
துண்டோ சிவப்பு
கழகக் கொடிபோல
காட்சி தருபவரே!
அதுவரை அமைதி காத்த அரங்கம் ஆரவாரமாய் வரவேற்றது. அதற்குப்பின் எந்த வரி சொன்னா லும் வரவேற்று. மகிழ்ச்சி முழக்கம்! புலவர் பொன்னிவளவன் “கவியரங்க மானத் தைக் காப்பாற்றி விட்டீங்க’’ என மகிழ்ந்தார். பேராசிரியர் க. அன்பழகன் தம் அருகில் அமர்ந்திருந்த கோவைத் தென்றல் மு. இராமநாதன் அவர் களிடம் என்னைப் பற்றி வினவிக் கொண்டிருந்தது பின்னர் தெரிந்தது. கலைஞர் மணிவிழா (சென்னை)க் கவியரங்கில் என்னை இடம்பெற வைக்குமாறு கலைஞரிடம் பேராசிரியர் வாதாடியதெல்லாம் அடுத்து வந்த செய்திகள்!
* திராவிடர் இயக்கச் சிந்தனை களின் தேவை நீர்த்துப் போய் விட்டதாகக் கருதுகிறீர்களா?
எந்தத் தீபாவளி மலர் வந்தாலும் அதில் சங்கராச் சாரியார் படம் தவறாமல் இடம்பெற்றிருக்கும். வைதீக சனாதனிகள் தங்களுக்குள் எவ்வளவு வேறுபாடு இருந்தாலும், பொதுச்சிந்தனை ஒன்றைச் சரியாகக் கடைபிடிப்பார்கள். அதன் அடையாளம் இந்தப் படம். தலைவர் சங்கராச்சாரியார், தங்கள் நூல் பகவத் கீதை, தங்கள் மொழி சமற்கிருத உயர்வு,தங்கள் கோட்பாடு சமத்துவ மறுப்பு- இந்தப் பொதுச்சிந்தனையே
அவர்களைக் காப்பாற்றுகிறது.
தமிழின உயர்வை வலியுறுத்துவோர் இந்தப் பொதுச் சிந்தனை ஒழுங்கைக் கற்றுக் கொள்ள வேண்டும். நம் தலைவர் பெரியார், நமக்கான நூல் திருக்குறள், நம் மொழி தமிழின் உயர்வு, நம் கோட்பாடு சமத்துவம்-இந்தப் பொதுச்சிந்தனையை வலியுறுத்து வதே திராவிடர் இயக்கம். இந்த ஒற்றுமையும் உயர்வும் வரக்கூடாது என நினைப்போர் பெரியார், திராவிடர் இயக்க வெறுப்பை வெளிப்படுத்துவார்கள். பொதுச்சிந்தனை வரையறையோடு திராவிடர் இயக்கத்தை உயர்த்திப் பிடிப்பது இன்றைய கட்டாயத் தேவை.
*“வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது’’ என்று அண்ணா சொன்னது இன்றும் பொருத்தமாக உள்ளதாக எண்ணுகிறீர்களா?
இந்தி வல்லாண்மை, வடவர் ஆதிக்கம் முன்பைவிட இப்போது கூடிக்கொண்டே செல்கிறது.
“தேளுக்கு அதிகாரம், சேர்ந்துவிட்டால் தன் கொடுக்கால், வேளைக்கு வேளை, விளையாடும் என் தமிழா!’’- என்று பாடுவார் பாவேந்தர். அதிகாரம் வந்தபின், அதற்குரிய ஆதிக்க வலிமையை ஒவ்வொரு துறையிலும் கூடுதலாக்கியபடி உள்ளார்கள். “திணிக்கப்படும் எதுவும் எதிர்க்கப்படும்’’ என்பதை 1938 முதற்கொண்டே தொடர்ந்து பார்த்தும் போராடி யும் தடுத்தும் வருகிறோம். இதற்கான தீர்வு என்ன என்பதையும் சிந்தித்தாக வேண்டும்.
கூட்டாட்சி, ஆட்சிமொழி இரண்டி லும் தெளிவுபெறுவதே சிக்கலுக்கான சரியான திசையைக் காட்டும். அறிஞர் அண்ணா முன்வைத்த “தன்னாட்சி- கூட்டாட்சி’’ முழக்கம் இப்போது இந்தி யத் துணைக்கண்டம் முழுதும் பரவலான கவனம் பெற்று வருகிறது. இந்திய மாநிலங் களை இந்த இலக்கு நோக்கி ஒருங்கி ணைக்க வேண்டும். “ஆட்சிமொழி’’ என்பது தெளிவு பெற வேண்டிய முகாமைச் செய்தி. அரசியல் சட்டத்தில் எட்டாவது அட்டவணையில் இடம் பெற்றுள்ள 22 மொழிகளும் தலைமை அமைச்சர் நேரு அவர்களின் நாடாளுமன்ற உறுதி மொழியால் தேசிய மொழிகள் ஆகிவிட்டன. சட்டத்தில் தேசிய மொழி’’ எனும் சொல் இடம்பெறா விட்டாலும் “என் உறுதிமொழி சட்டத்திற்குச் சமம்’’ என்ற நேரு அறிவிப்பால் தேசியமொழி தகுதி வந்துவிட்டது. தேசிய மொழிகளில் “இந்தி’’யும் ஒன்று. இந்தி ஒலிபரப்பை “தேசிய ஒலிபரப்பு’’ என்றும் பிற மொழிகளை “மண்டல (பிராந்திய) ஒலிபரப்பு’’ என்றும் கூறுவது சட்டப்படி தவறு.
தமிழ் உள்ளிட்ட 22 மொழிகளும் தேசிய மொழிகளாகிவிட்டன.
அடுத்து அவை ஆட்சிமொழி ஆதல் வேண்டும். தமிழை ஆட்சி மொழி ஆக்குவோம் எனத் தி.மு.க. தேர்தல் அறிக்கை கூறியுள்ளதை நிறைவேற்றும் முயற்சி வேண்டும். ஆட்சிமொழி என்பது அந்தந்த மாநிலத்தில் ஆக்கப்பட வேண்டும் என்பதே புரிந்து கொள்ள வேண்டிய செய்தி. ஆட்சிமொழித் தகுதி வந்துவிட்டால் அந்தந்த மாநில எல்லைக்குள் மாநில மொழி முழுமையாக எல்லா நிலையிலும் நடை முறைக்கு வந்துவிடும். அலுவல் மொழி, தேர்வு மொழி, பயிற்று மொழி, தொடர்பு மொழி நான்கு கூறுகளை உள்ளடக்கிய சொல் ஆட்சிமொழி. தமிழ்நாட்டில் தமிழ் முழுமையான ஆட்சி மொழியாகும் ஐந்தாண்டுக்குள் என எல்லைகூறி 23.1.1968ல் சட்ட மன்றத்தில் முழங்கினார் அறிஞர் அண்ணா! “எங்கும் தமிழ் எதிலும் தமிழ்’’ எனும் முழக்கத்தையும் அதே நாளில் முன் வைத்தார். அடுத்த இரண்டாண்டுகளில் அண்ணா மறைந்தார். முதல்வர் கலைஞர் “மூவாண்டு முனைப்புத் திட்டம்’’ எனும் பெயரில் தமிழைப் பயிற்று மொழியாக்கும் பணியை 1970 திசம்பரில் தொடங்கினார். “தமிழைத் திணிக்காதே’’ எனும் ’’தேசிய’’ மாணவர் போராட்டம் அதனை முடக்கியது தனி வரலாறு!
இன்றைய நிலையில் எல்லா வகையான சிக்கல் களுக்கும் சரியான தீர்வைத் தரவல்லது “ஆட்சிமொழி’’ ஆக்கும் முயற்சிதான். எல்லா மாநிலங்களின் ஆதரவையும் பெறுவதற்கு ஏற்ற வகையில் இப்போது காலம் கனிந்துள்ளது.
* உலகமயமாக்கலுக்குப் பின் தமிழின் மரபார்ந்த இலக்கியங்களுக்கு என்ன தேவையும் பயனும் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்?
இன்றைய தலைமுறைக்கும் எதிர்காலத் தலைமுறைக் கும் சரியான தீர்வை ஏந்தி நிற்பன பாவேந்தர், பாவாணர் நூல்கள்! பாவேந்தர் நூல்களால் எழுச்சியும் உணர்ச்சியும் பெறமுடியும். பாவாணர் நூல்களால் தெளிவும் மொழிவளமும் பெறமுடியும். இவற்றைத் தொடர்ந்து பரப்புவதைப் பொருத்தே தமிழின விழிப்பும் மீட்பும் இருக்கும். உலகமயமாக்கல் சூழலில் நுகர்வுப் பண்பாடு மேலோங்கி வருகிறது. “பயன்படுத்து, தூக்கி எறி’’ என்னும் பழக்கம் குடும்ப விழாக்களிலும் வந்துவிட்டது. தமிழ்ப்பற்றும் இலக்கிய உணர்வும் இதற்குச் சரியான தீர்வைத் தரவல்லவை. ஒழுக்க நெறிகள், சமூகக் டமைகள்,மனிதநேயத் தேவை, மானுட ஒற்றுமையின் வலிமை-இவற்றை உருவாக்க இலக்கிய உணர்வும் மொழிப்பற்றும் தொடர்ந்து வலியுறுத்தப்பட வேண்டும். உலகமயமாதல் உருவாக்கும் சீர்குலைவைத் தடுத்த நிறுத்த இவை உதவும். இவற்றை எடுத்துச் செல்லும் பண்பாட்டுப் படையாக இலக்கியங்களும், இலக்கியவாதிகளும் செயற்பட்டாக வேண்டிய கால கட்டத்தில் நாம் வாழ்கிறோம்.
மக்கள் தொகுதி எக்குறை யினாலே மிக்க துன்பம் மேவு கின்றதோ அக்குறை தீர்க்கும் ஆற்றல்வாய்ந் தோனைச் சிக்கெனப் பிடித்துச் சீர்பெறல் இயற்கை என்றார் பாவேந்தர் என்பதை நெஞ்சில் நிறுத்திக் கொள்ள வேண்டும்.
*பெரியாருக்கு இன்றும் தேவையுள்ளதா?
பெரியார் அதிகம் தேவைப்படும் காலம் இது. தமிழினத்தின் முகம் பெரியார். முகமில்லாத முண்டமாகத் தமிழினத்தை ஆக்க விரும்பும் எவரும் பெரியார் எதிர்ப்பைச் சுமந்து நிற்பதே வழக்கம். இன்று தமிழ், தமிழ்தேசியம் என்ற புதிய முகமூடிகளோடு வருவதால் எதிரிகளை இனம்காண அடையாளம் காண முடியாமல் இளைஞர்கள் தடுமாறுவது தெரிகிறது. பெரியாரை எளிமைப்படுத்தி விளக்குவதும் கலை இலக்கிய நினைவூட்டலால் பாதுகாப்பது இன்னும் கூடுதலாக வேண்டும்.
அவ்வளவுதான். சமத்துவத்தை எளிமையாகப் புரிய வைத்தவர் பெரியார்.
உனக்குள்ள உரிமை எனக்கு வேண்டும்.
எனக்குள்ள உரிமை எல்லோர்க்கும் வேண்டும்’’
அவர் கொள்கைகள் அனைத்திற்குமான மையப் புள்ளி இதுதான். மொழி சமத்துவம், தேசிய இனச் சமத்தவர், சமூகச் சமத்துவம், பாலினச் சமத்துவம், பொருளியல் சமத்துவம் என இதை விரிவு படுத்திக் கொண்டே சென்றவர் பெரியார். “எங்கே சமத்துவம் மறுக்கப்படுகிறதோ, அங்கே நாத்திகம் பிறக்கிறது’’ என்று வழிமுறையிலும் கூர்மை காட்டியதே அவரின் தனித் தன்மை. “கிராம்சி’’ போன்ற அறிஞர்கள் இன்று சொல்வதை, முன்பே வேறு சொற்களில் சொல்லி யுள்ளார் பெரியார். அரசியல் அதிகாரம், சமூக அதிகாரம் என அதிகாரத்தை வகைப்படுத்திப் பார்த்தார். படிப்பு, பதவி இரண்டின் வழியாக அரசியல் அதிகாரத்தைப் பெற்றுக் காட்டியது திராவிடர் இயக்கம். இன்று வரை சமூக அதிகாரத்தைப் பெறுவதில் மட்டும் சாண் ஏறி முழம் இறங்கும் அவல நிலைதான் தொடர்கிறது.
* “சமூக அதிகாரம்’’ என்று எதனைச் சொல்வது?
நம் குழந்தைப் பெயர் வைப்பதும், திருமணம் செய்வதும், பொருத்தம் பார்ப்பதும், நாள் குறிப்பதும், விழாக்களை நடத்துவதும் நம் கையில் இருக்க வேண்டும். நம் மொழியில் இருக்க வேண்டும். நம் உரிமையாக இருக்க வேண்டும். சுருக்கமாகச் சொல்வோமே! தமிழர் வீட்டு நிகழ்ச்சிகள் அனைத்தும் தமிழில் நடப்பதாகவும், தமிழர் நடத்துவதாகவும் இருக்க வேண்டும். இன்னொருவரையோ, இன்னொரு மொழியையோ சார்ந்து நிற்கும் எவரும் சமூக அடிமைதான்.பண்பாட்டு அடிமைதான்!
“வடமொழி புகன்றிடும் தமிழ்வாய்-எதிர்
வரக்காணின் காறிநீ உமிழ்வாய்!’’
என்று பாவேந்தர் பாட்டு நெருப்பைக் கக்கியதன் காரணம் இதுதான்! “சுயமரியாதைத் திருமணச் சட்டம்’’ அறிஞர் அண்ணா நிறைவேற்றியதும், “அனைவரும் கோயில் பூசகர் ஆகலாம்’’ என்று கலஞர் தீர்மானம் நிறைவேற்றியதும் இந்த அதிகாரத்தை எட்டுவதற்குத்தான்.
* உரிமை வாழ்வைப் பெறும் உடனடி வழிமுறைகளாக எவற்றைச் சொல்லலாம்?
நாடு முழுதும் நடக்கும் திருமணங்களைக் கொஞ்சம் உற்றுப் பாருங்கள். வெட்கக் கேடான நாட்டில் மானக் கேடான வாழ்வை நாம் நடத்திக் கொண்டிருப்பது புரியும். படிப்பும் பணியும் வந்து உயர்வான வாழ்வை நாம் பெறக் காரணமானது திராவிடர் இயக்கம் என்பதை மறந்தவர்கள், சமூக அடிமைகளாக இருப்பதற்கு மகிழ்ச்சி அடையும் கேவலம் தெரியும். தமிழர் வீட்டுத் திருமணத்தில் வடமொழி மந்திரம் ஏன்? புரோகிதருக்கு அங்கு என்ன வேலை? என் மொழியில்,என் வளர்ச்சியில் அக்கறை உள்ளவரைக் கொண்டு என் திருமணத்தை நடத்திக் கொள்வேன் என்பவனே மானமுள்ள தமிழன். அறிவு வந்து விட்டது! மானமில்லா அறிவாகப் போய்விட்டது. அதற்காகத்தான் பெரியார் சொன்னார் “மானமும் அறிவும் மனிதருக்கு அழகு’’ மானமுள்ள அறிவு வேண்டும். அதற்கு அடையாளம் வேண்டுமா? வடமொழி மந்திரம் ஓதித் திருமணம் நடத்தி வைக்கும் புரோகிதரைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்க வேண்டும். “பிராமணர் வீட்டில் இதே மந்திரத்தைச் சொல்லித்தான் திருமணம் செய்வீர்களா?’’-இந்த ஒரு கேள்வியைப் புரோகிதரைப் பார்த்துக் கேட்டால் போதும். புரோகிதர் பதறி விடுவார். “எங்காத்துலயா? அது பிராமண மந்திரம். சாஸ்திரி வந்து நடத்துவா! இது சூத்திராள் மந்திரம்! உங்காத்துல வந்து நடத்தறது புரோகிதா!’’ சாஸ்திரி வந்து அக்கிரகார மந்திரத்தைச் சூத்திராள் வீட்டில் சொல்ல மாட்டார் என்ற அரிச்சுவடியே தெரியாத அறிவாளர்கள் நாம்! நான்கு பேருக்கு நம் வீட்டுப் பெண்ணை மனைவியாக்குவதும், அதன் வழியாக நடத்தை கெட்டவளின் மக்கள் சூத்திரர்கள் என நிலை நாட்டுவதும் திருமண மந்திரத்தின் வழியாக இன்றுவரை தொடர்ந்து கொண்டுள்ளது. பெரியாரும் அண்ணாவும் பேசப்பட வேண்டியவர்கள் மட்டுமல்ல, பின்பற்றப் பட வேண்டியவர்கள். இலக்கியக் காற்று இல்லாமல் இயக்கங்களின் நெஞ்சாங்குலை இயங்காது.
இந்தத் தெளிவு பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இருந்ததால், கலை இலக்கிய ஆற்றலுடையோரை உருவாக்குவதிலும், உயர்த்துவதிலும் அக்கறை காட்டினார்கள்.கலை, இலக்கியத்தைக் கைகழுவிய இயக்கங்களைக் காலம் கைகழுவிவிடும். பெரியார், அண்ணா, கலைஞர், தமிழ், தமிழர் எனப்பேசும் அனைவரும் உணர வேண்டிய உண்மை இது!