கவிப்பேரரசு வைரமுத்து படைத்திருக்கும் புத்தம் புது படைப்பான ’மகாகவி’என்னும் கவிதை நடை அறிவியல் காவியம், ஜனவரி ஒன்றாம் தேதி, உற்சாகப் பெருக்கோடு வெளியிடப்பட்டது.
சென்னை காமராசர் அரங்கில் மகாகவியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட, அதன் முதல் படியை முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் பெற்றுக்கொண்டார்.
மகாகவியைப் படைத்த மகாகவிக்கு, தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவரான விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான கலைஞானி கமல்ஹாசன் ஆகியோர் கலந்துகொண்டு வாழ்த்து மழை பெய்தனர்.
அரங்கு பிதுங்கும் இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்ட மன்ற உறுப்பினர்கள்,இலக்கியப் பேராளுமைகள்,பிறதுறைப் பிரபலங்கள் என பலரையும் பார்க்க முடிந்தது.
முதல்வர் நூலை வெளியிட்ட பின்,வாழ்த்துரை வழங்கிய ப.சிதம்பரம், தொல்காப்பியர் காலந்த்தில் டெலஸ் கோப் கிடையாது, செயற்கைக்கோள் கிடையாது, விண்கலம் கிடையாது. ஆயினும் தொல்காப்பியர், தான் அறிந்த உண்மைகளை சொன்னார். நிலம், நீர், தீ, வளி, விசும்போடு ஐந்தும் கலந்த மயக்கம் உலகம் என்று சொன்னார். தொல்காப்பியர் காலத்திற்கு முன்னரே தமிழர்கள் இந்த உண்மைகளை அறியத் தொடங்கினர். குரங்கிலிருந்து பிறந்தான் மனிதன் என்பதுதான் நமக்கு தெரிந்த பரிணாம வரலாறு. ஆனால் இந்த மூன்று சொற்களில் மட்டும் பரிணாம வரலாறு அடங்கிவிடாது என்கிறது மகா கவிதை.
450 கோடி ஆண்டுகளாக இந்த மண் உருண்டை சுழல்கிறது. இந்த சுழற்சிதான் பரிணாமத்தின் தொடக்கம் என்கிறார் வைரமுத்து. கற்றல் கற்பித்தல்தான் மானுடத்தை இயக்கும் சக்தி. அதை போல் தான் இயற்கையிடம் கற்றதை நமக்கு கற்பிக்கும் பேராசிரியராக வைரமுத்து மாறி இருக்கிறார்.” என்று பாராட்டினார்.
நடிகர் கமல்ஹாசனோ, “கவிஞர் வைரமுத்துக்கு கடந்த 40 ஆண்டுகளாக நான் பி.ஆர்.ஓ.வாக இருந்துவந்திருக்கிறேன்.
அவர் கவிதைகளை தொடர்ந்து பலரிடமும் சொல்லி வருகிறேன். நான் அவரது ரசிகன் . இப்போது மகாகவிதை மூலம் விழிப்புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். இந்த பூமியை பொலிவு கெடாமல் பாதுகாத்து எதிர்கால சந்ததியிடம் ஒப்படைக்கும் கடமை நமக்கு உள்ளது. அதை உணர்த்துகிறது இந்தப் படைப்பு” என்றார் உற்சாகமாக.
அறிவியல் அறிஞரான மயில்சாமி
அண்ணாதுரை தன் உரையில் “முப்பது மாதங்கள் தன் ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி, இதயம் குளிரக் குளிர இந்த மகாகவியை வைரமுத்து படைத்திருக்கிறார். இதன் ஒவ்வொரு பக்கத்திலும் அவர் தாய்மையின் ஈரமும் தகப்பனின் பொறுப்பும் உலகக்குடிமகனின் அச்சங்கலந்த நம்பிக்கையும் அறிவியலானனின் அறிவார்ந்த தேடலும் இருப்பதைப் பார்க்கமுடிகிறது.” என்றெல்லாம் புகழ்ந்துரைத்தார்.
சிறப்புரை வழங்க வந்த முதல்வர் ஸ்டாலின் ” இந்த நேரத்தில் வைரமுத்துவிடம் ஓர் அன்பான ஒரு வேண்டுகோளை வைக்க நினைக்கிறேன். மகாகவி பாரதியின் வாழ்க்கை வரலாற்றை ‘கவிராஜன் கதை’ என்ற தலைப்பில் எழுதியதைப் போல, கலைஞரின் வரலாற்றை கவிதையாக நீங்கள் தர வேண்டும். இது எனது அன்பான வேண்டுகோள்.
உங்கள் தமிழில் கலைஞருக்கு ஒரு கவிதை வரலாறு வந்தாக வேண்டும் என்ற உங்கள் இரசிகனின் வேண்டுகோள், இன்னும் கூட கொஞ்சம் உரிமையோடு சொன்னால் கட்டளை” என்று புன்னகையோடு அழுத்திச்சொன்னவர்...
“ மிகமுக்கியமான காலகட்டத்தில் இந்த நூலை எழுதி இருக்கிறார் வைரமுத்து. இதற்காக அவரை முதலில் பாராட்ட வேண்டும். நிலம், நீர், தீ, காற்று, வானம் ஆகிய ஐம்பூதங்களைப் பற்றிய கவிதைத் தொகுப்பு என்பதை நீங்கள் அனைவரும் வாசிக்கும்போது உணர்வீர்கள். கனிமம், தாவரம், நீர், நுண்ணுயிர், விலங்கு, காற்று, வானம், தீ. அனைத்தும் நிகழ்கால மனிதா! உனக்கல்ல. நீ கால்நடையாய் வந்த ஒரு பயணி. நுகர்ந்தாயா, போய்விடு என்று வழிகாட்டுகிறார்.இப்படி ஐம்பூதங்களும் கவிஞரின் தமிழில் அடங்கிக்கிடக்கின்றன இந்த நூலில்.
அறிவியலை அதுவும் நவீன அறிவியலைச் சொல்லும் திறம் கொண்டது தமிழ்மொழி என்பதை நிரூபிப்பதாகவும் இந்தப் புத்தகம் அமைந்துள்ளது.புயலும்,மழையும், வெள்ளமும் தலைநகர் சென்னை முதல் தென் மாவட்ட குமரி வரைக்கும் சுற்றிச் சுழன்றடித்து முடித்திருக்கும் இந்த நேரத்தில் ஐம்பூதங்களைப் பற்றி எழுதி இருக்கிறார். இது கவிதைப் புத்தகம் அல்ல, காலப் புத்தகம் என்றே சொல்லலாம்” என்று கவிப்பேரரசுக்கு மனம்திறந்து மகுடம் சூட்டினார்.
கவியரசு வைரமுத்துவின் ஏற்புரை, ஒரு தமிழ்க்கவிஞன் காலத்திற்கு விடுக்கும் பிரகடனமாக அமைந்திருந்தது.
’உங்கள் காலடிக்குக் கீழ் இருப்பதனாலேயே பூமியை இழிவாக எண்ணுவதை எப்போது நிறுத்துவீர்கள்? பூமி என்னும் இந்த ஒற்றைக் கிரகத்தை விட்டுவிட்டால் ஏதுவான இடமுண்டா உயிர்ச்சாதிக்கு?” என்று அவர் எழுப்பிய கேள்வி இதயத்தில் எதிரொலித்துக்கொண்டே இருக்கிறது.
தமிழ்ச்சமூகத்திற்கு மட்டுமல்லாது உலகளாவிய மனிதர்களுக்கு கவிப்பேரரசு படைத்தளித்திருக்கும் அறிவியல் ஞானப்பெட்டகமே அவரது இந்த மகாகவி.
-இலக்கியன்