கதிரவன் மெல்ல மேற்குவானத்தில் மறையத்தொடங்கி ஒரு இனிமையான மாலைப்பொழுதின் வரவினை அறிவித்துக்கொண்டிருக்கும் வேளையில், பாண்டிச்சேரியின் கிழக்குக்கடற்கரை கஃபே ஒன்று ஓவியர்களாலும் எழுத்தாளர்களாலும் மெல்ல நிரம்பிக்கொண்டிருந்தது.
சென்னையின் மிக மூத்த ஓவியர்கள், உலகப்புகழ்பெற்ற சோழமண்டல ஓவிய கிராமத்து ஓவியர்கள், பாண்டிச்சேரியின் மூத்த ஓவியர்கள், ஓவிய பிரபலங்கள், பிரபல ஓவியக் குழுக்கள், இளம் ஓவியர்கள், ஓவிய ஆசிரியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள் என ஒரு அரிய சந்திப்பு அங்கே நிகழ்ந்துகொண்டிருந்தது.
பல ஊர்களிலிருந்து அவர்களெல்லாம் அங்கே ஒன்றுகூடி தேநீர் அருந்திக்கொண்டிருக்க காரணம், அவர்கள் தம்முடைய மண்ணின் மைந்தனை, கவிஞரை, ஓவியரை, கலை விமர்சகரை கொண்டாட வந்திருந்தார்கள்.
நம்முடைய நினைவுகளில் இதுபோன்ற ஒரு நிகழ்வு முதன்முறையாக நடைபெறுவதற்கு காரணமானவர், தன்னுடைய எழுபதாவது வயதினை கொண்டாடிக்கொண்டிருக்கும் இந்திரன் அவர்கள்.
கலை இலக்கியத்தில் பல தசமங்களாகவும், பல தலைமுறைகளுடன் இணக்கமாக இயங்கிவரும் பன்முகம் கொண்ட ஆளுமை இந்திரனின் கலை உலகத்திற்கான காணிக்கையினை போற்றிக்கொண்டாடும் வகையில், பாண்டிச்சேரியின் புதுவை முத்தமிழ் சங்கம் நாற்பத்தி நான்கு ஓவியர்களின் படைப்புகளைக் கொண்ட ஒரு ஓவியக் கண்காட்சியினை பாண்டிச்சேரி கடற்கரை சாலையில் அமைந்துள்ள அரவிந்த ஆசிரம கலைக்கூடத்தில் அண்மையில் ஒருங்கிணைத்தது.
ஜூலை 14-ஆம் தேதி புதுவை ஆளுநர் கிரண்பேடி துவக்கிவைக்கப்பட்ட 'எ ட்ரிப்யூட் டு இந்திரன்' எனும் கண்காட்சியில், மூத்தவர்-இளையவர், பாண்டிச்சேரி-தமிழ்நாடு என பாகுபாடின்றி உற்சாகத்துடன் ஓவியர்கள் தம் படைப்புகளின் வாயிலாக பெருமளவில் பங்கெடுத்துக்கொண்டனர்.
சென்னை கவின் கல்லூரியின் முன்னாள் முதல்வரும் மிக மூத்த சிற்பியுமான ந முருகேசன் தலைமைதாங்க, சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி டேவிட் அண்ணாசாமி சிறப்புவிருந்தினராகப் பங்கேற்க கண்காட்சியின் திறப்புவிழா சிறப்பாக அமைந்தது.
தமிழகத்தின் மிக முக்கிய கலை விமர்சகரும், கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும் ஓவியருமான இந்திரன் இராஜேந்திரன் கடந்த சுமார் ஐம்பது ஆண்டுகளாக இயங்கிய தளங்கள் எண்ணிலடங்காதது. தம்முடைய படைப்பாக்கங்களையெல்லாம் தாண்டி, பல தேசிய மற்றும் சர்வதேச ஓவியக் கண்காட்சிகளை ஒருங்கிணைத்துள்ளார். ஓவியர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்களைக்கொண்ட கருத்தரங்குகள், ஆய்வுகள், பட்டறைகள் என தொடர்ந்து பல திசைகளிலுள்ள படைப்பாளிகளை ஒன்று திரட்டி உரையாடல்களை ஏற்படுத்தியுள்ளார். பத்திரிகை ஆசிரியர், பதிப்பாளர் என பல பரிமாணங்களில் கால்தடங்கள் பதித்து புதிய பாதைகளை உருவாக்கியவண்ணம் இயங்கிவருகிறார்.
ஒரு ஆளுமையினை கொண்டாடும் வகையில் ஓவியர்கள் ஒன்றுகூடும் சமயம், அந்த ஆளுமை சார்ந்த சித்தரிப்பின் வெளிப்பாடாக தம்முடைய பங்களிப்பு அமைந்துவிடாமல், தம்முடைய மிகச்சிறந்த படைப்புகள் அங்கே தொகுக்கப்பட்டது, சீரிய கலைவிமர்சகர் இந்திரன் மீதான பெருமதிப்பினை காட்சிப்படுத்தியிருந்தது.
பாண்டிச்சேரியை சேர்ந்த பிரபல ஓவியர் ஒருவர் தான் முதன்முதலில் இந்திரன் அவர்களால் விமர்சிக்கப்பட்டு பாராட்டினைப்பெற்ற ஓவியத்தினை பத்திரப்படுத்திவைத்திருந்தார். அதனை கண்காட்சியில் ஒரு காணிக்கை போல இணைத்தவிதம் மிக நெகிழ்ச்சியாக இருந்தது.
சோழமண்டல ஓவியகிராமத்தை சேர்ந்த பலரின் படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. மூத்த ஓவியர்கள் சேனாதிபதி, வெங்கடபதி, நந்தன், கோபிநாத், கருணாமூர்த்தி, ராகவன், பகவன் சவான் போன்றோரின் படைப்புகளுடன் இளைய தலைமுறை படைப்பாளிகளான ஜேகப், சைலேஷ் மற்றும் சரவணன் போன்றோரின் பங்கேற்பும் கண்காட்சியினை சிறப் பித்தது.
சென்னை ஓவியக்குழுவான 'நுவான்செஸ்' (ய்ன்ஹய்ஸ்ரீங்ள்) ஓவியர்களான கலை இயக்குனர் மகேந்திரன், பிரபுராம், மற்றும் பிரபல ஓவியர் ரபீக் அஹமத் அவர்களின் படைப்புகளும் பங்கேற்பும் புதிய பரிமாணத் தினைத் தந்தது.
பாண்டிச்சேரியின் மூத்த ஓவியர்கள் சிற்பி ஜெயராமன், முனுஸ்வாமி, அன்பழகன், கந்தப்பன் மற்றும் இளைய தலைமுறை ஓவியர்களான ஏபெல், ஏழுமலை, எழிலரசன், திருமால், ராஜா பெருமாள், காயத்திரி என பலரும் தம் படைப்புகளின் மூலமாக விழாவுக்கு முழுமையினைத் தந்தனர்.
உலகப் புகழ்வாய்ந்த நீர்வண்ண ஓவியர் ராஜ்குமார் ஸ்தபதியின் பங்கேற்பு ஓவியர்களுக்கும் இந்திரனுக்குமான இணக்கத்தின் மற்றுமொரு உதாரணமாகத் திகழ்ந்தது.
விழாவினை சிறப்பித்து இந்திரன் குறித்து மிக அருமையான ஒரு பாராட்டு உரையினை புதுவை ஆளுநர் வழங்கியதோடு மட்டுமல்லாமல் ஓவியம் குறித்து தன்னுடைய அனுபவங்களையும், அதனால் எவ்வளவு தீவிரமாக ஈர்க்கப்பட்டவர் என்பதையும் அவர் ஓவியர்களுடன் பகிர்ந்துகொண்டது ஆச்சரியமூட்டியது.
இந்த விழாவின் முக்கிய அம்சமாகத் திகழ்ந்தது அதில் பங்கெடுத்த ஓவியர்களின் படைப்புகள். பல ஊடகங்களைக் கொண்டு, மரபு சார்ந்த மற்றும் நவீன படைப்புகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
பாண்டிச்சேரி மூத்த ஓவியர் முனுஸ்வாமியின் மிக நேர்த்தியான டெர்ரகோட்டா சிற்பங்கள், சர்ரியலிச ஓவியர் திருமாலின் ஆட்டோ-ரிக்ஷாவின் புதுவடிவ சிற்பம், கோபால் ஜெயராமனின் கண்ணாடிகள் பதிக்கப்பட்ட ஓவியம், ராஜா பெருமாளின் வட்ட வடிவ அரூப படைப்பு, ஆனந்த வேலுவின் மாறுபட்ட மோனா லிசா என ஒவ்வொரு ஓவியரின் தனித்தன்மையும் புதிய வெளிப்பாட்டுடன் அமைந்திருந்தது.
ராஜ்குமார் ஸ்தபதியின் நீர்வண்ண உருவப் படங்கள், தமக்கே உரிய நேர்த்தியுடனும் நீர் வண்ணத்தின் தன்னிச்சையுடனும் அனைவரையும் வசீகரித்தன.
சோழமண்டல ஓவியர் சேனாதிபதியின் நுணுக்கமிகு ஓவியம் அதன் வண்ணங்களாலும் வடிவங்களாலும் தனிமொழியில் உரையாடியது, ஜேகப்பின் மெய்சாரா செரிக்ராப், கருணாமூர்த்தியின் உலோகப் புடைப்பு, கோபிநாத்தின் அரூப படைப்பு, நந்தனின் ஓவியம், பகவான் சவானின் மெய்சாரா ஓவியம், ஓவியர் முருகேசனின் நவீன படைப்பு, வெங்கடபதியின் மை ஓவியம் மற்றும் ராகவனின் காருகேட்டட் அட்டையிலான நவீன ஓவியமென வெவ்வேறு படைப்புகள் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஆச்சரியப்படுத்தின.
சைலேஷின் யோகா ஓவியம், சரவணனின் நுண்ணிய தைலவண்ண ஓவியம், கலை இயக்குனரும் ஓவியருமான மகேந்திரனின் அரூப படைப்பு, ரபீக் அஹமதின் கொல்லாஜ், பாலசுப்பிரமணியத்தின் தந்த்ரா ஓவியம், பிரபுராமின் கொல்லாஜ் என பலவகைப்பட்டன கண்காட்சியின் ஓவியங்கள். மிக மெல்லிய ரைஸ் பேப்பரில் கருப்பு மையினால் நான் தீட்டிய பூனைகள் ஓவியமும் இங்கே இடம்பெற்று பலர் கவனத்தைப் பெற்றது.
அரவிந்த ஆசிரம ஓவியரான வினோத் ஆச்சாரியாவும் தன்னுடைய ஓவியத்தின் வாயிலாக இவ்விழாவில் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இதுபோன்றதொரு எண்ணிப்பார்க்கமுடியாத சிறப்பான ஒரு சந்திப்பையும் விழாவையும் சாத்தியப்படுத்திய புதுவை முத்தமிழ்மன்ற தலைவர் பழனிசுவாமியின் இந்த முயற்சி மிகுந்த பாராட்டுக்குரியது. இத்தனை கலைஞர்களை ஒன்றுதிரட்டுதல், அற்புதமான கண்காட்சிக்கூடத்தின் தேர்வு, காட்சிப்படுத்தும் நுணுக்கங்கள் என ஒவ்வொரு செயலிலும் மிக அக்கறையுடன் தீவிரமாக ஈடுபட்டவிதம் இந்த விழாவின் வெற்றிக்கு வழிவகுத்தது.
இந்த ஒருவார கண்காட்சியின் ஒவ்வொரு மாலையும் ஓவியர்களும் எழுத்தாளர்களும் ஒன்றுகூடினர், இந்திரன் அவர்களை சந்தித்தனர், அவர்களுடைய கலைப்பயணங்களில் பலவிதங்களில் தம்மைத் தொட்ட இந்திரனுடன் தங்களுடைய அனுபவங்களையெல்லாம் கடற்கரையில் அமர்ந்தபடியே அளவளாவினர்.
எண்ணிலடங்காத ஓவியர்களுக்கான ஊக்க சக்தியாகவும், ஒரு சீரிய விமர்சகராகவும் இயங்கி வந்துள்ள இந்திரன்மீதான அதீத அன்பின் காரணமாகவே இத்தனை கலைஞர்கள் வெவ்வேறுதிசைகளிலிருந்து திரண்டு ஒன்றுகூடி அவருடன் தம்முடைய நேரத்தினை பகிர்ந்து மகிழ்ந்தனர்.
பலவித பணிகளில் இயங்கும் இவர்களெல்லாம் ஒருவருடன் ஒருவர் சந்தித்து உரையாடவும் ஒரு அற்புத மான தளமாக இந்த நிகழ்வு அமைந்தது குறிப்பிடத்தக்கது.
கலைஞனைக் கொண்டாடும் இதுபோன்றதொரு அதிசய விழாவினை ஆச்சரியத்துடன் கண்டு வியந்துகொண்டிருந்தது மிக அருகிலிருந்த கடல்.