வள்ளுவர் கோட்டம், பூம்புகார் கலைக்கோட்டம், திருவள்ளுவர் சிலை என பார்த்துப் பார்த்து செதுக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருக்கு திருவாரூரில் தேர்போன்ற வடிவத்தில் கலைஞர் கோட்டம் அமைத்து நூற்றாண்டு விழா எடுத்து நன்றி பாராட்டியிருக்கிறது மு.க.ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு.
மறைந்த தி.மு.க. தலைவரும் முன்னாள் முதல்வருமான கலைஞரின் நூற்றாண்டு விழா, நாடு முழுவதும் மிக பிரமாண்டமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக திருவாரூர் மாவட்டம் காட்டூரில் உள்ள கலைஞரின் தாயார் நினைவிடத்திற்கு அருகில், தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில், 7000 சதுர அடி பரப்பளவில், கலைஞர் கோட்டம் அமைக்கப்பட்டு, அங்கு கலைஞரின் சிலையும் நினைவுக் கலைக்கூடமும் நிறுவப்பட்டு, திறப்பு விழா கண்டிருக்கிறது.
கலைஞர் கோட்டத்தில் உள்ளே நுழைந்த உடனே, வராண்டாவில் கலைஞர் சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலை, கோட்டத்தின் வாயிலில் நின்று பார்த்தாலே தெரியும் வகையில் அமைக்கப்பட்டிருக்கிறது. 7 அடியில் பீடம் அமைக்கப்பட்டு அதன் மேல், ராஜஸ்தானில் இருந்து வரவழைக்கப்பட்ட பளிங்குக் கற்களால் ஆன, கலைஞர் அமர்ந்து பேனா பிடித்து எழுதுவதுபோன்ற சிலை தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது.
தரைத் தளத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் தளத்தில் முத்துவேலர் நூலகம், கலைஞரின் நினைவுகளைப் போற்றும் பழைய புத்தகங்கள், கலைஞரின் இளமைக் கால அரசியல் பொதுவாழ்வு பணிகள் குறித்த புகைப்படங்கள், பெரியார் அண்ணா மற்றும் திராவிட இயக்கத் தலைவர்களோடு கலைஞர் ஆற்றிய அரசியல் பணிகள் குறித்த புகைப்படங்கள், கலைஞர் பயன்படுத்திய பொருட்கள், அவர் எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள் என அனைத்தும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
விழாவுக்கு தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான ஸ்டாலின் தலைமை தாங்கினார். கோட்டத்தை பீகார் முதல்வர் நிதீஷ்குமார் திறந்துவைப்பதாக ஏற்பாடுகள் நடந்திருந்த நிலையில், திடீரென உடல் நலக்குறைவினால் விழாவிற்கு வரமுடியாமல் போக, சிறப்பு விருந்தினராக வந்த பீகார் மாநில துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், மற்றும் பீகார் மாநில நீர்வளத்துறை அமைச்சர் சஞ்சய் குமார் ஜா ஆகியோர் கலந்துகொண்டனர். கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் அவரது சகோதரி செல்வியும் திறந்து வைத்தனர். தொடர்ந்து கலைஞரின் சிலையை யும் அவர்களே திறந்துவைத்து கலைஞர் அருங்காட்சியகத்தில் அமைக் கப்பட்டுள்ள புகைப்படங்களை அனைவரும் பார்வையிட்டனர்.
அங்கு அமைக்கப்பட்டுள்ள செல்பி பாயிண்ட் இருக்கையில் அமர்ந்து, கலைஞருடன் தேஜஸ்வி யாதவ் புகைப்படம் எடுத்துக்கொண்டார். அதன் பின்னர் அங்குள்ள முத்துவேலர் நூலகத்தை அவர்கள் திறந்துவைத்துப் பார்வையிட்டனர். தொடர்ந்து கோட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள திருமண அரங்கத்தைத் திறந்துவைத்து, நான்கு ஜோடிகளுக்கு திருமணமும் செய்துவைத்து மகிழ்ந்தனர்.
விழா காலை சரியாக பத்து மணிக்கு திருவாரூர் சகோதரி களின், மங்கள இசையுடன் தொடங்கியது. அதன் பின்னர் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் சிறப்புக் கவியரங்கமும், பேராசிரியர் சாலமன் பாப்பையா தலைமையில் மக்கள் மனதை பெரிதும் கவர்ந்தது தலைவர் கலைஞரின் பேச்சா? எழுத்தா? என்ற தலைப்பில் பட்டிமன்றமும். மாலதி லக்ஷ்மண் குழுவினரின் பகுத்தறிவுப் பாட்டரங்கமும் என விழா களைகட்டியது. பட்டிமன்றத் தில் திருவாரூர் புலவர் இரெ.சண்முகவடிவேல், கவிதா ஜவஹர், எஸ்.ராஜா, புலவர் ராமலிங்கம், இரா.மாது, பாரதி பாஸ்கர் ஆகியோர் பங்கேற்றனர்.
கவியரங்கத்திற்கு தலைமையேற்ற கவிப்பேரரசு வைரமுத்து, முதல்நாளே திருவாரூருக்கு வந்தவர், கலைஞர் பிறந்த ஊரான திருக்குவளைக்கும் இலக்கியக்குழுவுடன் சென்றார். அவரோடு கவிஞர் ஆண்டாள் பிரியதர்சினி உள்ளிட்ட பலரும் சென்றனர். திருக்குவளையில் உள்ள கலைஞரின் சிலை, முத்துவேலரின் சிலை, அங்குள்ள நூலம், கலைஞரின் புகைப்படங்கள் என ஒவ்வொன்றாக கண்டு ரசித்து சிலாகித்தனர். அங்கே திருக்குவளை இல.மேகநாதன்,கவிஞர் குவளை கணேசன், கவிஞர் முல்லை பாண்டியன் உள்ளிட்டவர்கள் வரவேற்றனர்.
கவிதை அரங்கிற்குத் தலைமையேற்ற வைரமுத்து, தேருக்கு திருவிழா வரும்... திருவாரூரில், ஊருக்கு திருவிழா வந்ததுண்டா? சாமிக்குப் பரிவட்டம் கட்டும் திருவாரூரில், தமிழுக்கு பரிவட்டம் இதுவரை கட்டியதுண்டா? பல்லாண்டு பல்லாண்டு பாடுவதுபோல், திருவாரூரில் நூற்றாண்டு நூற்றாண்டு பாடியதுண்டா. கேளுங்கள் தமிழர்களே இன்று கேளுங்கள், பாருங்கள் தமிழர்களே இன்று பாருங்கள்...ஒரு நூற்றாண்டின் முன்னே, இங்கிருந்து 23 கிலோமீட்டர் பின்னே, திருக்குவளை என்னும் ஊரின் கண்னே, ஒரு குழந்தை பிறந்தது, எந்த தேவதையும் ஹெலிகாப்டரில் வந்து பூ தெளிக்கவில்லை. வால் நட்சத்திரம் தோன்றியதாய் வரலாற்றுக்குத் தகவல் இல்லை. ஒரு தலைவன் தோன்றினான் என்று தாசில்தார் பதியவில்லை. ஆனால் அது குவா குவா என்றதும் தமிழுக்கு ஒரு சங்கீதம் கேட்டது. அந்த குழந்தை கைகள் உதறிய போது மூடத்தனத்தின் முகத்தில் குத்து விழுந்தது. கால்கள் உதறியபோது ஆதிக்க சமூகத்துக்கு உதை விழுந்தது.
அதன் உடம்பில் ஒட்டிய மாசு கழுவியபோது, சாதி மத அழுக்குத் தூசு கழுவியது.... என்று தனக்கே உரிய அழகிய கவிதைகளால் கலைஞரை ஆராதித்தார்.
’திருவாரூர் தெருவே உனக்கு என் வணக்கம். தமிழுக்கு படைக்கலம் தந்தவனுக்கு அடைக்கலம் தந்த குடிலே. அன்றைக்கே எதிர்நீச்சல் இட்டு கடந்து முடித்த கமலாலயக் குளமே, தோளிலே கொடி தாங்கி நெஞ்சிலே இடிதாங்கி நாவிலே தமிழ் தாங்கி அவன் நடந்துபோன திருவாரூர் தெருப் புழுதியே, காலத் தலைவன் அண்ணாவும், களத்தலைவன் கலைஞரும் முதன் முதலில் சந்தித்த திருவாரூர் திருத்தலமே உனக்கு என் வணக்கம்,’ என அவர் அடுத்தடுத்துத் தொடுத்த சரவெடிக்கவிதைகள் கேட்டு, அவையே மயங்கிப்போய் அமர்ந்திருந்தது.
கவிஞர்கள் ஆண்டாள் பிரியதர்ஷி, கபிலன், பா.விஜய், தஞ்சை இனியன் ஆகியோரும் அதிரடிக் கவிதை களால் கலைஞரைப் பாடி, அவையை மயக்கினர்.
கவிதை பாடிய கவிஞர்கள், மேடையில் இருந்து இறங்கி வந்து, எதிரில் அமர்ந்திருந்த முதல்வர் ஸ்டாலினுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.
முத்துவேலர் நூலகத்தை திறந்து வைத்து பேசிய பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், "சமூக நீதிக்கான வருங்காலப் போராட்டங்களுக்கு கலைஞரின் கொள்கைகளும், வழிகாட்டுதல்களும், அவர் கடைப்பிடித்த சமூக நீதியும், சமத்துவமும், கொள்கைகளும் கைகொடுக்கும்.திராவிடக் கருத்துகளை நிலைநிறுத்தியதில் முக்கிய தலைவராக விளங்கியவர் கலைஞர். அவரின் கொள்கைகளும், சிந்தனைகளும் இன்றைய காலத்தில் அவசியமாக இருப்பதை நினைவு கூரவே இங்கு நாம் கூடியிருக்கிறோம். கலைஞரின் சிந்தனைகளும், கருத்தியலும் அடுத்தடுத்த தலைமுறையிடம் செல்வாக்கு பெற்றுவருகிறது. சமூக நீதியை காப்பதில் முதன்மையானவராக இருந்தவர் கலைஞர்.” என்று புகழாரம் சூட்டினார்.
விழாவில் பேசிய தமிழக முதல்வர் ஸ்டாலினோ, வான் புகழ் கொண்ட வள்ளுவருக்கு தலைநகரில் கோட்டம் கண்ட கலைஞருக்கு, திருவாரூரில் கோட்டம் கட்டி எழுப்பப்பட்டிருக்கிறது. ஓடிவந்த இந்தி பெண்ணே கேள்... நீ தேடி வந்த கோழை நாடு இதுவல்லவே என்று 13 வயதில் எந்த திருவாரூர் வீதிகளில் கலைஞர் போர் பரணி பாடி ஓடிவந்தாரோ, அதே திருவாரூர் வீதியில் அவருக்கு கோட்டம் எழுப்பப்பட்டுள்ளது. அண்ணாவை கலைஞர் முதன்முதலில் சந்தித்ததும் திருவாரூரில்தான். தலைவராக பிற்காலத்தில் ஆனவர் அல்ல கலைஞர், தலைவராகவே பிறந்தவர்தான் கலைஞர். அதற்கு அடித்தளம் இட்டது இந்த திருவாரூர் மண் என்றவர், ‘’ "என்னைப் பொறுத்தவரை இது கலைஞர் கோட்டம் மட்டுமல்ல .என் தந்தைக்கு என் தாய் எழுப்பிய அன்புக் கோட்டையாகவே இதைக் கருதுகிறேன். டி கே சீனிவாசன், கவிஞர் கா.மு ஷெரிப் ஆகியோர் வாழ்த்தி பேசிட, என் தந்தையார் கலைஞரை எனது தாயார் திருமணம் செய்துகொண்டதும் இதே திருவாரூர் மண்ணில்தான்.
அவர், தான் பிறந்த திருக்குவளையைக் காதலித்தார், தான் வாழ்ந்த இல்லத்தில், தாயார் அஞ்சுகம் பெயரில் படிப்பகம், தந்தை முத்துவேல் பெயரில் நூலகம் அமைத்தார். பள்ளி மேற்படிப்பு படிக்கத் திருவாரூர் வந்தார். திருவாரூர் அவரைக் கருவாக உருவாகிவிட்டது. எத்தனையோ தொகுதிகளில் அவர் போட்டியிட்டாலும் இறுதியாக அவர் வந்துநின்ற இடம் திருவாரூர், இரண்டு முறை இங்கு அவர் வென்றுள்ளார். தேர் புறப்பட்ட இடத்துக்கே வந்து நிலைகொள்ளும் என்பதுபோல கலைஞரும் கலைஞரின் பயணமும் இருந்தது. அதனாலேயே இந்த கோட்டம் இங்கு கம்பீரமாக எழுப்பப்பட்டுள்ளது என நெகிழ்ந்தார்.
விழாவில் கலந்துகொண்ட திருக்குவளை தொண்டர்களோ,” பிறந்த ஊரை கலைஞர் மறக்கவில்லை, என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில் என்பதுபோல என்ன இல்லை எங்கள் ஊரில் என்று கூறும் அளவிற்கு அத்தனையையும் குக்கிராமமான திருக்குவளைக்கு கொடுத்துள்ளார், அவர் இல்லை என்கிற குறை மட்டுமே எங்களுக்கு. அவர் வாழ்ந்த காலத்தில் நாங்களும் வாழ்ந்தோம் என்பது ஒருபுறம் மகிழ்ச்சியானாலும், வரலாற்று சிறப்புமிக்க இந்த விழாவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு பெற்றது நாங்கள் செய்த பெரும் புண்ணியம், என்று அகம்மகிழ்ந்தனர்.
”கலைஞருக்கு நிகர் கலைஞர் மட்டும்தான். எத்தனை சோதனைகள், எத்தனை வேதனைகள் என அவர் வாழ்வில் சந்திக்காத ஏற்றத்தாழ்வுகளே இல்லை, திருக்குறளை எளிய மக்களும் படிக்கு அளவிற்கு கொடுத்த கலைஞர், தமிழர்களின் அடையாளமான திருவள்ளுவருக்கு கோட்டம் அமைத்து பெருமை சேர்த்தார்.
அதேபோல திருவள்ளுவருக்கு சிலை அமைத்து உலத்தை திரும்பி பார்க்க செய்தார். சிலப்பதிகாரத்தை, பூம்புகாரில் கலைக்கூடமாக அமைத்து தமிழர்களின் கண்முன்னே நிறுத்தினர். ஏழை, எளிய மக்கள் சுயமரியாதையோடு வாழ கை ரிக்ஷா ஒழிப்பு உள்ளிட்ட எத்தனையோ சாதனைகளை செய்துகாட்டினார். அவர் வாழ்ந்த காலத்தில் நாமும் வாழ்ந்தோம் என்பதை நினைக்கும்போது உள்ளம் இனம்புரியா பெருமை அடைகிறது, என்கிறார்கள் கோட்ட திறப்பு விழாவில் கலந்துகொண்ட கோயம்புத்தூர் தொண்டர்கள்.
கலைஞர் கோட்டம் குறித்து திரண்ட பொதுமக்கள் கூறுகையில், "கலைஞரை நேரடியாக பார்த்துப் பேசி, பழகிடமுடியாத கவலையை தற்போது கலைஞர் கோட்டத்தில் இருக்கும் ஒவ்வொரு காட்சியும் தீர்த்து வைக்கிறது. கலைஞரின் அதிதீவிர வருங்காலத் தலைமுறையினர் தெரிந்துகொள்ள ஏதுவாக காட்சிப்படுத்தியுள்ளனர். அதேபோல மாணவர்கள் தங்களது படிப்புக்கு தேவையான ஏராளமான நூல்கள் கலைஞர் நூலகத்தில் குவித்து வைக்கப்பட்டுள்ளன. இனி தமிழில் ஆய்வு செய்யும் மாணவர்களுக்கு கலைஞர் கோட்டம் துணையாய் இருக்கும். கலைஞர் கோட்டத்திற்குள் வந்தால் கலைஞரோடு நெருங்கிப் பழகிய அனுபவம் கிடைக்கும் அளவிற்கு கலைஞரின் வாழ்வியலை தத்ரூபமாக வடிவமைத்து கலைக்கூடமாக்கிய தமிழக முதல்வருக்கு எங்கள் பாராட்டுக்கள் என்றனர் உற்சாகமாக.
காவிரிப்படுகையில் கரிகாலன் கட்டிய கல்லணை, ராசராசன் கட்டிய தஞ்சை பெருஉடையார்கோயில், கலைஞர் கட்டிய பூம்புகார் கலைக்கூடம் என தமிழர்களின் அடையாள வரிசையில் மு.க.ஸ்டாலின் கட்டிய கலைஞர் கோட்டமும் இடம் பிடித்துள்ளது.
திறப்பு விழா கண்ட நாள் முதல் மக்கள் அலை அலையாக வந்து, கலைஞர் கலைக் கோட்டத்தைக் கண்டு ரசித்து உள்ளம் நெகிழ்ந்துவருகிறார்கள்.