யாகாவாராயினும் நாகாக்க காவாக்கால்
சோகாப்பர் சொல்லிலிழுக்குப் பட்டு’
-என்பது வள்ளுவனின் திருவாக்கு.
எவராக இருந்தாலும் கண்டபடி வார்த்தைகளை அள்ளிவீசாமல், அளந்து நிதானமாகப் பேசவேண்டும். இல்லையென்றால் அவமானத் தையும் துயரத்தையும் சந்திக்க நேருமென்று இதன்மூலம் எச்சரிக்கை விடுக்கிறான் வள்ளுவன்.
தன்னை இந்தியாவின் முடிசூடா மன்னன் என்றும் சர்வ அதிகாரமும் படைத்த அபூர்வ பிறவி’ என்றும், தனக்குத்தானே கற்பனை பண்ணிக்கொண்டு, வாய்க்கு வந்ததை எல்லாம் பிதற்றித் திரியும் பா.ஜ.க. பிரமுகரான ஹெச். ராஜாவுக்காகவே வள்ளுவன் இந்த எச்சரிக்கைக் குறளை எழுதியிருக்கிறான் என்றே தோன்றுகிறது.
காரணம், நாகாக்கத் தெரியாமல், உளறும் நாக்கோடு ஊர்வலம் வந்து கொண்டிருக்கிறார் ராஜா. அவரது நாக்கிற்கு நாகரிகம் தெரியவில்லை. பண்பாடு தெரியவில்லை. அழுக்கு நாக்கோடு அலைந்து திரியும் அவர், அழுக்குச் சொற்களையும் குப்பைச் சொற்களையும் கண்டவர் மேலும் கக்குகிறார்.
தமிழில் இனிய சொற்கள் ஏராளமாக இருந்தும், இன்னாத சொற்களை, அருவருப்பும் ஆபாசமும் மிகுந்த சொற்களை... தாராளமாக அள்ளி வீசி, அடாவடி அர்ச்சனை செய்வதையே பிழைப்பாக வைத்திருக்கிறார்.
வெறிபிடித்ததுபோல் அனைவரையும் கடித்துக் குதறும் அவரைக் கட்டிவைக்காமல், விருப்பம்போல் சுதந்திரமாய்த் திரியவிடும் இந்துத்துவா சக்திகள், அவரை வைத்துத் தமிழகத்தில் கலவரத் தீயை மூட்டி, அதில் குளிர்காய நினைக்கின்றன.
இதற்காகவே, ஹெச். ராஜாக்களும் எஸ்.வி. சேகர்களும் இன்னும் சிலரும் இங்கே சுந்தந்திரமாகத் திரிந்துகொண்டிருக்கிறார்கள்.
இவர்களில் எஸ்.வி. சேகருக்கு, அவரது அண்ணியான தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், பாதுகாப்புக் கவசமாக இருக்கிறார். இதனால் வாய்க்கொழுப்பாக எதையாவது பேசிவிட்டு, அண்ணியின் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்கிறார் வீராதி வீரரான எஸ்.வி. சேகர். பத்திரிகையாளர்களையும் பெண் பத்திரிகையாளர்களையும்... பத்திரிகை நிறுவனர்களையும் ஆபாசமாகப் பேசிவிட்டு, அதனால் வந்து குவிந்த புகார்களைப் பார்த்து மிரண்டுபோய், போலீஸின் பாதுகாப்போடு தலைமறைவாகத் திரிந்தார் அந்த வீராதி வீரர்.
அதேபோல்தான், எச்சில் சொற்களை வாரி இறைக்கும் ராஜாவும், கண்டவர் மேலும் ஆபாச அர்ச்சனையை நடத்திவிட்டு, போலீஸ் பாதுகாப் போடு தலைமறைவாக இருக்கிறார். தலைமறைவாகவே ராஜ்பவன் வரை போகிறார். அவரைத் தேடும் போலீஸ் டீம்களுக்கு அவரை அடையாளம் தெரியவில்லை போலிருக்கிறது.
ஹெச். ராஜவைப் போன்றவர்கள் நடத்திவரும் தனிநபர்த் தாக்குதல் களையும், தலைவர்கள் மீதான தாக்குதல்களையும் தடுக்கமுடியாமல் இந்த எடப்பாடி அரசும் போலீசும் வேடிக்கை பார்த்துவருவது வெட்கக்கேடானது.
அதேசமயம் இந்த இந்துத்துவா கும்பல், யார்மீதாவது புகார் கொடுத்தால்... அவர்களது ஏவலர்களாக மாறி, துடித்தெழுந்து அதிரடி நடவடிக்கை யில் இறங்குகிறது எடப்பாடி போலீஸ். இப்படியொரு அடிமைவேலை செய்து ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டிய கூச்சமற்ற நிலையில் இந்த அரசு, காலத்தின் சுமையாகக் காலத்தை நகர்த்திக் கொண்டிருக்கிறது.
யாராவது கருத்துரிமைக்காகக் குரல் கொடுத்தால் அவர்கள்மீது அடக் குமுறையைக் கட்டவிழ்த்துவிடுகிறர்கள். வாழ்வுரிமைக்காகப் போராடும் மக்கள்மீது லத்தியையும் துப்பாக்கிகளையும் இரக்கமில்லாமல் ஏவுகிறார்கள். மக்களுக்கும் சமூகத்துக்கும் எதிராகவே இவர்களது ஆட்சிரதம் ஓடுகிறது. அதன் சக்கரத்தில் இருந்து ஜனநாயகத்தின் ரத்தம் வழிந்தோடுகிறது.
விழிப்புணர்வுப் பாடல் பாடியதற்காக மக்கள் பாடகர் கோவனை, அடித்துத் தள்ளி ஒரு தீவிரவாதியைப்போல் கைது செய்கிறார்கள். அரசின் அநீதிகளைத் தட்டிக்கேட்கும் சமூகச் செயல் பாட்டாளர் திருமுருகன் காந்தியை பொய் வழக்குகள் போட்டு சிறையில் அடைக்கிறார்கள். நீதிமன்றம் அவரை விடுவித்தாலும் திரும்பத் திரும்பக் கைது செய்கிறார்கள். பியூஸ்மானுஷ், முகிலன் போன்ற சமூக நல ஆர்வலர்களை வெளியே நடமாடவிடாமல், பொய் வழக்குகளால் துரத்திக்கொண்டே இருக்கிறார்கள்.
இந்தப் பழிவாங்கும் படலத்தில் அண்மையில் சிக்கி, அநியாயமாகக் கைது செய்யப்பட்டார் ஆராய்ச்சி மாணவியான சோபியா.
தூத்துக்குடியைச் சேர்ந்த இந்த சோபியா, அங்கே நடந்த துப்பாக்கிச் சூட்டுப் படுகொலைகளால் கொந்தளித்துப் போயிருந்தார். இந்த நிலையில், தூத்துக்குடி விமானத்தில் தன்னோடு பயணித்த பா.ஜ.க. தலைவர் தமிழிசையைப் பார்த்ததும், இன்றைய மாணவர்களுக்கே உரிய இயல்போடும் எழுச்சி யோடும் ’"பாஸிச பா.ஜ.க. ஒழிக!'’ என கோஷம் எழுப்பினார். இதுதான் அவர் செய்த மாபாதகக் குற்றமாம். விமானத்தில் அமைதியாக இருந்த தமிழிசை, தரையிறங்கி தன் ஆட்களைப் பார்த்ததும் ருத்ரதாண்டவம் ஆடினார். ’"அந்த மாணவியை விடாதீங்க...' என்று சத்தம் போட்டார். உடனே சோபியா, "நான் பேசியதில் என்ன தவறு? இது சுதந்திர நாடுதானே? நினைத்ததைப் பேசக்கூட எங்களுக்குக் கருத்துரிமை இல்லையா?' என்று கேட்டார். அவர் ஹெச். ராஜா பாணியில், "நான் கோஷம் போடவில்லை. என் அட்மின்தான் கோஷம் போட்டார்...' என்றோ, "என் குரல் டப்பிங் செய்யப்பட்டிருக் கிறது' என்றோ, பயந்து நடுங்கிப் பொய் சொல்ல வில்லை.
"நான் பேசிய தில் என்ன தவறு? எங்களுக்குக் கருத்துரிமை இல்லையா?' என்று தைரியமா கக் கேட்டார்.
இதைக் கேட்டதும் தமிழிசை... "பார்த்தீர்களா? பேச்சுரிமை, கருத்துரிமை என்கிறார்... இதிலிலிருந்தே அந்த மாணவி ஏதோ ஒரு இயக்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறார் என்பது தெரிகி றதே. பின்னணி பற்றி விசாரிக்கவேண்டும்' என்று கூடுதலாக ஆட்டம்போட்டார்.
அந்த மாணவியை ஒருமையில் திட்டித் தீர்த்தார். அதோடு நிற்காமல், அந்த மாணவிக்கு தீவிரவாத முத்திரை குத்தவும் முயன்றார். படிக்கும் மாணவியாயிற்றே... அவரது எதிர்காலம் பாதிக்குமே...
அவரும் நம்மைப் போன்ற பெண்தானே... என்றெல்லாம் நினைத்துகூடப் பார்க்காமல், சோபியாமீது புகாரைக் கொடுத்து, உடனே நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று ’தாம்தூம்’ எனத் தாண்டிக் குதித்தார்.
ஹெச். ராஜாவையும் எஸ்.வி. சேகரையும் தொடக்கூட பயப்படுகிற நம் துணிச்சல்காரப் போலீஸ், மாணவி சோபியாவை பலவந்தமாகக் கைதுசெய்து சிறைச்சாலைக்கு அனுப்பியதோடு, அவரது எதிர்காலத்தை இருட்டாக்கும் ’திருப்பணியிலும்’ இறங்கியிருக்கிறது.
இத்தனைக்கும் மாணவி சோபியா, அந்த நாக்கொழுப்பு ஹெச். ராஜாவைப் போல் அசிங்கமாகவோ, ஆபாசமாகவோ, வரம்புமீறியோ எதையும் சொல்லிவிடவில்லை. அவர் அதிகபட்சம் உச்சரித்த சொல்லே.. "பாஸிச பா.ஜ.க' என்பதுதான். ஒரு பட்டாம் பூச்சியை பீரங்கியால் குறிவைப்பதுபோல், இதற்கே அதிரடி கைது, சிறைவாசம், விசாரணை என்ற பெயரில் சித்திரவதை என்று காவல்துறை தன் ஆபத்தான அஸ்திரங் களை அந்த அப்பாவி மாணவிமீது எய்துகொண்டிருக்கிறது.
அப்பாவி மாணவியை நசுக்கப் பார்க்கும் எடப்பாடி போலீஸ், கொழுப் பெடுத்த ஹெச். ராஜாவுக்கு ராயல் சல்யூட் அடித்து பவ்யமாக பாதுகாப்பை யும் பந்தோபஸ்தையும் தந்துகொண்டிருக் கிறது.
வெறிபிடித்த நாய் சாலையில் போகிற வருகிறவர்களை எல்லாம் கடித்துக் குதறுவதுபோல, இந்த ராஜா... திராவிடத் தலைவர்களை எல்லாம் தொடர்ந்து பாய்ந்து பிடுங்கிக்கொண்டே இருக்கிறார்.
மூட நம்பிக்கைகளுக்கு எதிராக வும் ’வர்ணாசிரமத்திற்கு எதிராகவும் தீ மூட்டிய பெரியாரையே, சாதிவெறியர் என்றும், கன்னடர் என்றும், அவரை காலணியால் அடிக்க வேண்டும் என்றும், ஐந்தறிவு ஜீவனாய் மாறி தொடர்ந்து ஊளையிட்டுக் கொண்டே இருக்கிறார் ராஜா.
சாக்கடைமீது கல்லெறிந்தால் நம் மீதுதானே தெறிக்கும் என்று அதைக் கண்டுகொள்ளாமல் எல்லோரும் ஒதுங்கிச் சென்றதால்... இதை தன்மீதான பயம் என்று கருதிக்கொண்ட ராஜா, ஆபாச அர்ச்சனையை நிறுத்தவே இல்லை.
நாத்திகம் பேசியதால் கலைஞருக்குப் பேசமுடியாமல் போய்விட்டது என்று நீட்டி முழக்கினார். மரியாதைக்குரிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியரை, திருடன் என்றார். சிறுத்தைகள் திருமாவள வனைத் தீய சக்தி என்றார். கம்யூனிஸ்டுகளை கீழ்மையாக விமர்சித்தார். கனிமொழியை கள்ளக் குழந்தை என்று கூறி அவரது பிறப்பை இழிவுசெய்தார். இப்படி எல்லா அரசியல் கட்சித் தலைவர்களையும் தாறு மாறாக விமர்சித்த ஹெச்.ராஜா, இலக்கிய வாதியான கவிஞர் வைரமுத்துவையும் விட்டுவைக்கவில்லை. ஆண்டாளின் தமிழைப் பாராட்டிய அவர், ஆண்டாளை இழிவு செய்துவிட்டார் என்று கலவரத் தீயைப் பற்றவைக்க முயன்றார். அவரோடு சேர்ந்து மடாதிபதிகளும் சோடா பாட்டில் வீசுவோம் என்று தெருவில் நின்று வரிந்துகட்டினார்கள். இதைப்பார்த்த இறைப் பற்றாளர்களே.. இதுதான் ஆன்மீகம் வளர்க்கிற லட்சணமா? என மிரண்டு போனார்கள்.
இன உணர்வாளர்கள் எல்லாரும் வைரமுத்துவுக்காக அணி திரண்டதும்... ராஜாவும் அவரோடு முண்டா தட்டிய காவிக் கும்பலும் கொஞ்சம் கொஞ்சமாக அடங்கிப் போய் வாயைப் பொத்திக்கொண்டார்கள்.
இந்த நிலையில், திரிபுராவில் ஆட்சி யைப் பிடித்த காவிக் கும்பல், அங்கே வெறிக் கூத்தாடியது. கம்யூனிஸ்டுகள் தாக்கப்பட்டனர். அவர்களின் வீடுகள் கொளுத்தப்பட்டன. பெண்கள் என்றுகூட பார்க்காமல் மூர்க்கர்கள் அவர்களையும் தாக்கினர். அங்கிருந்த லெனின் சிலை, கீழே சாய்த்து அகற்றப்பட்டது. இந்தியாவே அதிர்ந்தது. ஆனால், நாகரிகம் என்றால் என்ன விலை என்று கேட்கும் ராஜாவோ, இதைப் பார்த்து குஷியாகி, ‘திரிபுராவில் லெனின் சிலை தகர்க்கப்பட்டதுபோல், தமிழகத்தில் பெரியாரின் சிலையும் தகர்க்கப்படும்’ என தனது டுவிட்டர் பக்கத்தில் எழுந்து நின்று தொடை தட்டி னார். இதனால் தமிழகமே கொதிநிலைக்குப் போக.. மிரண்டு போன ராஜா, எனக்குத் தெரியாமல் என் அட்மின் செய்த வேலை இது என்று அந்தப் பதிவை எடுத்து விட்டார். ஆனால் அந்தப் பதிவை அவர் எடுத்தாலும்... ராஜா விதைத்த விஷ விதை... அவர் தரப்பினரை உசுப்பேற்றியதில்... திருப்பத்தூர், சென்னை, ஈரோடு, தாராபுரம், புதுக்கோட்டை, திருச்சி என பல இடங்க ளிலும் பெரியார் சிலை உடைக்கப்பட்டு வருகிறது. இவை எல்லாவற்றிற்கும் காரணம் இந்த வாய்க்கொழுப்பு ராஜாதான். இதையெல்லாம் கண்டிக்கவேண்டிய நீதித்துறையும், தன்னைக் கண்டுகொள்ள வில்லை என்றதும் இன்னும் ராஜாவின் ரத்தத்தில் இருந்த கொழுப்பின் அளவு அதிகமாகிவிட்டது. அதனால் அதன்மீதும் பாய ஆரம்பித்தார்.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கடந்த 15-ஆம் தேதி புதுக்கோட்டை மெய்யபுரத்தில் விநாயகர் ஊர்வலத்தை ஹெச். ராஜா, தடையை மீறி நடத்தினார்.
அப்போது கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கத்தில், அங்கிருக்கும் பள்ளி வாசலுக்கு அருகில்தான் நான் மேடை போட்டுப் பேசுவேன் என்றவர், ’கேடுகெட்ட காவல்துறை என்றும், ’காவல்துறையின் ஈரல் கெட்டுவிட்டது’ என்றும் தனது வசை மழையை ஆரம்பித்த ராஜா, "டி.ஜி.பி. வீட்டிலேயே ரெய்டு நடக்கிறதே.. உங்களுக் கெல்லாம் வெட்கமாக இல்லையா?' என்று தாறுமாறாகக் கேட்டு தகராறு செய்தார்.
அப்போதும் அவரிடம் பவ்யமாக உயர்நீதிமன்ற உத்தரவைக் காவல்துறை அதிகாரிகள் சுட்டிக்காட்ட, ’"என்ன பெரிய மண்ணாங்கட்டி ஐகோர்ட்' என்றதோடு மேலும் மோசமான விமர்சனத்தை நீதித் துறைமீதே வைத்தார். இதைக்கேட்டு காவல்துறை ஆடிப்போனது. இருந்தும் அது ராஜாமீது கைவைக்கத் தயங்கியது. தமிழக வழக்குரைஞர்கள் கொந்தளித்தனர். தமிழக மக்கள் கொதித்தனர். ஆனால்... கொதிக்க வேண்டியவர்கள் மட்டும் கொதிக்கவே யில்லை.
அதனால் மேலும் துளிர்விட்டுப் போன ராஜா, அடுத்து அறநிலையத் துறையைக் குறிவைத்துத் தனது திருவாயைத் திறந்து, இப்போது உதைபடாத குறையாய்... போலீஸ் பாதுகாப்போடு தெறித்து ஓடிக்கொண்டிருக்கிறார்.
சென்னையில் கடந்த 2-ஆம் தேதி, இந்து ஆலயங்களைக் காக்க வலியு றுத்தி நடத்தப்பட்ட போராட்டத்தில் மைக் பிடித்த ராஜா, அறநிலையத் துறையினரைக் கடுமையாகத் தாக்கியதோடு, கடலூர் அ.தி.மு.க. எம்.பி.யான அருள்மொழித்தேவன் கோயில் நிலத்தை அபகரித்துவிட்டதாக அவரை ஒருமையில் திட்டித் தீர்த்தார். உடனே அவர் காவல்துறையில் புகார் கொடுக்க, கடுமையான பிரிவுகளில் ராஜாமீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதோடு நிறுத்தாத ராஜா, திருச்செந்தூரில் நின்று கொண்டு... "ஆமை புகுந்த வீடு உருப்படாது. அதேபோல் "அறநிலையத்துறை புகுந்த கோயிலும் உருப்படாது'’ என்று விஷம் கக்கினார். அடுத்து திண்டுக்கல் மாவட்ட வேடசந்தூருக்குப் போன ராஜா, அறநிலையத் துறையில் கேவலமான காரியங்கள் நடக்கிறது. அறநிலையத் துறையினரே கோயில் நிலங்களை விற்கிறார்கள்.
அதுபோல் தங்கள் வீட்டுப் பெண்களையும் விற்கிறார்கள்' என்று நாக்கூசாமல் மிகமிகக் கேவலமாக.. யார்மீது கல்வீசுகிறோம் என்று தெரியாமலே நிதானமில்லாமல் பேசி... இறைத்தொண்டு புரியும் அறநிலையத் துறையினரையும் அவர்கள் குடும்பத்தினரையும் இழிவு செய்தார். இதைக்கண்டு கொதித்துப்போன அவர்கள்... அவருக்கு எதிராகப் போராட்டத்தில் குதித்துக்கொண்டி ருக்கிறார்கள். பல்வேறு ஊர்களிலும் அவர்மீது புகார்களைக் கொடுத்துக்கொண்டிருக்கி றார்கள்.
இப்படி ராஜா திமிராகப் பேசுவதும், அதைக்கண்டு பாதிக்கப்பட்டோர் கொந்தளித் துப் போய்ப் புகார்கொடுப்பதும், தொடர்கதை யாக நடந்துகொண்டிருக்க இரும்புக் கம்பியால் காவல்துறையின் கைகளைக் கட்டிவைத்திருக்கிறது எடப்பாடி அரசு.
இப்போது, மெய்யபுரம் விவகாரத் தில் திருமயம், பொன்னமராவதி இன்ஸ் பெக்டர்கள் தலைமையில் இரண்டு தனிப் படைகள் அமைக்கப்பட்டு ஹெச். ராஜாவைத் தேடுவதாகக் காவல்துறை அறிவித்திருக்கிறது.
ஒரு பக்கம் தனிப்படைகள் ராஜாவைத் தேடுகிறதாம். அப்படித் தேடப்படுகிற ராஜா... 26-ஆம் தேதி, பாதுகாப்புக் காவலர்கள் புடைசூழ சென்று... கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தைச் சந்தித்திருக்கிறார்.
அவரோடு அரைமணி நேரம் ஆற அமர உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்துவிட்டு வெளியே வந்திருக்கிறார். இது அவரைத் தேடும் காவல்துறைக்குத் தெரியாதாம். அதேபோல் கடந்த வாரம், திருக்கடையூர் கோயிலிலில் நடந்த, தனது சகோதரியின் சஷ்டியப்த பூஜைக்குச் சென்று கலந்துகொண்டிருக்கிறார் ஹெச். ராஜா. அவருக்கு இரண்டு டி.எஸ்.பி.க்கள் தலைமையில் 8 இன்ஸ் பெக்டர்கள் உட்பட 110 போலீஸ்காரர்கள் பாதுகாப்பாம். இப்போதும் அவரை காவல்துறை தேடிக்கொண்டிருக்கிறது என்று காதுகுத்துகிறார்கள்.
நாம் இந்த ஹெச். ராஜாவுக்கு அடக்கமாகவே சொல்லிலிக்கொள்கிறோம்.
உனக்கு நாக்கு அரித்தால் உன் கட்சியினரின் முதுகிலும் உன் சமூகத்தி னரின் முகத்திலும் நாக்கைத் தேய்த்துச் சொரிந்துகொள். தேவையில்லாமல் எங்கள் திராவிடத் தலைவர்கள் பக்கம் வந்து உன் கொழுப்பையும் அரிப்பையும் காட்டாதே!
பெரியாரின் நிழலில் நிற்கக்கூடத் தகுதியில்லாத தற்குறியே!, அவருக்கு எதிராக வாலாட்டினால்... தமிழகம் இனியும் அதை வேடிக்கை பார்த்துக்கொண்டிருக் காது. எங்களிடமும் நாக்கு இருக்கிறது.
நாங்கள் நாகரிகத்தை கொஞ்சம் ஓரம்கட்டி விட்டு பதிலடி கொடுக்க ஆரம்பித்தால்... உன்னால் தாங்கமுடியாது.
பெரியார், உன்னைப் போன்ற மண்ணாங்கட்டியல்ல; மாமலை.
உங்களைப் போன்றவர்களால் அவர் தாடியின் ஒற்றை ரோமத்தைக் கூட அசைக்கமுடியாது.
ஏ தற்குறியே! அவரோடு தொடர்ந்து மோதி, உன் தலையை உடைத் துக்கொள்ளாதே! எச்சரிக்கை! இனியும் தந்தை பெரியாரைப் பற்றி, நீ கீழ்த்தர மாகப் பேசினால்... இந்தத் தமிழ்ச் சமூகம் உனக்கு உரிய பாடத்தைக் கற்பிக்கும்.
-எச்சரிக்கையோடு
நக்கீரன்கோபால்