ஓவியர் திருமதி மாரிபோகோசியனின் ஆர்மீனிய கலை பண்பாட்டு கண்காட்சி அண்மையில் சென்னை பாரீஸ் பகுதியில் உள்ள ஆர்மீனியன் சர்ச்சில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஓவியர் மாரி போகோசியன் படித்து, முதுகலை பட்டம் பெற்றவர்.ஆர்மீனியாவைச் சேர்ந்தவர். இந்திய டாக்டர் பிரசாந்த் மதன்மோகனை காதல் மணம்புரிந்து இரண்டு குழந்தைகளுடன் இந்தியாவில் பத்து ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்து வந்தாலும் அவருடைய தாய்நாட்டுப் பற்றும் நேசமும் கொஞ்சமும் குறையவில்லை.
அவரது எண்ணங்கள், வண்ணங்களாக மாறி விழிகளின் ரசனைக்காக அங்கே வைக்கப்பட்டிருந்தன. அனைத்தும் உயிர்ப்பான சித்திரங்கள். உணர்வுகள் அனைத்து ஓவியங்களிலும் ததும்பி வழிந்தன. ஆர்மீனியாவிற்கும் இந்தியாவிருக்கும் இடையிலான உறவையும் தொடர்பையும் நினைவுபடுத்துவதாகவே இந்த ஆர்மீனியன் தேவாலயம் சிறந்த முறையில் பராமரிக்கப்பட்டு வருகிறது. சுற்றிலும் உள்ள பூஞ்செடிகள் மனம் கவரும் நறுமணத்தோடு கூடிய அழகிய சூழலைத் தந்து மனதை அமைதியில் ஆழ்த்துகிறது.
சென்னையில் ஆர்மீனிய இனத்தவர் குடியேறி வாழ்ந்ததற்கானஅடையாளமாக இந்த தேவாலயம் உள்ளது. இங்கு தான் முதன்முதலில் ஷஹாமிர் ஷஹாமிரியன் என்ற 18-ஆம் நூற்றாண்டின் ஆர்மீனிய எழுத்தாளரும், தத்துவவாதியுமான வணிகர் இந்தியாவிற்கு குடிபெயர்ந்தார். அங்கு அவர் ஒரு வசதியான செல்வந்த வணிகராகவும், மதராஸின் ஆர்மேனிய சமூகத்தின் தீவிர உறுப்பினராகவும் இருந்தார். 1771-ஆம் ஆண்டில், ஷஹாமிரியன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் சென்னையின் முதல் ஆர்மீனிய அச்சகத்தை நிறுவினர்.
1787-88 இல், ஷஹாமிரியன் வோரோகாய்ட் பராட்ûஸ வெளியிட்டார். இதில் எதிர்கால சுதந்திர ஆர்மீனிய குடியரசின் முன்மொழியப்பட்ட அரசியலமைப்பு இருந்தது. எனவே அவர் முதல் ஆர்மீனிய அரசியல மைப்பின் ஆசிரியராகக் கருதப்படுகிறார். சுதந்திர இயக்கத்தின் பொறி இங்குதான் தூண்டப்பட்டதாக அறியப்படுகிறது. முதலாம் நூற்றாண்டிலிருந்தே இந்தியா ஆர்மேனிய வர்த்தகத் தொடர்பு இருந்தாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது. ஆர்மீனியாவின் அரசு உபதூதுவரும், திரைப்பட இயக்குனர் கவிஞர் பிருந்தாசாரதியும் இந்த ஓவிய நிகழ்வின் சிறப்பு விருந்தினர்களாக விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
ஆர்மீனிய அரசு உப தூதுவர் மாரட் மெலிக்யான் டெல்லியிலிருந்து இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காகவே கடும் வெய்யிலில் வந்திருந்தது மிகவும் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக இருந்தது. மகிழ்ச்சியுடன் அவர் தன் அனுபவங்கள் எல்லா வற்றையும் விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார். பிருந்தாசாரதியும் பல வேலைகளுக்கு மத்தியில் நேரம் ஒதுக்கிவந்து அவருடைய ஆழமான கலை உணர்வை வெளிப்படுத்தினார். புகைப்படக் கலைஞர் சேகர், தன் பங்கிற்குதுறுதுறுவென்று தனது கேமராவுடன் வலம்
வந்து அனைவரையும் புன்னகைக்க வைத்துக் கொண்டிருந்தார்.
காலையை விட மாலையில் அதிகம்பேர் ஓவியங்களைப் பார்வையிட வந்திருந்தார்கள். ஆர்மீனியாவின் 109-வது வருட இன படுகொலையை (1915) உலகுக்கு நினைவுகூரும் வகையில் அக்ரிலிக் ஆயில் பெயிண்ட் வண்ணங்களில் தீட்டப்பட்ட, மனதைத் தொடும் காட்சிச் சித்தரிப்புகளாக அற்புதமான ஓவியங்கள் அங்கே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. ஆர்மீனியர்களின் சிறப்பான கட்டிடக்கலை வரலாறு, கலாச்சாரம், பண்பாடு இவற்றுக்குச் சான்றாக ஓவியங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டன. ஆர்மீனியா நமது இந்திய நாட்டைப் போலவே ஒரு பழமையான நாடு.
ஓவியர் மாரி போகோசியனின் கணவரது வழிகாட்டுதல் ஆதரவு ஊக்குவிப்பு அவரை மேலும் பல சாதனைகளைப் புரியும் ஊத்வேகத்தை அளிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.