ட்டத்தை மீறுபவன், நாடோடி, அயோக்கியன் ஆகியோர் மக்களின் கண்களுக்குக் கதாநாயகனாகத் தென்படுகின்றார்கள். அவர்கள், நாகரிகமான சமுதாயம் கண்டிக்கும் மதுக்குடித்தல் பெண் மோகம் போன்ற பல்வகையான தீயொழுக்கங்களில் ஆழ்ந்திருப்பவர்கள். காத்தவராயன், மதுரை வீரன், சுடலைமாடன், சின்னத்தம்பி ஆகியோர் முறையே தஞ்சை, மதுரை, திருநெல்வேலிலி மாவட்டங்களிலும் நாகர்கோயிலிலும் கதாநாயகர் களாக விளங்குபவர்கள். இவர்கள் குற்றம் இழைப்பதில் ஒத்து விளங்குகிறார் கள்” என்பார் மு.அருணாசலம் (இஹப்ப்ங்க் டர்ங்ற்ழ்ஹ், ட.188). இவர்களை ‘ஈழ்ண்ம்ண்ய்ஹப் ஏர்க்ள்’ என்று அழைப்பார். இது ஒரு வகை மேட்டுக்குடி விமர்சனம். இதில் ஆரியப் பார்வையும் மாயையும் உள்ளது.

ஆரியக்கொள்கைகளையும் கோட்பாடுகளையும் நம்பிக்கைகளையும் நடைமுறை (மனு) தர்மங்களையும் காலம் மாறினாலும் மாறாமல் கடைபிடித்து வருகிறார்கள் ஆரியர்கள். இதற்கு எதிரான வழக்காறுகளையும் வழிபாட்டு முறைகளையும் கொண்டவர்கள் திராவிடர்கள். இவர்கள் சமநீதியைச் சமூக நீதியாகவும் மண்ணையும் அது சார்ந்த உழைப்பயும் சமூகக் கடமையாகவும் கருதி வருபவர்கள். இருவருக்குமான மோதலே இக்கதை.

வழக்கும் வழக்கும் தீர்வும் தான் இதன் கரு. அந்த வழக்கானது சமூகம் தொடர்புடையதும், தகர்ந்து கொண்டிருந்த சாதி இறுக்கத்தின் முகவரியும் தான் என்பது கதையின் அமைப்பில் புரிகிறது. பார்ப்பன சாதிப்பெண்ணைப் (ஆர்யமாலா) பறைச்சாதி பையன் (காத்தவராயன்) கண்டான், காதல் கொண்டான், இருவரும் ஓடிப் போய் கலப்பு மணம் செய்து கொண்டனர். பார்ப்பனத் தந்தை பாராளும் அரசனைத் தூண்டி அவனைக் கழுவேற்றி சனாதன தர்மத்தைக் காப்பாற்றிக்கொண்டார். அவளையும் நெருப்பிட்டுக் கொல்கின்றனர். இருவரும் ஒடுக்கப்பட்ட சாதி மக்களால் காவல்தெய்வமாக, மாரி, காளி, காமாட்சி ஆகியோரின் பிள்ளைகளாக வழிபட்டு வருகின்றனர். கர்த்தருக்கு ஒரு சிலுவை என்றால் காதத்தனுக்கு ஒரு கழுமரம்.

காத்தவராயன் பறையர், ஆரியமாலா பார்ப்பனர். இருவரும் காதலிலிக் கின்றனர். சாதி வேறுபாடு காரணமாகத் தங்கள் சமூகம் காதலைத் தடுக்கும் என்பதால் உடன்போக்கு செல்கின்றனர். அரசன் அவனைக் கழுவேற்றிக் கொள்கிறான். மக்கள் இதனைப் பாடினர், பாராட்டினர், பக்தியுடன் பரவசப்பட்டனர்.

Advertisment

இக்கதை மக்களிடம் பரவுவதை உயர்சாதியினரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இதனால் சாதிக் கட்டுமானம் குலைந்து போகும், தங்கள் செல்வாக்கு குறைந்து போகும் என அஞ்சினர். எனவே கதையை மாற்ற விரும்பினர். காத்தன் பார்ப்பன குலத்தில் பிறந்தவன் என்றும், தேவ லோகத்தில் சிவனருளால் பிறந்தவன் என்றும் கதைகளைப் புனைந்தனர்.

காத்தனே தன்னைப் பறையன் என்று கூறிக் கொள்வதாக கதைப் பாடல் கூறும். அத்துடன் காத்தன் பறைச்சி பெற்ற பிள்ளை என்று சேப்பிள்ளையான் கூறுவான். பார்ப் பனர்களும் இவனைப் பறையன் என்கின்றனர். இவன் பாப்பாத்திக்குப் பிறந்து பறைச்சியால் வளர்க்கப் பட்டான் என்றும், இவன் தாய் மங்காயி ஆரியமாலை யின் தந்தையாகிய சோமாசி பட்டரின் தங்கை என்று புனைவதன் மூலம் காத்தனின் முறைப்பெண் தான் ஆரியமாலை என்று சமாளிக்கின்றனர்.

arr

Advertisment

பறைச்சாதி காத்தன் பார்ப்பனச் சாதி பெண்ணுடன் மண உறவு கொண்டதால் கொல்லப்பட்டான் என்ற கதைப் பரவினால் அன்று சமுதாயத்தில் இருந்த சாதிச் சட்டங்கள் தவறானவை அநீதியானவை என்பதை மக்கள் புரிந்து கொண்டு விடுவர். அதனால் சாதிக்கட்டுமானம் சிதையும் என்பதால் காத்தனைத் தேவன் ஆக்குகின்றனர்.

காமாட்சி ஆரியமாலையை மணக்கக் கூடாது என்பதற்கு சொல்லும் காரணங்களாக, சாதி வேறுபாட்டால் அவளைத் தொட்டால் தோஷம் என்கிறாள். ஆரியமாலையைத் தன்னருகே வைத்துக் கொண்டு காத்தனைத் தன் சன்னதியினுள் அனுமதிக்க வில்லையாம்.

காத்தன் ஆரியமாலையை இணைந்தபின்னும் அவளோடு வாழ சிவன் அனுமதிக்கவில்லை. காரணம் சாதிக் கலப்பை விரும்பவில்லை.

மூன்று வருணத்தாருடைய பெண்களில் எவளையேனும் சூத்திரன் கைப்பற்றினால் அவனு டைய பொருளைக் கொள்வதோடு அவனது ஆண் குறியை அறுத்துவிட வேண்டும் என்று கோதமர் சூத்திரம் கூறும்.

இச்சூத்திரச் செல்வாக்கிருந்த காலத்தில் காத்தவராயன் கதை நிகழ்ந்தது வர்ணாசிரம தர்ம அடிப்படையில் சமூக அமைப்பில் பார்ப்பனர்கள் உயரிடம் பெறுகின்றனர். இவர்கள் வாழிடம் அக்கிகாரம், ஆசிரமம் ஆகியவை. இவர்கள் வேதம் கற்றதுடன் சோதிடமும் கற்று சாதகம் கணிப்பதிலும் திறமை உடையவர்கள். பார்ப்பனச் சேரிக்குள் தாழ்குலச் சேரியினர் நுழைந்தால் மரணதண்டனை விதிக்கப்படும் என்பதும் விதி ஆனது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதி வரை தீண்டாமை சமுதாயத்தில் ஏற்றுக் கொள்ளப் பட்டிருக் கின்றன. ஆயின் பரவலான கல்விமுறை, அறிவு வளர்ச்சி, சிந்தனை வளம் ஆகியவற்றின் காரணமாக ஏற்பட்டுள்ள கருத்துப்புரட்சியின் காரணமாக இன்று தீண்டாமை என்பதும், சாதி வேறுபாடுகள் என்பதும் கண்டிக்கத்தக்கதாகவும், தண்டிக்கத் தக்கதாகவும் மாறி விட்டிருக்கின்றன.

சாதிகளுக்கு இடையே கடுமையான கட்டுப் பாடும் தீண்டாமையும் உச்சநிலையில் இருந்த காலம் காத்தான் காலம். அக்காலத்தில் ஒரு குலத்துக்கு ஒரு நீதி என்று கூறுகின்றனவும், வர்ணாசிரம தர்மத்தைக் காக்கின்றனவும் ஆரிய மனுதர்சாத்திரம், சுக்கிரநீதி, கோதமர் சூத்திரம் போலும் நூல்கள் சொல்லும் கருத்துக்களே சமுதாயச் சட்ட திட்டங்களாக இருந் திருக்கின்றன. வர்ணங்களுக்கு இடையில் கலப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது அரசனின் இன்றியமையாத கடமை என்று சுக்கிரநீதி கூறும் கருத்தை நாயக்க மன்னர்கள் கடைபிடித்து வந்திருக்கிறார்கள்.

ஆர்யமாலா

இது, 1941-இல் வெளிவந்த பட்சிராஜாவின் படம். காத்தவராயனாக பி.யு.சின்னப்பாவும் ஆர்யமாலாவாக சரோஜினியும் நடித்தபடம்.

சிவனின் சாபத்தால் பார்வதி பூமிக்கு வந்து நந்தவனம் அமைத்து இருந்தார். அதற்கு காவல் காக்க காத்தவராயனைச் சிவனே படைக்கிறார்.

அவன் நீராட வந்த இளைய கன்னியின் ஆடையை மறைக்க அவளோ ஆற்றில் மூழ்கி மாள, காத்தவராயன் சபிக்கப்படுகிறான். பூமியில் ஏழு பிறவிகள் பிறந்திறந்து இறுதியில் கணபதியால் பார்வதியிடம் ஒப்படைக்கப்படுகிறான். ஆரியமாலை ஆரியப்பட்டரின் மகளாகப் பிறந்து அரசனால் தத்தெடுக்கப்படுகிறாள். காத்தான் கொல்லி-மலை மக்களால் வளர்க்கப்பட்டான். அவன் மலையாள தேசம் சென்று சின்னானை வென்று நண்பனாக்கிக் கொண்டு தாயிடம் வருகிறான். வேட்டையாடும் போது ஆர்யமாலையைச் சந்தித்து காதல் கொள்கிறான்.

கிழவனாய் இசை மீட்டியும் கிளிவடிவிலும் போய் ஆர்யமாலை மனதைக் கவர்கிறான். வண்ணான் வடிவில் ஆரியமாலையின் ஆடையில் சித்திரம் தீட்டி அவளது சித்தத்தைக் கவர்கிறான். வளையல்காரனா கப் போய், மயக்கித் தாலி கட்டி விடுகிறான். உண்மை புரியாத அவள் கடலில் இறங்கி சாகத் துணிகிறாள். கிருஷ்ணன் அவனைச் சிலையாக்கிட, காத்தவராயன் தொட்டதும் உருபெறுகிறாள். காத்தான் கைதாகி கழுமரத்துக்குக் கொண்டு செல்லப்படுகிறான். அவன் பார்வதியையும் கிருஷ்ணனையும் வேண்ட காப்பாற்றப் படுகிறான். ஆரியமாலாவும் காத்தவராயனும் மணந்து கொள்கிறார்கள். இதுதான் திரைக்கதை.

பி.யு.சின்னப்பாவின் நடிப்பு, பாட்டு, சண்டை இடும் திறமைகள் வெளிப்பட்டன. ஸ்ரீராமுலு தயாரித்த முதல் படம் சின்னப்பா 9 வேடங்கள் அணிவார், காவல்காரன், வேடன், வண்ணான், கிழவன், சோதிடன், வளையல்காரன், பூசாரி, இளவரசன், காத்தவராயன் என்று.

சின்னானாகக் கலைவாணரும் அவரது மனைவி யாக மதுரமும் தளபதி பாலராயனாகப் பாலையா வும் நடித்தனர். ஸ்ரீராமுலுவின் இப்படத்துக்குக் "காத்தவராயன் கதை' என்பது உப தலைப்பு. கதை வசனத்தை ஜி.சி. வடிவேல் நாயக்கர் எழுத சி.கி. லக்ஷ்மணதாஸ் பாடல்கள் எழுத நி. இராமநாதன் இசை அமைத்திருந்தார். கோவை சென்ட்ரல் ஸ்டூடியோவில் படம் தயாரிக்கப்பட்டது.

காத்தவராயன்

1958-இல் ஆர்.ஆர்.பிக்சர்ஸ் சார்பில் டி.ஆர்.ராமண்ணா தயாரித்து இயக்கிய படம். கதைப் பாடலாலும் வழிபாட்டாலும் புகழ்பெற்ற இக்கதைக்கு துறையூர் மூர்த்தி வசனம் எழுதினார். பாடல்கள் தஞ்சை ராமையதாஸ். சிவாஜிகணேசனும் சாவித்திரியும், காத்தவராயனாகவும் ஆரியமாலாவாகவும் நடித்தனர். காமாட்சியாகக் கண்ணம்மாமவும், (ஆரியமாலாவில் பாலராயனாக நடித்தவர்) இதில் சின்னானாக பாலையாவும் அவனது மனைவி ஆரவல்லியாக எம்.என்.ராஜமும் நடித்தனர். ராமண்ணா இயக்கியிருந்தார் ஆர்யமாலாவில் இசை அமைத்த ஜி.இராமநாதன் இதற்கும் இசை அமைத்திருந்தார்.

"ஆர்யமாலா' பெற்ற வரவேற்பைக் "காத்தவ ராயன்' பெறவில்லை. காத்தவராயன் கம்பீரமாக சிவாஜி கணேசனின் நடிப்பில் மிளர்ந்தாலும் ஆரியமாலா வாகச் சாவித்திரி அழகு பதுமையாக வந்தாலும் இருவரும் ஒடுக்கப்பட்ட, உயர்த்தப்பட்ட சாதிகளின் கதாப்பாத்திரங்களுக்குப் பொருத்தமாக இல்லை, சாவித்திரியிடம் ஆரியமாலாவின் பிராமண பாஷை யும் உடல் மொழிகளும் இல்லை. படம் முழுவதும் பொழுதுபோக்கு அம்சங்கள் மிக்க பாடல்களும் ஆடல்களும் மந்திர தந்திர காட்சிகளும் பிரமாண்டத் தைத் தந்த அளவுக்கு ஓர் இரக்கத்தையும் இரக்கம் சார்ந்த எதிர்ப்பு உணர்வையும் வளர்த்தெடுக்கவில்லை.

"வில்லேந்தும் வீரனே வேல்விளையாட்டின் தீரனே

பொல்லாத வாளோடு போராடும் சூரனே

புவனமே புகழ்ந்திடும் காத்தவராயனே'

என்ற புகழ்ச்சியில் திராவிடத்தன்மை மட்டுமே மிஞ்சியது.

பிறப்புக் கதைகள்

சிவலோகத்தில் பரமசிவன் படியளக்கப் போய் விட்டார். பார்வதி சிவனைச் சோதிக்க சிமிழுக் குள் சிற்றெறும்பை அடைத்து வைக்கிறார். சப்த கன்னியர்கள் சிவதரிசனத்துக்காகச் செல்ல சக்தி தரிசனம் மட்டுமே கிட்டுகிறது. பார் முழுவதும் படியளந்த சிவன் பார்வதி அடைத்த எறும்புக்கும் உணவு தருகிறார். கணவனைச் சோதித்த மனைவிக்குப் பாவம் பரிகாரமாக, பூலோகத்தில் பூந்தோட்டம் அமைக்கச் சாபமிடுகிறார், சிவன். காவலுக்குக் காத்தவராயனைப் படைத்தளித்தார். சப்தகன்னியர் பூவைத் திருட இளைய கன்னியின் ஆடையை காத்தன் அபகரிக்கிறான். அவளோ கங்கையில் மூழ்கி உயிரிழக்க. மற்ற கன்னியர்கள் சிவனிடம் முறையிட்டு அவனைக் காமாந்தக்காரனாகக் காட்டினர். சிவனும், "நீ பூலோகத்தில் பல ஜன்மங்கள் எடுத்து, கடைசி ஜென்மத்தில் நீசனால் வளர்க்கப்பட்டு, காமாந்தக் காரனாகத் திரிந்து எந்தக் கன்னியின் மீது மோகம் கொண்டு அவள் இறக்க காரணம் ஆனாயோ அவள் பொருட்டு கழுவேற்றப்படுவாயாக' என்று சபிக்கிறார். சக்தி அவனுக்காக வேண்டிட, சிவன் மறுக்க, சக்தி மீற, சக்திக்கும் பூலோகத்தில் பிறந்திட சாபமிடுகிறார். சாப விமோசனமான சக்தி கம்பா நதிக்கரையில் தங்கி, சிவனைப் பூசித்து காத்தன் கழுவேறும் வேளையில் என்னைச் சேர்வாய்' என்று உரைத்தார். இது "ஆர்யமாலா'வில் தொடக்கக்கதை.

ஆனால் "காத்தவரான்' படக்கதை வேறானது.

சிவனுக்குப் போட்டியாக சக்தியும் ஆடல் போட்டியில் ஈடுபடுகின்றான். இறுதியில் வென்ற சிவனிடம் உங்கள் ஆட்டத்தில் வேகம் இருந்த அளவுக்கு விவேகம் இல்லை என்று கண்டிக்கிறாள். சினம்கொண்டு போட்டி இருக்கலாம் பொறாமை இருக்கக் கூடாது என்ற சிவன் சபிக்கிறான். பூலோகத்திற்கு இறங்கும் வழியில் அவர்கள் மகன் வீரபாகு வந்து சிவனைக் கண்டிக்க அவனுக்கும் பூலோகத்தில் உழல சாபமிடுகி றார். கம்பா நதிக்கரையில் காமாட்சியாக அவள் கைக் குழந்தையாகிறான் வீரபாகு என்னும் காத்தவராயன். இவை பெண் அடிமைத்தனத்தைப் பறைசாற்றும் பெண்ணியக்கதைகள்.

வளர்ந்த கதை

காத்தவராயன் நோயாளி கோலத்தில், "சகிக்க முடியாத கொடுமை, போதும் இந்தப் பூலோக வாழ்க்கை என்று பிள்ளையாரை வழிபட, அடுத்த ஜென்மத்துடன் உனக்கு சாப விமோசனம்' என்று அவனைப் பிள்ளையாக்குகிறார். தம்பி என அழைத்து அக்குழந்தையைக் கம்பா நதிக்கரையில் சிவவழிபாடு செய்து கொண்டிருக்கும் காமாட்சி அருகில் கிடத்திவிட்டு பிள்ளையார் போகிறார். காமாட்சி அப்பிள்ளையைத் தொட்டிலில் இட்டு "தேவ பாலா, தேசுயர் சீலா, தேவர்க்கும் மூவர்க்கும் யாவர்க்கும் மேலா' என்று தாலாட்டுகிறாள். சிவனிடம் குழந்தை யைக் காக்குமாறு வேண்ட கொல்லிமலை வேடுவச்சிகள் வந்து பெற்றுச் செல்கிறார்கள். வேடுவர்கள் அவனை மல்யுத்தம், சிலம்பம் எனச் சகல வித்தைகளிலும் வல்லவனாக்கி வளர்க்கின்றனர்.

அப்பா பட்டர்க்குத் திருமால் அருளால் இளைய கன்னி ஆர்யமாலாவாய் பிறக்கிறாள். அவள் பிறந்ததும் சுடலையில் கழுமரம் தோன்றுகிறது. ஆரியப்பூராசன் அவளைத் தத்தெடுத்து வளர்க்கிறான்.

அவள் ஆடிப்பாடி, கண்ணாமூச்சி விளையாடி மகிழ்கிறாள். "நேக்குதான்', "ஆப்டுண்டா', "அசட்டு' என்று பிராமண பாஷை பேசுகிறாள் என்பது "ஆர்யமாலா' திரைப்படக்கதை மற்றும் வசனம்.

காமாட்சியிடமிருந்து கொல்லிமலை வேடுவச்சிகள், குழந்தையை வளர்க்க வாங்கிச் செல்கின்றனர். கொல்-லி மலை ராசாவாக்கிக் கொண்டாடுகின்றனர்.

ஆடிப்பாடும் போது கோழிபலி-யை "அம்மா சொல்லாதே என்று தடுக்கின்றனர். காத்தன் வாலி-பனாகி,

"ஜாதி இல்லை மதபேதம் இல்லையே

ஏதும் கவலை இல்லையே

தாரணி மீதிலே எனக்கு

ஆரும் நிகரில்லையே"

என்று பாடுகிறான். குத்துச்சண்டையில் வெல்கிறான். ஆர்யாமாலா பிறந்ததும் சோதிடர், "வேற்று மதத்தவன் ஒருவனால் சிறை எடுக்கப்பட்டு இவளால் கௌரவம் கெட்டு நாட்டுக்கே நலிவு ஏற்படும்' என்று சொல்ல, இதைத் தவிர்க்க அரசன் அவளை ஸ்வீகாரம் எடுத்துக் கொள்கிறான்.

"கண்ணே என் கண்மணியே, பெண்ணுக் கலிதீர்க்க வந்த குலமாமணியே, கற்பகமே கண் வளராய்' என்று தாலாட்டி வளர்க்கிறார்கள். அவளும் வளர்ந்து ஆடிப்பாடுகிறாள். இது "காத்தவராயன்' திரைப்படக்கதை.

தேசாந்திரக் கதைகள்

காத்தவராயன் உலக அனுபவம் பெற, லோக விவகாரம் தெரிந்து கொள்ள விரும்பிய போது தனது தாய் கம்ப நதிக்கரையில் இருக்கும் காமாட்சி என்று அறிந்துகொள்கிறான். அவளிடம் ஆசிபெற்றிட "மாதா உனைத் தெரிந்துளமே மகிழ்ந்தேன்' என்று கர்நாடக இசையில் (வேட்டுவ இசை இல்லாமல்) செந்தமிழில் (வேட்டுவமொழி மறந்து) பாடிவருகி றான். காமாட்சியும் மகிழ்ந்து, “நாட்டின் விநோதங்கள் அறிந்து கொள். கெட்ட சகவாசம், மாதர் மோகவலை தவிர்த்து மனதை அடக்கி ஆளவேண்டும். கூடுவிட்டு கூடுபாய்தல், வேறு வடிவம் பெறுதல், பூத கணங்களின் உதவிபெறுதல் எனும் வரங்களையும் தந்து அனுப்புகிறாள். காத்தான் கேரளத்துக்குப் போகிறான்.

மலையாள மந்திரவாதி சின்னானுடன் பாம்பாட்டி யாய் மோதி, மோடி எடுப்பதில் வெற்றி பெற்று அடிமையாக்குகிறான். காமாட்சியோ ‘அடிமைத் தனம்’ வேண்டாம். அன்புச் சகோதரனாக ஏற்க வேண்டுகிறாள். (ஆர்யமாலா).

‘காத்தவராயன்’ படத்திலும் இதே கதைதான். காமாட்சியும் “யாருக்கு யார் அடிமை? நாம் எல்லோரும் மகேஸ்வரனது அடிமைகள்” என்கிறார்.

திராவிட எல்லைக்குள் கேரளம் உள்ளது.

சின்னான் மலையாளி. அவனது மனைவி தமிழ். கலைவாணர் மலையாளத்தைச் சிறப்பித்து பேச மதுரமோ தமஞிழைச் சிறப்பிக்கிறார். கேரளா காண நேத்ரானந்தமாம். பகவதி அருளைப்பற்றி பேசுவார். கேரளாவே மலை, நதி, மரம், குளம், கோயில் என ஆஹா ஹா. மலையாளம் சகல பாஷைகளுக்கும் ஜீவநாடி. மலையாளத்தில் இருந்துதான் சகலபாஷை களும் பிரிந்தது. கதக்களியிலிருந்து தமிழ்நாட்டியமும் செண்டையிலிருந்து மிருதங்கமும் தோன்றியது என்கிறார்.

கலைவாணர் நாஞ்சில் நாட்டுக்காரர். பாதி மலையாளி என்பர். பாலையாவும் ‘காத்தவராயன்’ படத்தில் சின்னானாக மலையாளம் பேசுகிறார். காத்தவராயன் சின்னானை நண்பனாகச் சேர்த்துக் கொண்டது முதல் திராவிடத் தெய்வமாக உயருகிறான்.

காத்தவராயன் காதல் கதைகள்

பரிமளம் (ஒடுக்கப்பட்ட பறையர் சாதியைச் சேர்ந்தவன்) இந்திர ஜாலம், மந்திர ஜாலம், கோகரணம், கஜகரணம், கூடுவிட்டு கூடு பாய்தல் எனும் வித்தை களையும் பறை, கின்னரி வாசிக்கும் கலைகளிலும் திறமை கொண்டவன். இவனது இசைக்கு மயங்கி ஆரியமாலை (எனும் ஆரியகுல பார்ப்பனப் பெண்) காதல் கொண்டாள் அவளது தந்தை அரசனுக்கு நெருக்கமான அப்புபட்டர். ஆரியமாலா அரசனின் வளர்ப்பு மகளாகிறாள். இருவரும் வேட்டைக் களத்தில் சந்தித்து காதல் கொண்டனர்.

இதனைத் திரைப்படம் பின்பற்றகிறது. ஆர்யமாலா மானைத் துரத்திவர, காத்தன் விரித்த வலையில் கன்னிமான் விழுகிறாள். இருவரும் சேர்ந்து காதல் வலையில் விழுகின்றனர். “வா கலாப மயிலே” என்று பாடி, கனியமுதம் தருகிறான். அவள் நீராடுகையில் இவன் மீன் வடிவில் துள்ள சின்னான் அவனைக் கைப்பற்றுகிறான்.

காமாட்சி இவர்கள் காதலைத் தடுக்கிறாள். அவள் எட்டாப்பழம், கிட்டாக்கிளி என்கிறாள். இவன் அடைந்தே தீருவேன் என்கிறான். “உன் காதல் வித்தைக் கரம்பு நிலத்ஞில் விதைத்துவிட்டாய். அவள் ஜெனித்த போது கழுமரம் உதித்ததை இந்த அவளியே அறியும். அவள் வேண்டாம்டா. துர்சகுனத்தோடு பிறந்த அவளை மறந்து மற்றொரு பெண்ணைத் தேர்ந்தெடுத்துக் கொள். இனி மாற்றுரு எடுக்கக் கூடாது என்றும் எச்சரிக்கிறாள் (காத்தவராயன்) "ஒரு பிராமணப் பெண்ணையா காதலித்தாய். நீசரால் நீ வளர்க்கப்பட்டாய் என்பதை மறந்தாயா? அந்தணப் பெண் மீது காதல் கொள்வது என்பது தகாது. வேண்டாமடா இந்தப் பிடிவாதம். உன் மாமன் மகள் கறுப்பழகி, வைரச் செட்டி மகள் உகந்தழகி, மாணிக்கம் செட்டி மகள் அன்னமுத்து ஆகிய மூவரையும் விவாகம் செய்து வைக்கிறேன். ஆர்யமாலாவை மறந்துவிடு' என்றாள் தாய்.

காத்தவராயனோ "நீங்கள் சொன்னபடி அந்த மூவரையும் மணந்து கொள்கிறேன். ஆர்யமாலா வையும் சிறை எடுக்க வழி சொல்லுங்கள்' என்கிறான். “

அவளால் உனக்கு துன்பம் வரும்' என்கிறாள்.

ஆர்யமாலா அவனைக் கனவில், "நீ வேடன் அல்ல, வேடனாக இருந்தால் உன் முகத்தில் இவ்வளவு தேஜஸும் தேவ களையும் எப்படி வந்தது' என்று கேட்கிறாள். அவளது மனமறிய காத்தன் சின்னான் மனைவியை குறிகாரியாக அனுப்பி ஆடையைப் பெறுகிறான். கிழவன் வேடத்தில் போய், அரண் மனைத் தோட்டத்து மரத்திலேறி பாடுகிறான்.

அவனைப் பிடிக்க வந்த ஆட்களை மந்திரத்தால் ஓட வைக்கிறான். பட்டர் அரசனிடம் முறையிட, தளபதி பாலராயனிடம் ஆணையிட, மாலா மீதுள்ள காதலுடன் அவன் காத்தானைத் தேடுகிறான். பிடித்து கோணியில் கட்டி அவைக்குத் தூக்கி வருகிறான். உள்ளிருந்து அவன் சோதிடராக வெளிவருகிறான். பட்டத்து யானை களவாடப்படும் என்று சோதிடம் கூறி, அவனே யானையைக் கடத்திப் போகிறான்.

அவனைப் பிடிக்கப் பறைகொட்டுகின்றனர்.

காத்தான் சின்னானுடன் வண்ணாரவல்லி வீட்டுக்குச் சென்று அண்ணன் மகனாக நடித்து ஆர்யமாலாவின் சலவைச் சேலையில் தன் காதலைத் தெரிவித்து சித்திரம் வரைகிறான். அரசன் இதனை அறிந்து காத்தானைப் பிடிக்க வீரர்களை அனுப்பு கின்றான். காத்தான் கிளிவடிவில் போய் மாலாவுடன் பாடிக் களிக்கின்றான். அவள் கணையாழி தருகிறாள். "நீ ஒரு பிராமணப் பெண். ஒரு வேடனின் கூற்றுக்கு வசமானாய். ஒரு பிராமண, ஏன் நம் இந்து சமூகத்திற்கு அதை விடக் கேவலம் வேறென்ன வேண்டும்' என்கி றான் பாலராயன். காத்தான் காமாட்சியின் யோசனைபடி கிருஷ்ணனின் உதவியைப் பெறுகிறான்.

காத்தன் வளையல்காரனாகவும் கிருஷ்ணன் சோதிடனாகவும் ஆரிய மாலைக்கு வளையல் போட போய் மயங்கவைத்து தாலிகட்டிவிட்டு தப்பிக்கிறான்.

அவளோ மயக்கம் தெளிந்து தாலியைப் பார்த்து தவித்து கடலில் விழப்போக, அங்கே சிலையாகிறாள்.

அவளைக் காத்தவராயன் மீண்டும் உயிர் பெறச் செய்து புஷ்பவிமானத்தில் ஆரவல்லியுடன் அனுப்பி வைக்கிறான். இது ‘ஆர்யமாலை’ படத்தின் கதைப் போக்கு. காத்தவராயன்’ படக்கதை கொஞ்சம் மாறுகி றது. கிளிவடிவமாக மாறமுடியாத நிலையில் காத்தன் வீரர்களிடம் பிடிபடுகிறான்.

குற்றமும் தண்டனையும்

வளையல் வியாபாரியாக வந்தவன் வீரர்களிடம் சிக்கிக் கொள்கின்றான். அவனால் மாலாவோடு தப்பிக்க முடியவில்லை. மாலா மன்னனிடம் மன்னிக்க வேண்டியும் மறுத்து அரசன் காத்தனின் கண்களைத் தீக்கோலால் பொசுக்க முனைகிறான். மாலா தன்னையே கத்தியால் குத்திக் கொள்கிறாள். காத்தான் சினத்துடன் அரண்மனை வளாகத்தையும் ஊர்வீதிகளையும் அழிக்கிறான்.

“உன்மத்த குணம் படைத்தவனே! உயர்குலத்துப் பெண்ணோடு ஓட நினைத்தாய்” என்ற போது “ஆம்! ஓடினோம்! மதபேதம் என்னும் மந்தியும் சம்பிரதாயம் எனும் சாரையும் ஆசாரம் எனும் குக்கலும் அறிவற்ற முறையிலே எங்களை விரட்டியது, ஓடினோம். மதபேதமற்ற மக்களை நோக்கி ஓடினோம். உண்மை இன்பத்துக்கு உயர்வுதரும் உள்ளங்களை நோக்கி ஓடினோம். ஓடினோம் திசை எங்கும் ஓடினோம் திக்கெட்டும் ஓடினோம். ஓடிய பாதையில் ஓலமிட்டது சாதி வெறி. தடுத்து நிறுத்தியது மதபேதம். இதயமற்ற இனவெறி ஈட்டி கொண்டு தாக்கியது. மாளவேண்டிய நான் மீண்டுவிட்டேன். மீள வேண்டிய அவள் மாண்டு விட்டாள்” என்று புரட்சி வசனம் பேசுகிறான், திராவிட இயக்க வீரனாக.

“குறுகிய மதியால் மதத்தைப் பற்றி விளக்கம் கூறும் அறிவிலியே. நிறுத்து உன் வார்த்தைகளை” என்கிறான் அரசன்.

“மதத்தின் பேரால் நீ செய்த மாநில சேவையை மாலையிட்டு வரவேற்க அமரலோகம் காத்திருக்கிறது” என்கிறான் காத்தான்.

காமாட்சி அம்மனும் கழுவேற்றுவது நீதியற்ற செயல் என்கிறாள். காத்தன் காமாட்சியிடம் மன்னிப்பு கேட்கிறான். அவனை யானை மூலம் இழுத்து போகின்றனர். “விதியா சதியா இந்த வேதனை உனக்கு ஏனோ” என்ற அசரீரி பாடுகிறது. “ஒழியட்டும் மதப்பிணி. அழியட்டும் சாதி மதம். மலரட்டும் புத்தம்புது கொள்கைகள்” என்று காத்தன் முழங்குகிறான்.

காமாட்சியும் மக்களிடம் நீதி கேட்கிறாள். “எது அநீதி அது அக்கிரமம்? எது அதர்மம்? அன்பும் பண்பும் நிறைந்த அரசன் மகளைக் காதலித்து குற்றமா? சாதி மத பேதங்களுக்கு முடிவுகட்ட எண்ணி எதிர்த்த என் மகனா அநீதிக்காரன்?” என்று குமுறுகிறாள்.

‘மனோகரா’ பாணியில் “ஆரியபுரம் என்று இருந்ததாக வருங்கால மக்கள் நினைக்க முடியாதபடி பாலைவனமாக்கிவிடு. தர்மத்தைத் தழைக்கச் செய். இனவெறி கொண்டோருக்கும் இதய மற்றோருக்கும் இது பாடமாக இருக்கட்டும்” என்கிறாள்.

காத்தன் தன்னைக் கட்டியிருந்த பெருஞ்சிலையை இழுத்து சிதைக்கிறான். தேடிவந்த ஆர்யமாலாவும் அங்கே இடிபாடுகளுக்குள் சிக்குகிறான். இருவரும் இணைய சிவன் வந்துவிட அவன் கழுமரம் ஏறாமலேயே கதை முடிகிறது. ஆரவல்லி காத்தவராய னிடம் குழந்தை வரம் கேட்கிறாள். ‘காத்தாயி’ என்று பெயர் வைக்க விரும்புகிறாள். காத்தனும் வரம் தருகிறான் இது ‘காத்தவராயன்’ திரைப்படம் சொல்லும் கதை.

‘ஆர்யமாலா’ படத்திலே காத்தவராயன் காளியிடம் வரம் பெற்று கழுவேற படியேறுகிறான் ‘

பெற்ற தாய்தனை மகன் மறந்தாலும் என்று பாடுகிறான்.

கழுவேறும் போது தேவர்கள் தோன்றி தடுக்க, காத்தான் அவளை மணந்து தேவன் ஆகிறான்.

கழுமர வழிபாடும் காத்தவராயன் பெயரைக் காத்தன் என்னும் காத்தாயி என்றும் இட்டு அழைக்கும் வழக்கமும் வளர்ந்துள்ளது. இத் திரைப்படங்களும் அதற்குரிய அடையாளங்களாக விளங்குகின்றன.

“தேனில் விழுந்த ஈ தேறுவதில்லை” என்று காமாட்சி எச்சரித்த போது, “இனிப்பிலே மடிந்த இன்பமாவது அந்த ஈக்குக் கிடைக்கும் அல்லவா?” என்று காத்தான் பதில் கூறுவான். “தண்ணீரில் படகு இருக்கலாம் ஆனால் படகிலே தண்ணீர் இருக்கக் கூடாது” என்று மறு பதில் கூறுவாள். சரிதான். “அவள் மலைமுகட்டிலே, நீ அதன் அடிவாரத்திலே” என்ற கூறுவதுதான் சரியில்லை. மலையில் வளர்ந்தவன் அவன். அடிவாரத்தில் யாகம் வளர்ப்பவர்கள் ஆரியர்கள். இது உண்மை, உத்தமம்.

ஆர்யமாலா, காத்தவராயன் இரு படங்களிலும் ஓர் ஆதிதிராவிடனை வேடுவனாக்கி கொண்டாட்டத்துக்குக் கொடி கட்டுகிறார்கள். அவன் சிவனின் அம்சம், பிள்ளையாரின் தம்பி, வீரபாகுவின் வேற்றுவடிவம் என்று சாதி மோதலின் கூர்மையை மழுங்கடிக்கி றார்கள். சக்தியே சாபத்தால் காமாட்சி ஆகிறாள். வேடுவர்கள் வளர்க்கிறார்கள். வேட்டையில் சந்திக்கிறார்கள். காதலை மந்திர தந்திரங்களால் வளர்க்கின்றனர். கலப்பு மணத்தைக் குற்றமாக்கிக் கழுமரத் தண்டனை வழங்குகின்றனர். ஆனால் இரண்டு படங்களிலும் கழுமரம் ஏறுதல் தடுக்கப்படுகிறது. இதன் மூலம் தண்டனையின் கொடூரம் தவிர்க்கப்படுகிறது. இரு படங்களையும் தயாரித்தவர்கள் ஸ்ரீராமுலுவும் ராமண்ணாவும் பொழுதுபோக்குப் படங்களின் பிரபலஸ்தர்கள். பகுத்தறிவு படத்தைப் பக்திப்படங்களாக மாற்றி விடுகின்றனர்.

ஆரியமாலா ஆரியத்தின் பிரதிநிதியாகவும், காத்தவரான் ஆதித்திராவிடனாகவும், திராவிட மொழி எல்லையை விரிப்பதாகவும், திராவிடக் கலப்புமணக் கருத்தாக்கத்தைப் பரப்புவதாகவும் (சிவாஜி கணேசன் ஐம்பதுகளில் திராவிட முன்னேற்ற கழகத்தவர்) அமைந்துள்ளது. ஆனால் சாதி எதிர்ப்பைத் தூண்டுவதாக அமையாமல் சாமான்யர்களின் சகிப்புத் தன்மையை வளர்த்தெடுப்பதாக அமைகின்றன. பிராமணியத்தை எதிர்த்துவிட்டு பிராமணர்களைச் சேர்த்து அணைத்துக் கொள்ளும் திராவிடப் போக்கையும் வெளிப் படுத்துகின்றன. ‘ஆரியமாலா’ ஓர் ஆர்ய மாயை என்பதில் அய்யமில்லை. ஆனால், ‘காத்தவராயன்’ ஒரு திராவிட மாயையா?