(பவளவிழா கண்டிருக்கிறார் கவிஞர் அறிவுமதி. கடந்த 24-ஆம் தேதி தமிழ் ஆர்வலர்கள் சேலத்தில் ஒன்று கூடி, அவருக்கு விழா எடுத்திருக் கிறார்கள். அவருடைய பவள விழாவைச் சிறப்பிக்க இந்தக் கட்டுரை...)
கவிஞர் அறிவுமதி!. எத்தனை தம்பிகள் இவருக்கு?
ஒவ்வொருவரோடும் அதே நேசம்.
இன்று புதிதாய் ஒரே ஒரு வரி எழுதிவரும் இளம் கவிஞனோடும் வாஞ்சையோடு பேசி அவனை வளர்த்துவிடுவதில் அக்கறையோடு நேரத்தைச் செலவிடும் அன்பு.
அகமும் முகமும் கனிந்து பாசத்தைப் பரிமாறும் தாய்மை.
தனியாக அவரைப் பார்ப் பதே அரிது. எப்போதும் இளங் கவிஞர்கள் சூழ்ந்திருப்பார்கள். கவிக்கோ எனும் ஆலமரத்தடியில் கற்று வந்த ஞானத்தின் கனிவு அது.
தமிழின் மீது ஆழமான பற்றுக் கொண்டவர்.
அது அவர் தாய்மொழி மீது அவர் கொண்ட பற்று என்பதைத் தாண்டி ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழி மீது அன்பும் பற்றும் கொண்டிருக்கவேண்டும் என்று விரியும் உலகளாவிய உயிர்த்துடிப்பு. மண்ணைப் பற்றிக்கொள்ளும் மரத்தைப் போல மனிதனும் தன் நிலத்தோடும் மொழியோடும் பற்றுக் கொண்டிருக்கவேண்டும் எனும் பொது நோக்கு.
கவிக்கோவின் செல்லப்பிள்ளை அறிவுமதி அய்யாவின் நேரடிப் பராமரிப்பில் வளர்ந்து இன்று வான்நோக்கி வளர்ந்து நிற்கும் வாகை மரம். நூற்றுக்கணக்கான குயில்கள் வந்து குடியிருக்கவே தான் கிளைகள் விரித்ததாய்ப் பூரிக்கும் தாய்மரம்.
ஆம்... 'தை'யின் தாய் அறிவுமதி. ஆண்டுக்கொரு இலக்கியப் புதையல் ஈனும் 'தை' இதழின் விதை அண்ணனே.
முன்னோடிகளைப் போற்றி வணங்கு வதில் மட்டுமல்ல... இன்று பிறக்கும் இளம் கவிஞனையும் கொண்டாடு வதிலும் அவர் அக்கறை கொள்வதை அதன் பக்கங்கள் சொல்லும். ஆழம், உயர
(பவளவிழா கண்டிருக்கிறார் கவிஞர் அறிவுமதி. கடந்த 24-ஆம் தேதி தமிழ் ஆர்வலர்கள் சேலத்தில் ஒன்று கூடி, அவருக்கு விழா எடுத்திருக் கிறார்கள். அவருடைய பவள விழாவைச் சிறப்பிக்க இந்தக் கட்டுரை...)
கவிஞர் அறிவுமதி!. எத்தனை தம்பிகள் இவருக்கு?
ஒவ்வொருவரோடும் அதே நேசம்.
இன்று புதிதாய் ஒரே ஒரு வரி எழுதிவரும் இளம் கவிஞனோடும் வாஞ்சையோடு பேசி அவனை வளர்த்துவிடுவதில் அக்கறையோடு நேரத்தைச் செலவிடும் அன்பு.
அகமும் முகமும் கனிந்து பாசத்தைப் பரிமாறும் தாய்மை.
தனியாக அவரைப் பார்ப் பதே அரிது. எப்போதும் இளங் கவிஞர்கள் சூழ்ந்திருப்பார்கள். கவிக்கோ எனும் ஆலமரத்தடியில் கற்று வந்த ஞானத்தின் கனிவு அது.
தமிழின் மீது ஆழமான பற்றுக் கொண்டவர்.
அது அவர் தாய்மொழி மீது அவர் கொண்ட பற்று என்பதைத் தாண்டி ஒவ்வொருவரும் தங்கள் தாய்மொழி மீது அன்பும் பற்றும் கொண்டிருக்கவேண்டும் என்று விரியும் உலகளாவிய உயிர்த்துடிப்பு. மண்ணைப் பற்றிக்கொள்ளும் மரத்தைப் போல மனிதனும் தன் நிலத்தோடும் மொழியோடும் பற்றுக் கொண்டிருக்கவேண்டும் எனும் பொது நோக்கு.
கவிக்கோவின் செல்லப்பிள்ளை அறிவுமதி அய்யாவின் நேரடிப் பராமரிப்பில் வளர்ந்து இன்று வான்நோக்கி வளர்ந்து நிற்கும் வாகை மரம். நூற்றுக்கணக்கான குயில்கள் வந்து குடியிருக்கவே தான் கிளைகள் விரித்ததாய்ப் பூரிக்கும் தாய்மரம்.
ஆம்... 'தை'யின் தாய் அறிவுமதி. ஆண்டுக்கொரு இலக்கியப் புதையல் ஈனும் 'தை' இதழின் விதை அண்ணனே.
முன்னோடிகளைப் போற்றி வணங்கு வதில் மட்டுமல்ல... இன்று பிறக்கும் இளம் கவிஞனையும் கொண்டாடு வதிலும் அவர் அக்கறை கொள்வதை அதன் பக்கங்கள் சொல்லும். ஆழம், உயரம் எனும் இரு திசை நோக்கி வளர்ந்துசெல்லும் தாவர இயல்பு இயல்பாகவே அமையப்பெற்றவர் என்பதால் 'தை'லிக்கும் அதே இயல்பு. அதில் அவர் எழுதும் ஒவ்வொரு வரியும் மனதில் அப்படியே தைக்கும்.
'கலசத்தில் மிச்சமிருக்கிறது
வரகு'
எனும் ஒற்றை வரியில் அழிக்கப்பட்ட நிலத்தில் விதைக்கப் பட இன்னும் விதைகள் உள்ளன என்பதைத் தெரிவிப்பதோடு ஒரு இனம் எப்படித் தன்னைக் தொடர்ந்து வரலாறு நெடுக அழிவில் இருந்து காப்பாற்றிக்கொண்டு வருகிறது என்பதற்கான தொன்மக் குறியீடாகவும் அவ்வரி விளங்கு வதைக் காணமுடியும்.
அவருடைய 'புல்லின் நுனியில் பனித்துளி' தமிழில் தடம் பதித்த முன்னோடி ஹைக்கூ நூல். தமிழில் ஏராளமான ஹைக்கூ கவிஞர்களை அந்நூல் உருவாக்கியது. உருவாக்கி வருகிறது. உருவாக்கும்.
'பருத்திக் காட்டில்
காவல் பொம்மைக்குக்
கந்தல் சட்டை.'
'யாருக்கு யார் சொந்தம் பனை மரத்தின் இடுப்பில்
ஆலமரம்.'
'உடைந்த வளையல்களைக் குளத்தில் எறிந்தேன் எத்தனை வளையல்கள்.'
இவற்றையெல்லாம் என் கல்லூரிக் காலத்தில் படித்தபோது ஏற்பட்ட பரவசத்தை இப்போது விளக்க முடியாது. அது காதலித்த பெண்ணை முதன்முதலாக பார்த்த அனுபவத்தை இன்னொருவரிவரிடம் பகிர்ந்து கொள்வது போன்றது. அதைத் தனக் குள் எண்ணிப் பார்த்து இன்புறலாம். ஆனால் முழுமையாக எடுத்துரைக்க இயலாது.
ஹைகூ மட்டும் அல்ல... இன்னும்
பலவற்றுக்கு அவர் முன்னோடி.
ஆண் பெண் நட்புக்கு ஒரு கவிதைத் தொகுதியே எழுதியிருக்கிறார். 'நட்புக்காலம்' என்ற அத்தொகுதிக்கு முன்னுதாரணம் ஏதுமில்லை.
அவர் பதித்த முதல் சுவடு.
'நேரமாகிவிட்டது
எழுந்து போங்கள்
என்று சொல்கிற
பூங்காங்கள்
உள்ளவரை
வாழ்க்கை
அநாகரிகமானதுதான்.'
அந்த வகைமையில் இன்று பலரும் எழுதுகின்றனர்.
'ஆயுளின் அந்திவரை' என்பது அவர் எழுதிய காதல் படிக்கட்டு. தீராத மாயப்படிகள் அதன் வரிகள்.
'மேல் இமையில் நீயிருக்கிறாய்
கீழ் இமையில் நான் இருக்கிறேன்'.
ஒரு பாடலுக்கான பல்லவி அல்லவா இவ்வரி.
இதுபோல் எத்தனை? காதலின் ஆச்சர்யம் காட்டும் மாயக் கண்ணாடி ஒவ்வொன்றும்.
'மழைப் பேச்சு' , 'மழைத் தும்பிகள்' இரண்டும் சங்கக் கவிஞன் ஒருவன் புதுக்கவிதை எழுதியது போலிருக்கும்.
'பாடல் என்பது பாடப்படுபவரால் முடிக்கப்படுவதில்லை.'
'பயன்படத்தான் செய்கிறது தும்பி பிடித்த அனுபவம்.'
'பசித்துக் கொண்டுதான் இருக்கும்
பசித்து உண்'.
'மழை ஓய்ந்த பின் சாரலாய்
நினைவுகள் .'
படிமங்கள் ஒவ்வொன்றும் சர்க்கரைப் படிவங்கள்.
இடம்பெயர்ந்து வாழும் ஈழத் தமிழர் துயர் குறித்து அவர் வடித்த கண்ணீர் 'வலி'.
"மீனை அரியும்போது கிடைத்தது
குழந்தையின் கண்.'
என்ற அதிர்ச்சியான காட்சிப் படிமம் ஈழத்தில் நடந்த கொடுமைகளைக் கூறும் வரி வடிவம்.
'வெள்ளைத் தீ ' என்ற அவரது சிறுகதைத் தொகுதி உரைநடையில் கவிதையை உருக்கி ஊற்றிய ஒரு புதுமை. கதையும் கவிதையும் கூடி முயங்கும் சர்ப்ப சிருங்காரம். சிற்ப அலங்காரம்.
'அன்பான ராட்சசிக்கு ' தொகுதிதான் நான் முதலில் படித்த அவருடைய நூல். மெழுகாய் உருகி வழியும் ஒரு பெண்ணின் அட்டைப்படம் இன்னும் நினைவிலிருக்கிறது.
எத்தனை கவிஞர்களுக்கு அணிந்துரை வழங்கி யிருக்கிறார் அவர்? எல்லாமே இலக்கியப் புதையல். அவற்றைத் தொகுத்தால் தெரியும் எது பெரிது என்பது. அவரது இதயமா?அந்த ஆகாயமா? ஆயிரம் தலைவாங்கிய அபூர்வ சிந்தாமணி கேட்கவேண்டிய கேள்வி இது. அப்போதும் சரியான பதிலைச் சொல்லும் இளவரசன் மெய்யழகனாக ஓடிவந்து தம்பிகளின் தலைகளைக் காப்பாற்றுவார்.
என் 'பறவையின் நிழல்' கவிதைத் தொகுதிக்கு அவர் எழுதிய அணிந்துரை நான் பெற்ற அரிய விருது.
'இது நீளப் பழகிய என் நெடுநாள் உறவன் பிருந்தாசாரதியின் அடுக்கு ஓடை.
கரைத்துக் குடித்தவன் என்பதினும்
மூழ்கி மண் எடுத்தவன்
என்பதே மெய்.'
போன்ற வரிகளை எல்லாம் மீண்டும் மீண்டும் படித்து உள்ளூர மகிழ்வேன். காதல் கடிதத்தை எத்தனை முறை படித்தாலும் அலுக்குமா என்ன ?
என் 'எண்ணும் எழுத்தும்' கவிதை நூலுக்கு அணிந்துரை கேட்டு கவிக்கோ இல்லம் சென்றபோது உடன் வந்து கவிக்கோவிடம் உரிமை யோடு பரிந்துரை செய்தவர்.
படைப்பு குழுமம் வெளியீடான என் 'இருளும் ஒளியும்' நூலை 2019 சென்னைப் புத்தகக் கண்காட்சியில் அவர்தான் வெளியிட்டார்.
'திரைப்படப் பணிகளுக்கு இடையில் தவறா மல் ஆண்டுக்கொரு நூலை வெளியிடு... உனக்கான உயரம் இலக்கியத்திலும் இருக்கிறது' என்று எனக்கு அன்பாக ஆணையிட்டவர்.
இயக்குநர் என்.லிங்குசாமிக்கு அவர் என்றால் உயிர். அவரைப் படித்துதான் தான் ஹைக்கூ எழுதுவதாக மேடைக்கு மேடை சொல்வார்.
அறிவுமதியின் திரையிசைப் பாடல்களில் இறுகக் கட்டிய வீணை நரம்புகளை மீட்டினால் எழும் இனிமையைக் கேட்கலாம்.
'பொய் சொல்லக்கூடாது காதலி
பொய் சொன்னாலும் நீயே என் காதலி'
லிங்குசாமியின் 'ரன்' படத்தில் அவர் எழுதிய பாடலின் பல்லவி இது.
'சிறைச்சாலை' படப் பாடல்கள் இன்னொரு இன்பத்துப் பால்.
பிறந்த நாளில் ஆங்கில வாழ்த்துப் பாடலையே கேட்டு வந்தோம் அதுவரை. அவர் எழுதிய 'நீண்ட நீண்ட காலம் நீ நீடுவாழ வேண்டும்' இன்று தமிழ்க் குடும்பங்கள் எங்கும் ஒலிக்கும் பிறந்தநாள் கீதம்.
நீண்ட நாட்களாகப் பாடல் எழுதாதிருந்த அவரை சண்டைக்கோழி -2 இல் ஒரு பாடல் எழுத வைத்தார் இயக்குனர் லிங்குசாமி. திரைப்பாடலில் உங்கள் முத்திரைகள் தனித்துத் தெரியும் அழகியல் ஆராதனைகள். அவ்வப்போது பாடலும் எழுதுங்கள் என அவரிடம் அன்பு வேண்டுகோள் வைத்தோம்.
தனக்கு வரும் பணமோ புகழோ எதனோடும் தாமரை இலைத் தண்ணீராய் பட்டும் படாமல் உறவாடுவார். வாழ்நாள் சாதனையாக வந்த பரிசுத் தொகையைக்கூட மேடையிலேயே ஈழத் தமிழ்க் குழந்தைகளின் கல்வி நிதிக்கு வழங்கிவிட்டார் என்று அறிந்த போது எனக்குள் அவர் கோபுரமாய் உயர்ந்தார்.
அவரது மகளின் திருமணத் திற்கு நண்பர் இயக்குனர் லிங்கு சாமியும் நானும் பாண்டிச்சேரி அருகிலுள்ள ஒரு கிராமத்திற்குச் சென்றிருந்தோம். அங்கே தெரிந் தது அவர் சேர்த்து வைத்த சொத்து. v எளிய தொழிலாளர் முதல் இலக்கிய, திரையுலக, அரசியல் ஆளுமைகள் வரை ஏராள மானோர் திரண்டு வந்துவிட்டார் கள். கட்சி மாநாடுகளுக்கு வருவது போல் சாரை சாரையாய் வந்து கொண்டே இருந்தார்கள். அது தான் அவர் பலம்.
கலைஞர் விருது, கவிக்கோ விருது எனப் பல விருதுகளைப் பெற்றவர் என்றாலும் விருதுகளுக்கு அப்பால் கிளை விரித்திருப்பது இவரது இலக்கியம்.
எழுதிக்கொண்டே போகலாம் அவரைப் பற்றி... அதன் பக்கங்கள் அவர் உருவாக்கிய கவிஞர்களின் எண்ணிக்கையை விட அதிகமாகிவிடும். அதனால் வார்த்தைகளை நிறுத்தி மனதில் பெருகும் அன்பையே பிறந்தநாள் வாழ்த்து மடலாக விரிக்கிறேன். உங்கள் ரத்தத்தில் ஊறிய மண்ணையும் மொழியையும் எழுதுகோல் மூலம் காகித வயல்களில் விதையுங்கள். தலைமுறைகள் தாண்டி அவை வேரோடிக் கிளை பரப்பும்.