இந்தமுறை விஜய் தொலை க்காட்சி நடத்திய பிக்பாஸ் சீசன் 4-ஐ தமிழக மக்கள் கூர்ந்து கவனித்ததோடு, இதுவரை இல்லாத அளவுக்கு அதில் ஆர்வமாக ஏறத்தாழ 25 கோடி பேருக்கு மேல் வாக்களித்து, தங்களுக்கு விருப்பமான போட்டியாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள்.
இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு குணாதிசயங்கள் கொண்ட, விதவிதமான பாத்திரங்கள், பல்வேறு உத்திகளோடு ஆடிய சடுகுடு ஆட்டத்தையே மக்கள் வயது பேதமின்றி ரசித்திருக்கிறார்கள்.
’ரியாலிட்டி ஷோ’க்களின் பாணியில் தொடங்கப்பட்ட இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், சிலரைக் கொண்டு சில காட்சிகள் முன்னதாகவே தகவமைக்கப் பட்டாலும், இதில் பங்கேற்கும் போட்டியாளர்களின் உண்மையான முகமும் குணமும் வெளிப்பட்டே தீரும் என்பது இதுவரை யிலான உண்மை. காரணம், ஏறத்தாழ 100 நாட்கள், ஒரு மனிதரால் பொய்யாய்ச் சிரித்துக்கொண்டோ , சிந்தித்துக் கொண்டோ இருக்க முடியாது. நல்லவராக காட்டிக்கொள்ளப் போட்டுக்கொள்ளும் அரிதாரம் மிகவும் பலவீனமானது. ஒருவரால் ஒரே மாதிரியான தன்மையைக் காட்டிகொண்டே இருக்க முடியாது. முகங்களின் ஒப்பனைகள் கலைந்துவிடும். எனினும், இந்த பிக்பாஸ் சீசன் 4-ல் தனது நிஜமுகத்தைக் கொஞ்சமும் மாற்றிக் கொள்ளாமல், உள்ளே போன நேர்மையான முகத்துடனேயே வெற்றி முகமாகத் திரும்பியிருக்கிறார், சூழலியல் போராளியும் இயற்கை நேசருமான நடிகர் ஆரி. இது அவருக்கு மட்டுமல்லாமல் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கே பெரும் பெருமையைத் தேடிக் கொடுத்திருக்கிறது.
*
""நான் தொலைக்காட்சித் தொடர்களைப் பார்ப்பதில்லை. எங்கள் வீட்டுப் பெண்கள்தான் அதைப் பார்ப்பார்கள்"" என்று அலட்சியமாக கமெண்ட் அடித்து வருபவர்கள் கூட, இந்த முறை பிக்பாஸ் சீசன் -4 ஐப் பார்த்தார்கள்.
பிக்பாஸின் பெரிய பின்புலம் கமல் என்பதை யாரும் மறுக்க முடியாது. கமல் இல்லாவிட்டால் இந்த நிகழ்ச்சி இத்தனைக் கவனம் பெற்றிருக்க முடியாது. வெற்றி பெற்றிருக் கவும் முடியாது. இத்தனை ஆண்டு காலம் சம்பாதித்து வைத்திருந்த அவரது நட்சத்திர பிம்பம், அந்த நிகழ்ச்சிக்கு ஒளி கூட்டியது. இதில் முகம்காட்டாமல் கனத்த குரலில் பேசிவரும் நபரை பிக்பாஸ் என்று பலரும் கருதினாலும், இந்த நிகழ்ச்சியின் உண்மையான பிக் பாஸ், கமல் தான். அவரால்தான் இந்த நிகழ்ச்சிக்கு இவ்வளவு விளம்பரம் கிடைத்தது.
அந்த விளம்பரத்தைத் தனது அரசியலுக்குக் கமல் பயன்படுத்தி வருகிறார் என்பது வேறு. எனினும், பிக்பாஸ் உலகளாவிய கவனம் பெற்றது கமலால்தான் என்று சொல்லலாம்.
*
புறம் பேசுதல், மற்றவர் விஷயங்களில் மூக்கை நீட்டுதல், கிசுகிசுக்களைத் தேடித் தேடி ரசித்தல், பிறரின் அந்தரங்கங்களைப் பேசுவதில் ஆர்வம் காட்டுதல் என்பது போன்ற குணாதிசயம் என்பது பொதுவியல் மனோபாவமாகிவிட்டது. கவன ஈர்ப்பிற்காக எதையாவது பேசுகிறவர்களும், எதையாவது செய்கிறவர்களும் இப்போது அதிகரித்துவருகின்றனர். எந்த அந்தரங்கத்தையும் கூச்சமின்றி பகிர்ந்து விளம்பரம் தேடும் மாசுபட்ட சைபர் யுகமாக இது மாறிவருகிறது.
ஒரு சில லைக்கிற்காகவும் சில ஹார்ட் சிம்பலைப் பெறுவதற்காகவும் சமூக ஊடகங்களில் எத்தகைய வரம்பு மீறல்களையும் கீழ்மைகளையும் செய்யச் சிலர் தயங்குவதில்லை. இப்படிப்பட்டவர்களின் ரசனைக் கும் தீனி போடுவதாக அமைந்த நிகழ்ச்சியென்றும் இதைக் கருதலாம்.
பலருக்குள்ளும் ஒளிந்துள்ள அடுத்தவரைக் கவனிக்கும் மனநிலையை பிரதிபலிப்பதாகவே பிக்பாஸ் நிகழ்ச்சி வடிவமைக்கப்படுகிறது. அவர்களுக் குத் தீனி போடுவது போல், இந்தமுறை பங்கேற்ற போட்டியாளர்களில் சிலர் கொஞ்சமும் கூச்சமின்றி, எல்லாம் வெட்டவெளிச்சமாகிறது என்ற அச்சமின்றி, இரவுகளில் மசாஜ் லீலைகள் வரை அரங்கேற்றினார் கள். இதை கமலிடமே இரவில் நாங்கள் எந்த ரகசியத் தையும் பேசவில்லை. சும்மா கை காலை அமுக்கிக் கொண்டுதான் கிடந்தோம்’’ என்று போட்டியாளர் களில் ஒருவரே பகிரங்கமாகச் சொல்லவும் செய்தார். இவையெல்லாம் பெண்களைச் சங்கடப்பட வைத்தது.
இதில் பலரின் மன நிர்வாணமும், அப்பட்டமாக வெளிப்பட்டு பெரும்பாலானோரை திகைக்கவைத்தது. ’இவரா அப்படி நடந்தார்? இவரா இப்படி எல்லாம் செய்கிறார்?’ என்றெல்லாம் பலரும் தலையில் அடித்துக்கொண்டார்கள்.
*
பல்வேறு தோற்றமும் உணர்ச்சியும் திறமையும் கொண்டவர்களை ஒரே இடத்தில் ஒன்றாகத் தங்கவைத்தால், அவர்கள் எப்படி ஒத்திசைவுடன் பயணிக்கிறார்கள் என்பதை பார்க்கும் ஒரு சோதனை முயற்சி என்ற வகையில்தான் பிக்பாஸ் நிகழ்ச்சி கவனிக்கப்பட்டது. விதவிதமான, சவாலான சூழல்களை எப்படி எதிர்கொள்வது என்பதை எல்லாம் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் இதைச் சிலர் ரசிக்க முனைந்தனர். அதேபோல் இதில் பங்கேற்ற போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமாகத்தான் இருந்தார்கள்.
*
இந்த முறை பிக்பாஸ் நிகழ்ச்சியில் சமூக செயற்பாட்டாளரும் இயற்கை ஆர்வலருமான நடிகர் ஆரியுடன், சன் மியூசிக்கில் தொகுப்பாளராக இருந்து, சின்னத்திரை நடிகராக மாறிய ரியோ ராஜ், 2016ஆம் ஆண்டில் 'மிஸ் சவுத் இந்தியா' பட்டத்தை வென்ற நடிகை சனம் ஷெட்டி, 'கடலோர கவிதைகள்' மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை ரேகா, மாடலிங் துறையைச் சேர்ந்த, பெர்ஃபெக்ட் பட்டம் பெற்ற பாலாஜி முருகதாஸ், செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத், சின்னத்திரை தொடர்களில் நடித்த நடிகை ஷிவானி நாராயணன், திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரியின் மகனும், நடிகர் ஜீவாவின் சகோதரருமான ஜித்தன் ரமேஷ், பிரபல நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன், மாடலிங் ஆர்டிஸ்டான சோம் சேகர், '3' படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு தங்கையாக நடித்திருந்த கேப்ரில்லா, நகைச்சுவைப் பிரபலமான அறந்தாங்கி நிஷா, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்த ரம்யா பாண்டியன், மாடல், சிவில் என்ஜினியர், ஊட்டச்சத்து நிபுணர் என பன்முகம் கொண்ட சம்யுக்தா கார்த்திக், ரெஸ்டாரண்ட் தொழிலில் ஈடுபட்டிருக்கும் நடிகர் சுரேஷ் சக்கரவர்த்தி, 2012 ஆம் ஆண்டில் விஜய் டி.வி.யின் சூப்பர் சிங்கர் ஜூனியர் பட்டத்தை வென்ற ஆஜித், என 16 போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
இடையில் சின்னத்திரை தொகுப்பாளினி அர்ச்சனா வும், பின்னணி பாடகி சுசித்ராவும் வந்து இடை யிலேயே சென்றார்கள்.
இவர்களில் ஆரம்பத்தில் பாலாஜி, சனம், சுரேஷ், சம்யுக்தா உள்ளிட்ட பலரும் சுவையாக விளையாடி, ஆர்வத்தைத் தூண்டினர். நிகழ்ச்சி மிகவும் ஆரோக் கியமாகச் செல்லும் என்ற எண்ணத்தோடு எல்லோரும் காத்தி ருந்த நிலையில், இவர்கள் அத்தனை பேரும், தாங்கள் எத்தகையவர்கள் என்பதை இந்த நிகழ்ச்சியில் மோசமாக உணர்த்திவிட்டுத்தான் போயிருக்கிறார்கள்.
*
பிக்பாஸ் போட்டியாளர்கள் எப்படி சடுகுடு ஆடினார்கள்?
முதலில் வெளியேறிய நடிகை ரேகா 14 நாட்கள் தான் இங்கே இருந்தார். அவர் எல்லாரையும் விட சற்று மூத்தவர் என்பதால் யாருடனும் ஒட்டவில்லை. அவரிடம் எல்லோரும் விலகி நின்றே பழகினார்கள்.
அதேபோல் அடிப்படை விளையாட்டு விதிகள் தெரியாமல் அப்பிராணியாக பாடகர் வேல்முருகன் வந்தார். உள்ளே பலமுறை மட்டம் தட்டப்பட்டார். அந்த வெள்ளந்தி மனிதர் முதலைகளிடம் சிக்கியவர் போல்தான் அங்கே இருந்தார். 28 நாட்களில் அவரை வெளியே அனுப்பிவிட்டார்கள்.
சுரேஷ் சக்கரவர்த்தி அன்பான தாத்தா என்று அழைக்கப்பட்டு எல்லாருடனும் சகஜமாகப் பழகினார். அவருக்கு என்று ரசிகர் கூட்டம் உருவானது. ஆனால் அவர் அற்புதமாக மக்களால் ரசிக்கப்பட்ட நிலையில், அர்ச்சனாவின் அன்பு டீமால் ஓரங்கட்டப்பட்டார். இதைத் தொடர்ந்து 35 நாட்களில் அவர் வெளியேற்றப்பட்டார் .
’வைல்ட் கார்ட் என்ட்ரி’ என்ற வகையில் பாடகி சுசித்ரா உள்ளே வந்தார் . அவரை அங்கே யாருக்கும் பிடிக்கவில்லை. நிகழ்ச்சியிலும் அவர் ஒட்டவில்லை. மூன்றே வாரங்களில் வெளியேறினார். சம்யுக்தா சிலருடன் பழகினாலும் யாருக்கும் வளையாமல் இருந்தார். எந்தக் கூட்டத்திலும் சேராமல் தன் மனதில் பட்டதை சரியாகச் சொல்லிவந்தார். அதனால் 56 நாள் மட்டுமே அவர் இருந்தார். சனமும் தன் மனதில் பட்டதை எப்போதும் பளிச்சென்று சொன்னார். ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்டார். ஆனால் அவரும் இடையிலேயே வெளியேற்றப் பட்டுவிட்டார்.
இப்படி பலரும் வெட்டுக்காய்களாக உருண்டனர்.
ரொம்பவும் ஆர்வமாக எதிர்பார்க்கப்பட்ட தொகுப்பாளினி அர்ச்சனாவோ, வந்த வேகத்திலேயே அன்பு கேங் என்ற ஒன்றை ஆரம்பித்துவிட்டு, வில்லிபாத்திரம் போலவே நடக்க ஆரம்பித்துவிட்டார். அவர் செய்த அரசியலால் அங்கே பல குழப்பங்கள் ஏற்பட்டன. எப்போதும் தன்னை ஒரு தலைவி போல எண்ணிக்கொண்டு காரியம் ஆற்றினார். அவர் தனது கட்டிப் பிடி வைத்தியத்தை பலரிடமும் உபயோகித்தார். இதனால் கடும் வெறுப்பை மக்களிடம் சம்பாதித்த அவர் 9-வது நபராக வெளியேறினார் . அவரில்லாத குறையைப் போக்குவது போல், வில்லத்தனத்தைக் காட்டி, விஷ ஊசி என்று பொதுமக்களின் வர்ணனைக்கு ஆளானார் ரம்யா பாண்டியன். கடைசி வரை தாக்குப் பிடித்துவிட்டு சிங்கப் பெண் என்னும் பட்டத்துடன் அவரும் வெளியேறி னார். செய்தி அறிவிப்பாளரான அனிதா சம்பத் தனக்கென தனித்துவம் கொண்டவராகத் தெரிந்தார். எதற்கெடுத்தாலும் கோபப்பட்டார்.
அழுதார். தவறான புரிதலுடன் ஆரியுடன் மோதினார்.
இந்த நிலையில் அவரும் 77 வது நாளில் வெளியேறினார்.
மிகவும் இளையவரான ஆஜித், தனது பாட்டுத் திறனை முழுதாகக் காட்டி எல்லோரையும் ஈர்ப்பார் என்று எதிர்பார்த்த நிலையில், அவரும் அன்பு டீமில் சிக்கினார். பின்னர் பாலாஜியின் அடிப்பொடி போலக் கொஞ்ச நாள் இருந்தார். பின்னர் ரம்யா, கேபி,சிவானி போன்றவர்களுடன் சிறுபிள்ளை விளையாட்டு விளையாடினார். வயதுக்கு மீறி ஆரியை விமர்சித்து, அவர் மக்கள் மனதிலிருந்து விரைவாகவே வெளியேறினார். எனினும் 91நாளை இங்கே ஓட்டிவிட்டுத்தான் அவர் சென்றார்.
ஷிவானி நாராயணன் பெரும்பாலும் இடம் நிரப்பி யாக இருந்தார். பலாஜியிடம் மனம் சறுக்கியதால் அவர் தன்னையும் தன் கேமையும் மறந்து அவருடன் திரிந்தார். அவர் அம்மாவின் வருகைக்கும் கண்டிப் பிற்கும் பின்னர் சரியாக ஆட ஆரம்பித்த நிலையில், 100 ஆவது நாளில் அவர் வெளியேறிவிட்டார். இந்தப் போட்டியில் சைக்கிள் கேப்பில் ஐந்து லட்சம் ரூபாயைத் தட்டிக் கொண்டு சென்றவர் கேப்ரில்லா. அவரைப் பொறுத்தவரை தைரியமானவர். இளையவர், அனைவரையும் சமாளித்தவர்.
அவர் தனித்துவம் வெளிப்பட்டது. ஆனால் சோமும் ரியோவும் அவரைக் கோழிக்குஞ்சை அமுக்குவது போல் அமுக்கிகொண்டே இருந்தது ரசிகர்கள் மத்தியில் எரிச்சலையே ஏற்படுத்தியது. அவரும் 102 நாள்வரைத் தாக்குப்பிடித்து சூட்கேஸோடு புத்தி சலிôலித் தனமாக வெளியேறினார்.
ரியோ கேளிக்கை மனம் கொண்டவராக் காட்சியளித்தார். ஆரம்பத்தில் கலகலப்பூட்டினார். ஆனால் அர்ச்சனா வந்த பிறகு அவரது கஸ்டடியில் சேர்ந்து தனது தனித்துவத்தை இழந்தார். 105வது நாள்வரை தாக்குப்பிடித்தார். கேப்ரில்லா கரன்ஸி சூட்கேஸை எடுத்த போது, ரியோவின் உண்மையான முகம் வெளியே வந்தது. அப்போது இருண்ட அவர் முகம் இறுதிவரை ஒளிரவில்லை.
மாடலிங் நபரான பாலாஜி அந்த கட்டுமஸ்தான உடம்பைக் காட்டி ஆரம்பத்தில் ரசிகர்களை அதிகம் கவர்ந்தார். அவர் தனது வாழ்க்கையைப் பற்றியும் தனது பெற்றோரைப் பற்றியும் சிம்பத்திக்காக சொன்ன ஜோடிப்பு, அடுத்தடுத்து மீடியாக்களில் கிழிந்து தொங்கியது. தோற்றத்தில் மாடர்னாக காட்சிதந்த அவர், செயலில் கற்கால மனிதரைப் போல் நடந்துகொண்டார். துணிச்சல் என்ற பெயரில் மைக்கைத் தூக்கி வீசுவது, குரல் உயர்த்திப் பேசுவது, கீழ்மையான சொற்களால் எதிரிகளை விமர்சிப்பது என்று எல்லா விதிகளையும் அநாயசமாக மீறினார்.
இந்த விதிமீறல்களுக்கு அவர் எப்போதோ வெளியேற் றப்பட்டு இருக்க வேண்டும் .ஆனால் திரைப்படங்களில் வில்லன் கதாபாத்திரம் எப்படி முக்கியமோ அது போன்ற நோக்கத்தில் பிக்பாஸில் விறுவிறுப்புக்காக அவரைக் கடைசி வரை இருத்தி வைத்திருந்தனர்.
ரெட் கார்டு பாலவுக்குக் கொடுக்கப்படலாம் என்று பலரும் எதிர்பார்த்திருந்த நிலையில், சேனலின் பேரன் பால் அவரது முரட்டுத்தனம் அங்கீகாரம் பெற்றது. அதனால் அவர் ரன்னராக ஆனார். உண்மையில் சனம், ற்சம்யுக்தா போன்றவர்கள் கடைசிவரை விளையாடி யிருந்தால் அவர்களில் ஒருவர் ரன்னர் ஆகியிருப்பார் என்கிறார்கள் பலரும்.
*
இந்தமுறை சமூக ஆர்வலரான ஆரி, நாட்டுப்புறப் பாடகர் வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி போன்றவர்கள் சக போட்டியாளர்களால் கிண்டலடிக்கப்பட்டு மிகவும் மோசமாக நடத்தப்பட்டார்கள். அதை கூட கமல் கண்டிக்காமல், அறவுரை பதவுரை பொழிப்புரை சொன்னார். ஆண் பெண் பேதமின்றி, வயது வித்தியாசமின்றி, கட்டிப்பிடிப்பது, முத்த மிட்டுக்கொள்வது, கொஞ்சலோ கொஞ்சல் என்று கொஞ்சிக்கொள்வது, மெத்தையில் போர்வைக்குள் வைத்து சக போட்டியாளருக்கு மசாஜ் செய்வது என்று, சகல அத்துமீறல் ஆட்டத்தையும் ஆடித் தீர்த்து விட்டார்கள் அங்கே. கமல், இது போன்ற மீறல்களையும் ஒழுங்கீனங்களையும் சுதந்திரம் என்கிற பெயரில் அனுமதித்து வந்தார். அடுத்தடுத்த பிக்பாஸ் சீசன்கள் இன்னும் எந்த அளவுக்குப் போகுமோ? என்கிற கவலை இப்போதே ஏற்படுகிறது.
இதற்கிடையே கமல் வாரம் ஒரு நூலை அறிமுகப்படுத்தி வந்தது ஆறுதலான ஒன்று. அவர் புண்ணியத்தில், ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி, தொ.பரமசிவனின் அழகர் கோயில், ரா.கி.ரங்கராஜனின் அடிமையின் காதல் போன்ற நூல்களுக்கு நல்ல வெளிச்சம் கிடைத்தது. அதுமட்டுமல்ல விவசாயிகளுக்காகவும் இடையிடையே அவர் குரல் உயர்த்தியதையும், கதராடையை அவர் முன்னெடுத்ததையும் பாராட்டலாம்.
*
ஆரிதான் இந்த பிக்பாஸில் மக்களைப் பெரிதும் கவர்ந்தார்.
ஜல்லிக்கட்டு நாயகர்களில் ஒருவராக அவர் மக்களால் பார்க்கப்பட்டார். சக போட்டியாளர்கள் எல்லோராலும் திட்டமிட்டுக் குறிவைக்கப்பட்டு- பொறாமைக்காரர் என்று பட்டம் சுமத்தப்பட்டு- முழுக் காலமும் போரான நபராக இருந்தார் என்று முத்திரை குத்தப்பட்டு- பலவகையிலும் வதைக்கப் பட்டார் ஆரி.
ஒவ்வொரு முறையும் சக பங்கேற்பாளர்களால் வெளியேற்றப்பட வேண்டிய நபர் யார்? என்று கேட்கப்படும் போதெல்லாம் முதல் ஆளாக ஆரி முன்மொழியப்பட்டார். அவரை வெளியேற்றினால் தங்களுக்கு இடையூறு இராது என்று அனைவரும் நம்பினார்கள். இப்படி ஆரி வெளியேற வேண்டியவ ராக 11 முறை முன்மொழியப்பட்டார்.
ஆனாலும் அவர் மக்களின் ஆதரவால் காப்பாற்றப் பட்டுக் கொண்டே வந்தார். போட்டியாளர்கள் சிறப் பாக செயல்படும் போதெல்லாம் அதை மனப் பூர்வமாக ரசித்து, புன்னகையோடு பாராட்டவும் செய்தார் ஆரி. தன் மனதில் எவரைப் பற்றியும் தவறான கருத்து பதிவாகாமல் பார்த்துக் கொண்டார். இதுதான் ஆரியின் பலமாக மாறியது.
அதுதான் மக்களின் மனதைக் கொள்ளையடித்தது. பிக்பாஸ் போட்டியாளர்கள் கிளுகிளுப்பையும், அசிங் கத்தையும், முரட்டுத்தனத்தையும், வஞ்சத்தையும், குழு மனப்பான்மையும் தங்களின் ஆயுதமாக எடுத்துக் களமாடியபோது, ஆரியோ தனது நேர்மையை கதாநாயகனாக்கினார். அதையே ஆயுதமாகச் சுழற்றினார்.
அந்த நேர்மைக்காகத்தான் அவரை கவனித்து வந்த பொது மக்கள், பெருமளவு வாக்குகளை வாரி வாரி வழங்கினார்கள். அவரது பக்குவமும் நேர்மையும்தான் அவருக்கு வெற்றிக் கோப்பையை வாரிக் கொடுத்திருக்கிறது. வெற்றி பெற்ற கணத்தில் கூட, என் செய்கைகள் எவரது மனதையாவது புண் படுத்தியிருந்தால், அவர்களிடம் மன்னிப்புக் கேட்கிறேன் என்று அவர் மண்டியிட்டார். அதுதான் அவரது உண்மையான உயரம். இதுதான் இளைஞர் களின் ரோல் மாடலாக அவரை உயர்த்தியிருக்கிறது. சபாஷ் ஆரி.
-அபூர்வன்