இரவு நேரம் அதிகமாகிவிட்டிருந்தாலும், அரேபியர் தன் சிறிய கூடாரத்தில் பணியைச் செய்துகொண்டிருந்தார். பணி என்று கூறுவதாக இருந்தால்... கிளைகளிலிருந்து வரக்கூடிய தகவல்களை சோதித்துப் பார்ப்பது, கணக்குகளைப் பார்ப்பது, சந்தேகங்களுக்கு பதிலளிப்பது ஆகிய பலவகைப்பட்ட செயல்கள்தான். நாடு முழுவதும் பரந்து கிடக்கும் ஒரு பெரிய அமைப் பின் பிரதான செயல்பாட்டாளர் என்ற நிலையில் இப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான காரியங்களை அரேபியர் தினமும் செய்யவேண்டியதிருக்கும்.
அனைத்தையும் செய்து முடித்துவிட்டபிறகுதான் அரேபியர் தினமும் தூங்குவதற்காகவே செல்வார். தூங்கப் போவதற்கு முன்பு அரேபியர் தினமும் சிறிதுநேரம் தொழுகையில் மூழ்குவார். அனைத்து உலகங்களையும் கவனித்துக் காப்பாற்றும்- ஜகத்தை இயக்குபவரிடம் நன்றி தெரிவிக்கும் பிரார்த்தனையை அரேபியர் சிறுவயதிலேயே தன் தந்தையிடமிருந்து கேட்டுப் படித்திருக்கிறார்.
"தெய்வமே... உன்னைத் தொழுகிறேன்! இந்த உலகத்திலும் மேலுலகத்திலுமுள்ள அனைத்து உயிரினங்களுக்கும் நலத்தையும் சந்தோஷத்தையும் அளிக்கக்கூடிய உன் கருணைப் பார்வையில் இந்த ஏழையும் எப்போதும் இருக்கவேண்டும்!'
தொழுகை முடிந்து அரேபியர் முழுமையான மன அமைதியுடன் தூங்குவதற்காகப் படுத்தார். அப்போது அவருக்குத் தோன்றியது... யாரோ அழுகிறார்கள்! ஒரு அதிர்ச்சியுடன் அவர் நினைத்துப் பார்த்தார். யாராக இருக்கும்? இந்த பொருத்தமற்ற நேரத்தில்... இந்த குளிர் நிறைந்த இரவுப் பொழுதில் உலகம் முழுவதுமே நடுங்கிக்கொண்டு படுத்திருக்கும்போது, யாராக இருக்கும்?
அரேபியர் கூடாரத்திற்கு வெளியே வந்து பார்த்தபோது, பார்த்தது ஒரு ஒட்டகத்தை... ஒட்டகத்தின் நான்கு கால்களும் நடுங்கிக்கொண்டிருந்தன. முன்னங்காலின் மூட்டுகளிலிருந்து குருதி கசிந்துகொண்டிருந்தது. வறண்டு... களைத்துப்போய்க் காணப்பட்ட சரீரத்தில் பல இடங்களிலும் முள் கழியால் அடிவாங்கிய அடையாளங்கள் இருந்தன. நம்பமுடியாத ஒரு காட்சியைக் கண்டுவிட்டதைப்போல அவர் அங்கேயே திகைத்துப்போய் நின்றிருந்தார்.
"யார் இந்த உயிரினத்தை இப்படி கொடூரமாக..?'
அப்போது அவருடைய கருணை வழியும் கண்களைப் பார்த்தவாறு ஒட்டகம் கூறியது:
"என்னால பசியை அடக்க முடியல. ஏதாவது சாப்பிடுறதற்குக் கிடைக்கலைன்னா இறந்திடுவேன். இந்த குளிர் நிறைஞ்ச இரவுல நான்...''
அப்போது அரேபியர் கையை உயர்த்தி ஒட்டகத் தைப் பேசுவதிலிருந்து விலக்கினார். தொடர்ந்து மெதுவான குரலில் கூறினார்:
"வா... உள்ளே வா...''
கூடாரத்திற்குள் அப்படியெதுவும் அதிகமான உணவுப் பொருட்கள் இல்லை. எனினும், இருந்த அனைத்தையும் அவர் ஒட்டகத்திற்கு முன்னால் கொண்டுவந்து வைத்தார்.
சாப்பிட்டபிறகு ஒட்டகம் மீண்டும் என்னவோ கூறத் தொடங்க, அரேபியர் கூறினார்:
"வேணாம். அதையெல்லாம் நாம நாளைக்கு வசதியா பேசிக்குவோம்.''
கூடாரத்தின் தரையில் கனமான சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அரேபியர் அங்கொரு மூலையில் இரண்டு போர்வைகளை மடித்துப் போட்டு விட்டு, தன் புதிய விருந்தாளியிடம் கூறினார்:
"இன்னிக்கு ராத்திரி இங்க இருக்கலாம். நாளைக்கு நான் புதிய ஏற்பாடுகள் செஞ்சு தர்றேன்.''
நன்றியை வெளிப்படுத்தும் வகையில் ஏதாவது கூற முயற்சிக்காமல், ஒட்டகம் சீக்கிரமாகவே அங்கு சுருண்டு படுத்தது.
காலையில் அரேபியர் எழுந்தபோது, ஒட்டகம் கூடாரத்திற்கு வெளியே சென்றிருந்தது. பாலைவனத்தில் இங்குமங்குமாக இருக்கக்கூடிய எருக்கஞ்செடிகள், சில முள் மரங்கள், புல் இதழ்கள் ஆகியவற்றைத் தேடி நடந்துகொண்டிருந்த ஒட்டகத்தை அரேபியர் வினோதமாகப் பார்த்துக் கொண்டு நின்றார்.
ஒட்டகத்தின் கால்கள் இப்போது நடுங்கவில்லை. மூட்டிலிருந்து குருதியும் கசியவில்லை. ஒரேயொரு இரவில் உண்டான மாற்றம்! அரேபியர் ஆச்சரியப் பட்டார்.
அரேபியருடையது சிறிய கூடாரமென கூறினேன் அல்லவா? உண்மையிலேயே அதைவிட எவ்வளவோ பெரிய கூடாரத்தில் வசிக்கக்கூடிய தகுதி அரேபியருக்கு இருந்தது. பணக்காரக் குடும்பத்தில் பிறந்தவரோ... இல்லாவிட்டால்... சொந்த முயற்சியில் வளர்ந்த பெரிய ஒரு வர்த்தகரோ... இவற்றில் எதுவுமே இல்லை.
நாடு முழுவதும் பரந்து கிடக்கும்... மிகவும் பலம்வாய்ந்த ஒரு சங்கத்தின் முக்கியமான பொறுப்பாளராக அரேபியர் இருந்தார். அவர்களின் அன்பும் ஆதரவும் அரேபியருக்கு தேவைப்படும் அளவுக்கு இருந்தது. அவர்கள் அனைவரும் எவ்வளவு வற்புறுத்தியும் அரேபியர் கூறினார்:
"எனக்கு பெரிய கூடாரமோ பணியாட்களோ எதுவுமே தேவையில்ல. எப்போதாவதுதானே ஊர்லயிருந்து மனைவியும் குழந்தைங்களும் வர்றாங்க?
அதுக்காக பெரிய ஒரு கூடாரமெதையும் உண்டாக்க வேண்டிய தேவையில்லை. என் வசதிகளைப் பார்த்துக்க றதுக்கு காலையிலும் சாயங்காலமும் வந்து போகக் கூடிய ஒரு பணியாளை நீங்க ஏற்பாடு செஞ்சிருக்கீங் களே! அதுவே தாராளமா...''
அரேபியரை ஊரில் இருப்பவர்களுக்கு மத்தியில் மிகவும் முக்கியமானவராக ஆக்கியது இந்த எளிமை தான். பிறகு... பல வருடங்களாக சங்கத்தை நிர்வகிப்ப திலும் அதை மிகப்பெரிய ஒரு அமைப்பாக ஆக்குவதி லும் அரேபியர் வகித்த பங்கும்...
கூடாரத்தின் வாசலில் தூரத்தில் மேய்ந்து கொண்டிருக்கும் ஒட்டகத்தைப் பார்த்தவாறு நின்றுகொண்டிருக்கும் அரேபியரின் பார்வையில் சில பயணிகள் பட்டார்கள். அவர்கள் அரேபியரின் கூடாரத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார்கள். அருகில் வந்ததும் அவர்கள் ஒட்டகங்களின் மீதிருந்து இறங்கி அன்புடனும் மரியாதையுடனும் அரேபியரை வணங்கினார்கள். அனைவரும் அரேபியரின் சங்கத்தில் பல முக்கிய பதவிகளை வகிப்பவர்கள்.
மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த சில காரியங் களைப் பற்றி விவாதிப்பதற்காக அவர்கள் வந்திருந்தார் கள். அவர்களின் உரையாடல் முன்னோக்கி போய்க் கொண்டிருக்க, கூட்டத்திலிருந்த ஒரு ஆள் திடீரென எழுந்து வாசல் பகுதிக்குச் சென்றார்.
அங்கு... உள்ளே என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பதை அறிந்துகொள்வதற்காக கண்ணையும் செவியையும் கூர்மையாக வைத்தவாறு ஒட்டகம் நின்றுகொண்டிருந்தது.
இந்தக் காட்சியைப் பார்த்து எரிச்சலடைந்த அவர் கோபத்துடன் கேட்டார்: "நீ யாரு? நீ இங்க என்ன செய்றே?''
சத்தத்தைக் கேட்டு எஞ்சியிருந்தவர்களும் வெளியே வந்தார்கள். ஒட்டகத்திடம் தெளிவான பதிலெதுவு மில்லை. அது வாடிய முகத்துடன் அங்கு நிற்கமட்டும் செய்துகொண்டிருந்தது.
நண்பர்கள் மேலும் விசாரித்தபோது, முந்தைய நாள் இரவில் நடைபெற்ற சம்பவங்களை அரேபியர் கூறினார்:
"ஒரு அப்பிராணி மிருகம்! நான் கொஞ்சம் உணவையும் படுக்க ஒரு இடத்தையும் தராமலிருந்திருந்தா, நேத்து ராத்திரியே அது...''
நண்பர்கள் அப்போது மறுப்பதைப்போல தலையை ஆட்டினார்கள்.
"இதுக்கு ஒரு திருட்டுத்தனத்தோட அடையாளம் இருக்கு. அதன் கண்களையும் பற்களையும் உதடுகளையும் பார்க்கலையா?''
அப்போது இன்னொரு மனிதரும் கூறினார்:
"நம்பமுடியாத ஒரு திருட்டு மிருகம் இது. சாமுத்திரிகா அடையாளத்தின்படி பார்த்தா... இது இருந்த இடம் பள்ளமாயிடும். இதை நம்புறவங்க உண்மையிலேயே ஆபத்தில சிக்குவாங்க. அந்த பார்வையைப் பார்த்தீங்கள்ல?''
இவையனைத்தையும் ஒட்டகம் கேட்டுக் கொண்டிருந்தது.
அவர்கள் அனைவரும் சென்றபிறகு, அரேபியர் ஆச்சரியத்துடன் நினைத்துப் பார்த்தார்: "எதுக்கு இவங்க எல்லாரும் இந்த மிருகத்தைப் பத்தி கடுமையா... குறிப்பிட்டுச் சொல்ற அளவுக்கு எந்தவொரு காரணத்தையும் அவங்க சொல்லவுமில்ல. இருந்தாலும்...'
அப்போது ஒட்டகம் மிகவும் தாழ்ந்த குரலில் கூறியது:
"எஜமான்... இவங்க சொன்னது எதையும் நம்பாதீங்க. நானொரு அப்பிராணி மிருகம். யாருக்கும் எந்தவொரு தொல்லையையும் தராத...''
அரேபியர் தலையை ஆட்ட மட்டும் செய்தார்.
நாட்கள் நகர்ந்து செல்வதற்கிடையே ஒட்டகம் அரேபியரின்... அதாவது அவருடைய சங்கத்தின் ஒரு முக்கிய செயல்பாட்டாளராக மாறியது. சங்கத்திற்காக தூர திசைகளுக்குச் சென்று பிரச்சார வேலைகளைச் செய்ய ஆரம்பித்தது. பெரும்பாலும் அறிவு சரியாக செயல்படாமலிருக்கும் இளைஞர்களுக்கு மத்தியில்தான் ஒட்டகம் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
இந்த சமயத்திலும் ஒட்டகத்தின் நடவடிக்கைகளைப் பற்றி ஏராளமான முணுமுணுப்புகளும் புகார்களும் அரேபியரின் செவியை அடைந்துகொண்டிருந்தன.
ஆனால், அப்போதும் அரேபியர் அவை எதையும் அந்த அளவுக்கு முக்கியத்துவம் தந்து எடுத்துக்கொள்ளவில்லை. மற்றவர்களின் சந்தோஷத்தில் மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கக்கூடிய குணம் எப்போதும் அரேபியருக்கு இருந்தது.
ஆனால், இந்த நம்பிக்கைக்குக் கேடு உண்டாக்கிய சில சம்பவங்களுக்கு, சங்கத்தின் தேர்தல் சமயத்தில் அரேபியர் சாட்சியாகவேண்டிய சூழல் உண்டானது.
அரேபியரின் எதிர் வேட்பாளரையும் அவருடைய ஆட்களையும் வெற்றிபெற வைப்பதற்காக ஒட்டகம் செய்த செயல்களை ரகசியமாக வைத்திருப்பதற்கு ஒட்டகத்தால் முடியவில்லை. இப்படிப்பட்ட கேவலமான செயல்களை எப்போதும் தொடர்ந்து கொண்டுசெல்வதற்கு யாராலும் முடியாதே!
தேர்தலுக்கு முந்தைய நாள் காலையில் ஒட்டகத்தை அழைத்து அரேபியர் கூறினார்:
"நானொரு முட்டாள்னு நீ நினைச்சிருந்தா, நீ தவறா நினைச்சிட்டேன்னு அர்த்தம். நாம இனி பிரிஞ்சிடுவோம்.''
ஒட்டகம் ஏதோ கூற முயற்சிக்க, அரேபியர் கூறினார்:
"வேணாம்... வாதம் செய்றதெல்லாம் வேணாம்... இங்கிருந்து போ... இந்த நிமிஷத்திலேயே...''
ஒட்டகம். கோபத்துடன் அரேபியரைப் பார்த்தது. அதன் கண்கள் எரிய, உதடுகள் துடித்தன. நின்ற இடத்திலேயே ஒட்டகம் மூன்று நான்கு முறை வட்டம்போட்டு சுற்றி, கால்களைக் கொண்டு புழுதியை வாரித் தூற்றியது. தொடர்ந்து என்னென்னவோ மோசமாகத் திட்டும் வார்த்தைகளைக் கூறியவாறு அது பாலைவனத்தை நோக்கி ஓடிச் சென்றது.
ஒட்டகம் ஓடிச்சென்ற வழியையே பார்த்துக்கொண்டு நின்றிருந்த அரேபியர் வருத்தத்துடன் தனக்குத் தானே கூறிக்கொண்டார்:
"எனக்கு புரியவேயில்ல... இந்த மிருகத்துக்கு எந்த வொரு கெடுதலையும் நான் செய்யல... இருந்தாலும் ஏன் அது... எதுக்கு..?'