"நக்கீரன் பதிப்பகம்' வெளியிட்ட "உண்ணிகிருஷ்ணன் புதூர் கதைகள்' நூலுக்கு கேரளத்தில் அறிமுகவிழா மலையாள இலக்கியத்தின் மூத்த எழுத்தாளர் உண்ணிகிருஷ்ணன் புதூர்.இவர் கேரள சாகித்ய அகாடெமி விருதுபெற்றவர்.

இவர் எழுதிய 11 மலையாள சிறுகதைகளை தமிழில் சுரா (சு.ராஜசேகர்) மொழிபெயர்த்திருக்கிறார். இந்தக் கதைகள் அனைத்தும் நம் "இனிய உதயம்' மாத இதழில் பிரசுரமாயின.

வாசகர்கள் மத்தியில் இந்த கதைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

இந்த 11 கதைகளையும் தொகுத்து "உண்ணி கிருஷ்ணன் புதூர் கதைகள்' என்ற பெயரில் ஒரு நூலை சமீபத்தில் "நக்கீரன் பதிப்பகம்' வெளியிட்டிருக்கிறது.

Advertisment

ss

இந்த மொழிபெயர்ப்பு நூலைப் பற்றியும், இதை பதிப்பித்த திரு. நக்கீரன் கோபால் அவர்களைப் பற்றியும், கதைகள் அனைத்தையும் மொழிபெயர்த்த திரு. சுரா அவர்களைப் பற்றியும் "மாத்ருபூமி' மலையாள நாளிதழ் கட்டுரை எழுதி, சிறப்பித்திருக்கிறது.

இதற்குமுன்பு சுரா மொழிபெயர்ப்பில் உண்ணி கிருஷ்ணன் புதூரின் "ஜலசமாதி' புதினத்தை "நக்கீரன் பதிப்பகம்' வெளியிட்ட தகவலும் அதில் இருக்கிறது.

மறைந்த உண்ணிகிருஷ்ணன் புதூர் அவர் களின் 90-ஆவது பிறந்தநாளை அவரின் குடும்பத் தினர் சமீபத்தில் நினைவுகூர்ந்தனர்.

அதையொட்டி கேரளத்தின் வடக்கன் சேரியில் ஒரு எளிய நிகழ்வு நடத்தப்பட்டது.

அதற்கான ஏற்பாடுகளை உண்ணிகிருஷ்ணன் புதூர் அறக்கட்டளையும், வடக்கன் சேரி வாசக சாலை யும் இணைந்து செய்திருந்தன.

இந்த நிகழ்வில் தமிழில் வெளிவந்த "உண்ணி கிருஷ்ணன் புதூர் கதைகள்' நூல் அறிமுகம் செய்யப் பட்டது.

முன்னாள் கேரள அமைச்சரும் இப்போதைய சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி. மொய்தீன் நிகழ்வைத் தொடங்கிவைத்தார்.

டாக்டர். எம்.என். வினயகுமார் நூலை வெளியிட, அதை வழக்கறிஞரான டி.ஏ. நஜீப் பெற்றுக்கொண்டார்.

உண்ணிகிருஷ்ணன் புதூரைப் பற்றி அறிஞர்களும் பேராசிரியர்களும் எழுத்தாளர்களும் பாராட்டி பேசினர்.

தங்களின் தந்தையின் கதைகள் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டு, அவற்றை "நக்கீரன் பதிப்பகம்' நூலாக வெளியிட்டிருப்பது குறித்து தங்களின் அளவற்ற மகிழ்ச்சியைத் தெரிவித்தனர் உண்ணி கிருஷ்ணன் புதூரின் மகன்களான ஷாஜுவும், பிஜுவும்.

தன் கணவரின் கதைகள் தமிழில் வெளி வந்திருப்பதை நன்றியுடன் நினைத்துப் பார்க்கிறார் உண்ணிகிருஷ்ணன் புதூரின் மனைவி திருமதி. தங்கமணி அம்மா.