ருநூறு ஆப்பிள் மரங்களை நான் நட்டிருந்தேன். மூன்று வருடங்கள் நான் அவற்றைச் சுற்றி... வசந்த காலத்திலும் குளிர் காலத்திலும் சீர்படுத்திக் கொண்டும், குளிர் காலத்தில் முயல்களிடமிருந்து அதைப் பாதுகாப்பதற்காக வைக்கோலால் மறைத்து வைத்துக்கொண்டும் இருந்தேன்.

நான்காவது வருடம் பனி உருகியபோது, என் ஆப்பிள் மரங்களைப் பார்ப்பதற்காக நான் சென்றேன்.

குளிர் காலத்தில் அவை வளர்ந்து தடிமனாக இருந்தன. மரத்தின் தோல் மினுமினுப்பு கொண்டதாகவும், நீர் நிறைந்தும் காணப் பட்டது.

அனைத்து கிளைகளும் பத்திரமாக இருந்தன. அவற்றின் நுனிப் பகுதிகளில் பயறுமணிகளைப் போன்றிருந்த பூ மொட்டுகள் இருந்தன.

Advertisment

ஆங்காங்கே கிளைகள் அரும்பிக் கொண்டும், பூக்களின் சிறிய சிவப்பு நிற நுனிகள் தென்பட்டுக் கொண்டுமிருந்தன. அனைத்து மொட்டுகளும் மலர்ந்து, பின்னர் அவை பழங்களாக மாறும் என்ற விஷயம் எனக்குத் தெரியும். ஆப்பிள் மரங்களைப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தபோது, அளவற்ற சந்தோஷம் உண்டானது.

ஆனால், முதல் மரத்தின் மூடலை நீக்கியபோது, அதன் அடிப்பகுதியிலிருந்த மரத்தின் தோல் சுரண்டியிருப்பதைப்போல இருப்பதைப் பார்த்தேன். ஒரு வெளுத்த மோதிர வளையத்தைப்போல மரத்தின் அடிப்பகுதியில் தெரிந்தது.

aa

Advertisment

சுண்டெலிதான் அதைச் செய்திருக்கிறது.

இரண்டாவது மரத்தின் மூடலை எடுத்தபோது, அங்கும் இதைப் போன்றே இருந்தது. இருநூறு மரங்களில் கேடு உண்டாகாமல் ஒரு மரம் கூட இல்லை. கரம்பிக் கடித்த பகுதிகளில் நான் எண்ணெய்யையும் மெழுகையும் தேய்த்துவிட்டேன். ஆனால், அந்த மரங்கள் அனைத்தும் பூத்தபோது, மலர்கள் முழுவதும் உடனடியாக உதிர்ந்துவிட்டன. சிறிய இலைகள் முளைத்தாலும், அவையும் உதிர்ந்து விழுந்தன. மரத்தின் தோலோ, சுருங்கி இருண்டு காணப்பட்டது.

இருநூறு ஆப்பிள் மரங்களில் ஒன்பது மரங்கள் மட்டுமே எஞ்சின.

அந்த ஒன்பது மரங்களின் தோல் முழுமையாக சுரண்டப்படாமல் இருந்தது.

அடிப்பகுதியில் வளைய வடிவத்தில்...

மரத்தோலின் சிறிது பகுதி அவற்றில் எஞ்சியிருந்தது. அந்த மரத்தோலின் துண்டுகளிலிருந்து புதியவை வளர்ந்து வந்துகொண்டிருந்தன.

முன்பு அந்த மரங்களுக்கு சிறிது பாதிப்பு ஏற்பட்டிருந்தாலும், அவை வாழ்ந்தன.

மற்றவையெல்லாம் அழிந்து போயின. கரம்பிக்கடித்த பகுதியின் வளையத்திற்குக் கீழே, அரும்புகள் முளைத்தாலும், அவையெல்லாம் பயனற்றுப் போயின.

மரத்தின்தோல் என்பது மனிதர் களின் நரம்புகளைப் போன்றது.

நரம்புகளின் வழியாக சரீரத்தின் அனைத்து உறுப்புகளுக்கும் ரத்தம் செல்கிறது.

அதேபோல மரத்தின்தோல் வழியாக மரநீர் மரத்தின் எல்லா பகுதிகளுக்கும் போய்ச் சேர்கிறது.

அதன் கிளைகளுக்கும், இலைகளுக்கும், பூக்களுக்கும்...

வில்லோ மரத்தின் விஷயத்தில் இருப்பதைப் போலவே, ஒரு மரத்திற்குள் இருப்பவை அனைத்தையுமே வெளியே எடுத்துவிட்டாலும், மரத்தின்தோல் இருந்தால், அது பிழைத்துவிடும். ஆனால், மரத்தின் தோலுக்கு பாதிப்பு உண்டாகும்போது, மரம் இல்லாமற்போகிறது. ஒரு மனிதனின் நரம்பைத் துண்டித்து விட்டால், அவன் அதற்குப்பிறகு வாழ மாட்டான். முதல் காரணம்- ரத்தம் வெளியேறிவிடும் என்பதுதான்.

இரண்டாவது... ரத்தம் உடலின் உறுப்புகளுக்கு போய்ச் சேராதது...

பிர்ச் மரத்தில் துவாரம் உண்டாக்கி, அதன் மரநீரை குழந்தைகள் குடிக்கும் போது, மர நீரெல்லாம் வெளியேறிய தால், அது காய்ந்து விடுகிறது.

அதேபோல... ஆப்பிள் மரத்தைச் சுற்றிலும் சுண்டெலி கடித்த காரணத்தால், வேரிலிருந்து மரத்தின்தோலின் வழியாக மரநீர் கிளைகளுக்கும் இலைகளுக்கும் மலர்களுக்கும் போய்ச் சேரமுடியாமல், அது அழிந்து விடுகிறது.