வாசலில் எறும்புகள் ஊர்வலம் நடத்திக் கொண்டிருந்தன.

சிவந்த நெய் எறும்புகள்... அவற்றுக்கு மத்தியில் சிறகுகள் முளைத்த பெரிய எறும்புகளும் இருந்தன. முற்றத்திலிருந்து வாசலின்மீது ஏறுவதற்கு, மூன்று படிக்கட்டுகள் இருக்கின்றன. அவற்றின் ஒன்றின்மீது ஊர்வலம் முடிகிறது.

எறும்புகள் மொய்க்கின்றன. நிர்வாணமான எறும்புகள் நடனமாடுகின்றன. ஆடுகின்றன. பாடுகின்றன. கட்டியணைக்கின்றன. முத்தம் கொடுக்கின்றன.

இணை சேர்கின்றன.

Advertisment

வாசலில் பிரம்பு நாற்காலியில் எறும்புகளைப் பார்த்தவாறு அமர்த்திருக்கிறான் தினேஷன். மனம்

அமைதியாக இருந்தது. மனம் நிறைய வேதனை இருந்தது.

எங்கும் போவதற்கில்லை.

Advertisment

எதுவும் செய்வதற்கில்லை.

எறும்புகளின் திருவிழாவைப் பார்த்தவாறு நீண்டநேரம் அமர்ந்திருந்தான். அப்போது-

அம்மாவின் அம்மாவான பாட்டி மண்ணெண்ணெய் புட்டியுடன் வந்தாள். பின்னால் பணிப்பெண் ஜானகியும் இருக்கிறாள். அவளின் கையில் பந்தம் இருந்தது. அது பற்றி எரிந்துகொண்டிருந்தது. பாட்டி குனிந்த முதுகுடன் படிக்கட்டை நோக்கி நடந்தாள். பின்னால் ஜானகியும்...

பாட்டி புட்டியின் "கார்க்'கை உருவினாள். எண்ணெய்யை எறும்புகளின்மீது ஊற்றினாள்.

""பந்தத்தை இங்க தாடீ ஜானு.''

பந்தத்தை ஜானகி பாட்டியின் கையில் கொடுத்தாள்.

""மகனே... பால் குடிச்சிட்டியா?''

""குடிச்சிட்டேன்.''

""பாட்டி தேர் தயாரிச்சுத் தரட்டுமா? காய்ந்த காய்களைப் பொறுக்கிட்டு வா.''

அவன் நாற்காலியிலிருந்து இறங்கினான். நிலத்தை நோக்கி நடந்தான். சிவந்த மண்ணில் வெயில் பரவிக்கிடந்தது.

மண்ணெண்ணெய்யில் குளித்த எறும்புகள் ஓடிக்கொண்டிருந்தன. பதைபதைப்புடன் நான்கு திசைகளிலும் பாய்ந்துகொண்டிருந்தன. எலிரிந்துகொண்டிருந்த பந்தத்தைப் பாட்டி எறும்புகளின்மீது வைத்தாள். நெருப்பு பற்றி எரிந்தது. நான்கு பக்கங்களிலும் மரண பயத்துடன் பாயும் எறும்புகளை பந்தத்தால் அடித்தாள்.

எறும்புகள் கரிந்தன... வெந்தன... கூட்டமாக இறந்து அடங்கின.

மண்ணெண்ணெய், நெருப்பு, வெந்த எறும்புகள் ஆகியவற்றின் வாசனை படிக்கட்டுக்களிலிருந்து மேல்நோக்கி எழுந்தது.

பாட்டி திணையிலிருந்து எழுந்து, முதுகை நிமிர்த்தினாள். ""எல்லாம் செத்துப் போயிடுச்சுன்னு தோணுது.''

""நாளைக்கு திரும்பவும் ஊர்வலமா வராதா ஜானு? எறும்புக்கு தைரியம் இருக்காடீ?''

பாட்டி அணைந்த பந்தத்தை ஜானகியின் கையில் தந்தாள். மண்ணெண்ணெய் புட்டியை எடுத்தாள்.

பந்தத்திலிருந்து எறும்புகளின் இறந்த உடல்கள் உதிர்ந்து விழுந்தன. வெந்து எரிந்த உடல்கள்...

""என் தங்க மகனே... நீ இங்கதான் இருக்கியா?'' அப்போதுதான் பாட்டி தினேஷனைப் பார்த்தாள். அவள் தினேஷனுக்கு அருகில் சென்றாள். தொங்கிக்கொண்டிருந்த காதுகளில் தங்கத்தாலான தக்கைகள் ஆடின. பாசத்துடன் பாட்டி தினேஷனின் தலையை வருடினாள். அவனை முத்தமிட்டாள்.

தாம்பூலத்தின் வாசனை ஆவியாகி எழுந்தது. சுருள்களாகிப் படர்ந்தது. காய்ந்த காயைத் தேடி அவன் நடந்தான். அலைந்தான்.

ஐந்து காய்கள் கிடைத்தவுடன் திரும்பி நடந்தான்.

பாட்டி திண்ணையில் அமர்ந்திருந்தாள். ஈர்க்குச்சி யைச் சேர்த்து, ஒரே அளவில் ஒடித்தாள். காய்ந்த காய்களை தினேஷன் அவள் கையில் கொடுத்தான். பாட்டி தேர் தயாரித்தாள். தேரை தினேஷனின் கையில் தந்துவிட்டு, பாட்டி கூறினாள்.

""மகனே... போயி விளையாடு. பாட்டிக்கு சமையலறையில வேலை இருக்கு.''

பாட்டி தினேஷனின் தலையை வருடினாள். அவனை முத்தமிட்டாள். புகையிலையின், பாக்கின் வாசனையைப் பரப்பினாள். முத்தமிட்ட இடத்தில் புழுக்கள் மொய்ப்பதைப்போல தோன்றியது. அவன் கன்னத்தை அழுத்தித் துடைத்தான். தாம்பூலத்தின் சாறு கையில் பட்டது. பிறகும் புழுக்கள் கன்னத்தின் வழியாக ஊர்ந்தன.

ss

சமையலறையை நோக்கி குனிந்த முதுகுடன் நடந்துசெல்லும் பாட்டியை தினேஷன் வெறுப்புடன் பார்த்தான்.

பாட்டியை இதுவரை வெறுத்ததில்லை. பாட்டியைப் பற்றி இதுவரை பாசத்துடன் மட்டுமே நினைக்க முடிந்திருக்கிறது. தேர் திண்ணையிலேயே கிடந்தது.

தினேஷன் நாற்காலியில் ஏறி முன்பைப்போலவே அமர்ந்தான்.

ஜானகி துடைப்பத்துடன் வந்தாள். படிக்கட்டுகள் யுத்த பூமியாகக் காட்சியளித்தன. ஏராளமான எறும்புகள் பரலோகத்தை அடைந்து கிடந்தன. உறுப்புகள் சேதமடைந்த எறும்புகள் துடித்துக்கொண்டிருந்தன. நீருக்காக கூப்பாடு போட்டன... உருண்டன... நெளிந்தன.

இறந்த, இறக்கப்போகும் எறும்புகளை ஜானகி பெருக்கி வாரினாள்.

படிக்கட்டுகளில் நீரை ஊற்றிக் கழுவினாள்.

துடைப்பத்தையும் பாத்திரத்தையும் எடுத்தவாறு திரும்பிச் சென்றபோது, ஜானகி கேட்டாள்:

""மகனே, நீ ஏன் விளையாடல?''

""விளையாடத் தோணல.''

""தனியா வாசல்ல இருக்க வேணாம். சமையலறையில அம்மாக்கிட்ட போய் இரு.''

தினேஷன் சமையலறைக்குச் சென்றான்.

புலர்காலைப் பொழுதிலேயே அம்மா சமையலறைக்குள் நுழைந்து விடுவாள். எட்டரை மணிக்கு ராதாவும் ராஜனும் பள்ளிக்கூடத்திற்குச் செல்வார்கள். அரைமணி நேரம் கடந்தபிறகு, அப்பா அலுவலகத்திற்குச் செல்வார். பாட்டியையும் ஜானகியையும் வெளியே பார்க்கமுடியாது.

அத்துடன் வீடு பேரமைதியாக இருக்கும். மேலேயும் கீழேயும் அசைவே இருக்காது. இடையே ஜானகி படிகளில் ஏறிச்செல்லும் சத்தம் கேட்கும்.

சமையலறையில் ஓசையும் அசைவும் உண்டாகும்.

பாட்டி எப்போதும் பேசிக்கொண்டிருப்பாள். ஜானகியின் நாக்கும் அடங்கியிருக்காது. அவள் நடக்கும்போதே சத்தம் உண்டாகும். மார்பையும் பின்பகுதியையும் குலுக்கியவாறு கோலாகலமாக நடந்துசெல்வாள்.

சோர்வு தோன்றாமலிருக்க வேண்டுமென்றால், சமையலறைக்குச் செல்லவேண்டும். தினேஷன் ஜானகிக்குப் பின்னால் நடந்தான்.

சமையலறையில் நெருப்பின் வாசனை நிறைந்து கிடந்தது.

""விளையாடினது போதுமா?'' பாட்டி கேட்டாள். அவள் எதையோ சவைத்துத் தின்றுகொண்ருந்தாள். குதிரையைப்போல மேலும் கீழுமாக மூச்சு விட்டுக்கொண்டிருந்தாள். இடையே முழங்கைகளைத் தேய்த்துக்கொண்டிருந்தாள். துணியை உயர்த்தி, காலைச் சொறிந்தாள்.

பாட்டி தனக்கருகில் ஒரு பலகையை இட்டாள்.

""இதோ... இங்க உட்காரு.''

அவன் பலகையில் அமர்ந்தான்.

""தினேஷா... கஞ்சி குடிக்கிறியா?'' அம்மா கேட்டாள்.

""இதோ... கொஞ்சம் குடி...''

பாட்டி கிண்ணத்திலிருந்து பலா இலையில் கஞ்சியை ஊற்றி தினேஷனை நோக்கி நீட்டினாள். கஞ்சியில் நெய் ஊற்றப்பட்டிருந்தது. கிண்ணத்தில் மூக்குச்சளியைப்போல நெய் மேலே கிடந்தது.

""வேணாம்...''

தினேஷன் கூறினான். காலையில் சாப்பிட்ட புட்டு ஜீரணமாகவில்லை. அத்துடன் சேர்த்து சாப்பிட்ட மைசூர்பழம் ஜீரணமாகவில்லை.

""மோஹனனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதிலிருந்து தினேஷனுக்கு விளையாடுறதுக்கு ஆளில்லாம போயிடுச்சு.'' அம்மா தேங்காயைத் துருவிக் கொண்டிருந்தாள். துருவப்பட்டுக்கொண்டிருந்த தேங்காயின் வாசனை பரவியது.

""அந்த பையனுக்கு என்ன உடல்நலக் கேடு?'' ஜானகி கேட்டாள்.

""காய்ச்சல் இல்லியா?''

""ஏழு நாளாச்சு. இப்படியுமா ஒரு காய்ச்சல் இருக்கும்?''

முந்தைய நாளும் அம்மா, மோஹனனைப் போய்ப் பார்த்தாள். காய்ச்சல் குறைவதாகத் தெரியவில்லை. நெல் இட்டால், மலராகும். அப்படிப்பட்ட காய்ச்சல்...

மோஹனன், தினேஷனின் வயதைக் கொண்டவன்... நண்பன்... ஒரு தூரத்து ரத்த உறவும் இருக்கிறது.

""என்ன... என் மகன் எதுவுமே பேசாம உட்கார்ந்திருக்கான்?'' அம்மா கேட்டாள். அம்மாவுக்கு நெருப்பின் நிறம். நெற்றியில் சந்தனம் வைத்திருக்கிறாள்.

""அடியே ஜானூ... தினேஷனுக்கு நாம ஒரு பொண்ணைப் பார்க்கணும்.'' பாட்டி கூறினாள்.

""ஏன் வேற பொண்ணைப் பார்க்கணும்? நான் இல்லியா?'' ஜானகி கூறினாள்.

""ஜானகியைக் கல்யாணம் பண்ணிக்கறதுக்கு தினேஷனுக்கு சம்மதமா?'' அம்மா கேட்டாள்.

தினேஷன் ஜானகியின் சதைப்பிடிப்பான... பிரகாசமான முகத்தைப் பார்த்தான்... தெறித்துக்கொண்டிருக்கும் மார்பைப் பார்த்தான்... சம்மதிப்பைப்போல அவன் தலையை ஆட்டினான்.

ஜானகியின் முகம் பற்றி எரிந்தது. அம்மாவும் பாட்டியும் குலுங்கிக்குலுங்கி சிரித்தார்கள்.

""தினேஷன் பயங்கரமான ஆளாச்சே!'' அம்மா ஆச்சரியப்பட்டாள்.

""நீ என்னிக்கும் இப்படியே இருக்கிறதா நினைப்பா ஜானூ?''

""அதுக்கு இப்போ நான் என்ன செய்யணும்?''

""நான் சொல்லவேண்டியதைச் சொல்றேன். இருந்தாலும்... அந்த நாணுவை வேணாம்னு சொல்றதுக்கு உனக்கு தோணுச்சுல்லேடீ?''

நாணு மெலிந்த தோற்றத்தைக் கொண்டவன். கால் ஊனமுற்றவன். நீர் எடுக்கும் வாளி கிணற்றுக்குள் விழுந்துவிட்டால், அதை எடுப்பதற்கு அவன் வருவான். ஒன்றரைக் கால்தான் இருப்பதே... எனினும், ஐம்பதடி கீழேயிருக்கும் கிணற்றில் ஊர்ந்து இறங்குவான். வாளியை எடுத்துக் கொண்டு அட்டையைப்போல இறுகப்பற்றி மேலே ஏறிவிடுவான்.

தீவிரமாக திருமண ஆலோசனை வந்தபோது, ஜானகி கூறினாள்:

'அந்த ஒண்ணரைக் காலனையா? நான் தூக்குல தொங்கி செத்துடுவேன்...'

துருவிய தேங்காயை அம்மா ஜானகிக்குக் கொடுத்தாள். அவள் தேங்காயை எடுத்துக்கொண்டு அம்மிக்கு அருகில் சென்று அமர்ந்தாள். அரைக்க ஆரம்பித்தாள். அவள் துணியை முழங்கால் வரை உயர்த்திவிட்டிருந்தாள். வெளுத்த, சதைப்பிடிப்பான முழங்கால்களைப் பார்த்தவாறு தினேஷன் அமர்ந்திருந்தான்.

கஞ்சி முழுவதையும் குடித்து, அவியல் முழுவதையும் தின்றுவிட்டு, பலகையை எடுத்து சமையலறையின் மூலையில் வைத்தபோது பாட்டி கேட்டாள்:

""இன்னிக்கு கும்ப மாதம்

எத்தனாவது நாள் லட்சுமி?''

""மூணில்லியா?''

""புத்தலத்தில கொடி ஏத்தியாச்சே... கடவுளே!''

காலம் நகரவில்லை... பாயவில்லை... பறக்கிறது.

""வருஷம் பறக்குது. போன வருஷ திருவிழா நேத்துதான் நடந்தது மாதிரி இருக்கு.'' பாட்டி கூறினாள்.

""இந்த வருஷ திருவிழாவைப் பார்க்குறதுக்கு அதிர்ஷ்டம் இருக்காதுன்னுல்ல பாட்டி நீங்க சொன்னீங்க?''

""அட! திருடி... நான் குழிக்குள்ள போறதைப் பார்க்குறதுல, மகாபாவி உனக்கு அந்த அளவுக்கு ஆசை இருக்குதாடீ?''

பாட்டி ஜானகியை நோக்கி கையை உயர்த்தினாள்.

ஜானகி குலுங்கிக்குலுங்கி சிரித்தவாறு சற்று விலகினாள். அவளுடைய மார்புப் பகுதி குலுங்கியது. ஆரவாரம் செய்தாள்.

""சிரிக்காம அரை... என் ஜானூ. மணி பதினொண்ணு ஆயிடுச்சு. குழம்பு வைக்கல... துணி துவைக்கல... மகனோட அப்பா அலுவலகம் விட்டு இப்போ வந்திடுவாரு.''

ஜானகி சிரிப்பை நிறுத்தவில்லை. சிரித்துக்கொண்டே அரைத்தாள். மிளகாயை அரைத்துக்கொண்டிருந்தாள். மிளகாயின் வாசனை அம்மியிலிருந்து எழுந்தது. எரிச்சல் நான்கு பக்கங்களிலும் பரவியது.

""அம்மா... நீங்க மோஹனனைப் பார்க்கறதுக்கு சாயங்காலம் போறீங்களா?'' பாட்டியிடம் அம்மா கேட்டாள்.

""போறப்போ என்னையும் அழைச்சிட்டுப் போறீங்களா?''

"குழந்தைங்க உடல்நலக்கேடு உள்ள வீட்டிற்குப் போகக்கூடாது... மகனே..''

""போனா என்ன?''

""மோஹனனுக்கு ரெண்டு நாள்ல குணமாயிடும். அப்போ பார்த்தா போதாதா தினேஷா?''

""சாயங்காலம் போறப்போ என்னையும் அழைச்சிட்டுப் போகணும்.''

""அழைச்சிட்டுப் போறேன்.'' பாட்டி கூறினாள்.

""நிச்சயமாவா?''

""பாட்டியின் அம்மாமேல சத்தியமா...''

ஜானகி அரைப்பதை நிறுத்தினாள். அம்மியைக் கழுவினாள்.

""ஜானு... ஒரு காரியம் செய். துணியை எடுத்துக்கிட்டு குளத்துக்குப்போ. மீதி வேலைகளை நான் செய்துக்கிறேன்.''

அம்மிக்கு அருகிலிருந்து ஜானகி எழுந்தாள். குளியலறையிலிருந்து துவைப்பதற்குத் துணிகளை எடுத்து மூட்டையாக்கினாள். சோப்பையும் நீலத்தையும் எடுத்துக்கொண்டு படித்துறைக்குப் புறப்பட்டாள். அவள் கேட்டாள்:

""மகனே... நீ வர்றியா?''

""தினேஷனையும் அழைச்சிட்டுப்போ. அவனுக்கு நேரம் போறதே ரொம்ப கஷ்டமான விஷயமா இருக்குமே!''

""வா... தினேஷா.''

ஜானகி அழைத்தாள். அஸ்வன் பலகையிலிருந்து எழுந்து, அவளுக்குப் பின்னால் நடந்தான்.

""சோப்பை இங்க தா... நான் வச்சிருக்கேன்.''

""வேணாம்... நான் வச்சிருக்கேன். என் மகனே... வேகமா நட.''

ஜானகி நிலத்தின் வழியாக நடந்தாள். வேலியைக் கடந்தாள். மிளகுக் கொடிகளின் நிழல்களுக்கு மத்தியில் நடந்தாள். பழுத்த மிளகின் வாசனை நான்கு பக்கங்களிலும் பரவிக்கொண்டிருந்தது.

""தினேஷா... என்னை கல்யாணம் செய்துக்க

உனக்கு விருப்பமா?''

அவன் தலையை உயர்த்தி அவளின் முகத்தையே பார்த்தான்.

""எனக்கு அது எதுவும் விதிக்கப்பட்ல மகனே.

அதுக்கு மட்டும் அதிர்ஷ்டம் செய்தவ இல்ல நான். ஜானுகிட்ட பணம் இருக்கா? குடும்பம் இருக்கா? எதைப் பார்த்து ஒருத்தன் வருவான்?''

ஜானகி திடீரென்று பேரமைதியில் மூழ்கினாள்.

அவன் அவளுடைய முகத்தையே பார்த்தான். கண்கள் நிறைந்து வழிந்துகொண்டிருந்தன. ஜானகி அழுகிறாள். தினேஷன் திகைப்படைந்து நின்றுவிட்டான்.

குளத்தில் அடர்த்தியான நிழல்கள் விழுந்துகிடந்தன. பனை, தெச்சி ஆகியவற்றின் இருண்ட நிழல்கள்... குளத்திற்கு மத்தியில் சூரிய வெளிச்சம் மின்னி ஒளிர்ந்துகொண்டிருந்தது.

துணிமூட்டையை படித்துறையில் வைத்தாள். துணியை அவிழ்த்தாள். பாவாடை மட்டும் அணிந்து, துணியை நனைக்க ஆரம்பித்தாள்.

குளத்தில் அதிக நீரில்லை. நீர் வந்துகொண்டிருந்த துவாரத்திலிருந்து மிகவும் கீழே நீர்ப்பரப்பு இருந்தது. பச்சைநிறத்திலிருந்த நீரில் பாசி படர்ந்து கிடந்தது. பாசிக்கு மேலே சூரிய வெளிச்சமும் நிழல்களும் நிறைந்து கிடந்தன.

தவளைகள் எட்டிப் பார்த்தன. சிறு மீன்கள் எட்டிப்பார்த்தன.

ஜானகி துணியை நனைப்பதைப் பார்த்தவாறு தினேஷன் படித்துறையில் அமர்ந்திருந்தான்.

நனைந்த துணியின், சலவை சோப்பின் வாசனை படித்துறையில் நிறைந்திருந்தது.