"காற்று பலமாக வீசத்தொடங்கிவிட்டது...
நண்பர்களே! இருள ஆரம்பித்துவிட்டது. நிலைமை மோசமாவதற்கு முன்பே, நாம் இங்கிருந்து கிளம்பிவிடுவது நல்லது இல்லையா?''
வயதான சவுக்கு மரங்களின் மஞ்சள்நிற இலைகளுக்கு மத்தியில் காற்று பலமாக வீசிக்கொண்டிருந்தது.
இலைகளிலிருந்து அடர்த்தியான துளிகள் எங்களின்மீது விழுந்து கொண்டிருந்தன. களிமண்ணில் எங்களின் குழுவைச் சேர்ந்த ஒருவர் வழுக்கி விழ இருந்தார்.
அங்கிருந்த சாம்பல்நிற பெரிய சிலுவையைப் பிடித்துக்கொண்டு கீழே விழுவதிலிருந்து தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயற்சித்தார்.
"யெகோர் க்ரயாஸ்னோருகோவ்... புகழ்பெற்ற அவை உறுப்பினரும், குதிரை வீரருமான..'' - அவர் வாசித்தார்:
"எனக்கு அந்த மனிதரைத் தெரியும். அவர் தன் மனைவியின் மீது அளவற்ற அன்பு வைத்திருந்தார். ஸ்டானிஸ்லாவ் ரிப்பனை அணிந்திருப்பார்.
எதையும் வாசிக்க மாட்டார். அவருக்கு நல்ல ஜீரண சக்தி இருந்தது. வாழ்க்கை நன்றாகவே இருந்தது. இல்லையா? அவர் இறப்பதற்கான எந்தவொரு காரணமும் இல்லை என்றுதான் யாருமே நினைப் பார்கள்.''
ஆனால், நடந்ததோ...? விதி அவர் தன் கையில் ஒரு புட்டியை வைத்திருந்தார்.
மாமிசத்துண்டுகள் நிறைந்த ஒரு பொட்டலம் அவரு டைய பாக்கெட்டிற்கு வெளியே நீட்டிக் கொண்டி ருந்தது.
"நடிகரான முஷ்கினின் கல்லறை எங்கே இருக்கு?''- அவர் கிசுகிசுப்பான குரலில் எங்களிடம் கேட்டார்.
நடிகரான முஷ்கினின் கல்லறை இருக்கும் பக்கம் அவரைப் போகச் செய்தோம். அந்த மனிதர் இரண்டு வருடங்களுக்கு முன்பு மரணமடைந்து விட்டார்.
"நீங்கள் ஒரு அரசாங்க க்ளார்க்.. நாங்கள் நினைப் பது சரியா?''- நாங்கள் கேட்டோம்.
"இல்லை... ஒரு நடிகர். இந்தக் காலத்தில் நடிகர்களையும் அரசாங்க க்ளார்க்குகளையும் வேறு படுத்திப் பார்ப்பதே சிரமமான விஷயமாக இருக்கிறது. நீங்கள் அவ்வாறு கணித்தது குறித்து எனக்கு ஆச்சரியம் உண்டாகவில்லை.''
அது வினோதமானது.
"ஆனால், அரசாங்க க்ளார்க்கிற்கு அது புகழ் சேர்க்கக்கூடிய ஒன்றல்ல.''
நடிகரின் கல்லறையை நாங்கள் மிகவும் கஷ்டப்பட்டே கண்டுபிடித்தோம்.
அது மறைவாக இருந்தது. செடிகள் வளர்ந்து அதை மூடியிருந்தன. ஒரு கல்லறைக்குரிய தோற்றத் தையே அது இழந்து விட்டிருந்தது.
அங்கிருந்த ஒரு சிறிய தரமற்ற சிலுவை அழிய ஆரம்பித்திருந்தது.
பனிப் பொழிவால் கறுத்திருந்த பசும் பாசி அதை மூடியிருந்தது.
முற்றிலும் கவனிப்பாரற்று ஒதுக்கப்பட்ட நிலையும், சிதிலமடைந்து கொண்டிருந்த தன்மையும் அதில் வெளிப்பட்டன.
"....மறக்கப்பட்ட நண்பன் முஷ்கின்...''- நாங்கள் வாசித்தோம்.
மனிதனின் நிலையற்ற தன்மையையும், அவனின் பொய்மையையும் காலம் துடைத்து வெளிக்காட்டியது.
அவருக்கு நினைவுச் சின்னம் அமைப்பதற்காக நடிகர்கள், பத்திரிகையாளர்கள் ஆகியோரால் நிதி திரட்டப்பட்டது.
ஆனால், அவர்கள் பணத்தைக் குடித்துவிட்டார்கள்...
"நண்பர்களே!''- நடிகர் கவலையுடன் கூறினார். அவர் தரை வரை குனிந்து, ஈர மண்ணைத் தன் முழங்கால்களாலும் தொப்பியாலும் தொட்டார்.
"அதைக் குடித்து விட்டார்கள் என்று நீங்கள் எப்படி கூறுகிறீர்கள்?''
"அது சாதாரண விஷயம். அவர்கள் பணத்தைத் திரட்டினார்கள். நாளிதழில் அதைப் பற்றி ஒரு பாரா அளவில் எழுதினார்கள். அந்த பணத்தைக் குடிப்பதில் செலவழித்துவிட்டார்கள். அவர்களைக் குறை கூறுவதற்காக நான் இதைக் கூறவில்லை.
அன்பு நண்பர்களே... அது அவர்களுக்கு நன்மையே செய்திருக்கிறது. அவர்களுக்கு நல்ல உடல் நலத்தைக் கொடுத்திருக்கிறது. அவரைப் பற்றிய நிரந்தர நினைவை உண்டாக்கி இருக்கிறது.''
"குடிப்பது மோசமான உடல்நிலைக்குக் காரணமாக இருக்கும்'' என்றார் ஒருவர்.
"அவர் உங்களுக்கு என்ன கெடுதல் செய்தார்?''
"பெரிய கெடுதல்...''- கவலையுடன் கூறினார் நடிகர். கசப்பான வெளிப்பாடு அவரின் முகம் முழுக்க தெரிந்தது. "எனக்கு அவர் ஒரு வில்லன்... ஒரு அயோக்கி யன்... சொர்க்க ராஜ்யமே அவருக்குச் சொந்தமாக இருந்தாலும்! அவரைப் பார்த்துத்தான்... அவரை கவனித்துத்தான்... நான் ஒரு நடிகராகவே ஆனேன். தன்னுடைய நடிப்புக் கலையால் பிறந்த வீட்டிலிருந்த என்னை அவர் ஈர்த்தார். ஒரு நடிகரின் வாழ்க்கை என்ற வகையில் இருக்கக்கூடிய சந்தோஷங்கள் என்ற முறையில் என்னை அவர் கவர்ந்தார். அனைத்து விஷயங் களையும் அவர் எனக்கு கற்றுத் தந்தார். கண்ணீரையும் கவலையையும்....
ஒரு நடிகனின் வாழ்க்கை என்பது கசப்பு நிறைந் தது! நான் இளமையை இழந்தேன்... நிதானத்தை... தெய்வீகத் தன்மையை...
எனக்கென கால் காசு கூட சந்தோஷமாக இருப் பதற்கு இல்லாமல் போனது. என் ஷூக்களின் அடிப் பகுதி பாதித்த நிலையில் இருந்தது. என் கால்கள் ஈரப் பசை இல்லாமலும், புள்ளிகள் விழுந்தும் இருந்தன. நாய்கள் குதறியதைப் போல என் முகம் இருந்தது. என் தலை சுதந்திர சிந்தனைகளாலும் அர்த்தமற்ற யோசனைகளாலும் முழுமையாக நிறைந்திருந்தது. என் நம்பிக்கையை அவர் என்னிடமிருந்து பிடுங்கினார்.
என் கேடுகெட்ட ஜீனியஸ்! எனக்கு திறமை இருந்திருந் தால், வேறு ஏதாவது நடந்திருக்கும்.
ஆனால், நான் எதற்குமே லாயக்கற்றவனாக நாசமாகிவிட்டேன். குளிரா இருக்கு... மரியாதைக்குரிய நண்பர்களே! உங்களுக்கும் ஏதாவது வேண்டாமா? நம் அனைவருக்கும் தேவையான அளவிற்கு இருக்கு.
அவருடைய ஆத்மசாந்திக்காக நாம் குடிப்போம்! அவரை எனக்கு பிடிக்காவிடினும், அவர் மரணத்தைத் தழுவியிருந்தாலும் இந்த உலகத்திலேயே எனக்கென இருந்தது அவர் ஒருவர்தான். ஒரே ஒருவர்... அவரைப் பார்ப்பதற்காக நான் வருவது... இதுவே இறுதி முறை. மதுவால் நான் சீக்கிரமே இறந்து விடுவேன் என்று டாக்டர்கள் கூறியிருக்கிறார்கள். அதனால், இறுதி விடை பெறுவதற்காக இங்கு நான் வந்தேன். ஒருவன் தன் எதிரிகளை மன்னிக்க வேண்டும்.''
இறந்துவிட்ட முஷ்கினுடன் உரையாடட்டும் என்று நடிகரை விட்டு விட்டு, நாங்கள் புறப்பட்டோம். ஒரு அருமையான குளிர்ந்த மழை பெய்ய ஆரம்பித்தது.
கருங்கற்கள் நிறைந்த பிரதான பாதைக்குள் திரும்பியபோது, நாங்கள் ஒரு மரண ஊர்வலத்தை நேர் கொண்டோம்.
வெண்ணிற காட்டன் ஆடையையும், இலைகள் ஒட்டிக் கொண்டிருந்த சேறு படிந்த பூட்ஸ்களையும் அணிந்திருந்த நான்கு பேர் ப்ரவுன் நிற பிணப் பெட்டி யைத் தூக்கிக் கொண்டு வந்தார்கள். இருளாகத் தொடங்கியதால், அவர்கள் வேகமாக நடந்து வந்து கொண்டும், தடுமாறிக் கொண்டும், தங்களின் சுமை யால் ஆடிக்கொண்டும் இருந்தார்கள்.
"நாம் இங்கு வந்தே இரண்டு மணி நேரங்கள்தான் ஆகியிருக்கும்.
அதற்குள் மூன்றாவது பிணம் உள்ளே வர ஆரம்பித்து விட்டது. நாம் வீட்டிற்குப் போவோமா, நண்பர்களே?''
__________________
மொழிபெயர்ப்பாளரின் உரை
வணக்கம்.
இந்த மாத "இனிய உதய'த்திற்காக 3 அருமையான கதைகளை நான் மொழிபெயர்த்திருக்கிறேன் "கொடி' என்ற கதையை எழுதியிருப்பவர்... தேசிய சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், மலையாள நட்சத்திர எழுத்தாளருமான மலயாற்றூர் ராமகிருஷ்ணன். இலக்கிய பணிக்காக தன் உயர் அரசாங்க பதவியையே துச்சமென உதறி விட்டு வந்த ஐ.ஏ.எஸ்.அதிகாரி இவர்.
இமயமலை பகுதியில் மலைச்சிகரத்தில் ஏறி சாதனை படைத்த மனிதர்களின் கதை. அந்த கதைக்களத்திற்கே நம் கைகளைப் பற்றிக்கொண்டு எழுத்தாளர் அழைத்துச் செல்கிறார் என்பதே உண்மை.
தவளகிரி மலைச் சிகரத்தில் பானர்ஜி எதற்கு சீனக்கொடியை ஊன்ற நினைத்தார்? நம்மைச் சிந்திக்க வைக்கிறார் மலயாற்றூர்.
கதையின் இறுதியில் அவர் எழுதியிருக்கும் வரிகள்....
"நாம் இன்னொரு மகத்தான மலையேற்றத்தைச் செய்யப்போகிறோம் அல்லவா? நல்லவொரு எதிர்காலத்திற்காக? அங்கு நாம் எந்த கொடியை உயர்த்த வேண்டும்?''
இந்த வரிகளின் மூலம் எவ்வளவு பெரிய உண்மையைக் கூறுகிறார் மலயாற்றூர்!
"குங்குமப் பொட்டு' என்ற கதையை எழுதியிருப்பவர்... கேரள சாகித்ய அகாடெமி விருது பெற்றவரும், மலையாள இலக்கியத்தின் சிற்பிகளில் ஒருவருமான உண்ணிகிருஷ்ணன் புதூர்.
மரணத்தைத் தழுவிய முத்துலட்சுமி என்ற பெண்ணைச் சுற்றி எழுதப்பட்டிருக்கும் கதை. கதையின் சூழலைக் கண்ணாடியென இதில் பிரதிபலிக்கிறார் எழுத்தாளர்.
இந்த கதையின் ஒரு இடத்தில் உண்ணிகிருஷ்ணன் புதூர் குறிப்பிடும் "வேருகள்' புதினத்தை எழுதிய ராமகிருஷ்ணன்...
வேறு யார்? மலயாற்றூர் ராமகிருஷ்ணன்தான் அவரின் ஒரு கதையே இந்த இதழில் இடம்பெற்றிருப்பதை காலத்தின் தீர்மானம் என்றுதான் கருத வேண்டும்.
இந்த கதை ஒரு உண்மை கதை. முத்துலட்சுமி உண்மையாகவே வாழ்ந்து, இறந்த ஒரு பெண்.
"இடுகாட்டில்...' என்ற ரஷ்ய மொழி கதையை எழுதியவர் உலக புகழ் பெற்ற மகத்தான எழுத்தாளரான ஆன்டன் செக்காவ்.
இடுகாட்டில் நடைபெறும் சில மறக்கமுடியாத சம்பவங்களைக் கொண்டு எழுதப்பட்ட கதை.
மரணமடைந்த நடிகரின் கல்லறைக்கு அருகில் நடைபெறும் உரையாடல்கள் ஆழமானவை... சிந்திக்க வைப்பவை.
கதை முழுக்க செக்காவின் முத்திரை பதிந்திருப்பதை நம்மால் உணர முடியும்.
இந்த 3 சிறுகதைகளும் உங்களுக்கு மாறுபட்ட இலக்கிய அனுபவங்களைத் தரும் என்பது உறுதி.
"இனிய உதயம்' மூலம் நான் மொழிபெயர்க்கும் உன்னத இலக்கிய ஆக்கங்களை வாசிக்கும் உயர்ந்த உள்ளங்களுக்கு என் இதய நன்றி.