ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்- அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்!
-என்று புல்லை மட்டுமல்ல; கல்லையும் மண்ணையும் கூட பெயர் சொல்லி அழைப்பேன் என்று பிரகடனம் செய்கிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். அஃறிணைகளின் மீதும் உரிமை யோடு அன்பைக் கொட்டும் அவரது பேருள்ளம் வணங்கத்தக்கது.
நாமோ உயர்திணையான மனிதர்களின் பெயருக்குக் கூட உரிய மதிப்பைக் கொடுக்கா மல், அவர்களை வெவ்வேறு அடையாளங்களில் அழைத்துக்கொண்டும், அடையாளம் குறித்துக் கொண்டும் வாழ்கிறோம்.
எப்போதும் வெளி கேட்டில் சுருட்டி வைக்கப்படும் பேப்பர் சென்றமாதம் பெய்த தொடர்மழையிலும் நனையாமல் வீட்டுப்படியில் வைக்கப்பட்டிருந்தது. “இங்க யார் வச்சது?" என மகனிடம் கேட்டேன். "பேப்பர்கார அண்ணன் தான்மா மழையோட சைக்கிள நிப்பாட்டிட்டு வந்து வச்சிட்டுப் போனாங்க" என்றான். "அந்த அண்ணா பேரென்னடா?” என்ற என் கேள்விக்கு "தெரிலமா; பேப்பர் அண்ணா தான்" என்று சொல்லிவிட்டுப் போனான் மகன்.
நம் மொபைலில் எண்ணற்ற பெயர்கள் எண்களோடு பதியப்பட்டு பலகாலம் பயன்படுத்தப்படாமலேயே கிடக்கின் றன. ஒருநாள், இருநாள் பார்த்துப் பழகிய மனிதர்கள்கூட என் நம்பர பதிஞ்சிக்கோங்க' என்று உரிமை யாய் தங்கள் எண்ணையும் பெயரையும் கொடுத்து விட்டுப் போவார்கள்.
அப்படிப்பட்டவர்களில் பலபேர் மீண்டும் தொடர்புக்கு வராமலே போய் விடுவார்கள் அல்லது அவர்களைத் தொடர்புகொள்ளும் தேவையே இல்லாமல் போய்விடும்.
ஆனால் நம் அன்றாட வாழ்வை நகர்த்திச் செல்கிற மனிதர் களின் எண்கள், நாம் அடிக்கடி பயன்படுத்துகிற அத்தியாவசிய மனிதர்களின் எண்கள் பேப்பர், கேஸ், மில்க்மேன், வாட்டர், கொரியர் என்பது போலத் தான் பெரும்பாலும் பதியப்பட் டிருக்கும். அவர்களுக்கென்று ஒரு பெயர் இல்லையா என்ன? அதி
ஒவ்வொரு புல்லையும் பெயர்சொல்- அழைப்பேன்
பறவைகளோடு எல்லை கடப்பேன்
பெயர் தெரியாத கல்லையும் மண்ணையும்
எனக்குத் தெரிந்த சொல்லால் விளிப்பேன்!
-என்று புல்லை மட்டுமல்ல; கல்லையும் மண்ணையும் கூட பெயர் சொல்லி அழைப்பேன் என்று பிரகடனம் செய்கிறார் மக்கள் கவிஞர் இன்குலாப். அஃறிணைகளின் மீதும் உரிமை யோடு அன்பைக் கொட்டும் அவரது பேருள்ளம் வணங்கத்தக்கது.
நாமோ உயர்திணையான மனிதர்களின் பெயருக்குக் கூட உரிய மதிப்பைக் கொடுக்கா மல், அவர்களை வெவ்வேறு அடையாளங்களில் அழைத்துக்கொண்டும், அடையாளம் குறித்துக் கொண்டும் வாழ்கிறோம்.
எப்போதும் வெளி கேட்டில் சுருட்டி வைக்கப்படும் பேப்பர் சென்றமாதம் பெய்த தொடர்மழையிலும் நனையாமல் வீட்டுப்படியில் வைக்கப்பட்டிருந்தது. “இங்க யார் வச்சது?" என மகனிடம் கேட்டேன். "பேப்பர்கார அண்ணன் தான்மா மழையோட சைக்கிள நிப்பாட்டிட்டு வந்து வச்சிட்டுப் போனாங்க" என்றான். "அந்த அண்ணா பேரென்னடா?” என்ற என் கேள்விக்கு "தெரிலமா; பேப்பர் அண்ணா தான்" என்று சொல்லிவிட்டுப் போனான் மகன்.
நம் மொபைலில் எண்ணற்ற பெயர்கள் எண்களோடு பதியப்பட்டு பலகாலம் பயன்படுத்தப்படாமலேயே கிடக்கின் றன. ஒருநாள், இருநாள் பார்த்துப் பழகிய மனிதர்கள்கூட என் நம்பர பதிஞ்சிக்கோங்க' என்று உரிமை யாய் தங்கள் எண்ணையும் பெயரையும் கொடுத்து விட்டுப் போவார்கள்.
அப்படிப்பட்டவர்களில் பலபேர் மீண்டும் தொடர்புக்கு வராமலே போய் விடுவார்கள் அல்லது அவர்களைத் தொடர்புகொள்ளும் தேவையே இல்லாமல் போய்விடும்.
ஆனால் நம் அன்றாட வாழ்வை நகர்த்திச் செல்கிற மனிதர் களின் எண்கள், நாம் அடிக்கடி பயன்படுத்துகிற அத்தியாவசிய மனிதர்களின் எண்கள் பேப்பர், கேஸ், மில்க்மேன், வாட்டர், கொரியர் என்பது போலத் தான் பெரும்பாலும் பதியப்பட் டிருக்கும். அவர்களுக்கென்று ஒரு பெயர் இல்லையா என்ன? அதிகாலை நாலரை மணிக் கெல்லாம் மெல்லிய மணிச் சத்தத்துடன் ஆஜராகி கேட் கதவில் தொங்கிக்கொண்டிருக் கும் தூக்குச்சட்டியில் கிழித்துப் போடப்பட்ட கூப்பனை சரியாகப் பார்த்து பாலை ஊற்றி மீண்டும் கேட்டில் தொங்கவிட்டுச் செல்லும் பால்காரர் பத்து வருடங்களாய் வருகிறார். எங்கள் அதிகாலை அவர் வருகையால்தான் தலைவலியின்றி தொடங்குகிறது. என்றாலும் அவர் பெயர் பால்காரர்தான்.
காலை ஆறுமணிவாக்கில் 'குப்பேய்' என்ற உரத்த குரலோடு சிறிய குப்பை வண்டியில் தம்பதி சமேதராக நகர்வலம் வரும் துப்புரவுத் தொழிலாளர்கள் பேசிக்கொண்டும் சிரித்துக் கொண்டும் வீட்டு வாசலில் வைக்கப்பட்ட வாளியில் இருந்து மக்கும் மக்காத குப்பைகளை கவனமாய் பிரித்து அதற்கான இடங்களில் இட்டு நிரப்பி, காகிதம், பாட்டில் போன்றவற்றை தனிப்பைகளில் அடைத்துவிட்டுப் போய்க்கொண்டே இருக்கிறார்கள். பொங்கல், தீபாவளி நாட்களில் மட்டும் நம் வீட்டு காலிங் பெல்லை அழுத்தும் விரல்களுக்குச் சொந்தக்காரர்கள் அவர்கள்.
கொரோனா காலத்தில் நாம் அவர்களின் மேல் பூத்தூவி வரவேற்றோம். சிலர் பாதபூஜைகூட செய்தார்கள். இன்றுவரை நம் ஆரோக்கியத்திற்கு முதல் காரணியாக அவர்கள்தான் இருக்கிறார்கள். ஆனாலும் அவர்களை வீட்டுக்குள் அழைத்து உட்கார வைத்து ஒருவாய் காபியோ டீயோ கொடுக்கும் மனவிசாலம் இன்னும் வாய்க்கவேயில்லை.
அவர்களின் பெயரைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்றுகூடத் தோன்றவில்லை. இன்றும் அவர்கள் பெயர் துப்புரவுத் தொழிலாளர்தான்.
நெல்லை செல்லும்போது பெரும்பாலும் சங்கரன்கோவில் தாண்டி எதிர்வரும் ஒரு சிறிய ஊரின் சிறிய மெஸ்ஸில் சாப்பிடுவது வழக்கம் சிறிய கடைகளின் சாப்பாட்டு ருசிக்கு ஐந்து நட்சத்திர விடுதிகள் ஏணி வைத்தாலும் எட்ட முடியாது. போனவாரம் அதிகாலை அந்த வழி செல்ல நேர்ந்தது. பழக்கதோசத்தில் கடையில் அமர்ந்து விட்டோம். மெஸ் உரிமையாளரும் சமையாளரும் பரிமாறுபவரும் பணம் வாங்குபவரும் அந்த ஒரு மனிதர்தான். அடிக்கடி பார்த்த நினைவில் 'கடை தொடங்க இன்னும் ஒருமணி நேரமாகுமே' என்றார் தயக்கத்துடன். பரவால் லங்க என்று நாங்கள் எழ முயற்சிக்க "இரிங்க; நேத்து நைட் வச்ச குழம்ப இருக்கு. தோசை சுட்டு தருகிறேன்" என்று சொல்லிவிட்டு பசியாற்றினார். கிளம்புமுன் "எவ்வளவுங்க பில்" எனக்கேட்ட என் கணவரிடம், "வியாபாரினா பணம் வாங்கலாம். இன்னிக்கி நீங்க எங்க விருந்தாளி காசு தரக்கூடாது" என உரிமையான கண்டிப்புடன் சொன்னார்.
அதுவரை பணம் கொடுத்து சாப்பிட்ட போது இல்லாத ருசி அன்றைக்கு இருந்தது. அது அந்த எளிய மனிதரின் மனசின் ருசி. என்றாலும் அவர் பெயர் என்ன என்பதைக் கேட்கவேயில்லை.
கொஞ்சநாள் முன்பு இராஜபாளையத்திலிருந்து கோவிலூருக்கு டூவீலரில் சென்றுகொண்டிருந்தேன். மாலை கடந்த நேரமென்பதால் கொஞ்சம் வேகமாக வண்டியை விரட்டினேன். ஒரு இளைஞன் என்னை கவனித்துக் கொண்டே அதேவேகத்தில் பின் தொடர்ந்தார். பைக்கில் தனியாகப் போன பெண்ணிடம் நகை பறிப்பு என காலையில் படித்த செய்தி வேறு நினைவில் வந்து தொலைந்தது. பதட்டத்தில் நான் இன்னும் வேகமெடுக்க அதை விடவும் வேகமாக வந்த இளைஞன் எனக்கு முன் வந்து வண்டியை நிறுத்தி" அக்கா சைடு ஸ்டேண்ட் எடுக்காம இவ்ளோ வேகமா போறீங்க. அடுத்த ஸ்பீடு பிரேக் கர்ல தட்டுனா என்னாகும்" என உண்மை யான அக்கறையோடு அறிவுறுத்திவிட்டு வந்த வழியே திரும்பிச் சென்றார். என்னுடைய நன்மைக்காக அவ்வளவு தூரம் துரத்தி வந்த அந்த தம்பியிடம் நன்றி சொல்லி பெயர் கேட்பதற்கு முன் அவன் பறந்துவிட்டிருந்தான்.
ஒருநாள் பழைய பஸ்ஸ்டாண்ட் பக்கத்தில் இருக்கும் பெட்ரோல் பங்கில் வண்டியை நிறுத்தி, 'எவ்வளவுங்க' எனக் கேட்ட அந்தச் சகோதரியிடம் "முன்னூறு ரூபாய்க்கு போடுங்க" எனச்சொல்லி விட்டு பர்ஸை எடுத்தேன். இருநூறுரூபாய் என்னைப் பார்த்து ஏளனமாய் சிரித்தது. நான் "இருநூறூ ரூபாய்க்கு போடுங்க போதும்" எனச் சொல்வதற்குள் அந்தப் பெண் பெட்ரோலை நிரப்பி விட்டார். 'நூறு ரூபா கம்மியா இருக்கு; போய் எடுத்துட்டு வந்திறேன்" என்று லேசான குற்ற உணர்ச்சியோடு சொன்னேன். 'உங்களத் தெரியுங்க; நான் குடுத்துறேன். நீங்க அடுத்தமுறை வரும்போது தாங்க". என்றார் அழகான சிரிப்போடு. அந்தப் பெண்ணின் அன்றைய தினச்சம்பளமே அவ்வளவு தான் இருக்கும். ஆனாலும் சக மனிதரில் நம்பிக்கை வைத்த குணத்தில் அவர் கோடீஸ்வரியாய் காட்சியளித்தார். பணத்தை திருப்பிக் கொடுக்கும் போதா வது பெயரைக் கேட்டிருக்கலாம். கேட்கத் தோணவில்லை.
சில நேரங்களில் கேஸ் சிலிண்டர் வரும்போது வெளியூர் சென்றிருப்போம். ஆனாலும் தன் கைப் பணத்தை போட்டு சிலிண்டரை இறக்கி வைத்துவிட்டு மறுநாள் வந்து வாங்கி கொள்ளும் அண்ணன்மார்களும் இருக்கிறார்கள் 'சிலிண்டர்காரர்' என்ற பெயரில்.
தன் சொந்தத் தோட்டத்தில் விளைந்த காய்கறி கீரைகளை விற்க வரும் அம்மா நல்ல காய்கறி தேர்வு செய்யத் தெரியாத என் அறியாமையை கேலி செய்து கொண்டே சமையலுக்கு உகந்த காய்களை எடுத்துக் கொடுப்பார். பல நாட்கள் காய்கறிகளை விடப் பெருமானமுள்ள காளான்களை "இன்னிக்கி மின்னல்ல வெடிச்சிக் கிடந்திச்சி என்று இலவச இணைப்பாய் கொடுத்து விட்டு அதைச் சமைக்கும் முறையையும் சொல்லிக் கொடுத்துவிட்டுப் போகும் அந்தம்மாவின் பெயர் சத்தியமாய் தெரியாது.
நாமில்லாத நாட்களில் நம் வீட்டுக்கு வரும் கடிதங்கள் பத்திரிகைகளை பத்திரமாக வாங்கி வைக்கும் அயன் பண்ணும் ஐயாவின் பெயர் 'தேய்ப்பு தாத்தா' தான்.
சைக்கிளில் பழக்கூடையை வைத்துத் தள்ளிவரும், தங்கத்தை நிறுப்பது போல் கொய்யாப்பழத்தை நிறுத்துக் கொடுத்துவிட்டு ஒரே விலைதான் என ரொம்ப ஸ்ட்ரிக்ட் ஆபிசராய் காட்டிக்கொள்ளும் பெரியவர் குழந்தைகள் பக்கத்தில் நின்றால் ஆசையாய் ஆளுக்கொரு பழத்தை அன்பளிப்பாய் கொடுத்துச் செல்வார். பழத்தைவிடக் கனிந்த மனசு கொண்ட அவரின் பெயர் நிஜமாகவே தெரியாது.
எண்பது தொண்ணூறுகளில் நம் உறவுகள் மற்றும் நட்புகளின் நலம் சுமந்து வந்த தோழனாய் அன்றைய காதல் கடிதங்களின் தூதுவனாய் திகழ்ந்த தபால்காரர், எந்த தலைப்புக்கு புத்தகம் தேடிப்போனாலும் ஓரிரு நிமிடங்களில் சரியான புத்தகத்தை தேர்வு செய்து தரும் நூலகர், பள்ளி விட்டு ஸ்டாப் பில் இறங்கும்போது மழை பெய்தால் தன் முந்தானைக்குடை பிடித்து பிள்ளைகளை வீடு வரை கொண்டுவிடும் ஆயா, நீங்க விரும்பிச் சாப்பிடுவீகன்னு புள்ளைகளுக்குக்கூட குடுக்காம கொண்டு வந்தேன் என்று சீம்பால் கொண்டு தரும் தயிர்க்காரம்மா, பூக்கொடுக்கும் போதெல்லாம் முகம் பார்த்து ரெண்டு கண்ணி அதிகமாய் வெட்டித் தரும் பூக்காரப்பாட்டி போன்ற எளிய பெயர்தெரியாத மனிதர்களால்தான் நம் வாழ்க்கை நலமுடன் நகர்கிறது. இப்படிப் பால்காரர் தொடங்கி தண்ணிக் கேன்காரர், கொரியர்காரர், இரவு ஆர்டர் செய்து உணவு கொண்டுவரும் சொமட்டோகாரர் வரை பெயர்தெரியாத மனிதர்கள்தான் நம் வாழ்க்கையை நிரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.
இவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமையோ தீபாவளியோ பொங்கலோ கிடையாது. நம் வரவேற்பு அறையில் இவர்களுக்கென்று இடமே கிடையாது. நம் குடும்பத்தின் திருமணப் பத்திரிகைகளில் நமக்குப் பிடிக்காத அங்காளி பங்காளி பெயர்கூட இருக்கும். ஆனால் இவர்களுக்கு ஒரு அழைப்புகூட நாம் வைப்பதில்லை.
உறவினர்கள் நண்பர்கள் இல்லாமல்கூட நாம் வாழ்ந்து விட முடியும். ஆனால் பெயர் தெரியாத இந்த மனிதர் கள் இன்றி ஒருநாள் கூட நம்மால் இயங்க முடியாது.
இந்தப் புத்தாண்டிலிருந்தாவது இவர்களையும் நம் குடும்பத்தில் ஒருவராய் கொண்டாடுவோம். குறைந்த பட்சம் இவர்களின் பெயரையாவது தெரிந்து கொள்வோம்.