ரு சிறு கண்ணசைவு. புருவத் தூக்கல். ’க்கும்’ என்கிற தொண்டைக் கமறல். கைவிரல் கொண்டு சிறு தாளம். லேசான விரல் தீண்டல். இதுவே போதும். அவன் தரும் சமிக்ஞைகளாக.

அடுத்த நொடி அவள் அங்கே இருப்பாள். அவன் பக்கத்தில் இருப்பாள். அவனோடு இருப்பாள். இப்படியான சமிக்ஞைகள் அவனுடையது மட்டுமே.

அவள் உடல் முழுக்க வெப்ப ஆறு தகித்து ஓடினாலும் தெரியாது. அவளின் ரத்தநாளங்கள், தாபத்தின் தகிப்பை ஏந்திநின்றா லும் தெரியாது. அவளின் சுவாசக் காற்றில் நேசத்தின் இயக்கம் கொழுந்துவிட்டு எரிந்தாலும் தெரியாது.

aa

Advertisment

அவளின் கண்ணிமைகள் முழுக்கவே சுகானுபவத்தின் தேடல் நிரம்பி வழிந்தாலும் தெரியாது.

அமுதசுரபியாக அவள் ஆயிரம் முத்தங்கள் கொடுத்து இருப்பாள். அவளுக்கு ஒரே ஒரு முத்தம் தேவைப் படுகையில், அதைத் தேடி அவள் இருட்டுக் காட்டுக்குள் அலையும் அலைச்சலுக்கு முடிவே இருக்காது.

அவள் ஒட்டுமொத்த பிரபஞ்சத்தின் ஜனன மழைக்குக் கருமேகமாக இருப்பாள். அவளுக்கு ஒரே ஒரு மழைத்துளி தேவை எனும்போது, உள்ளங்கை ஏந்தி எட்டு திசையிலும் தேடி வருவாள். அவனின் காதலுக்கு, நேசத்துக்கு, மோகத்துக்கு, தாபத்துக்கு, ஏக்கத்துக்கு, தகிப்புக்கு, அனலுக்கு, தணலுக்கு, புனலுக்கு என வார்த்தையாகி நிற்பாள்.

Advertisment

ஆனால் அவளின் செந்தழலை, அவளின் தீச்சுடரை, அவளின் அரூப நெருப்பைச் சொல்ல ஒற்றை வார்த்தையும் அவள் கைவசம் கிடையாது. அதை வெளிப்படையாகச் சொல்லிவிட்டால் அந்த நெருப்பை வெளிப்படையாகக் கைகளில் அள்ளிவிட்டால், வாழ்வின் அடுக்குகளில் அதள பாதாளத்திற்குள் தள்ளப்படுவாள்.

அப்புறம் அவள் மீது சாக்கடைப் பார்வைகளே வீசப்படும். கழிவின் அந்துருண்டையே வீசப்படும். அவளின் வம்சம் நூறு இருநூறு ஜென்மம் முன் வரைக்கும் ஏசப்படும். விளையாட்டுக்குத்தான் மாதவி இந்திர விழாவில் பாடுகிறாள். ’ஆற்று வரி’யாக கோவலன் யாரையோ நினைத்து உருகிப் பாட, அதற்கு மறுபாட்டாக மாதவி பாடுகிறாள். ’ஆடவரின் கற்பே பெண் கற்பின் காவல் ஆகும்’ என்ற பொருளில் பாடுகிறாள். உடனே கோவலன் கோபித்துக் கொள்கிறான்.

’குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பதாக அவள் மீது சந்தேக நெருப்புருண்டையை வீசுகிறான்.

""கானல் வரி யான் பாட,

தான் ஒன்றின் மேல் மனம் வைத்து

மாயப்பொய் பலகூட்டும் மாயத்தாள் பாடினாள்’’

என்று மாதவியிடமிருந்து விலகுகிறான். கோவலனைத் தவிர காற்றைக்கூட தன் நெஞ்சினில் புகவிடாத மாதவிக்குக் கிடைத்த பெயர், மாயத்தாள்.

கட்டிய மனைவியைப் பரிதவிக்க விட்டவன் செய்தது தவறல்ல. விளையாட்டாக மாதவி வேறு யாரையோ நினைத்ததுபோல் பாடியது தவறு என்று தீர்ப்பு சொன்னது கோவலன் என்கிற கேவலன். சூர்ப்பனகை விசயமும் இதுகுறித்து எக்குத் தப்பாகிறது.

‘பஞ்சி ஒளிர் விஞ்சு குளிர் பல்லவம் அணுங்க’ சீரடிகளோடு காம வயப்பட்டு வரும்போதே அவளை, வஞ்சி என வஞ்சமென வஞ்சமகள் என சொல்லிவிட முடிகிறது.

aa

""தாம் உறு காமத் தன்மை தாங்களே

உரைப்பது என்பது

ஆம் எனல் ஆவது அன்றால்

அருங் குல

மகளிர்க்கு அம்மா!

ஏமுறும் உயிர்க்கு நோவேன்; என் செய்கேன் ?

யாரும் இல்லேன்;

காமன் என்றொருவன் செய்யும் வன்மையைக்

காத்தி' என்றாள். ""

-தன்னுள் எரியும் நெருப்பை, தன்னை எரிக்கும் நெருப்பை, வார்த்தையில் கொண்டு கூட்டிப்பேசும் சூர்ப்பனகை, முன்னோடிக் குரல் என்றும் சொல்லலாம்.

இரவு வருகிறது குளிர்ச்சியாக. நல்ல கொதிகலன் வெப்பத்தோடு. அவளைத் தலை முதல் காலாய் உருக்கவே வருகிறது. அவன் அருகில் இல்லை. அவளோடு இருப்பவை தனிமையும் எரிதழல் காமமும். இந்தச் சூழலில் ஆதித்தாய் அவ்வையாரின் துணிச்சல் ஆராதனைக்கு உரியது.

’முட்டு வேன்கொல் தாக்குவேன் கொல்

ஓரேன் யானுமோர் பெற்றி மேலிட்டு

ஆ அவ் ஒல்லெனக் கூவுவேன் கொல்

அலமரல் அசைவளி அலைப்ப என்

உயவுநோய் அறியாது துஞ்சும் ஊர்க்கே’

-இப்படி அரற்றுகிறார். ஊர் அநியாயமாகத் தூங்குகிறது. எனது அவஸ்தை புரியவில்லை. எனது தகிப்பு புரியவில்லை. எனது உடலின் ஆலாபனையும், ஆலாரிப்பும் புரியவில்லை. உடலின் குத்தாட்டமும் வெறியாட்டமும் அடங்க நான் எங்கே போய் முட்டுவேன். எதில் அறைந்து கொள்வேன்?

ஊருக்கே கேட்பதுபோல் எப்படி கூவுவேன்? என்று கேள்விமேல் கேள்வியாக கேட்டுப் பெண்ணுக்கான வார்த்தையை மீட்டுத் தருகிறார்.

கி.மு ஆறாம் நூற்றாண்டில் வாழ்ந்த கிரேக்க கவிஞர் சாஃபோ இன்னுமோர் அவ்வையார்தான். அரூபச் சட்டங்களை சுக்குநூறாக்கிய வீரமும் வீரியமும் இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னும் ஆச்சரியத்தின் அறுவடையாக நிமிர்ந்து எரிகிறது. சாஃபோ சொல்லும் மோகம்...

’என்னுடல் முழுவதும் கனல்பற்றி எரியும்

கண் ஏதும் காணாக் கடும் துயர் எய்தும்

செவிகள் இரையும் வியர்வை வழியும்

நடுநடுக்குறும் என் உடல் முழுவதுமே

புல்லினும் வெளுத்துப் போகும் என் மேனி

சாவு எனை அணுகியதோ? என மயங்குவேன்.

என் செய? எதையும் தாங்கிட’

கி.மு ஆறாம் நூற்றாண்டில்

சாஃபோ கைப்பற்றியிருந்த மன்மத மொழியை, நடுவில் சமூகமும் சனாதனர் களும் பறித்துக் கொண்டார்கள். ஆதாம் மட்டுமே பேச வேண்டும். ஏவாள் பேசினால் ஏசவேண்டும் என்கிற எழுதப்படாத சட்டமும் எழுதப்பட்ட சட்டமும் கற்பு என்னும் குறுவாள் கொண்டு பெண்ணுக்குள் செருகப்பட்டது.

அதன்பின் அவள் மௌனம் அணிந்தாள். அவனின் கண்ணசைவுக்குப் பணிந்தாள். கட்டில் முனகியதே தவிர அவள் முனகவே இல்லை.

பாய்கள் சரசரத்தனவே தவிர அவளின் மனசு சரசரக்கவில்லை. மெத்தைகள் கதைபேசினவே தவிர அவள் கதை பேசவில்லை.

திருப்பாவை ஆண்டாள் கனல் வீசும் கலகக் குரலாக ஒலிக்கிறாள்., என்னவெல்லாம் சொல்லி அரற்றுகிறாள், ஆண்டாள் என்னும் சிறுபெண். நம்ப முடியாத ரகசிய தாளம் இது.

""வண்ணம் திரிவும் மனம் குழைவும்

மானம் இலாமையும் வாய் வெளுப்பும்

உண்ண லுறாமையும் உள் மெலிவும்

ஓத நீர் வண்ணன் என்பான் ஒருவன்

தண்ணந் துழாய் என்னும் மாலை கொண்டு

சூட்டத் தணியும்....’

-அடடா... ஜில்லென்று இருக்கும் துளசி மாலையை தோளில் அணிந்தால்தான் ரத்தநாளங்களின் எரிமலை அடங்கும். சதைக் கோளத்தின் வெப்ப நாக்கு அடங்கும். உலர்ந்துபோன வாய்ச் சூடு அடங்கும். மானம் காற்றில் பறக்க, அலைபாயும் மனசும் அடங்கும்... என்ற நுணுக்கம் மலைக்க வைக்கிறது.

அவள் வசிக்கின்ற அந்தச் சதைக் கோளம் அவளுக்கான பொக்கிசம். அந்த பொக்கிசத்தின் திறவுகோல் அவன் கையில். அதை மீட்டெடுக்கப் பிரயத்தனப்படுத்துகிறாள் அவள். குறுக்கே வருகிறது சனாதனமும் சம்பிரதாயமும். இது நேற்றைய கதை.

இன்று வார்த்தை ஊசியால் சனாதன பாவனைகளை உடைக்கின்ற சப்தம் பெருத்துக் கேட்கிறது.

‘எனக்கோர் உடல் இருக்கிறது’ இப்படி பிரகடனம் செய்கிறார் ஜோமனா ஹத்தாத்.

அரபுக் கவிஞர். பெண்மையின் மையலைக் கண்டு கூத்தாடும் ஜோமனா ஆச்சரியமும் ஆதுரமுமாக உரக்கச் சொல்கிறார்.

aa

""என் உடலின் சுவையை நான் கண்டுகொள்வேன்

எரியும் இருஉதடுகளைக் கொண்டு

உள்ளிழுத்துக் கொள்ளும் ஒரு நாவைக் கொண்டு

சொர்க்கத்தில் நுழைவது போல ஓசையிடும்

நெருப்புக் குழம்பைக் கொண்டு

காமத்தின் குமிழிகளுக்குள்

உனக்காக ஓர் உடலை வைத்திருக்கிறேன்’

-இதுநாள் வரைக்கும் அவளும் அவனும் என்கிற பரமபத விளையாட்டாக இருந்தது. இப்போது அவளும் அவளும் என்பதாக இடவல மாற்றம் பெற்றிருக்கிறது. சனா தனத்தை உடைத்தலும், அழுக்குகள் துடைத்தலும், தோழமை நிறைத்தலும் சாத்தியாகி இருக்கும் புதுச்சூழல்... புதுச் சூழல் மையம் கொள்ள ஆரம்பித்திருக்கிறது.

மல்யுத்தம் நடந்த இலங்கையிலிருந்து ஒரு பெண் யுத்தம் பற்றி அனார் எழுதுகிறார்... இந்த யுத்தம்.. யார் அதிகமாக தருவது? யார் அதிகமாக பெறுவது? என்பது குறித்து தன் பசி தீர்ந்ததும் கைகழுவும் சனாதனம் இல்லாமல் சமத்துவ பசிக்கு சமத்துவ பந்தி விரிக்கும் இந்த மன்மதம் வந்தேவிட்டது. இனியும் அவன் தோழமையும் மென்மையும் இணக்கமும் கலந்த ஆகிருதி ஆகாவிட்டால், அவள் அவனிடமிருந்து விலகிவிடுவாள். அவளும் அவளுமான உள்ளங்கை மழைக்குத் தன்னைத் தாரை வார்ப்பாள்’

’இரண்டு பெண்கள்’ கதை இது.

""முழு அர்த்தத்தில் நம்மை பகிர்ந்தபடி உரையாடிக் கொண்டிருந்தோம்.

கண்ணாடி வானம்

நானுமாகி நீயுமாகி இருந்தோம்.

உனது கூடு நிரம்பித் தேன் வழிந்த

மாயப் பொழுதைச் சொல்லிச் சிரித்தபடி

நீ ஏக்கமுற்ற பொழுது

aa

நான் திகட்டும் வரை உணவூட்டியதில்

நிலா ஓரமாய்ச் சென்று அமர்ந்திருக்கலாம்

நாம் முடிவற்றுப் பருகப் பருக

தாகம் கொண்டு இரண்டு பெண்கள்

அருந்தும் இவ்விரவு

இதற்கு மேல் இல்லை என்ற

அற்புதத்தை சுவைத்துவிட்ட திகைப்பில்

சாய்ந்து செல்கிறது

அந்தமற்ற கண்ணாடி வானம்

நானுமாகி நீயுமாகிக் கிடந்தோம்’

விதிகளைக் கட்டுடைக்கும் பெண்ணும்

அவளின் மொழியும் தன் உள்ளங்கைக்குள்

தனக்கான மழையைப் பெய்துகொள்கிறாள் என்பதைச் சொல்கிறது.

(சுடரும்)