உயிருக்குயிரான கிருஷ்ணா, உன்னை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கிறேன். உன்னை நான் நினைப் பது, குருநாதரை சிஷ்யை நினைப்பதைப்போல அல்ல.

ஒரு பெண் தன் இணையை நினைப்பதைப்போல, உன்னை நினைக்க மட்டுமே என்னால் முடிகிறது. காதல் சக்தியுடன்...

அசாதாரணமான ஒரு பாசத்துடன்...

வேகமாகத் துடிக்கும் இதயத்துடன்...

என் உதடுகள் உன்னை நினைக்கின்றன. என் விரல்நுனிகள் உன்னை நினைக்கின்றன. என் கண்கள் உன்னை நினைக் கின்றன.

புல்லும், பாசி பிடித்த செம்பும், மாவின் தளிர் இலையும் உன் அழகை மட்டுமே ஞாபகப்படுத்துகின்றன.

"திரும்பிவருவேன்' என்ற வாக்குறுதியுடன் ரதத்தில் ஏறி, மதுராவிற்குப் பயணித்த என் அனைத் துமாக இருப்பவனே... நான் எத்தனை வருடங்களாக இந்த சிவந்த பாதையில் உன்னை எதிர்பார்த்து நின்றுகொண்டிருக்கிறேன்! பசுக்களைக் காட்டிலிருந்தும் மேட்டிலிருந்தும் தொழுவத்திற்குத் திரும்பக் கொண்டுவரும் யாதவர்கள் என்னைப்பார்த்து முணுமுணுக்கிறார்கள். காகங்கள் தூரத்தில் எங்கோ வளர்ந்து நின்றிருக்கும் காட்டு மரங்களில் துயில் கொள்வதற்காகப் பறந்துசெல்லும் மாலை வேளையில், முதல் நட்சத்திரம் தெரிவதற்கு முன்னால், மூன்றும் சேரும் இடத்தில் பழைய பாவாடையும் தலைத் துணியும் அணிந்து மண் சிற்பத்தைப் போல நான் அசைவே இல்லாமல் நின்றுகொண்டிருக்கும் நேரத்தில் இளைஞர்கள் என்னை பைத்தியம் என்றும் அழைப்பார்கள்.

அழிவற்ற காதல் என்பது மனிதர்களின் கண்ணில் ஒரு சந்தோஷத்தின் அடையாளமோ? எனக்குத் தெரியாது.

கிருஷ்ணா, நீ வீரன்... ‌மன்னன்....

யுத்தமும் சாம்ராஜ்ய பதவியும் உன் தர்மம்... கர்மமும் வாழ்வின் நடைமுறையும்...

ss

பெண் என்பவள் ஒரு உணர்ச்சிமயமான சாம்ராஜ்யத் தைக் கைப்பற்றுவதைக் கனவுகாணுபவள். தன் அணைப்பில் காதலன் தூங்கிக்கொண்டிருக்கும் வேளையில் பூலோகம் முழுவதையுமே அடிமைப் படுத்திவிட்ட மகாராணி தான் என அவள் நினைப்பாள்.

காதல் என்பது உனக்கு சாதாரண ஒரு இடைவேளை மட்டுமே. உன் சரீரம் ஒரு சுகபோகப் பொருள் என்ற உணர்வுடன் நீ அதை எனக்கு சமர்ப்பித்தாய். ஒரு விளையாட்டு பொம்மையின் கள்ளங்கபடமற்ற தன்மையுடன் நீ காதலின் அழுத்தமான முறைகளுக்கு அடிபணிந்தாய்.

Advertisment

தூக்கத்தில் வேறு யாரோ பெண்ணைக்கண்டது காரணமாக இருக்கலாம்....

மென்மையாக நீ முனகினாய்.

பிரியத்திற்குரிய இரண்டு மகாராணிகள் உனக்கு இருக்கிறார்கள் என்று நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.

Advertisment

ருக்மிணியும் சத்யபாமாவும். நீ அவர்களின் இறுகலான அணைப்பில், சூரியன் சூடாக்கிய யமுனாவை மறந்துவிட்டாய். கதம்ப மரங்களை மறந்துவிட்டாய். என் சரீரத்தில் உனக்காக பூசியிருந்த சந்தனத்தையும் மறந்துவிட்டாய். நான் ஒரு கடந்த காலத்தின் எச்சமாகி விட்டேன்.

பழங்கதையாகி விட்டேன். மறைந்து போகும் கனவாக...

எனினும், உன் ரதத்தின் சக்கரங்கள் ஒரு சாயங்கால வேளையில் இந்த பாதையில் உருண்டுவரும் என எதிர்பார்த்து நான் நின்றுகொண்டிருக்கிறேன். மூன்றும் சேரும் இந்த பாதையில்...

நட்சத்திரங்கள் மெதுவாகத் தோன்றும் பொழுதில்... உன் சொந்தம் ராதா.