உதயநிதி ஸ்டாலின், தமன்னா நடிப்பில் சீனு ராமசாமி இயக்கத்தில் உருவான 'கண்ணே கலைமானே' திரைப்படம் தற்போது, இந்தோலிபிரெஞ்சு பன்னாட்டு திரைப்பட விழாவில் மூன்று விருதுகளை வென்றிருக் கிறது. இதன் மூலம் சிறந்த தயாரிப்பாளருக்கான விருதை உதயநிதி ஸ்டாலினும், சிறந்த நடிகைக்கான விருதை தமன்னாவும், சிறந்த துணைநடிகைக்கான விருதை வடிவுக்கரசியும் சர்வதேச அளவில் வென்றுள்ளனர்.
அந்தப் படத்தில் அப்படி என்ன இருக்கிறது? என்பதை தனது பார்வையில் விவரிக்கிறது இந்தக் கட்டுரை.
பரபரப்பான வாழ்க்கைக்குள் நின்று நிதானித்துக் கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொள்ள மனிதன் கண்டுபிடித்த உன்னதம் கலைப் படைப்பு. வாழ்க்கைக்குத் தேவையான பொருளைப் பற்றியோ, பண்பைக் குறித்தோ அடிப்படை அறிவை விழிப் புணர்வை ஏற்படுத்த தேர்வு செய்து கொண்ட சாதனம் கலை இலக்கியம். குகைகளில் வாழ்ந்து வேட்டையாடித் திரிந்தவனிடம் நாகரிகம் அடைந்ததன் அடை யாளமாகக் கலைகள் வளர்ச்சி பெற்றன எத்தனை கலைகள் இருப்பி னும் குழந்தை முதல் பெரியவர்கள் வரை எல்லா தரப்பு மக்களின் ஆதரவைப் பெற்ற துறை திரைத்துறை திரைப் படங்களை வணிகப் படங்கள் என்றும் கலைப் படங்கள் என்றும் வகைப்படுத்து கின்றனர். மண் மணம் மாறாமல் கவனிக்க மறுக்கும் மனித வாழ்க்கையின் அவலங்களைச் சொல்லி, அதற்கான தீர்வு நோக்கி நகர்த்தும் கலைப்படங்கள் காலத்தால் அழியாத காவியங்களாக நிலை பெறுகின்றன. அந்த வகையில் இயக்குநர் சீனு ராமசாமியின் 'கண்ணே கலைமானே என்ற திரைப்படம் பரவலான கவனத் தைப் பெற்றது.
ஒரு சாதாரண வாழ்க்கைக்குள் அற்புதமான தருணங்களைக் கண்டு பிடித்துச் சமுதாயத்திற்கு இனம்காட்டும் படைப்பாளியின் எண்ணத்தால் வண்ணம் பெறுகிறது சமூகம். படம் தொடங்கும்போதே இயற்கைக் காட்சிகளை எந்த அளவுக்குத் தரமுடியுமோ அந்த அளவுக்கு இயற்கை சார்ந்த வாழ்க்கையைப் படம்பிடித்துக் காட்டியுள்ளது மாற்றுக் கருத்துக்களை முன் வைப்பவர் இளைய தலைமுறையாகத்தான் இருக்க வேண்டும் என்கிற எந்தக் கட்டாயமும் இல்லை. புரட்சியை நிகழ்த்து வதற்கான இடம் நகரங்களாக இருக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. முற் போக்குச் சிந்தனைகளோடு வாழ்பவன் ஆர்ப்பாட்டமில்லாத சாதாரண எளிய மனிதனாகவும் இருக்கலாம் இவற்றை அழுத்தமாகப் பேசியிருக்கிறது படைப்பு.
மனிதனின் அடிப்படைத் தேவை களான உணவு, உடை, இருக்க இடம் ஆகியவற்றைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தை வலிந்து திணிக்காமல் கதையோடு நகர்த்திச் செல்வது கதையின் மிகப்பெரிய பலம்.
பணம் கொழிக்கும் தொழிற் படிப்பு நோக்கிப் படையெடுக்கும் இளைஞர் கள் வேளாண்மை சார்ந்த தொழிற் படிப்பை நோக்கி நகர மறுக்கின்றனர். செயற்கை உரங்களால் மலடாகிப் போன தாய் மண்ணை மீட்டெடுப்பதற்குப் பலவகையிலும் போராடுகிறது கதை. துடிப்புமிக்க இளைஞனாக வரும் கதாநாயகன் கமலக்கண்ணன் (நடிகர் உதயநிதி) தன் கிராம மக்களை இயற்கை விவசாயம் செய்வதற்குப் பல நிலைகளில் வற்புறுத்துகிறார்.
அந்த விவசாயிகள் கிராம வங்கியில் பெற்ற கடனை அடைக்க முடியாமல் போகும் சூழலில் தற் கொலை செய்ய முடி வெடுக்கும் விவசாயி யைக் கதாநாயகன் காப்பாற்றுகிறார். அப்போது தலைநகர் தில்லியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தை வசனமாகப் பேசும்போது ரசிகர்களை விவசாயிகள் பக்கம் நிற்கவேண்டும் என்ற கருத்து வலுவாக விதைக்கப்படுகிறது. உணவும் உறைவிடமும் பற்றி யோசிக்கவேண்டிய காலகட்டத்தில் வாழ்கிறோம் என்று சொல்லாமல் சொல்கிறது கமலக்கண்ணன் தான் காதலிக்கும் பாரதி (நடிகை தமன்னா) கட்டியிருக்கும் புடவையின் அழகைப் புகழ்வார்.
அதற்கு பாரதி ஒரு கைத்தறி சேலை உருவாக 20,000 முறை கை - கால் ஆட்டினால்தான் நெய்ய முடியும் என்று சொல்லும் இடம் பிரமாதமானது.
உழவுக்கும் நெசவுக்கும் கொடுப்ப துடன் கண்ணே கலைமானே முடிந்து விடுவதில்லை.
பெண் கல்வியைச் சிந்திப்பதுடன் பெண் விடுதலை பற்றிய கருத்தாக்கம் முழுமை பெறுவதில்லை. குடும்பத்தில் அவள் மீண்டும் மீண்டும் செக்கு மாடு வாழ்க்கை வாழ நிர்பந்திக்கப்படுகிறாள். வங்கியின் மேலாளராக இருக்கும் பாரதி, நேர்மையாக வாழ்வதும், இலட்சிய நோக்கத்துடன் பணியாற்றுவதும் பார்ப்பவர்களை ரசிக்க வைக்கிறது. அவளைத் திமிர் பிடித்தவளாகக் கருதும் அப்பத்தாவின் (நடிகை வடிவுக்கரசி) நடிப்பு கிராமப்புறங்களில் பெண்கள் வாழும் வாழ்க்கையின் சாட்சியாக அமைகிறது. கிராமத்துப் பெண் சார்ந்த உருவமாக அமைக்கப்பட்டிருக்கும் அப்பத்தா ஆளுமைமிக்க பெண்ணாகக் காட்டப்படுவது பெரிய சமூக மாற்றத்திற்கு வழிவகுக்கும்.
அந்தக் குடும்பத்தின், அந்த ஊரின் பெருமை மிக்க பெண்ணாகச் சொல்லப்படுவது தாய்வழிச் சமூகத்தின் தொடர்ச்சியே தவிர வேறில்லை என்று உணர்த்துகிறது.
சமத்துவத்தைச் சாத்தியப்படுத்த சாதி மறுப்புத் திருமணங்கள் முக்கியம்.
பிறப்பின் வழியாகச் சுமத்தப்படும் அடையாள இழிவுகளை ஒழிக்கும் நேரத்தில் உண்மையான சமூக விடுதலை மலரும். இதைக் கோடிட்டுக் காட்டும்விதமாக, கமலக்கண்ணனும் பாரதியும் ஒருவரையொருவர் விரும்பித் திருமணம் செய்துகொள்ள நினைக்கின்றனர். ஆனால், கமலக்கண்ணனின் குடும்பத்தில் எதிர்ப்பு கிளம்புகிறது. கிராமத்து இளைஞன் தனக்கான விருப்பத்தை எப்படி நிறைவேற்றுவானோ அதை இயல்பு மாறாமல் தருகிறது படம்.
தன் காதலைத் தன்னுடைய குடும்பத்தார் ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதற்காக கமலக்கண்ணன் நடந்துகொள்ளும் விதம் இளைய தலைமுறையினர் படிக்கவேண்டிய பாடம். மகனின் இல்லற வாழ்க்கை எந்த விதத்திலும் மூத்த தலைமுறையின் குறுக்கீட்டால் கெட்டுவிடக்கூடாது என்று விரும்பும் கமலக்கண்ணனின் தந்தை (நடிகர் பூ ராம்) என்றுமே ரசிகர்களின் நெஞ்சில் நீங்கா இடம்பிடித்து விடுகிறார். கல்யாணமான முதாலண்டில் அந்தத் தம்பதியினர் வாழும் வாழ்க்கை கடைசிவரை அவர்களின் வாழ்வில் தொடர்கிறது என்ற படிப்பினையும் தன் மருமகளின் சமையலைப் பாராட்டும் விதமும் புகுந்த வீட்டினர் பின்பற்ற வேண்டியது அவசியம்!
உலகத்தை என்றென்றும் ஆளக்கூடியது அன்பு மட்டுமே ஆரம்பத்தில் தன் பேரப்பிள்ளை கமலக்கண்ணனையும் தன்னையும் எங்கே பாரதி பிரித்து விடுவாளோ என்று பதறும் அப்பத்தா, கடைசியில் பாரதிக்கு ஒரு பிரச்சினை என்றவுடன் உறவாக வந்து அரவணைத்துக் கொள்ளும் இடம் வாழ்க்கை மீதான நம்பிக்கையைக் கூட்டுகிறது. கண்ணதாசன் பாடல் வரியைத் தலைப்பாகக் கொண்ட இப்படத்தைப் பார்க்கும்போது கிராமத்து வாழ்க்கையின் சுவாசத்தை உணரும் வாய்ப்பு கிடைக்கிறது. மனத்தை வருடும் இசையும், அழகிய ஒளிப்பதிவும் பெண்களைப் பாலியல் பொருளாக இல்லாமல் கலைஞர்களின் திறமையும் அழுத்தமான கதையும், கதைக்கான களமும் பசுமை பசுமை! பசுமை! ஆர்ப்பாட்டம் எதுவுமின்றி, வியாபாரத் தனம் இல்லாமல், கதாநாயகனுக்கான மிகைப் படுத்தப்பட்ட காட்சியமைப்பு வைக்காமல் கதாநாயகியின் கவர்ச்சியை நம்பாமல், மனதோடு உரையாடும் கண்ணே கலைமானே படத்தை எல்லோரும் கொண்டாடிக் கொண்டே இருக்கிறார்கள். இந்தப் படைப்பு சர்வதேச அளவில் விருதுகளைக் குவித்துக்கொண்டே இருக்கிறது. காலம் கடந்தும் விருதுகளைக் குவித்து வருவதிலேயே படைப்பு, தனது தகுதியை நிரூபித்துவருகிறது.