நேற்று மாலை நான் ஆனந்தவர்த்தனனுடன் உரையாடிக் கொண்டிருந்தேன். எனக்கருகில் இல்லத்தரசியும் இருந்தாலும், அவளுடைய கவனம் முழுவதும் தொலைக்காட்சிப் பெட்டியிலிருந்து வரும் பழைய திரைப்படப் பாடல்களில் இருந்தன.

நிலைமை அப்படியிருக்க, இல்லத்தரசி உரத்த குரலில் அழைத்துக் கூறினாள்:

""இதோ பாருங்க. அம்பலமேட்டிலிருக்குற நம்மோட வீடு.''

இல்லத்தரசியின் குரலில் ஆச்சரியமும் சந்தோஷமும் இருந்தன.

Advertisment

ஆனந்தவர்த்தனனை தற்போதைக்கு மறந்துவிட்டு நான் தொலைக்காட்சிப் பெட்டியைப் பார்த்தேன்.

சரிதான்... அங்கு தெரிந்து கொண்டிருப்பது- பல வருடங்களுக்கு முன்பு அம்பலமேட்டில் நாங்கள் வசித்த வீடு. ஆனால், வீடு மட்டுமல்ல; அங்கு வாசலில் பிரேம் நஸீரும் விஜய ஸ்ரீயும் ஒரு காதல் பாடலைப் பாடியவாறு நின்றுகொண்டிருந் தார்கள். பிறகு அவர்கள் வீட்டின் அருகிலிருந்த மைதானத்திற்கும் மலைப் பகுதிக்கும் ஓடிப் பாடினார்கள்...

இல்லத்தரசி ஆவேசத்துடன் கூறினாள்:

Advertisment

""ஹாய்... என்ன ஒரு அழகு!''

நான் கூறினேன்...

""நம்மோட வீடாச்சே!''

அப்போது இல்லத்தரசிக்கு கோபம் வந்துவிட்டது.

""வீட்டையில்ல... நான் சொன்னது விஜயஸ்ரீயையும் நஸீரையும் பத்தி... என்ன அருமையான ஜோடி! "தேனருவி' படப்படிப்பு நடக்குறப்போ அவங்க நம்ம வீட்டுக்கு வந்தாங்க. அப்படி வேறு என்னென்ன திரைப்படங் கள்... இங்க வந்தபிறகு எதுவுமே இல்லாம போய்ட்டது. யாருமே வராம... தனியா...''

இல்லத்தரசியின் முகத்தையே நான் கேள்வி கேட்கிற பாவனையில் பார்த்தேனே தவிர, எதுவும் கூறவில்லை.

அப்போது இல்லத்தரசி மீண்டும் கூறினான்:

"எப்படி வருவாங்க? இந்த ரெண்டு அறைங்க கொண்ட வீட்டுக்கு யார் வருவாங்க?'

அதற்கும் நான் எதுவுமே கூறவில்லை.

இந்த வீடு... கேவலம்... இரண்டு அறைகளை மட்டுமே கொண்டிருக்கும் ஒரு சிறிய கூடு என்று இல்லத்தரசி பல நேரங்களில் எனக்கு ஞாபகப் படுத்துவதுண்டு. உண்மைதான்... இதுவொரு சிறிய வீடுதான். எனினும், இது என்னுடைய சொந்தவீடல்லவா? அம்பலமேட்டில் நாங்கள் வசித்த வீடு இதைவிட எவ்வளவோ பெரியதும், அழகானதும்... ஆனால், அது கம்பெனிக்குச் சொந்தமானதல்லவா?

இங்கு சினிமாக்காரர்கள் வந்து படப்பிடிப்பை நடத்துவதில்லை என்பதென்னவோ உண்மைதான். எனினும், என்னுடைய சில நண்பர்கள் சில நேரங்களில் என்னைப் பார்ப்பதற்காக இங்கு வருகிறார்களே!

இல்லை... இது எதையும் நான் அவளிடம் கூறவில்லை. எனினும், ஏதாவதொன்றைக் கூறவேண்டுமே என்று நினைத்து நான் கூறினேன்:

ss

""அம்பலமேட்ல இருக்குற ஒரு இடத்தைப் பத்தி நான் போனவாரம் ஒரு கதை எழுதியிருக்கேன்.''

""இல்லத்தரசி சந்தேகத்துடன் என்னைப் பார்த்தாள்.

"இடத்தைப் பத்தி கதையா? அதன் பேர் என்ன?''

நான் கூறினேன்.

""இருட்டுவதற்கு முன்பு...''

இல்லத்தரசி கூறினாள்...

""இருட்டுவதற்கு முன்பா? அது என்ன ஒரு பேரு? பிறகு... அங்க "பவர் கட்' எதுவும் இருந்ததில்லியே! எப்போதும் வெளிச்சம் இருந்துக்கிட்டிருக்குமே?''

நான் எதுவும் கூறாமலிருக்க, இல்லத்தரசி சற்று உரத்த குரலில் கூறினாள்:

""இந்த கதை எழுதும் வேலையை நீங்க ஆரம்பிச்சு கொஞ்சகாலம் ஆகிட்டதில்லியா? நான் கேட்கிறேன்- உண்மையிலேயே இந்த பேரை நீங்கதான் வச்சீங்களா?''

நான் கூறினேன்:

""அப்படி கேட்டா... உண்மையை சொல்லணுமே!

எனக்கு வேறொரு ஆளோட உதவி இருந்தது.''

""யாரு அந்த வேறொரு ஆளு?''

நான் கூறினேன்:

""ஆனந்தவர்த்தனன்.''

இல்லத்தரசி ஆச்சரியத்துடன் கூறினாள்:

""ஆனந்தவர்த்தனனா? அது யாரு? அப்படியொரு ஆளைப் பத்தி இதுவரை கேள்விப்பட்டதே இல்லியே!''

நான் கூறினேன்:

""கேள்விப்பட வாய்ப்பில்லை. பெரிய ஒரு விஞ்ஞானி. பிறகு... எனக்கு கத்துக்கொடுத்த மனிதரும்... என்மேல நிறைய அன்பு. நான் போற திசைகள்ல எல்லாம் என்னைப் பார்க்கறதுக்காக வந்திருக்காரு. மங்கலாபுரத்திலும் மெட்ராஸிலும் கொச்சியிலும்... இங்கேயும் வந்திருக்காரு. எனக்கு கதை எழுதக் கத்துத் தந்தவரும் அவர்தான்.''

அப்போது இல்லத்தரசி கூறினாள்:

""அப்படியா? அந்த விஷயமெல்லாம் எனக்குத் தெரியாது. பிறகு... இங்க யாராவது வந்தா நீங்க என்னை அவங்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கறதும் இல்லையே!''

இவ்வாறு கூறியவாறு இல்லத்தரசி மீண்டும் தொலைக்காட்சியில் மூழ்கினாள். ஆனால், அது அதிகநேரம் நீடிக்கவில்லை. என் அருகில் வந்து நின்று ஒரு ரகசியத்தைக் கூறுவதைப்போல மெதுவான குரலில் கூறினாள்:

""பாருங்க... நான் ஒரு விஷயம் சொல்றேன். இனி கதை எழுதினா யார்கிட்டயும் காட்டக்கூடாது. இந்த வர்த்தனன் கிர்த்தனன்னு சொல்ற யாரையும் இந்தக் காலத்தில நம்பமுடியல. உங்களுடைய கதைகளை வாசித்துட்டு, அதேபோல அவங்க பேர்ல பிரசுரிச்சிடுவாங்க. இல்லன்னா, உங்க கதைகளோட தலைப்புங்களை நீங்க இல்ல- அவங்கதான் தீர்மானிக்கறதா ரகசியமா சொல்லிலிப் பரப்புவாங்க. இதெல்லாம் நமக்கு பாதிப்பு உண்டாக்கக்கூடியதுதானே?''

நான் உறுதியான குரலில் கூறினேன்:

""அதுக்கும் வாய்ப்பிருக்கு.''

அப்போது இல்லத்தரசி மிகுந்த சந்தோஷத்துடன் கூறினாள்:

"இதோ... இந்தவொரு விஷயத்திலாவது நீங்க என் கருத்தை ஏத்துக்கிட்டீங்களே!''

நான் புன்னகைக்க மட்டும் செய்தேன்.