இந்தியாவில் பற்றி எரியும் அரசியல் பிரச்னைகளை அதன் களத்திற்கே சென்று கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக துணிச்சலாக ஆவணப்படமாக எடுக்கும் மிக முக்கியமான ஆவணப்பட இயக்குநர் ஆனந்த் பட்வர்த்தன்.
இந்தியாவின் குறுக்கும் நெடுக்குமாக அதன் கலாச்சார, சமூக, அரசியல் முரண்பாடுகளையும் பிரச்னைப்பாடுகளையும் தனது கேமரா கண்கள் மூலம் உலகுக்கு வெளிச்சம்போட்டுக் காட்டிவருபவர். அதற்காகவே இவரது பல படங்களை அரசு ஊடகங்கள், தொலைக்காட்சிகள் ஒளிபரப்ப மறுப்பதும், சட்டரீதியான போராட்டங்களை நடத்தி தணிக்கை வாரியத்தின் அபத்தமான கட்டுப்பாடுகளை உடைத்து தொடர்ந்து வெற்றியும் கண்டுவருபவர்.
அதே நேரத்தில் இவரது ஆவணப் படங்கள் இந்தியாவிலும், சர்வதேச அளவிலும் பல்வேறு விருதுகளையும் கௌரவங்களையும் பெற்றுள்ளன. மதச்சார்பற்ற முற்போக்குவாதியான இவரது படங்கள் இந்துத்துவா அடிப்படைவாத செயல்பாடுகளுக்கு கடுமையான எதிர்ப்பையும் விமர்சனத்தையும் தன்னுள் கொண்டிருப்பவை.
மும்பை: எனது நகரம், நண்பர்களின் நினைவில், கடவுளின் பெயரால், தந்தை, மகன் மற்றும் புனிதப் போர், நர்மதா டைரி, போரும் சமாதானமும், ஜெய்பீம் காம்ரேட் ஆகிய படங்கள் இவருக்கு விருதுகளை தேடித் தந்த படங்களாகும். இருந்தபோதிலும் இறுக்கமான பழமைவாத பிடிவாதங்களும், மூர்க்கமான நம்பிக்கைகளும், அதுசார்ந்த அரசியல் இயக்கங்களுக்கும் மத்தியில் தனது கேமராவோடும், தனது குழுவினரோடும் துணிச்சலாக பயணம் செய்து அவற்றின் இருளடைந்த பக்கங்களின் மீது தனது கலைவெளிச்சத்தை பாய்ச்சிய துணிச்சலான திரைப் போராளி.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் 1950 பிப்ரவரி 18-ல் ஆனந்த் பட்வர்தன் பிறந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்ற அவர், பிராண்டெஸ் பல்கலைக்கழகத்தில் சமூகவிய-லும், மெக்ஹில் பல்கலைக்கழகத்தில் காட்சித் தொடர்பிய-ல் முதுகலை பட்டத்தையும் பெற்றார். மாணவப் பருவத்தி-ருந்தே அரசியல் செயல்பாடுகளில் தீவிர ஆர்வம் கொண்டிருந்தார்.
வியட்நாம் போருக்கு எதிரான இயக்கம், கிராமப்புற கல்வி வளர்ச்சி திட்டம், பீகாரில் 1974-75 களில் நடைபெற்ற ஊழல் எதிர்ப்பு இயக்கம், அதன்பிறகு 1975-77 எமர்ஜென்சி அமல்படுத்தப்பட்ட பிறகு, மனித உரிமைச் செயல்பாடுகள் என மத்திய இந்தியாவை மையமாக வைத்து தொடர்ந்து அவர் தீவிரமாக அரசியல் செயல்பாடுகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஏழை மக்களின் அடிப்படை உரிமைகள், வகுப்புவாத சக்திகளுக்கு எதிரான சமநீதிக்கான போராட்டம் என அவர் தொடர்ந்து களமாடினார்.
இதன் பின்னணியில் 1971-ல் புரட்சியின் அலைகள் என்ற ஆவணப்படத்தை எடுத்தார். பீகாரில் ஜனநாயக அமைப்புகள் மீதான, அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிரான கண்டனக் குரலை அப்படம் கொண்டிருந்தது. அதைத் தொடர்ந்து இந்திய அரசிய-ன் தகிக்கும் சமகால அரசியல்- சமூக-மத-கலாச்சார பிரச்னைகள் குறித்து தனது தீவிர திரைப்பட செயல்பாடுகளை விரைவுபடுத்தினார்.
இவரது பெரும்பாலான படங்கள் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்று விருதுகளையும், விமர்சகர்கள் மற்றும் திரை ஆர்வலர்களின் கவனத்தையும் பெற்றுள்ளது. அரசியல் செயல்பாட்டாளர்களுக்கு மிகப் பெரிய போராட்டக் கருவிகளாக இவரது படங்கள் விளங்கின. புனைவற்ற திரைப்படப் பிரிவில் மும்பை எனது நகரம் தேசிய விருதை வென்றது. சிறந்த ஆவணப்படத்துக்கான பி-ம்பேர் விருதையும் வென்றது. 90-ல் நண்பர்களின் நினைவில் ஆவணப்படம் ஒரு சிறந்த புலனாய்வுப் படம் என்ற பிரிவில் மீண்டும் ஒரு தேசிய விருதை இவருக்கு பெற்றுக் கொடுத்தது. மென்ஹெய்ம் சர்வதேச திரைப்பட விழாவில் 1992-ல் சிறப்பு நடுவர் விருதை இப்படம் பெற்றது. அதேபோல் 1996-ல் கடவுளின் பெயரால் (ராம் கே நாம்) ஆவணப்படம் சிறந்த புலனாய்வுப் படத்துக்கான தேசிய விருதையும், சிறந்த ஆவணப்படத்துக்கான விருதையும் பெற்றுத்தந்தது.
சமூக பிரச்னைகளை பேசிய சிறந்த படமாக இவரது தந்தை, மகன் மற்றும் புனித போர் 95-ல் தேசிய விருதை வென்றது. நர்மதா டைரி சிறந்த புலனாய் வுப் படத்துக்கான தேசிய விருதையும், சிறந்த ஆவணப்படத்துக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றது. 2002 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இவரது போரும் சமாதானமும் படத்துக்கு சிறந்த புனைவற்ற திரைப்படத்துக்கான விருது 2004-ல் வழங்கப்பட்டது. 6 தேசிய விருதுகள், 3 பிலிம்பேர் விருதுகள், எண்ணற்ற சர்வதேச கௌரவங்கள் என அவரது சாதனைப் பட்டியல் முடிவற்று நீண்டுகொண்டுள்ளது.
அண்மையில் அவர் உருவாக் கிய விவேக் (ரீசன்) திரைப்படம், அண்மையில் கொல்லப்பட்ட சமூக செயல்பாட்டாளர் டாக்டர். என்.ஏ. தபோல்கர், இடதுசாரி அரசியல்வாதி கோவிந்த் பன்சாரே ஆகியோரின் மரணங்களுக்கு பின்னால் உள்ள கலாச்சார தீவிரவாதத்தை அம்பலப்படுத்திக் காட்டுவதாக உள்ளது.
இதுகுறித்து ஆனந்த்பட்வர்த்தன் கூறுகையில், “தபோல்கரை தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் நன்றாக தெரியும். 2013-ல் அவர் கொல்லப்பட்ட செய்தியைக் கேட்டு அதிர்ச்சி அடைந்தேன். அதைத் தொடர்ந்து இடதுசாரி அரசியலாளர் கோவிந்த் பன்சாரே 2015-ல் சுட்டுக் கொல்லப்பட்டார். பகுத்தறிவு சிந்தனாவாதிகளான இருவரும் காலை நடைப்பயிற்சியின் போது, மோட்டார் சைக்கிளில் வந்தவர்களால் கொல்லப்பட்டனர்.
அதற்கு பிறகுதான் நான் கேமராவை எடுக்கவேண்டும் என்று மீண்டும் முடிவுசெய்தேன். அது அறிவார்ந்த போருக்கான ஆயத்தமாக இருந்தது மேலும் நாங்கள் அதுகுறித்து புலனாய்வு செய்யத் தொடங்கினோம்.
அதேபோன்ற ஒரு வகையில்தான் பேராசிரியர் எம்.எம்.கல்புர்கி மற்றும் கௌரி லங்கேஷ் ஆகியோரின் மரணங்களும் நிகழ்த்தப்பட்டுள்ளன. இப்படத்தை சுமார் 4 ஆண்டுகளாக படம்பிடித்தேன். ஒரு வெறுப்பால் உந்தப்பட்டுள்ளதால், இது வெறுமனே பகுத்தறிவுவாதிகளின மீதான கொலை மட்டுமே அல்ல என்று நாங்கள் உணர்ந்தோம். பகுத்தறிவுவாதத்துக்கு எதிரான உயர்ஜாதி பெரும்பான்மைவாத கொள்கைகளின் போக்கு ஒரு நூற்றாண்டுக்கு முன்பே தொடங்கி, தற்போது நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளுக்கும் வேகமாக பரவிவருகிறது” என்கிறார் அழுத்தமாய்.
இப்போது ஓ.டி.டி. தளங்களில் ரீசன் படத்தை வெளியிடுவது குறித்து அவர் கூறுகையில்…
”உண்மைக்கு நெருக்கமாக சென்று காட்டினால் எங்கே தங்களது நிறுவனங் கள் முடக்கப்படுமோ என்ற அச்சத்தால் ஓ.டி.டி. தளங்கள் இதை வெளியிட அதிகாரப்பூர்வமாக எப்போதும் ஒப்புக்கொள்ளாது.
அதற்கு மாறாக பார்வையாளர்கள் இதை விரும்பமாட்டார்கள் என அவர்கள் வெறுமனே கூறுகின்றனர்.
கடந்த காலங்களில் எனது படங் களை அரசின் கட்டுப்பாட்டிலுள்ள தூர்தர்ஷன் தொலைக்காட்சிக்கு நீதிமன்றம் வாயிலாக கொண்டு சென்றேன். அவர்கள் கருத்து சுதந்திரம், பொது மக்களுக்கான தகவல் பெறுவதற்கான உரிமை ஆகிய இரண்டு காரணங்களை வைத்து தூர்தர்ஷனுக்கு அழுத்தம் கொடுத்தனர்.
அதன் மூலம் நாங்கள் அனைத்து வழக்குகளிலும் வெற்றிபெற்று எனது பெரும்பாலான படங்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் தூர்தர்ஷனில் ஒளிபரப்ப செய்தோம். ஆனால் தற்காலத்தில் அதற்கான வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது. தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களைப் பொறுத்தவரையில், அவர்களை குறைந்தபட்சம் சந்தைதான் நிர்ணயிக்கிறது. உண்மையிலேயே சந்தைதான் உண்மையான தணிக்கை.
எனக்கு உயிர் பற்றிய பயம் உள்ளதா? என்ற கேள்வியை அவ்வப்பொழுது சந்திக்கிறேன்.
ஆனால் உண்மையில் எனக்கு அச்சமில்லை. கிடையவே கிடையாது. ஆனால் இது முற்றிலும் சிந்திக்க முடியாததல்ல. ஏனெனில் என்னைவிட ஒவ்வொரு நாளும் அதிக ஆபத்தைச் சந்திக்கும் மக்களை பற்றி நான் படமெடுக்கிறேன். அவர்கள் தங்களது மனசாட்சியின் மூலம் தங்கள் கடமையிலிருந்து ஒருபோதும் பின்வாங்குவதில்லை.”
என பத்திரிக்கை பேட்டியில் இப்படம் குறித்து தனது உறுதியான கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகத்தின் பிற்போக்குத்தனம், மத அடிப்படைவாத வன்முறைகள், கலாச்சார மேலாதிக்கம் ஆகியவற்றுக்கு எதிரான அவரது மதச்சார்பற்ற, பகுத்தறிவுவாத குரலை தனது ஆவணப்படங்களின் மூலம் மக்களின் மனதில் ஓயாமல் ஒலிக்கச் செய்து, இந்திய மனங்களின் மனசாட்சியை தட்டி எழுப்புபவராக ஆனந்த் பட்வர்த்தனின் செயல்பாடுகளும், அவரது கலை ஆக்கங்களும் நிச்சயம் என்றென்றும் திகழும்.