மூத்தவர் எல்லாம் அண்ணன் ; இளையவர் எல்லாம் தம்பி. இதுதான் நக்கீரன் பத்திரிகை ஊழியர்களிடையே உள்ள உறவுமுறை. இது அதன் ஆசிரியர் அண்ணன் ‘நக்கீரன்’ கோபால் ஏற்படுத்திய கலாசாரம். நக்கீரன் அலுவலகத்தை ஓர் அலுவலகம் என்று கூறுவதை விட, நல்லதொரு குடும்பம் என்றுதான் கூறத் தோன்றுகிறது.
உலகத்துக்கு அவர் கோபால் அண்ணாச்சியாக இருந்தாலும் அவர் எங்கள் ஊரின் மாப்பிள்ளை. விருத்தாசலத்தைச் சேர்ந்த ஆர்.எஸ். பாண்டியன் என்ற அரசியல் பிரமுகரின் மகளைத்தான் அவர் மணம் முடித்தார். ஆர்.எஸ். பாண்டியன் அதிமுக பிரமுகர் என்பதுதான் ஆச்சரியம்.
எங்கள் ஊர் மருமகன் என்பதால் எனக்கு அவர் மீது கூடுதல் பிரியம். ஆனந்தவிகடனில் இருந்தபோதே அவரைச் சிலமுறை பேட்டிக்காகச் சந்தித்திருக்கிறேன். விகடனிலிருந்து நான் பணி விலகிய பிறகு அடுத்து என்ன என்ற திட்டமின்றியே வெளியே வந்தேன். நெருக்கடியான குழப்பமான அந்த நேரத் தில்தான் அண்ணனைச் சந்தித்தேன்.
உடனே அவர் தயங்கா மல் கூறினார். ‘ஓ.கே.
தம்பி. நாம புதுசா ஒரு பத்திரிகை ஆரம்பிக்கலாம். எந்த மாதிரி பத்திரிகையா இருக்கலாம்? டம்மி போட்டுக் கொடுங்க...’ என்றார். அன்றே நான் களம் இறங்கினேன். பழைய புத்தகக் கடைகளுக்கெல் லாம் சென்று நிறைய ஆங்கில இதழ்களை வாங்கி னேன். இரண்டு நாட்கள் மிகவும் ஆர்வத்துடன் மெனக்கிட்டு மூன்று டம்மிகள் தயாரித்தேன். மூன்றும் மூன்று ரகம். நானே படங்களை வெட்டி ஒட்டி, தலைப்புகளும் எழுதி மூன்றையும் உருவாக்கினேன். ஒன்று பல்சுவை வார இதழ் ஃபார்மெட். இன்னொன்று வார நாவல். மூன்றாவது சிறுகதைகளுக்கான இதழ்.
சிறுகதைகளுக்கான டம்மி அவருக்குப் பிடித்து விட்டது. ‘இது நல்லாருக்கு தம்பி. இதையே வெச்சுக்கலாம்... டைட்டில் சிறுகதைக் கதிர்னு வெச்சுக்கலாமா?’ என்று கேட்டார். ‘நல்லா இருக்கண்ணே...’ என்று சொன்னேன். என் பலம் சிறுகதை எழுதுவது என்பதால் அந்தத் தேர்வு எனக்கும் பிடித்திருந்தது.
‘அப்ப வேலையை ஆரம்பிச்சுடுங்க... எழுத்தாளர்கள்கிட்டேருந்து கதைகள் வாங்கி, ஆர்ட் டிஸ்ட்களிடம் படத்துக்குக் கொடுத்துடுங்க...’ என்றார்.
நான் உற்சாகத்துடன் கிளம்பினேன். போகும் போதே மனதுள் திட்டங்கள் ஓடின. சிறுகதைகள் மட்டும் வெளியிட்டால் போரடித்து விடுமே... எனவே சிறுகதைகளை வகை வகையாகப் பிரித்துக் கொண்டேன். ஒரு கதைக்கும் அடுத்த கதைக்கும் தொடர்பே இருக்கக் கூடாது. ஒன்று நகைச்சுவை, அப்புறம் காதல், அடுத்து அரசியல், அதற்கடுத்து சென்டிமெண்ட் என்று கதைகள் கலவையாகச் செல்ல வேண்டும் என்று முடி வெடுத்து, எழுத்தாளர்களிடம் எந்த மாதிரி கதைகள் வேண்டுமென்று கேட்டு, கேட்டு வாங்கினேன். அட்டைப் படத்துக்கேற்ப ஒரு கதை. அதுதான் கவர்ஸடோரி. அதை நானே எழுதினேன்.
முன்பு இதயம் பேசுகிறது இதழ், ‘சிறுகதைக் களஞ்சியம்’ என்ற ஒரு பத்திரிகையை தாமரை மணாளனை ஆசிரியரா கக் கொண்டு வெளியிட் டது. அது கைவசம் இருந்தால் ரெஃபரென் சுக்கு உதவியாக இருக்கும் என்று தோன்றவே, கோபால் அண்ணனிடம் அதுகுறித்துக் கூறிய போது, ‘டோன்ட் ஒர்ரி தம்பி... இன்னும் ரெண்டு நாளில் அது உங்க கையில் இருக்கும்...’ என்றார். அதேபோல் பல வருடங்களுக்கு முன்பு வெளிவந்த சிறுகதைக் களஞ்சியத்தின் மொத்தப் பிரதிகளும் என் கைக்கு வந்து சேர்ந்தது. பிரமித்துப் போனேன். பிறகுதான் தெரிந்தது நக்கீரன் தவிர, அவர் எல்லாப் பத்திரிகைகளை யும் வாங்கிப் பாதுகாத்து ஃபைல் செய்யும் ரகசியம்.
மளமளவென்று வேலையில் இறங்கினேன். அட்டை வித்தியாசமாக இருக்க வேண்டும். அது நக்கீரன் அட்டை போல கொஞ்சம் ஜிம்மிக்ஸ் கலந்திருக்க வேண்டும் என்றார். அதேபோல் அட்டையில் டபுள் ஆக்ஷன் குஷ்பு படம் இடம் பெற்றது. அட்டையை வடிவமைத் தவர் கோபால். நக்கீரன் அட்டையையும் அவர் தான் வடிவமைப்பார். எந்த வேலை இருந்தா லும் வெளியூரிலே இருந்தாலும் கூட விமானத் திலாவது வந்து அந்த வேலையை முடிப்பார்.
முதல் இதழ் பரபரப்பாக வெளியானது. அந்த ஃபார்மெட் புதிது. முழு கமர்சியல் இதழாக அது இருந்தது. சிறுகதைகளும் நடு நடுவே நகைச்சுவைத் துணுக்குகளுமாக கலகல வென்றிருந்தது இதழ். முதல் இதழே 31 ஆயிரம் பிரதிகள் அச்சிடப்பட்டன. மூன்றாவது இதழ் 45 ஆயிரம் பிரதிகள். அதில் ராஜேஷ்குமார் எழுதிய ‘ரஜினி ராஜ்யம்’ என்கிற தொடர் ஆரம்பமானது. இந்த ஐடியாவும் புதிது. ரஜினியை ஹீரோவாக வைத்து வாரவாரம் ஒரு கதை. சிபிஐ அதிகாரியான ரஜினிகாந்த் தமிழகத்தின் ஒவ்வொரு ஊரிலும் ஒரு வாரம் துப்பறிவது மாதிரி கதை. ஒரு விஷயத்தை விளம்பரப்படுத்துவதில் கோபால் திறமையான வர். அந்தக் கதையையொட்டி ரஜினிகாந்த் அவர்களையும் ராஜேஷ்குமாரையும் சந்திக்க வைத்தார். அவற்றை வைத்து போஸ்டர்கள் அடித்து பிரமாதப்படுத்தியிருந்தார். இது தவிர, ஒவ்வொரு இதழ் வெளிவரும்போதும் எந்தெந்த ஊரில் ரஜினி துப்பறிகிறாரோ அந்தந்த ஊரில் பெரிய சைஸ் போஸ்டர். அவர் திருச்சியில் துப்பறிந்தால் திருச்சியில் ரஜினி. சேலம் என்றால் சேலத்தில் ரஜினி என்று போஸ்டர் கள் களை கட்டின. பரபரப்பூட்டின. இது சிறுகதைக்கதிருக்கு நல்ல விளம்பரமாக அமைந்தது.
நான் பணியில் சேர்ந்த நேரம் நக்கீரனுக்குச் சோதனையான நேரம். அப்போது க. சுப்பு எழுதிய ‘இங்கேயும் ஒரு ஹிட்லர்’ தொடர் நக்கீரனில் வெளிவந்து கொண்டிருந்தது. அந்தத் தொடரால் கோபமடைந்த அப்போதைய ஆளுங்கட்சியான அதிமுக, ஹாரிங்டன் சாலையிலிருந்த நக்கீரன் அலுவலகத்தின் மின்சார இணைப்பு, தண்ணீர் இணைப்பு என்று அனைத்தையும் துண்டித்து விட்டது. கோபாலைக் கைது செய்யும் முயற்சியிலும் அரசு இறங்கியிருந்தது. போலீஸ் கிராப் கட்டிங், முறுக்கு மீசையுடன் மஃப்டி போலீஸ்கார்கள் பருந்துகள் போல் நக்கீரன் அலுவலகத்தைச் சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்தார்கள். அவர் ஆபீஸ் வந்தால் அவரைக் கைது செய்வதுதான் திட்டம். இது ஒருபுறம் என்றால் இன்னொருபுறம்
நக்கீரன் அச்சாகும் அச்சகத்துக்குப்போய் அதன் பிரதி களை காவல்துறை கைப்பற்றியது. என்றாலும், ரகசியமாக பிளேட்டை இடம்மாற்றி, வேறொரு பிரசில் அச்சடித்து மறுநாள் வழக்கம்போல் நக்கீரனைக் கொண்டு வந்தார் கோபால்.
இதுகுறித்து, அவர் அப்போது என்னிடம் கூறும்போது, ‘மக்கள் நம்மேல வெச்சிருக்கிற நம்பிக்கை முக்கியம் தம்பி. இந்த இஷ்யூ கடைக்கு வர்லேன்னா, அவ்வளவுதான். இனிமே இவங்களால தாக்குப் பிடிக்க முடியாதுன்னு நினைச்சுடுவாங்க... நாம நின்னு காட்டணும்...’ என்றார். அதிகாரத் துக்கு எதிரான களத்தில் மாவீரனாய் நின்றும் காட்டினார்.
அரசு கைது செய்ய அவரைத் தேடியபோது, அவரைப் பார்க்கவே முடியாது. வீட்டிலும் இருக்க மாட்டார். ஆபீசும் வரமாட்டார். ஆபீஸ் மேனேஜர் சுரேஷுருக்கு எங்கிருந்தாவது
போன் வரும். சில சங்கேத வார்த்தைகளால் கோபால் தகவல் தருவார். சுரேஷ் அவர்
இருக்கும் இடத்தை என்னிடம் ரகசியமாகக் கூறுவார். நான் அங்கு சென்று இஷ்யூ பற்றி விவாதித்துவிட்டு வருவேன்.
சிறுகதைக் கதிர் நன்றாக வந்து கொண்டி ருந்தது. அது ஐம்பதாயிரத்தை விரைவில் கிராஸ் செய்து விடும் என்பது
தான் அப்போதைய நிலைமை. ஆனால், விதி வேறு மாதிரி இருந்தது. அது குறித்து கட்டுரையின் இறுதியில் கூறுகிறேன்.
இப்போது, அண்ணனிடம் நான் கற்றுக் கொண்டவற்றைப் பற்றி முதலில் கூறுகிறேன். நான் அப்போது ஆனந்த விகடனிலிருந்து வந்ததால் எடிட்டோரியல் மட்டுமே பத்திரிகை என்ற ‘தெனாவட்டு’ எனக்கு உண்டு. நக்கீரன் நிறுவனத்தில் பணிக்கு வந்த பிறகும் எனக்கு அந்த மனோபாவம் மாறவில்லை. ஆனால், நக்கீரனைப் பொறுத்தவரை எடிட்டோரியலும் பத்திரிகையில் ஓர் அங்கம். பக்கங்கள் லே அவுட் முடிந்து சென்ற பிறகு இன்னொரு பெரிய உழைப்பாளிகள் உலகம் பத்திரிகை யைக் கடையில் விற்பனைக்குக் கொண்டு வருவதற்காக அரும்பாடுபடுகிறது என்பதே எதார்த்தம். ஆனால், நான் அதை உணர் வதில்லை. என் வழி தனி வழியாக இருந்தது. யாரையும் மதிக்க மாட்டேன்.
நக்கீரன் தொடங்கப்பட்டதிலிருந்து அவருடன் இருக்கும் சில சீனியர்களையே நான் கிண்டல் செய்திருக்கிறேன். மனம் புண்படும்படி பேசியிருக்கிறேன். ஆனால், கோபால் அது குறித்து ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்ட தில்லை. அதேநேரம், எடிட்டோரியல் மட்டுமே ஒரு பத்திரிகை அல்ல என்பதை எனக்குப் பல்வேறு சந்தர்ப்பங்களில் அவர் உணர்த்தினார் கோபால். உணர்த்தினாரே தவிர, அவர் எதையும் நேரடியாக வார்த்தைகளாக என்னிடம் கூறியதில்லை. ஒவ்வொன்றையும் நாசூக்காக, வலியில்லாமல் உணர்த்தினார் அண்ணன். அது அவரது திறமையான நிர்வாகத்துக்குச் சான்று.
‘வாங்க தம்பி...’ என்ற அழைப்பார். அவர் ஜீப் திருவல்லிக்கேணியின் சின்ன சின்ன சந்து பொந்து களுக்குள் நுழைந்து விரையும். ஒரு பிரஸ் முன் நிற்கும். உள்ளே போனால் அங்கு சுமார் இருபது பேர். அங்கு நக்கீரன் இதழ் பின்னிங் நடந்து கொண்டிருக்கும். ‘எவ்வளவுப்பா ஆச்சு?’
’25 ஆயிரம்ணே....’
‘டைம் இல்லே... சீக்கிரம்... சீக்கிரம்...’ முடுக்கிவிட்டு, அடுத்த பிரசுக்குப் பறக்கும் ஜீப். இது போல ஐந்து இடங்களில் பின்னிங் நடக்கும். ஒவ்வொரு இடத்திலும் இருபது பேர் பின் அடித்துக் கொண்டிருப்பார்கள். ஆபீஸ் திரும்பியதும் சொல்வார்.
‘இவங்க முக்கியம் தம்பி. பின்னிங் லேட் ஆச்சுன்னா பார்சல் லேட்டாகும். அப்புறம் ரெயில்ல டைமுக்குப் பார்சல் சேர்க்க முடியாது. மறுநாள் புத்தகம் கடைக்குப் போகாது... ரொம்ப அவசரப்படுத்தினாலும் ஏடா கூடமா பின் அடிச்சுடுவாங்க. அப்புறம் புத்தகம் வாங்கினவங்கல்லாம் அதைப் பிரிச்சுப் படிக்க முடியலைன்னு சொல்லித் திருப்பிக் கொடுத்துடு வாங்க...’ என்று கூறிவிட்டு, அவர் தன் வேலை களைப் பார்க்க ஆரம்பித்து விடுவார். என்னை அவர் ஏன் அழைத்துப் போனார். பின்னிங் அடிக்கும் இடத்தைப் பார்ப்பதில் எனக்கென்ன கற்றுக் கொள்ள இருக்கிறது என்று யோசித்த போதுதான், அழுக்கு உடையுடன், இரவு, பகல் பாராமல் பத்திரிகைக்குப் பின் அடிக்கும் அந்த ஊழியர்கள்மேல் இனம் தெரியா பாசம் உருவாகியிருந்தது.
இன்னொருநாள் பிரிண்டிங் மேனேஜர் கௌரி நாதனுடன் பிரசுக்குப் போய்ப் பாருங்கள் என்பார். பார்ப்பேன். கட கட என்று காட்டுச் சத்தமாக பிரஸ் ஓடிக் கொண்டிருக்கும். பேப்பர் ரீல் மாற்றுவது, பிளேட் கிளீன் செய்வது, ஃபிலிம் ஸ்ட்ரிப்பிங், பிளேட் மேக்கிங் என்று அங்கு முப்பதுக்கும் மேற்பட்டவர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பார்கள்.
அதன் பிறகு பிராசஸ்... இப்படி பத்திரிகைத் தொடர்பான அனைத்து ஏரியாக்களுக்கும் அவர் என்னை அடிக்கடி அழைத்துச் சென்றார். எதையும் அவர் உத்தரவாகச் சொன்னதே இல்லை. ஒருமுறை கோயமுத்தூருக்கு எழுத்தாளர் ராஜேஷ்குமாரைப் பார்க்கச் சென்னையிலிருந்து அவரது கன்டெஸா காரிலேயே சென்றோம். செல்லும் வழியெங்கும் அவர் நக்கீரன் இதழ், அதன் வளர்ச்சி என்று விரிவாகப் பேசிக் கொண்டே வந்தார் (இருபதாண்டு களுக்கு முன்பு பேசியது. நினை விலிருந்து முடிந்தவரை கொண்டு வர முயல்கிறேன்). லேஅவுட் ஆர்ட்டிஸ்டாக தொடங்கிய வாழ்வு... படிப் படியாக முன்னேற்றம். ஒரே நாளில் எதுவும் சாத்திய மில்லை. இன்று ஆனந்த விகடன் பொன் விழா கண்ட பத்திரிகை என்ற பெருமை இருக்கலாம். இன்னும் பத்தாண்டுகள் கழிந்து நமக்கும் அந்தப் பெருமை கிடைக்கும். நமக்கும் பாரம்பரியம் ஏற்படும். அதுவரை நாம் ஓயாமல் இயங்கிக் கொண்டே இருக்க வேண்டும்.
நக்கீரன் ஆரம்பிக்கும்போது, அவர் கையில் இருந்த தொகை வெறும் நாலாயிரம் ரூபாய் மட்டுமே. நண்பர்கள், பிரஸ்காரர் ஒத்துழைப்பு டன் முதலில் 11 ஆயிரம் பிரதிகள்தான் நக்கீரன் பிரிண்ட் செய்யப்பட்டு கடைக்கு வந்தது. அடுத்த சில வருடங்களிலேயே அது இரண்டு லட்சம் பிரதிகளைத் தாண்டி விற்கக் காரணம், தான் மட்டும் இல்லை. எடிட்டோரியலின் உழைப்பு மட்டுமில்லை. பிரஸ் ஊழியர்கள், பார்சல் கட்டுபவர்கள், புத்தகப் பார்சலை பத்திரமாக ரயிலில் போய் டெஸ்பாட்ச் செய்பவர்கள், காலையில் பார்சலைப் பிரித்துக் கடைக்கு அனுப்பும் முகவர், கடைக்காரர் இவர்கள் அனைவரின் கூட்டு முயற்சிதான் இந்த வெற்றிக்குக் காரணம். இதில் யாராவது ஒருவர் சோர்ந்தாலும், சொதப்பினாலும் மொத்த ஷோவும் சொதப்பிவிடும் என்று பத்திரிகையை ஒட்டிய மற்ற ஊழியர்களின் உழைப்பை, அர்ப்பணிப்பை வாயாரப் புகழ்ந்து கொண்டே வந்தார். அவர் பேச்செல்லாம் எதிர்காலத்தைப் பற்றியதாகவே இருந்தது.
கோயமுத்தூரில் நக்கீரன் முகவர் வெங்கடாசலத்தைச் சந்திக்க அழைத்துச் சென்றார். வெங்கடாசலத்திடம் அவர் ஒரு முதலாளி மாதிரி பேசவில்லை. கோபால்தான் வெங்கடாசலத்தை ‘சொல்லுங்க முதலாளி...’ எனறார். அப்போது, வெங்கடாசலத்தின் முகத்தில் வெட்கம் கலந்த சந்தோஷம். விடிகாலை மூன்றரை மணிக்கு எழும் வெங்கடாசலம் ஜங்ஷனுக்குப்போய் கட்டுகளை எடுத்துக் கொண்டு, கடைகளுக்கு டெஸ்பாட்ச் செய்து முடிக்க நண்பகல் பதினொரு மணி ஆகிவிடும் என்றெல்லாம் பத்திரிகைக்கு அவரது பணிப் பங்களிப்பை விவரித்தார். அந்த நிகழ்வுகள் எல்லாம் இயல்பாக நடப்பது போன்றே இருந்தன. ஆனால், எனக்குள் அவை பெரும்பாதிப்பை ஏற்படுத்தின. கொஞ்சம் கொஞ்சமாக எனது மனோபாவம் மாறத் தொடங்கியிருந்தது. பத்திரிகை என்பது கூட்டு முயற்சி என்பதை உணர வைத்தவர் அண்ணன் கோபால். அவரிடம் பணியில் சேர்வதற்கு முன் எனக்குக் கொம்பு முளைத்திருந்தாக நம்பிக் கொண்டிருந்தேன். அண்ணன் அந்தக் கொம்பை ஒடித்தெறிந்தார் - வலியில்லாமல். அப்புறம் என்ன? நக்கீரன் ஆபீஸில் இருந்த எல்லோரும் எனக்கும் அண்ணன், தம்பிகள் ஆனார்கள்.
மீண்டும் சிறுகதைக்கதிருக்கு வருகிறேன். அடுத்து 50 ஆயிரம் தொட வேண்டிய இதழ்... அந்தக் காலக் கட்டத்தில் ஓர் எழுத்தாளரை பேட்டியெடுக்க நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்குச் சென்று சந்தித்தேன். அப்போது அந்த எழுத்தாளர் ஒரு சினிமாவுக்கு வசனம் எழுதிக் கொண்டிருந்தார். அவரிடம் பேசி முடித்து விட்டு வெளியே வந்த பிறகு, எனக்குள் இனம் புரியாத குழப்பம். நமக்கும் நன்றாக எழுத வருகிறது. நாம் முய்ன்றாலும் சினிமாவில் ஜெயிக்க முடியும். ஏஸி ரூமில் உட்கார்ந்து கொண்டு நாமும் பத்திரிகைக்குப் பேட்டி கொடுக்கலாம் என்றெல்லாம் எண்ணங்கள்.
ஏற்கெனவே எனக்குச் சினிமா ஆசை உண்டு என்பதால், அந்த நேரத்தில் அந்தச் சபலம் என்னுள் பெரிதாக வளரத் தொடங்கியது. பத்திரிகையில் என் கவனம் தவறத் தொடங்கியது. அதன் உள்ளடக்கத்தின் வீரியம் குறையத் தொடங்கியது. இந்த மனக்குழப்பம் சுமார் ஒரு மாதம் நிலவியது. இந்நிலையில்தான் ‘விஷ்ணு’ என்கிற விஜய் நடிக்கும் படத்துக்காக நான் போய் அதன் தயாரிப்பாளர் மறைந்த ஆஸ்கார் பாஸ்கர் மற்றும் இயக்குநர் எஸ்.ஏ. சந்திர சேகரனிடம் கதை சொன்னேன். இந்த விஷயம் தெரிந்தோ என்னவோ கோபால் சிலநாட்கள் கழித்துக் கூப்பிட்டார். போனேன். ‘நக்கீரன் பத்திரிகை இப்போ ரெண்டே முக்கால் லட்சம் பிரிண்ட் ஆகுது தம்பி. அதுக்கு இன்னும் நிறைய டிமாண்ட் இருக்கு (அப்போது சந்தன வீரப்பன் தொடர் வந்து கொண்டிருந்தது). சிறுகதைக் கதிரை தற்காலிகமா கொஞ்சநாள் நிறுத்திடு வோம். இதுக்குப் பயன்படுத்தும் பேப்பரையும் நக்கீரனுக்குப் பயன்படுத்துவோம்... நக்கீரன் சர்க்குலேஷனை மூணு லட்சத்தைத் தாண்டி கொண்டுபோய் நிறுத்துவோம்... நீங்க விரும்பினால் நக்கீரனில் வேலை பார்க்கலாம்...’ என்றார். எனக்குச் சங்கடமாக இருந்தது.
‘எனக்கு அந்தப் பதட்டமான பரபரப்பு சரிப்படாது அண்ணே...’ என்றேன். அதன்பிறகு, மறுநாள் பணி விலகல் கடிதம் கொடுத்தபோது, அவர் சொன்னார். ‘தம்பி... உங்களுக்கு சினிமா துறையிலே ஈடுபடணும்கிற ஆர்வம் இருக்குன்னு கேள்விப்பட்டேன். இருக்கிறதை விட்டுட்டுப் பறக்கிறதுக்கு ஆசைப்படறீங்க... எனிவே, வெற்றி பெற வாழ்த்துக்கள்...’ என்றார்.
எனது சினிமா முயற்சி என்ன ஆனது என்பது தனிக்கதை. நான் பணியிலிருந்து விலகினாலும் என்றும் அவர் என் மீது வெறுப்பையோ, கோபத்தையோ காட்டிய தில்லை. எப்போதும் என் மனம் புண்படும்படி யாக நடந்து கொண்டதுமில்லை. எதையும் குறிப்பால் மட்டுமே எனக்கு உணர்த்தினார். என் மனோபாவத்தையும் மாற்றினார்.
நான் அப்போது, கொஞ்சம் திசை மாறாமல் இருந்திருந்தால் தமிழில் குறிப்பிட்டுச் சொல்லப் படும் ஒரு பத்திரிகையாக சிறுகதைக் கதிர் இதழ் நிச்சயம் இன்று இருந்திருக்கும். ஆனால், காலம் போடும் பாதையை யாரால் மாற்ற இயலும்?
கோபால் அண்ணனை இப்போது பார்த்தாலும் அவரது கண்களைப் பார்த்து என்னால் பேச முடிவதில்லை.
ஸாரி அண்ணே..!