குளிர் நிறைந்த ஒரு விடுமுறை நாளன்று சாயங்கால வேளையில் கம்பளிக்குள் வாசித்தவாறுகொண்டிருக்க, தலையணைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த தொலைபேசி ஒலித்தபோது, அது அனாமிகாவாக இருக்குமெஎன்று அவனுக்குத் தோன்றியது.

அது... அனாமிகாவேதான். அவள் கூறினாள்:

""சுமீத்... உங்களை நான் மிகவும் அவசரமாக கொஞ்சம் பார்க்கணும். சகித்துக்கொள்ளமுடியாத ஒரு நிலையில் நான் இருக்கிறேன். என்ன செய்யவேண்டும் என்றே எனக்குத் தெரியவில்லை. நான் சிரமப்பட்டுக் கொண்டிருக்கிறேன். நான் உடனடியாக அங்கு வரட்டுமா? நீங்கள் ஏதாவது முக்கிய வேலையில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறீர்களா?''

படுத்திருந்த அதேநிலையில் வலதுகையில் முகத்திற்கு நேராகத் திறந்து பிடித்திருந்த புத்தகத்துடன், சுமீத் இடதுகையில் தொலைபேசியை முகத்தின் பக்கவாட்டில் சேர்ந்துவைத்தவாறு கூறினான்:

Advertisment

""உனக்கு என்ன பிரச்சினை? நீ மீண்டும் அபிமன்யுவுடன் சண்டை போட்டுட்டியா? எல்லாம் வசதிகளுடனும் வாழ்ந்து கொண்டிருக்கக்கூடிய நீ சிரமப்படுவதற்கு வேறு எந்தவொரு விஷயமும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. பணமும் கல்வியும் நல்ல உடல்நலமும் அழகும் உள்ள ஒரு இளம்பெண் தான் சிரமப்படுவதாக யாரிடமாவது கூறுகிறாளென்றால், நிச்சயம் அதற்கு ஒரு ஆண்தான் காரணமாக இருப்பான் என்பதை என்னால் யூகித்துவிடமுடியும். என் யூகம் தவறில்லையே?''

""சுமீத்... உங்களுக்கு எந்தச் சமயத்திலும் தவறு நேராது. அதனால் தான் இந்த நிமிடம் உங்களை வந்து பார்ப்பதற்கு நான் விரும்பு கிறேன். நீங்கள் என்ன செய்றீங்க? வீட்டில் தனியாகவா இருக்குறீங்க? நான் உடனடியாக புறப்பட்டு வரட்டுமா? உங்களால் மட்டுமே எனக்கு உதவி செய்யமுடியும். நான் இதோ... வந்துட்டேன்.''

ss

Advertisment

அவன் தொலைபேசியின் ஏரியலை இறக்கி, அதை படுக்கை யில் வைத்துவிட்டு, திறந்து கிடந்த புத்தகத்தை நெஞ்சின்மீது கவிழ்த்து வைத்தவாறு, சிந்தனையில் மூழ்கிப் படுத்திருந்தான். அவனுடைய கம்பளிக்குள் வெப்பம் இருந்தது. சாளரத்தின் கண்ணாடிக் கதவிற்கு அப்பால் குளிர்ந்து நடுங்கியவாறு நின்று கொண்டிருந்த நாவல் மரத்தை படுத்த நிலையிலேயே அவனால் பார்க்கமுடிந்தது. அதற்குமேலே தூரத்தில் புகையைப்போல பரவி விளையாடிக்கொண்டிருந்த ஆகாயத்தையும் அவனால் பார்க்கமுடிந்தது.

ஐந்தாவது தளத்தில் இந்த பெரிய ஃப்ளாட்டில் தனியாக வசிக்கக்கூடிய திருமணமாகாத அவன் தன்னுடைய ஓய்வு நேரத்தின் பெரும்பாலான பகுதியைச் செலவழிப் பது இந்த கம்பளிக்குள்தான். கம்பளியை தன் சரீரத்திலிருந்து அவன் வேகமாக எடுத்து, குளியலறைக்குள் சென்று முகத்தைக் கழுவிவிட்டு, தன்னுடைய அலங்கோலமான தலைமுடியை வாரி சரிசெய்துவிட்டு, ஒரு சிகரெட்டுடன் மாடிக்குச் சென்று நின்றபோது, கீழே பரபரப்பான சாலையின் ஓரத்தில் மரங்களின் இருண்ட நிழல் விழுந்த நடைபாதையின் வழியாக, புடவைக்கு மேலே ஒரு கோட் அணிந்து அவள் வேகமாக நடந்துவருவதைப் பார்த்தான்.

குளிரின் ஈரம் விழுந்த கோட்டைக் கழற்றா மல் அவள் ஸோஃபாவில் சாய்ந்தாள்.

""உனக்கு நான் கொஞ்சம் வோட்காவில் நிறைய தக்காளி ஜுஸ் ஊற்றி உப்பு போட்டுக் கலக்கி, ஒரு ப்ளடிமேரி தயார் பண்ணித் தரட்டுமா? உனக்கு மிகவும் குளிர்கிறது என்ற விஷயம் உன் முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது.''

""எனக்கு எதுவும் வேண்டாம். அன்பு மட்டும் போதும். அபிமன்யு தேவைப்படும் அளவிற்கு என்மீது அன்பு செலுத்துவதில்லை. வீரியம் அதிகமாக இருக்கக்கூடிய மருந்தை சரியாக அளந்து சாப்பிடுவதைப்போல, அந்தந்த நேரத்திற்கும் அளந்து அளந்தும் அவர் என்மீது அன்பு செலுத்துகிறார். சிறிதும் அதிகமாகவுமில்லை... குறைவாகவுமில்லை. என்னால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை. என்மீது சிறிதும் அன்பு செலுத்தாமலிருப்பது இதைவிட நல்லது. ஒரு சிந்தனையாளருடனோ எழுத்தாளருடனோ வாழ்க்கையைப் பங்குபோட்டுக்கொள்ளவேண்டும் என்று ஏங்கிய எனக்கு வாய்த்தவர் ஒரு சார்ட்டர்ட் அக்கவுண்டன்ட்.''

""அனாமிகா... அபிமன்யுவும் ஒரு கவிஞர்தான். எழுத்துக்களுக்குப் பதிலாக அவர் எண்களை எடுத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் என்பது மட்டுமே ஒரு வேறுபாடு. இந்த ஒரு சிறிய வேறுபாட்டினை நீ ஒப்புக்கொள்ளவேண்டும். உன் கணவருடன் சில சிறிய சமரசங்களைச் செய்துகொள்வதற்கு தயாராக இருக்கவும் வேண்டும். அப்படியென்றால், இனிமையான ஒரு குடும்ப வாழ்க்கையை உங்கள் இருவராலும் வாழமுடியும் என்பதை என்னால் உறுதியாகக் கூறுமுடியும்.''

அவன் தான் விசேஷமான கலவைகளைச் சேர்த்து உண்டாக்கிய ஒரு குவளை ப்ளடிமேரியை அவளுக்குக் கொடுத்துவிட்டு, தன் குவளையை கையில் ஏந்தியவாறு அவளுக்கு எதிரிலிருந்த இன்னொரு ஸோஃபாவில் அமர்ந்தான். அவள் ஈரம் விழுந்திருந்த கம்பளிக் கோட்டினைக் கழற்றாமல் கண்ணாடிக் குவளையுடன் குனிந்து அமர்ந்திருந்தாள்.

""உன் ஈரம் விழுந்த கம்பளிக் கோட்டினைக் கழற்றி வைப்பதற்கு உனக்கு நான் உதவட்டுமா?'' அவன் கேட்டான்.

அவன் அவளுடைய கோட்டைக் கழற்றி ஹேங்கரில் தொங்கவிட்டான். அவளுடைய சரீரத்திலிருந்து விலகிய பிறகு, அந்த கோட்டிற்கு அதனுடைய அழகு மட்டுமல்ல... அதன் முக்கியத்துவமும் முழுமையாக இழக்கப்பட்டு விட்டதைப்போல அவனுக்குத் தோன்றியது அதே நேரத்தில்- அவளுடைய சரீரம் தன்னுடைய வளைவு களையும் முழுமையான அழகையும் அருமையான அசைவு களையும் வெளிப்படுத்தி, மேலும் அழகுள்ளதாகத் தெரிந்தது.

""நான் அபிமன்யுவின்மீது அன்பு வைத்திருக்கிறேன். அதனால்தான் நான் இப்படி கஷ்டப்படுகிறேன். அந்த விஷயம் எனக்கு நன்றாகத் தெரியும். ஆனால், என் கணவர்மீது அன்பு செலுத்தாமல் என்னால் இருக்க முடியாது. எந்த அளவுக்கு கஷ்டப்பட்டாலும், எந்த அளவுக்கு தாங்கிக்கொள்ள வேண்டியதிருந்தாலும், நான் அபிமன்யுவின்மீது அன்பு செலுத்தவே செய்வேன்.''

அவளுடைய கண்கள் ஈரமாகவும், அந்த ஈரத்தில் பிரகாசமான சாளரங்கள் பிரதிபலிக்கவும் செய்தன.

""இன்று இப்படியெல்லாம் தோன்றுவதற்கு என்ன காரணம்? எப்போதும் நடக்காத ஏதாவது இன்று நடந்துவிட்டதா?''

அவள் அவனுடைய கேள்விக்கு பதில் கூறாமல், ப்ளடிமேரியை ஒரு மடக்கு குடித்தாள். தக்காளிச் சாறின் நிறம் அவளுடைய கீழுதட்டில் நனைந்து பரவியது. அவளுடைய கண்களில் சாளரத்தின் பிரதிபலிப்பு உருண்டையாகத் திரண்டு ஒரு கண்ணீர்த் துளியாக கன்னத்தில் உருண்டு விழுந்தது. கன்னத்தில் பதிந்து கிடந்த சாளரத்துடன் அவள் கூறினாள்:

""நான் பள்ளிக்கூட மாணவியாக இருந்த காலத்தைப் பற்றி நேற்று நான் நிறைய நினைவில் மூழ்கினேன்.

அன்று என்னுடைய படுக்கையில் நானும் என் பாடப் புத்தகங்களும் என் ம்யூஸிக் கேசட்டுகளும் மட்டுமே... படுக்கையிலிருந்த அந்த சுதந்திரத்தைப் பற்றி சிந்தித்து என் தலைக்கு பைத்தியமே பிடித்துவிட்டது. திருமணமானவுடன் அந்த சுதந்திரம் எனக்கு இல்லாமற்போனது. நான் அபிமன்யுவிடம் கூறினேன்: ""ஒரு இரவிற்காவது அந்த சுதந்திரத்தை எனக்குத் திரும்பத் தாருங்கள். சிறிதாக சுற்றிக்கொண்டிருக்கும் காற்றாடிக்குக் கீழே வெண்ணிற விரிப்பு விரிக்கப்பட்டிருக்கும் படுக்கையில் நானும் என் புத்தகங்களும் கேஸட்டுகளும் மட்டும்... ஒரு இரவு மட்டும்... ஒரே ஒரு இரவு...'' நான் அபிமன்யுவிடம் கெஞ்சினேன்.

""பிறகு... அபிமன்யு என்ன சொன்னார்?''

அவன் காலியான கண்ணாடிக் குவளையை விரிப்பில் வைத்துவிட்டு, அவளுடைய முகத்தையே பார்த்தான்.

அவள் திடீரென்று எழுந்துவந்து, அவனுக்கு அருகில் அவனைத் தொட்டோம் தொடவில்லை என்பதைப் போல அமர்ந்தாள். அவள் தொடர்ந்து கூறினாள்:

""அப்போது அபிமன்யு என்னிடம் சொன்னார்.. "ஏன் ஒரு இரவு? அனாமிகா... உன்மீது நான் அன்பு வைத்திருக்கிறேன். அதனால்... ஒரு இரவு மட்டுமல்ல- வேண்டுமென்றால், எல்லா இரவுகளிலும் நான் உனக்கு உன்னுடைய படுக்கையில் சுதந்திரம் தருவதாக வாக்குறுதி அளிக்கிறேன்.' இவ்வாறு கூறிவிட்டு, என் நெற்றியில் முத்தம் கொடுத்துவிட்டு, அபிமன்யு கண்ணாடியையும் டிஸ்டில்ட் நீர் இருக்கக்கூடிய புட்டியையும் எடுத்துக் கொண்டு முன்னறைக்குச் சென்று படுத்துக்கொண்டார். பாருங்க... சுமீத்... அபிமன்யு என்மீது எந்த அளவுக்கு அன்பு வைத்திருக்கிறார் என்பதை.... என் தேவைக்கேற்றபடி அபிமன்யு என்மீது இருக்கக்கூடிய அன்பின் "வால்வை' சரியாக அட்ஜஸ்ட் செய்துகொள்கிறார்.''

அவளுடைய கண்கள் மீண்டும் அடக்கமுடியாமல் வழிந்தபோது, அவன் அவளுடைய கைகளை மெதுவாகத் தடவினான். அவள் தன்னுடைய தலையை அவனுடைய தோளில் சாய்ந்து வைத்துக்கொண்டாள்.

""அபிமன்யுவின் எல்லையற்ற... அதேசமயம்- கட்டுப்பாட்டுடன் இருக்கக்கூடிய இந்த அன்புதான் என் எல்லா கவலைகளுக்கும் காரணமாக இருக்கிறது. கண்ணாடியையும் டிஸ்டில்ட் வாட்டர் புட்டியையும் எடுத்துக்கொண்டு முன்னறையில் போய் படுப்பதற்குப் பதிலாக, படுக்கையில் சுதந்திரத்திற்காக என்னுடைய வேண்டுகோளை கொடூரமாக தட்டிச் சிதறச் செய்து, படுக்கையில் எனக்கு அருகில் கைகளையும் கால்களையும் பரவச்செய்து அபிமன்யு வந்து படுத்திருந்தால், எனக்கு இந்த வேதனையே தோன்றியிருக்காது. அன்பிற்கு தராசும் மீட்டரும் எதற்கு? வால்வுகள் எதற்கு?''

அவனுடைய தோளில் கன்னத்தை அழுத்தி வைத்தவாறு அவள் தேம்பித் தேம்பி அழுதாள். அவன் அவளைத் தன்னுடைய சரீரத்துடன் சேர்த்துப் பிடித்த வாறு, மெதுவாக அவளுடைய தலைமுடியை வருடினான்.

அவளுடைய கீழுதட்டில் அப்போதும் ஒட்டிக்கிடந்த ப்ளடிமேரியின் உப்பு கலந்த மீதியை அவன் தன்னுடைய கைக்குட்டையால் மெதுவாகத் துடைத்து நீக்கினான்.

""எனக்கு குளிருது.'' அவள் கூறினாள்.

""நீ... மொத்தத்தில்... பிரச்சினையில் இருக்கே, அனாமிகா.

சிறிது நேரம் நீ என் அறையில் போய்ப் படு. தேவைப் பட்டால்... கொஞ்சம் தூங்கு. உனக்கு நான் கொஞ்சம் நல்ல பாட்டுகளை வைத்துத் தரவோ, கதைகளைக் கூறவோ செய்கிறேன். உன்னைத் தூங்கவைப்பது என்பதுதான் இந்த நிமிடம் என் வாழ்க்கையின் இலக்கு... அதற்காக மட்டுமே நான் இப்போது வாழ்கிறேன்.''

அவள் மெதுவாக அவனுடைய தோளிலிருந்து தலையை விலக்கியெடுத்து, உள்ளங்கையால் கண்களையும் உதடுகளையும் துடைத்துவிட்டு, கண்களில் வந்து விழுந்த முடியை பின்னோக்கி ஒதுக்கிவிட்டு, எழுந்து அவனுடைய படுக்கையில் போய்ப்படுத்தாள். அவன் அவளைப் பின்தொடர்ந்து படுக்கையில் அவளுக்கருகில் அமர்ந்து அவளின் வலது கையைத் தன் கையிலெடுத்து அதன்மீது மெதுவாகத் தடவிக்கொண்டிருந்தான். அவளுக்கு இசையைக் கேட்பதற்கோ கதையைக் கூறச்செய்து கேட்பதற்கோ விருப்பமில்லை. அவனுடைய மென்மையான அந்த வருடல்கள் அவளுக்கு நிம்மதி அளித்தது. அவள் கூறினாள்:

""சுமீத்... உங்களுடைய இந்த வருடல்கள் எனக்கு எந்த அளவுக்கு விலை மதிப்புள்ளவை என்பது எனக்கு மட்டுமே தெரியும். ஆனால், அபிமன்யுவைப் போல வேறு யாருக்கும் என்னை வருடுவதற்கோ கொஞ்சுவதற்கோ முடியவில்லை. கொஞ்சல்களும் உபசரிப்புகளும் அபிமன்யுவைப் பற்றி மேலும் சிந்திப்பதற்கு என்னைத் தூண்டுகின்றன. எனக்கு அவரின்மீது இருக்கக்கூடிய அன்பின் ஆழத்தை எந்தச் சமயத்திலும் அவரால் புரிந்துகொள்ளமுடியாது. அபிமன்யுவிற்காக இந்த முழு உலகத்தையும் சாக்கடையில் வீசியெறிவதற்கு நான் தயாராக இருக்கிறேன். சுமீத்... என் கால் பாதங்கள் குளிர்கின்றன.''

அவன் அவளுடைய நீட்டி வைக்கப்பட்ட கால்களுக்கு நேராக முகத்தைத் திருப்பிவைத்து அமர்ந்து குனிந்து, பாதங்களைத் தொட்டான். அவள் கூறியது முற்றிலும் உண்மைதான். அவளுடைய கால் பாதங்கள் பனிக்கட்டியைப்போல மரத்துப் போயிருந்தன. அவன் மேலும் சற்று குனிந்து, இரு கைகளைக்கொண்டும் அவளுடைய பாதங்களைத் தடவி வெப்பம் உண்டாக்க முயற்சித்தான். வலது காலின் பெருவிரலில், கல் பதித்த ஒரு வெள்ளி மோதிரம் இருந்தது. திருமணத்திற்குமுன்பு அனாமிகாவும் அபிமன்யுவும் ஒருவரையொருவர் காதலித்துத் திரிந்த காலத்தில் அபிமன்யு அவளுக்கு வாங்கிக்கொடுத்தது அது என்ற விஷயம் சுமீத்திற்குத் தெரியும். அபிமன்யு எப்போதும் அவளுக்கு சன்மானங் களும் பரிசுப் பொருட்களும் வாங்கிக்கொடுப்பான். அவளுடைய சரீரத்திலிருக்கும் எல்லா அசையும் பொருட்களும் அவன் கொடுத்தவைதான்.

""அபிமன்யுவைப் பற்றி நினைக்கும்போது, என் முழு உடலும் குளிர்வதைப்போல எனக்கு இருக்கிறது. அதே நேரத்தில்- நினைக்காமலும் என்னால் இருக்க முடியவில்லை. ஒரு பெண் தன் கணவனைப் பற்றியல்லாமல் வேறு யாரைப் பற்றி நினைப்பாள்? நான் ஒரு சாதாரண பாரதப்பெண். மற்ற எல்லா பெண்களைப்போல ஒரு பத்தினியை நான் எல்லா நேரங்களிலும் எனக்குள் சுமந்துகொண்டு நடக்கிறேன். அவளை எங்காவது சற்று இறக்கி வைத்துவிட்டு, சுமையில்லாமல் நிம்மதியாக கைகளை வீசிக்கொண்டு என்னால் நடக்க முடிந்தால்...

அவனுடைய வருடல்களை ஏற்று வாங்கிய அவளுடைய பாதங்களிலிருந்து குளிர்ச்சி விலகியது. ஆனால், அவளுடைய கணுக்கால்களில் அப்போதும் குளிர்ச்சி விலகிச் செல்லாமல் நின்றிருந்தது. அவன் வெளிச்சம் குறைந்து கொண்டு வந்த சாளரத்திற்கு அப்பால் பார்த்தவாறு நின்றிருந்தான். நாவல் மரம் ஒரு நிழலைப்போல இருண்டுவிட்டிருந்தது.

""அனாமிகா... நீ அழுறியா?''

""நான் அழுவதற்கென்றே விதிக்கப்பட்டவள். கணவனால் அன்பு செலுத்தப்படும் எல்லா பெண்களுக்கும் விதிக்கப்பட்டதுதான் இந்த கண்ணீர். இந்த கண்ணீரைக் குடித்து நான் வாழ்ந்து கொள்வேன்.''

""வேண்டாம்...'' அவன் குனிந்து அவளுடைய முன்தலையிலும் நெற்றியிலும் கன்னங்களிலும் அடிவயிற்றிலும் தன் புகையிலைக் கறைபடிந்த உதடுகளை வைத்தான். அவ்வாறு செய்துகொண்டே, அவன் தொடர்ந்து கூறினான்.

""அபிமன்யு என் நண்பர். நீ அவரை காதலிக்க ஆரம்பிப்பதற்குமுன்பே எனக்கு அவரைத் தெரியும். நீ உன் கணவரைக் காதலிக்கும் அதே ஆர்வத்துடன் ஒரு நண்பர் என்ற நிலையில் நான் அவர்மீது அன்பு வைத்திருக்கிறேன். அபிமன்யுவை சந்தோஷத்தில் வைத்திருக்கவேண்டும் என்ற விஷயத்தை நாம் நம்முடைய வாழ்க்கையின் ஒரு விரதமாக மாற்றவேண்டும். அதற்காக நாம் எதையும் செய்யவேண்டும்.''

சுமீத்தின் கை விரல்கள் அனாமிகாவின் தொப்புளைத் தொட்டன. சாளரம் இருண்டு விட்டிருந்தது. அதற்கப்பால் மரக்கிளைகளுக்கு மத்தியில் சாலையின் எதிர்பக்கத்திலிருந்த வீடுகளிலிருந்து வந்த பிரகாசம் "மினும் மினுக்' கென்று எரிந்தது. கம்பளிக்கு அடியில் அவள் சுமீத்தின் நெஞ்சோடு ஒட்டிச் சேர்ந்து படுத்திருந்தாள்.