குழந்தை தொட்டிலில் தூங்கிக்கொண்டிருந்தது. துணித்தொட்டில். சுத்தமான மென்பருத்தி மல்லியப்பொட்டிஸ் தாவணித்தொட்டில். தொட்டிலிலிருந்து சுமார் எட்டடி தூரத்துக்கு ஒரு கயிறு. அதன் ஒரு முனை தொட்டிலோடு. இன்னொரு முனை தரையில் குப்புறப் படுத்துக்கொண்டு எழுதிக்கொண்டிருந்த இளைஞரின் இடதுகையில். வலதுகை மும்முரமாக வெள்ளைத்தாளில் கற்பனையைக் கொட்டிக்கொண்டிருந்தது. ஆமாம்.
அந்த இளைஞர் சிறுகதை எழுதிக்கொண்டிருந்தார். குழந்தை உசும்பும்போதெல்லாம் தொட்டிலை இடதுகைக் கயிற்றுமுனையால் ஒரு இழு. குழந்தையும் தொட்டில் அசைவதன் பொருட்டு தொடர்ந்து அழாமல் உறங்கிப்போனது.
அந்த இளைஞரின் பெயர் அக்பர். ஆனால் 1960-களில் இலக்கிய உலகிலும் 70-களில் சினிமா உலகிலும் தூயவன் என்ற பெயரில் பிரபலமானவர். அவர் தொட்டிலை ஆட்டிக்கொண்டிருந்தது நாகூர் நெல்லுக்கடைத் தெருவில் இருந்த அவரது பெரியப்பாவின் வீடு. அங்குதான் அவர் வளர்ந்தார்… உடல்ரீதியாகவும், மனரீதியாகவும்.
அவர் தொட்டிலில் அவ்வப்போது ஆட்டி விட்டுக்கொண்டிருந்த குழந்தைதான் இப்போது அவரைப்பற்றி இங்கே எழுதிக்கொண்டிருக்கிறது! ஆம். தூயவன் எனது தாய்மாமா. என் தாய்வழிப் பாட்டனாரின் தம்பி மகன்.
தூயவன் மாமாவின் கதைகளில் எனக்கு முதலில் கிடைத்த கதை ’"மடி நனைந்தது'’ என்ற கதைதான். அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய ஏழாம் மாநாடு 2007-ன் சார்பாக வெளியிடப்பட்ட ’இஸ்லாமியச் சிறுகதைகள்’ என்ற நூலில் இது இருந்தது. பார்த்தவுடன் ரொம்ப சந்தோஷப்பட்டேன். ஒரு குறும்படமாக ஆக்கமுடிகிற அருமையான சிறுகதை. இதை எழுதிய ஆண்டு, பத்திரிகை, எதுவும் தெரியவில்லை.
1960-70-களின் திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான, வெற்றியை மேலும் மேலும் பெற்றுக்கொண்டே சென்ற ஆளுமை தூயவன். அவர் இலக்கிய உலகில் பிரபலமானதற்கு இரண்டு காரணங்கள். 1. அவருடைய சிறுகதைகள். 2. அவருடைய நாடகங்கள்.
குமுதம், ஆனந்தவிகடன், மாலைமுரசு, தினத் தந்தி, ராணி, நயனதாரா போன்ற அக்காலத்தில் உலாவந்த எல்லா வார மற்றும் மாதஇதழ்களிலும் அவர் கதை எழுதினார் என்றாலும், அவரை சிறுகதை உலகில் ஸ்டார் அந்தஸ்து பெறவைத்தது ஆனந்த விகடன்தான் என்று சொல்லவேண்டும். அப்போது விகடனில் முத்திரைக்கதைகள் வந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு முத்திரைக்கதைக்கும் பரிசு 101 ரூபாய். அது ஒருகட்டத்தில் 501 ரூபாயாக உயர்த்தப்பட்டது. அப்படி உயர்த்தப்பட்ட நேரத்தில் அந்த பரிசைப்பெற்ற முதல் கதை தூயவனுடைய ’உயர்ந்த பீடம்!
’உயர்ந்த பீடம்’ கதையின் பின்னால் இன்னொரு கதை உள்ளது. அது ஆன்மீகத் தொடர்புடையது. தூயவன் இளைஞராக இருந்தபோதே எனது குருநாதரான ஹஸ்ரத் அப்துல் வஹ்ஹாப் அவர்களின் பிரியமான சீடராக இருந்தவர். வாழ்வில் எப்படியாவது முன்னேறவேண்டும் என்ற வெறியுடன் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம் அது. (தூயவனின் தந்தை ஷாஹ்வலியுல்லாஹ் அவர்கள் அந்தக் காலத்திலேயே நன்க்ஷலி தங்ஞ்ண்ள்ற்ழ்ஹழ் ஆக இருந்தவர். என்றாலும் தூயவனின் கல்வி 9வது 10-வதுக்குமேல் போகவில்லை. காரணம் தெரியவில்லை. ஆனால் கற்பனை என்பது ஆண்டவன் கொடுக்கும் வரமல்லவா? அதற்கு படிப்பு தேவையா என்ன?)
நாகூர் தர்காவில் அவர் படுத்து உறங்குவது வழக்கம். (எனக்கும் அந்தப் பழக்கம் இருந்தது. குறிப்பாக பரீட்சை நாட்களில்). அப்படி ஒருநாள் உறங்கியபோது அதிகாலை நான்கு மணியளவில் - பொதுவாக காலையில் நான்கு மணிக்கெல்லாம் தர்காவில் கூர்கா பிரம்பை தரையில் அடித்து நம்மை எழுப்பிவிடுவார் - யாரோ தூயவனை எழுப்பினார்கள். கூர்க்காவாகத்தான் இருக்கும் என்று நினைத்த தூயவன் கண்ணைக் கசக்கிக்கொண்டு தன்னை எழுப்பியவரைப் பார்த்தார். எதிரே நின்ற மனிதரின் உருவம் தெளிவாகத் தெரியவில்லை. ஆனால் பெரிய மனிதர் என்று புரிந்துகொள்ள முடிந்தது. "ஏன் இங்கே இருக்கிறாய், கிளம்பிப்போ, உனக்கு உயர்ந்தபீடம் காத்திருக்கிறது' என்று சொல்லிவிட்டு அந்தப் பெரியவர் மறைந்து விட்டார். அப்பெரியவர் நாகூர் தர்காவில் அடக்கமாகியிருக்கும் பெரிய எஜமான் என்று அழைக் கப்படும் ஞானிகாதிர்வலீ அவர் கள்தான் என்பது தூயவனின் மனைவி, தூயவன் மற்றும் எனது நம்பிக்கை.
ஆனால் இத்தகவல் காலப்பிழை கொண்டது. ஏனெனில் தூயவன் கதைகள் 1964-லேயே விகடனில் வரத்தொடங்கிவிட்டன. என்னுடைய கணக்கின்படி, ’குங்குமச் சிமிழ்’ என்ற கதைதான் முதலில் வந்திருக்கவேண்டும். ‘உயர்ந்த பீடம்’ 67-ல்தான் வந்துள்ளது. என்றாலும் உனக்காக உயர்ந்த பீடம் காத்திருக்கிறது என்ற முன்னறிவிப்பை குறிப்பிட்ட கதை பற்றியதாக இல்லாமல், அவரு டைய எதிர்காலம் பற்றியதாக எடுத்துக்கொள்வதில் எந்தப் பிரச்சனையுமில்லை.
அதன்பிறகு சென்னை வந்த தூயவன் பல கஷ்டங்கள் பட்டார். ஆனால் அவரை இலக்கிய உலகில் புகழின் உச்சிக்குக் கொண்டுசென்றது 501 ரூபாய் பரிசுவாங்கிய ’"உயர்ந்த பீடம்'’ சிறுகதைதான்.
டெலிவிஷன் இல்லாத அந்தக் காலத்தில் மேடை நாடகங்கள் சக்கைபோடு போட்டுக்கொண்டிருந் தன. அப்போது மேஜர் சுந்தரராஜன் மேடையிலும் சினிமாவிலும் புகழ்பெற்று விளங்கினார்.
சென்னை சென்ற தூயவன் மேஜர் சுந்தரராஜனை சந்தித்தார். தன்னை ஒரு எழுத்தாளர் என்றுமட்டும் அறிமுகப்படுத்திக்கொண்டு கதை வசனம் எழுதும் வாய்ப்புக் கேட்டார். உடனே மேஜர், “"நீங்களெல்லாம் என்னப்பா எழுதுகிறீர்கள்? ஆனந்த விகடனில் தூயவன் என்ற எழுத் தாளர் முத்திரைக்கதை எழுதியிருக் கிறார். கதை என்றால் அப்படி எழுதவேண்டும்! என்ன நடை! என்ன எழுத்து!' என்றார். அவர் குறிப்பிட்டது ‘உயர்ந்த பீடம்’ கதையைத்தான். அவர் பேசிமுடிக்கும்வரை காத்திருந்த தூயவன், "நீங்கள் பாராட்டுகின்ற அந்தக் கதையை எழுதிய தூயவன் நான்தான்' என்று நிதானமாகக் கூறினார்.
மலைத்துப்போன மேஜர் தூயவனைப் பற்றிய முழுவிவரங்களையும் கேட்டறிந்தார். மேடைநாடகங்கள் எழுதும் வாய்ப்பை அளித்தார். மேஜருக் காக தூயவன் எழுதிக்கொடுத்த “தீர்ப்பு’’ நாடகம் நூறு நாள் ஓடியது.
“"தீர்ப்பு' நாடகத்தின் 100-வதுநாள் விழாவுக்கு எம்.ஜி.ஆர். தலைமை தாங்கினார். "நாடகம் மிகச்சிறப்பாக உள்ளது. இந்து சமயக்கோட்பாடுகளில் எவ்வித பிழையும் நேரிடாமல் மிகவும் நுட்பமாக ஆராய்ந்து நாடகத்தை எழுதியிருப்பவர் ஒரு இஸ்லாமிய சகோதரர் என்பது ஆச்சரியமான விஷயம்' என்று எம்.ஜி.ஆர். பாராட்டிப்பேசி, தூயவனுக்கு கடிகாரம் ஒன்றைப் பரிசாக வழங்கினார்.
ஏவி.எம். ராஜனும் தூயவனுடன் தொடர்புகொண்டு நாடகம் கேட்டார். அவருக்காக தூயவன் எழுதிய நாடகம் “பால்குடம். அது பின்னர் திரைப்படமாகவும் வந்தது.
தூயவனுடைய கதைகளை எப்படியாவது தேடி எடுத்துவிடவேண்டும் என்று முடிவு செய்து தூயவனின் மனைவி மறைந்த மாமி ஜெய்புன்னிஸா அவர்களிடம் சென்று முதலில் கேட்டேன். ஆனால் யார் யாரோ வந்து வாங்கிக்கொண்டு போய்விட்டார்கள் என்று சொன்ன அவர், பழைய தினசரிகளில் கொஞ்சம் கொண்டுவந்து கொடுத்தார். குமுதம், விகடன் போன்ற பத்திரிகைகளில் தூயவன் எழுதிய எந்தக் கதையும் அவரிடம் இல்லை. கிடைத்ததை வாங்கிக்கொண்டேன். திருப்பிக் கொடுத்துவிடுகிறேன் என்ற வாக்குறுதியுடன்!
நண்பர்கள் ஆர்.வெங்கடேஷ், பா.ராகவன் ஆகியோர் சொன்ன ஆலோசனையின் பேரில் விஷயத்தை விகடனுக்கு கடிதமாக எழுதினேன்.
விகடன் போன்ற பெரிய நிறுவனங்கள் பதில் போடுமா என்ற கேள்வியுடன்தான். ஆனால் கடிதம் போய்ச் சேர்ந்த இரண்டாவது நாளே எனக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஜி.வி.நாதன் என்பவர் பேசினார்.
நானே வந்து கதைகளைத் தேடி எடுத்துக்கொள்ளலாம் என்று அனுமதி யளித்தார்.
மூன்று முறை சென்றேன். ஜி.வி.ஆரின் உதவியாளர் வித்யாதான் உதவினார். விகடன் "ஆர்கைவ்'விலிருந்து ஆண்டுவாரியாக எடுத்து எடுத்து வந்து கொடுத்தார். நான் ஒவ்வொரு பக்கமாக புரட்டிப் பார்த்தேன். (ஒரு ஆண்டுக்கு 52 வாரங்கள் என்பதை அப்போது மறந்துவிட்டேன்)! விகடன் "ஆர்கைவ்' வைத்திருப்பதைப் பார்த்து ஆச்சரியமாக இருந்தது. ஒவ்வொரு இதழுக்கும் மாத வாரியாக ஒரு கோப்பு. இதழ்களின் ஒவ்வொரு பக்கமும் கொஞ்சம் இடம் விட்டு ’லாமினேட்’ செய்யப்பட்டு அந்த இடைவெளியில் ஓட்டை போட்டு கோப்பாக ஆக்கி வைத்திருந்தார்கள். கரிசனமும் தீர்க்க தரிசனமும் அதில் தெரிந்தது.
புரட்டிப் புரட்டிப் பார்த்ததில் பல கதைகள் கிடைத்தன.
மாமா தூயவனை நினைத்து கொஞ்சம் பிரமிப்பாக இருந்தது. பெரும்பாலான கதைகள் எல்லாமே அறுபதுகளில்தான் எழுதப்பட்டுள்ளன. 1969-லிருந்து 1974 வரை பார்த்தேன். முக்கியமான முத்திரைக் கதைகளை எழுதியபோது அவருக்கு வயது 16 அல்லது 17தான் இருந்திருக்கிறது. அந்த வயதில் என்னால் நிச்சயம் அப்படி எழுதியிருக்க முடியாது. தமிழ் அவ்வளவு சுத்தம். எப்படி ’டேட்டா கலக்ஷன்’ செய்தார் என்றே தெரியவில்லை.
’"பூஜைக்கு வந்த மலர்’' என்று இசை பற்றி ஒரு கதை உள்ளது. அதில் வரும் பெயர்களும் தகவல்களும் வெகு அற்புதம். நிச்சயமாக என்னால் அப்படி ஒரு கதையை அந்த வயதில் எழுதியிருக்க முடியாது. அந்த கதையில் ’மேந்தோன்னிப்பூ’ என்று ஒரு பூ வருகிறது. கேரளப் பின்புலத்தில் நடக்கும் பரதம் தொடர்பான அந்தக் கதையின் தொடக்கத்திலேயே வரும் ’மேந்தோன்னிப் பூக்கள்’ என்ற வார்த்தை என்னை என்னவோ செய்தது. நான் கேள்விப்படாத பூ. நமக்குத் தெரிந்ததெல்லாம் மல்லிகை, ரோஜா, கதம்பம் இந்த வகையறாக்கள்தானே? அது என்ன மேந்தோன்னிப்பூ? அப்படி ஒரு பூ உண்மையிலேயே இருக்கிறதா?
என்றெல்லாம் கேள்விகள் எனக்குள் எழுந்தன. கூகுளில் தேடினேன். ஆங்கிலத்திலும் தமிழிலும் உள்ளிட்டுப் பார்த்தேன். பிடிபடவில்லை.
விக்கிபீடியா சென்று தேடினேன். சிவப்பு சிவப்பாக ’க்ளோரியோசா’ என்ற பூ கண்ணில் பட்டது. இதுவாக இருக்கலாம் என்று உள் மனது சொன்னது. அந்தப் பூவுக்கான மற்ற பெயர்களையும் கீழே வரிசையாகக் கொடுத்திருந்தார்கள். அதில் தமிழ் என்று போட்டு கார்த்திகைப் பூ, செங்காந்தள் ஆகிய பெயர்கள் இருந்தன. அதற்குக் கீழே மலையாளம் என்ற தலைப்பின் பக்கத்தில் ’மேந்தோன்னி’ என்று ஆங்கிலத்தில் எழுதி இருந்தது. மழைக்காலத்தில் அதிகமாகப் பூப்பவை என்ற குறிப்பும் விக்கியில் இருந்தது. தகவல்களை சேகரிப்பது இந்தக் காலத்தில் வேண்டுமானால் எளிதாக இருக்கலாம். ஆனால் 1960களில்?! தூயவன் மாமாகூட இந்தப் பூவைப் பார்க்காமல் இருந்திருக்கலாம். ஆனால் அவருடைய ஆன்மா பார்த்துவிட்டது. கதையில் அந்தப் பூதான் கதாநாயகி என்று சொல்லும் அளவுக்கு அவர் கற்பனையை அது ஆக்கிரமித்திருப்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது.
விகடன் இதழ்களைப் புரட்டிப் பார்த்தபோது எனக் கேற்பட்ட இன்னொரு சந்தோஷம், பெரும் பெரும் இலக்கிய ஜாம்பவான்கள் எழுதிக்கொண்டிருந்த காலகட்டத்திலும், அதே களத்திலும் தூயவன் எழுதிக்கொண்டிருந்திருக்கிறார்! தி ஜானகிராமன், ஜெயகாந்தன், இந்திரா பார்த்தசாரதி, ஆதவன், அம்பை இப்படி பல ‘பெரிசுகள் விகடனில் அப்போது எழுதிக் கொண்டிருந்தன. ஒருவாரம் ஜெயகாந்தனின் சிறுகதை இன்னொரு வாரம் தூயவன். ஒருவாரம் ஆதவன், இன்னொரு வாரம் தூயவன். இப்படி இருந்தது.
ஒரு சனிக்கிழமை மீண்டும் ஆனந்த விகடன் அலுவல கம் சென்றேன். நண்பர் ராஜேஷுடன். நண்பர்கள் யுகபாரதி, கல்கி வெங்கடேஷ் ஆகியோரின் உதவியுடன் திரு கண்ணன் அவர்களையும், நண்பர் திரு ராஜேந் திரன் அவர்களையும் சந்தித்து மீண்டும் தூயவன் கதைகள் ஏதாவது கிடைக்குமா என்று அலசினேன். ராஜேஷும் பார்த்தார். நூல்நிலைய பொறுப்பாளராக இருந்த நண்பர் ராஜேந்திரன் வியக்கும் அளவுக்கு பொறுமையாகவும், பொறுப்பாகவும் உதவிகள் செய்தார்.
காலை பதினோறு மணிக்குச் சென்று மதியம் மூன் றரை வரை அலசினோம். 1963-ஆம் ஆண்டிலிருந்து 69 வரை பார்த்துவிட்டேன். நான் மிக ஆவலாகத் தேடிக்கொண்டிருந்த “உயர்ந்த பீடம்’’ என்ற கதை கிடைத்தே விட்டது! அதல்லாமல் மேலும் சில கதைகளும், நாகூர் எழுத்தாளர் கமலப்பித்தனின் மூன்று கதைகளும் கிடைத்தன. சிரமப்பட்டுத் தேடிக்கொண்டிருந்த நண்பர் ராஜேஷுக்கு ஒரு கதைகூட கிடைக்கவில்லை. எல்லாம் என் தேடுதலிலேயே கிடைத்தன. தூயவன் மாமாவின் ஆன்மா என்னோடு இருந்ததாக நான் உணர்ந்தேன்.
இதுவரை தூயவனின் 24 கதைகள் கிடைத் திருக்கின்றன. அவர் விகடனிலும் குமுதத்திலும் எழுதிய கதைகள்தான் தரமாக உள்ளன. மற்ற பத்திரிகைகளுக்கு எழுதியவைகளில் ஒரு சினிமாத்தனமும் திறமையும் மட்டுமே தெரிகின்றன. எனவே அப்படிப்பட்ட கதைகளை நான் இதில் சேர்க்கவில்லை.
தூயவனின் எந்தக் கதையைப் படித்தாலும் அதில் ஒரு திரைப்படத்துக்கான, திரைக்கதைக்கான முடிச்சிருப்பதை உணரமுடிகிறது. ஒரு எதிர்பார்ப்பை கதை போகிற போக்கில் உருவாக்கிவிடுகிறது. கதையின் முடிவு எப்படியிருக்குமோ என்ற ஆர்வத்தை அது ஏற்படுத்திவிடுகிறது. அவருடைய எல்லாக் கதைகளிலுமே, ஞ ஐங்ய்ழ்ஹ் பஜ்ண்ள்ற் மாதிரியான ஒரு விஷயம் முடிவில் இருக்கும்.
தூயவன் கிட்டத்தட்ட 84 திரைப்படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியிருக்கிறார். ஏழு திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ரஜினிகாந்துக்காக மட்டும் 12 படங்கள் (ரங்கா, பொல்லாதவன், அன்புக்கு நான் அடிமை போன்றவை). ரஜினிக்காக எழுதிய படங்கள் எல்லாமே சூப்பர்ஹிட். ஜெய்ஷங்கர் நடித்தது 25-க்கும்மேல் (அன்னை ஓர் ஆலயம், தாய்வீடு போன்றவை. ஜெய்ஷங்கர் நடித்த கிழக்கும்மேற்கும் சந்திக்கின்றன என்ற படத்துக்கு ஜனாதிபதி விருது கிடைத்தது).
தேவர் பிலிம்ஸ், முக்தா பிலிம்ஸ் போன்றவற்றின் கதை இலாகாவின் பிரதம எழுத்தாளராக இருந்தார். பல சமயங்களில் கதை இலாகா என்பதே தூயவன் ஒருவராக மட்டுமே இருந்துள்ளது! பல திரைப்படங்கள் அவர் வசனம் எழுதியும் அவர் பெயர் இல்லாமலேகூட வெளிவந்துள்ளன.
அவர் கதை, வசனமெழுதிய முக்கியமான திரைப்படங்கள்:
அதிசயப் பிறவிகள் - திரைக்கதை, வசனம்
புதிய வாழ்க்கை - கதை, வசனம்
யாருக்கு மாப்பிள்ளை யாரோ - கதை, வசனம்
ஆட்டுக்கார அலமேலு (இதில் அவர் பெயர் இடம் பெறவில்லை)
இளம்ஜோடிகள் - கதை
அன்புக்கு நான் அடிமை - கதை
திக்குத் தெரியாத காட்டில் - கதை
தவப்புதல்வன் - கதை
ரங்கா - கதை
இரு மேதைகள் - கதை
நல்ல நாள் - கதை
அன்னை ஓர் ஆலயம் - வசனம்
தாயில்லாமல் நானில்லை - வசனம்
தாய்வீடு - வசனம்
பொல்லாதவன் - வசனம்
ராமன் பரசுராமன் - வசனம்
தாய் மீது சத்தியம் - வசனம்
கங்கா யமுனா காவேரி திக்குத் தெரியாத காட்டில் அவர் சொந்தத் தயாரிப்பில் உருவான படங்கள்:
1. விடியும்வரை காத்திரு - பாக்யராஜ், சத்ய கலாஆகியோர் நடித்தது. பாக்யராஜுக்கு வில்லத்தனமான வேடம். இது எஸ்.டி. கம்பைன்ஸ் தயாரிப்பு. எஸ் என்பது தேவரின் சின்ன மருமகன் சக்திவேலையும், ட்டி என்பது தூயவனையும் குறிக்கும்.
நிற்க, பாக்யராஜை பாரதிராஜாவிடம் அறிமுகப் படுத்தியதே தூயவன்தான். ஈரோடு முருகேசன், ஜான் போன்றவர்களையும் தூயவனே திரைப்படத்துறைக்கு அறிமுகப்படுத்தினார்.
2. கேள்வியும் நானே பதிலும் நானே - கார்த்திக் நடித்தது.
3. அன்புள்ள ரஜினிகாந்த் - ரஜினி, மீனா நடித்தது. மீனா குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானதும் தூயவனின் இப்படத்தின் மூலமாகத்தான். இப்படத் துக்காக தூயவனுக்கு சினிமா எக்ஸ்ப்ரஸ் விருது, சினிமா க்ரிட்டிக் விருது, சாந்தோம் விருது போன்ற விருதுகள் கிடைத்தன.
4. தலையாட்டி பொம்மைகள் - கவுண்டமணி, வினுச்சக்கரவர்த்தி போன்றோர் நடித்த நகைச்சுவைப் படம்.
5. வைதேகி காத்திருந்தாள் - விஜயகாந்த், ரேவதி நடித்த படுஹிட்டான படம். விஜயகாந்துக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்த படம்.
6. நானே ராஜா நானே மந்திரி - விஜயகாந்த், ஜீவிதா நடித்தது.
7. உள்ளம் கவர்ந்த கள்வன் - பாண்டியராஜன், ரேகா ஆகியோர் நடித்தது. இப்படம் எடுக்கப்பட்டுக் கொண் டிருந்தபோது பாதியில்தான் தூயவன் காலமானார். ஹிந்தியில் ஹிட்டாக இருந்த அமோல்பலேகர், ஜரினா வஹாப் நடித்த ’சிச்சோர்’ படத்தின் ரீமேக் இது.
இதல்லாமல் குங்குமச்சிமிழ் என்ற படத்தயாரிப்பில் அவர் பார்ட்னராகவும் இருந்துள்ளார். படத்தின் தலைப்பு அவருடைய முத்திரைக் கதைத்தலைப்புகளில் ஒன்று.
1978-ம் ஆண்டு பலப்பரீட்சை என்ற திரைப்படத்துக்காக (முத்துராமன், சுஜாதா நடித்தது) சிறந்த வசனகர்த்தாவுக்கான தமிழக அரசின் விருதை -
ஆறு பவுனுக்கு மேல் இருந்த உண்மையான தங்கப்பதக்கம் - அப்போதைய முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கையால் தூயவன் பெற்றுக்கொண்டார். எம்.ஜி.ஆரின் அன்புக்கும் பாத்திரமானார்.
தூயவன் இறந்தபிறகு அவர் உடல் அடக்க ஸ்தலம் செல்லும்வரை பாண்டிபஜார் சாலையை ற்ழ்ஹச்ச்ண்ஸ்ரீ ச்ழ்ங்ங்-யாக வைக்க எம்.ஜி.ஆர் உத்தரவிட்டார் என்றும், சென்னையில் வைத்த மையித் செலவுகளை பாக்யராஜ்தான் செய்தார் என்றும் சொல்லப்படுகிறது. நான் இதுபற்றி தூயவன் மனைவியிடம் கேட்டு உறுதிசெய்யவில்லை.
தூயவனுக்கு இக்பால் (பாபு), யாஸ்மின் ரோஷனாரா பேகம் (பேபி) என்ற இரண்டு குழந்தைகள். பாபு தொலைக்காட்சியில் சீரியல்கள் எடுப்பதில் ஆரம்பத்தில் ஈடுபட்டிருந்தார். இப்போது தனியாக தொழில் செய்துகொண்டிருக்கிறார். சில படங்களை இயக்கிக்கொண்டும் இருக்கிறார். சமீபத்தில் ‘கதம் கதம்’ என்ற ஒரு திரைப்படத்தை இயக்கினார். பாபு, பேபி இருவருக்குமே திருமணமாகி குழந்தைகள் உள்ளனர்.
கண்கெட்டபிறகு சூரியநமஸ்காரம் என்ற பழ மொழிக்கு ஏற்பத்தான் நான் என் வாழ்வில் பல சந்தர்ப் பங்களில் நடந்துகொண்டுள்ளேன். என் பாட்டனார் ஷரீஃப்பேக் அவர்களின் அழகான ஆங்கிலத்தை அவர் வாழ்ந்த காலத்தில் நான் அவரிடமிருந்து கற்றுக் கொள்ளத் தவறினேன். என் பெரியம்மா சித்தி ஜுனைதாபேகம் அவர்களின் எழுத்துஆற்றலை அவர்களோடு பழகிய, அவர்கள் வாழ்ந்த காலத்தில் முற்றிலும் புரிந்துகொள்ளாமல் இருந்தேன். என் மாமா தூயவனோடு சென்னையில் நானிருந்த காலங்களிலெல்லாம் நான் அவரைப் பற்றி எதுவுமே தெரிந்துகொள்ளவில்லை. சென்னை எல்டாம்ஸ் சாலையில் அப்போது அவர் இருந்த வீட்டுக்கு வந்த ஸ்ரீதேவியை மட்டும் பார்த்து ரசித்துக்கொண்டு இருந்துவிட்டேன்!
எப்படியோ கஷ்டப்பட்டு அவருடைய சிறந்த சில சிறுகதைகளைத் தொகுத்து கொண்டுவந்துவிட்டேன். இதிலுள்ள எல்லாக் கதைகளுமே முத்திரைக் கதை களல்ல. விகடனில் மட்டும் வந்தவையுமல்ல. ஆனாலும் தூயவனின் முத்திரை அவருடைய எல்லாக் கதைகளிலும் இருக்கத்தானே செய்யும்?! அதனால் இந்த பன்னிரண்டு கதைகளும் ஒரு வகையில் முத்திரைக் கதைகள்தான்!
இந்தக் காரியத்தால் அவருடைய ஆன்மா சந்தோஷப்படுமானால் அதுவே எனக்கும் சந்தோஷம். இந்த முயற்சியில் எனக்கு உதவிய நண்பர்கள் யுகபாரதி, ஆர்.வெங்கடேஷ், பா.ராகவன், ஆனந்த விகடன் அலுவல கத்தைச் சேர்ந்த திரு ஜி.வி. நாதன், வித்யா, நண்பர் ராஜேந்திரன் ஆகியோருக்கு என் நன்றிகள்.