ணவு, உடை, உறைவிடம் என்கிற மனிதனின் அடிப்படைத் தேவைகளுள் மிக முக்கியமானது உணவு எனில் அது மிகையானதல்ல. உணவு என்பது ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்வாழ அடிப்படைத் தேவையாக அமைகிறது. நெல், புல், வரகு, தினை, சாமை. இறுங்கு, துவரை, இராகி ஆகிய எட்டு உணவு வகையும் முதற்கூலம் என்று பகுக்கப்படுகின்றன. வேளாண்மைத் தொழிலைச் செய்துவந்த பண்டைத் தமிழர்கள் இந்த எட்டு வகையான முதற்கூலத்தில் தினை, நெல், புல், வரகு ஆகிய நான்கையும் உணவுப்பொருளாகப் பயன்படுத்தி இருப்பதற்குச் சங்க இலக்கியங்களில் சான்றுகள் உள்ளன. இவ்வகை உணவுகளைப் பச்சையாகவோ அல்லது பதப்படுத்தியோ மட்டும் உண்ணாமல் வேகவைத்துச் சோறாக்கி உண்டனர் என்பது வியக்கவைக்கும் வரலாறா கும்.

“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்கிறது புறநானூறு. இயற்கையிலே கிடைக்கும் விளைபொருட்களின் அடிப்படையிலே அந்தப் பகுதி மக்களின் உணவுப் பழக்கம் அமையும். நிலவுடைமைச் சமூகத்தில் ஒரே இடத்தில் வாழத் தலைப்பட்ட தமிழர்களின் உணவுமுறை குறிஞ்சி முல்லை, மருதம், நெய்தல் என்று பகுத்த தம் நிலத்திற்கேற்பவே அமைந்தது என்பதே உண்மை.

தமிழருக்கு இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்தும் பேறு கிடைத்தது. இயற்கைப் பொருட்களிலேயே அவற்றின் புலன்கள் படிந்துகிடந்தன. அவன் கண்டன, கேட்டன, உயிர்த்தன, உற்றன, உண்டனயெல்லாம் இயற்கைப் பொருட்களாகவே இருந்தன. கதிரொளி, காற்று, நீர் முதலிய உணவுகளைக் கொண்ட சூரிய வெளிச்சத்தில் பழுத்த பழம், கீரை, கிழங்கு ஆகியவற்றை உண்ணுதல் நம் முன்னோர்களுக்கு நலம் பயத்தன.

மாறு பாடில்லா உண்டி மறுத்துண்ணின் ஊறு பாடில்லை வுயிர்க்கு என்கிறார் வள்ளுவர். நம் உடல், உயிர், உணவு ஆகிய மூன்றுக்கும் உள்ள நெருங்கிய தொடர்புண்டு என்பதே இக்குறளின் பொருள். அதிகாலையில் துயில் எழுந்து, இயற்கைப் பொருட்களால் பல் துலக்கி, சூரிய நமஸ்காரம், யோகாசனம் போன்ற உடல் நலப் பயிற்சிகள் செய்து, இயற்கையான குளிர்ந்த நீரில் குளித்து, எளிய பருத்தி ஆடைகளையே உடுத்தி, வேக வைக்காத காய், கனி, கிழங்கு போன்றவற்றை உண்டு, இயற்கைக் காற்றைச் சுவாசித்து வாழ்ந்தவர்களே நம் தமிழ்மரபின் மூத்த தலைமுறையினர்.

மாயோன் மேய காடுறை உலகமும் சேயோன்மேய மைவரை உலகமும் வேந்தன் மேய தீம்புனல் உலகமும் வருணன் மேய பெருமணல் உலகமும் முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையால் சொல்லவும் படுமே என்ற தொல்காப்பியரின் கூற்றால் பெருந்தமிழ் நிலப்பரப்பைப் பற்றி நம்மால் அறியவும், அறிவித்திடவும் முடிகிறது.

Advertisment

sdfc

தங்கள் மண்ணில் விளைந்த பொருட்களைப் பதப்படுத்தி வைத்துக்கொள்ளவும், அதனைச் சமைக்கவும் பழகிக்கொண்ட பின்னர் அந்தந்தப் பகுதி மக்களின் அடையாளமாகவும் உணவுகள் மாறி விடுகிறது. உணவு என்பது ஒரு சமூகத்தின் அல்லது இனக்குழுவின் செழிப்பின், வசதியின் அடையாள மாகவும் மாறிவிட்டிருக்கிறது. அதனால் தான் நதிக் கரைகளில், அதாவது விவசாயம் செய்யத் தகுந்த இடங்களில் நாகரிகம் தோன்றி வளர்ந்துள்ளது.

“உணவெனப்படுவது நிலத்தோடு நீரே” என்னும் தெளிவு கொண்ட தமிழ்ச் சமூகத்தை மட்டுமே எடுத்துக்கொண்டாலும் நிலவியல் அடிப்படையில் ஒவ்வொரு பகுதியும் பல்வேறுபட்ட, ஆயிரக்கணக்கான வகையிலான தானியங்களை விளைவிக்கின்றன. அதன் அடிப்படையில் உணவின் வகைகளும் விரிகின்றன. வகைகள் பல்வகைப்பட்டதாக இருந்தாலும் நமக்கென ஒரு உணவு முறை வழக்கத்தில் உள்ளது. அறுசுவையோடு மருத்துவ குணம் நிறைந்த பொருட்களையே அடிப்படையாகக் கொண்டு ஒரு சமையல் முறை இங்கே இருந்துள்ளது. இந்த உணவு முறை நமக்கான அடையாளமாக நிலைத்து நிற்கிறது.

Advertisment

அரிசிச் சோற்றையே பண்டைய தம் சிறப்பு உணவாகக் கொண்ட தமிழர்கள், வரகு, சாமை ஆகியவற்றைச் சமைத்து உண்டார்கள். நெல்லில் பலவகை தமிழகத்தில் விளைந்தது. சங்க கால மக்கள் உணவில் மிளகு, கடுகு, உப்பு, புளி, வெண்ணெய், கருவேப்பிலை போன்றவற்றைச் சேர்த்துக் கொண்டார் கள். நுங்கு, இளநீர், பலாப் பழம், வாழைப்பழம், மாம்பழம் போன்றவைகளையும் உண்டார்கள். கொள்ளுப் பருப்பு, பயிற்றம் பருப்புகளையும் உணவில் சேர்த்துக் கொண்டார்கள் என்பதை அறிய முடிகிறது.

இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த அவைப்பு மாண் அரிசி அமலை வெண் சோறு (சிறுபாணாற்றுப்படை :193-194) நெல்லை அவித்து அரிசியாக்கி, பின் அதைச் சோறாக்கி உண்ட பண்டைய தமிழர்கள் வெறும் சோறாக உண்ணாமல் அவற்றுடன் பல பொருள்களை இட்டு பல்வேறு சுவையில் உண்டனர் என்பதே வரலாறு. வெண்சோறு, இன்சோறு, உழுந்தம்சோறு, ஊன்சோறு, பருப்புச்சோறு, பாற்சோறு. புளிச்சோறு என தமிழர்களின் சோறு வகைகள் பட்டியலிடப் படுகின்றன. இவ்வகைச் சோறுகளைத் தமிழர்கள் உண்டனர் என்பதை இலக்கிய மேற்கோளின்படி தொகுத்துக் கூறுவதே இக்கட்டுரையின் நோக்கமாக அமைகிறது.

இன்சோறு

சோற்றுடன் இனிப்பைக் கலந்து உண்ணும் வழக்கம் பண்டைக்காலம் முதலே தமிழர்களிடம் இருந்துவரும் வழக்கமாகும். இதனை இன்சோறு என்று ஆய்வாளர்கள் குறிப்பிட் டுள்ளனர். இந்த முறையிலான சோறு உண்ணும் வழக்கம் இருந்தது என்பதைக் கீழ்க்கண்ட பாடல் வரிகள் சான்றாக அமைகின்றன.

வேறுபடக் கவினிய தேமாங் கனியும்

பல்வே றுருவிற் காயும் பழனும்

கொண்டல் வளர்ப்பக் கொடிவிடுபு கவினி

மென்பிணி யவிழ்ந்த குறுமுறி யடகும்

அமிர்தியன் றன்ன தீஞ்சேற்றுக் கடிகையும்

புகழ்படப் பண்ணிய பேரூன் சோறும்

கீழ்செல வீழ்ந்த கிழங்கொடு பிறவும்

இன்சோறு தருநர் பல்வயி னுகர

(மதுரைக்காஞ்சி, 529 - 535)

Advertisment

மா, பலா போன்ற இனிய கனிவகைகளையும், கீரைவகைகளையும் விற்கிறவர்களும், அமிர்தம் போன்ற இனிமையுடைய கற்கண்டினை விற்பவர் களும், இறைச்சியுடன் கலந்து சமைத்த சோறாகிய உணவினை விற்பவர்களும், கிழங்கு வகைகளை விற்பவர்களும், இனிப்புச் சுவை யுடைய சோற்றினை வழங்கு பவர்களும் இருக்க, அவற்றை வாங்கி ஆங்காங்கே நின்று உண்பவர்களுமாகக் கலகலப் பாகக் காணப்பட்டது அந்த வீதி என்பதிலிருந்து இனிப்புச் சுவை யுடைய சோற்றினை உண்ணும் வழக்கம் இருந்ததை அறிய முடிகிறது.

உழுந்தம்சோறு

கபிலர் பாடிய குறிஞ்சித் திணைப் பாடலொன்றில் வயலைக்கொடியால் செய்யப் பட்டிருக்கிற தழையாடையைக் குறிப்பிடுகிறார்.

நெய்யொடு மயக்கிய உழுந்து நூற்றன்ன

வயலைஅம் சிலம்பின் தலையது

செயலைஅம் பகைத்தழை வாடும் அன்னாய் (ஐங்குறுநூறு -211)

அத்தகைய வயலைக் கொடிகள் படர்ந்திருக்கும் தலைவனின் அழகிய மலை உச்சியில் இருக்கும் அழகிய அசோக மரத்தின் தழைகளால் தழையாடை செய்து கொடுத்திருக்கிறான் தலைவன். இந்தத் தழைகள் வாடிவிடும், அதனால் நீ ஏற்று அணிந்துகொள்ளம்மா என்று தலைவியை ஏற்றுக்கொள்ளச் சொல்கிறாள் தோழி. தலைவனும் கூடிமகிழ்ந்து திரும்பிய தலைவி அவன் பிரிவால் வாடி இருப்பாள். அப்பொழுது தலைவன் தோழி மூலமாகக் கொடுத்தனுப்பும் பரிசாகிய தழையாடை தலைவியின் பிரிவாற்றாப் பெருந்துயர்க்கும் மருந்தாகும் என்றுணர்ந்த தோழி, தலைவியின் குறை போக்கும் என்று கருதி அவளுக்குப் தழையாடையொன்றைப் பரிசளிக்கிறாள்.

வெண்மையான வயலைக்கொடி மேற்புறம் ஒருவிதப் பளபளப்புடன் இருப்பதால் நெய்சேர்த்துப் பிசைந்தது போல என்கிறார் புலவர். நெய் சேர்த்துப் பிசைந்த உழுத்தம் மாவினை நூற்றது போன்ற கொடி என்று வயலைக்கொடி உவமைப்படுத்தப்படுகிறது. நெய் சேர்த்து வெறும் உழுத்தம் மாவை உண்ண இயலாது.

அரிசியுடன் பிசைந்து உண்ணும் வழக்கம் இருந்தது.

அதனையே இப்பாடலில் கபிலர் உவமைப்படுத்தி யுள்ளார் என்பது அறிஞர்களின் கருத்து.

ஊன்சோறு

அரிசியுடன் இறைச்சியைக் கலந்து, இன்றைய பிரியாணி போல் சமைத்து உண்ணும் வழக்கம் பண்டைத் தமிழர்களிடத்தே இருந்திருக்கி றது. வேட்டையாடும் சமூகமாக வளர்ந்த பண்டைய சமூகம் விலங்கு களின் மாமிசத்தைப் பச்சையாக, பிறகு நெருப்பில் சுட்டு உண்டனர்.

அரிசி உணவை உண்ணத் தொடங் கிய பிறகு அவற்றுடன் மாமிசத் தையும் கலந்து உண்டனர்.

பொலம்பூந் தும்பைப் பொறிகிளர் தூணிப்

புற்றடங் கரவி னொடுங்கிய வம்பின்

நொசிவுடை வில்லி னொசியா நெஞ்சிற்

களிறெறிந்து முறிந்த கதுவா யெஃகின்

விழுமியோர் துவன்றிய வன்க ணாட்பின்

எழுமுடி மார்பி னெய்திய சேரல்

குண்டுக ணகழிய மதில்பல கடந்து

பண்டும் பண்டுந்தா முள்ளழித் துண்ட

நாடுகெழு தாயத்து நனந்தலை யருப்பத்துக்

கதவங் காக்குங் கணையெழு வன்ன

நிலம்பெறு திணிதோ ளுயர வோச்சிப்

பிணம்பிறங் கழுவத்துத் துணங்கையாடிச்

சோறுவே றென்னா வூன்றுவை யடிசில்

ஓடாப் பீட ருள்வழி யிறுத்து

முள்ளிடு பறியா வேணித் தெவ்வர்

சிலைவிசை யடக்கிய மூரி வெண்டோல்

அனைய பண்பிற் றானை மன்னர்

இனியா ருளரோநின் முன்னு மில்லை

மழைகொளக் குறையாது புனல்புக நிறையாது

விலங்குவளி கடவுந் துளங்கிருங் கமஞ்சூல்

வயங்குமணி யிமைப்பின் வேலிடுபு

முழங்குதிரைப் பனிக்கடன் மறுத்திசி னோரே. (பதிற்றுப்பத்து, 45)

நிலம் போல் பொறுமை, வானம் போல் சூழ்திறன், காற்றைப் போல் வலிமை, தீயைப் போல் எரிக்கும் திறன், நீரைப் போல் அளிக்கும் கொடைத்திறன் ஆகியவற்றை உடையவன் நீ. உன் கடலிலே தோன்றிய ஞாயிறு உன் கடலிலேயே மறையும் நிலப்பரப்பை உடையவன் நீ. இப்படிப்பட்ட வானவரம்பன் நீதானா? தும்பைப் பூ சூடி ஐவரை எதிர்த்த நூற்றுவர் மாண்ட போர்க்களத்தில் இருபாலாருக்கும் ஊன்சோறு கொடுத்தவன் நீ. பால் புளித்தாலும், பகல் இருளானாலும், நான்கு வேதங்களின் நெறிமுறை மாறினாலும் திரிபில்லாச் சுற்றத்தாருடன் வாழ்வாயாக. இமயம் பொதியம் ஆகிய மலை அடுக்கத்தில் அந்தணர் வளர்க்கும் முத்தீ விளக்கொளியில் மான்கள் உறங்குவதுபோல அச்சமின்றி உன் மக்கள் சுற்றம் நிலைகொள்வதாகுக என்று பொருள்படும் பதிற்றுப்பத்துப் பாடல் ஊன்சோறு உண்ணும் தமிழர்களின் வழக்கத்தைச் சுட்டிக்காட்டுகிறது.

பருப்புச்சோறு

மழைக்காலத்தில் ஆகாயத்தில் திரிகின்ற நீர்சுமந்த மேகம்போன்ற வரகு வைக்கோலால் வேய்ந்த அழகிய குடிசைகளையுடைய சிற்றூர் என்று வெ.பெருமாள்சாமி குறிப்பிடும் ஊரில் வாழ்ந்த மக்கள் வரகினது அவிழாகிய சோற்றை அவரையினது நன்றாகிய பருப்பைவிட்டு புழுங்க வெந்ததனைத் தாமும் உண்டு விருந்தினராகிய பாணருக்கும் மிகுதியாக வழங்கியுள்ளனர். இதனை, பருவ வானத்துப் பாமழை கடுப்பக்

கருவை வேய்ந்த கவின்குடிச் சீறூர்

நெடுங்குரற் பூளைப் பூவி னன்ன

குறுந்தாள் வரகின் குறளவிழ்ச் சொன்றிப்

புகரிணர் வேங்கை வீகண் டன்ன

வவரை வான்புழுக் கட்டிப் பயில்வுற்

றின்சுவை மூரற் பெறுவிர்

(பெரும்பாணாற்றுப்படை, 190 - 196)

என்ற பாடல் வரிகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

பாற்சோறு

பண்டைய தமிழர்கள் வேட்டைச் சமூகமாகத் திரிந்த காலத்தில் கால்நடைகளை மந்தைகளாக்கி மேய்க்கும் தொழிலைச் செய்யவில்லை. காட்டெருமை முதலான விலங்குகளிலிருந்து கிடைக்கும் பாலைக் கறந்து பயன்படுத்திக் கொண்டனர். முல்லை நில மக்களின் உணவான இவ்வகைச் சோறு பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. காடும் காடு சேர்ந்த பகுதியாக விளங்கிய இப்பகுதி மக்களிடம் ஆடுகளும், பசுக்களும் நிறைந்து காணப்பட்டன. அவற்றை மேய்த்தலே இவர்களின் முக்கிய தொழிலாகவும் இருந்துள்ளது. இவற்றின் பாலை அரிசி சோற்றில் ஊற்றி உண்ணும் பழக்கம் இருந்திருக்கிறது என்பதை நம்மால் அறிய முடிகிறது. இடையர்கள் இரவில் பாலும், பாற்சோறும் தமக்காகச் சமைத்ததனை விருந்தினர்களாகிய பாணர்க்கும் தந்து உண்பித்தனர் என்பதை,

கல்லென் கடத்திடை கடலின் ஒலிக்கும்

பல்யாட்டின நிரை எல்லினர் புகினே

பாலு மிதவையும் பண்ணாது பெறுகுவீர்

(மலைபடுகடாம், 415 - 417)

என்ற பாடல் வரிகள் மூலம் நம்மால் அறிய முடிகிறது.

புளிச்சோறு

எயிற்றிய ரட்ட இன்புளி வெஞ்சோறு

தேமா மேனிச் சில்வளை யாயமொ

டாமான் சூட்டி னமைவரப் பெறுகுவிர் (சிறுபாணாற்றுப்படை, 175 - 177)

முல்லைவளம் திரிந்து பாலை நிலமாக மாறியிருக்கும். அந்த நிலப்பகுதி மக்கள் எயிற்றியரும் அங்கு வாழ்வதைக் காணலாம். கூரை வேயப்பட்டி ருக்கும் அவர்களது குரம்பை வீடுகளில் உறுத்தும் வெயில் வாலைக் குலைத்துக் கொண்டு முற்றத் திலேயே முடங்கிக் கிடக்கும். வெயிலின் சினம் செல்லுபடி ஆகாத குரம்பை அது. அங்கே எயிற்றியர் நல்கும் இனிய புளிச்சோறு பெறலாம். காட்டில் மேயும் ஆமான் ஆட்டுக் கறி சுட்ட வறுவல் உணவும் பெறலாம். இனிய மாந்தளிர் போன்ற மேனியையுடைய உன் ஆயத்தாரும் பெறலாம். போதும்போதும் என்னும் அளவுக்கு விருப்பம் தீரப் பெறலாம். மேற்கண்ட சிறுபாணாற்றுப் பாடல் மூலம் அரிசி சோறுடன் புளியைச் சேர்த்து உண்ணும் வழக்கத்தைக் கொண்டிருந்தனர் என்பதை நம்மால் அறிய முடிகிறது.

உணவுக்கேற்றவாறே அழகும், ஆற்றலும் பரிணமிக்கும். எனவே அழகையும், ஆற்றலையும் விரும்பும் ஒருவர், பழ உணவு உண்டு, நன்னீர் அருந்தி, நறுங்காற்றுப் பருகி, ஞாயிறு ஒளி உடலில் பரவும்படி தகவமைத்துக் கொள்ள வேண்டும் என்கிற நிலையை வாழ்வாக்கிய பண்டைய தமிழர்கள், உடலுக்கு இயற்கை உணவு பரு உணவாகவும், நம் உள்ளத்துக்குப் இயற்கையோடியைந்த வாழ்வு நுண் உணவாகவும் அமையவேண்டுமென்பதே தமிழர்களின் வாழ்வு முறையாக அமைந்திருந்ததும், இயற்கையுடன் இயைந்து வாழ்வது என்பதாகத் தொடங்கிய தமிழர் நேர்த்தியான உணவைத் தயாரிப்பதிலும், உண்பதிலும், தலைமுறைக்குத் தருவதிலும் கவனம் செலுத்துவதாக அமைந்திருந்ததும் வியப்பில் ஆழ்த்துகின்றன. v