ஏராளமான திரைப்படங்களில் தன் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களின் இதயங்களைக் கொள்ளையடித்து வருகிறவர் ரோகிணி. 76-ல் குழந்தை நட்சத்திரமாக நடிக்கத் தொடங்கியவர், தமிழ், மலையாளம், தெலுங்கு உட்பட பல்வேறு மொழிகளிலும் நடித்துவரும் இவர் இப்போதும் பிசியாகவே இருந்துவருகிறார். எந்தப் பாத்திரத்தை ஏற்றாலும் அந்தப் பாத்திரமாகவே மாறிவிடுகிற திறமையான நடிப்புக் கலைஞர் அவர். டப்பிங் கலைஞராகவும் பல நடிகைகளுக்குக் குரல் கொடுத்திருக்கிறார் ரோகிணி. கலைமாமணி உட்பட பல்வேறு பட்டங்களையும் விருதுகளையும் பெற்றவரான ரோகிணி, திரையுலகில் நீண்ட அனுபவங்களைக்கொண்டவர், மேலும், முற்போக்கு மேடைகளிலும், சமூகநீதிப் போராட்டங்களிலும் களமிறங்கி, சமூகத்துக்கான தனது பங்களிப்பைத் தொடர்ந்து செய்துவருகிறவர். இலக்கியமும் பேசுவார். பெண்ணுரிமை முழக்கத்தையும் எழுப்புவார். சுயசிந்தனையாளராகவும் சுடர்விடும் ரோகிணி அவர்களை, இனிய உதயம் சார்பில் கேள்விகளோடு சந்தித்தோம். தனது பரபரப்பான பணிகளுக்கு நடுவிலும் நேரம் ஒதுக்கி, மனதில் பட்ட கருத்துகளைப் பளிச் பளிச்சென வெளிப்படுத்தினார். சூடும் சுவையுமான அவரது நேர்காணல் இதோ....
"எட்டு மறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று' கும்மி அடிக்க சொன்னான் பாரதி. நாமும் கூடிக் கூடிக் கும்மியடித் தோம். வீதிகளிலும், வெளி மேடைகளிலும், "பெண் விடுதலை வேண்டும்' என்று ஓங்கி முழக்கமிட் டோம், கொடுத்தோமா அவர்களுக்கு சுதந்திரத்தை? அன்று ஆங்கிலேயர்களிடமிருந்து நம் நாட்டிற்கு சுதந்திரம் கேட்டோம். இன்று நம் வீட்டு பெண்களுக்கு நாமே நம்மிடமிருந்து சுதந்திரம் கேட்டுக்கொண்டிருக்கிறோம்.
கொதிக்கின்ற எண்ணெயில் நீர்த் திவலைகள் பட்டுத் தெறிப்பது போல், தம் மீது தொடுக்கப்படும் அவலம் கண்டு கொதித்து எழ ஆரம்பித்துவிட்டார்கள் எழுச்சிமிகும் பெண்கள். சாது மிரண்டால் காடு கொள் ளாது என்பது பழைய மொழி, "மாது மிரண்டால் வீடு கொள்ளாது' என்பது புதுமொழி.
எங்களுக்கான வாழ்க்கையை நாங்கள் வாழ்ந்து கொள்கிறோம். அதை கொடுப்பதற்கோ, பறிப்பதற்கோ நீங்கள் யார்? துணிச்சலோடு வாழ்வை எதிர்கொள்ளும் சாதனைப் பெண்மணி நீங்கள். உங்கள் துணிவுக்கு காரணமானவார் யார்?
நான் சிறிய வயதிலேயே, அதாவது ஐந்து ஆறு வயது இருக்கும்போதே நடிக்க வந்துவிட்டேன். நான் சினிமாவில் நடிக்க வேண்டும் என்று என் தந்தை மிகவும் விருப்பப்பட்டார். அவர் நடிக்கச் செல்லும் போது, அவருக்கான வாய்ப்பை தேடிச் செல்கிறபோது அவர் கூடவே நான் இருந்திருக்கிறேன்.
தைரியம் என்று சொன்னால், அது என் அப்பா சொல்லிக் கொடுத்த விஷயம்தான். எந்த மாதிரி யான பிரச்சினையாக இருந்தாலும், அதை தைரிய மாக சமாளிக்கவேண்டும். அதைத் தாண்டி வர வேண்டும். எதுவாக இருந்தாலும் நாம் துவண்டு போய்விடக்கூடாது என்று அப்பா அடிக்கடி எனக்கு அறிவுறுத்திக்கொண்டே இருப்பார்.
இது பெண்களுக்கான இடம் என்று, எனக்குள் நானாகத்தான் கண்டு கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில், என்னுடைய அம்மாவினுடைய வாழ்க்கையில் அல்லது என்னைச் சுற்றி இருக்கக் கூடிய மற்றவர்களுடைய வாழ்க்கையில், நிகழும் அனைத் தையும் உற்று நோக்குகிறபோது, ஒரு பெண்ணிற் கான சமத்துவ நிலை, இந்த சமூகத்தில் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். பின்பு எனக்கு அது மாதிரியான ஒரு சமத்துவ நிலை வேண்டும் என்று யோசித்தபொழுது, அதற்காகப் பேச ஆரம்பித்து, அது சரிதான் என்று ஒரு தெளிவு கிடைத்த பின்பு, என்னைப் போலவே சிந்திக்கின்ற நிறைய பெண்கள் இருக்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.
நாம் எவ்வளவுதான் பேசினாலும், போராடினா லும் பெண்களுக்கான சமத்துவம் என்பது நடை முறையில் சாத்தியப்படுவது இல்லை என்பதை இப்போது வரை என்னால் உணரமுடிகிறது. முழுமை யான சமத்துவம் என்பது ஒரு பெண்ணிற்கு இல்லை.
நம்முடைய வாழ்க்கையில், நமக்கு என்ன தேவை, அது நம் அம்மாவிற்கு அல்லது நம்மைச் சுற்றி இருக்கக் கூடிய பெண்களுக்கு அது இருக்கிறதா? இல்லையா? என்பது போன்ற ஒரு கேள்வி கேட்கக்கூடிய மன நிலை ஆண்களுக்கு இருந்தாலே போதும். நிலைமை மாறும்.
நீங்கள் பிறந்த ஊர், ஊரின் மண்வாசம் பற்றிச் சொல்ல முடியுமா?
நான் ஆந்திராவில் பிறந்தேன். விசாகப்பட்டினம் அருகில் அனக்கா பள்ளி என்கின்ற ஊர்தான் எங்கள் ஊர். ஆனால் அங்கே வாழ்ந்தது அதிகம் இல்லை. எனக்கு ஐந்து வயது இருக்கும்போதே நாங்கள் சென்னை வந்துவிட்டோம். அந்த வயதிலேயே அம்மா இறந்து விட்டார்கள். அதன் பின்பு நினைவு தெரிந்த நாளில் இருந்து சென்னையிலேயே இருந்ததனால், என்னைப் பொறுத்தவரை, சென்னைதான் என்னுடைய ஊர். ஆனால் அடிக்கடி அப்பாவுடன் சேர்ந்து எங்கள் ஊருக்குச் செல்வோம். என்னுடைய தாத்தா, பாட்டி, அண்ணா, அண்ணி அனைவரும் அங்கேதான் இருந்தார்கள். எல்லோரையும் பார்ப்பதற்கு நாங்கள் அங்கு செல்வதுண்டு. இப்பொழுதும் நான் அங்கு சென்றுகொண்டுதான் இருக்கிறேன்.
அங்கு போகும்போது, நம் தாய்மொழியைப் பேசுகிறபோது அது ஒரு நெருக்கமான சூழல்தானே! தாய்மொழியில் பேசி, நமக்கு வேண்டியவர்களை எல்லாம் சந்திக்கிறபோது அது ஒரு இணக்கமான புரிதலை ஏற்படுத்துகிற அனுபவமாகத்தான் இருக்கிறது.
இருந்த போதும் நான் வேறு ஏதாவது ஊருக்குச் சென்று விட்டு, சென்னைக்கு திரும்பி வந்தால்தான் அப்பாடா என்று இருக்கும். சென்னைக்கு திரும்பி வந்த பின்பு தான் நம்முடைய சொந்த வீட்டிற்கு வந்து விட்டோம் என்கின்ற ஒரு உணர்வு வரும்.
நான் தெலுங்கு படித்ததைவிட, தமிழ்தான் அதிகம் படித்திருக்கிறேன். இரண்டாவது மொழி எனக்கு தமிழ். அதைத் தாண்டி தமிழ் மொழி மீது எனக்கு ஒரு மிகப்பெரிய ஈர்ப்பும் காதலும் இருந்து கொண்டிருக்கிறது. அதற்கு என்னுடைய தமிழ் வாத்தியார் பாலாஜிதான் காரணம் என்று சொல்ல லாம். தமிழில் பேசுவது தமிழைப் படிப்பது, இங்கே இருக்கக்கூடிய இலக்கியங்களைப் படிப்பது, இவற்றிற் கெல்லாம் தொடக்கம் என்று பார்த்தால் கதை வாசிப்புதான். கதைகளைப் படிப்பதிலிருந்துதான் நான் தமிழைப் படிக்க ஆரம்பித்தேன்.
மற்றபடி இங்கு நடந்து கொண்டிருக்கக்கூடிய அனைத்து விதமான முற்போக்கு வழித்தடங்களையும் பார்க்கிறபோது, அதில் ஒரு ஈர்ப்பும், அதில் மொழிக்கு எந்த அளவுக்கு இடமிருக்கிறது என்பதை உணர்கிறபோது, மொழியினுடைய நீள அகலங்களை உணர்ந்து கொள்ள முடிகிறது. தெலுங்கில் எனக்கு எழுதப் படிக்கத் தெரியும். ஆனால் நம் தமிழ் இலக்கியத்தோடு இருக்கும் நெருக்கம், தமிழ் இலக்கியங்களை வாசித்த அனுபவம் அளவுக்கு, எனக்கு தெலுங்கில் இல்லை என்றுதான் சொல்ல முடியும்.
உங்களுக்குள் மறக்க முடியாத சிறுவயது அனுபவங்கள், பிடித்த விளையாட்டுக்கள் என ஏதேனும் நினைவில் இருக்கிறதா?
படப்பிடிப்புத் தளங்கள்தான் எனக்கு விளையாட்டு மைதானமாக இருந்திருக்கிறது. நான் விளையாடக்கூடிய இடம், நான் பழகிய இடம், இவை அனைத்துமே ஒளிப்படக் கூடங்களும், படப்பிடிப்புத் தளங்களும்தான். அதாவது படப் பிடிப்பிற்காக வெளியூர் செல்கிறபோதும்கூட, எனக்கு வேலையும் அங்குதான், விளையாட்டும் அங்கு தான். அப்படித்தான் என்னுடைய பயணம் இருந்தது.
அதைத் தாண்டி, வீட்டிற்கு வந்த பின்பு, என் பக்கத்து வீட்டில் இருக்கக்கூடிய நண்பர்களுடன் விளையாடுவதும் உண்டு. பள்ளிக்கு இரண்டு வருடம் சென்றேன். அங்கு நொண்டி விளையாடுதல், கண்ணாமூச்சி விளையாடுதல் இதுபோன்று சிறு குழந்தையாக இருந்தபோது விளையாடிய நினைவுகள் இப்போதும் இருந்து கொண்டுதான் இருக்கின்றன.
பள்ளிப் பருவத்தில் எது மாதிரியான அனுபவங்களைச் சேமித்து வைத்திருக்கிறீர்கள்?
பள்ளிப் பருவம் என்பது எனக்கு இரண்டு வருட கால கட்டம்தான். அந்த இரண்டு வருடம்கூட நான் சரியாகப் பள்ளிக்குச் சென்றதில்லை. ஏனென்றால் படப்பிடிப்பிற்கு அழைத்துக் கொண்டு போய்விடுவார்கள். என்னுடைய ஐந்தாவது வகுப்பு, ஏழாவது வகுப்பு மட்டும்தான் நான் பள்ளிக்குச் சென்று படித்திருக்கிறேன். அப்போது எனக்கு 12 வயது இருக்கும். அந்த சிறு வயதிலேயே, நான் நடித்துக் கொண்டிருந்ததால், அதிலேயே எனக்கு நாட்டமும் நாட்களும் சென்றுகொண்டு இருந்தன.
தமிழ் இலக்கியங்களைப் படிப்பதுண்டா?
நவீன இலக்கியம் படித்த அளவுக்கு, சங்க கால இலக்கியம் படித்ததில்லை. நாடகங்களுக்காக வாசித்துத் தெரிந்து கொண்டிருக்கிறேன். நாடகங் களில் நடிக்கிறபோது சங்கப் பாடல்களை எல்லாம் நாங்கள் மேற்கோள் காட்டுவது உண்டு. இதையெல் லாம் தாண்டி தமிழ் இலக்கியத்தின் மீது இருக்கக்கூடிய ஆர்வத்தின் காரணமாக, அவற்றை எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்கின்ற ஒரு ஈடுபாடு எனக்குள் இருந்து கொண்டுதான் இருக்கிறது.
உங்களால் மறக்க முடியாத ஆசிரியர்கள் என்று யாரை குறிப்பிடுவீர்கள்?
எனக்கு சிறிய வயதில் தெலுங்குதான் பேசத் தெரியும். ஆனால் தமிழில் நடிப்பதற்காக தேவர் பிலிம்சில் "முருகன் அடிமை' என்கின்ற படத்தில் முருக னாக நடிப்பதற்கு என்னைக் கேட்ட போது, தமிழ் சரியாக வரவில்லை.
படப்பிடிப்பிற்கு 15 நாட்களே இடைவெளி இருந்தன. அதற்குள் என் மகளுக்கு தமிழ் கற்றுக் கொடுங்கள் என்று என்னுடைய ஆசிரியர் பாலாஜி அவர்களிடம் என்னைச் சேர்த்துவிட்டார் என் தந்தையார். ஆசிரியர் பாலாஜி அவர்கள்தான், எனக்கு தினந்தோறும் ஒரு மணி நேரம் தமிழ் கற்றுக் கொடுத்தார். தமிழ் மீது என்னுடைய ஆசிரியருக்கு அளவிலாத பற்று இருந்ததன் காரணமாக, எனக் கும் தமிழ் குறித்து நிறைய சொல்லிக் கொடுத்தார். தமிழின் ஆழத்தை, அதன் நீள அகலத்தை, எனக்குப் புரியும்படியாகவும், எனக்கு அதன் மீது அளவில்லாத ஈடுபாட்டை ஏற்படுத்தும் விதமாகவும்தான் அவர் கற்றுக் கொடுத்த பாங்கு இருந்தது. அந்த சிறிய வயதில் எனக்கு எதுவும் புரியவில்லை என்றாலும், அவர் சொல்லிக் கொடுத்ததை வைத்து, தமிழில் எவ்வளவு நுணுக்கங்கள் இருக்கின்றது என்பதை நான் உணர்ந்து கொண்டேன். ஆதலால்தான் தமிழ் மீது எனக்கு அளவில்லாத ஆசையும் ஆர்வமும் ஏற்பட்டது. என் தமிழ் ஆசிரியர்தான் எனக்கு தமிழ் எழுதவும் கற்றுக் கொடுத்தார்.
நான் கதாநாயகியாக நடித்துக் கொண்டி ருந்தபோது அவர் என்னை பார்ப்பதற்காக வருவார். அப்போதும் கூட எனக்கு ஒரு "எக்ளேர்ஸ் சாக்லேட்' வாங்கிக்கொண்டு வருவார். சிறிய வயதில் எனக்கு சாக்லேட் வாங்கிக் கொடுத்தது போன்றே, அப்பொழுதும் ஒரு சாக்லேட் கொடுத்துவிட்டு, காபி சாப்பிட்டுவிட்டு, எங்கே ஒரு லைன் எழுதிக் காட்டு என்று, நான் சரியாக எழுதுகிறேனா? என்பதைக் கவனித்து விட்டுதான் செல்வார்.
முதன்முதலில் நான் பள்ளிக்குச் சென்றது ஐந்தாவது வகுப்பு, அந்த வகுப்பில் பாலா திரிபுரசுந்தரி என்று ஒரு ஆசிரியர் இருந்தார். அவர்களிடம் அப்பா என்னைப் பற்றி அனைத்தையும் சொல்லிதான் பள்ளியில் சேர்த்தார். "கென்னடி கிண்டர் கார்டன்' என்ற பள்ளியில்தான் நான் பயின்றேன். அந்த ஆசிரியை ஒவ்வொரு நாளும், எனக்குத் தனியாக நேரம் ஒதுக்கி சொல்லிக்கொடுப்பார்கள். தமிழின் மீது எனக்கு இருக்கக்கூடிய ஆர்வத்தை அவர்கள் நன்றாக உணர்ந்து இருந்தார்கள். அவர்களை என்னால் எப்பொழுதுமே மறக்க முடியாது.
நீங்கள் நடித்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்தது என்றோ அல்லது உங்களுக்கான அங்கீகாரத்தை கொடுத்தது என்றோ எந்த திரைப்படத்தைக் குறிப்பிடுவீர்கள்?
அனைத்தும் பிடித்துதான் நாம் நடிக்க ஒத்துக் கொள்கிறோம். எதையுமே பிடிக்காமல் செய்வதில்லை. என்னைக் கேட்டால் நான் ஏற்ற ஒவ்வொரு கதாபாத்திரமும் எனக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததுதான். எந்த கதாபாத்திரத்தையுமே ஏனோ தானோ என்று நினைப்பதில்லை.
இதில் தமிழை மட்டுமே நான் கணக்கில் எடுத்துச் சொல்லமுடியாது. நான் மலையாளத்தில், தெலுங்கில் இது போன்று நிறைய மொழி படங்களில் நடித்திருக்கிறேன். தமிழில் எடுத்துக்கொண்டால் "பவுனு பவுனுதான்' அந்த கதாபாத்திரம் நான் மிகவும் ரசித்து நடித்தது. அதே போன்று "மறுபடியும்' பின்பு "விருமாண்டி', "மகளிர் மட்டும்' தற்பொழுது "தன்டட்டி' போன்ற படங்களில் செய்திருக்கக்கூடிய கதாபாத்திரங்கள் அனைத்துமே மிக சிறப்பானவை. பிறகு "சாட்சி' என்கின்ற படமும் வெளிவருவதற்கு தயாராக இருக்கிறது. பின்பு பாபி சிம்ஹா தயாரிப்பில் ஒரு படம் வரவிருக்கிறது. தற்பொழுது நடிக்கக்கூடிய படங்களில் எனக்கு மிகவும் பிடித்திருந்தால் மட்டுமே நடிப்பதற்கு ஒத்துக்கொள்கிறேன்.
திரைத்துறை அனுபவங்கள், உங்களின் அன்றாட வாழ்வியலுக்கான அனுபவங்களைக் கற்றுக்கொடுத்ததா?
திரைத் துறை என்பது நாம் பணிபுரியக்கூடிய ஒரு இடம். இருந்தபோதும், அதுவும் சேர்ந்ததுதான் வாழ்க்கை. ஆதலால் அங்கு கிடைக்கக்கூடிய அனுபவங் கள், அதுவும் வாழ்க்கையைச் சார்ந்துதான் இருக்கிறது. நாம் வாழ்க்கையில் என்ன கற்றுக் கொள்கிறோமோ அது நாம் பணிபுரியக்கூடிய இடத்திலும் பயனுள்ள தாகத்தான் இருக்கும். இடம் எதுவாக இருந்தாலும் நாம் எப்படி நடந்து கொள்கிறோம் என்பதைப் பொறுத்தே அனைத்தும் மாறுபடுகிறது.
குறிப்பாக சினிமாத்துறையில் நாம் அதனுடைய தன்மையை முதலில் புரிந்துகொள்ள வேண்டும். தொடர்ந்து ஒரே அலுவலகத்தில் பணி புரிவது போன்று சினிமா இல்லை. இங்கே ஒரே வேலையைத் திரும்பத் திரும்ப செய்வதும் இல்லை. ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டுமென்றால், அது மிஞ்சி மிஞ்சிப் போனால் ஒரு ஆறு மாதம் இருக்கும். அந்த ஆறு மாத ப்ராஜெக்ட்டில் நம்முடைய கதாபாத் திரத்திற்கான வேலை என்று பார்த்தால் ஒரு 30 நாளில் முடிந்துவிடும்.
ஒரு கதாபாத்திரத்தில் பயணிக்கிறபோது, அந்த கதாபாத்திரம் குறித்த செய்திகளை நாம் உள்வாங்கிக் கொண்டு, அந்த கதாபாத்திரத்தை நாம் நமதாக்கிக் கொள்ள வேண்டும், அதாவது கதை கேட்டதிலிருந்தே நமக்குள் அந்த கதாபாத்திரத்திற்கான பயணம் நடந்துகொண்டே இருக்கும். அந்த பயணம் கதை கேட்ட திலிருந்து படப்பிடிப்பு போகிற வரை நமக்குள் திரும்பத் திரும்ப நடந்துகொண்டே இருக்கும். படப் பிடிப்புக்குப் போன பின்பு அங்கு எல்லாமே நமக்கு ரியலைஸ் ஆகக்கூடிய ஒரு இடமாக அது இருக்கும். அந்தப் பதினைந்து நாட்களில் ஒரு வாழ்க்கையை நாம் அனைவரின் முன்னிலையிலும் தத்துரூபமாகக் கொண்டு சென்று சேர்க்கவேண்டும் என்பது, நம்முடைய பொறுப்பாக இருக்கிறது. அதற்காகத்தான் இயக்குனர் நமக்கு அந்த கதாபாத்திரத்தை கொடுக்கிறார்.
ஒரு இயக்குனர் மனக்கண்ணில் பார்த்திருக்க கூடியதை, நாம் உண்மையான சதையோடும், ரத்தத் தோடும் நடமாடக்கூடிய ஒரு கதாபாத்திரமாக செய்து முடிக்கவேண்டும். அப்போது தான் அந்த கதாபாத்திரம் அதற்கான வேலையை செய்து முடித்ததாக இருக்கும்.
இதில் நிறைய செய்திகள் இருக்கின்றன. பின்பு பாடி லாங்வேஜ் எந்த அளவுக்கு இருக்கவேண்டும், பேசக்கூடிய விதம் எப்படி இருக்க வேண்டும், அந்த கதாபாத்திரனு டைய மொழி என்ன? அவர்களுடைய கோபம் என்ன? அந்த கதாபாத்திரம் மிகவும் கூச்ச சுபாவம் உள்ள கதாபாத்திரமா? அல்லது உணர்ச்சிவசப் படக்கூடிய கதாபாத்திரமா? அல்லது அந்த கதா பாத்திரத்திற்கு நடக்கக்கூடிய தன்மை என்ன? மாறுதல் கள் என்ன? இவை அனைத்தையுமே கொண்டுவந்து ஒரு வாழ்க்கையை வாழ்ந்து முடித்து விட்டுதான் நாம் அந்த படத்தில் இருந்து வெளியே வருகிறோம்.
அதன் பின்புதான் அடுத்த கதைக்கான திட்டமிடலுக்குச் செல்கிறோம். அந்த விதத்தில் பார்க்கிறபோது எடுத்த வேலையை முடிக்க வேண்டும் என்கிற நிர்பந்தத்தை நமக்கு ஏற்படுத் தும் ஒரு வேலையாகத்தான் திரைத் துறை இருக்கிறது.
இதில் ஒரு சிறப்பு என்னவென்றால் நமக்குத் தெரியாத நிறையபேர் வாழ்க்கையை வாழ்ந்து கொள்கிற ஒரு வாய்ப்பை திரைத்துறை கொடுக்கின்றது.
உதாரணத்திற்கு ஒரு கிராமத்தில் இருக்கக்கூடிய கட்டுமானப் பணி செய்யும் பெண்ணின் வாழ்க்கையை நான் எப்படி வாழமுடியும்? அது ஒரு கதைக்காகவோ அல்லது கதாபாத்திரத்திற்காகவோ வருகிறபோது, அந்த கதாபாத்திரத்திற்குள் நான் பயணிக்கிறபோது, அந்த பெண்ணிற்கான வாழ்க்கையை நான் வாழ்ந்து முடிக்கிறேன். அதிலிருந்து எனக்கு நிறைய அனுபவங் கள் கிடைக்கின்றன. அதாவது கூடு விட்டு கூடு பாய்கிற மாதிரியான செயல்கள் நடக்கின்றன.
அதாவது சாதாரண மனிதர்கள் மற்றவர் களுடைய துன்பத்தை உணர்வது அல்லது உற்று நோக்குவதைவிட, எங்களை அது மிகவும் பாதிக்கும். ஏனென்றால் அவர்களுடைய துன்பத்தை நாம் பார்க்கக்கூடிய இடத்திற்கு உணர்வுபூர்வமாக எடுத்துச் செல்கிறோம். மனமே அப்படி மாறி விடுகிறது. நடிப்பவருக்கு இருக்கக்கூடிய இந்த மனநிலை, ஒரு எழுத்தாளருக்கும் இருக்கும் என்று என்னால் உணர முடிகிறது. இதனை நாங்கள் ஒரு வேலைக்காக செய்தால்கூட, அது ஒரு உடற்கூறியல் மாற்றங் களை எங்களுக்குள் ஏற்படுத் தும். அந்த மாற்றங்கள் ஷூட்டிங் முடித்தவுடன் பேக்கப் செய்கிற போது, லைட்டை ஆப் செய்துவிட்டு வரக்கூடிய ஒரு செயல்பாடு அல்ல.
சாதாரணமாக ஒரு காரில் வெளியே சென்று விட்டு வருகிறபோது, இன்று காலையில்கூட மிகவும் வயது முதிர்ந்த ஒரு பாட்டி தனியாக நின்றுகொண்டு பேசிக்கொண்டே இருக்கிறார்.
அவர் கையை அசைத்து அசைத்து பேசிக்கொண்டி ருக்கிறார். ஆனால் அவர்கள் மன நலம் பாதிக்கப் பட்டவரை போலத் தெரியவில்லை. அப்பொழுது அந்த இடத்தில் என்னுடைய கார் நிறுத்தப்பட்டது. அந்த இரண்டு நிமிடத்தில் அவர்களை பார்க்கிறபோது, அவரு டைய உலகம் என்ன என்று அவர்களுடைய உலகத்திற் குள் உள்ளே சென்று பார்த்துவிட்டு வெளியே வர முடிந்தது. எனவே யாரைப் பார்த்தாலும் என்னைப் பொருத்தவரை அவர்கள் ஒரு கதாபாத்திரமாக தான் எனக்கு தெரிவார்கள். நமது எண்ணங் களை அதற்கு பழக்கப்படுத்தி இருக்கிறபோது நம்முடைய எண்ணம் அதை நோக்கி பயணிக்கிறது. சினிமா துறையில் நான் வேலை நிமித்தமாக செய்யக்கூடிய அனைத்து செயல்பாடுகளுமே என்னு டைய வாழ்க்கையிலும் அது ஒரு பாகமாகத்தான் இருக்கிறது .
திரைத்துறையில் தாமரை போன்ற பெண் கவிஞர்களும், பெண் இயக்குநர்களும் முத்திரை பதித்துக் கொண்டுதான் இருக்கிறார் கள். இன்னும் நிறைய பெண்கள் பயணிக்க வேண்டும் எனில் அவர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
எழுத்து மற்றும் இயக்கத்தில் மட்டும் கிடையாது. ஒட்டுமொத்த சினிமாவை எடுத்துக்கொண்டாலே பெண்கள் பணிகளைச் செய்து வருகிறார்கள். குறிப்பாக சவுண்ட் இன்ஜினியரிங், ஆர்ட் டைரக்சன், ப்ரொடக் சன் டிசைனிங், எக்ஸிக்யூடிவ் ப்ரொடக்சன், சினிமா போட்டோகிராபி, எடிட்டிங் இது மாதிரியான பிரிவுகளிலும் பெண்கள் சாதித்து வருகிறார்கள். இதில் பெண்ணென்ன? ஆணென்ன? ஏன் பெண்களைத் தனியாக சித்தரிக்கவேண்டும்? நான் என்ன நினைக் கிறேன் என்றால் பெண்கள் இதை செய்யலாமா? செய்ய வேண்டாமா? என்கிற இடத்திற்கே செல்ல வேண்டாம். பெண்ணோ ஆணோ யாருக்கு எதில் ஆர்வம் இருக்கிறதோ,
அவர்கள் அந்த வேலை யைச் செய்துவிட்டுப் போகட் டுமே? அதில் யார் முழுமை யாக செயல்பட்டாலும், அது எந்த பாலினமாக இருந்தா லும் அவர்கள் அதில் முன்னேற முடியும். அது எந்த பிரிவாக இருந்தாலும் பரவாயில்லை. முன்னேறு வதற்கு ஒவ்வொருவருடைய தனிப்பட்ட ஆர்வம்தான் முக்கிய காரணமாக இருக்கிறது. இதில் ஆண் என்றோ பெண் என்றோ பிரித்துப் பார்க்க முடியாது.
சினிமா என்று மட்டும் கிடையாது. எல்லா பெண் களுக்கும் நான் சொல்லக் கூடியது என்னவென்றால் நீங்கள் என்ன விருப்பப் படுகிறீர்களோ? எது உங்களை மிகவும் ஈர்க்கிறதோ?
அதை கண்டுபிடித்து அதில் நீங்கள் எவ்வளவு உழைப்பு வைத்தாலும் அந்த உழைப்பு உங்களுக்கு களைப்பாகவே இருக்காது. அந்த உழைப்பு மிகவும் மகிழ்ச்சி தரக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கும்.
யாராக இருந்தாலும் நமக்குள் எதன் மீது ஆர்வம் என்று கண்டுபிடித்து அதில் இறங்கவேண்டும். எதையுமே கண்டுபிடிக்காமல், தாய் தந்தை சொல்கிறார் கள் என்று திருமணம் செய்துகொண்டு, குழந்தை பெற்றுக் கொள்வது போன்ற செயல்களில் பெண்கள் இறங்கக்கூடாது.
நாம் குழந்தையாக இருந்தபோது ஏதாவது ஒன்று நமக்கு பிடித்துதான் இருக்கும். அதை அப்படியே மழுங்கடித்து விடுவதுதைத்தான் இந்த சமூகமும், ஆணாதிக்கப் பார்வையும் செய்துகொண்டிருக்கிறது. இனியும் இதற்கெல்லாம் நாம் ஒத்துப் போக வேண்டிய அவசியம் இல்லை.
ஆண்களுக்கு பெண்கள் அடங்கிப் போவது என்பது இன்னும் இருக்கிறதே?
இதற்கு நம்முடைய குடும்ப அமைப்பு தான் காரணம். குடும்பம் என்பது நிர்பந்திக்கக் கூடிய கட்டமைப்பாக இருக்கக்கூடாது. அம்மா என்றால் வீட்டு வேலை செய்யவேண்டும், அவள் எழுந்ததிலிருந்து, தூங்குகிற வரைக்கும் அனைத் தையும் செய்ய வேண்டும். அப்பா என்றால் வெளியில் சென்று வேலை பார்த்துவிட்டு வருவார். அவருக்கு காபி எல்லாம் கையில் கொண்டுவந்து கொடுக்க வேண்டும். இது மாதிரியான ஒரு நிலையைப் பார்த்து தான் பெண் குழந்தைகளும், ஆண் குழந்தை களும் வளர்கிறார்கள். இந்த நிலை முதலில் மாறவேண்டும். அதேபோல், ஆறு மணி ஆனால் பெண்கள் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்கிற ஒரு நிர்பந்தத்தோடும் பாகு பாட்டோடும் தான் நாம் அவர்களை அணுகு கிறோம். பெண்கள் என்றால் அவர்கள் உடலளவில் கெட்டுப் போய்விடுவார்களோ? என்கிற பயம் அனைவருக்கும் இருந்து வருகிறது. ஒன்றை யோசிக்க வேண்டும். அப்படி பெண் மீது தாக்குதல் ஏற்படுத்து வது யார்? அதுவும் இன்னொரு குடும்பத்தில் இருக்கும் ஒரு ஆணாகத்தானே இருக்கிறார்.
அப்படித் தாக்குதல் நடத்தக்கூடிய ஆண், அவன் வீட்டில் எப்படி வளர்க்கப்படுகிறான் என்பதையும் நாம் கவனிக்க வேண்டியது முக்கியம். சிறுவயதிலிருந்தே பெண்ணும் உனக்கு சமமானவள். உனக்கு தரப்படுகின்ற அனைத்தும் அவளுக்கும் தரப்படும், நீ ஒன்றும் பெரிய கொம்பு முளைத்து வரவில்லை.
அவள் ஒன்றும் உன்னைவிட குறைந்தவள் கிடையாது என்று சொல்லிச் சொல்லி வளர்த்தோம் என்றால் ஆண்கள், பெண்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடிய மனநிலைக்குச் செல்ல மாட்டார்கள்.
அப்படி வளர்க்கத் தொடங்கினால், பெண்களை வெறும் உடம்பாக பார்க்கக்கூடிய மனநிலை ஆண்களுக்கு ஏற்படாமல் இருக்கும். பெண் என்றால் அவள் ஒரு குழந்தை பெற்றுக் கொடுக்கக் கூடிய எந்திரம் என்றுதான் இந்த சமூகம் பார்க்கிறது. இந்தப் பார்வைப் பழுதை நீக்கவேண்டும்.
தமிழ்ப்பெண்களின் சேலை, தாவணி போன்ற பாரம்பரிய உடைகள் சிறப்பானது அல்லவா?
இப்போது நமக்கு நம்முடைய புடவையும் தாவணியும் சிறப்பு. மேற்கத்திய நாடுகளுக்கு அவர்களுடைய உடை நாகரிகம் அவர்களுக்கு சிறப்பு. சவுதிக்கு சென்றால் அவர்களுக்கு புர்கா சிறப்பு. பஞ்சாபிற்கு சென்றால் அவர்களுடைய பஞ்சாபி உடை அவர்களுக்கு சிறப்பு. கேரளாவுக்கு சென்றால் அவர்களுடைய அந்த முண்டும் கைலியும் சிறப்பு. அந்தந்த பகுதியில், அந்தந்த இடத்தில், ஏதோ ஒரு விதத்தில் ஒரு பண்பாட்டு முக்கியத்துவம் வாய்ந்த ஆடை கலாச்சாரமாக வளர்ந்திருக்கிறது.
அதனால் இது சிறப்பு, அது சிறப்பு இல்லை, என்பதெல்லாம் கிடையவே கிடையாது. ஸ்ரீலங்காவில் எல்லாம் பெண்கள் லுங்கி கட்டிக் கொள்வார்கள். இல்லையெனில் ஸ்கர்ட், ஷர்ட் போட்டுக் கொள்வார்கள். ஆகவே அது சிறப்பு, இது குறைவு என்று நாம்தான் சொல்லிக் கொள்கிறோம்.
யாருக்கு எது பிடிக்கிறதோ, யாருக்கு எது சந்தோஷத்தைக் கொடுக்கிறதோ, யாருக்கு எது நல்ல வசதியாக இருக்கிறதோ அதுதான் அவர்களைப் பொறுத்தவரை சிறந்த உடையாக இருக்கமுடியும்.
நீங்கள் கபாலீஸ்வரர் பற்றியேல்லாம் பாடல்கள் எழுதி இருக்கிறீர்களே வேஷ்டி கட்டிக் கொண்டு வரவேண்டியதுதானே? ஏன் ஜீன்ஸ், டீசர்ட் போட்டுக்கொண்டு வந்திருக்கிறீர்கள்? ஏன் என்று கேட்டால், இல்லம்மா நான் பைக் ஓட்ட வேண்டும் என்று குறிப்பிடுவீர்கள். ஒன்று நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். யாரையும் யாரும் நிர்பந்திக்க வேண்டிய அவசியம் இல்லை.
மனிதர்களை விட மற்ற உயிரினங்களே மேலானது என்று எப்போதாவது நினைத்ததுண்டா?
இதில் "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என்கிற திருவள்ளுவர் கட்சிதான் என் கட்சி. ஆண்களுக்கு நிகராக வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கை இப்போது இருக்கிறதே.
இதனால், பெண்களை பூட்டி வைத்திருந்த அந்த அடிமைத் தனம் முற்றிலும் தகர்க்கப்பட்டு விட்டது என்று கருதலாமா?
அப்படிச் சொல்லமுடியாது. இப்போதும் கூட எல்லாப் பெண்களும் வேலைக்குச் செல்வதில்லை. குறிப்பிட்ட சில விழுக்காட்டினரே வேலைக்குச் செல்கிறார்கள். அதே நேரம். இப்போது, பெண்களும் சம்பாதிக்க வேண்டும் என்கின்ற ஒரு நிலை உருவாகி இருக்கிறது. நெடுங்காலமாக தந்தை பெரியார் தொடங்கி, பல்வேறு முற்போக்காளர்கள் பேசியதான் விளைவாகவே இப்போது பெண்கள் தைரியமாக எதையும் தீர்மானிக்க ஆரம்பித்திருக்கிறார்கள். ஆனால் பெண்கள் போகவேண்டிய தூரம் இன்னும் அதிகம்.
திரைத்துறையில் ஒருவரின் வெற்றி தோல்வியை யார் நிர்ணயிக்கிறார்கள்?
அது ஒரு சந்தர்ப்பம்தான். ஒரு சாதாரணமான நடிகர் அல்லது நடிகை ஒரு பிரம்மாண்டமான, வெற்றிப் படத்தில் இருந்துவிட்டாலே அவர்கள் வெற்றியை அடைந்த மாதிரி ஒரு தோற்றம் தெரிகிறது. அதேபோல் திறமைசாலிகள் என்னதான் சிறப்பாக நடித்தாலும், வெற்றியடையாத திரைப்படங்களில் நடித்தால், அவர்கள் தோல்வி அடைந்தது போன்ற நிலையும் இங்கே இருக்கிறது. இருப்பினும், நடிப்பில் நாம் தனித்துத் தெரிய வேண்டும் என்று. முயற்சித்தால், இந்தத் துறையிலும் நம்மால் ஏதாவது ஒரு நல்ல பெயர் வாங்க முடியும்.
பெண்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்து வருகிறீர்களே. இதனால் உங்க ளுக்கு ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டதுண்டா?
என்னைப் பொறுத்தவரை எனக்கு பின்னடைவு ஏற்படுத்தக்கூடிய செயல்களை யாரும் செய்ய மாட்டார்கள். நமக்கு முன்னே ஒரு செயல் நடக்கிறபோது, நியாயமாக நாம் குரல் கொடுத்தால், அதை எல்லோரும் ஏற்றுக்கொள்கிறார்கள். அது சார்ந்து எனக்குள் ஒரு புரிதல் வந்த பின்புதான் அப்படி செயல்படவும் முடிகிறது.
திரைத்துறைக்கு வரவிரும்பும் பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது?
திரையுலகில் எல்லா பிரிவுகளிலுமே, கலந்து கொள்வதற்கும், பணி செய்வதற்கும் பெண்கள் முன் வரவேண்டும். எல்லாவற்றையும் கற்றுக்கொண்டு பெண்கள் பணி செய்ய வேண்டும்.
கொரோனா காலகட்டம் சமூகத்தில் மட்டுமல்ல, காலச் சூழலிலும் மிகப்பெரிய மாற் றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. அதிலிருந்து உங்களை நீங்கள் எப்படி மீட்டெடுத்து வந்தீர்கள்?
கொரோனாவில் பாதிக்கப்பட்ட பின்பு, அதை சரிசெய்தது, அதற்காக முயற்சி எடுத்து பாதுகாத்து கொண்டது, இவை அனைத்தும் இன்னும் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளவேண்டும் என்பதை உணர்த்தியதாகத்தான் உணர முடிகிறது.
புலம்பெயர் தொழிலாளர்களைப் பற்றி சாதாரணமாக நாம் யோசிப்பது கிடையாது. வட மாநிலங்களில் இருந்து இங்கு வந்தவர்கள், தெரியாத மொழிக்கு நடுவிலே வாழ்ந்து, அவர்கள் கொரோனாவுக்கு பயந்து சொந்த ஊர் நோக்கிப் பயணித்த அந்தக் காலகட்டம்... மறக்க முடியாதது. அதே போல் வடமாநிலங்களில் கூட்டம் கூட்டமாக பணி யாளர்கள் தங்கள் குடும்ப சகிதமாக நூற்றுக்கணக் கான மைல்கள் நடந்த அந்த கொடிய காட்சிகளும் நினைவுக்கு வந்து நம் மனதைப் பிசைகின்றன. இருந்தபோதும் அப்போது, நீங்கள் இனி நடக்க வேண்டாம். நாங்கள் உங்களுக்காக முகாம்களை ஏற் பாடு செய்கிறோம் என்று அதற்கான ஏற்பாடுகளில் இறங்கியதோடு, சிறப்பு ரயில்களை ஏற்பாடு செய்து, ஒவ்வொரு மாநிலத்திற்கும் மிகப்பெரிய நெட் வொர்க்கின் மூலம் அவர்களை அனுப்பிவைப்பது சாத்தியப்படுத்தப்பட்டது.
நிறைய என். ஜி. ஓ.க்கள் களத்தில் இறங்கினார்கள். நானும் என்னுடைய நண்பர் களுடன் சேர்ந்து அதற்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தோம்.
இதில் இன்னொரு அவலம் என்னவெனில், அவர் களுடைய குழந்தைகள் பள்ளி செல்வதே இல்லை. அவர்களுக்கு நாம் என்ன கல்வி கொடுக்கிறோம்.
ஒரு இடத்தில் வேலை செய்பவர்கள் அடுத்த இடத் திற்கு பெயர்ந்து செல்கிறார்கள். அப்படிச் செல்கிறபோது அந்த குழந்தைகளுக்கு கல்வி என்பது கிடைக்காம லேயே போய் விடுகிறது. இது மாதிரியான ஒரு ஜெனரேஷன் படிப்பதற்கான வாய்ப்பு என்பது இல்லாம லேயே இருக்கிறது. இதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்பதற்கான எண்ணங்கள், அப்பொழுது அழுத்தமாக ஏற்பட்டது.
இன்றைய இளைய தலைமுறைக்கும் இனிய உதயம் வாசகர்களுக்கும் என்ன சொல்ல விரும்பு கிறீர்கள்?
எல்லோருக்குமான சமத்துவத்தைப் பாராட்டுக்கள். நம்மை சுற்றிலும் நடக்கக்கூடிய நிகழ்வுகளைக் கவனியுங்கள். சமத்துவத்திற்கான இடம் உங்களுக்கு கொடுக்கப்படுகிறதா? அல்லது நீங்கள் யாருக்காவது அந்த சமத்துவத்தைக் கொடுக்கிறீர்களா? என்பதை உணர்ந்து, அது மாதிரியான ஒரு நிலைப்பாட்டில் நீங்கள் பயணிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நமக்கான அடிப்படை உரிமைகளை எவரிடமும் நாம் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எனி னும் எதிலும் கோபப்படாமல் சரியான முறையில் நம் கொள்கைகளை எடுத்துச் சொல்லவேண்டும். நாம் நியாயப்பூர்வமாக சொல்லும் எதையும் எல்லோரும் ஏற்றுக்கொள்வார்கள். இந்த நிலைதான் குடும்பத்திலும் சமூகத்திலும் இருக்கிறது. நல்ல மாற்றத்தை நோக்கி நாம் ஒவ்வொருவரும் அடியெடுத்து வைக்கவேண்டும்.