"காக்க பொருளா அடக்கத்தை ஆக்கம்
அதனினூஉங் கில்லை உயிர்க்கு'
-என்கிறார் வள்ளுவப் பேராசான்.
பொறுப்பில் இருப்பவர்கள் அடக்கமாக இருக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஏனென் றால், அதைவிடவும் பயன்தரக்கூடிய பண்பு என்று எதுவும் இல்லை என்பதே இதன் பொருள்.
கவர்னர் ஆர்.என்.ரவி போன்ற வர்களுக்கு அறிவுறுத்த வேண்டும் என்பதற்காகவே ஈராயிரம் ஆண்டு களுக்கு முன்பே வள்ளுவர் இப்படி யொரு குறளை எழுதிவைத்திருக் கிறார்.
தான் யார்? தனக்குக் கொடுக்கப் பட்டிருக்கும் பொறுப்பு என்ன? என்பதை, இந்த 73 வயதிலும் ரவி உணரவில்லை. வயோதிகத்தால் கூட பக்குவப்படுத்த முடியாத நிலையில், அவர் பரிதாபமாக நின்றுகொண்டிருக்கி றார்.
தன்னடக்கம் இல்லாமல், தனக்குக் கிடைத்திருக்கும் பதவியை வைத்துக் கொண்டு கவர்னர் ரவி தொடர்ந்து ஆட்டம் போடுவதால், தமிழக மக்களால் அவர் ஒரு கோமாளியாகவே பார்க்கப்படுகிறார்.
அவர் கையில் எடுக்கிற எல்லாமும் அவருக்கு எதிராகவே திரும்புகின்றன.
அதுமட்டுமல்ல, உச்சநீதிமன்றமே பலமுறை இந்த ரவியின் தலையில் நறுக் நறுக் என குட்டு வைத்தபோதும், அவரைக் கடுமையாகக் கண்டித்த நிலையிலும், அடங்காப்பிடாரியாகவே ஆட்டம் போட்டு அவமானத்தை தேடிக் கொண்டே இருக்கிறார் ரவி.
= தனது மசோதாக் களை ரவி கிடப்பிலேயே போட்டுவந்ததால்,அவருக்கு எதிராக 2023-ல் தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. இதை விசாரித்த தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு "காலவரையறையின்றி மசோதாக்களை கவர்னர் கிடப்பில் போடுவது மிகவும் கவலைக்குரியது. தாங்கள் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதி அல்ல என்பதை ஆளுநர்கள் மறந்துவிடக்கூடாது' என்று சாட்டை சொடுக்கியது.
இதன்பிறகும் மீண்டும் மீண்டும் கவர்னர் அழிச்சாட்டியம் செய்துவருவது பற்றி தமிழக அரசு தொடர்ந்த வழக்கை விசாரித்த அதே உச்ச நீதிமன்றம், கடந்த 8-ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. அதில்...
= கவர்னர் ரவியின் நடவடிக்கைகள் நேர்மையாக இல்லை.
அரசியல் சாசனத்துக்கு விரோதமானதாக இருக்கிறது. 10 மசோதாக்களை நிறுத்திவைத்து ஜனாதிபதிக்கு அவர் அனுப்பியது சட்டவிரோதம். அரசின் மசோதாக்களுக்கு ஆளுநர் ஒரு மாத காலத்துக்குள் ஒப்புதல் தரவேண்டும். மாநில அரசின் ஆலோசனைப்படியே அவர் செயல்படவேண்டும்' என்றெல்லாம் அதிரடி கிளப்பியதோடு, கவர்னரின் அதிகாரத்தைக் குறைக்கும் வகையில், தமிழக அரசு நிறைவேற்றிய சட்ட மசோதா உட்பட, அவரால் நிறுத்திவைக்கப்பட்டிருந்த 10 சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதலை வழங்கியிருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் இந்தத் தீர்ப்பு, இந்திய அளவில் ஆளுநர்களின் அதிகாரத்தைக் கேள்விக்குறியாக்கி, ஒன்றிய அரசின் அதிகார வெறிக்கு அடிகொடுப்பது போலவே அமைந்திருக்கிறது.
இந்தத் தீர்ப்பின் படி, பல்கலைக்கழகத் துணைவேந்தர் என்கிற பதவி, கவர்னரின் கையில் இருந்து நழுவியிருக்கிறது.
இருந்தும் பல்கலைக்கழகங்கள் மீதான தன் ஆதிக்கத்தையும் அதிகாரத்தையும் இழக்க விரும்பாத கவர்னர் ரவி, ஏப்ரல் 25-ல் பல்கலைக்கழக துணைவேந்தர்களின் மாநாடு ஊட்டியில் தொடங்குவதாக அறிவித்தார். அந்த சட்டவிரோத மாநாட்டுக்கு துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கரையும் அழைத்தார். இப்படிச் செய்தால், தமிழக அரசால் அந்த மாநாட்டைத் தடுக்க முடியாது என்றும், அதன் மூலம் மாநாட்டை நடத்தி, தன் அதிகாரத்தை நிலைநாட்டிவிடலாம் என்றும் மனப்பால் குடித்தார்.
தமிழக அரசோ, கவர்னரின் அந்த காமெடி நடவடிக்கையைக் கண்டுகொள்ளாமல் அமைதியாகத்தான் இருந்தது.
ஆனாலும், உச்சநீதிமன்றத் தீர்ப்பையும் சட்ட நுணுக்கங்களையும் புரிந்துகொண்ட அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அத்தனை பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்களும், அவர் கூட்டிய அந்த டுபாக்கூர் மாநாட்டைப் புறக்கணித்துவிட்டார்கள்.
இப்படியொரு படுதோல்வியைச் சந்தித்த கவர்னர் அந்த கல்வி மேடையை அரசியல் மேடையாக மாற்றிக்கொண்டு.. "மாநாட்டில் பங்கேற்கக்கூடாது என்று துணைவேந்தர்கள் மிரட்டப் பட்டார்கள்.நள்ளிரவில் அவர்கள் வீட்டுக் கதவைத் தட்டிய உளவுத் துறையினர், மாநாட்டில் கலந்துகொண்டால் ஒழுங்காக ஊர்போய்ச் சேரமாட்டீர்கள் என்று அவர்களை மிரட்டினார்கள்' என்று தமிழக அரசின் மீது சரமாரியாகப் புழுதிவாரித் தூற்றி இருக்கிறார்.
தொடர்ந்து தமிழக அரசோடு, உள் நோக்கம்கொண்டு மீண்டும் மீண்டும் மோதிவரும் கவர்னரை, தமிழக அரசும் நீதித்துறையும் பார்த்துக் கொள்ளட்டும். நமக்கு எழும் கேள்வி எல்லாம், இந்த ரவி, தமிழக கவர்னராகப் பொறுப்பேற்ற பிறகு ஏதேனும் ஒரு ஆக்கப்பூர்வமான செயலையாவது தமிழ்நாட்டிற்குச் செய்திருக்கிறாரா? என்பது தான்.
= நாகலாந்திலும் மேகாலயாவிலும் கவர்னராக இருந்த ரவியை 2021 செப்டம்பர் 9-ஆம் தேதி, ராஜ்பவனுக்கு அனுப்பிவைத்தது டெல்லி.
வந்ததிலிருந்தே தி.மு.க. அரசுக்கு நெருக்கடி கொடுப்பதையே தனது முழு நேர வேலையாகக் கருதிக்கொண்டு அவர் ஆட்டம் போட ஆரம்பித்தார்.
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றிய பல்வேறு மசோதாக்களை தாமதப்படுத்தியும், கிடப்பில் போட்டும், திருப்பி அனுப்பியும், ஜனாதிபதியிடம் அவற்றைத் தள்ளிவிட்டும், விளையாட்டுக் காட்டி வரும் கவர்னர் ரவிக்கு, நீதித்துறையே தொடர்ந்து அடிகொடுத்து வருகிறது.
இந்த நிலையில், தமிழக மக்களுக்கும் தமிழக அரசுக்கும் எதிராக அவர் நடத்திய ஏடாகூட நடவடிக்கைகள் சிலவற்றைப் பார்ப்போம் :
= திருவள்ளுவர் தினத்தில் திருவள்ளுவர் காவி அணிந்திருக்கும் ஒரு படத்தை ஏற்பாடு செய்து, அதற்கு மாலை அணிவித்ததோடு, சனாதனத்துக்கு எதிரான வள்ளுவரை, "சனாதன பாரம்பரியத்தின் பிரகாசமான துறவி' என வர்ணித்து, தமிழுணர்வாளர்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தினார்.
=அதேபோல் சனாதனத்துக்கு எதிராகக் கொடிபிடித்த வடலூர் வள்ளலாரை, அவர் வாழ்ந்த வடலூருக்கே சென்று "சனாதன தர்மத்தின் உச்ச நட்சத்திரம்' என்று வர்ணித்து, அவரது அன்பர்கள் மத்தியிலும் தகிப்பை உண்டாக்கினார்.
= ராஜீவ் வழக்கில் சிக்கி கால் நூற்றாண்டுக்கும் மேலாக சிறையில் அடைபட்டிருந்த பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்வதற்காக, தமிழக அரசு அனுப்பிய சட்டமசோதாவை இழுத்தடித்து, உச்சநீதிமன்றத்தால் கடுமையாகக் கண்டிக்கப்பட்டார்.
= ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்கும் அரசின் சட்ட மசோதாவுக்கும் ஒப்புதல் அளிக்காமல் அடாவடியாக இருந்துவருகிறார். இந்த சூதாட்டம் இதுவரை 86 பேரின் உயிரைக் குடித்திருக்கிறது என்பது பெரும் சோகம்.
= கோவையில் நடந்த கார் குண்டுவெடிப் பைத் தொடர்ந்து, தமிழக அரசின் சட்டம் ஒழுங்கை விமர்சித்து, காவல்துறையினரை பதட்டமாக்கினார்.
= நம் மாநிலத்தை தமிழ்நாடு என அழைக்கக்கூடாது என்றும், இனி 'தமிழகம்' என்றே அழைக்கவேண்டும் என்றும் உளறி, அனைத்துத் தரப்பினரின் வெறுப்பையும் தன் மேல் குவித்துக்கொண்டார்.
= அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை, தன்னிச்சையாக அமைச்சரவையிலிருந்து நீக்குவதாக அறிவித்து, மூக்குடைபட்டார்.
= ராஜ்பவன் முகப்புப் பகுதியில் 2023 அக்டோபரில் ஒரு முன்னாள் கைதி, பெட்ரோல் குண்டை வீச முயல, அது தரையிலேயே உடைந்து சிதறியது. அவனை காவல்துறையினர் மடக்கிப்பிடித்துக் கைது செய்தனர். ஆனால் கவர்னரோ, ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் பெட்ரோல் குண்டை வீசியதாகவும், அவர்கள் அத்துமீறி ராஜ்பவனுக்குள் நுழைய முயன்ற தாகவும் பொய் மூட்டைகளை அவிழ்த்து விட்டார். காவல்துறை அதிகாரிகளே அதற்கு விளக்கம்கொடுத்து, ரவியின் புளுகை அம்பலப் படுத்தினர்.
= சென்னை தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட போது, தமிழ்த்தாய் வாழ்த்தில் இடம்பெற்றிருந்த "திராவிட நல் திருநாடும்' என்ற வரியை நீக்கச் செய்து, தமிழ்நாட்டு மக்களின் உணர்வைக் கிளறினார்.
= அரசு தயாரித்துத் தந்த தனது உரைகளில் மதச்சார்பின்மை, சுயமரியாதை, பெரியார் என்பது போன்ற வார்த்தைகள் இருப்பதாகக் கூறியும், அரசைப் பாராட்டும் வரிகளில் தனக்கு உடன்பாடு இல்லை என்று கூறியும், ஆரம்பத்திலேயே சட்டப்பேரவை தொடங்கும்போதே தேசிய கீதத்தைப் பாடவில்லை என்றும், உப்புச்சப்பில்லாத காரணங்களின் பேரால், தொடர்ந்து மூன்று வருடங்களாக தனது சட்டசபை உரைகளைப் படிக்காமல், தொடர்ந்து அங்கிருந்து பாதியிலேயே ஓட்டம்பிடித்து, பேரவையின் மாண்பை கேலிக்குரியதாக ஆக்கினார்.
-இப்படிப்பட்ட ஏடாகூட நடவடிக்கைகளால் தமிழக அரசுக்கு எதிராகவும், தமிழக மக்களின் உணர்வுகளுக்கு விரோதமாகவும் நடந்துவருகிற, அடாவடி கவர்னரின் அத்துமீறல்களை இன்னும் எப்படி சகித்துக்கொள்வது?
-ஆதங்கத்தோடு,
நக்கீரன்கோபால்