ழுத்தாளர் சூர்யகாந்தனின் "முள் மலர் வேலி' கொங்கு நாட்டின் மண் மணம் ததும்பும் நடையில் எழுதப்பட்ட அருமையான நாவல். வேலி என்பது முட்களால் மட்டும்தான் ஆனதா? முள் மலர் வேலி தலைப்பே நாவலுக்குள் போகுமுன் கொஞ்ச நேரம் சிந்திக்க வைக்கிறது. வேலியின் முட்செடிகளையும் கொடிகளையும் நீர்பாய்ச்சி களையெடுத்து உரமிட்டு எவரும் வளர்க்க வேண்டியதில்லை என நாவலாசிரியர் தனது முன்னுரையில் குறிப்பிட்டுள்ளார். "தாமாகவே வளர்ந்த வேலிகள் மக்களால் அவர்களின் தேவைக்காக அவ்வப்போது அழிக்கப்பட்டு விடுவதுமுண்டு! காப்பாற்றப்படுவதுமுண்டு!' என்று கூறும் அவர் இந்த நாவலில் வருகின்ற கொங்கு வட்டார மொழி பேசும் கிராமத்து மனிதர்களின் வாழ்வியல், நகர்மயமாதல் போன்ற காலத்தின் கட்டாய மாற்றங்களால் எவ்விதம் பாதிக்கப்படுகிறது என்பதை தெள்ளத் தெளிவாக விவரிக்கிறார்.

ஒரு பெரும் நகரத்தின் அருகாமையில் விவசாயத்தையும் அதைச் சார்ந்த தொழில்களையும் மட்டுமே நம்பி இருந்த ஒரு கிராமத்தின் வெள்ளந்தி மனிதர்களின் வாழ்க்கையை இயற்கையின் மாற்றங்கள் மட்டுமல்ல, பக்கத்து பெருநகரின் நீட்சியும் மாற்றியமைக்கும் என்பது இந்த நாவலில் அருமையாக எடுத்துச் சொல்லப் பட்டிருக்கிறது. கொங்கு நாட்டின் சிறு கிராமத்து மண்ணில் எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவரான சூர்யகாந்தன், வேலியில் பூத்திருக்கும் செங்காந்தள் மலரின் மருத்துவ குணம் அறிந்த இந்த நாவலின் ஒரு கதாபாத்திரத்தைப் போலவே, தன்னைச் சுற்றி நடமாடும் உயிருள்ள மனிதர்களின் வாழ்நாள் நிகழ்வுகளை நேரில் கண்டு அனுபவித்து கதாபாத்திரங்களை படைத்து எழுதியுள்ளது நாவலின் உயிரோட்டத்துக்குக் காரணமாகிறது.

mul

ஒரு பெருநகரின் நீட்சியாக கிராமமும் அல்லாது நகரமும் அல்லாது தன்னடையாளம் தொலைத்துவிட்டு காட்சியளிக்கும் ஒரு ஊரின் பலதரப்பட்ட மனிதர்களின் வாழ்வியலைச் சொல்லுகின்ற நடையில்தான் இந்நாவல் வேறுபட்டு நிற்கிறது. கொங்கு நாட்டு வட்டார வழக்கில் உரையாடும் கதாபாத்திரங்களும், பணம் படைத்தவர்கள் நகர்த்தும் பகடைக் காய்களாக வாழ்ந்தடங்கும் பாமரர்கள் நேர்கொள்ளும் இன்னல்களை எடுத்தியம்பும் காட்சிகளிலும், கிராமத்தை ஒரு மாற்றுப் பண்டமாக தின்றுவிட எத்தனிக்கும் நகரத்தின் வியாபார வலைகளில் அகப்பட்டு தங்களின் வாழ்க்கையை அவ்வலைக் குள்ளேயே தேடிக்கொண்டிருக்கும் அப்பாவி மனிதர் களின் அன்றாடங்களை விவரிப்பதிலும் இந்த நாவல் தரத்தில் நிமிர்ந்து நிற்கிறது.

Advertisment

வேலியில் முட்களும் இருக்கலாம்; மலர்களும் இருக்கலாம்; அம்மலர்களை அடையாளம் கண்டு அதன் அழகையும் ரசிப்பதுபோல, கால மாற்றங்கள் ஏற்படுத்தும் கட்டாயங்களில் வாய்ப்புக்களும் சாத்தியக்கூறுகளும் உண்டு என்பதை புரிந்த மனிதர்கள் அதற்கொப்ப தங்களின் வாழ்க்கை முறையையும் மாற்றி அமைத்து விடுகிறார்கள். இந்நாவலின் முடிவில் ஒவ்வொரு கதாபாத்திரமும் நகரமயமாதலுக்கு இரையாகி தன்னைத் தானே மாற்றிக்கொள்ளவோ மாற்றத்துக்கு இடம் கொடுத்து மாறிக்கொள்ளவோ செய்கிறது. கிராமப்புறத்து விவசாய நிலங்கள் நகரக் குடியிருப்பு வளாகங்களாக மாறும் வகையில் நகர்புற வியாபார சக்திகள் முற்படுவதும் அதை தங்களின் சுய லாபத்துக்காக கைப்பற்றும் முயற்சி யில் கிராமத்து பணக்கார வர்க்கம் ஈடுபடுவதும் தெளிவாக சித்தரிக்கப்படுகிறது.

இனியும் விட்டு நீங்காத சாதீய வன்கொடுமைகள் இப்படிப்பட்ட இரண்டுங்கெட்டான் புறநகர்ப் பகுதிகளிலும் அவ்வப்போது தலைதூக்குவதையும் சில கதாபாத்திரங்கள் மற்றும் உரையாடல் மூலம் நாவலாசிரியர் சுட்டிக் காட்டுகிறார். உழைப்பை கைவிட்டு நகரம் காட்டிய எளிய வழிகளில் பணமீட்டப் புறப்படும் தொட்டியப்பனும் கண்ணுச்சாமியும் கைதாகி சிறைக்குச் செல்லும் நிலை வரை தங்களைத் தாங்களே தவறான பாதைக்கு இட்டுச் செல்கிறார்கள். நகர வாழ்வால் ஈர்க்கப்பட்டு கிராமத்தின் பூர்வீக மாந்தர்கள் புதுவாழ்க்கை முறை தேடி இடம்பெயர்ந்து சென்று விட்டாலும் காவல் துறை கைது செய்த தொட்டியப்பனையும் கண்ணுச்சாமியையும் காப்பாற்றும் மனிதர்கள் மூலம் கிராமத்து மனிதநேயம் இன்னும் முழுதும் மறைந்து போய்விடவுமில்லை என்கிற நல்ல செய்தியையும் தருகிறது இந்நாவல்.

இளைய தலைமுறையை சேர்ந்த ரஞ்சிதம் எனும் கதாபாத்திரம் கால மாற்றத்துக்கேற்ப பெண்களின் சுயசார்பு வாழ்க்கை அமைத்துக் கொள்ளவும் நகர வாழ்வுக்கேற்ப புதிய சுயதொழில் வாய்ப்புக்களை பயன்படுத்திக் கொள்ளவும் முற்படும் கதாபாத்திரமாக முன்னிலைப்படுத்தப்படுகிறது. பிற்படுத்தப்பட்ட கிராமத்து சமூகத்தினர் கல்வியறிவு பெறுவதின் மூலம் தங்களின் முன்னோர் எதிர்கொண்ட இன்னல் வாழ்க்கையை அகற்றும் முயற்சியில் ஈடுபடும் கதாபாத்திரமாக லெனின்ராசு என்கிற கதாபாத்திரம் சித்தரிக்கப்படுகிறது. புகழ்பெற்ற எலும்புமுறிவு வைத்தியசாலையின் வைத்தியர் கதாபாத்திரத்தின் மூலம் அந்த கிராமமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் முன்பிருந்த நிலை யிலிருந்து எவ்வாறு மாறிக் கொண்டிருக்கின்றன என்றும் கிராமத்து நாட்டு வைத்திய முறைகள் எவ்வாறு புகழ்பெற்றிருந்தன என்பது போன்ற உண்மை களை கதாசிரியர் எடுத்துச் சொல்லுகிறார்.

Advertisment

கிராமத்து வெள்ளந்தி மனிதர்களிலும் மக்களின் நலம் விரும்பிப் பணியாற்றும் நல்ல அரசியல் தலைவர் களும் அப்படிப்பட்ட மண்ணிலிருந்தும் பிறக் கிறார்கள் என்பதையும் எடுத்துரைக்கிறார். வலிமை கொண்டவன் ஒரு காலத்தில் கிராமத்தில் மார்தட்டி வலம் வரும் காட்சியும் பின்னர் பெண்ணாசை கொண்டு ஒரு கட்டுண்ட பாம்பினைப் போல் இடம்பெயர்ந்து வாழ்க்கை நடத்த எத்தனிக்கும் காட்சியும் வாசகர் முன் விளம்புகிறது ராக்கி எனும் கதாபாத்திரம்; மேல்சாதியைச் சார்ந்த சென்னியப்பன் எனும் கதாபாத்திரத்தை குடிபோதை ஏற்றி தனது மன ஆதங்கத்தை சாட்டையடி கொடுத்து தீர்க்கும் வையாபுரி எனும் கதாபாத்திரம். தேங்காய் திருடும் தொப்புளான்; அவனைப் போலீசில் மாட்டி விட்டு பின்பு அவனை தானே மீட்டு தனது தோட்டத்து வேலையில் ஈடுபட வைக்கும் வயல் தோட்டத்து அய்யர். தொட்டியப்பன், மருதாள், சென்னியப்பன், ராக்கி, சோமப்பன், செங்காளி, வையாபுரி, ராமசாமி, எலும்பு முறிவு வைத்தியர் அர்ச்சுனன் என நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரங்களையும் உயிர்கொண்டு நம் முன் உலாவரும்படி அழகாகச் சித்தரித்திருக்கிறார் சூர்யகாந்தன் எனும் சிறந்த படைப்பாளி.

உரையாடல்களும் வர்ணனைகளும் இந்த நாவலில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய சிறப்பம்சங்களாகும். கதாபாத்திரங்கள் கொங்கு வட்டார வழக்குச் சொற்களைக் கொண்ட அழகான உரையாடல்கள் நிகழ்த்தும்போது நாமும் அவர்களுடன் மானசீகமாக உரையாடத் துவங்கி விடுவதுபோல வாசகர்கள் உணர்வார்கள்.

நாவலாசிரியர் ஒரு அத்தியாயத்தின் துவக்கத்தில் வைகறை வேளையையும் அந்தி சாயும் நேரத்தையும் ஒரு கணம் கண்டு இன்புறாத மானுடரின் வாழ்க்கையை எண்ணி இவ்வாறு எழுதியிருப்பார்: இருட்டில் புதையுண்டு கிடக்கும் மனிதர்களையும், அவர்களின் மனங்களையும் தூக்கியெடுத்து ஒருநாளின் துவக்கத்தை மலர்ச்சிகரமாக முத்த மிட்டுப் புகட்டும் வைகறை வேளையை நாம் மோகிக்க வேண்டும்.’’

நகரங்களின் அசுர வளர்ச்சி கிராமங்களின் களங்கமில்லா வாழ்வியலை கலைத்து நம் எதிர் காலத்தை அச்சுறுத்துகிறது. சூர்யகாந்தன் தனது முன்னுரையில் சொல்வ துபோல கிராமத்து அப்பாவிகளும் நகரத்து ஆக்டோபஸ்களும் நகர்ந்து வந்து சங்கமிக்கும் நிலை. எளிய கிராமத்து வாழ்வியல் தன்னுள் கொண்ட சாத்தியக் கூறுகளை காணாமல் கண்மூடிக் கொண்டுள்ளது நிகழ்காலம். அவர் உரைத்தது போலவே பாமரர்கள்...பாட்டாளிகள். பாவப் பட்டவர்கள்.. பாதிக்கப் பட்டவர்கள் சார்பாக எழுதுவதின் நோக்கத்தை கடைப்பிடிப்பவர் என்பது இந்த நாவலை வாசிக்கும் போது உணர்ந்து கொள்ளலாம்.

வேலியில் தன்னிச்சையாக வளர்ந்து மலர்ந்த செங்காந்தள் மலர்கள் சிரிக்கின்ற காட்சியோடு நாவல் முடியும்போது ஆசிரியர் இந்த நாவலுக்கு பெயரிட்ட காரணத்தை வாசகர்கள் உணர்ந்து பாராட்டுவார்கள். வேலிகள் தோட்டத்தைப் பாதுகாக்கும் பணியை மட்டுமா செய்கிறது? காப்பாற்றப்பட வேண்டிய வேலிகள் சிலசமயம் மாந்தர்களாலேயே ஏன் அழிக்கப்படுகிறது? சில கேள்விகளோடு நாவலை வாசிக்கத்துவங்கிய நானும் "செங்காந்தள் மலர்' பூத்துக் குலுங்கி நிற்கும் வேலிகளை மனதில் கண்டபடியே அழகான அட்டைப்படம் கொண்ட அந்த நூலை மூடி வைத்து சிந்தனையில் ஆழ்ந்தேன்.

விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியலை மண்வாசனையோடு எழுதி வரலாற்றின் ஆவணமாகக் கருதக்கூடிய படைப்புக்களைத் தரும் காரணத்தால் சூர்யகாந்தனை தமிழ் இலக்கியத்தின் தகழி எனக் கூறுவதில் எனக்கு எள்ளளவும் தயக்கமில்லை.

முள் மலர் வேலி, ஆசிரியர் : சூர்யகாந்தன்

பக்கங்கள் : 130, விலை : ரூ. 110/-

வெளியீடு : வண்ணம் பதிப்பகம்

11/9, மாரப்ப கவுண்டர் வீதி, ராமசெட்டிபாளையம்,

சுண்டக்காமுத்தூர் (PO), கோயமுத்தூர் - 641010

அபயம் பப்ளிஷேர்ஸ், கோவை (0422 2332136)

விஜயா பதிப்பகம், கோவை (0422 2382614)