பதினோறாயிரம் கோடியில் அமையவிருக்கும் சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் மோடி அரசுடன் கைகுலுக்கியிருக்கிறார் முதல்வர் எடப்பாடி! இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத் திட்ட எடப்பாடி பழனிச்சாமி, ""போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காகவே இத்திட்டம் உருவாக்கப்படுகிறது. இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பெருகும்'' என பெருமைப்பட்டுக்கொண்டார்.
ஆனால், இது மக்களுக்கான திட்டமில்லை. தமிழகத்தின் கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கொள்ளையடிப்பதற்காகவே கொண்டு வரப்பட்டுள்ளது என்கிற குற்றச் சாட்டுகள் எதிரொலிக்கின்றன.
தமிழகத்தின் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் துறைமுகங்களுக்கான திட்டங்கள் குறித்து தமிழக முதல்வர் எடப்பாடியுடன் கடந்த பிப்ரவரி மாதம் 25-ஆம் தேதி விரிவாக ஆலோசனை நடத்தினார் மத்திய சாலைப்போக்குவரத்து அமைச்சர் நிதின்கட்கரி! சென்னை பார்க் ஷெரட்டான் ஹோட்டலில் இரவு 7.30 மணிக்குத் துவங்கி சுமார் 2 மணிநேரம் நடந்த நீண்ட ஆலோசனையின் முடிவில், சென்னை-சேலம் பசுமை வழிச்சாலைத்திட்டம் குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்தியாவின் இரண்டாவது பசுமைவழிச்சாலை என அடையாளப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மொத்த மதிப்பு 11,000 கோடி ரூபாய். சென்னை தாம்பரத்தில் துவங்கி காஞ்சிபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி மாவட்ட எல்லைகள் வழியாக ஊடுருவி சேலத்தை அடைகிறது இச்சாலை. எட்டு வழிச் சாலையாக அமையும் இதன் மொத்த நீளம் 277 கிலோமீட்டர். சேலம் முதல் தர்மபுரி மாவட்ட அரூர் வரையிலான நெடுஞ்சாலைக்கு 179ஏ எனவும், அரூர் முதல் தாம்பரம் வரையிலான நெடுஞ்சாலைக்கு 179பி எனவும் பெயரிடப்பட்டிருக்கிறது.
காஞ்சிபுர மாவட்டத்தில் 59 கிலோமீட்டரும், திருவண்ணாமலை மாவட்டத்தில் செய்யாறு- வந்தவாசி-போளூர்-ஆரணி-செங்கம் வழியாக 122 கிலோமீட்டரும், அங்கிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தின் எல்லையில் 2 கிலோமீட்டர் தூரம் மட்டும் தொட்டுவிட்டு தர்மபுரி மாவட்டத்தில் தீர்த்தமலை-அரூர்-பாப்பிரெட்டிப்பட்டி வழியாக 53 கிலோமீட்டரும், அங்கிருந்து வாழப்பாடி வழியாக சேலம் அடைய 38 கிலோமீட்டரும் என சாலை அமைவதாக திட்டத்தில் சொல்லப்பட்டிருக்கிறது.
தற்போது சென்னை-சேலம் நெடுஞ்சாலையானது உளுந்தூர்பேட்டை வழியாக செல்கிறது. இதன் நீளம் 345 கிலோமீட்டர். புதிய பசுமை வழிச் சாலைத் திட்டத்தின் மூலம் இரு நகரங்களுக்கான தொலைவு 71 கிலோமீட்டர் குறையும் எனவும், பயன நேரமான 6 மணிநேரத்தில் 3 மணி நேரம் குறையும் எனவும், இதன்மூலம் வாகன எரிபொருள் மிச்சமாகும் எனவும் தெரிவிக்கி றது எடப்பாடி அரசு.
நவீன கட்டமைப்புகளுடன் 8 வழிச்சாலையாக அமையும் இத்திட்டத்தில், வாகனங்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கும், உள்நுழைவதற்கும் வழிவகைகள் காணப்பட்டுள்ளன. மேலும், நேராகச் செல்லும் வாகனங்கள் தமது அதிவேகத்தைக் குறைக் காமலே, பாதுகாப்பாக கடந்து செல்லமுடியும். அதற்கேற்ப, சிக்னல்களும் சாலை சந்திப்புகளும் இல்லாமல் சாலைகள் உருவாக்கப்படுகின்றன. இவ்வளவு நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் பசுமைவழிச்சாலையானது மக்களின் நலன்களுக்காக கிடையாது என்பதே தற்போதைய குற்றச்சாட்டு!
இந்த திட்டம் மக்களுக்கானது; தொழில் வளர்ச்சிக்கானது என அரசாங்கம் சொல்வதே மிகப்பெரிய பித்தலாட்டம்தான். எந்த வகையில் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும், வேலை வாய்ப்புகள் எப்படி உருவாகும் என அரசு தரப்பிலிருந்து உறுதி செய்யப்படவில்லை. மாறாக, இந்தியாவின் பிரபல ஸ்டீல் நிறுவனமான ஜிண்டால் குழுமத்தின் நன்மைக்காகவே இத்திட்டத்தை செயல்படுத்த முனைகின்றனர் என்கிறார்கள் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.
சேலம் மாவட்டம் கஞ்சமலையிலும், திருவண்ணா மலை மாவட்டத்திலுள்ள கவுத்திமலை, வேடியப்பன் மலை, தீர்த்தமலை உள்ளிட்ட வனப்பகுதிகளிலும் பல்லாயிரம் டன் இருப்புத்தாதுக்களான கனிம வளங்கள் புதைந்து கிடக்கின்றன. குறிப்பாக, கவுத்தி மலை-வேடியப்பன்மலை பகுதிகளில் மட்டுமே சுமார் 93 மில்லியன் டன் இரும்புத்தாது இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையினரால் கண்டறியப்பட்டது.
இதனையறிந்து, முதல்கட்டமாக 35 மில்லியன் டன் இரும்புத்தாதுவை பிரித்தெடுக்க, 1996-2001-ல் ஆட்சியிலிருந்த தி.மு.க. அரசிடம் அனுமதி கோரியது தமிழக அரசின் தொழில் மேம்பாட்டுக் கழகம் (டிட்கோ). அதேபோல, தமிழக அரசின் புவியியல் மற்றும் சுரங்கத்துறையும், மத்திய அரசின் சுற்றுச்சூழல்துறையின் அனுமதிபெற்று குறிப்பிட்ட பகுதியில் சுரங்கம் அமைத்து இரும்புத்தாதுவை பிரித்தெடுக்கலாம். இதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும் என பரிந்துரைத்தது. அரசுக்கு வருவாய் கிடைக்கும் எனில் அதனை பரிசீலிக்கலாம் என அப்போ தைய தி.மு.க. அரசு கருதியது. இதற்கான அனுமதியை தமிழக அரசு தருவதற்குள் ஆட்சி மாற்றம் நடக்க (2001), முதல்வரானார் ஜெயலலிதா.
இவரது ஆட்சியில், மேற்கண்ட இரு மாவட்டங்களிலுமுள்ள மலைப்பகுதிகளில் இரும்புத்தாதுக்களை வெட்டியெடுக்கும் சுரங்க தொழில் அனுமதியை பெற ஜெயலலிதாவை அணுகியது ஜிண்டால் நிறுவனம். முழுமையாக ஜிண்டால் நிறுவனத்திடம் ஒப்படைத்தால் கடும் எதிர்ப்புகள் கிளம்பும் என யோசித்த ஜெயலலிதா, அரசின் பொதுத்துறை நிறுவனமான டிட்கோவுடன் தனியார் பங்குதாரராக ஜிண்டாலை இணைத்து செயல்படுத்தலாம் என முடிவு செய்தார்.
இதனடிப்படையில், டிட்கோவும் ஜிண்டாலும் இணைந்து, தமிழ்நாடு இரும்புத்தாது சுரங்கக் கழகம் (டிம்கோ) என்கிற புதிய நிறுவனத்தை உருவாக்கி செயல்படுவதற்கான ஒப்பந்தம் 2005-ல் கையெழுத்தானது. அந்த ஒப்பந்தத்தின்படி, டிம்கோ நிறுவன பங்குகளில் 99 சதவீதம் ஜிண்டாலுக்கும், 1 சதவீதம் டிட்கோவுக்கும் என முடிவுசெய்தனர். அதாவது, 100 கோடி லாபம் ஈட்டினால் அதில், வெறும் 20 லட்ச ரூபாய் மட்டுமே தமிழக அரசுக்கு கிடைக்கும். மீதி 99 கோடியே 80 லட்ச ரூபாய் ஜிண்டால் நிறுவனத்துக்குச் சொந்தம். ஆக, தமிழகத்தின் இயற்கை வளங்களையும் மக்களின் வாழ்வாதாரங்களையும் பலி கொடுக்கும் இத்திட்டத்தின் முழுப்பலனும் ஜிண்டால் நிறுவனத்துக்கே தாரைவார்க்கும் வகையில் ஒப்பந்தத்தை போட்டது ஜெயலலிதா அரசு.
ஆனால், இதனையறிந்து 51 கிராம மக்களும் வெகுண்டெழுந்தனர்.
அவர்களோடு இணைந்து பல்வேறு அமைப்புகளும் போராட்டங்களை முன்னெடுத்தன. இதனால், ஜிண்டாலின் டிம்கோ நிறுவனம், சுரங்கத் தொழிலை துவக்க முடியாமல் திணறியது. உடனே, சுரங்கம் அமைப்பதற்கான அனுமதி குறித்து உச்சநீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது ஜிண்டால். இதனை விசாரித்த நீதிமன்றம், ஜிண்டாலும் டிட்கோவும் போட்டுக்கொண்ட ஒப்பந்தத்தின் வெளிப் படைத்தன்மை குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்ப, அதற்கு பதில் சொல்லமுடியாமல் மழுப்பி யது அப்போதைய ஜெயலலிதா அரசு.
வனப்பகுதியில் விதிமுறைகளுக்குட்பட்டு சுரங்கம் அமைக்கப்படுமாயின் மத்திய அரசின் சுற்றுச் சூழல்-வனத்துறை அமைச்சகம் மற்றும் இந்தியச் சுரங்க நிறுவனம் ஆகியவற்றின் அனுமதி கிடைத்த பிறகே மாநில அரசு அனுமதி வழங்கும். ஆனால், ஜிண்டாலுக்கான இந்த இரும்புத்தாது சுரங்கம் விவகாரத்தில் மத்திய சுற்றுப்புறச்சூழல்துறை அனுமதிதரவில்லை. ஆனால், இந்தியச் சுரங்க நிறுவனமோ, ஜிண்டாலின் சுரங்கம் தொடர்பான திட்ட வரைபடத்திற்கு அனுமதி தந்தது. இது எப்படி சாத்தியம்? என நீதிமன்றம் எழுப்பிய பல கேள்விகளுக்குப் பதில் இல்லை.
இதன் மூலம் ஜிண்டாலும் டிட்கோவும் எடுத்த அனைத்து முயற்சிகளும் தோல்வியடைய, 2006-2011 தி.மு.க. ஆட்சியில் இந்த விவகாரம் அப்படியே முடங்கிப்போனது. அத்திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், தடைகளை உடைக்க அனைத்து முயற்சிகளையும் தற்போது எடுத்து வருகிறது ஜிண்டால் நிறுவனம். விரைவில் இதற்கான அனுமதிகள் அனைத்தும் கிடைக்கக்கூடிய சூழல் இருக்கிறது.
இந்தச் சூழலில்தான் சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட வனப்பகுதிகளிலுள்ள இரும்புத்தாதுக்களை வெட்டியெடுத்து அவற்றை சென்னை துறைமுகத்துக்கு அதிவிரைவாக கொண்டுவர வேண்டுமாயின் தடையின்றி வாகனம் பயணிக்கும் வகையில் சாலை வசதிகள் வேண்டும். தற்போதைய சாலைகளில் அது சாத்தியமில்லை என்பதால்தான் பசுமைவழிச் சாலையை மோடியும் எடப்பாடியும் இணைந்து கொண்டு வருகின்றனர். தனியார் கார்ப்பரேட் நிறுவனத்தின் லாபத்திற்காக மக்களின் வரிப்பணம் ரூ.11,000 கோடி செலவிடப்படுகிறது.
மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தப்பிறகு (2014) இந்திய கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்கள் கபளீகரம் செய்வதற்குத் தேவையான அனைத்து வழிகளையும் அகலமாகத் திறந்து வருகிறது.
அதன் ஒரு கட்டம்தான் தேசமெங்கும் 6 வழி மற்றும் 8 வழிச்சாலைகளை அமைக்கும் திட்டம். அந்த வகையில், பசுமைவழிச்சாலையும், இரும்புத்தாதுக்களைக் குறிவைத்தே போடப்படுகிறது.
இதற்கிடையே, ஜிண்டால் நிறுவனத்துக்கு எதிரான வழக்கில் பல முட்டுக்கட்டைகளை உச்சநீதிமன்றம் போட்டு வைத்திருக்கும் நிலையில், அதை உடைத்தெறியும் அத்தனை வேலைகளையும் நடத்தி முடித்துவிட்டது மத்திய அரசு. அந்த வகையில், சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இரும்புத்தாதுகளை வெட்டியெடுக்கும் ஜிண்டாலின் சுரங்க அனுமதிக்கு உச்சநீதிமன்றத்தில் சாதகமான தீர்ப்புக் கிடைக்கவிருக்கிறது.
தமிழக வனப்பகுதிகளில் வெட்டியெடுக்கப்படும் இரும்பு கனிமங்களை வட இந்தியாவிலுள்ள தனது ஸ்டீல் ஆலைகளுக்கு கொண்டுசெல்லவும், வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யவும் சென்னை துறைமுகத்தைத்தான் ஜிண்டால் குழுமம் பயன்படுத்த வேண்டும். தற்போதைய சந்தை நிலவரப்படி, இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக்குத் தேவையான இரும்புத்தாதுக்கள் தேவைக்கும் அதிகமாகவே இருக்கின்றன. ஆனால், சர்வதேச நாடுகளில் இரும்பின் தேவை ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்தபடியே இருக்கிறது. சர்வதேச நாடுகள் பெரும்பாலும் இந்திய இரும்புக்கனிமங்களையே விரும்புகின்றனர். அந்த வகையில், சேலம், திருவண்ணாமலை பகுதிகளில் வெட்டியெடுக்கப்படும் இரும்புக் கனிமங்களில் 90 சதவீதம் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும். இந்த நிலையில், ஜிண்டாலின் வாகனங்கள் சென்னை துறைமுகத்தை குறைவான நேரத்தில் அடைவதற்கு வசதியாகத் தான் பசுமைவழிச்சாலைத் திட்டத்தை கொண்டு வருகின்றனர். இதற்காக தமிழக வனத்துறைக்கு சொந்தமான 6,500 ஏக்கர் நிலம், 6,400 ஏக்கர் நீர்ப்பாசன நிலம், நீர்ப்பாசனமல்லாத 7,100 ஏக்கர் நிலம் என கிட்டத்தட்ட 20 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் பணிகளைத் துவக்கிவிட்டது எடப்பாடி அரசு.
சேலத்திலிருந்து சென்னைக்கு 3 மணி நேரத்தில் வரவேண்டும் என மக்கள் யாரும் கோரிக்கை வைக்கவில்லை. இது முழுக்க முழுக்க கார்ப்பரேட் நிறுவனத்துக்காக... ஏழைகளுக்காக அல்லாமல் எஜமாமானர்களுக்காக கொண்டுவரப்படும் ப்ராக்ஜெட் தான் என்கிறார்கள் நெடுஞ்சாலைத்துறையினர்.
இத்திட்டத்துக்கு தேவையான நிலம் கையகப்படுத்தும் பணிகளை விரைந்து முடிக்கு மாறு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்களுக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டு வருகின்றன. மக்களின் எதிர்ப்புகள் காரணமாக பல இடங்களில் செய்வதறியாது திகைக்கும் ஆட்சியர்கள், காவல் துறையினர் மூலம் மிரட்டி வருகின்றனர். இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பதட்டம் அதிகரித்த படி இருக்கிறது.
----------------------------------------------------
பசுமை வழிச்சாலைத் திட்டத்தில் இழப்பீடு வழங்குதல் மற்றும் சாலை அமைத்தல் (சிவில் கட்டுமானம்) என இரண்டு வகைகளில் திட்ட மதிப்பீட்டினை தனித்தனியாக வகைப்படுத்தி மத்திய அரசிடம் ஒப்படைத்திருக்கிறது தனியார் நிறுவனம். இழப்பீடு வழங்குதலில் நிலங்களை கையகப்படுத்துவதற்காக 2,605 கோடியே 8 லட்ச ரூபாய், வாழ்வாதார இழப்பீட்டிற்காக 4 கோடியே 48 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய், மத வழிபாட்டு ஸ்தலங்களுக்காக 60 லட்ச ரூபாய், இதர செலவினங்களுக்காக 1 கோடியே 15 லட்ச ரூபாய், தவிர திடீர் செலவினங்களுக்காக 391 கோடியே 68 லட்சத்து 48 ஆயிரம் என மொத்தம் 3002 கோடியே 91 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் என மதிப்பிட்டுள்ளனர். அதேபோல, எட்டு வழிச்சாலை அமைப்பதற்கான பல்வேறு சிவில் பணிகளுக்கு 11 ஆயிரத்து 530 கோடி என மதிப்பிட்டுள்ளனர். ஆக, சாலை அமைத்தல் மற்றும் இழப்பீடுகளுக்கான தொகைகளை சேர்த்தால் இத்திட்டத்திற்கான மொத்த மதிப்பீடு 14 ஆயிரத்து 533 கோடி ரூபாய்!
----------------------------------------------------
தமிழகத்தில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து குடிநீர் பற்றாக்குறை தமிழகம் முழுவதும் அதிகரித்து வரும் சூழலில், நதிகள் இணைப்பு, புதிய அணைகள் கட்டுதல், ஏரிகளை தூர்வாரி பாதுகாத்தல், மரங்களை வளர்த்து வனத்தைப் பாதுக்காத்தல் தொடர்பான கோரிக்கை மக்களிடம் வலுத்து வருகிறது. ஆனால், இவைகளுக்கு எதிராக, மக்களிடமிருந்து கோரிக்கையே எழாத நிலையில் பசுமை வழிச்சாலை திட்டம் எதற்கு? எட்டு வழிச்சாலை அமைக்குமளவுக்கு சேலம்-சென்னை வழித்தடத்தில் தொழில் வளர்ச்சிக்கான காரணங்களும், வேலைவாய்ப்புக் காரணங்களும் அழுத்தமாக இல்லாத நிலையில் இச்சாலைத் திட்டம் அவசியமற்றதாகவே வர்த்தக நிபுனர்கள் கூறுகின்றன. சேலம், தர்மபுரி, திருவண்ணாமலை, வேலூர் மாவட்ட விவசாயிகள், தங்களது விளைநிலங்களை மட்டுமே நம்பி வாழ்க்கையை நகர்த்தி வருகின்றனர். விவசாயம் பொய்த்துப்போகும் நிலையில் பிழைப்புத்தேடி தற்காலிகமாக பெரு நகரங்களுக்கு நகரும் துயரம் இருக்கிறது. மேலும், செம்மரக் கட்டைகளை கடத்தும் கும்பலில் சிக்கிக்கொள்ளும் அவலங்களும் இருக்கவே செய்கின்றன. இந்த சூழலில், அவர்களது விளைநிலங்களும் பறிக்கப்பட்டுவிட்டால் அவர்களின் எதிர்காலம் சூன்யமாவதைத் தவிர வேறு வழியில்லை. இதையெல்லாம் எடப்பாடி அரசு சீர்தூக்கிப் பார்க்காததால்தான் திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வலிமையடைந்து வருகிறது. அதனை ஜீரணிக்கமுடியாமல் இரும்புக் கரம் கொண்டு அடக்கத் துணிகிறது அரசு.