"மதம் கடந்த இசை என்பது தமிழ் மண்ணின் பாரம்பரியம். 

காலையில் பெரிய கோவிலில் தேவாரம் ஓதுவார்கள். பள்ளிவாசலில் அல்லாஹு அக்பர் ஒலிக்கும். ஞாயிற்றுக்கிழமைகளில் தேவாலயத்தில் பாடல்கள் இசைக்கும். தமிழ்நாட்டு மக்கள் எல்லாவற்றையும் ரசித்துக் கேட்டபடிதான் கடந்து செல்வார்கள். 

Advertisment

என் சிறு வயதில், அதிகாலையில் படுக்கையைவிட்டு எழுந்திருக்காமலேயே தலைமாட்டில் உள்ள டிரான்சிஸ்டர் ரேடியோவை "ஆன்' செய்வார் அப்பா. 

Advertisment

வானொலியில் "வந்தே மாதரம்' பாடி முதல் நிகழ்ச்சி தொடங்கும்போது, பாடப் புத்தகத்துடன் அவருக்கு அருகே உட்கார்ந்திருப்பேன்.

காலை நேரத்தில் அப்போது 6.50 மணிக்கு செய்தி அறிக்கை ஒலிபரப்பாகும். அது நிறைவடையும்வரை அப்பாவின் தலைமாட்டிலேயே டிரான்சிஸ்டர் இருக்கும். செய்தி அறிக்கை கேட்டபிறகுதான் எழுந் திருப்பார். அப்புறம் எதற்கு அத்தனை சீக்கிரமாக ரேடியோவை ஆன் செய்தார்?

Advertisment

காலை 6 மணி வாக்கில் பக்தி மாலை என திருச்சி வானொலி நிலையத்தார் ஒலிபரப்புவார்கள். அதன் பிறகு உழவர்கள்-வேளாண் விரிவாக்கப் பணியாளர்களுக்கான ஆலோசனைகள் 10 நிமிடம். அதன்பிறகே செய்தி அறிக்கை.

மாலை நிகழ்ச்சி சைவ-வைணவப் பாடல்களுடன் தொடங்கும். அப்பாவுக்குப் பிடித்த சீர்காழி கோவிந்தராஜன் குரலில் முதல் பாட்டு ஒலித்த நாட்கள் நிறைய உண்டு. உளுந்தூர்பேட்டை சண்முகத்தின் "சின்னஞ்சிறு பெண் போலே சிற்றாடை இடை உடுத்தி-சிவகங்கை குளத்தருகே ஸ்ரீதுர்கை சிரித்திருப்பாள்..' பாடலை தன் வெண்கலக் குரலால் சீர்காழி கொண்டு செல்லும் உயரத்தை அளவிடமுடியாது.

பக்தி மாலையில் வைணவப் பாடல்கள் நிறைய இருந்தாலும் எளிமையானதும், எல்லோருடைய காதுகளிலும் நிறைந்ததுமான கண்ணதாசனின் "கிருஷ்ண கானம்' இசைத் தொகுப்பு தனித்துவமானது. 

அதிலிருந்து ஏதாவது ஒரு பாடல் அடிக்கடி வானொலியில் ஒலிக்கும்.

எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில், "புல்லாங்குழல் கொடுத்த மூங்கில்களே...' என்ற டி.எம்.எஸ். குரல், வானொலி-கோயில் கேட்காத இடமே இல்லை. 

அடுத்ததாக அந்த தொகுப்பிலிருந்து, "குருவாயூருக்கு வாருங்கள்' என பி.சுசீலா அழைப்பார். எல்.ஆர்.ஈஸ்வரி குழுவினர், "கோபியரே. கோபியரே.. கொஞ்சி விளையாடுங்களேன்' எனக் கொஞ்சுவர்.

அடுத்ததாக ஒலிக்கும் எஸ்.பி.பி.யின், "ஆயர்பாடி மாளிகையில்..' எல்லா தலைமுறைக்குமான எவர்க்ரீன் ஹிட். மீண்டும் பி.சுசீலா, "கோகுலத்தில் ஒரு நாள் ராதை' எனப் பாடுவார். அவரைத் தொடர்ந்து எஸ்.ஜானகி, கோகுலத்து பசுக்களெல்லாம் கோபாலன் பெயரைக் கேட்டு 4 படி பால் கறந்து, அதில் 3 படி நெய் கிடைத்ததாகப் பாடுவார். இசைத்தொகுப்பின் இறுதியில் கே.வீரமணியின் மணிக்குரலில், கோதையின் திருப்பாவை குரல் கேட்டு கண்ணன் வருவதை கண்ணதாசன் வர்ணித்திருப்பார்.

வீரமணியின் ஸ்பெஷாலிட்டியான அய்யப்பன் பாடல்கள் சைவத்துக்கும் வைணவத்துக்குமான "உறவு'. அதுவும் ஒலித்தபிறகு, மிச்சமிருக்கும் நேரத்தில் மற்ற மதத்தினரின் பாடல்கள் ஒலிக்கும். "கேளுங்கள் கொடுக்கப்படும்.. தட்டுங்கள் திறக்கப்படும்' என்கிற கிறிஸ்தவப் பாடல் பிரபலம். அருட்தந்தை-அருட்சகோதரி என்ற முன்னொட்டுடன் கிறிஸ்தவ பாடல்கள் பல ஒலிக்கும்.

வானொலி ஒலிபரப்பிய கிறிஸ்தவப் பாடல்களைக் கடந்து, அச்சாணி படத்தில் எஸ்.ஜானகி குரலில் கேட்ட "மாதா  உன் கோவிலில் மணி தீபம் ஏற்றினேன்' 

பாட்டு, அன்னை வேளாங்கண்ணி படத்தின் கே.ஜே.யேசுதாஸின் "வானமெனும் வீதியிலே...' டி.எம்.எஸ். குழுவினரின் "நீலக்கடலின் ஓரத்தில்..' போன்ற பாடல்கள் "ஏசு பாட்டு-மாதா பாட்டு' என எல்லாரிடமும் பெயர் பெற்றிருந்தன. அந்தப் படத்தில் "தேவ மைந்தன் போகின்றான்...' என்கிற சிலுவைக் காட்சிக்கான பாடல் உருக்கமாக இருக்கும்.

புனித அந்தோணியார் படத்திலிருந்து, "மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்.. என்கிற கிறிஸ்துமஸ் நாளுக்கான பாடல் வாணிஜெயராம் குரலில் ஒலித்தது. "ஜீசஸ்', "குழந்தை ஏசு', "வில்லியனூர் மாதா' என கிறிஸ்தவ சமயப் படங்களிலும் பாடல்கள் நிறைந்திருந்தன. 

அன்புள்ள ரஜினிகாந்த் படத்தில் ஒலிக்கும், "கடவுள் உள்ளமே.. கருணை இல்லமே', வெள்ளை ரோஜா படத்தின் "தேவனின் கோவிலிலே யாவரும் தீபங்களே' என்கிற பாட்டின் தொகையறாவில் பருவமழை, உழவரின் உவப்பு, பாட்டாளி உயர்வு எனப் பொதுச் சிந்தனைகளுடன் வாழ்க வையகம்... வாழ்க வளமுடன்' என பிரார்த்தனைக் குரல் இருக்கும்.

இஸ்லாமிய பாடல்களுக்கும் தமிழ்த் திரையில் எப்போதும் தனி இடம் உண்டு. அலிபாபாவும் நாற்பது திருடர்களும் படத்திலேயே அல்லாவின் கருணை கூறும் வரிகள் உண்டு. "குலேபகாவலி' படத்தின் டைட்டிலில் தஞ்சை ராமைய்யாதாஸ் வரிகளில்,  நாகூர் அனீபாவும் இணைந்து பாடிய, "நாயகமே.. நபி நாயகமே' என்ற பாடலில் இந்து-முஸ்லிம் ஒற்றுமை வரை வலியுறுத்தப்பட்டிருக்கும். ஆனாலும் எல்லாரையும் கவர்ந்தது "பாவ மன்னிப்பு' படத்தில் "எல்லோரும் கொண்டாடுவோம்' பாட்டின் இடையே ஒலிக்கும் அனீபாவின் குரல்.

"முகமது பின் துக்ளக்' படத்தில் எம்.எஸ்.வி. குரலில் ஒலித்த "அல்லா.. அல்லா.. நீ இல்லாத இடமேயில்லை' பாட்டு மத எல்லைகளைக் கடந்து எல்லாரையும் பாட வைத்தது. கமல்-ரஜினி சேர்ந்த நடித்த "ஆடு-புலி ஆட்டம்' படத்தில் விஜயபாஸ்கர் இசையில், எஸ்.பி.பி. பாடிய "வானுக்கு தந்தை எவனோ.. மண்ணுக்கு மூலம் எவனோ..' எனத் தொடங்கி, "அல்லா பெற்ற பிள்ளைதானே யாரும்' என்கிற பல்லவியும் அதைத் தொடர்ந்து  ஒலிக்கும் "லா இலாஹ இல்லல்லாஹ், முஹம்மதுர் ரசூலுல்லாஹ்'வையும் பள்ளி விழா மேடையில் சக மாணவர் ஒருவர் துல்லியமாகப் பாடியது இப்போதும் கேட்கிறது.

கலைஞரின் மூத்த பிள்ளை முரசொலிக்கு அடுத்த பிள்ளையான மு.க.முத்துவின் குரலில் "அணையா விளக்கு' படத்தில், "கூன் பிறையைப் போற்றிடுவோம்.. குரானை ஓதிடுவோம்...' என்ற தொகையறாவுடன் "நல்ல மனத்தில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா...' எனத் தொடங்கும் பாட்டை எப்போது கேட்டாலும் இன்பம்.

வானொலி பக்திப் பாடல் நிகழ்வில் சினிமா பாடல்களைத் தவிர்ப்பது வழக்கம். அதனால் தனி இசைத் தொகுப்புகளையே தேர்வு செய்வார்கள்.  "தமிழகத்தின் தர்காக்களைப் பார்த்து வருவோம்' என்ற காயல் சேக் முகமது குரலில் கவிஞர் சலீமின் வரிகள் ஒலிக்கும்போது தமிழகத்துக்கும் இஸ்லாத்திற்குமான உறவுப் பாலத்தின் மீது நம்மை பயணிக்கச் செய்வது போல இருக்கும்.

சேக் முகமதுவின் மற்றொரு சிறப்பான பாடல், "ஈச்சை மரத்து இன்பச் சோலையில்... நபி நாதரை...' "அது அனைத்து மதத்தினரின் மனங்களிலும் பேரீச்சையாய் சுவை தந்தது.

"இறைவனிடம் கையேந்துங்கள்.. அவன் இல்லையென்று சொல்லுவதில்லை'  என்ற நாகூர் அனிபா குரல் வானொலி நிகழ்ச்சியில் கேட்டால், அப்பாவின் கை தானாகவே ரேடியோ வால்யூமை அதிகரிக்கும். அனீபா குரல் என்றால் அவருக்கு ட்ர்ய்ங்ஹ்தான்.

புலவர் ஆப்தீன், பேராசிரியர் கபூர் போன்றவர்கள் எழுதிய பாடல்களை அனீபா தனது உரத்த குரலில்-உச்சரிப்பு சுத்தமாகப் பாடும்போது யார்தான் மயங்க மாட்டார்கள்?

"தென்றல் காற்றே கொஞ்சம் நில்லு.. எங்கள் திருநபியிடம் போய் சொல்லு..,  "கண்கள் குளமாகு தம்மா.. கர்பலாவை நினைக்கையிலே...' "தக்பீர் முழக்கம்..  

கேட்டால் உள்ளம் இனிக்கும்' இந்தப் பாடல்களெல் லாம் அப்பா கேட்க கேட்க, பாடப் புத்தகத்தை மீறி என் மனதில் பதிந்தவை.

எல்லா மதப் பாடல்களையும் காதுக்குள் நிறைத்த வானொலிப் பெட்டிக்கு, கடவுள் எந்த மதம் என்று தெரியுமா?

அனீபாவின் குரல்தான் அதையும் பின்னாளில் கேட்டது.

"உன் மதமா.. என் மதமா ஆண்டவன் எந்த மதம்?'

ஆண்டவன் எல்லோருக்குமானவர் என்பதை தொடர்ந்து நிரூபிக்கும் தமிழ் மண்ணில் இயேசு பிறப்பு நாளில் சபரிமலை ஐயப்பன் பாடல் இணைந்து ஒலிப்பதும் அதற்கு மகிழ்ந்து ஆடுவதும் மத நல்லிணக்கத்தின் அடையாளம். 

இதைக் கெடுக்கத்தான் சங்கிகள் படாதபாடு படுகிறார்கள்.

எச்சரிக்கையாக இருப்போம். சங்கிகளையும் அவர் களின் பழைய புதிய அடிமைகளையும் அடையாளம் காண்போம்.